வடமொழியில் மஹாவாக்யம் என்கிற சொல்லின் நேர் தமிழ் மொழி பெயர்ப்புதான் 'பெருத்த வசனம்' என்கிற சொல்லாகும். ஆதிசங்கரர் தாம் இயற்றிய 'சுப்ரமண்ய புஜங்க' த்தில் முருகப் பெருமானை 'மஹாவாக்ய கூடம்' என்கிறார். அதாவது மஹாவாக்யங்களின் ரகசியப் பொருள் சண்முகனே எனத் துதிக்கிறார். இப்படிப்பட்ட ரகசியப் பொருள் மானிட வடிவம் தாங்கி அருணகிரியாருக்கு தன் சொரூபத்தையே உபதேசமாக அருளிச் செய்ததுதான் பெருத்த வசனம்.
மஹா வாக்யங்கள் யாவன?
ருக் வேதத்திற்கு .. பிரக்ஞானம் பிரமம் யஜூர் வேததிற்கு .. அகம் பிரமாஸ்மி சாம வேதத்திற்கு .. தத்வமசி அதர்வண வேதத்திற்கு .. அயம் ஆத்மா பிரம்மா
ஆதி சங்கரரும் தான் ஸ்தாபித்த நான்கு மடங்களுக்கும் இந்த ஒப்பற்ற வாக்கியத்தையே உபதேச மொழியாக விதித்திருக்கிறார். முருகன் ஓசை முனிக்கு.. சும்மா இரு சொல்லற .. என்றலுமே இந்த பெருத்த வசனம் மூலம் நான்மறைகளின் உட்பொருள் அனைத்தும் விளங்கிவிட்டன. இதை, .. மறை சதுர் விதம் தெரிந்து .. என்று பாடுகிறார். வேத ரகசியத்தை பற்பல திருப்புகழ் பாக்களில் விவரித்திருக்கிறார். ஜீவன் சிவ சொரூபம் ஆவதே 'அகம் பிரம்மா அஸ்மி' என்கிற மஹா வாக்கியத்தின் பிரத்யக்ஷ நிலை. இதை, 'நீ வேறனாதிருக்க நான் வேறனாதிருக்க' .. என்றும் பாடுகிறார். 'தத்வமஸி' என்பதை தமிழ் நூல்களில் 'தொம்பதம்' எனக் குறிப்பிடுவார்கள். சிவபெருமானுக்கு இந்தப் பொருளையே முருகன் உபதேசித்தார் என்பதை,
செண்ப கத்துச் சம்பு வுக்கு தொம்ப தத்துப் பண்பு உரைத்து
... என பொன்றலை எனத் தொடங்கும் திருச்செங்கோட்டுத் திருப்புகழில், கூறுகிறார். தனக்கும் இந்த அரிய உபதேசம் கிட்டியதை இவ்வகுப்பில் கூறுகிறார். தாம் பெற்ற மஹா வாக்கிய உபதேசம் மூலமாக தனக்கு நேர்ந்த அனுபவங்களை விரித்துச் சொல்வதே பெருத்த வசன வகுப்பு ஆகும். இவ்வகுப்பை 'மஹா வாக்கிய உபநிடதம்' என அழைக்கலாம்.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அருக்கன் உலவிய சகத்ர யமுமிசை யதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும் ...... 1
அவஸ்தை பலவையு மடக்கி யகிலமும் அவிழ்ச்சி பெறஇனி திருக்கு மவுனமும் ...... 2
அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும் அரற்று வனபொருள் விகற்ப மொழிவதும் ...... 3
அழுக்கு மலவிருள் முழுக்கின் உழல்வதை யடக்கி யவநெறி கடக்க விடுவதும் ...... 4
எருக்கும் இதழியு முடிக்கும் இறைகுரு எமக்கும் இறையவன் எனத்தி கழுவதும் ...... 5
இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல் இணக்கம் அறவொரு கணக்கை யருள்வதும் ...... 6
இருக்கு முதலிய சமஸ்த கலைகளும் இதற்கி தெதிரென இணைக்க அரியதும் ...... 7
இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர் கடக்க விடுவதொர் இயற்கை யருள்வதும் ...... 8
நெருக்கு வனவுப நிடத்தின் இறுதிகள் நிரப்பு கடையினில் இருப்பை யுடையதும் ...... 9
நெருப்பு நிலம்வெளி மருத்து வனமென நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும் ...... 10
நினைப்பு நினைவது நினைப்ப வனும்அறு நிலத்தில் நிலைபெற நிறுத்த வுரியதும் ...... 11
நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட நிவிர்த்தி யுறஅநு பவிக்கு நிதியமும் ...... 12
உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர உளத்தொ டுரைசெயல் ஒளித்து விடுவதும் ...... 13
ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென உயிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும் ...... 14
உரத்த தனிமயில் உகைத்து நிசிசரர் ஒளிக்க அமர்பொரு சமர்த்தன் அணிதழை ...... 15
உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன் ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே. ...... 16
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அருக்கன் உலவிய சகத்ர யமுமிசை யதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும் ...... 1
......... பதவுரை .........
அருக்கன் உலவிய ... சூரியன் சஞ்சாரம் செய்கின்ற
சகத்ரயமும் ... பூர், புவ, சுவர் எனும் மூவுலகங்களிலும்
இசை ... சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள
அதிற்கொள் சுவையென ... அவ்வுலகங்களில் விளங்குகின்ற எல்லா இன்ப நுகர்ச்சிகளும் இதுவே எனும்படி
அனைத்து நிறைவதும் ... எல்லா பொருட்களிலும் ஒன்று கூடியது போல நிறைந்து உள்ளதும்
(அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).
......... விளக்கவுரை .........
எல்லா இன்ப அனுபவங்களும் ஒரே சொல்லின் மூலம் கிடைத்த அதிசயத்தை 'போக்கும் வரவு' எனத் தொடங்கும் கந்தர் அலங்காரத்தில் (73),
மநோலயந் தானே தருமெனைத் தனவசத்தே ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆநந்தமே
.. என்பார். இந்த பேரின்ப அநுபவத்தை சுயமாக அனுபவிக்க வேண்டுமே தவிர பிறருக்கு வாக்கால் எடுத்துச் சொல்ல முடியாது. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டு தக்ஷிணா மூர்த்தியார் வாய் பேசாமல் மோன முத்திரை காட்டிப் போந்தார். ஆனால் அந்த நான்கு ஜனகாதி முனிவர்களுக்கு இருந்த மனப் பக்குவம் நமக்கு இல்லையே என்கிற ஆதுலத்துடன் கருணையே வடிவமான அருணகிரியார் தொடர்ந்து விவரிகின்றார்.
அவஸ்தை பலவையு மடக்கி யகிலமும் அவிழ்ச்சி பெறஇனி திருக்கு மவுனமும் ...... 2
......... பதவுரை .........
அவஸ்தை பலவையும் ... வேதனைகள் துன்பங்கள் அனைத்தையும்
அடக்கி ... பிராரப்த வினைகளைத் தவிர மீதியை அழித்து,
அகிலமும் ... மனம் வாக்கு காயம் இவைகளின் செய்கைகளை,
அவிழ்ச்சி பெற ... அற்றுப் போகும்படி செய்து,
இனி திருக்கு மவுனமும் ... நிஷ்களமான ஆனந்த நிலையான மவுன நிலையை அருளுவது
(அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).
......... விளக்கவுரை .........
அவஸ்தை என்பதற்கு பிறிதொரு பொருளும் காணலாம். முருகப் பெருமான் அருளிய உபதேச மகிமையினால் விழிப்பு, கனவு ஆழ்தூக்கம் எனும் மூன்று நிலைகளைக் கடந்தும் ஆன்மா சுயம் பிரகாசமாய் விளங்கி துரிய நிலை கிட்டியது என்கிறார். இதுவே 'எல்லாம் இழந்து சும்மா இரு' க்கும் எல்லையாகும்.
.. உருவிலாத பாழில் செட்ட வெளியில் ஆடு நாத .. நிர்த்தத்தைக் காண நம்மையும் அழைக்கிறார் கருணைக்கு அருணகிரி. ஒரு தாய் தன் பச்சிளம் குழந்தைக்கு மருந்து ஊட்ட அந்த மருந்தை முதலில் தானே குடித்து பார்த்து, பின் தன்னுடைய பால் மூலம் சேய்க்கு கொடுப்பது போல, அருணகிரிக்கு மெளன சுகத்தை உணர்விப்பதற்கு தானே அந்த அநுபூதி நிலையில் இருந்து விளங்கினான் முருகன்.
மனகுண சலன மலினமில் துரியஅ தீதசு காநு பூதி மவுனநி ரக்ஷர மந்தி ரம்பொ ருந்தி மார்பிற் றிகழ்ந்தன
.. என்பார் புயவகுப்பில்.
அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும் அரற்று வனபொருள் விகற்ப மொழிவதும் ...... 3
......... பதவுரை .........
அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும் ... மூடத்தனமானதும், சண்டைக்குக் காரணமானதும், போலியானதுமான புறச்சமயவாதிகள், ஆறு சமயத்தினரும்
அரற்று வனபொருள் விகற்பம் ஒழிவதும் ... ஆரவாரம் செய்யும் தத்துவப் பொருளின் மாறுபாடுகளை, மெய்ப் பொருளுக்கு மாறுபட்ட கருத்துக்களை எடுத்துக் கூறி விளக்கி அந்த சமயக் கொள்கைகளை நிராகரிப்பதும்
(அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).
......... விளக்கவுரை .........
புற சமய கூச்சல்களினால் மெய்ப் பொருளைக் காண முடியாது. இக்கருத்தை பல இடங்களில் கூறியுள்ளார் அருணகிரியார்.
கத்திக்கொடு துறை திறத்து அற்ற, அசேதனம் தன் துறை என்று அறியார் திறம் நீங்கி ... செந்தூர் கருது
.. என்பார் கந்தர் அந்தாதியில் (33).
.. கொந்து காவென மொழிதர வரு சமய விரோத தந்ரவாதிகள் பெற அரியது
... என்பார் கொந்துவார் எனத் தொடங்கும் திருத்தணி திருப்புகழில்.
அழுக்கு மலவிருள் முழுக்கின் உழல்வதை அடக்கி அவநெறி கடக்க விடுவதும் ...... 4
......... பதவுரை .........
அழுக்கு மல இருள் முழுக்கின் உழல்வதை ... ஆன்மா ஆணவம், மாயை, கன்மம் எனும் மும் மல இருளில் மூழ்கி அலைவதை
அடக்கி அவநெறி கடக்க விடுவதும் ... ஒழித்து தீய நெறி தாண்ட உதவுவது
(அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).
......... விளக்கவுரை .........
முருகப் பெருமான் சிவ ஒளி பரப்பி அடியார்களின் மல இருளை விரட்டி விடுகிறார்.
.. இரு நோய் மலத்தை சிவ ஒளியால் மிரட்டி
.. என்பார். இது பிறப்பை நீக்கி சிவ கதிக்கு வழி காட்டும்.
கருவில் பிறவாதபடி உருவில் பிரமோத அடிகளை ஏத்திடு இராக வகை ...... அதின் மீறி
கருணை பிரகாச உனது அருள் உற்றிட ஆசு இல் சிவ கதி பெற்றிடு
... என்பது அநுபவ வாக்கு ( சொருப பிரகாச எனத் தொடங்கும் திருவொற்றியூர் திருப்புகழ்).
எருக்கும் இதழியு முடிக்கும் இறைகுரு எமக்கும் இறையவன் எனத் திகழுவதும் ...... 5
......... பதவுரை .........
எருக்கும் இதழியு முடிக்கும் இறை ... எருக்க மலரையும் கொன்றை மலரையும் சென்னியில் சூடும் பெருமான்,
குரு ... எனது ஆசான் இவனே என சொல்லவும்
எமக்கும் இறையவன் என ... இதைப் பாடும் எனக்கும் குல தெய்வமாகத்
திகழ்வதும் ... விளங்குவதற்குக் காரணமாக உபதேச மொழிகளை இருவருக்கும் புகன்றது
(அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).
......... விளக்கவுரை .........
எருக்க மலரில் அருக்கனின் ஆற்றல் மறைந்து விளங்குகிறது. சூரியனின் அந்தர் ஆத்மாவாக திகழ்கிறது எருக்க மலர். ஆதலால் அம் மலரை சிவனார் தனது முடியில் சூடி இருக்கிறார். சூரிய உபாசனையைக் கூறும் காயத்ரி மந்திரத்தில் வரும் .. பர்க .. எனும் பதம் சிவனுடைய நாமங்களில் ஒன்று. இதழி கொன்றை பஞ்சாட்சரத்தை நினைவுட்டுவதால் இதுவும் சிவபெருமானுக்கு உகந்தது.
முருகன் தந்தைக்கு உபதேசம் செய்தது மெளன உபதேசமாகும். அதைப் பெற்றவுடன் ஈசர்க்கு நிற்விகல்ப சமாதி கூடினது என்பதை, மதுராந்தகத்து திருப்புகழில் ('சயிலாங்க'),
சயிலாங்க னைக்கு ருகியிடப்பக் கங்கொடுத் தகம்பர் ...... வெகுசாரி
சதிதாண்ட வத்தர் சடையிடத்துக் கங்கைவைத் தநம்பர் ...... உரைமாளச்
செயல்மாண்டு சித்த மவிழநித்தத் த்வம்பெறப் பகர்ந்த ...... வுபதேசஞ்
அந்த உபதேசம் தனக்கும் கிடைத்த பெருமையை பூரிப்புடன் சொல்லிக் கொள்கிறார் அருணகிரியார்.
கந்தப் பெருமான் உபதேசம் செய்தது மூவருக்கே எனப் பகருவார் ஞானியார் அடிகள்,
வேலா சரணம் சரணம் என்மேல் வெகுளாமல் இனி மேலாயினும் கடைக் கண் பார் பருப்பத வேந்தன் மகள் பாலா குறுமுனியாருக்கும் திருப்புகழ் பண்ணவருக்கும் ஆலாலம் உண்டவருக்கும் உபதேசித்த ஆண்டவனே.
இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல் இணக்கம் அறவொரு கணக்கை யருள்வதும் ...... 6
......... பதவுரை .........
இரட்டை வினைகொடு திரட்டு ... நல்வினை தீவினை இரண்டினாலும் அடித்தளமாக வைத்து தீட்டப் பட்டும்
மலவுடல் ... அக புற அழுக்களினால் மூடப்பட்டதும் ஆன என் உடம்பின்
இணக்கம் அற ... தொடர்பு அடியோடு நீங்குவதற்கு
ஒரு கணக்கை யருள்வதும் ... ஒரு தந்திரத்தைச் சொல்லிக் கொடுத்ததும்
(அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).
......... விளக்கவுரை .........
'வினைப் போகமே தேகம் கண்டாய் வினைதான் ஒழிந்தால் தினைப் போதளவு நில்லாது கண்டாய்'
.. என்பார் பட்டினத்து அடிகள் நமது உடம்பினைப் பற்றி. பிராரப்த வினையின் விளைவே நமது சரீரம். ஆனால் பிராரப்தத்தை நுகரும் போதே ஆகாமிய வினைகள் நம்மைத் தொற்றிக் கொள்ளும். இதுவே அடுத்த பிறவியின் பிராரப்தமாக உருவெடுக்கிறது. இந்தத் தொடர் சங்கிலியை உடைப்பதற்கு முருகன் ஒரு தந்திரத்தை சொல்லித் தந்திருக்கிறார்
.. நீ செய்வதை எல்லாம் சிவார்பணமாக செய்தால் வினைப்பயன் கிடையாது ..
என்பதே இந்தக் கணக்கு. இப்படிச் செய்வதன் மூலம் மறுபிறவி ஒழிந்தது என்பதை திருவேளைக்காரன் வகுப்பில் (12),
ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி ராமல்விடு வித்தருள் நியாயக்காரனும்
.. என்கிறார். நியாயக்காரன் என்றால் நீதிபதி. அவர் ஒரு கைதியின் நல்நடத்தைக்காக விடுதலை செய்வது போல் இது. கந்தர் அந்தாதியிலும் மேலும் ஒரு கணக்கை விளக்குகிறார்.
.. என் ஐ இரு திங்களும் மாசுணமாக்கும் பதாம் புயன் ..
கருவடைந்து பத்துற்ற திங்கள் நாம் துன்பப் படுவதை நீக்க 10 எனும் எண் 0 ஆக வேண்டும். முருகன் தனது திருப் பாதமாகிய ரப்பரினால் 1 எனும் எழுத்தை அழித்து, நான் கருவில் இருக்கும் நாட்களை சூன்யமாக்கி விட்டான் என்கிறார்.
இருக்கு முதலிய சமஸ்த கலைகளும் இதற்கி தெதிரென இணைக்க அரியதும் ...... 7
......... பதவுரை .........
இருக்கு முதலிய சமஸ்த கலைகளும் ... வேதங்கள் முதலிய சகல சாஸ்திரங்களும்,
இதற்கி தெதிரென இணைக்க அரியதும் ... சண்முகன் அருளிய உபதேசத்திற்கு நிகராகும் என்று ஒப்பிட்டுச் சொல்ல முடியாததும்
(அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).
......... விளக்கவுரை .........
நூலறிவிற்கு அப்பாற் பட்டது அனுபவ ஞானம் என்பதை பல இடங்களில் சுட்டிக் காண்பிக்கிறார் அருணகிரியார் ( சருவிய சாத்திர - பொதுப்பாடல்கள் திருப்புகழ்),
சருவிய சாத்திரத் ...... திரளான சடுதிக ழாஸ்பதத் ...... தமையாத
அருமறை யாற்பெறற் ...... கரிதாய அனிதய வார்த்தை
(ஆஸ்பதம் ... ஆதாரம் அனிதய ... அ + இதயம் ... இதயத்திற்கு நெருக்கமானது).
அருணகிரியாருக்கு ஞான உபதேசம் கிட்டியவுடன் சகல சாஸ்திர ஞானமும் வரப் பெற்றது என்பதை அவரே விளக்குகிறார்.
அறிவும்அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும் அறியென இமைப்பொழுதின் வாழ்வித்த ...... வேதியனும்.
இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர் கடக்க விடுவதொர் இயற்கை யருள்வதும் ...... 8
......... பதவுரை .........
இறக்க ... எனது காலம் முடிந்து ஜீவன் உடல் கூட்டை விட்டு செல்லும்போது,
எனதெதிர் நடக்கும் யமபடர் ... என்னை எமபுரத்திற்கு செல்லக் கூட்டிப்போக வந்திருக்கும் எம தூதர்களை,
கடக்க விடுவதொர் இயற்கை யருள்வதும் ... அடக்கி திருப்பிச் செல்வதற்கான ஒரு ஒப்பற்ற மன வலிமையை அருள்வதும்
(அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).
......... விளக்கவுரை .........
நாம் இப் பிறவில் அனுபவிக்க வேண்டிய பிராரப்தங்களை துய்த்தவுடன் செய்த வினைக்கு ஏற்ப மறு உலகத்தில் புகுத்த எமபடர் வருவர். ஆனால் முருகனின் உபதேசம் பெற்றவர்களுக்கு 'அந்தகா வந்து பார்' என்று சவால் விடும் மன திடத்தைக் கொடுப்பது அந்த உபதேசம். அதை .. அஞ்சா நெஞ்சாக்கம் தர வல்ல பெருமாளே .. என்பார்.
முருகப் பெருமானின் கடைக்கண் இயல்பையும் அவனது ஞான வேலையும் மயிலையும் நினைந்திருந்தாலே போதுமே,
.. எம படர் தொடர்ந்து அழைக்கின் .. அவருடன் எதிர்த்து உள் உட்க இடி என முழக்கி வெற்றி பெசலாம் .. வாருமே பெருத்த பாருளீர்
.. என நம்மை அழைக்கிறார் அருணை முனிவர் அருணகிரியார்.
நெருக்கு வனவுப நிடத்தின் இறுதிகள் நிரப்பு கடையினில் இருப்பை யுடையதும் ...... 9
......... பதவுரை .........
நெருக்குவன ... நிறைவான பொருளை எடுத்துச் சொல்லும்
உபநிடத்தின் இறுதிகள் ... வேதாந்தமாகிய உபநிடத்தின் ஞான அத்தயோத்தின் முடிந்த முடிவாய் எடுத்துச் சொல்லும்
நிரப்பு கடையினில் இருப்பை யுடையதும் ... பூரண பக்குவ நிலையில் தான் இருப்பிடமாகக் கொண்டு திகழ்வது
(அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).
......... விளக்கவுரை .........
இந்த நிலையை பல திருப்புகழ் பாக்களில்,
வேத நன் முடியிலும் மருவிய குருநாதா ( கொந்துவார் - திருத்தணி)
ஆரணமுரைக்கு மோனகவிடத்தில் ஆருமுய நிற்கு முருகோனே ( ஏடுமலர் உற்ற - பொதுப்பாடல்கள்)
வேதாந்த பரம சுக வீடாம் பொருள் ( கமலரு - காஞ்சீபுரம்)
.. என்பார்.
வேதங்களின் முடிவு வேதாந்தமாகிய உபநிசத்துக்கள். இந்த சாஸ்திரங்களின் சாரமே நான்கு வேத வாக்கியங்கள். அருணகிரியாருக்கு முருகன் உபதேசம் செய்த பெருத்த வசனத்தின் மூலம் இந்த மகா வாக்கியங்களின் உட் பொருள் விளங்கி நிற்கும். இந்த அனுபவத்தை மற்றொரு திருப்புகழில்,
.. மறை புகலும் அனுபவ வடிவினை அளவறு அகில வெளியையும் ஒளியையும் அறி சிவ தத்துவ பிரசித்திதனை முத்தி சிவ கடலை .. ( விகட பரிமளம் - வயலூர்).
.. என்பார்.
நெருப்பு நிலம்வெளி மருத்து வனமென நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும் ...... 10
......... பதவுரை .........
நெருப்பு நிலம்வெளி மருத்து வனமென ... தீ, மண், ஆகாயம், காற்று, நீர் என்று கூறப்படும் பஞ்ச பூதங்களின்,
நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும் ... சேர்க்கையால் வகுக்கப்பட்ட (பஞ்சீ கரணம்) ஒரு தத்துவ விதிமுறைக்கு அகப்டாமல் அவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு வடிவமான வஸ்துவை தரிசிக்க செய்வதும்
(அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).
......... விளக்கவுரை .........
ஐம் பூதங்களும் முருகப் பெருமானின் சங்கல்பத்தால் மாயையிலிருந்து தோன்றுவன. ஆனால் அவைகளின் எல்லைக்கு அப்பாற்பட்டது அவனது அருள் நிலை. ஐந்து வித பூதமும் கரணம் நான்கும் அந்தி பகல் யாதும் அறியாத ஒரு வீட்டை அருளுவது பெருத்த வசனமே. தனக்கு வந்த பேறு கிட்டியதை பல பாக்களில் சொல்லி இருக்கிறார்.
.. பஞ்ச பூதமும் அற்று .. .. .. இருக்கும் அக் காட்சியதே.
ஞான அனுபவத்தால் கிடைக்கும் பரம சுக வீட்டை ஐம் பூதங்களால் குலைக்க இயலாது.
பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது பவனம் வீசில் வீழாது ...... சலியாது
பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாது பரம ஞான வீடு ..
.. ( சுருதியூடு - பொதுப்பாடல்கள்). இந்த வீடு அருணகிரியாருக்குக் கிடைத்தது.
நினைப்பு நினைவது நினைப்ப வனும்அறு நிலத்தில் நிலைபெற நிறுத்த வுரியதும் ...... 11
......... பதவுரை .........
நினைப்பு ... அறிவு,
நினைவது ... அறியப்படுகின்ற பொருள்,
நினைப்ப வனும் ... அறிபவன் (எனும் திரிபுடிகளும்),
அறு ... அற்றுப் போன,
நிலத்தில் ... இடத்தில்
நிலைபெற ... ஸ்திரமாக
நிறுத்த வுரியதும் ... நிற்கும்படி செய்ய வல்லதும்
(அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).
......... விளக்கவுரை .........
ஒரு பொருளைக் காணும் போது அதைப் பற்றிய அறிவு, அதாவது அப் பொருள் எத்தன்மையானது, என்ன நிறம், என்ன பருமன், மெல்லியதா, பருமன் உடையதா, உயரமா, குட்டையா என்றெல்லாம் குறிக்கும் அறிவுக்கு சுட்டறிவு என்று பெயர். விடாமல் அந்தப் பொருளையே ஆழ் நிலையில் தியானிக்கும்போது அங்கு தியானிக்கப்படும் பொருளும் காண்கின்ற தானும் ஆகிய பேதம் நீங்கி ஒரே அத்விதீய ஞானம் தோன்றும்.
இக்கருத்தை அருணகிரியார், தவநெறி எனத் துவங்கும் பொதுப்பாடல்கள் திருப்புகழில்
.. அவன், இவன் உவன், அது இது உது எனும் ஆறு அற்று ..
.. என்பார். இக்கருத்தையே, பட்டினத்தாரும்,
.. பரமேட்டி , சுட்டிருந்த ஞானத்தைச் சொல்
.. என்கிறார்.
ஞாத்திரு, ஞானம், ஞேயம் கடந்த இந்த அறிவை அடைவது கடினம்.
'இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே'
.. என்பார் கந்தர் அலங்காரத்தில். முருகனுடைய உபதேச மகிமையால் அருணகிரியாருக்கு இந்த நிலை சுலபமாக கிடைத்தது. இந்த அநுபவத்தை,
.. சொல்லொணாதது இந் ஆனந்தமே
.. என்கிறார் கந்தர் அலங்காரத்தில்.
நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட நிவிர்த்தி யுறஅநு பவிக்கு நிதியமும் ...... 12
......... பதவுரை .........
நிலைத்த அடியவர் ... முத்தி நெறி அடையாத மூர்க்கரை விட்டு பத்தி நெறியில் ஸ்திரமாக நிற்கும் உன் அடியவர்கள்,
மலைத்தல் அதுகெட ... வாசனா மலத்தில் செக மாயையில் அகப்பட்டு பிரமித்து அந்த பிரபஞ்ச மாயையை அகற்றி
நிவிர்த்தி யுறஅநு பவிக்கு நிதியமும் ... அந்த உலக பசு பாச தொந்தம் ஆகிய விலங்கினின்றும் விடுதலை ஆனந்தம் அடை பேரானந்த அநுபவத்தை நல்குவதும்
(அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).
......... விளக்கவுரை .........
நாம் வாழ்வது மாயா காரியமான உலகம். பெருங்காயம் வைத்த டப்பா, அதை எடுத்த பிறகும் மணப்பது போல் சில ஞானிகளுக்கும் ஒரு சமயம் பூர்வ வாசனையால் பிரபஞ்சப் பற்று ஏற்படலாம். அடியவர்களைக் கைவிடாத அறுமுகன் அப்போது சுத்த மாயையின் வடிவமான மயிலில் ஆரோகித்து, தன் அடியவர்களை மாயைத் தளைகளின்றும் விடுவிக்க வருவான்.
சீர் சிறக்கும் மேனி எனத் துவங்கும் பழமுதிர்ச்சோலை திருப்புகழில்,
வாடை பற்று வேளை யடா வடா வென நீமயக்க மேது சொலாய் சொலாய்யென வாரம் வைத்த பாத மிதோ இதோ என ...... அருள்வாயே
.. என்பார்.
உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர உளத்தொ டுரைசெயல் ஒளித்து விடுவதும் ...... 13
......... பதவுரை .........
உருக்கு திருவருள் ... நெஞ்சை நெகிழ வைக்கும் உனது திருவருள் பிரகாசத்தில்,
திளைத்து மகிழ்தர ... ஒன்றி மூழ்கி அனுபவித்து பேரின்ப நிலையில் நிற்க
உளத்தொ டுரைசெயல் ஒளித்து விடுவதும் ... மனம், வாக்கு, காயம் அகிய இம் மூன்றின் வியாபாரங்களை அற்றுப் போகும்படி செய்வதும்
(அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).
......... விளக்கவுரை .........
அந்தக் கரணங்கள் செயல் பட்டுக் கொண்டிருக்கும்வரை ஐம் புலங்கள் அடங்காது. கரணங்கள் அடங்க சிவோகம் தியானம் பழக வேண்டும். அப்போது தோன்றும் சிவானந்த காட்சியில் ஜீவபோதம் அழிந்து விடும்.
பூதங்கள் அற்று பொறி அற்று சார் ஐம்பலங்கள் அற்று பேதம் குணம் அற்று பேராசை தான் அற்று பின்முன் அற்று காதல் கரணங்களும் அற்ற ஆனந்தக் காட்சியிலே ஏதம் களைந்திடுவேன் கச்சி ஏகம்பனே
(... பட்டினத்தார்).
வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் சீர் மண் கெடினும் தான் கெட்டதின்றி சலிப்படையா தன்மையனுக்கு ஊன் கெட்டு உயிர் கெட்டு உணர்வும் கெட்டு என் உள்ளமும் போய் நான் கெட்டவா பாடி தெள்ளேனம் கொட்டாமோ
(... திருவாசகம்)
இந்த சுகானுபூதி அருணகிரியாருக்கு முருகனுடைய உபதேச மகிமையால் கிட்டியது.
.. கரண மாய்த்தெனை மரண மாற்றிய கருணை வார்த்தை இருந்தவாறு
என .. பெருத்த வசனமே இந்த கருணை வார்த்தையாகும்.
ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென உயிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும் ...... 14
......... பதவுரை .........
ஒளிக்கும் ஒளியென ... உலகிற்கு ஒளி தரும் சூரியன், சந்திரன், அக்னி, தாரகைகள் முதலியவற்றுக்கெல்லாம் மூல ஒளியாய் திகழ்வதும்,
வெளிக்கும் வெளியென ... வெட்ட வெளியைத் தாண்டிய பரவெளியாய் திகழ்வதும்,
உயிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும் ... சராசரங்களில் சேதனம் அசேதனம் சகலத்திலும் உயிராய்த் திகழ்வதும் ஆகிய நிலைகளில் ஞானிகளால் உணரப்படுவதும்
(அறுமுகன் அருளிய பெருத்த வசனமே).
......... விளக்கவுரை .........
நாம் காணும் ஜோதிகளுக்கு ஒளி வீசும் சக்தி நல்குவது பிரம்மப் பொருளே.
நதத்ர சூரியோ பாதி நச சந்திர மஸ
.. என்று வேதம் கோஷிக்கிறது. இந்த பிரம்ம ஒளியே உருவம் தாங்கி பிரமண்யனாய் அவதரித்துள்ளான்.
அருவமும் உருவமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரம்மாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகி கருணைகூர் முகங்களாறும் கரமது பன்னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்து அங்கு உதித்தனன்
.. கந்த புராணம்.
ஆறு ஆறையும் கடந்த நிலையை பெருவெளி என்பார். எல்லா தத்துவங்களும் ஒடுங்கிப் போன இதை,
.. வெளியில் விளைந்த வெறும் பாழ்
.. என்பார் கந்தர் அலங்காரத்தில். இங்கு சுத்த மாயை மட்டும் விளங்குகிறது. மயிலாடு சுத்த வெளியாகிய இங்கு,
.. ஒரு பூதரும் அறியா தனி வீடு ஒன்றை ..
முருகன் தனக்கு அமைத்துக் கொடுத்ததை விவரிக்கிறார். உயிர்கள் அனைத்தும் மாயையின் சம்பந்தத்தினால் ஜடமாகி இருக்கின்றன. சூத்திரதாரி பொம்மையை ஆட்டுவதுபோல் இறைவன் உயிருக்குயிராய் இருந்து சராசரங்களை நடத்துகிறான்.
.. ஆட்டுவித்தால் ஆடாதார் ராரே
.. என்கிறது அப்பர் தேவாரம்.
உரத்த தனிமயில் உகைத்து நிசிசரர் ஒளிக்க அமர்பொரு சமர்த்தன் அணிதழை ...... 15
......... பதவுரை .........
உரத்த தனிமயில் உகைத்து ... வலிய நிகரில்லாத மயிலைச் செலுத்தி
நிசிசரர் ஒளிக்க ... அசுரர்கள் பயந்து ஓடும் வண்ணம்
அமர்பொரு சமர்த்தன் ... போர் புரியும் திறமை கொண்டவனும்
......... விளக்கவுரை .........
விந்து வடிவான மயிலைக் கண்டு இருள் வடிவான அசுரர்கள், ஆதவனுக்கு முன் மறைந்து போகும் இருட்டைப்போல், அறைந்து போகிறார்கள்.
உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன் ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே. ...... 16
......... பதவுரை .........
அணிதழை உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன் ... அழகிய தழைகளைப் போர்த்துக் கொண்டிருக்கும் வள்ளிப் பிராட்டியை திருமணம் செய்துகொண்ட சண்முகனும்
ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே ... ஒப்பற்ற தெய்வமுமாகியவன் எனக்கு உபதேசித்து அருளிய மகிமை மிக்க உபதேச மொழியே.
......... விளக்கவுரை .........
தற்காலத்தில் மணமகளை நிச்சயதார்த்தம் செய்ய பட்டுச் சேலைகள் வாங்கித் தருவதுபோல் வள்ளிப் பிராட்டியை நிச்சயம் செய்ய கையுறையாக முருகன் தழைகொய்து கொண்டுபோனதை தொல்லைமுதல் எனத் தொடங்கும் கொல்லிமலைத் திருப்புகழில்,
.. கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா ..
.. என்பார்.
ஐம்புல வேடரில் அயர்ந்தனை ..
என்ற சிவஞான போத செய்யுள் போன்று வள்ளியாகிய ஜீவாத்மா தன் உண்மைச் சொரூபத்தை மறந்து வேட்டுவத் தொழிலில் ஈடுபட்டிருந்தாள். முருகன் தானே அங்கு சென்று
.. குணமதாக்கி சிறந்த வடிவு காட்டி குமரன் இவனே எனக்கும் மறை மொழியை நிறைவாக எனக்கு உபதேசித்து நிர் அதிசய ஆனந்த பேற்றை நல்கினான்.
.. என்று முடிக்கிறார். |