திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) Dr. Singaravelu Sachithanantham (Malaysia) | English in PDF format PDF வடிவத்தில் | அகரவரிசை எண்வரிசை தேடல் alphabetical numerical search |
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பற்றிய ஒர் அறிமுக ஆய்வுக் கட்டுரை பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம், மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலும்பூர், மலேசியா |
முகவுரை திரு அருணகிரிநாத சுவாமிகள், ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் திருவண்ணாமலை என்னும் திருத்தலத்தில் தோன்றியவர்; இளமையிலேயே, தமிழ்மொழி, இலக்கணம், இலக்கியம், சைவத் திருமுறைகள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்று விளங்கியவர். திருமுருகப்பெருமானை நோக்கி தேனூறும் தமிழ் மொழியில் பக்திப் பாடல்கள் பலவற்றை மிகவும் உன்னதமான சந்தப் பாடல்களாகப் பாடியருளியவர்; தமிழ்நாட்டில் உள்ள திருமுருகப்பெருமானின் திருத்தலங்கள் அனைத்திற்கும் சென்று திருமுருகப்பெருமானைத் தரிசித்துப் பாடும் பணியையே தமது தலையான பணியாகக் கொண்டு விளங்கியவர். 2. திரு அருணகிரிநாத சுவாமிகள் பாடியருளிய திருப்பாடல்கள், ஆழங்காண முடியாத தமிழ்ப் பக்திக் கடலாகும் என்று கூறுவது மிகையாகாது. அந்தத் தமிழ்க் கடலில் புகுந்து அதிலுள்ள முத்துக்களையும் இரத்தினங்களையும் அரும்பெரும் பொருள்கள் பலவற்றையும் வாரிவாரி வழங்கியுள்ள பேரறிஞர்களில் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தலையாயவர். திருமிகு கிருபானந்த வாரியார் அவர்கள் கூறியுள்ள ஒரு அரிய கருத்தாவது, "அநுபூதிச் செல்வராகிய திரு அருணகிரிநாத சுவாமிகளின் அருள் வாக்காகிய திருப்பாடல்களின் பொருளுணர்ந்து ஓதுவதானது ஆன்மிகப் பயனை மிகுதியாக அளிக்கும். [ஆயினும்] திரு அருணகிரிநாத சுவாமிகள் அருளியுள்ள திருப்பாடல்களுக்குத் தெளிவான உரை காண்பது என்பது அரிதினும் அரிதாகும். திருமுருகப்பெருமானின் திருவருளும் அருணகிரியாரின் குருவருளும் துணைசெய்தால் ஓரளவு உரை காணலாம்," என்பதாகும். 3. திரு அருணகிரிநாத சுவாமிகள் இயற்றியருளிய கந்தரலங்காரம் என்னும் நூலில் அடங்கிய முக்கியமான சில செய்திகளைப்பற்றிய ஒர் அறிமுகக் கண்ணோட்டம் இந்த ஆய்வுக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளது. கந்தரலங்காரம் என்னும் நூற்பெயர், கந்தர், அலங்காரம் என்னும் இரு சொற்களாலாகிய திருப்பெயராகும். 'பற்றுக்கோடு' என்னும் பொருளுடைய 'கந்து' என்னும் தமிழ்ச்சொல் வழிவந்த 'கந்தர்', அல்லது 'கந்தன்' என்னும் சொல் திருமுருகப்பெருமானைக் குறிக்கும் திருப்பெயர்களுள் ஒன்றாகும். [இத்திருப்பெயர், திருமுருகனைக் குறிக்கும் 'ஸ்கந்த' (Skanda) என்னும் வடமொழிப் பெயருடன் தொடர்புடையது என்று கூறுவோரும் உள்ளனர்.] 'அலங்காரம்' என்னும் சொல் பொதுவாகக் குறிப்பிட்டதொரு தெய்வத்தின் திருமேனியினைத் திருவடிகள் முதல் தலையுச்சி வரையில் பல்வேறு அணிகலன்களால் அலங்கரித்தல் என்பதை உணர்த்துவதாகும். அத்தகைய அலங்காரம் மட்டுமன்றி, திருமுருகப்பெருமானைப் பற்றிய வரலாற்றுச் செய்திகளும் புராணச் செய்திகளும் திருமுருகப்பெருமானின் அலங்காரமாகக் குறிப்பிடப்படுவதானது கந்தரலங்காரம் எனப்படும் இந்நூலின் ஒரு சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக இந்நூலின் ஐந்தாவது பாடலில், 'பாலமுருகனைக் குறிஞ்சி நிலத்திற்கு உரிமையுடையவர்' என இவ்வுலகமே போற்றும்' என்னும் பொருளில், 'குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே' என்று திரு அருணகிரிநாத சுவாமிகள் பாடியுள்ளார். பாடல் 5 - திருந்த அம். 'என்றும் வயதாகாத இளமையுடைய பாலமுருகனை வயதான கிழவன் என்று உலகம் கூறுகின்றதே,' என்று சிலேடை நயத்துடன் திரு அருணகிரிநாத சுவாமிகள் தம் வியப்பினை உணர்த்துகின்றார். 'கிழவன்' என்னும் சொல்லிற்கு 'உரிமை உடையவன்' என்னும் பொருளும் உண்டு. எனவே, 'குறிஞ்சி நிலத்தின் உரிமையை உடையவன்' என்னும் பொருளைத் தரும் 'குறிஞ்சிக் கிழவன்' என்னும் சொல், பண்டைக் காலத்தில் தமிழகத்தில் மலையும் மலைசார்ந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் முழுமுதற்கடவுளாகப் போற்றி வணங்கிய திருமுருகப் பெருமானைக் குறிப்பதாகும். 'முருகன்' என்னும் திருப்பெயர் இயற்கை அழகினை உணர்த்தும் 'முருகு' என்னும் சொல்வழியாக வந்த திருப்பெயர் ஆகும். குறிஞ்சி நிலமக்கள் அனைவரும் திருமுருகனின் உறவினராக விளங்கினர். குறிஞ்சி நிலத்திக்கேயுரிய கடம்பு மலரும், செங்காந்தள் மலரும் திருமுருகன் விரும்பி அணியும் மலர்களாக விளங்கின. குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த யானையும் மயிலும் திருமுருகனின் வாகனங்களாக அமைந்தன. குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த வேங்கைமரத்தின் இலையைப் போன்ற வடிவத்தையுடைய தலைப் பகுதியைக் கொண்ட வேல் ஆற்றல்மிக்க ஆயுதமாக விளங்கியது. 'சூர்' எனப்பட்ட தீயசக்தியை வெல்லும் சக்திவேல், 'சூர்மறுங்கறுத்த சுடர் இலை நெடுவேல்' என சங்க காலத்தைச் சேர்ந்த அகநானூற்றுப் பாடலில் [59:10-11] குறிப்பிடப்படுகின்றது. தினைப்புனத்தைக் காத்துவந்த வள்ளியம்மையும் குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்தவரே ஆவர் [Clothey 1978: 26-35]. 4. கந்தரலங்காரத்தைச் சேர்ந்த மேற்கூறிய ஐந்தாவது பாடலில் காணப்படும் மற்ற செய்திகளாவன: குறிஞ்சி நிலத்தலைவனாகிய இளம் குழந்தை திருமுருகப்பெருமான், தன் நற்றாயான உமாதேவியாரின் ஞானப் பாலைப் பருகியபின்னர், சரவணப் பொய்கையில் உள்ள தாமரை மலர்களாலாகிய தொட்டிலில் ஏறி கார்த்திகைப் பெண்களாகிய ஆறு செவிலித் தாய்களின் பாலையும் உண்ணவிரும்பினார்', என்பதாகும். 'திருந்த அம் புவனங்கள் ஈன்ற பொற்பாவை திருமுலைப்பால் அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை விரும்பி ...' பாடல் 5 - திருந்த அம். இச்செய்திகள், திருமுருகப்பெருமான், சிவபெருமான் உமாதேவியார் ஆகியோரின் திருமைந்தர் என்பதை உணர்த்துகின்றன. இச்செய்தியின் விவரங்கள் திரு கச்சியப்ப சிவாசாரியார் அவர்கள் தமிழ் மொழியில் இயற்றியருளிய கந்தபுராணம் என்னும் நூலைச் சேர்ந்த உற்பத்திக் காண்டத்தில், திருவவதாரப்படலத்தில் அடங்கிய பாடல்களில் [942-1068] வருணிக்கப்பட்டுள்ளன: அசுரன் சூரபன்மனின் கொடுமைகளைத் தாங்கவொண்ணாத வானோரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள் காற்று, நெருப்பு, கங்கை நதி ஆகியவற்றால் சரவணப் பொய்கையைச் சேர்ந்த தாமரைமலருக்குக் கொண்டுசெல்லப்பட்டவுடன் திருமுருகப்பெருமான் சரவணபவனாக ஆறுதிருமுகங்களுடனும் பன்னிரண்டு திருக்கரங்களுடனும் அவதரித்தார்: "அருவமும் உருவு மாகி அநாதியாய்ப் பலவாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்கள் ஆறுங் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய." [கந்தபுராணம், உற்பத்திக் காண்டம், 11 திருவவதாரப் படலம், 942]. கார்த்திகைப் பெண்டிர் அறுவர் சரவணபவனுக்குப் பாலூட்டி வளர்க்கும் செவிலித் தாய்மார்களாக வந்தபோது 'அறுமுக ஒருவன் வேறாய் அறுசிறார் உருவங்கொண்டான்': "மறுவறும் ஆரல் ஆகும் மாதர்மூ விருவர் தாமும் நிறைதரு சரவ ணத்தின் நிமலனை அடைந்து போற்ற உறுநர்கள் தமக்கு வேண்டிற்று உதவுவோன் ஆதலாலே அறுமுக ஒருவன் வேறாய் அறுசிறார் உருவங் கொண்டான்." [கந்தபுராணம், உற்பத்திக் காண்டம், 11 திருவவதாரப் படலம், 966]. சிவபெருமானும் உமாதேவியாரும் சரவணப் பொய்கைக்கு வருகைதந்தபோது சிவபெருமான் உமாதேவியாரை நோக்கி தம் குழந்தையைச் சரவணப் பொய்கையிலிருந்து கொண்டுவருக என இயம்பவும் உமாதேவியார் தம் இரு கரங்காளால் ஆறு தெய்வக் குழந்தைகளையும் எடுத்து அணைத்துத் தூக்கியபோது அறுவரும் ஆறு முகங்களையும் பன்னிரு கரங்களையும் உடைய கந்தன் என்னும் திருப்பெயருடைய ஒருவரானார்: "அந்த வேளையில் கவுரியை நோக்கிஎம் ஐயன் இந்த நின்மகன் றனைக் கொடு வருகென இயம்ப ... ... ... ... சரவ ணந்தனில் தனதுசேய் ஆறுருத் தனையும் இருக ரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித் திருமு கங்களோர் ஆறுபன் னிருபுயம் சேர்ந்த உருவம் ஒன்றெனச் செய்தனள் உலகமீன் றுடையாள் ... ... ... ... அந்தம் இல்லதோர் மூவிரு வடிவமொன் றாகிக் கந்தன் என்றுபேர் பெற்றனன் கவுரிதன் குமரன்." [கந்தபுராணம், உற்பத்திக் காண்டம், 13 சரவணப்படலம், 1033-1035]. 5. சிவபெருமானின் திருமைந்தராகத் திருமுருகப்பெருமான் அவதரித்தார் என்னும் செய்தியானது, தந்தையின் தெய்வாம்சங்கள் அனைத்தும் திருமைந்தரிடம் உள்ளன என்னும் பேருண்மையை உணர்த்துகின்றது [Clothey 1978: 46]. சிவபெருமானின் திருநெற்றிக் கண்ணின் தீப்பொறியிலிருந்து அவதரித்த பாலமுருகன், சிவபெருமான், உமாதேவியார் ஆகியோருக்கு அன்னியமானவர் அல்ல என்று சிவபெருமான் உமாதேவியாரிடம் உரைக்கும் செய்தியும் மேற்கூறிய கந்தபுராணத்தைச் சேர்ந்த பாடலில் இடம்பெற்றுள்ளதைக் காணலாம்: "... நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும் பேதகம் அன்றால் நம்போல் பிரிவிலன் யாண்டும் நின்றான் ஏதமில் குழவி போல்வான் யாவையும் உணர்ந்தான் சீரும் போதமும் அழிவில் வீடும் போற்றினர்க்கு அருள வல்லான்." [பாடல் 1070]. 6. மேற்கூறிய கந்தபுராணத்தில் இடம்பெற்றுள்ள செய்திகளிலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியது யாதெனின், ஏறக்குறைய கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சங்க காலத்தில் தமிழர்களிடையே போற்றப்பட்டுவந்த குறிஞ்சிக்கடவுளாகிய திருமுருகன் வரலாற்றில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதாகும். அவற்றுள் முக்கியாமானதோர் அம்சமாவது, சிவபெருமான், உமாதேவியார் ஆகியோருக்குத் திருமுருகன் திருமைந்தர் ஆவார் என்பதாகும். 7. திரு அருணகிரிநாத சுவாமிகள் இயற்றியருளிய கந்தரலங்காரத்தில் சிவபெருமான், உமாதேவியார் ஆகியோரின் திருமைந்தர் திருமுருகன் என்னும் செய்தி அந்நூலின் பல பாடல்களில் இடம்பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக, '... செஞ்சடா அடவிமேல் ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரன்' பாடல் 1 - பேற்றைத் தவம். '... திரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரம கல்யாணிதன் பாலகன்' பாடல் 80 - மாகத்தை முட்டி. 'தாரா கணமெனும் தாய்மார் அறுவர் தருமுலைப்பால் ஆராது உமைப்பாலுண்ட பாலன்' பாடல் 81 - தாரா கணம். 'சங்கு சக்கராயுதன் விரிஞ்சன் அறியாச் சூலாயுதம் தந்தக் கந்தச்சுவாமி' பாடல் 86 - வேலாயுதன் சங்கு. என திருமுருகப்பெருமான் வருணிக்கப்படுகின்றார். திருவிநாயகப்பெருமானும் திருமுருகப்பெருமானும் சிவபெருமானின் திருமைந்தர்கள் என்பது கந்தரலங்காரத்தின் காப்புச் செய்யுளில் இடம்பெற்றுள்ள 'களிற்றுக்கு இளைய களிறு' என்னும் அழகான உருவகத்தில் உணர்த்தப் பெறுகின்றது. மேலும், உமாதேவியாரின் திருமைந்தராகிய திருமுருகன், உமாதேவியாரின் சோதரரான திருமாலின் திருமருகன் என்னும் செய்தியும் பல பாடல்களில் குறிக்கப் பெறுகின்றது: 'வெய்ய வாரணம்போல் கைதான் இருபதுடையான் தலை பத்தும் கத்தரிக்க எய்தான் மருகன்' பாடல் 22 - மொய் தார் அணி. 'வெற்பு நட்டு உரக பதித் தாம்புவாங்கி நின்று அம்பரம் பம்பரம்பட்டுழல மதித்தான் திருமருகா' பாடல் 39 - உதித்து ஆங்கு. 'பெரும் பாம்பில் நின்று நடிக்கும் பிரான் மருகா' பாடல் 50 - படிக்கும் திருப்புகழ். 8. வள்ளியம்மை: சங்க காலத்திற்குப் பின்னர் தோன்றிய புராணங்களில் திருமுருகனின் துணைவியராக வள்ளியம்மையும் தெய்வானையம்மையும் விரிவான முறையில் வருணிக்கப்பட்டுள்ள போதிலும், கந்தரலங்காரத்தில் தெய்வானையம்மையைப் பற்றிக் குறிப்பிடாத அளவிற்கு வள்ளியம்மைக்கு முக்கியத்துவம் தரப்படுள்ளது. தெய்வானையம்மையைக் குறிப்பிடாததற்குரிய காரணம் தெரியவில்லை எனினும், பண்டைத் தமிழர் பண்பாட்டின் பின்னணியினை வலியுறுத்த வேண்டியே வள்ளியம்மைக்கு அத்தகைய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்று யூகிக்க இடமுள்ளது. இவ்வாறு கூறுவதற்குரிய ஆதாரம், திருமுருகன் வேறு எவரும் அறியாதவகையில் குறிஞ்சி நிலத்து வேடர்குல நங்கையாகிய வள்ளியம்மையைப் பண்டைத் தமிழர் அகத்திணையியலைச் சார்ந்த களவியல் மரபுக்கேற்ப இரகசியமாகச் சந்தித்துக் காதல்கொண்டு மணம்புரிதலில் அடங்கியுள்ளது. கந்தரலங்காரத்தில், வள்ளியம்மை 'சயில சரச வல்லி' பாடல் 67 - பெறுதற்கு அரிய. யாகக் காட்சியளிக்கின்றார். திருமுருகனோ, 'வேடிச்சி விரும்பும் குமரன்' பாடல் 53 - வேடிச்சி கொங்கை. ஆகவும், 'கள்ளச்சிறுமி என்னும் வள்ளியை வேட்டவன்' பாடல் 94 - தெள்ளிய ஏனலில். ஆகவும், 'செம்மான் மகளைக் களவுகொண்டுவரும் ஆகுலவன்.' பாடல் 91 - கருமான் மருகனை. ஆகவும் காட்சிதருகின்றார். மேலும், வேடர்குல சமுதாயப் பின்னணியை ஒருசிறிதும் பொருட்படுத்தாத வகையில், உண்மையான அன்பினை உடையவரும் 'இச்சா-சக்தி'யின் உருவகமாகத் திகழுபவருமான வள்ளியம்மையை ஏற்றுக் கொள்ளும் முழுமுதற்கடவுளாகத் திருமுருகப்பெருமான் விளங்குகின்றார். 9. திருமுருகப்பெருமானின் திருவடிகள்: இப்பொழுது, கந்தரலங்காரத்தில் காணப்படும் திருமுருகப்பெருமானின் 'பாதாதிகேச' அலங்காரத்தைக் காணும் வகையில், முதன்முதலாகத் திருமுருகனின் திருவடிகளை நோக்குவோம்: திருமுருகனின் திருவடிகள், செந்தாமரைமலர்போன்ற செக்கச்சிவந்த மென்மலர்ப் பாதங்களாகும். பாடல்கள் - 28 - வேலே விளங்கும், 31 - பொக்கக் குடிலில், 41 - பாலே அனைய. அவை, வீரக்கழல்களையும் தண்டை, சிலம்பு ஆகிய அணிகலன்களையும் வெட்சி-கடம்பு-குரா மலர்களையும் அணிந்துள்ள பாதாரவிந்தங்களாக விளங்குகின்றன. பாடல்கள் - 17 - வேத ஆகம, 30 - பால் என்பது மொழி, 82 - தகட்டில் சிவந்த, 103 - இராப் பகலற்ற. பாலமுருகனின் சிற்றடிகளைச் சிந்தனையில் இருத்தி வணங்குவது முக்தியைப் பெறுவதற்குரிய வழியாகும். பாடல்கள் - 15 - தாவடி ஓட்டு, 60 - சிந்திக்கிலேன், 67 - பெறுதற்கு அரிய. அச்சிற்றடிகள், பிரம்மதேவன் எழுதிய தலையெழுத்தையும் மாற்றியமைக்கும் வல்லமை உடையவை - பாடல் 40 - சேல் பட்டு. அடியார்களின் கண்களுக்குத் துணையாக விளங்குபவை - பாடல் 70 - விழிக்குத் துணை. 'குமரா, சரணம், சரணம்,' என்று வானோர் துதிக்கும் திருமுருகனின் திருவடிகள், அடியார்களுக்குத் அடைக்கலம் தரும் திருவடிகளாகத் திகழ்கின்றன. பாடல்கள் - 84 - மைவரும் கண்டத்தர், 87 - குமரா சரணம். மனத்தாலும் வாக்காலும் செயலாலும் அடைவதற்கு அரிதான முழுமுதற்கடவுள் திருமுருகப்பெருமானை நேரில்கண்டு தரிசனம் பெறுவதற்குரிய ஒரே வழியாவது அப்பெருமானின் சிவந்த திருவடிகளில் வீழ்ந்து வணங்குவதேயாகும் - பாடல் 28 - வேலே விளங்கும். 'வேலே விளங்கும் கையான் செய்ய தாளில் வீழ்ந்து இறைஞ்சி மாலே கொள இங்ஙன் காண்பது அல்லால் மனம் வாக்குச் செய லாலே அடைதற்கு அரிதாய் அரு உருவாகி ஒன்று போலே இருக்கும் பொருளை எவ்வாறு புகல்வதுவே? 10. பாலமுருகன் திருவரையில் 'சீரா' எனப்படும் சிறுவாள் செருகப்பட்டுள்ளது: பாடல்கள் - 27 - ஓலையும் தூதரும். 81 - தாரா கணம். மேலும், திருவரையில் பாலமுருகன் அணிந்துள்ள கிண்கிணியின் ஓசை பதினான்கு உலகங்களிலும் கேட்கின்றது - பாடல் 93 - மண் கமழ் உந்தி. 11. சிவப்பு நிறமுடையதும் நறுமணமுடையதுமான கடம்ப மலர்களாலாகிய மாலைகளை அணிந்துள்ள திருமுருகன் 'கடம்பின் மலர்மாலை மார்பன்' எனவும், 'கந்தக் கடம்பன்' எனவும் அன்புடன் வருணிக்கப்படுகின்றார்: பாடல்கள் - 19 - சொன்ன கிரௌஞ்ச, 72 - சேந்தனைக் கந்தனை. 12. திருமுருகப்பெருமானின் மிகவும் முக்கியமானதோர் அலங்காரமாவது தீயசக்திகளை ஒடுக்கி அழிப்பதுவும் மெய்ஞ்ஞானத்தை அருளும் சின்னமாகவும் விளங்கும் வேலாயுதமாகும். 'வேலே விளங்கும் கையான்' பாடல் 28 - வேலே விளங்கும், 'வேத ஆகம சித்ர வேலாயுதன்' பாடல் 17 - வேத ஆகம, 'அயில் வேலன்' பாடல் 2 - அழித்துப் பிறக்க, 'வெற்றி வேலோன்' பாடல் 11 - குசை நெகிழா, 'வையிற் கதிர் வடிவேலோன்' பாடல் 18 - வையின் கதிர், என அழைக்கப்படும் திருமுருகன், சூரபன்மன் போன்ற தீயசக்திகளை அழிக்கும் 'போர் வேலன்' எனவும் அழைக்கப்படுகின்றார் - பாடல் 91 - கருமான் மருகனை. இந்த மரபு சங்க காலந்தொட்டே வழங்கிவரும் மரபு என்பது, 'சூர்மறுங்கறுத்த சுடர்இலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங்குன்றத்து,' என்று குறிப்பிடும் அகநானூற்றுப் பாடலிலிருந்து தெரியவருகின்றது [அகநானூறு, 59:10-11]. திருமுருகப்பெருமான், 'சூர்மீது கதிர்வேல் எறிந்தவன்' - பாடல் 49 - சூரில் கிரியில், 'சுவர்ண கிரௌஞ்சகிரி ஊடுருவத் தொளைத்த வைவேல்' உடையவன் - பாடல் 19 - சொன்ன கிரௌஞ்ச, எனவும் கந்தரலங்காரத்தில் குறிப்பிடப்படுகின்றது. 13. திருமுருகப்பெருமான், அசுரர்களை அச்சுறுத்தும் 'சூரபயங்கரன்' - பாடல் 82 - தகட்டில் சிவந்த என்று வருணிக்கப்பட்டாலும், உண்மையான பக்தர்களைக் காத்தருளும் கிருபாகரன் ஆவார் - பாடல் 1 - பேற்றைத் தவம். 'முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பவர்' திருமுருகப்பெருமான் - பாடல் 22 - மொய் தார் அணி. ஏனென்றால், செந்தமிழ்மொழியில் இயற்றப் பெற்ற நூல்கள் அனைத்திற்கும் புரவலனாகத் திகழ்பவர் திருமுருகப்பெருமான் - பாடல் 72 - சேந்தனைக் கந்தனை. பயந்த தனிவழிக்குத் துணையாக விளங்குவது திருமுருகப்பெருமானின் அழகிய வேல் - பாடல் 70 - விழிக்குத் துணை. வெற்றிவேலன் திருநாமம் புகல்பவர், பிறவிக்கடலில் புகமாட்டார், வேதனையைத் தரும் வறுமையால் துன்புறமாட்டார் - பாடல் 33 - முடியாப் பிறவி. 14. 'பாதாதிகேச' அலங்கார வருணனையின் முறைமைப்படி, இப்பொழுது திருமுருகப்பெருமானின் திருமுகத் தரிசனம்காணும் அரிய வாய்ப்பினைப் பெறுகின்றோம். ஆறு திருமுகங்களையுடைய திருமுருகப்பெருமான், ஆறுமுகம், அல்லது சண்முகம் [ஷண்முகம்] என்னும் திருப்பெயரால் அழைக்கப்படுகின்றார். சிவபெருமானின் திருமைந்தராக ஆறுமுகப்பெருமான் அவதரித்ததுபற்றி கந்தபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியாவது, ஆறு திருமுகங்களையுடைய பாலமுருகனுக்கு செவிலித் தாய்மார்களாகப் பாலூட்டி வளர்க்கும் பணியை ஏற்றுக் கொண்ட கார்த்திகைப் பெண்கள் அறுவரும் தனித்தனியாகப் பாலூட்ட விரும்பியதால் பாலமுருகன் ஆறு தெய்வக் குழந்தைகளானார்; பின்னர், உமாதேவியார் தம் திருக்கரங்களால் ஆறு தெய்வக் குழந்தைகளையும் எடுத்து அணைத்துத் தூக்கியபோது அறுவரும் ஒரே வடிவுடைய ஆறு முகங்களையும் பன்னிரு கரங்களையும் உடைய கந்தன் என்னும் திருப்பெயருடைய ஒருவரானார் என்பதாகும். 15. கந்தரலங்காரத்தில், பாலமுருகன், 'இரு நான்கு வெற்பும் அப்பாதியாய் விழ மேரும் குலுங்க விண்ணாரும் உய்யச் சப்பாணிகொட்டியகை ஆறு இரண்டு உடைச் சண்முகன்' என்று அழைக்கப்படுகின்றார் - பாடல் 14 - குப்பாச வாழ்க்கை. திரு அருணகிரிநாத சுவாமிகள் தாம் கண்ட திருமுருகப்பெருமானின் தரிசனத்தை, 'பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிருதோள்களுமாய்த் தித்தித்து இருக்கும் அமுதுகண்டேன் ... தத்திக் கரைபுரளும் பரமாநந்த சாகரத்தே' என்று வருணிக்கின்றார் - பாடல் 47 - பத்தித் திருமுகம். மேலும், 'நாள் என் செய்யும்? வினைதான் என்செய்யும்? குமரேசர் இருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னேவந்து தோன்றிடினே' எனவும் வினவுகின்றார் சுவாமிகள். - பாடல் 38 - நாள் என் செயும். 16. புராணங்களில் இடம்பெற்றுள்ள செய்திகளை ஆராயுமிடத்து, ஒரு முக்கியமான ஆன்மிகக் கருத்தினைக் குறிப்பிடவேண்டியே திருமுருகப்பெருமானின் ஆறு திருமுகங்கள் உருவகிக்கப்பட்டுள்ளன என யூகித்தறிய இடமுள்ளது. சுவாமி சிவானந்தா அவர்களின் கருத்தாவது, திருமுருகப்பெருமானின் ஆறு திருமுகங்கள், ஞானம், வைராக்கியம் [பற்றின்மை], வலிமை, கீர்த்தி [புகழ்], திரு [செல்வம்], ஐஸ்வரியம் என்னும் அறுவகைத் தெய்வீகப் பண்புகளைக் குறிக்கின்றது, என்பதாகும். திருமிகு கிருபானந்த வாரியார் அவர்களின் கருத்தாவது, திருமுருகப்பெருமானின் திருமுகங்கள் ஆறும், முற்றறிவுடைமை, பேரின்பமுடைமை, பாசங்களோடு தொடர்பின்மை, தம்வயமுடைமை, பேரருளுடைமை, பேராற்றலுடைமை என்னும் அறுவகை அருட்குணங்களைக் குறிப்பனவாகும் என்பதாகும். மேலும், திருமுருகப்பெருமானின் திருமுகங்கள் ஆறும், பிரபஞ்சத்தின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மேல், கீழ், ஆகிய ஆறு திக்குகளைக் குறிப்பதன்மூலம், திருமுருகப்பெருமான் பிரபஞ்சமெங்கும் நிறைந்துள்ள முழுமுதற்கடவுள் ஆவார் என்பதைக் குறிக்கின்றன என்னும் கருத்தும் உள்ளது [Clothey 1978:175]. அதேவேளையில், திரு அருணகிரிநாத சுவாமிகள் திருமுருகப்பெருமானை நோக்கி விண்ணப்பிக்கின்ற திருப்புகழ்ப் பாடல் உணர்த்தும் கருத்தும் நம் அனைவரின் சிந்தனைக்குரியது. திருமுருகனின் பக்தர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான அத் திருப்புகழ்ப் பாடல் பின்வருமாறு: 'ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்றே ஈசருடன் ஞானமொழிபேசும் முகம் ஒன்றே கூறும் அடியார்கள் வினைதீர்க்கும் முகம் ஒன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே மாறுபடு சூரரைவதைத்த முகம் ஒன்றே வள்ளியை மணம்புணரவந்த முகம் ஒன்றே ஆறுமுகம்ஆன பொருள் நீ அருளல் வேண்டும் ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே. பாடல் 1328 - ஏறுமயில் ஏறி. 17. மயில்வாகனன் என்று அன்புடன் அழைக்கப்பெறும் திருமுருகப்பெருமானுக்கும், குறிஞ்சி நிலப்பகுதியைச் சேர்ந்த மயிலுக்கும் மிகப் பழங்காலந்தொட்டே நெருங்கிய தொடர்பு இருந்துவந்துள்ளது என்று தெரிகின்றது. சங்க இலக்கியத்தில் மலையும் மலைசார்ந்த நிலப்பகுதியான குறிஞ்சி நிலத்தின் செழுமையையும் இயற்கை அழகினையும் பிரதிபலிக்கும் பறவையாக விளங்கிய மயில், திருமுருகனின் சிறப்பு வாகனமாகிய பின்னர், கருடனைப்போல் வானத்தில் அதிக உயரத்தில் பறக்கவல்ல ஆற்றலை உடையது எனவும் கடலுடன் தொடர்புடையது எனவும் கருதப்படலாயிற்று. இவ்வாறு, நிலம், வானம், கடல் ஆகிய மூன்று பிரதான இயற்கைச் சக்திகளுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்ட மயில், பிரபஞ்சத்தின் முழுமுதற்கடவுளாகிய திருமுருகப்பெருமானின் சிறப்பு வாகனமாகியதில் வியப்பில்லையன்றோ! 18. கந்தரலங்காரத்தில், திருமுருகப்பெருமான், மழையைக் கொண்டுவரும் மேகங்களைக் கண்டு மகிழ்ச்சியடையும் கார்மயிலை வாகனமாகக்கொண்டவர் என்றும் - பாடல் 72 - சேந்தனைக் கந்தனை, நீலச்சிகண்டியாகிய மயிலை - பாடல் 26 - நீலச் சிகண்டியில், குதிரையைப் போன்ற வாகனமாக உடையவர் என்றும் - பாடல் 83 - தேங்கிய அண்டத்து, 'கராசலங்கள் எட்டும் குலகிரி எட்டும் விட்டுஓட எட்டாத வெளி மட்டும் புதைய [தோகையை விண்வெளியில்] விரிக்கும் கலாப மயூரத்தன்' என்றும் வருணிக்கப்படுகின்றார் - பாடல் 65 - வெட்டும் கடா. 'வேலும் மயிலும் துணை' என்று திருமுருகனின் பக்தர்கள் உரைப்பது போலவே திரு அருணகிரிநாத சுவாமிகளும், 'மரணப்ரமாதம் நமக்கில்லையாம் என்றும் வாய்த்ததுணை கிரணக்கலாபியும் வேலும் உண்டே' என்று மயிலினையும் வேலினையும் புகழ்ந்து பாடியருளியுள்ளார் - பாடல் 21 - மரண ப்ரமாதம். 19. திருமுருகப்பெருமான் சேவற்கோழிக்கொடியை உடையவர் - பாடல் 20 - கோழிக்கொடியான். அந்தச் சேவற்கோழி, தன் சிறகை அடித்த மாத்திரத்திலேயே, கடற்பரப்பு கிழிந்தது, அண்டத்தின் கூரை உடைபட்டு ஆட்டங்கண்டது, வீண்மின்கள் உதிரத் தொடங்கின; மகாமேரு மலையும் ஏனைய குன்றுகளும் இடிந்து தூள்பட்டன என்னும் பொருளில், '... வேலவன்பால் வந்த வாகைப் பதாகை என்னும் தடைபட்ட சேவல் சிறகடிக்கொள்ளச் சலதி கிழிந்து உடைபட்டது அண்ட கடாகம் உதிர்ந்தது உடுபடலம் இடைப்பட்ட குன்றமும் மாமேரு வெற்பும் இடிபட்டவே' என்று கந்தரலங்காரத்தில் வருணிக்கப்படுகின்றது - பாடல் 12 - படைபட்ட வேலவன். 20. பொதுவாக இளையோரும் முதியோரும் மரணபயம் உடையவர்கள்; ஆனால், திருமுருகனின் பக்தர்களுக்கு மரணபயம் அறவே இல்லை. காரணம், திருமுருகப்பெருமான் தம் பக்தர்களை எல்லா வகையான தீயசக்திகளிடமிருந்து காத்தருள்வார் என்னும் திடமான நம்பிக்கையை உடையவர்களாக திருமுருகப்பெருமானின் பக்தர்கள் விளங்குகின்றனர் என்பதாகும்: 'ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக் காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள் ...' - பாடல் 27 - ஓலையும் தூதரும். மேலும், கந்தரலங்காரத்தில் அடங்கிய திருப்பாடல்களுள் ஒரு பாடலையாவது கற்றறிந்தவர்களுக்கு அச்சம் என்பது அறவே இல்லை: 'சலம் காணும் வேந்தர்தமக்கும் அஞ்சார், யமன் சண்டைக்கு அஞ்சார் துலங்கா நரகக்குழி அணுகார், துட்டநோய் அணுகார், கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தன் நன்நூல் அலங்காரம் நூற்றுள் ஒருகவிதான் கற்று அறிந்தவரே' என்று கந்தரலங்காரத்தில் வருணிக்கப்படுகின்றது - பாடல் 101 - சலம் காணும். 21. கந்தரலங்காரத்தில் இடம்பெற்றுள்ள அறநெறிக் கோட்பாடுகள்: திரு அருணகிரிநாத சுவாமிகள் வலியுறுத்தும் அறநெறிக் கோட்பாடுகளில் தலையானவை, மனதைக் கட்டுப்படுத்துதல், கோபம்கொள்வதைத் தவிர்த்தல், வறியவர்களுக்குப் பொருளுதவிசெய்தல், ஆகியவையாகும். சுவாமிகளின் வேண்டுகோளாவது, 'தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியை, தானம் என்றும் இடுங்கோள்' என்பதாகும். இவ்வாறு செய்தால், திருமுருகப்பெருமானின் அருள் தானே நம்முன் வந்து தோன்றும் - பாடல் 16 - தடுங்கோள் மனத்தை. சுழித்து ஓடும் ஆற்றின் வெள்ளம் போல செல்வம் நிலைத்து நிற்பதில்லை - பாடல் 36 - சுழித்து ஓடும் ஆற்றில்; பூமியில் ஆழப் புதைத்து வைத்திருக்கும் செல்வம் ஒருவரின் உயிர் உடலை விட்டுப் பிரியும்போது ஒருபோதும் அவரின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வரமாட்டாது - பாடல் 20 - கோழிக்கொடியான். வெயிலுக்குக் கூட ஒதுங்க உதவாத உடம்பின் வெறும் நிழல்போல் கையிலுள்ள பொருளும் உயிர் உடலை விட்டுப்போகும்போது உதவாது; எனவே, கதிர்வடிவேலனை வாழ்த்தி நொய்யாகிய அரிசியானாலும் அந்த நொய்யரிசியில் சிறிதளவேனும் ஏழை மக்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் - பாடல் 18 - வையின் கதிர். இறந்த உடலுக்கு எரியூட்டிய பின்னர் ஒருபிடி சாம்பரும் காணாத மாய உடல் நமது உடல் என்பதை நினைவுகூர்ந்து, தினந்தோறும் ஒரு கைப்பிடியளவு சோறாவது வறியவர்களுக்குக் கொடுத்துவிட்டு எஞ்சியதை அருந்துங்கள் - பாடல் 57 - பொரு பிடியும். மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் உணவுதான், உடலை விட்டு உயிர் பிரிந்து போகும் நெடுவழிக்குரிய பொதிசோறாக' அமையும் - பாடல் 51 - மலை ஆறு கூறு. 22. கந்தரலங்காரத்தில் வலியுறுத்தப்பெறும் ஆன்மிகக் கோட்பாடுகள்: இவ்வுலக வாழ்க்கையானது ஆற்றில் ஓடிக் கொண்டிருக்கும் நீரைப்போல நிலைத்திராத பொய் வாழ்வாகும் - பாடல் 98 - கதிதனை ஒன்றை. நீர்க்குமிழியை ஒத்தது நமது உடல் - பாடல் 66 - நீர்க் குமிழிக்கு. இறந்தபின்னர் எரியூட்டப் பெறும் உடலிலிருந்து ஒருபிடி சாம்பரும் கிடைக்கப் பெறாத மாய உடல் நமது உடல் - பாடல் 57 - பொரு பிடியும். சேறுபோன்ற அழுக்குநிறைந்த இப்பிரபஞ்சவாழ்க்கையை விட்டு வெளியேற வேண்டுமானால், கிருபாகரனாகிய திருமுருகப்பெருமான் காட்டும் நல்வழியினைப் பின்பற்றுதல் வேண்டும் - பாடல் 1 - பேற்றைத் தவம். வெற்றிவேல் முருகனின் திருப்பெயரை ஓதிவருபவர்கள் பிறவிக் கடலில் புகமாட்டார், அனைத்தையும் கெடுக்கவல்ல வறுமையால் வருந்தமாட்டார் - பாடல் 33 - முடியாப் பிறவி. மெய்ம்மை குன்றாமொழிக்குத்துணை, 'முருகா' என்னும் திருநாமமாகும் - பாடல் 70 - விழிக்குத் துணை. திருமுருகப்பெருமானை மெய்யன்போடு நினைக்குந்தோறும் தித்திக்கும் பரமாநந்தம் கிடைக்கப் பெறும்; அப்போது கரும்பும் துவர்க்கும், செந்தேனும் புளித்துக் கைத்துவிடும் - பாடல் 6 - பெரும் பைம். திருமுருகப்பெருமானை மௌனநிலையில் உணர்தலும் - பாடல் 19 - சொன்ன கிரௌஞ்ச, வெட்சிப் பூக்களாலும் 'தண்டை' எனப்படும் அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட திருமுருகப்பெருமானின் திருவடிகளைக் காவலாகக்கொண்டு அவற்றை மௌனமாகச் சிந்தித்தவாறு 'சும்மா இருத்தலும்' சிறந்த ஆன்மிக நெறிகளாகும் - பாடல் 17 - வேத ஆகம. பஞ்சபூதங்கள் எனப்படும் மண், காற்று, நெருப்பு, நீர், ஆகாயம் ஆகியவற்றால் ஆகிய உடம்பு என்னும் வீட்டில் வசிக்காமால், இத்தகைய பூத உடலையுடைய வேறு எவரும் அறியாத 'மௌன-பஞ்சரம்' எனப்படும் ஒப்பற்ற தனிவீட்டில் சொல்லும் நினைவும் இல்லாமல் சும்மா இருப்பாயாக' என்று திருமுருகப்பெருமான் தமக்கு உபதேசித்தருளினார் என்னும் அரிய செய்தியை நம்முடன் திரு அருணகிரிநாத சுவாமிகள் பகிர்ந்துகொண்டுள்ளார்: 'ஒருபூதரும் அறியாத் தனிவீட்டில் உரை உணர்வு அற்று இரு, பூதவீட்டில் இராமல் என்றான் ...' பாடல் 45 - ஒரு பூதரும். 'சும்மா இரு சொல்லற' என்பது இறைவனின் உபதேச அருள்மொழியாகும் கந்தரநுபூதி - 12 செம்மான் மகளை.. இந்த ஆன்மிகப் பொருள் பொதிந்த சொற்றொடரைத்தான் குறும்பு செய்யும் குழந்தைகளை நோக்கி 'சும்மா இரு' என்று சொல்கின்றோம். அஃதாவது, குழந்தைப் பிராயம் முதலே குழந்தைகள் இந்த ஆன்மிகக் கட்டொழுங்கை அறிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர் என்பதை உணரும்போது மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது! ஆயினும், பணியிலிருந்து ஓய்வுபெற்ற வயதானவர்களையும், வேலையில்லாதவர்களையும் நோக்கி, 'இப்பொழுது என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்?' என்று கேட்கும்போது, 'சும்மாதான் இருக்கின்றேன்!' என்று விடையளிக்கின்றனர். 'சும்மா இருப்பது' எவ்வகையிலும் சுகம்தானே! தமிழ் வழக்கில் 'சும்மா' என்னும் சொல் பல்வேறு பொருளில் பயன்பட்டுவருகின்றது என்பதையும் நோக்கலாம். எடுத்துக்காட்டாக, 'என்ன காரியமாக வந்தீர்? என்னும் கேள்விக்கு விடையாக 'சும்மா வந்தேன்' என்பதையும், 'சும்மா சொல்லு', 'சும்மா கொடு' என்று கூறுவதையும் குறிப்பிடலாம். 23. பரம்பொருள் என்பது யாது? எப்படியிருக்கும்? என்னும் கேள்விகள் பக்தர்களின் மனத்தில் எழக்கூடும். இத்தகைய கேள்விக்கு விடையளிக்கும் வகையில் திருமுருகப்பெருமான் தமக்கு உபதேசித்தருளியதையும் திரு அருணகிரிநாத சுவாமிகள் கந்தரலங்காரத்தைச் சேர்ந்த திருப்பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அஃதாவது, 'கோன் அன்று எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு கூறவன்றோ; வான் அன்று, கால் அன்று, தீ அன்று, நீர் அன்று, மண்ணும் அன்று, தான் அன்று, நான் அன்று, அசரீரி அன்று, சரீரி அன்றே' [அஃதாவது] ஒன்றும் அற்ற ஒன்றாகிய பரம்பொருள் எல்லாவற்றுக்கும் அப்பால் உள்ளது - பாடல் 9 - தேன் என்று. அவ்வாறென்றால், அந்தப் பரம்பொருளைப் பக்தர்கள் காணவே இயலாதா என்னும் கேள்விக்கு விடையாக அமைந்துள்ளது கந்தரலங்காரத்தைச் சேர்ந்த 102 ஆவது திருப்பாடல். இப்பாடலில், திருமுருகப்பெருமான் தமக்கு அன்புகூர்ந்து அருளிய தரிசனத்தில் காட்சியளித்ததைத் திரு அருணகிரிநாத சுவாமிகள் வருணித்துள்ளார்: 'திருவடியும் தண்டையும் சிலம்பும் சிலம்பு ஊடுருவப் பொருவடிவேலும் கடம்பும் தடம்புயம் ஆறிரண்டும் மருவடிவான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும் குருவடிவாய் வந்து என்உள்ளம் குளிரக் குதிகொண்டவே!' - பாடல் 102 - திருவடியும் தண்டையும். ['திருமுருகப்பெருமானின் திருவடிகளும் அவற்றை அலங்கரிக்கும் தண்டை என்னும் அணிகலனும், உள்ளே மணிகள் ஒலிக்கும் சிலம்பும், கிரௌஞ்ச மலையைத் தொளைத்துப் போர்செய்த கூர்மையான வேலாயுதமும் கடம்ப மலர்மாலையும் அம்மாலைகள் அலங்கரித்த விசாலமான பன்னிரண்டு புயங்களும், பொருந்திய அழகுமிக்க ஆறு திருமுகங்களும் குருமூர்த்தியாக எழுந்தருளிவந்து அடியேனின் மனம் குளிருமாறு ஆனந்தக் கூத்தாடின.'] 24 தொகுப்புரை: (அ) கந்தரலங்காரத்தில், திருமுருகப்பெருமானின் திருமேனியின் திருவடிகள் முதல் தலையுச்சி வரையில் அலங்கரிக்கும் பல்வகை அணிகலன்களோடு திருமுருகனைப் பற்றிய சில வரலாற்றுச் செய்திகளும் புராணச் செய்திகளும் அலங்காரக் கூறுகளாக அமைகின்றன; (ஆ) சங்க காலத்துத் தமிழர்களிடையே வழங்கிவந்த திருமுருகப்பெருமான் வழிபாடு மலையும் மலைசார்ந்த நிலப்பகுதியான குறிஞ்சி நிலத்து இயற்கை அழகுடனும் அங்கு வாழ்ந்த மக்களின் பண்பாட்டுக் கூறுகளுடனும் நெருங்கிய தொடர்புடையதாக அமைந்திருந்தது; (இ) சங்க காலத்திற்குப் பிறகு தோன்றிய புராணச் செய்திகளில் சிவபெருமான், உமாதேவியார் ஆகியோரின் திருமைந்தராகத் திருமுருகப்பெருமான் காட்சியளிக்கின்றார்; ஆயினும், தமிழ் மொழியில் தோன்றிய பக்திப் பாடல்களில் திருமுருகப்பெருமானின் குறிஞ்சிப் பின்னணி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவந்துள்ள காரணத்தால் திருமுருகப்பெருமான் என்றென்றும் தமிழர்களின் முழுமுதற்கடவுளாகவே திகழ்கின்றார் என்பதும், தம் தெய்வீகத் தந்தை சிவபெருமானுக்கு ஆன்மிகக் குருவான சுவாமிநாதனாக விளங்கிய பெருமையும் திருமுருகப்பெருமானுக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது; (ஈ) மனத்தாலும், வாக்காலும் செயலாலும் அடைவதற்கு அரிதான முழுமுதற்கடவுள் திருமுருகப்பெருமானை நேரில்கண்டு தரிசனம் பெறுவதற்குரிய ஒரே வழியாவது அப்பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்குவதேயாகும்; (உ) தீயசக்திகளை அடக்கி ஒடுக்கி அழிக்கும் மெய்ஞ்ஞானத்தின் சின்னமாக விளங்குவது திருமுருகப்பெருமானின் வேலாயுதம்; (ஊ) முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் கிருபாகரனாகிய திருமுருகப்பெருமானின் அழகிய வேல், பயந்த தனிவழிக்குத் துணையாவதாகும்; (எ) ஆறு திக்குகளையுடைய பிரபஞ்சமெங்கும் நிறைந்துள்ள முழுமுதற்கடவுள் திருமுருகப்பெருமான் என்பதை, ஒரே திருமுகமாய்க் காட்சியளிக்கும் திருமுகங்கள் ஆறும் உணர்த்துகின்றன; அதனால்தான், 'ஏறுமயில் ஏறிவிளையாடும் முகமும், ஈசருடன் ஞானமொழி பேசும் முகமும், கூறும்அடியார்கள் வினைதீர்க்கும் முகமும், குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகமும், மாறுபடு சூரரைவதைத்த முகமும், வள்ளியை மணம்புணரவந்த முகமும்' ஒரே திருமுகமாய்க் காட்சியளிக்கின்றன என்று உய்த்து உணரலாம்; (ஏ) நிலம், வானம், கடல் ஆகிய மூன்று பிரதான இயற்கைச் சக்திகளுடன் தொடர்புடைய மயில், பிரபஞ்சத்தின் முழுமுதற்கடவுளாகிய திருமுருகப்பெருமானின் வாகனமாக விளங்குகின்றது; (ஐ) திருமுருகப்பெருமானின் உண்மையான பக்தர்களுக்கு மரணபயம் அறவே இல்லை; (ஒ) 'மனதைக் கட்டுப்படுத்துதல், கோபங்கொள்வதைத் தவிர்த்தல், வறியவர்களுக்குப் பொருளுதவி செய்தல்' ஆகியவை அறநெறிக் கோட்பாடுகளில் முக்கியமானவையாகும்; (ஓ) வெற்றிவேல் முருகனின் திருப்பெயரை ஓதிவருபவர்கள் பொய்யான பிறவிக் கடலில் புகமாட்டார்; (ஔ) மௌனநிலையில் இருந்து திருமுருகப்பெருமானின் திருவடிகளே காவலாக விளங்க, 'சொல்லற சும்மாயிருத்தல்' சிறந்த ஆன்மிகநெறியாகும், என்பவை திரு அருணகிரிநாத சுவாமிகள் கந்தரலங்காரத்தில் குறிப்பிட்டுள்ள ஆன்மிகக் கருத்துகளாகும். 25. முடிவுரை: மேற்கூறிய விவரங்களிலிருந்து, திருமுருகப்பெருமானின் திருமேனியைக் அலங்கரிக்கும் பல்வகை அணிகலன்களோடு புராணங்களில் கூறப்பட்டுள்ள சில செய்திகளும் அறநெறி, ஆன்மிகநெறிக் கோட்பாடுகளும் முழுமுதற்கடவுளாக விளங்கும் திருமுருகப்பெருமானின் பேரழகினைத் தெளிவாக உணர்த்துகின்றன என்பதை அறியலாம். |
துணைநூல்கள்: திரு அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த கந்தரலங்காரம். உரையாசிரியர்: திருமுருக கிருபானந்தவாரியார். சென்னை: வானதி பதிப்பகம், எட்டாம் பதிப்பு, 1986. திரு அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த கந்தரலங்காரம். சிங்காரவேலு சச்சிதானந்தம் படைத்தளிக்கும் ஓர் அறிமுக ஆய்வுக்கட்டுரையுடன் கூடிய ஆங்கில மொழியாக்கம் - கோலாலும்பூர்: முனைவர் சிங்காரவேலு சச்சிதானந்தம், இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகம், 2009. [Thiru Arunakirinaathar's Kantharalangkaaram. An English translation with an introductory research article by Singaravelu Sachithanantham]. திரு கச்சியப்ப சிவாசாரியார் அருளிய கந்தபுராணம். மூலமும் தெளிவுரையும். உரையாசிரியர்கள்: பேராசிரியர் அ. மாணிக்கம் அவர்களும் டாக்டர் பூவண்ணன் அவர்களும். சென்னை: வர்த்தமானன் பதிப்பகம், மூன்றாம் பதிப்பு, 2000 [உற்பத்திக்காண்டம், திருவவதாரப்படலம், சரவணப்படலம், பக். 942-1070]. சிவபாதசுந்தரம், சு. கந்தபுராண விளக்கம். கோலாலும்பூர்: சைவசித்தாந்தி சிவபாதசுந்தரனார் குருபூசை அறங்காப்பு, 2000. ஜகந்நாதன், கி. வா. அலங்காரம் [சொற்பொழிவுகள்]. சென்னை: அமுத நிலையம், 1956. Clothey, Fred. W. The Many Faces of Murukan. The History and Meaning of A South Indian God. The Hague: Mouton Publishers, 1978. வேலும் மயிலும் துணை. |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. [xhtml] 2503.2022 [css] |