ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது வாகநிகழ் பத்தசன வாரக் காரனும் ...... 1
ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய னாருடனு ணக்கைபரி தீமைக் காரனும் ...... 2
ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில் ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும் ...... 3
ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநு பூதியடை வித்ததொரு பார்வைக் காரனும் ...... 4
ஆடலைவு பட்டமரர் நாடதுபி ழைக்கஅம ராவதிபு ரக்குமடல் ஆண்மைக் காரனும் ...... 5
ஆடகவி சித்ரகன கோபுரமு கப்பில்அரு ணாபுரியில் நிற்கும்அடை யாளக் காரனும் ...... 6
ஆயிரமு கத்துநதி பாலனும கத்தடிமை யானவர் தொடுத்தகவி மாலைக் காரனும் ...... 7
ஆறுமுக வித்தகனும் ஆறிருபு யத்தரசும் ஆதிமுடி வற்றதிரு நாமக் காரனும் ...... 8
யானெனதெ னச்சருவும் ஈனசம யத்தெவரும் யாரும்உணர் தற்கரிய நேர்மைக் காரனும் ...... 9
யாதுநிலை யற்றலையும் ஏழுபிற விக்கடலை யேறவிடு நற்கருணை யோடக் காரனும் ...... 10
ஏரகம் இடைக்கழிசி ராமலைதி ருப்பழநி யேரணிசெ ருத்தணியில் வாசக் காரனும் ...... 11
ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி ராமல்விடு வித்தருள்நி யாயக்காரனும் ...... 12
யாமளைம ணக்குமுக சாமளைம ணிக்குயிலை யாயெனஅ ழைத்துருகு நேயக் காரனும் ...... 13
ஏதமற நிச்சயம னோலயவி ளக்கொளியும் யாகமுநி வர்க்குரிய காவற் காரனும் ...... 14
ஈரிரும ருப்புடைய சோனைமத வெற்பிவரும் யானையள விற்றுவளும் ஆசைக் காரனும் ...... 15
ஏடவிழ்க டப்பமலர் கூதளமு டிக்கும்இளை யோனும்அறி விற்பெரிய மேன்மைக் காரனும் ...... 16
வானவர்பொ ருட்டுமக வானதுபொ ருட்டுமலர் வாவியில்உ தித்தமுக மாயக் காரனும் ...... 17
வாரணப திக்குதவு நாரணனு வக்குமரு மானும்அய னைக்கறுவு கோபக் காரனும் ...... 18
வாழியென நித்தமற வாதுபர விற்சரண வாரிசம்அ ளிக்கும்உப காரக் காரனும் ...... 19
மாடமதில் சுற்றியத்ரி கூடகிரி யிற்கதிர்செய் மாநகரி யிற்கடவுள் ஆயக் காரனும் ...... 20
வாளெயிற துற்றபகு வாய்தொறுநெ ருப்புமிழும் வாசுகியெ டுத்துதறும் வாசிக் காரனும் ...... 21
வாளகிரி யைத்தனது தாளிலிடி யப்பொருது வாகைபுனை குக்குடப தாகைக் காரனும் ...... 22
மாசிலுயி ருக்குயிரு மாசிலுணர் வுக்குணர்வும் வானிலணு வுக்கணுவு பாயக் காரனும் ...... 23
வாதனைத விர்த்தகுரு நாதனும்வெ ளிப்படம காடவியில் நிற்பதொர்ச காயக் காரனும் ...... 24
மீனவனு மிக்கபுல வோருமுறை பொற்பலகை மீதமர்த மிழ்த்ரயவி நோதக் காரனும் ...... 25
வேரிமது மத்தமதி தாதகிக டுக்கைபுனை வேணியர்து திப்பதொரு கேள்விக் காரனும் ...... 26
வேலைதுகள் பட்டுமலை சூரனுடல் பட்டுருவ வேலையுற விட்டதனி வேலைக் காரனும் ...... 27
மீனுலவு கிர்த்திகைகு மாரனுநி னைக்குமவர் வீடுபெற வைத்தருள்உ தாரக் காரனும் ...... 28
மேனையரி வைக்குரிய பேரனும தித்ததிறல் வீரனும்அ ரக்கர்குல சூறைக் காரனும் ...... 29
வேதியர்வெ றுக்கையும்அ நாதிபர வஸ்துவும்வி சாகனும்வி கற்பவெகு ரூபக் காரனும் ...... 30
வேடுவர்பு னத்திலுரு மாறிமுனி சொற்படிவி யாகுலம னத்தினொடு போம்விற் காரனும் ...... 31
மேவியபு னத்திதணில் ஓவியமெ னத்திகழு மேதகு குறத்திதிரு வேளைக் காரனே. ...... 32
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஆனபய பத்திவழி பாடுபெறு முத்தியது வாகநிகழ் பத்தசன வாரக் காரனும் ...... 1
......... பதவுரை .........
பயபத்தி ... பயத்துடனும் பக்தியுடனும்,
ஆன ... தம்மால் முடிந்தவரை,
வழிபாடு ... இறைவனைத் தொழுது வழிபாடு செய்வதே,
பெறு முத்தி என ... தாம் அடைய வேண்டிய முத்திப் பேறு என்று நினைத்து,
அதுவாக நினை ... அந்த வழிபாட்டையே தொடர்ந்து செய்யும்,
பத்த சன ... பக்தர் கூட்டங்களின் மேல்,
வாரக் காரனும் ... அன்பைச் செலுத்துபவன் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
தீவிரமான பக்தி நிலையை அடைந்த அடியவர்கள் மோட்சப் பேற்றை விட கடவுளை வழிபாடு செய்வதையே விரும்புவார்கள்.
திருநாவுக்கரசரின் 'குனித்த புருவமும் .. ' எனத் தொடங்கும் தேவாரப் பாடலில், ஈசனின் தரிசனம் கிடைத்தால் இம் மானிடப் பிறவியே விசேடம் என்கிறார் அவர். கந்த புராணத்தில் வீரபாகுவும் கந்தப் பெருமானிடம் கேட்ட வரமும் இதுவேயாகும்.
பய பக்தி என்பதை 'ஆசார பூஜை' என்பார். அன்பு என்பது பக்தி. பயம் என்பது ஆசாரம்.
ஆரமது ரித்தகனி காரணமு தற்றமைய னாருடனு ணக்கைபரி தீமைக் காரனும் ...... 2
......... பதவுரை .........
ஆர ... நிரம்பிய,
மதுரித்த ... இனிமை பொருந்திய,
கனி காரணம் ... மாதுளம் கனியை பெற வேண்டிய காரணத்தினால்,
முதல் ... முன்பு ஒரு காலத்தில்,
தமையனாருடன் ... மூத்தவராகிய விநாயகப் பெருமானுடன்,
உணக்கை ... சிவனார் ஏற்படுத்திய போட்டியில் ஏற்பட்ட,
பரி ... வருத்தத்தையும்,
தீமைக்காரனும் ... கோபத்தையும் பெற்றவன் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
தனது தந்தையார் போட்டியில் சரியான நீதி வழங்கவில்லை என்று முருகப் பெருமான் வருத்தமும் கோபமும் கொண்டார் என்பதை புடவிக்கணி எனத் தொடங்கும் பழநித் திருப்புகழில்,
.. உயர் செம்பொன் கிரியைத் தனிவலம் வரஅர னந்தப் பலனை கரிமுகன் வசமரு ளும்பொற் ...... பதனாலே
பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக் கனியைத் தரவிலை
.. என அழகாக சித்தரிக்கிறார்.
ஆகமம்வி ளைத்தகில லோகமு நொடிப்பளவில் ஆசையொடு சுற்றுமதி வேகக் காரனும் ...... 3
......... பதவுரை .........
ஆகமம் விளைத்த ... தர்ம சாஸ்திரங்கள் நிறைந்துள்ள,
அகில லோகமும் ... எல்லா உலகங்களையும்,
நொடிப்பளவில் ... ஒரு நொடி பொழுதில்,
ஆசையோடு சுற்றும் ... விருப்பத்தோடு வலம் வந்த
அதிவேகக்காரனும் ... மிகுத்த வேகத்தை உடையவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
முருகப் பெருமான் சுற்றி வந்த வேகத்தைக் கண்டு கணபதியும் பிளிறினார் என்று வதைபழக எனத் தொடங்கும் பொதுப்பாடல்கள் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.
மயில் சுத்த மாயை. ஆதலால் அது ஒரு நொடிப் பொழுதில் உலகமெலாம் சுற்றி வர முடிந்தது.
ஆணவஅ ழுக்கடையும் ஆவியை விளக்கியநு பூதியடை வித்ததொரு பார்வைக் காரனும் ...... 4
......... பதவுரை .........
ஆணவ அழுக்கடையும் ... ஆணவ இருளில் மூடி இருக்கும்,
ஆவியை விளக்கி ... என்னுடைய ஆன்மாவை ஞான ஒளி பெறச் செய்து (ஒரு பாத்திரத்தில் சேர்ந்துள்ள அழுக்கை விளக்குவது போல்)
அநுபூதி அடைவித்த ... ஞான அநுபவத்தை எனக்கு புகட்டிய,
ஒரு பார்வைக் காரனும் ... ஒப்பற்ற அருள் நோக்கை உடையவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
பலவித தீட்சைகளில் நயன தீட்சை மிகவும் ஒப்பற்றதாகும். அருணகிரியார் தனக்கு குமரப் பெருமான் இந்த தீட்சை அளித்ததை பல பாக்களில் கூறியுள்ளார்.
1. தழைந்த சிவசுடர் தனையென மனதினில் அழுந்த வுரைசெய வருமுக நகையொளி தழைத்த நயனமு மிருமலர் சரணமு மறவேனே
... குரம்பை மலசலம் பழநித் திருப்புகழ்.
2. பரகதி பெற்றிட நோக்கிய பார்வையு மறவேனே
... சதுரத்தரை - திருவேட்களம் திருப்புகழ்.
3. விழி அருள் தந்த பேரருள் கனவிலும் நனவிலும் மறவேனே
... கொங்கு லாவிய - சீகாழித் திருப்புகழ்.
ஆடலைவு பட்டமரர் நாடதுபி ழைக்கஅம ராவதிபு ரக்குமடல் ஆண்மைக் காரனும் ...... 5
......... பதவுரை .........
ஆடலைவு பட்ட ... தடுமாற்றமும் அலைச்சலும் அடைந்த,
அமரர் நாடது பிழைக்க ... தேவ லோகம் மீண்டும் புத்துயிர் பெறும்படி
அமராவதி புரக்கும் ... அமராவதி நகரைக் காத்தருளிய,
அடல் ஆண்மைக் காரனும் ... வலிமையும் ஆண்மையும் உடையவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
சூரபத்மாவினால் தேவலோகம் தீக்கிரையாகப்பட்ட போது பிரம்மா, விஷ்ணு ருத்திரன் எனும் மும்மூர்த்திகளாலும் அமராவதியைக் காக்க முடியவில்லை. அந்த அண்டர்பதியில் தேவர்களை குடி ஏறச் செய்தவன் எனது முருகன் தான் என்று அளவற்ற பெருமையுடன் அவனை 'ஆண்மைக்காரன்' என்கிறார்.
ஆடகவி சித்ரகன கோபுரமு கப்பில்அரு ணாபுரியில் நிற்கும்அடை யாளக் காரனும் ...... 6
......... பதவுரை .........
ஆடக ... பொன்னால் செய்யப்பட்டதும்,
விசித்ர ... அற்புதமான அழகுடையதும்,
கன ... பெருமை மிக்கதுமான,
கோபுர முகப்பில் ... கோபுர வாயிலில்
அருணாபுரியில் ... திருவண்ணாமலையில் விளங்கும்
அடையாளக் காரனும் ... என்னுடைய பிரத்யட்ச மூர்த்தியும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
தான் உலக வாழ்க்கையில் சலிப்புற்று அன்று வல்லாள மகாராஜனின் கோபுரத்திலிருந்து வீழ்ந்த போது தன்னைக் காத்து தனக்கு உபதேசம் செய்தருளிய மூர்த்தி இவன் தான் என்று அடையாளம் காட்டுகிறார் அருணகிரியார். கந்தர் அலங்காரத்தில்,
அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வடவரு கிற்சென்று கண்டு கொண்டேன்
.. என்பார்.
ஆயிரமு கத்துநதி பாலனும கத்தடிமை யானவர் தொடுத்தகவி மாலைக் காரனும் ...... 7
......... பதவுரை .........
ஆயிர முகத்து நதி பாலனும் ... ஆயிரம் பிரிவுகளை உடைய கங்கா நதியின் பாலகனும்,
அகத்தடிமையானவர் ... உள்ளத்துள்ளே மெய்யன்பு பூண்ட அடியார்கள்,
தொடுத்த கவி மாலைக்காரனும் ... இயற்றிய சொல் மாலைகளை அன்புடன் புனைந்திருப்பவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
கங்கா நதியின் சரவணப்பொய்கையில் அவதரித்தவன் முருகன். ஆகையினால் அவனுக்கு காங்கேயன் எனும் நாமம் ஏற்பட்டது. ஒருநாள் வாழ்ந்து வாடிப் போகும் மலர் மாலைகளை விட முருகப் பெருமானுக்கு உகந்தது சொல் மாலைகளே என்பதை பல பாக்களில் கூறியுள்ளார் அருணகிரியார்.
கந்தர் அநுபூதியை 'மாத்ருகா புஷ்ப மாலை' என்பார்.
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே
.. என்பார்.
ஆறுமுக வித்தகனும் ஆறிருபு யத்தரசும் ஆதிமுடி வற்றதிரு நாமக் காரனும் ...... 8
......... பதவுரை .........
ஆறுமுக வித்தகனும் ... ஆறுமுகம் படைத்த ஞான சொரூபனும்,
ஆறிருபு யத்தரசும் ... பன்னிரு திருத்தோள்களை உடைய மன்னனும்,
ஆதிமுடி வற்றதிரு நாமக் காரனும் ... அந்தமும் ஆதியும் இல்லாத பெரும் புகழை உடையவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
ஒரு பொருளுக்கு ஆரம்பம் இருந்தால் முடிவும் கட்டாயம் இருக்கும். 'பெம்மான் முருகன் பிறவான் இறவான்' ஆதலால் அவனுக்கு ஆதியும் அந்தமும் கிடையாது. அவனுடைய மகிமைக்கும் ஆதியும் அந்தமும் கிடையாது.
யானெனதெ னச்சருவும் ஈனசம யத்தெவரும் யாரும்உணர் தற்கரிய நேர்மைக் காரனும் ...... 9
......... பதவுரை .........
யான் எனது எனச்சருவும் ... நான், என்னுடையது எனும் அகங்காரம் மமகாரத்துடன் மற்றவர்களுடன் சண்டை போடும்,
ஈனசம யத்தெவரும் ... இழிவான புறச் சமயத்தைச் சேர்ந்தவர்கள் எவராலும்
யாரும்உணர் தற்கரிய ... எந்த வகையிலும் அறிய முடியாத
நேர்மைக் காரனும் ... நுணுக்கமான சத்தியப் பொருளாய் இருப்பவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
அகங்காரமும் மமகாரமும் ஒழிந்தால் தான் சத்தியப் பொருளைக் காணலாம்.
யான் தான் எனும் சொல் இரண்டும் கெட்டாலன்றி யாவருக்கும் தோன்றாது சத்தியம்
.. என்பார் கந்தர் அலங்காரத்தில்.
எனதாம் தனதாம் அவை போயற மலமாங்கடு மோகவி காரமு இவை நீங்கிட
.. என்பார் வரிசேர்ந்திடு எனத் தொடங்கும் திருவேங்கடத் திருப்புகழில்.
யாதுநிலை யற்றலையும் ஏழுபிற விக்கடலை யேறவிடு நற்கருணை யோடக் காரனும் ...... 10
......... பதவுரை .........
யாது நிலை அற்று அலையும் ... எப்போதும் ஒரு நிலையில் இல்லாது சதா வீசி வீசி அடங்கும்,
ஏழு பிறவிக் கடலை ... ஊர்வன, நடப்பன, நீரில் வாழ்வன, பறப்பன, மனிதர், தேவர், பேய்க் கணங்கள் எனும் பிறப்புக்களைக் கொண்டுவரும் பவ சாகரத்தை,
ஏறவிடு நற்கருணை யோடக் காரனும் ... தப்ப வைத்து கரை ஏறச் செய்யும் நன்மை தரும் தன் பாதங்களான புணையைக் கருணையுடன் கொடுக்கும் ஓடக்காரனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
முருகன் நம்மை முத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்லும் படகோட்டி என்பதை அனித்தமான எனத் தொடங்கும் திருவானைக்கா திருப்புகழிலும்,
சுவர்க்க லோக மீகாம
... என்பார். (மீகாம = மாலுமி = pilot).
ஏரகம் இடைக்கழிசி ராமலைதி ருப்பழநி யேரணிசெ ருத்தணியில் வாசக் காரனும் ...... 11
......... பதவுரை .........
ஏரகம் ... சுவாமி மலை
இடைக்கழி ... திருவிடைக்கழி
சிராமலை ... திருச்சிராமலை எனும் திருச்சிராப் பள்ளி அல்லது சென்னி மலை
திருப்பழநி ... பழநி மலை
யேரணிசெருத்தணியில் வாசக் காரனும் ... திருத்தணி போன்ற திருப்பதிகளில் வாசம் செய்பவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
-
ஏழையின் இரட்டைவினை யாயதொரு டற்சிறையி ராமல்விடு வித்தருள்நி யாயக்காரனும் ...... 12
......... பதவுரை .........
ஏழையின் இரட்டைவினை யாயது ... இந்த அடிமை முற்பிறவியில் செய்த நல்வினை தீவினையால் ஏற்பட்ட,
ஒர் உடற்சிறையி இராமல் விடு வித்தருள் நியாயக்காரனும் ... இந்த சரீரமாகிய சிறைச் சாலை நீங்கும்படி எனக்கு விடுதலை கொடுத்த நீதிமானும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
இந்த வரிகளில் அருணகிரியாரின் வாழ்க்கைக் குறிப்பு அடங்கி உள்ளது.
பேய்கள் சூழ சுடு காட்டில் எரிதனில் இடும் வாழ்வை உன் அடியேனாகிய நான் பெறுவது நீதியா ? .. என முறையிடுகிறார் ஓசை முனி. முருகப் பெருமான் குருவாய் வந்து ஞான உபதேசம் செய்ததால் ஸ்தூல சரீரம் நீங்கி கிளி ரூபம் பெற்றார். இதை அநுபூதியில்,
கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை மெய்ப் பொருள் பேசியவா
.. என குறிப்பிடுகிறார். தனக்கு கிளி ரூபம் தந்து தனக்கு நியாயத்தை வழங்கிய நீதிமானே என குமரப் பெருமானை புகழ்கிறார் அருணை முனிவர்.
யாமளைம ணக்குமுக சாமளைம ணிக்குயிலை யாயெனஅ ழைத்துருகு நேயக் காரனும் ...... 13
......... பதவுரை .........
யாமளை ... கரு நீல உருவினள்,
மணக்கு முக சாமளை ... தெய்வீக மணம் வீசும் நீல நிறத்தவள்
மணிக்குயிலை ... (ஆகிய) அழகான குயில் போன்ற பார்வதி தேவியை
ஆய் யெனஅ ழைத்துருகு நேயக் காரனும் ... எனது அன்னையே என அன்புடன் உருகி அழைக்கும் நேசம் உடையவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
-
ஏதமற நிச்சயம னோலயவி ளக்கொளியும் யாகமுநி வர்க்குரிய காவற் காரனும் ...... 14
......... பதவுரை .........
ஏதமற ... குற்றம் அனைத்தும் நீங்க,
நிச்சய ... சந்தேகம் இல்லாமல் உறுதி பெறும்படி,
மனோலயவி ளக்கொளியும் ... மனம் ஒடுங்கும் நிலையைத் தருகின்ற ஞான ஒளி வீசும் விளக்கு போன்றவனும்,
யாக முநிவர்க்குரிய காவற் காரனும் ... வேள்விகளைச் செய்யும் யாக முனிவர்களைக் பாதுகாக்கும் யாக ரக்ஷ்ச மூர்த்தியும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
எது மெய்ப் பொருள் என விளங்காமல் தடுமாறுதல், நிர்விகல்ப சமாதி எனப்படும். சமாதி மனோலயத்தில் அனைத்தும் தெளிவடையும். இந் நிலையைக் கொடுப்பவன் குமரக் கடவுளே. வேத யாகங்களை செய்வதற்கு ஏற்படும் இடையூறுகளை நீக்குபவன் முருகன் என்பதை
அந்தண் மறை வேள்வி காவற்கார
.. என்பார் முந்து தமிழ் எனத் தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழில்.
ஈரிரும ருப்புடைய சோனைமத வெற்பிவரும் யானையள விற்றுவளும் ஆசைக் காரனும் ...... 15
......... பதவுரை .........
ஈரிரும ருப்புடைய ... நான்கு தந்தங்களை உடைய
சோனைமத ... பெரு மழை போல் பெருகி வரும் மதநீர் கொட்டுகின்ற,
வெற்பில் வரும் ... மலை போன்ற ஐராவதத்தில் பவனி வரும்
யானை அளவி ... தேவயானையுடன்,
துவளும் ஆசைக் காரனும் ... நெகிழ்ச்சி உற்று சேருகின்ற அன்பைச் செலுத்துகின்றவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
-
ஏடவிழ்க டப்பமலர் கூதளமு டிக்கும்இளை யோனும்அறி விற்பெரிய மேன்மைக் காரனும் ...... 16
......... பதவுரை .........
ஏடு அவிழ் கடப்ப மலர் கூதளம் முடிக்கும் இளையோனும் ... இதழ்கள் விரிந்த கடப்ப மாலைகளையும், கூதாள மலர் மாலைகளையும் தரித்திருக்கும் குமாரனும்
அறிவில் பெரிய மேன்மைக் காரனும் ... சிறந்த ஞான அறிவாளியாக விளங்குபவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
வயதில் முருகன் எப்போதும் இளையவன். அவனே ஞான பண்டித நாதன். ஞானாச்சாரியனும் அவனே.
வானவர்பொ ருட்டுமக வானதுபொ ருட்டுமலர் வாவியில்உ தித்தமுக மாயக் காரனும் ...... 17
......... பதவுரை .........
வானவர் பொருட்டு ... தேவர்களின் பொருட்டும்,
மகவானது பொருட்டு ... இந்திரனுக்காகவும்
மலர் வாவியில்உ தித்த ... சரவணப் பொய்கையில் அவதாரம் செய்த
முக மாயக் காரனும் ... அற்புதமான அழகு படைத்தவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
பல யுகங்களாக சூரபத்மனின் கொடுங்கோலால் அவதிப்பட்ட தேவர்களையும் இந்திரனையும் காப்பாற்றுவதற்காக ஐந்து முகச் சிவ பெருமான் ஆறு முகத்தோடு சரவணப் பொய்கையில் தோன்றினார். இந்த அற்புதத் தோற்றத்தை கைத்தருண ஜோதி எனத் தொடங்கும் சிதம்பரத் திருப்புகழில்,
சித்ரமுக மாறு முத்துமணி மார்பு திக்கினினி லாதப் ...... பெருமாள் காண்
.. என்பார். வள்ளிப் பிராட்டிக்கும் இந்த அற்புத அழகு உண்டு என ஜெக மாயை எனத் தொடங்கும் சுவாமிமலைத் திருப்புகழில்,
முக மாயமிட்ட குறமாது
.. என்பார்.
வாரணப திக்குதவு நாரணனு வக்குமரு மானும்அய னைக்கறுவு கோபக் காரனும் ...... 18
......... பதவுரை .........
வாரணபதிக்கு உதவு ... ஐராவதத்தின் தலைவனாகிய தேவேந்திரனுக்கு பற்பல உதவிகளைச் செய்த,
நாரணன் உவக்கு மருமானும் ... நாராயண மூர்த்தி மகிழ்ச்சி அடையும் மருமகனும்
அயனைக்கறுவு கோபக் காரனும் ... பிரணவப் பொருள் தெரியாத குற்றத்திற்காக பிரம்மனை கோபித்த கோபக்காரனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
பல சமயங்களில் இந்திரனுக்கு இன்னல்கள் ஏற்பட்ட போது திருமால் அவனுக்கு உதவிகள் புரிந்துள்ளார். விருத்தாசுரனை வெல்ல முடியாமல் இந்திரன் தவித்த போது ததீகி முனிவரின் முதுகெலும்பை வஜ்ராயுதமாக்கி ஏவச் சொன்னவர் திருமாலே. இந்திரனுக்காக நரகாசுரனையும் முரனையும் கொன்றவரும் திருமாலே. ஒரு சமயம் அசுரர்களின் கொடுமை தாங்காமல் உதவி கேட்ட போது, இந்திரனுக்கு தன் மார்பகத்தில் பூஜித்து வந்த ஈஸ்வரன், தேவி, முருகவேள் .. மூவரும் கூடிய மூர்த்தத்தை கொடுத்து உதவினார். இதனால் இந்திரன் வெற்றி பெற்றான். இம் மூர்த்தமே பிற்காலத்தில் திருவாரூரில் தியாகேசராக விளங்குகிறார் (வீதி விடங்கர்).
வாரணபதி என்னும் சொல்லுக்கு வேறு ஒரு பொருளும் காணலாம். யானைகளுக்கு தலைவனான கஜேந்திரனுக்கு உதவிய நிகழ்ச்சியையும் கூறலாம்.
வாழியென நித்தமற வாதுபர விற்சரண வாரிசம்அ ளிக்கும்உப காரக் காரனும் ...... 19
......... பதவுரை .........
வாழியென நித்த மறவாது பரவிற் ... தேவரீர் வாழ்ந்து வாழி வாழி என தினமும் மறவாமல் வாழ்த்து கூறி பாடினால்
சரண வாரிசம் அளிக்கும்உப காரக் காரனும் ... தன் திருவடித் தாமரைகளை தன் அடியார்களுக்கு அடைக்கலமாக கொடுக்கும் கொடையாளியும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
-
மாடமதில் சுற்றியத்ரி கூடகிரி யிற்கதிர்செய் மாநகரி யிற்கடவுள் ஆயக் காரனும் ...... 20
......... பதவுரை .........
மாடமதில் சுற்றிய த்ரிகூடகிரி யில் ... மாட மாளிகைகளும் மதில்களும் மிக்க திருக்குற்றால நன்னகரிலும்
கதிர்செய் மாநகரியில் கடவுள் ஆயக் காரனும் ... கதிர்காமம் எனும் பெரிய நகரத்திலும் தேவர்கள் சூழ விளங்கி வீற்றிருப்பவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
'ஆயம்' என்றால் பழந்தமிழில் 'சுங்க வரி' எனப் பொருள்படும். தன்னை நோக்கி வரும் அடியவர்களின் அரும் பகைகளையும் மும்மலங்களையும் சுங்கவரியாக வசூலித்து அவர்களை சிவலோகத்திற்கு கொண்டு விடுபவர் இந்த ஆயக்காரர்.
இக்கருத்தை கந்தர் அந்தாதியில்,
திறவு ஆ அனகபுரி வாசல் நீக்க
.. எனப் பாடுவார்.
வாளெயிற துற்றபகு வாய்தொறுநெ ருப்புமிழும் வாசுகியெ டுத்துதறும் வாசிக் காரனும் ...... 21
......... பதவுரை .........
வாள் எயிறு அது உற்ற ... வாள் போல் பிரகாசித்து கூர்மை கொண்ட பற்களை உடைய
பகு வாய்தொறு நெருப்புமிழும் ... திறந்துள்ள வாய்களில் நெருப்பு ஜ்வாலையை கக்கும்,
வாசுகி எடுத்து உதறும் வாசிக் காரனும் ... வாசுகி எனும் சர்ப்பராஜனை தனது மூக்கால் பிடித்து உதறுகின்ற வாசிக் குதிரையான மயிலை வாகனமாக உடையவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
-
வாளகிரி யைத்தனது தாளிலிடி யப்பொருது வாகைபுனை குக்குடப தாகைக் காரனும் ...... 22
......... பதவுரை .........
வாளகிரியைத் தனது தாளில் இடியப் பொருது ... சக்ர வாள கிரியை தனது கால்களினால் மோதித் தள்ளி,
வாகைபுனை குக்குட பதாகைக் காரனும் ... வெற்றி மாலை சூடும் சேவலை தனக்கு கொடியாக உடையவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
-
மாசிலுயி ருக்குயிரு மாசிலுணர் வுக்குணர்வும் வானிலணு வுக்கணுவு பாயக் காரனும் ...... 23
......... பதவுரை .........
மாசு இல் உயிருக்கு உயிரும் ... குற்றமற்ற ஜீவாத்மாக்களுக்குள் உயிர்ப்பு சக்தியாக இருப்பவரும்,
மாசு இல் உணர்வுக்கு உணர்வும் ... கெடுதல் அற்ற உள்ளத்துள் உள் ஒளியாக இருப்பவரும்
வானில் அணுவுக்கு அணு உபாயக் காரனும் ... ஆகாயத்தில் காணப்படும் அணுக்களுக்குள் சிறிய அணுவாய் இருக்கும் பெரிய தந்திரக்காரனும் (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
முருகன் அணுவுக்குள் அணுவாய் இருப்பதை வேதத்தில் .. 'அணோர் அணியான்' எனும் வாக்கால் உணரலாம்.
வாதனைத விர்த்தகுரு நாதனும்வெ ளிப்படம காடவியில் நிற்பதொர்ச காயக் காரனும் ...... 24
......... பதவுரை .........
வாதனை தவிர்த்த குரு நாதனும் ... எனது பிறவி வேதனையை தீர்த்து உலக வாசனையே இல்லாதபடி செய்த ஆச்சார்ய மூர்த்தியும்
வெளிப்பட மகா அடவியில் நிற்பதொர் சகாயக் காரனும் ... பெரிய காட்டில் தோன்றி எனக்கு பெரிய உதவியைச் செய்தவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
அருணகிரியார் தனக்கு பிறவிப் பிணி ஒழிந்து போனது என்கிற செய்தியை பல இடங்களில் விளம்பியுள்ளார்.
விட்டது பாச வினை விலங்கே
.. என்பார் கந்தர் அலங்காரத்தில். அவர் கதிர்காமத்திற்கு செல்லும் போது காட்டில் நடுநிசியில் வழி தெரியாமல் தவித்த போது முருகன் வழிகாட்டியாக வந்து உதவினார் என்பது அருட்கவி சாதுராம் சுவாமிகள் அருளிய அருட்புகழ் மூலம் தெரிய வருகிறது.
மீனவனு மிக்கபுல வோருமுறை பொற்பலகை மீதமர்த மிழ்த்ரயவி நோதக் காரனும் ...... 25
......... பதவுரை .........
மீனவனு ... மீனைக் கொடியாக கொண்ட பாண்டிய வம்சத்தில் உக்ர பாண்டியனாக உதித்தவனும்
மிக்க புலவோரும் உறை பொற்பலகை ... அறிவில் மிக்க சங்கப் புலவர்கள் வீற்றிருக்கும் அழகிய சங்கப் பலகையின்
மீதமர் தமிழ் த்ரய விநோதக் காரனும் ... மீது அமாந்திருக்கும் முத்தமிழில் வல்லமை ஒப்பில்லாத திறமை உடைய விசித்திரமானவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
முருகப் பெருமான் ருத்ர ஜன்மனாக வந்து சங்கத்தாரின் கலகம் தீர்த்த திருவிளையாடல் குறிப்பு இங்கு வருகிறது. இது பற்றி,
சடிலத் தவனிட் டவிசிட் டகுலத் தொரு செட் டியிடத் தினுதித் தருள்வித் தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் ...... பரிவாலே
சநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசநற் குமரர்க் குமநுக் க்ரக மெய்ப் பலகைச் சதுபத் துநவப் புலவர்க் கும்பத் ...... தியில்ஞான
படலத் துறுலக் கணலக் யதமிழ்த் த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப் பழுதற் றுணர்வதே தருள்வித் தகசற் ...... குருநாதா
... என்பார் கடலைசப சிறை எனத் தொடங்கும் பழநித் திருப்புகழில்.
வேரிமது மத்தமதி தாதகிக டுக்கைபுனை வேணியர்து திப்பதொரு கேள்விக் காரனும் ...... 26
......... பதவுரை .........
வேரி ... நறு மணம் வீசும்,
மது ... தேன் நிரம்பி இருக்கும்,
மத்த ... ஊமத்தம் பூ,
மதி ... சந்திரன்,
தாதகி ... (தா + தகி) குற்றங்களைத் தகிப்பதால் தாதகி எனப் பெயருடைய அகத்தி,
கடுக்கை ... கொன்றை (இவைகளை)
புனை வேணியர் ... தரித்துள்ள சடையை உடைய சிவபெருமான்
துதிப்பதொரு கேள்விக் காரனும் ... வணங்குகின்ற கல்வி சிரேஷ்டனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
-
வேலைதுகள் பட்டுமலை சூரனுடல் பட்டுருவ வேலையுற விட்டதனி வேலைக் காரனும் ...... 27
......... பதவுரை .........
வேலை துகள் பட்டு ... சமுத்திரம் தூள் படவும்,
மலை சூரன் உடல் பட்டு உருவ ... தனக்கு காவலாக இருந்த ஏழு மலைகளுடன் சூரன் உடல், கிரவுஞ்ச மலை இவைகளை பொடிந்து போகும்படி ஊடுருவி
வேலை உற விட்ட தனி வேலைக் காரனும் ... சமுத்திரத்தின் உள்ளே வேலைாயுதத்தை செலுத்திய ஒப்பற்ற தொழில் செய்பவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
-
மீனுலவு கிர்த்திகைகு மாரனுநி னைக்குமவர் வீடுபெற வைத்தருள்உ தாரக் காரனும் ...... 28
......... பதவுரை .........
மீனுலவு கிர்த்திகைகு மாரனு ... நக்ஷசத்திர ரூபத்தில் விளங்கும் கிருத்திகை மாதர்களின் வளர்ப்பு புதல்வனும்,
நினைக்குமவர் ... தன்னை தியானிப்பவர்கள்,
வீடு பெற வைத்து அருள் உதாரக் காரனும் ... மோட்சத்தை அடையும்படி செய்து அருள் புரியும் கருணா மூர்த்தியும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
'முத்தி விதரணவு தாரக் கார'
... என்பார் விட்ட புழுகு எனத் தொடங்கும் (பொதுப்பாடல்கள்) திருப்புகழில்.
மேனையரி வைக்குரிய பேரனும தித்ததிறல் வீரனும்அ ரக்கர்குல சூறைக் காரனும் ...... 29
......... பதவுரை .........
மேனையரி வைக்குரிய பேரனு ... இமராஜனின் மனைவி, மேனை, எனும் மாதின் பேரனாக வந்தவனும்,
மதித்ததிறல் வீரனும் ... அனைவராலும் போற்றப்படும் வலிமை மிக்க வீரனும்
அரக்கர்குல சூறைக் காரனும் ... இராக்கத குலத்தினரை சூராவளிக் காற்று போல் அழித்தவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
-
வேதியர்வெ றுக்கையும்அ நாதிபர வஸ்துவும்வி சாகனும்வி கற்பவெகு ரூபக் காரனும் ...... 30
......... பதவுரை .........
வேதியர்வெ றுக்கையும் ... அந்தணர்களின் பெரும் செல்வமும்,
அநாதிபர வஸ்துவும் ... அநாதியான பரம் பொருளும்,
விசாகனும் ... விசாக நக்ஷத்திரத்திற்கு உரியவனும்,
விகற்ப வெகு ரூபக் காரனும் ... பலவித உருவங்களை எடுத்தவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
திருமுருகாற்றுப்படையில் 'அந்தணர் வெறுக்கை' என்பதை இங்கு 'வேதியர் வெறுக்கை' என்கிறார். வள்ளி புனத்தில் வள்ளிப் பிராட்டியாருக்காக, அரச குமாரனாக, வேடனாக, விருத்தனாக பல வேடங்கள் பூண்டதை 'ரூப வெகு விகற்ப' என்கிறார். பார நறு எனத் தொடங்கும் (பொதுப்பாடல்கள்) திருப்புகழில்,
நாரத னன்றுச காய மொழிந்திட நாயகி பைம்புன மது தேடி நாண மழிந்துரு மாறிய வஞ்சக
.. என்பார்.
வேடுவர்பு னத்திலுரு மாறிமுனி சொற்படிவி யாகுலம னத்தினொடு போம்விற் காரனும் ...... 31
......... பதவுரை .........
வேடுவர் புனத்தில் உரு மாறி ... வேடுவரின் மலைக் காட்டில் தனது உருவத்தை மறைத்து வேறு உருவம் தரித்து
முனி சொற்படி ... நாரத முனிவர் சொன்னபடி
வியாகுல மனத்தினொடு போம்விற் காரனும் ... தான் முன்பு கொடுத்த வரத்தின்படி வந்து வேடர்களிடம் வளர்ந்த வள்ளியம்மையை ஆட்கொள்ளுவதற்காக கவலை பொருந்திய மனத்துடன் ஞானமாகிய வில்லைத் தரித்துக் கொண்டு வருபவனும் .. (குறத்தி திருவேளைக்காரனே).
......... விளக்கவுரை .........
-
மேவியபு னத்திதணில் ஓவியமெ னத்திகழு மேதகு குறத்திதிரு வேளைக் காரனே. ...... 32
......... பதவுரை .........
மேவிய புனத்து ... மலைச் சாரத்தில் உள்ள தினைப் புனத்தில்,
இதணில் ... பரண் மேலே,
ஓவியம் எனத்திகழும் ... வரையப்பட்ட சித்திரம் போல அழகாக விளக்கும்,
மேதகு குறத்தி ... மேன்மையான வள்ளிபிராட்டியுடன்,
திரு வேளைக் காரனே ... பல வித திரு விளையாடல்கள் செய்து அவளுடன் பொழுதைப் போக்கியவன்தான் இதுகாறும் சொன்னபெருமை மிக்கவன்.
......... விளக்கவுரை .........
வேடர் செழுந்தினை எனத் தொடங்கும் (பொதுப்பாடல்கள்) திருப்புகழில் (1000),
மேனித ளர்ந்துரு காப்பரி தாபமு டன்புன மேற்றிரு வேளைபு குந்தப் ராக்ரம ...... மதுபாடி நாடறி யும்படி கூப்பிடு நாவலர்
.. என்று கூறிய அருணகிரி நாதர், இந்த வேளைக்காரன் வகுப்பு பாடி அந்த பணியை தானே நிறை வேற்றிக் கொடுத்தார். 'ஓவியமெனத் திகழும்' என்கிற வார்த்தைகள் 'ஓவியத்தில் அந்தம்' என்கிற அடிகளை நினைவு படுத்துகின்றன. சுற்றம், சூழ்நிலைகளை மறந்து ஏகச் சித்த தியானத்துடன் சித்திரம் போல் திகழ்ந்த வள்ளிப் பிராட்டியின் பக்குவ காலத்தை அறிந்து ஆட்கொண்டதை இங்கு அழகாக சித்தரிக்கிறார். பக்குவம் வரும் போது ஜீவாத்மாக்களை முருகப் பெருமான் தானே வலிய வந்து ஆட்கொள்ளுவான் என்பதை 'சேரிக்குவடு' எனத் தொடங்கும் கந்தர் அந்தாதியிலும் கூறுவார். |