அருண கணபண புயக சுடிகையின் அகில புவனமும் உதவு மலைமகள் ...... 1
அமலை யாரியை யந்தரி சுந்தரி யிமய மாமயில் அம்பைத்ரி யம்பகி ...... 2
அச்சுதச கோதரிய னைத்துவே தத்தலைவி யற்புதபு ராதனிவ ரப்ரகா சப்ரக்ருதி ...... 3
அம்பொற் குண்டலப் பேதை சாம்பவி விம்பக் கிஞ்சுகப் பூவை பூங்கொடி ...... 4
அக்ஷர லக்ஷஜ பத்தர்க்ர மத்திடு சக்ரத லத்தித்ரி யக்ஷிச டக்ஷரி ...... 5
ஆயிஇ திரு மைந்தன்முகம் ஆயிரம்வி ளங்கியதொர் ஆறுதர வந்தருளும் ஆறுமுக புண்டரிகன் ...... 6
அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி அபயமிட அஞ்சலென் றங்கீர னுக்குதவி ...... 7
அரசறிய வாமனமு நிக்கொருத மிழ்த்ரயமும் அபரிமித மாகவிவ ரித்தகட வுட்புலவன் ...... 8
அநுபவ சித்த பவக்கட லிற்பு காதெனை வினவியெ டுத்தருள் வைத்த கழற்க்ரு பாகரன் ...... 9
ஆசிலா சார தபோதன ரின்புறும் வாசகா தீத மனோலய பஞ்சரன் ...... 10
அகரு ம்ருகமத களப பரிமள விகட முகபட கடின புளகித ...... 11
அமிர்த பூதரி அண்டர்செ ழுங்கொடி குமுத வாய்மயில் குஞ்சரி மஞ்சரி ...... 12
அக்கமொரு கோடிபெறு வஜ்ரபா ணிக்குமரி தக்கஅம ராவதிபு ரக்கும்ஆ னைக்கிறைவன் ...... 13
ஐம்பத் தொன்றில்எட் டாறில் மூன்றினில் ஐந்திற் றங்கும்அப் பாலை வான்பொருள் ...... 14
அப்படி பத்தி பழுத்த மனத்தினர் அர்ச்சனை மெச்சிய செச்சை மணிப்புயன் ...... 15
ஆறுநிலை யென்றுமுத லாகிய பரங்கிரியும் ஆவின னெடுங்குடியும் ஆரண முடிந்திடமும் ...... 16
அருணையும் இலஞ்சியுஞ் செந்தூர் திருப்பழநி அடியர்மன பங்கயஞ் செங்கோடி டைக்கழியும் ...... 17
அநவரத நீலமலர் முத்தெறிசு னைப்புனலில் அருவிகுதி பாய்தருசெ ருத்தணியென் வெற்புமெனும் ...... 18
அலகில் திருப்பதி யிற்பயில் கற்ப காடவி அநுபவன் அத்தன்நி ருத்தன் அரத்த ஆடையன் ...... 19
ஆறுமா மாதர் பயோதர பந்தியில் ஆரவே பாலமு தாருநெ டுந்தகை ...... 20
வருண சரவண மடுவில் வருமொரு மதலை மறைகமழ் குதலை மொழியினன் ...... 21
மதுக ராரவ மந்திர சிந்துர மணம றாத கடம்பு புனைந்தவன் ...... 22
மட்டொழுகு சாரமது ரித்ததே னைப்பருக மர்க்கடச மூகமமை தொட்டிறா லெட்டுவரை ...... 23
மன்றற் பைம்புனத் தாள்ப தாம்புயம் வந்திக் குந்தனிக் காம வாஞ்சையன் ...... 24
மத்தமு டித்தருள் அத்தர்ப்ரி யப்பட நித்தம றைப்பொரு ளைத்தெளி வித்தவன் ...... 25
மாதிரமு மந்தரமு நீருநில னுங்கனக மால்வரையு டன்சுழல வாசுகிவி டம்பொழிய ...... 26
மகரசலி லங்கடைந் திந்த்ராதி யர்க்கமுது பகிர்தரு முகுந்தன்மன் பஞ்சாயு தக்கடவுள் ...... 27
மருகன்மற வாதவர்நி னைப்பவைமு டிக்குமவன் உருகுமடி யாரிருவி னைத்தொகைய றுக்குமவன் ...... 28
மறவர்பொ ருப்பில் ஒருத்திபொ ருட்ட நாளிள வடிவமு ழுக்க நரைத்தவி ருத்த வேதியன் ...... 29
மாதரா ரூபன் நிராகுல சிந்தையன் ஆதிகூ தாள மதாணிய லங்க்ருதன் ...... 30
வரத விதரண விரத அநுபவ மவுன குருபரன் நிபுண குணதரன் ...... 31
வனஜ ஜாதனை யன்றுமு னிந்தற வலிய பாரவி லங்கிடு புங்கவன் ...... 32
மட்டிலிரு நாலுதிசை கட்டுநெ மிக்கிரியும் உத்தரகு ணாதிகுட தக்ஷிணா திக்கிரியும் ...... 33
மங்கத் துங்கவிட் டேறு வாங்கிய செங்கைப் பங்கயச் சோதி காங்கேயன் ...... 34
மத்தம லத்ரய மித்தைத விர்த்தருள் சுத்தப வித்ரநி வர்த்திய ளிப்பவன் ...... 35
வாரணமு கன்தனது தாதையைவ லஞ்சுழல வாகைமயில் கொண்டுலகு சூழ்நொடிவ ருங்குமரன் ...... 36
மயமுறு ப்ரபஞ்சமுஞ் சங்கேத ஷட்சமய வழியுமன முங்கடந் தெங்கேனு நிற்குமவன் ...... 37
மதுரமொழி யால்உலக னைத்தையும் உணர்த்துமவன் வடஅனல நேர்கொடிய குக்குடம் உயர்த்தகுகன் ...... 38
மரகத பக்ஷ குலத்துர கத்தி வாகரர் வடிவையு ருக்கி வடித்த திருக்கை வேல்கொடு ...... 39
வாரிகோ கோஎன வாய்விட வந்தெதிர் சூரமா சேனையை மோதுக ளந்தனில் ...... 40
(சூர சம்மார போர்க் களத்தில் பூத வேதாள வர்ணணை)
உருவம் இருளெழ எயிறு நிலவெழ உலகு வெருவர அசைய வருவன ...... 41
உடைய நாயகி கண்டும கிழ்ந்திட நடைவி நோதவி தம்புரி பந்திய ...... 42
ஒக்கலைவி டாதழுத ரற்றுபா லர்க்குமிக உச்சிவெடி யாதுநிண மெத்தவே தப்புவன ...... 43
உங்குக் கிங்குவிட் டாழி நான்கினும் ஒன்றுக் கொன்றடி பாய்தல் காண்பன ...... 44
யுத்தக ளத்தினில் ரத்நம ணிக்குவை ஒட்டமொ டொற்றைஇ ரட்டைபி டிப்பன ...... 45
யோகினிக ளும்பெரிய சாகினிக ளும்புதிய மோகினிக ளும்பழைய டாகினிக ளும்புகழ ...... 46
உவணநிரை கொண்டிடுஞ் செங்காவ ணத்திடையில் உறவுகொள வந்துதம் பெண்காறை கட்டுவன ...... 47
உமிழ்குருதி யாறடைப டக்குறட டுக்கியதில் உபவனமொர் ஏழையுமு றித்தருகொ ழுக்குவன ...... 48
உடுபட லத்தை மறைத்த குறைக்கு வாலுடல் உதிரச முத்திர முற்று நிலைப்ப டாதன ...... 49
ஓடைமால் வாரண யூகம் அடங்கலும் ஓரொர்பேய் நீள்கடை வாயி லடங்குவ ...... 50
உடலி னிசிசரர் மவுலி ஒலியலும் உதடு மலைவன பதடி முலையின ...... 51
உததி யேழும டங்கவு றிஞ்சியும் உதர வாரழல் நின்றுகொ ளுந்துவ ...... 52
உக்கிரஇ ராவணன்எ டுத்தமே ருக்கிரியும் ஒற்றியிரு தோள்கொடுப றித்திடா தப்புவன ...... 53
ஒன்றித் திண்குரற் கூகை பாம்பொடு வென்றிச் செந்தலைத் தாலி பூண்பன ...... 54
ஒக்கமி டற்றில் இறக்கு குறைத்தலை விக்கி வெளுக்க வெளுக்க விழிப்பன ...... 55
யோகுபுரி யுங்குகையும் யோகபர ரும்பொருவ ஓடைமத தந்திவயி றூடினிது றங்குவன ...... 56
உசிதபிசி தங்கொணர்ந் திங்கேற விற்றுமென மதமலையெ லும்புகொண் டங்காடி கட்டுவன ...... 57
உதிரநிண வாள்பெருக வொட்டுவன வெட்டுவன உடலினடு வூடுருவ முட்டுவன தட்டுவன ...... 58
ஒழுகுபி ணத்துநி ணத்தின் அளற்றி லேபழு ஒடியவு ழக்கிவ ழுக்கி யுருட்டி வீழ்வன ...... 59
ஊசலார் வார்குழை யோலை யிடும்படி ஓதுசா மீகர நேமி பிடுங்குவ ...... 60
கரணம் இடுவன குணலை யிடுவன கழையை நடுவன பவுரி வருவன ...... 61
ககன கூடமு டைந்துவி ழும்படி கதறி வாயனல் கண்கனல் சிந்துவ ...... 62
கைச்சதியி னாமுறைவி தித்தவா முற்கடித சச்சபுட சாசபுட சட்பிதா புத்திரிக ...... 63
கண்டச் சம்பதிப் பேத மாம்பல கஞ்சப் பஞ்சகத் தாள மாம்படி ...... 64
கற்சரி யுற்சவ தர்ப்பண லக்ஷண சச்சரி மட்டிசை யொற்றிய றுப்பன ...... 65
காயெரிய பங்கியொடு சேகரமி குந்தசைவ காதுபடு சங்கவள மாலிகைபு னைந்திசைவ ...... 66
கருணைய திகந்துவந் தொண்கோகு லப்பெரிய கருமுடியொ டும்படுங் கங்காள மொத்துவன ...... 67
கடிபயிர வாதிகள்ப்ரி யப்படுக திக்கிசைய நடைநவிலு பாவனை யுதிக்குநட வித்தையின ...... 68
கடகம டுத்த இடக்கை வலக்கை வாளின கருதிய லக்ஷிய லக்ஷண முற்று மோதுவ ...... 69
காலமா றாத வராளிசி கண்டிகை பாலசீ காமர மானவி பஞ்சிகை ...... 70
கவுட பயிரவி லளிதை கயிசிகை கவுளி மலகரி பவுளி யிசைவன ...... 71
கனவ ராடிய ரும்பட மஞ்சரி தனத னாசிவி தம்படு பஞ்சமி ...... 72
கைச்சுலவு கோன்முறைவி தித்தரா கத்தடைவில் உச்சமது சாதிகமெ டுத்துமேல் எட்டுவன ...... 73
கஞ்சக் கஞ்சநற் றேசி ராஞ்சிகு றிஞ்சிப் பண்குறித் தியாழை யேந்துவ ...... 74
கற்றவு டுக்கையி டக்கைக ளப்பறை மத்தளி கொட்டிய முற்றும டிப்பன ...... 75
காரெனமு ழங்குகுர லேறுதுடி சந்த்ரவளை வீரமுர சுந்திமில்த டாரிகுட பஞ்சமுகி ...... 76
கரடிபறை யங்கனந் தங்கோடி கொட்டுவன முறைமுறை கவந்தநின் றொன்றோடு கிட்டுவன ...... 77
கசரதப தாகினிய ரக்கர்துணி பட்டுவிழு களமுழுதும் வாழிய திருப்புகழ்மு ழக்குவன ...... 78
கடியகு ணத்த சினத்த சகத்ர யோசனை நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய ...... 79
காதநூ றாயிர கோடி வளைந்தன பூதவே தாளம் அநேகவி தங்களே. ...... 80
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அருண கணபண புயக சுடிகையின் அகில புவனமும் உதவு மலைமகள் ...... 1
......... பதவுரை .........
அருண ... சிவந்த நிறத்தையும்,
கணபண ... அநேக படங்களையும் கொண்டுள்ள
புயக சுடிகையின் ... சர்ப்ப ராஜனான ஆதிசேடனின் முடியின் உச்சியில் தங்கி இருக்கும்,
அகில புவனமும் உதவு மலைமகள் ... எல்லா உலகங்களையும் பெற்றெடுத்த பார்வதி
இதைப் போன்ற ஆதிசேடனின் வர்ணனையை வேல் விருத்தத்திலும் காணலாம்.
"தழல் விழிக் கொடுவரிப் பருவுடற் பக்றலைத் தமனியச் சுடிகை"
சிவபிரானின் இல்லறத் துணைவியான பார்வதி தேவி எல்லா உலகங்களையும் ஈன்று அருளுகிறாள். இக்கருத்தை,
"களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி கடலுடை உலகினை ஈன்ற தாய் உமை"
... ( பரிமள மிகவுள , திருவானைக்கா திருப்புகழ்)
"உலகடையப் பெற்ற உந்தி அந்தணி"
... ( தலை வலையத்து , காஞ்சீபுரம் திருப்புகழ்)
... பாக்களில் காணலாம்.
அமலை யாரியை யந்தரி சுந்தரி யிமய மாமயில் அம்பைத்ரி யம்பகி ...... 2
......... பதவுரை .........
அமலை ... பரிசுத்தமானவள்,
ஆரியை ... பெருமை மிக்கவள்,
அந்தரி ... சூக்கும ஆகாய வடிவி,
சுந்தரி ... அழகி,
இமய மா மயில் ... ஹிமாசலத்தில் வளர்ந்த மயில் அன்ன வனப்பையும் மென்மையையும் பெற்றவள்.
அம்பை ... அம்பிகை,
த்ரி யம்பகி ... முக்கண்ணி
(மாயைக்கு அப்பாற்பட்டவள் அம்பிகை. ஆதலால் அவள் தூய்மையின் சொரூபம். அவள் தூய வடிவி [அமலை]. 36 தத்துவங்களுக்கும் மேலான நிலையே பராகாசம். இங்கு ஜோதி வடிவமாய் விளங்குபவள் அவளே. சிவ குடும்பத்தினருக்கே மூன்று கண்கள் உண்டு [முக்கண்ணி]).
அச்சுதச கோதரிய னைத்துவே தத்தலைவி யற்புதபு ராதனிவ ரப்ரகா சப்ரக்ருதி ...... 3
......... பதவுரை .........
அச்சுத சகோதரி ... திருமாலின் தங்கை,
அனைத்துவே தத்தலைவி ... எல்லா வேதங்களுக்கும் தலைவியானவள்,
அற்புதபு ராதனி ... ஆச்சரியமான முறையில் பழமைக்கும் பழமையானவள்
வரப்ரகாச ப்ரக்ருதி ... சுயம் ஜோதி வீசும் மோட்ச வீட்டை வரமாகக் கொடுக்கும் இயற்கை உதார குணம் மிக்கவள்
(அம்பிகையின் கருணைத் திறம் அழகாக விவரிக்கப் பட்டுள்ளது).
அம்பொற் குண்டலப் பேதை சாம்பவி விம்பக் கிஞ்சுகப் பூவை பூங்கொடி ...... 4
......... பதவுரை .........
அம்பொற் குண்டலப் பேதை ... அழகிய பொன் குண்டலங்கள் அணிந்துள்ள பெண்
சாம்பவி ... மங்கள் வடிவினள்,
விம்பக் கிஞ்சுகம் ... ஒளி வீசும் கிளி
பூவை ... நாகண வாய் பறவை போன்றவள்
பூங்கொடி ... அழகிய கொடி போன்றவள்
(ஸ்ரீ வித்தையில் பகழ் பெற்ற சாம்பவி முத்திரையே தேவேந்திர சங்க வகுப்பிலும் இங்கும் கையாளபட்டுள்ளது. மலையில் காணப்படும் அழகிய கொடி போன்றவள் அம்பிகை
"அசல நெடுங் கொடி அமை உமை").
அக்ஷர லக்ஷஜ பத்தர்க்ர மத்திடு சக்ரத லத்தித்ரி யக்ஷிச டக்ஷரி ...... 5
......... பதவுரை .........
அக்ஷர ... பஞ்சாட்சரம் போன்ற உயரிய மூலமந்திரங்களை,
லக்ஷ ஜபத்தர் ... லட்சக் கணக்கில் உரு ஏற்றும் அடியார்கள்
க்ரமத்திடு சக்ர தலத்தி ... தந்திர நூல் முறைப்படி வகிக்கும் முக்கோண, அறுகோண, நவகோண முதலிய எந்திர தகடுகளிலும் மேருவிலும் விளங்குபவள்,
த்ரியக்ஷி ... சூரிய சந்திர அக்னி ஆகியவைகளை நேத்திரங்களாக கொண்டவள்,
சடக்ஷரி ... "சாமுண்டாயை விச்சே" என்கிற ஆறு எழுத்து மந்திரத்திற்கு உரியவள்.
ஆயிஇ திரு மைந்தன்முகம் ஆயிரம்வி ளங்கியதொர் ஆறுதர வந்தருளும் ஆறுமுக புண்டரிகன் ...... 6
......... பதவுரை .........
ஆயிஇ ... தாயான தேவியின்,
திரு மைந்தன் ... அருள் விளங்கும் புதல்வன்,
முகம் ஆயிரம் விளங்கியது ... ஆயிரக் கணக்கான கிளைகளுடன் பெருகி வரும்
ஓர் ஆறுதர ... ஒப்பற்ற கங்கை தனது மடியில் சுமந்து வந்து தந்தவன்
வந்தருளும் ... குமார மூர்த்தியாய் அவதரித்து உலகிற்கு அருள் வளங்கின
ஆறுமுக புண்டரிகன் ... தாமரை போன்ற ஆறு ஆனனனத்தன்
(சிவத்தை சேர்வதற்கு ஜீவன்களுக்கு பக்குவம் வந்து விட்டதா என முதலில் ஆய்ந்து பார்த்து பின் தாய் போல் அருள் செய்வதால் அவள் ஆயி என அழைக்கப் படுகிறாள். பராசக்தியை,
"தாய் போல் பரிந்த தேன்"
... என்பார் ஒரு பாட்டில். கங்கை நதியின் கிளைகள் ஆயிரக் கணக்காக படர்ந்து அடியார்களுக்கு உடல் குளிர்ச்சி, உயிர் குளிர்ச்சி அளிக்கின்றன. அடியார் கண்ணும் கருத்தும் அகலாமல் நிறைகின்ற கங்கை நாயகி என்றும் ஆனந்த அருள் வெள்ளமே. அதே போல் ஆறுமுகனும் உலகெங்கும் காணப்படும் சமயங்கள் தோறும் அந்தந்த தெய்வமாய் நின்று அருள் புரிகிறான் என்பது கெளமாரர்களின் கோட்பாடு.
"உலகெங்கும் மேவிய தேவாலயம்").
அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி அபயமிட அஞ்சலென் றங்கீர னுக்குதவி ...... 7
......... பதவுரை .........
அருவரை திறந்து ... பெரிய பரங்குன்ற மலையை இடித்து வழி கண்டு,
வன் சங்க்ராம கற்கி முகி அபயமிட ... வலிய போரில் வல்ல கற்கிமுகி என்ற பூதம் சரண் சரண் என்று பெருங்குரல் எழுப்ப,
அஞ்சலென் றங்கீர னுக்குதவி ... அழகிய பாடல்களில் திறமை படைத்த நக்கீரனுக்கு அடைக்கலம் கொடுத்து, குகையிலிருந்து வெளிவர உதவி செய்து,
அரசறிய வாமனமு நிக்கொருத மிழ்த்ரயமும் அபரிமித மாகவிவ ரித்தகட வுட்புலவன் ...... 8
......... பதவுரை .........
அரசறிய ... நாட்டை ஆள்பவர்களும் நாட்டில் வசிப்பவர்களும் அறியும்படி பகிரங்கமாய்
வாமன முநிக்கு ... குறுகிய உருவம் உடைய அகத்திய முனிவருக்கு
ஒரு தமிழ்த்ரயமும் ... ஒப்பற்ற தமிழ் மொழியின் 'இயல் - இசை - நாடகம்' எனும் அங்கங்களின் இலக்கணத்தை
அபரிமிதமாக விவரித்த கடவுட் புலவன் ... சிறந்த விஸ்தாரமான முறையில் விளக்கம் செய்த தெய்வீகப் புலவன்
(நக்கீரனுக்கு தமிழ் இலக்கண ரகசியங்களை முருகனே கற்றுத் தந்ததாக ஒரு பாட்டில் கூறுகிறார்.
"வள வாய்மை சொற்ப்ரபந்தமுள கீரனுக்கு உகந்து மலர்வாய் இலக்கணங்கள் இயல் போதி".
வங்கிய சூடாமணி பாண்டியன் காலத்தில் சிவபெருமான் பாடலுக்கே குற்றம் கண்டு பிடித்ததினால் சங்கப் பலகையால் பொற்றாமரைத் தடாகத்தில் தள்ளப்பட்ட நக்கீரனுக்கு அகத்தியர் தமிழ் இலக்கண அரும் பொருளை உபதேசித்தார் என்ற வரலாறும் உண்டு. சிவபெருமான் கட்டளைப்படி தென் திசைக்கு வந்த அகத்தியருக்கு முருகன் தமிழ் இலக்கணங்களை உபதேசித்ததை வேறு திருப்புகழ் பாடல்களிலும் அருணகிரியார் சொல்லியிருக்கிறார். [உ விகட பரிமள - வயலூர் திருப்புகழ்].
"இயலும் இசைகளும் நடனமும் வகை வகை சத்யப்படிக்கு இனிது அகஸ்தியருக்குணர்த்தி அருள் ...... தம்பிரானே").
அநுபவ சித்த பவக்கட லிற்பு காதெனை வினவியெ டுத்தருள் வைத்த கழற்க்ரு பாகரன் ...... 9
......... பதவுரை .........
அநுபவ சித்த ... என்னுடைய பூர்வ வினைகளை துய்த்தல் பொருட்டு சந்தேகமில்லாமல் உறுதியாய் ஏற்படும்,
பவக்கடலில் புகாது எனை ... பிறவிப் பெருங்கடலில் நான் மீண்டும் விழுந்துவிடாதபடி,
வினவி எடுத்து அருள் வைத்த கழல் க்ரு பாகரன் ... ஆறுதல் மொழிகள் கூறி எனைத் தூக்கி அருள்பாலித்த புணையாகிய திருவடிகளை உடைய கருணாமூர்த்தி,
(சுவர்க்க லோக மீகாமன் ஆகிய முருகன் அருணகிரியாரை ஏழு பிறவிக் கடலை கடக்க உதவிய கருணை ஓடக்காரன். பிறவி அலை ஆற்றினில் புகாமல் இருப்பதற்கு முருக பாத காட்சியே தெப்பம், கையில் பிடிக்கும் துடுப்பு, உறுதி குருவாக்கியப் பொருள்).
ஆசிலா சார தபோதன ரின்புறும் வாசகா தீத மனோலய பஞ்சரன் ...... 10
......... பதவுரை .........
ஆசில் ஆசார தபோதனர் ... குற்றங்களை நீக்கி தூய்மையான நடை உடை பாவனைகளை உடைய தவசிகள்,
இன்புறும் வாசக அதீத மனோலய பஞ்சரன் ... உணர்ந்து மகிழும், சொல்லுக்கு அடங்காத மனம் அடங்கின இருப்பிடத்தில் வசிப்பவன்
(மனகுண சலன மலினமில் துரிய அதீத சுகானுபூதி மெளன நிரக்ஷர மந்திரம் பொருந்தி இருப்பவன் முருகப் பெருமான். மெளன பரம சுக சுத்த பெரும் பதம் சித்திக்க தவ ஓழுக்கம் மிக மிக அவசியம்).
அகரு ம்ருகமத களப பரிமள விகட முகபட கடின புளகித ...... 11
......... பதவுரை .........
அகரு ம்ருக மத களப ... அகில் கஸ்தூரி கலவைச் சாந்து இவைகளின்
பரிமள ... நறு மணம் வீசுவதும்
விகட முகபட ... அழகானதும் யானையின் முகத்தில் இடுகிற வேலைப்பாடுகள் நிறைந்த சீலை போல் தோன்றும் ரவிக்கையை அணிந்ததும்
கடின புளகித ... உறுதி வாய்ந்து பூரிப்பை அடைந்ததுமான
அமிர்த பூதரி அண்டர்செ ழுங்கொடி குமுத வாய்மயில் குஞ்சரி மஞ்சரி ...... 12
......... பதவுரை .........
அமிர்த பூதரி ... அமிர்தம் போன்று பால் நிறைந்த மலை போன்ற தனபாரம் உடையவள் (திரு முத்தி மாது தேவ சேனை ஆதலால் உயிர்களுக்கு அமிர்தம் போன்ற பாலை ஊட்டுகிறாள்).
அண்டர் செழுங்கொடி ... தேவர்கள் இடத்தில் வளர்ந்த கொடி போன்றவள்,
குமுத வாய் மயில் ... குமுத மலர் போன்ற அழகிய திரு வாயும் மயில் போன்ற நளின அழகும் உடைய
குஞ்சரி ... பெண் யானை (மான் தரு கான மயில் வள்ளி நாச்சியார். மயில் போன்ற பெண் யானை தேவ சேனை. என்னே பொருத்தம்).
மஞ்சரி ... பூஞ் செடியின் கொத்து போன்றவள்.
அக்கமொரு கோடிபெறு வஜ்ரபா ணிக்குமரி தக்கஅம ராவதிபு ரக்கும்ஆ னைக்கிறைவன் ...... 13
......... பதவுரை .........
அக்கம் ஒரு கோடி பெறு வஜ்ரபாணிக குமரி ... உடல் முழுதும் கண்கள் பெற்றுள்ளவனும் வஜ்சராயுதம் தரித்துள்ளவனும் ஆகிய இந்திரனின் மகள்,
(அகலிகையை கனவாலப் புணர்ந்தமையால், கெளதமரால், உடல் முழுவதும் பெண் குறிகள் பெற சாபம் அடைந்த இந்திரன் வெட்கத்துடன் ஒளிந்து வாழ தேவ குருவால் ஏவப்பட்டு சீர்காழிக்கு அருகில் கண்ணார் கோயில் சிவனை வழிபட்டு அக்குறிகள் கண்களாக மாறின).
தக்க அமராவதி புரக்கும் ஆனைக்கிறைவன் ... சிறந்த பொன்னுலகத்தோர் வணங்கும் தேவயானையின் கணவன்
தாங்கள் இனிமேல் அசுரர்களின் துன்பமில்லாமல் வாழ தேவயானையை முருகனுக்கு திருமணம் செய்வித்த தேவர்கள் நன்றி மறவாமல் அந்த நாயகியைத் தினமும் போற்றுகின்றனர். சுரர் வாழப் பிறந்த சுந்தரி தேவயானை.
ஐம்பத் தொன்றில்எட் டாறில் மூன்றினில் ஐந்திற் றங்கும்அப் பாலை வான்பொருள் ...... 14
......... பதவுரை .........
ஐம்பத் தொன்றில் ... மாத்ருகா மந்திரங்கள் ஐம்பத்தொன்றிலும்,
எட்டு ஆறில் மூன்றினில் தங்கும் ... அஷ்டாக்ஷரம், ஷடாக்ஷரம், மூன்று எழுத்து பஞ்சாக்ஷரம் இவற்றில் தங்கும்
அப்பாலை வான்பொருள் ... எல்லாவற்றையும் கடந்து நிற்கும் பரம் பொருள்
எட்டு ஓம் ஆம், ஒளம் சிவாய நம, பரவசம் கெட்டு எட்டகரம் நித்தம் பரவும் அன்பருக்கு
... என்பது 96 தத்துவங்களுக்கும் மேற்பட்ட நிலை.
வழியும் மனமும் கடந்து எங்கேனும் நிற்கும் அவன்
... என்பார்.
சித்தி அளிக்கும் குருநாதா.
... இந்த அஷ்டாக்ஷரத்தை முருகன் அருணகிரியாருக்கு உபதேசித்தான்.
எட்டாம் எழுத்தை ஏழையேற்கு பகர்ந்த முத்தா. ... அச்சா யிறுக்காணி (தச்சூர் திருப்புகழ்).
ஷடாக்ஷரம் - சரவணபவ, குமாராய நம.
முதலாவது வள்ளி தேவயானையால் சரவண தீர்த்தத்தின் கரையில் அநுஷ்டிக்கப்பட்டது. தேவர்கள் ஜெபிப்பது இரண்டாமவது. மூன்று சிவாய என்னும் முத்தி பஞ்சாக்ஷரம். த்ரயீ எனும் மூன்று வேதங்களின் இதய ஸ்தானத்தில் நம சிவாய எனும் பஞ்சாக்ஷரம் வருவது போல் மூவர் தேவாரத்தின் நடுவில் ஐந்தாம் திருமறையில் நடுவில் 51 - ம் பதிகத்தில் ஆறாவது திருப் பாட்டில் இந்த மூன்றெழுத்து.
விண்ணினார் பணிந்தேத்த வியப்புரும் மண்ணினார் மறவாது சிவாய என்று எண்ணினார்க்கு இடமாம் எழில் வானகம் பண்ணினார் அவர் பாலைத் துறையாரே
சிவாய எனும் நாமம் ஒருகாலும் நினையாத திமிராகரனை என்பார்.
நம சிவாய ஐந்து எழுத்து ஸ்தூல பஞ்சாக்ஷரம் சிவாய நம ஐந்து எழுத்து சூஷ்ம பஞ்சாக்ஷரம்.
எ(இ)துவே எல்லாம் கடந்த நிலையாகும்.
அப்படி பத்தி பழுத்த மனத்தினர் அர்ச்சனை மெச்சிய செச்சை மணிப்புயன் ...... 15
......... பதவுரை .........
அப்படி ... மேலான சிறந்த வழியில் சென்று,
பத்தி பழுத்த மனத்தினர் ... பக்தியினால் பக்குவமடைந்த அடியார்கள்,
அர்ச்சனை மெச்சிய செச்சை மணிப்புயன் ... வழிபாட்டு முறைகளில் மலர் வழிபாட்டை சிலாகித்து மகிழும் வெட்சி மாலை அணிந்த அழகிய தோள்களை உடையவன்
அன்பர்கள் தாம் வாழ முருகனுக்கு மாலை சாத்தி 'ஆறிரு தடந் தோள் வாழ்க' என்று ஏத்துகிறார்கள்.
'மாலை கரம் கொளும் அன்பர் வந்த அன்போடு வாழ' காதடருங்கயல் (திருப்பரங்குன்றம் திருப்புகழ்).
அவர்கள் கொண்டு வந்த மாலைகளை ஏற்றுக் கொண்டு அருள் புரிகிறான்.
'தமிழ் பனிரொடு பரிமள மிக்க கடப்ப மாலையும் அணிவோனே'. மலரணி கொண்டை (பழநித் திருப்புகழ்).
ஆறுநிலை யென்றுமுத லாகிய பரங்கிரியும் ஆவின னெடுங்குடியும் ஆரண முடிந்திடமும் ...... 16
......... பதவுரை .........
ஆறுநிலை யென்று ... ஆதார தலங்களான பரங்கிரி, செந்தூர், ஆவினங்குடி, ஏரகம், குன்றுதோறாடல், சோலைமலை எனும் ஆறு திருப்பதிகளுள்,
முதலாகிய பரங்கிரியும் ... முதல் தலமான திருப்பரங் குன்றம்,
ஆவின னெடுங்குடியும் ... திரு ஆவினன் குடியாகிய பெரிய பதியும்
ஆரண முடிந்திடமும் ... வேதங்களின் முடிவாகிய உபநிடத்துக்கள் (நெறி பலகொண்ட வேத நன் முடியிலும் மருவிய குருநாதா)
அருணையும் இலஞ்சியுஞ் செந்தூர் திருப்பழநி அடியர்மன பங்கயஞ் செங்கோடி டைக்கழியும் ...... 17
......... பதவுரை .........
அருணையும் இலஞ்சியுஞ் செந்தூர் திருப்பழநி ... திருவண்ணாமலை, இலஞ்சி, திருச்செந்தூர், பழநிமலை,
அடியர்மன பங்கயம் ... அடியவர்களின் இதய தாமரை (தலங்களிலும், மலைகளிலும் வாசம் செய்யும் முருகன் மிகவும் மிருதுவான அடியார்களின் மனமாகிய (பக்தியால் நெகிழ்து போன) தாமரையில் வீற்றிருக்கிறார். இதை,
'அடியவர் சிந்தை வாரிஜ நடுவிலும்', கொந்துவார் குரவடி (திருத்தணிகை),
'கசிவார் இதயத்து அமிர்தே', தசையாகிய (கருவூர்),
'தகர தந்த சிகரத்து ஒன்றி தடநற் கஞ்சத்து உறைவோனே', புகரப் புங்க (திருச்செந்தூர்),
... எனப் பலவாக விவரித்துள்ளார்).
செங்கோடி டைக்கழியும் ... நாகாசலம், திருவிடைக்கழி,
அநவரத நீலமலர் முத்தெறிசு னைப்புனலில் அருவிகுதி பாய்தருசெ ருத்தணியென் வெற்புமெனும் ...... 18
......... பதவுரை .........
அநவரத நீலமலர் ... எப்போழுதும் நீலோற்பல மலர்கள் பூப்பதும்
முத்தெறி சுனைப்புனலில் ... முத்துக்கள் சிதறும் தடாகங்களில்,
அருவி குதிபாய் தரு செருத்தணியென் வெற்புமெனும் ... நீர்வீழ்ச்சிகள் வேகமாய் விழுகின்ற திருத்தணி எனப்படும்,
அலகில் திருப்பதி யிற்பயில் கற்ப காடவி அலகில் திருப்பதி யிற்பயில் கற்ப காடவி ...... 19
......... பதவுரை .........
அலகில் திருப்பதியில் ... எண்ணற்ற திருத்தலங்களில்,
கற்பகாடவி ... தேவலோகத்தில் உள்ள கற்பக தோப்பில்
பயில் ... பொருந்தி விளங்கும்
அநுபவன் ... களிப்புடன் வீற்றிருப்பவன்,
அத்தன் ... பெரியோன்,
நிருத்தன் ... யுத்த களத்தில் குடை, துடி முதலிய கூத்துகளையும் அடியார்களுக்காக அருள் நடனமும் புரிபவன்
கொண்ட நடன பதம் செந்திலிலும் என்தன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்த வேளே, ... நாரணனும் வேதன் முன்பு அறியாத ஞான நடனம்.
... தண்டையணி திருச்செந்தூர் திருப்புகழ்.
அரத்த ஆடையன் ... செந்நிற ஆடையில் விருப்பம் உள்ளவன்.
ஆறுமா மாதர் பயோதர பந்தியில் ஆரவே பாலமு தாருநெ டுந்தகை ...... 20
......... பதவுரை .........
ஆறுமா மாதர் ... சிறந்த பெண்களாகிய ஆறு கிருத்திகை மாதர்களின்,
பயோதர பந்தியில் ... தன பாரத் தொகுதியில்
ஆரவே பால் அமுது ஆரு நெடுந்தகை ... வயிறு முழுக்க பாலாகிய அமுதத்தை உண்ட பெரும் தன்மையைக் கொண்டவன்
முருகனுக்கு பால் கொடுப்பதே பெரும் பாக்கியம் எனக் கருதி பாலைக் கொடுத்ததால் கார்த்திகை விரத மகிமையும் இதை போல் அந்த விரதத்தை அநுஷ்டிப்பவர்களுக்கு குக சாயுச்யம் எய்த வைப்பதும் முருகனாகிய நெடும் தகையின் பேரருளே.
வருண சரவண மடுவில் வருமொரு மதலை மறைகமழ் குதலை மொழியினன் ...... 21
......... பதவுரை .........
வருண ... நீர் நிறைந்த,
சரவண மடுவில் வரும் ... சரவண பொய்கையில் அவதரித்த (சரத்தே உதித்தாய்)
ஒரு மதலை ... ஒப்பற்ற குழந்தை,
மறைகமழ் குதலை மொழியினன் ... வேத உண்மைகளை வெளிப்படுத்தும் இளம் பிராய சொற்களை உடையவன்
முருகன் வேத மந்திர ரூபன். அவனுடைய பாதச் சிலம்புகள் வேத சந்தங்களை வெளிப்படுத்துகின்றன. அவனுடைய திருவாயினின்று வேத ரகசியங்கள் வெளிவருகின்றன.
துகிர் இதழில் மொழி வேத மணம் வீச
... என்பார் ( சுடரனைய திருமேனி - சிதம்பரம் திருப்புகழ்). வேத மூர்த்தி முருகன் சப்த முனிவர்களுக்கும் வேதம் ஓதுவித்ததை,
இருக்கு மந்திரம் எழு வகை முனி பெற உரைத்த சம்ப்ரம சரவணபவ
... என்பார் ( அருக்கு மங்கையர் - திருப்பரங்குன்றம் திருப்புகழ்).
மதுக ராரவ மந்திர சிந்துர மணம றாத கடம்பு புனைந்தவன் ...... 22
......... பதவுரை .........
மதுகரம் ... வண்டுகளின்,
அரவம் ... ரீங்காரங்கள் நிரம்பியதும்,
மந்திர ... பாணி மந்திரம் ஓதி சமர்பிக்கப்பட்டதும்
சிந்துர ... சிவந்த நிறம் உடையதும்
மணம் ஆராத கடம்பு புனைந்தவன் ... நறு மணம் நீங்காத கடப்ப மாலைகளை அணிந்தவன்,
அன்புடன் ஆசார பூஜை என சொல்லியபடி ஆண்டவனுக்கு முறையாக வைதீக வழிபாடுகள் செய்வார்கள். ஆவாகனம், அர்க்கியம், அபிஷேகம், மாலைகள் சாத்துதல், அர்ச்சனை, தூப தீப நெய்வேத்தியம் அனைத்திற்கும் மந்திரங்கள் உண்டு. பல மாலைகள் முருகனுக்கு உகந்தவை. அவற்றுள் கடப்ப மாலை மிகவும் விஷேசமானது. அருணகிரியாருக்கு திருப்புகழ் பாட பணித்த போது,
'நீப பக்குவ மலர்த் தொடையையும் வைத்து திருப்புகழ் பாடு'
என கட்டளை இடப்பட்டது கவனிக்கபாலது. ( பக்கரைவி சித்ரமணி ).
மட்டொழுகு சாரமது ரித்ததே னைப்பருக மர்க்கடச மூகமமை தொட்டிறா லெட்டுவரை ...... 23
......... பதவுரை .........
மட்டொழுகு சாரம் ... வெளியில் வெடித்ததால் சாரும் இரசமும்
மதுரித்த தேனைப் பருக ... இனிப்பு நிறைந்த தேனைப் பருகுவற்காக
மர்க்கட சமூகம் ... மந்திக் கூட்டங்கள் (மிகவும் உயரத்தில் கட்டியிருக்கும் தேனைப் குடிப்பதற்காக)
அமை தொட்டு ... மூங்கில் மரத்தின் உச்சியில் ஏறி (அந்த மூங்கிலையே எட்டிப் பிடிக்கும் கழியாகக் கொண்டு),
இறால் எட்டுவரை ... தேன் கூட்டை பிடிக்கும் வள்ளி மலையில்
குரங்குகளும் மூங்கில் மரங்களும் நிறைந்தது வள்ளி மலை என்பதை திருப்புகழ், கந்தர் அந்தாதி அடிகளில் காணலாம்.
குரங்குலாவும் குன்று, வான் கிட்டிய பெரும் மூங்கில் குன்று, வரைத் தேன் பெருகு உந்திமிர்
மன்றற் பைம்புனத் தாள்ப தாம்புயம் வந்திக் குந்தனிக் காம வாஞ்சையன் ...... 24
......... பதவுரை .........
மன்றல் பைம்புனத் தாள் ... மணம் வீசும் பசுமையான தினைப்புனத்தில் வாழும் வள்ளியின் (மன்றல் - கல்யாணம், வள்ளிமலைக்கு கல்யாண கிரி எனும் பெயரும் உண்டு),
பதாம் புயம் வந்திக்கும் ... தாமரைப் போன்ற திருவடிகளைப் பணியும்
தனிக் காம வாஞ்சையன் ... அளவற்ற ஆசை கொண்டவன்.
ஜீவான்மாக்களை ஆட்கொள்ளுவதில் தீவிர விருப்பம் கொண்டவன் என்பதையே வள்ளி கல்யாண நிகழ்வுகள் குறிக்கும்.
மத்தமு டித்தருள் அத்தர்ப்ரி யப்பட நித்தம றைப்பொரு ளைத்தெளி வித்தவன் ...... 25
......... பதவுரை .........
மத்த முடித்தருள் ... ஊமத்த மலரை அணிந்திருக்கும் (அணி மத்தர் சடைப் பரமர்)
அத்தர் ப்ரி யப்பட ... தந்தை சிவ பெருமான் களிப்படையும்படி
நித்தம் மறைப் பொருளைத் தெளிவித்தவன் ... என்றும் அழியாத நிரந்தரமான வேத உண்மைகளை சந்தேகம் நீங்கும்படி உபதேசித்தவன்
புரத்ரயம் எரித்த பெருமானும் ... பரவ அருளிய மெளன மந்த்ரம்
... அகர முதலென (திருப்புகழ் - பொதுப்பாடல்கள்).
மாதிரமு மந்தரமும் நீருநில னுங்கனக மால்வரையு டன்சுழல வாசுகிவி டம்பொழிய ...... 26
......... பதவுரை .........
மாதிரமு மந்தரமும் ... பாற்கடலைக் கடைந்த போது திக்குகளும், மத்தாக நிறுவப்பட்ட மந்திர மலையும்,
நீருநிலனும் ... பூமியும் பூமியில் உள்ள குளங்களும்
கனக மால் வரையுடன்சுழல ... பொன் கிரியாகிய மேருவுடன் சுழற்சி அடையவும்
வாசுகி விடம் பொழிய ... மத்துக் கயிறாக கட்டப்பட்ட வாசுகி எனும் பாம்பு விஷத்தைக் கக்க,
மகரசலி லங்கடைந் திந்த்ராதி யர்க்கமுது பகிர்தரு முகுந்தன்மன் பஞ்சாயு தக்கடவுள் ...... 27
......... பதவுரை .........
மகரசலி லங்கடைந்து ... மகர மீன்கள் வாழும் கடலைக் கடைந்து
இந்த்ராதியர்க்கு அமுது பகிர் தரு ... இந்திரன் முதலான தேவர்களுக்கு அமிர்தத்தைப் பங்கிட்டுக் கொடுத்த
முகுந்தன் ... திருமால், (அமுதாக்கி அநேகர் பெரும் பசி தீர்த்தருள் மாயன்)
மன்பஞ்சாயு தக்கடவுள் ... ஸ்திரமான சங்கு, சக்ரம், வில், வாள், கதை ஆகிய ஐந்து ஆயுதங்களை தரித்திருக்கும் தெய்வமான திருமாலின், (தண்டம் தனு திகிரி சங்கு கட்கம் - கொண்ட தானவாந்தகன் மாயவனின்)
மருகன்மற வாதவர்நி னைப்பவைமு டிக்குமவன் உருகுமடி யாரிருவி னைத்தொகைய றுக்குமவன் ...... 29
......... பதவுரை .........
மருகன் ... மருமகன்
மறவாதவா நினைப்பவை முடிக்குமவன் ... தன்னை எப்போதும் தியானிப்பவர்களின் இச்சைகளை நிறைவேற்றி அருள்பவன்
உருகும் அடியார் இரு வினைத்தொகை அறுக்குமவன் ... நெஞ்சம் நெகிழ்ந்து தன்னை வணங்கும் பக்தர்களின் நல்வினை, தீவினை எனும் சங்கிலியை நீக்குபவன் (வினைப் பகை செகுப்பவன்)
அடியார்கள் இரு வினை சூறாவளியில் சிக்கி
திமிர்தமிடும் கடல் அதென அனுதினம் உனை ஓதும் அமலை அடியவர் கொடிய வினை கொடு அபயமிடு குரல் ...... அறியாயோ
... என்று கதற ( குமர குருபர முருக சரவண - சுவாமிமலை திருப்புகழ்), அறுமுகன் வெளிப்பட்டு, இருவினைக் கூட்டத்தை ஒழித்து, நிராதிசய ஆனந்தத்தை அருளுகிறான்.
மறவர்பொ ருப்பில் ஒருத்திபொ ருட்ட நாளிள வடிவமு ழுக்க நரைத்தவி ருத்த வேதியன் ...... 29
......... பதவுரை .........
மறவர்பொ ருப்பில் ... வேடர்களின் வாசஸ்தலமான வள்ளி மலையில்
ஒருத்தி பொருட்டு ... ஒப்பற்ற பக்தியை உடைய வள்ளியை ஆட்கொள்ளுவதற்காக,
அந்நாளிள ... முன் நாளில் இள
வடிவம் முழுக்க நரைத்த வி ருத்த வேதியன் ... என்றும் இளையோனாய் இருந்தும் தன் மேனி முழுவதும் முதுமையும் நரையும் காணப்படும் அந்தணனாய்
மாதரா ரூபன் நிராகுல சிந்தையன் ஆதிகூ தாள மதாணிய லங்க்ருதன் ...... 30
......... பதவுரை .........
மாதரா ரூபன் ... அழகு சொட்டும் திரு உருவத்தினனாய்,
(அந்த கிழட்டுக் கோலத்திலும் ஒரு தெய்வீக அழகு மிளிர்ந்ததை பாம்பன் அடிகள் அழகாக சித்தரிக்கிறார்,
தேன் உறைந்திடு கானகம் தனில் மான் இளம் சுதையாள் இரும் சடைத்தேன் உடம்பு தள்ளாட வந்த சன்னியாச சுந்தர ரூப
... என்பார்)
நிராகுல சிந்தையன் ... கவலையற்ற மனத்தினன்
(ஒருவனுக்கு மகிழ்ச்சியோ துன்பமோ இருந்தால் தானே மனக்கவலை இருக்கும். முருகனுக்கு இரண்டும் கிடையாது. 'உல்லாச நிராகுல யோக இத சல்லாப விநோதன்' இவன் தானே)
ஆதி ... முன்னை பழம் பொருளுக்கும் முன்னைப் பரம் பொருள்
கூதாள மதாணி அலங்க்ருதன் ... கூதாள மலரால் புனையப்பட்ட பதக்கம் போன்ற ஆபரணத்தை மார்பில் அணிந்தவன்,
வரத விதரண விரத அநுபவ மவுன குருபரன் நிபுண குணதரன் ...... 31
......... பதவுரை .........
வரத விதரண விரத அநுபவ ... வேண்டிய போது அடியர் வேண்டிய போகமது வேண்ட வேறாது உதவுவதையே தன்னுடைய விரதமாகக் கொண்டவன்
மவுன குருபரன் ... மோன முத்திரையைக் காட்டி சிவனாருக்கும் குறுமுனிக்கும் அருணை முனிக்கும் ஞானோபதேசம் செய்தவன்
"நிர் வசன பிரசங்க குருநாதா"
... சிகரிகள் இடிய - வெள்ளிகரம் திருப்புகழ். இந்த மவுன உபதேசம் கிட்டியவுடன் சிவ பெருமானுக்கு நிஷ்டை கைகூடியது.
"சடை இடத்து சங்கை வைத்த நம்பர் உரை மாள செயல் மாண்டு சித்தம் அவிழ"
... சயிலாங்கனை மதுராந்தகத்துத் திருப்புகழ்). கிடைத்த அதே நிலை அருணகிரியாருக்கும் கிடைத்தது.
"உரை அவிழ உணர்வு அவிழ உளம் அவிழ உயிர் அவிழ "உஅபடியை உணரும் அவர் அநுபூதி ஆனதுவும்".
நிபுண குணதரன் ... திறமையும் நற்குணமும் படைத்தவன்
வனஜ ஜாதனை யன்றுமு னிந்தற வலிய பாரவி லங்கிடு புங்கவன் ...... 32
......... பதவுரை .........
வனஜ ஜாதனை அன்று ... திருமாலின் உந்தித் தாமரையில் உதித்த பிரம்மனைக் கேள்வி கேட்ட போது
முனிந்து அற ... பொருள் தெரியாததால் மிகவும் சினந்து (நாலு முகன் ஆதி அரி ஓம் என ஆதரம் உரையாத பிரம்மாவை விழ மோதி),
வலிய பார விலங்கிடு புங்கவன் ... திண்மையான கனத்த சங்கிலியால் அவனை சிறையிலிட்ட சிறப்பு மிக்கவன்
(பிரம்மனைக் கோபித்து தண்டித்ததால் அவனுடைய மனதில் இருந்த அகம்பாவ இருள் நீங்கியது. ஆகையால் முருகனை புங்கவன் என்கிறார்)
மட்டிலிரு நாலுதிசை கட்டுநெ மிக்கிரியும் உத்தரகு ணாதிகுட தக்ஷிணா திக்கிரியும் ...... 33
......... பதவுரை .........
மட்டு இல் இரு நாலுதிசை ... எல்லையற்று பரந்து இருக்கும் எட்டு திசைகளும்
("திக்க திக்கொடு படி" ... கந்தர் அந்தாதி)
கட்டு நெமிக் கிரியும் ... கட்டுப்படும்படி சுற்றி இருக்கும் சக்ரவாள கிரியும்
உத்தர குணாதி குட தக்ஷிணா திக்கிரியும் ... வடக்கு, கிழக்கு, மேற்கு தெற்கு முதலிய எல்லா திசைகளில் உள்ள மலைகளும்
மங்கத் துங்கவிட் டேறு வாங்கிய செங்கைப் பங்கயச் சோதி காங்கேயன் ...... 34
......... பதவுரை .........
மங்க ... தன் கீர்த்தியும் ஒளியும் குறைபட்டு நலியவும்
துங்க விட்டேறு வாங்கிய ... பரிசுத்தமான வேலை ஏவிய,
(வேலம் புத்தூர் விட்வேறு அருளி ... திருவாசகம்)
செங்கைப் பங்கயச் சோதி காங்கேயன் ... தாமரை அன்ன திருக்கரங்கள் பொருந்திய பிரகாச மூர்த்தி
(நிர்த்த ஜெக ஜோதி பெருமாள் - இத்தரணி மீதில் திருப்புகழ், பொதுப்பாடல்கள்).
மத்தம லத்ரய மித்தைத விர்த்தருள் சுத்தப வித்ரநி வர்த்திய ளிப்பவன் ...... 35
......... பதவுரை .........
மத்த மலத்ரய மித்தை ... அறிவை மயங்க வைக்கும் மும்மலங்கள் கூடிய இப் பொய் வாழ்க்கையை
தவிர்த்தருள் ... நீக்கி அருள் செய்து
(பிரபஞ்சம் எனும் சேற்றைக் கழிய வழி விட்டவா ... கந்தரலங்காரம்)
சுத்த பவித்ர நிவர்த்தி அளிப்பவன் ... மாசற்ற தூய விடுதலை அளித்து நித்ய சுகானந்தத்தை அளிப்பவன்
(இயல்பாகவே சுத்தப் படிகம் போன்ற மாசற்ற ஜீவன்களுக்கு வெளியில் இருந்து ஆனந்தம் வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கோடிக்கணக்கான பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள மலத் தொகுதின் பளுவில் சிரமப் பட்டுக் கொண்டு வாழ்கிறது. நடப்பவனுக்கு பளு குறைந்தவுடன் மகிழ்ச்சி ஏற்படுவது போல் முருகன் ஆன்மாக்களின் மும்மலச்சுமையை நீக்கியவுடன் தன் இயல்பான பரிசுத்தத்தையும் சொரூபத்தையும் ஆன்மா உணருகிறது.
முருகனே முத்தி முதல்வனே பத்தர் அருகனே).
வாரணமு கன்தனது தாதையைவ லஞ்சுழல வாகைமயில் கொண்டுலகு சூழ்நொடிவ ருங்குமரன் ...... 36
......... பதவுரை .........
வாரண முகன் தனது தாதையை வலஞ் சுழல ... ஆனைமுகன் பழத்திற்காக தனது தந்தையை பிரதட்சணம் செய்த போது
வாகைமயில் கொண்டு உலகு சூழ் நொடி வரும் குமரன் ... ஒரே நொடியில் சராசரங்களை சுற்றி வந்தவன்
மயமுறு ப்ரபஞ்சமுஞ் சங்கேத ஷட்சமய வழியுமன முங்கடந் தெங்கேனு நிற்குமவன் ...... 37
......... பதவுரை .........
மயமுறு ப்ரபஞ்சமும் ... எல்லாம் அடங்கி இருக்கும் இந்த சிருஷ்டிக்கப்பட்ட உலகத்தையும்
சங்கேத ஷட்சமய வழியும் ... பல ரகசியக் குறிப்புக்கள் கொண்ட ஆறு மதங்களின் மார்க்கத்தையும்
மனமுங் கடந்து ... உள்ளத்தால் எண்ணப்படும் எண்ண எல்லைகளுக்கு அப்பாற்பட்ட
(போதத்திற் காணவொணாதது ... வேதத்திற் கேள்வி - திருக்குற்றாலத்து திருப்புகழ்).
எங்கேனு நிற்குமவன் ... விவரிக்க முடியாத நிலையில் இருப்பவன்
(மோனக இடத்தில் ஆரும் உய்ய நிற்கும் முருகோனே ... ஏடுமலர் உற்ற - திருப்புகழ் - பொதுப்பாடல்கள்).
மதுரமொழி யால்உலக னைத்தையும் உணர்த்துமவன் வடஅனல நேர்கொடிய குக்குடம் உயர்த்தகுகன் ...... 38
......... பதவுரை .........
மதுர மொழியால் ... தனது இனிய உபதேசத்தால்
உலகு அனைத்தையும் உணர்த்துமவன் ... உலகில் உள்ள எல்லா தத்துவங்களுக்கும் விளக்கம் கொடுப்பவன்,
வடஅனல நேர்கொடிய குக்குடம் உயர்த்த குகன் ... வடவாமுக அக்னியைப் போல் வெப்பமும் வீரமும் உடைய சேவலைத் தன் கொடியாக கொண்டு விளங்கும் குகப் பெருமான்
(மீனிற புணரியை விழுங்கும் அவுணக் கருங்கடல் விடிய கருங்குல் சாடும் தீ நிறக் குடுமி வெம் சேவல்)
மரகத பக்ஷ குலத்துர கத்தி வாகரர் வடிவையு ருக்கி வடித்த திருக்கை வேல்கொடு ...... 39
......... பதவுரை .........
மரகத பக்ஷ குலத் துரக ... பசுமை ஒளி பக்கத்தில் வீசும் உயர்ந்த ஜாதிக் குதிரைகளைத் தன் தேர் பரிகளாகக் கொண்ட
(உததியிடை கடவு மரகத வருண குல துரக உப லளித சதகோடி சூரியர்கள்)
திவாகரர் வடிவையு ருக்கி வடித்த திருக்கை வேல் கொடு ... 12 சூரியர்களின் தேஜசை உருக்கி வடிவமைத்த வேலாயுதத்தைக் கையில் ஏந்தி
(கனகாசலத்தைக் கடைந்து முனையிட்டு கடுக்கின்ற துங்க நெடுவேல்)
வாரிகோ கோஎன வாய்விட வந்தெதிர் சூரமா சேனையை மோதுக ளந்தனில் ...... 40
......... பதவுரை .........
வாரிகோ கோஎன வாய்விட ... கடல் ஓ என அலற
(வேல் பட்டு அழிந்தது வேலையும் ... கந்தரலங்காரம்)
வந்தெதிர் சூரமா சேனையை மோது களந்தனில் ... போரில் எதிர்த்து வந்த சூரபத்மனின் சேனைகளைத் தாக்கிய சமர பூமியில்
(சூர சம்மார போர்க் களத்தில் பூத வேதாள வர்ணணை).
உருவம் இருளெழ எயிறு நிலவெழ உலகு வெருவர அசைய வருவன ...... 41
......... பதவுரை .........
உருவம் இருளெழ ... கரிய வடிவமுடைய தோற்றமும்
எயிறு நிலவெழ ... பற்கள் சந்திர ஒளியைப் போல் நெளிந்து இருக்கவும் (பிறைகள் போல் தந்தம் உடனும்)
உலகு வெரு வர அசைய வருவன ... உலகத்தோர் பயப்படும்படி ஆடிக் கொண்டு வருவன
(அநேக வித பூத வேதாளங்களே).
உடைய நாயகி கண்டு மகிழ்ந்திட நடை விநோத விதம் புரி பந்திய ...... 42
......... பதவுரை .........
உடைய நாயகி ... தங்களின் தலைவியாகிய பார்வதி (சங்கரி, வேதாள நாயகி)
கண்டு மகிழ்ந்திட ... பார்த்து களிப்படையும்படி,
நடை விநோத விதம் புரி பந்திய ... பலதரப்பட்ட விசித்ர கதிகளில் ஆடி நடந்து வரும் கூட்டங்கள்
(அநேக வித பூத வேதாளங்களே).
ஒக்கலைவி டாதழுத ரற்றுபா லர்க்குமிக உச்சிவெடி யாதுநிண மெத்தவே தப்புவன ...... 43
......... பதவுரை .........
ஒக்கலை விடாது அழுது அரற்று ... தாயின் இடுப்பில் அமர்ந்து ஓயாது அழுது கொண்டு பசியினால் சத்தம் இட
பாலர்க்கு ... குட்டி வேதாளங்களுக்கு
மிக உச்சி வெடியாது ... போர்களத்தில் மிக்க உஷ்ணத்தினால் தலை மண்டை ஓடு வெடித்து போகாமல்,
நிண மெத்தவே அப்புவன ... மாமிச சேற்றை லேபனம் போல மிகுதியாகத் தடவி ஒத்தடம் கொடுப்பன
(அநேக வித பூத வேதாளங்களே).
உங்குக் கிங்குவிட் டாழி நான்கினும் ஒன்றுக் கொன்றடி பாய்தல் காண்பன ...... 44
......... பதவுரை .........
உங்குக்கு இங்கு இட்டு ... ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அடிக்கடி மாறிக் கொண்டு,
ஆழி நான்கினும் ... நான்கு திசைகளில் உள்ள கடல்களிலும்
ஒன்றுக் கொன்று ... ஒருத்தருடன் ஒருத்தர் போட்டி போட்டுக் கொண்டு
அடி பாய்தல் காண்பன ... நீளத் தாவுதல் போட்டி செய்து கொண்டு விளையாடுவன
(அநேக வித பூத வேதாளங்களே).
யுத்தக ளத்தினில் ரத்நம ணிக்குவை ஒட்டமொ டொற்றைஇ ரட்டைபி டிப்பன ...... 45
......... பதவுரை .........
யுத்த களத்தினில் ரத்ந மணிக்குவை ... போர்க்களத்தில் சிதறிக் கிடக்கும் அசுரர்களின் மகுடங்களில் இருந்த ரத்னக் குவியலில் இருந்து
ஒட்டமொடு ... பந்தயம் போட்டுக் கொண்டு
ஓற்றை இரட்டை பிடிப்பன ... விசிறி எறிந்து பிடித்து ஓற்றையா இரட்டையா என விளையாடுவன
(அநேக வித பூத வேதாளங்களே).
யோகினிக ளும்பெரிய சாகினிக ளும்புதிய மோகினிக ளும்பழைய டாகினிக ளும்புகழ ...... 46
......... பதவுரை .........
யோகினிகளும் ... தேவியின் திருக்கோவில் பிரகாரத்தில் அமர்ந்து யோகம் செய்யும் தேவதைகள்,
பெரிய சாகினிகளும் ... கொலைகள் புரியும் சாகினி தேவதைகள்
புதிய மோகினிகளும் ... புதிதாக வடிவெடுத்து ஆண்களை மயக்கும் மோகினி பிசாசுகளும்,
பழைய டாகினிகளும் புகழ ... பிணங்களைத் தின்னும் வயதான டாகினிப் பேய்களும் முருகனின் வலிமையைப் போற்றிப் பகர
உவணநிரை கொண்டிடுஞ் செங்காவ ணத்திடையில் உறவுகொள வந்துதம் பெண்காறை கட்டுவன ...... 47
......... பதவுரை .........
உவண நிரை கொண்டிடும் ... கழுகுகள் வரிசையாக வந்து கூடும்
செங்கா வணத்திடையில் ... அசுரர்களின் இரத்தத்தினால் செந்நிறம் அடைந்த பந்தலின் கீழே (கழுகுகள் ஏராளமாக மேலே குழுமி இருப்பது ஒரு பந்தல் போட்டிருப்பது போல் விளங்குகிறது)
"முதியவுணர் அன்று பட்ட முதியகுடர் நன்று சுற்று முது கழுகு பந்தர் இட்ட"
உறவு கொள வந்து தம் பெண்காறை கட்டுவன ... தனது பெண் பூதங்களோடு திருமணம் செய்ய வந்து அந்தக் கல்யாண பெண்களுக்கு திருமாங்கல்யம் கட்டுவன
(அநேக வித பூத வேதாளங்களே).
உமிழ்குருதி யாறடைப டக்குறட டுக்கியதில் உபவனமொர் ஏழையுமு றித்தருகொ ழுக்குவன ...... 48
......... பதவுரை .........
உமிழ் குருதி ஆறு ... மடிந்த அசுரர்களின் உடலிலிருந்து சொரிந்து வெளிப்பட்ட ரத்த நதி,
அடை பட குறடு அடுக்கி அதில் ... தடைபடும்படி திண்ணை போல் அமைக்கக் கருதி
உபவனம் ஓர் ஏழையும் முறித்த அருகு ஒழுக்குவன ... ஏழு உலகங்களில் உள்ள காட்டு மரங்களை ஒடித்து அந்த நதியின் கரையை ஒழுங்காகக் கட்டுவன
(அநேக வித பூத வேதாளங்களே).
உடுபட லத்தை மறைத்த குறைக்கு வாலுடல் உதிரச முத்திர முற்று நிலைப்ப டாதன ...... 49
......... பதவுரை .........
உடு படலத்தை ... நட்சத்திரக் கூட்டத்தை,
மறைத்த குறை குவால் உடல் ... மறைக்கும் அளவிற்கு உயரமாக குவிக்கப்பட்ட தலையற்ற உடல்களின் திரளில் இருந்து
உதிர சமுத்திரம் முற்று நிலைப் படாதன ... ஒழுகும் ரத்தக் கடலில் ஒரே இடம் நிலை கொள்ளாது அங்கும் இங்கும் சஞ்சாரம் செய்வன
(அநேக வித பூத வேதாளங்களே).
ஓடைமால் வாரண யூகம் அடங்கலும் ஓரொர்பேய் நீள்கடை வாயி லடங்குவ
......... பதவுரை .........
ஓடை மால் வாரண யூகம் அடங்கலும் ... பெரிய நெற்றிப் பட்டம் அணிந்த யானைப் படை முழுவதும்
ஓர் ஓர் பேய் நீள் கடை வாயில் அடங்குவ ... ஒவ்வொரு பேயின் பெரிய கடை வாய்க்குள் அடங்கிவிடும் (அப்பேர்ப்பட்டவை)
(அநேக வித பூத வேதாளங்களே).
உடலி னிசிசரர் மவுலி ஒலியலும் உதடு மலைவன பதடி முலையின ...... 51
......... பதவுரை .........
உடலின் நிசிசரர் மவுலி ஒலியலும் ... தலை வேறு உடல் வேறு என சிதைக்கப்பட்ட அசுரர்களின் கிரிடத்தில் அணியப்பட்டுள்ள மாலைகளையும்
உதடும் அலைவன ... அவர்களின் உதடுகளையும் பிடித்து ஆட்டுவன
பதடி முலையின ... தொங்கும்படியான தனங்களை உடையன
(அநேக வித பூத வேதாளங்களே).
உததி யேழும டங்கவு றிஞ்சியும் உதர வாரழல் நின்றுகொ ளுந்துவ ...... 52
......... பதவுரை .........
உததி ஏழும் அடங்கவும் உறிஞ்சியும் ... ஏழு கடல்களை வயிறு நிறைய குடித்தும் கூட,
உதர வார் அழல் நின்று கொளுந்துவ ... வயிற்றில் பசி தீ அடங்காது எரிவதை உடையவை
(அநேக வித பூத வேதாளங்களே).
உக்கிரஇ ராவணன்எ டுத்தமே ருக்கிரியும் ஒற்றியிரு தோள்கொடுப றித்திடா தப்புவன ...... 53
......... பதவுரை .........
உக்கிர இராவணன் எடுத்த மேருக்கிரியும் ... பெரும் சினம் கொண்ட இராவணன் அசைத்து எடுத்த கைலாய மலையை,
ஒற்றி இரு தோள் கொடு பறித்து இடாது அப்புவன ... தனது தோள்கள் தழுவி இரு கைகளாலும் மேலும் பெயர்த்து எடுக்க முடியாமல் அந்த மலையை அணைத்துக் கொள்வன
(அநேக வித பூத வேதாளங்களே).
ஒன்றித் திண்குரற் கூகை பாம்பொடு வென்றிச் செந்தலைத் தாலி பூண்பன ...... 54
......... பதவுரை .........
ஒன்றி ... மன ஒற்றுமையுடன்
திண் குரல் ... வலிய குரலை உடைய
கூகை பாம்பொடு ... கோட்டான் பாம்பு இவைகளையும்
வென்றிச் செந்தலை ... வெற்றி மிகுந்த செந்தலை விரியன் எனும் பாம்பையும்,
தாலி பூண்பன ... கழுத்தில் தாலிச் சரடாக அணிந்து கொள்வன
(அநேக வித பூத வேதாளங்களே).
ஒக்கமி டற்றில் இறக்கு குறைத்தலை விக்கி வெளுக்க வெளுக்க விழிப்பன ...... 55
......... பதவுரை .........
ஒக்க ... ஒரே அளவாக
மிடற்றில் இறக்கு குறைத்தலை ... கழுத்தளவில் வெட்டப்பட்ட உடல் நீங்கிய சிரங்களை,
விக்கி ... மரண விக்கல் எடுக்கும்படி செய்து
வெளுக்க வெளுக்க விழிப்பன ... முழிகள் வெள்ளையாக தோன்றும்படி விழிப்பதற்கு காரணமாக இருப்பன
(அநேக வித பூத வேதாளங்களே).
யோகுபுரி யுங்குகையும் யோகபர ரும்பொருவ ஓடைமத தந்திவயி றூடினிது றங்குவன ...... 56
......... பதவுரை .........
யோகு புரியம் குகையும் ... யோகப் பயிற்சிக்கு ஏற்ற மலைக் குகையும் (குகையில் நவ நாதரும்)
யோக பரரும்பொருவ ... யோக சாதனைகளை செய்பவர்கள் போல
ஓடை மத தந்தி வயிறூடு இனிது உறங்குவன ... நெற்றிப் பட்டம் அணிந்த மத யானைகளில் வயிற்றின் உள்ளே தூங்குவன
(அநேக வித பூத வேதாளங்களே).
உசிதபிசி தங்கொணர்ந் திங்கேற விற்றுமென மதமலையெ லும்புகொண் டங்காடி கட்டுவன ...... 57
......... பதவுரை .........
உசித பிசிதம் கொணர்ந்து ... தகுதியான மாமிச வகைகளை சேர்த்துக் கொண்டு
இங்கு ஏற விற்றும் என ... இவ்விடத்தில் நல்ல மாமிச வியாபாரம் செய்வோம் என
மத மலை எலும்பு கொணடு அங்காடி கட்டுவன ... மதம் பிடித்த மலை போன்ற யானைகளின் எலும்புகளை செங்கல்களாக் கொண்டு கடைகளை அமைப்பன,
(அநேக வித பூத வேதாளங்களே).
உதிரநிண வாள்பெருக வொட்டுவன வெட்டுவன உடலினடு வூடுருவ முட்டுவன தட்டுவன ...... 58
......... பதவுரை .........
உதிர நிண வாள் பெருக ... வாளில் இருந்து மாமிசமும் ரத்தமும் கொட்ட,
ஒட்டுவன வெட்டுவன ... தாக்கி அழிப்பன துண்டாக வெட்டுவன
உடலின் நடு ஊடுருவ முட்டுவன தட்டுவன ... உடலின் உள்ளே நடுவில் மோதி அழித்து விழச் செய்வன
(அநேக வித பூத வேதாளங்களே).
ஒழுகுபி ணத்துநி ணத்தின் அளற்றி லேபழு ஒடியவு ழக்கிவ ழுக்கி யுருட்டி வீழ்வன ...... 59
......... பதவுரை .........
ஒழுகு பிணத்து ... பிணத்திலிருந்து ஒழுகி விழும்
நிணத்தின் அளற்றிலே ... கொழுப்புச் சேற்றில்
பழு ஒடிய ... தனது விலா எலும்புகள் ஒடியும்படிக்கு
உழக்கி வழுக்கி உருட்டி வீழ்வன ... மிதித்து கால்கள் வழுக்கி அந்தச் சேற்றில் வீழ்ந்து கிடப்பன
(அநேக வித பூத வேதாளங்களே).
ஊசலார் வார்குழை யோலை யிடும்படி ஓதுசா மீகர நேமி பிடுங்குவ ...... 60
......... பதவுரை .........
ஊசலார் ... ஊஞ்சல் போல் அங்கும் இங்கும் அசைந்து ஆடுகின்ற
வார் குழை ஓலை இடும்படி ... நீண்ட காது ஓலையாக அணிவதற்கு
ஓது சாமீகர நேமி பிடுங்குவ ... புகழ் மிக்க பொன்கிரியாகிய மேருமலையைப் பிடுங்கி எடுப்பன,
(அநேக வித பூத வேதாளங்களே).
கரணம் இடுவன குணலை யிடுவன கழையை நடுவன பவுரி வருவன ...... 61
......... பதவுரை .........
கரணம் இடுவன ... சில குட்டிக் கரணம் போடுவன
குணலை இடுவன ... கூச்சல் போட்டுக் கொண்டு கூத்தாடுவன
(சில பசாசு குணாலி நிணமுன ... அமுதம் ஊறு சோல் - திருவருணைத் திருப்புகழ்).
கழையை நடுவன பவுரி வருவன ... மூங்கில் கம்புகளை நட்டு அதைச் சுற்றி ஒன்றோடு ஒன்று கை கோர்த்துக் கொண்டு பவுரி நடனம் ஆடுவன
"திக்குப் பரி அட்டப் பயிரவர் தொக்குக் தொகு தொகு சித்ரப் பவுரிக்கு திரிகடகம் ...... என ஓத"
... முத்தைத்தரு - திருப்புகழ்.
(அநேக வித பூத வேதாளங்களே).
ககன கூடமு டைந்துவி ழும்படி கதறி வாயனல் கண்கனல் சிந்துவ ...... 62
......... பதவுரை .........
ககன கூடமும் உடைந்து விழும்படி ... ஆகாய முகடு அதிர்ச்சியினால் பிளந்து விழும்படிக்கு
கதறி வாய் அனல் கண் கனல் சிந்துவ ... பெரும் கூச்சலுடன் தங்கள் வாய்களிலிருந்து நெருப்புப் பிழம்பும் விழிகளிலிருந்து தீப் பொறிகளும் சிதறி விழச் செய்வன
(அநேக வித பூத வேதாளங்களே).
கைச்சதியி னாமுறைவி தித்தவா முற்கடித சச்சபுட சாசபுட சட்பிதா புத்திரிக ...... 63
......... பதவுரை .........
கைச்சதியின் ஆம் உறை ... கர தாளத்தில் அமைகின்ற வழியிலே,
விதித்த ஆம் ... இசை நூல்களில் இலக்கணம் கூறப்பட்ட
உற்கடித சச்சபுட சாசபுட சட்பிதா புத்திரிக ... சிவபெருமானின் ஈசான முகத்தில் தோன்றி ஆறு மாத்திரை உடைய உற்கடிதம், சத்யோஜாத முகத்தில் உதித்து எட்டு மாத்திரைகளைக் கொண்ட சாசபூடம் அகோர முகத்தில் தோன்றி 12 மாத்திரை உடைய சத்பிதா புத்திரிகம்.
கண்டச் சம்பதிப் பேத மாம்பல கஞ்சப் பஞ்சகத் தாள மாம்படி ...... 64
......... பதவுரை .........
கண்டச் ... கண்ட தாள வல்லுனர்களால் அறியப்பட்ட
சம்பத் ... சம்பத் வேட்டம் எனப்படுவதும் தத்புருட முகத்தில் தோன்றி 12 மாத்திரை உடையதாய் உள்ளதும்
இப் பேதமாம் பல ... இந்தப் பேத வகைகளாகும் பலவகையான
கஞ்சப் பஞ்சகத் தாளமாம் படி ... வெண்கல தாளக் கருவியால் ஒலிக்கப்படும் ஐந்து வகை தாளங்களும் பிறந்து ஒலிக்கும்
கற்சரி யுற்சவ தர்ப்பண லக்ஷண சச்சரி மட்டிசை யொற்றிய றுப்பன ...... 65
......... பதவுரை .........
கற்சரி ... கற்சரி எனப்படும் பாதரச ஒலியுடன் நிகழும்
மற்சவ ... திருவிழாவின்
தர்ப்பண லக்ஷண ... கண்ணாடி காட்சி போல் தோன்றுகின்ற வகையில்
சச்சரி மட்டு ... ஜஜ்ஜரி வாத்தியத்தின் தாளத்திற்கு ஏற்ப
இசை ஒற்றி அறுப்பன ... பாட்டிற்கு ஏற்றபடி தாளக்கணக்கு போடுவன
(அநேக வித பூத வேதாளங்களே).
காயெரிய பங்கியொடு சேகரமி குந்தசைவ காதுபடு சங்கவள மாலிகைபு னைந்திசைவ ...... 66
......... பதவுரை .........
காய் எரிய பங்கியோடு ... நெருப்பு போல் காய்ந்து ஜ்வாலை விடுகின்ற மயிர் திரள்களுடன்
சேகரம் மிகுந்து அசைவ ... தலைகளும் மேற்சொன்ன தாளத்திற்கு ஏற்ப வேகமாக ஆடும்படி அசைப்பன
(அநேக வித பூத வேதாளங்களே).
காதுபடு சங்கவள மாலிகைபு னைந்திசைவ ... காதுகளில் பூட்டி இருக்கும் சங்கு குழைகளையும் செழிப்பான மார்பில் மாலைகளையும் அணிந்து கொண்டு மனதிருப்தியுடன் விளங்குவன
(அநேக வித பூத வேதாளங்களே).
கருணைய திகந்துவந் தொண்கோகு லப்பெரிய கருமுடியொ டும்படுங் கங்காள மொத்துவன ...... 67
......... பதவுரை .........
கருணை அது இகந்து வந்து ... இரக்கம் என்பதையே மறந்து போன
ஒண் கோகு உல ... ஒளி வீசும் திரண்ட கல் போன்ற தோள்களும்
பெரிய கரு முடியொடும் படுங் கங்காளம் ஒத்துவன ... வலிமை பொருந்திய பெரிய தலைகளும் சாயும்படி எலும்புக் கூட்டை ஒன்றோடு ஒன்று மோதி அடிப்பன
(அநேக வித பூத வேதாளங்களே).
கடிபயிர வாதிகள்ப்ரி யப்படுக திக்கிசைய நடைநவிலு பாவனை யுதிக்குநட வித்தையின ...... 68
......... பதவுரை .........
கடிபயிர வாதிகள் ... யுத்த பூமியில் காவல் காக்கும் பைரவர் அஷ்ட பைரவர்கள்
ப்ரியப்படு கதிக்கு இசைய ... விரும்பிக் கேட்கும் நடன வகைகளுக்கு
நடை நவிலு பாவனை ... கூத்துக்களை விமர்சம் செய்யும் பாவனை முத்திரைகள்
உதிக்கு நடவித்தையின ... வெளிப்படுத்தும் நடன வகைகளை காண்பிப்பன
(அநேக வித பூத வேதாளங்களே).
கடகம டுத்த இடக்கை வலக்கை வாளின கருதிய லக்ஷிய லக்ஷண முற்று மோதுவ ...... 69
......... பதவுரை .........
கடகம் அடுத்த இடக்கை ... தோள்வளை பூண்ட இடது கையையும்
வலக்கை வாளின ... வாள் ஏந்திய வலக்கையையும் உடையன
கருதிய லக்ஷிய லக்ஷண முற்றும் ஓதுவ ... எல்லோராலும் விரும்பப்படும் நடன சாஸ்திரத்தின் இலக்கிய இலக்கணங்களை முழுதுமாக நடித்துக் காண்பிப்பன
(அநேக வித பூத வேதாளங்களே).
காலமா றாத வராளிசி கண்டிகை பாலசீ காமர மானவி பஞ்சிகை ...... 70
......... பதவுரை .........
காலம் மாறாத வராளி ... அந்தந்த நேரங்களில்பாட வேண்டிய குந்தல வராளி, பந்துவராளி, புன்னாக வராளி, வராளி, ஜாலவராளிபோன்றராகங்களையும்
சிகண்டிகை ... பாலை வாழ்பண் எனப்படும் சிகண்டி ராகத்தையும்
பால சீகாமர ... பாலைப்பண்ணைச் சேர்ந்த சீகாமர ராகத்தையும்
"தும்பி காமரம் செப்பும்"
மானவி பஞ்சிகை ... பெருமை வாய்ந்த பஞ்சவி ராகத்தையும்
கவுட பயிரவி லளிதை கயிசிகை கவுளி மலகரி பவுளி இசைவன ...... 71
......... பதவுரை .........
கவுட பயிரவி லளிதை கயிசிகை கவுளி மலகரி பவுளி இசைவன ... இனித்த பைரவி, லலிதா, கயிசிகை (இதத்த கயிசிகம், இசைதனில் இனிய கயிசிகை), கெளளி, மலகரி (பூபாளத்தின் மனைவி), பவுளி முதலிய ராகங்களையும் பாடுவன
(அநேக வித பூத வேதாளங்களே).
கனவ ராடிய ரும்பட மஞ்சரி தனத னாசிவி தம்படு பஞ்சமி ...... 72
......... பதவுரை .........
கனவ ராடி அரும்பட மஞ்சரி தன தனாசி விதம் படு பஞ்சமி ... பெரிய வராடி, அருமையான படமஞ்சரி, பெருமை மிக்க தன்யாசி, இரண்டு பேதமாக பாடப்படும் பஞ்சமி ராகத்தையும்
கைச்சுலவு கோன்முறைவி தித்தரா கத்தடைவில் உச்சமது சாதிகமெ டுத்துமேல் எட்டுவன ...... 73
......... பதவுரை .........
கைச்சுலவு கோன்முறை ... கையில் ஏந்துகின்ற கோலால் சுழற்றியும் தூக்கியும் தாழ்த்தியும் காண்பிக்கும் வகையில்
விதித்த ராகத்து அடைவில் ... ராக லக்ஷணப்படி
உச்சமது சாதிகம் எடுத்து ... உச்ச ஸ்தானத்தில் ராக மூர்ச்சனையைக் காட்டி (இசை தலைமை பூதம் கோலை மேலே தூக்கி காண்பிக்கும் போது மேல் - ஸ - வைத் தொட்டு)
மேல் எட்டுவன ... இசையின் மேல் சஞ்சாரத்தை காண்பிப்பன
(அநேக வித பூத வேதாளங்களே).
கஞ்சக் கஞ்சநற் றேசி ராஞ்சிகு றிஞ்சிப் பண்குறித் தியாழை யேந்துவ ...... 74
......... பதவுரை .........
கஞ்சக் கஞ்ச ... வெண்கலத் தாளக் கருவியுடன்
நற் றேசி ராஞ்சி குறிஞ்சிப் பண் குறித்து யாழை ஏந்துவ ... நல்ல தேசி ராகத்தையும் மனதிற்கு ரஞ்சிதமான குசிஞ்சிப் பண்ணையும் வாசிக்க யாழை கையில் பிடித்திருப்பன
(அநேக வித பூத வேதாளங்களே).
கற்றவு டுக்கையி டக்கைக ளப்பறை மத்தளி கொட்டிய முற்றும டிப்பன ...... 75
......... பதவுரை .........
கற்ற ... தான் பாடம் படித்தபடி
உடுக்கை இடக்கை களப்பறை மத்தளி ... வலக் கையில் வாசிக்கும் உடுக்கை,இடக்கையில் டக்கா (நடராஜர் முழக்குவது), போர் முரசுகள், மத்தளம் கொட்டு இயம் கொட்டப்படும் மற்ற வாத்தியங்களையும்
முற்றும் அடிப்பன ... மிகுதியாக அடித்து வாசிப்பன
(அநேக வித பூத வேதாளங்களே).
காரெனமு ழங்குகுர லேறுதுடி சந்த்ரவளை வீரமுர சுந்திமில்த டாரிகுட பஞ்சமுகி ...... 76
......... பதவுரை .........
கார் என முழங்கு குரல் ஏறு துடி ... மேக கர்ஜனை போன்ற ஒலியை உடைய
சந்த்ரவளை ... சந்திர பிறை போன்ற அரை வட்டமான தோல் கருவி,
வீர முரசும் ... வீர முரசு, தியாக முரசு, நியாய முரசு எனும் மூன்று வகைகளில் ஒன்றான வீரப்பறை
திமில் ... திமிலை
"பறை திமிலை திமிர்த மிகு தம்பட்டம்" ... அமுத உததி விடம் - திருச்செந்தூர் திருப்புகழ்).
தடாரி ... பம்பை
குட பஞ்சமுகி ... குடம் போன்று ஐந்து முகங்களுடன் கூடிய வாத்தியம் (திருவாரூரில் இது விசேசம்)
கரடிபறை யங்கனந் தங்கோடி கொட்டுவன முறைமுறை கவந்தநின் றொன்றோடு கிட்டுவன ...... 77
......... பதவுரை .........
கரடிபறை ... கரடி போல் சப்தமிடும் பறைவகைகள் (தபலை திமிலைகள் பூரிகை பம்பை கரடி தமருகம் வீணைகள் பொங்க)
அங்கு அனந்தம் கோடி கொட்டுவன ... அந்த யுத்த களத்தில் அளவற்ற முறையில் அடித்து முழக்குவன
(அநேக வித பூத வேதாளங்களே).
முறைமுறை கவந்த நின்று ஒன்றோடு கிட்டுவன ... தகையற்ற உடல்களின் அருகே நின்று கொண்டு ஒன்றுடன் ஒன்று தொட்டுக் கொண்டு இருப்பன
(அநேக வித பூத வேதாளங்களே).
கசரதப தாகினிய ரக்கர்துணி பட்டுவிழு களமுழுதும் வாழிய திருப்புகழ்மு ழக்குவன ...... 78
......... பதவுரை .........
கச ரத பதாகினி ... யானைப்படை, தேர்ப்படை, காலாட்படைகளை உடைய
அரக்கர் துணிபட்டு விழும் களமுழுதும் ... அசுரர் சேனைகள் அறுபட்டு மடிந்து விழும் சமர பூமி முழுவதும் திரிந்து,
வாழிய ... கந்த வேளுக்கே ஜெயம் என்ற கோஷத்தையும்
"குணுக்குகள் நிணம் உண்டு அரன் மகன் புறம் ஜெயம் எனும் சொலோ களமிசை எழுமாறே"
... பேய்கள் பஞ்சாமிர்த வண்ணம்.
திருப்புகழ் முழக்குவன ... முருகனுடைய திருப்புகழையும் உரத்த குரலில் எழுப்புவன
(அநேக வித பூத வேதாளங்களே).
கடியகு ணத்த சினத்த சகத்ர யோசனை நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய ...... 79
......... பதவுரை .........
கடிய குணத்த சினத்த ... கொடூரமும் அளவற்ற கோபமும் உடையன
சகத்ர யோசனை நெடிய கழுத்த ... ஆயிரக் கணக்கான தூரத்திற்கு நீண்டிருக்கும் கழுத்தை உடையன
சுழித்த விழித்த பார்வைய ... சுழன்று விழின்ற கண்களை உடையன
(அநேக வித பூத வேதாளங்களே).
காதநூ றாயிர கோடி வளைந்தன பூதவே தாளம் அநேகவி தங்களே. ...... 80
......... பதவுரை .........
காதம் நூறு ஆயிர கோடி வளைந்தன ... போர்க்களத்தில் லட்சம் கோடி கணக்கில் நிறைந்து சுற்றி இருந்தன
பூதவே தாளம் அநேகவி தங்களே ... அநேக வகையான பூதங்களும் வேதாளங்களுமே. |