வேல் வகுப்பு ஒளஷதம் போன்றது. ஒரு மருந்து நோய்களை தீர்ப்பது போல இந்த வகுப்பு புற நோயை நீக்கும். பிறவிப் பிணியை போக்கும். வேல் ஞானம் ஆதலால் அதைப் படிப்பவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து பேரின்ப வாழ்வைக் கொடுக்கும். முருகன் வேறு வேல் வேறு அல்ல. கந்தக் கடவுள் பவரோக வைத்தியநாதப் பெருமாள் ஆகையினால் வேலாயுதமும் பிறவியை அழிக்கும் பெரிய மருந்து என்பார் தணிகைமணி அவர்கள். மேலும் இவ்வகுப்பு 'ப' - வில் ஆரம்பித்து 'லே' - வில் முடிவதினால், இதை 'பலே' வகுப்பு என்பார் அவர்.
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும் ...... 1
பனைக்கமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும் ...... 2
பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும் ...... 3
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும் ...... 4
சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும் இடுக்கண்வினை சாடும் ...... 5
சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும் ...... 6
துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கோர்துணை யாகும் ...... 7
சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு மறத்தைநிலை காணும் ...... 8
தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிக ராகும் ...... 9
தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும் ...... 10
தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு பகற்றுணைய தாகும் ...... 11
சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில் விருப்பமொடு சூடும் ...... 12
திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர நிறைத்துவிளை யாடும் ...... 13
திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும் ...... 14
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும் ...... 15
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ...... 16
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும் ...... 1
......... பதவுரை ......... 
பருத்த முலை ... பெருத்திருக்கும் தன பாரங்களையும்,
சிறுத்த இடை ... நுண்ணியதாக ஒடுங்கி இருக்கும் இடையையும்,
வெளுத்த நகை ... வெண்மை நிறம் வீசும் பற்களையும்,
கருத்த குழல் ... கருமை நிறம் கொண்ட கூந்தலையும்,
சிவத்த இதழ் ... சிவந்த உதடுகளையும் உடைய,
மறச் சிறுமி ... வீரம் மிக்க வேடர் குலத் திலகமாகிய வள்ளிப் பிராட்டியின்,
விழிக்கு நிகராகும் ... திருக் கண்களுக்கு ஒப்பாகும் (குகன் வேலே).
......... விளக்கவுரை .........
(குழந்தையின் நோயை முலைப்பால் மூலமாக தாய்மார்கள் குணப்படுத்துவார்கள். உயிர்க் கூட்டங்களின் மலப் பிணியை போக்கும் மருந்தாகிய பாலமுதம் நிரம்பிய தன பாரங்களை உடையவர் வள்ளிப் பிராட்டியார். உயிர்களுக்கெல்லாம் அமுதம் ஊட்ட வேண்டியதிருப்பதால், அவருடைய தன பாரங்களை 'பருத்த முலை' என்றார். (பாட்டு உள்ளத்துரு) விமலனின் திருவடி பெருமையை புகழ்வாரின் வினை தேய, உயிர்கள் உணர்ந்து உய்ய இடையை 'சிறுத்த இடை' என்கிறார். பிறவித் தளையை வேரறுக்கும் மாசற்ற வெண்மை ஒளி வீசும் தகுதியினால் அவரின் பற்களை 'வெளுத்த நகை' என்கிறார். தேவயானைக்கும் இதே தூய நகை உண்டு என்பதை,
முத்தை தரு பத்தித் திரு நகை
... என முதல் திருப்புகழில் ( முத்தை தரு ) குறிப்பிடுகிறார். இறைவனைப் புகழாதார் உள்ளம் எப்படி இருக்கும் எனக் காட்டுகிறது தேவியாரின் 'கருத்த குழல்'. குமரனின் ஞான சொற்களைப் பேசும் செழுமை மிக்க உதடுகளை 'சிவத்த இதழ்' என்கிறார்.
வள்ளி நாச்சியாருக்கு 'பஞ்ச கிருதியங்கள்' என்று கூறப்படும் ஐந்து தொழில்களும் உண்டு என்பதை இவ்வடிகள் ரகசியமாக வெளிப்படுத்துகின்றன.
1. பக்குவமடைந்த நிலையை காண்பிக்கும் பருத்த முலையினால் தோற்றமும், 2. கனமான தனபாரங்களை தாங்கும் இடை திதியையும் (காத்தல்), 3. அஞ்ஞானத்தை சுட்டெரித்து வெண்பூதியாக்கும் வெளுத்த நகை சம்ஹாரத்தையும், 4. கருத்து இருண்டிருக்கும் கூந்தல் திரோபாவத்தையும் (மறைத்தல்), 5. ஞானத்தை அருளும் சிவத்த இதழ் அனுக்ரகத்தையும் காட்டுகின்றன.
வேலுக்கும் இவ்வைந்து தொழில்களும் உண்டு என்பதே இந்த ரகசியம். திருச்செந்தூரில் நாழிக்கிணறையும் வயலூரில் கண்ணாடி தடாகத்தையும் தோற்றுவித்ததால் தோற்றமும், கிரவுஞ்ச கிரியில் அகப்பட்ட வீரபாகு முதலிய வீரர்களையும் திருப்பரங்குன்றம் குகையில் பூதத்தால் அடைக்கப் பட்ட நக்கீரர் முதலியவர்களை காப்பாற்றியது காத்தலையும், சூரன் முதலிய அசுரர்களை அழித்தது சம்ஹாரத்தையும், பிரமனை சிறையில் அடைத்தது மறைத்தலையும், அருணகிரியாரின் நாவில் ஆறெழுத்து மந்திரத்தை பொறித்தது அனுக்கிரகத்தையும் காட்டுகிறது. ஆகையினால் வள்ளியின் தொழில்கள் ஐந்தும் வேலாயுதத்திற்கும உண்டு என தெரிய வருகிறது).
(ஞானசம்பந்தர் மதுரையில் சமணரோடு வாது செய்யும் போது அனல் வாதத்திற்காக தான் இயற்றிய தேவார ஏடுகளில் கயிறு சாத்தி பார்க்கும்போது திருநாள்ளாற்றுப் பதிகமாகிய 'போகமார்த்த' எனத் தொடங்கும் பதிகம் கிடைத்தது. அம்பிகையின் கருணை ரூபமாகிய பருமையான தன பாரங்களை குறிப்பிடுவதால் அந்த ஏடு அனலில் வேகாது அமணரை வென்றது. அதனால் அப்பதிகம் 'பச்சைப் பதிகம்' என பெயர் பெற்றது. மறுபடி ஒருமுறை சம்பந்தர் திருநள்ளாறு வந்த சமயம் 'தளிர் இள' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடுகிறார். அதில்
நள்ளான் நாமமே எரி இட பழுதிலை மேன்மையே
... என்கிறார். அதாவது சிவபெருமானின் புகழைப் பாடும் இந்தப் பதிகம் நெருப்பில் இட்டாலும் வேகாது என்பதே இதன் கருத்து. ஆதலால் வெப்பு நோய் வராமல் தடுக்க சைவப் பெருமக்கள் இப்பதிகத்தை ஓதி பயன் பெறுகிறார்கள். வேல் வகுப்பிலும் இச்சாசக்தியாகிய வள்ளி நாச்சியாரின் கருணை தன பாரங்களைக் குறித்து ஆரம்பிப்பதால் இப்பதிகத்திற்கும் அதே பலன் உண்டு எனத் தெரிய வருகிறது).
பனைக்கமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும் ...... 2
......... பதவுரை ......... 
பனைக்கை ... பனை மரம் போன்று நீண்டு தொங்கும் துதிக்கையும்,
முக படம் ... முகத்தில் அணிந்த சித்திர வேலைப்பாடு அணிந்த சீலையும்,
கரட மதம் ... இரண்டு கபால மத நீரையும்,
தவள ... வெண்ணிறத்தையும் உடைய,
கசம் ... (கஜம்) ஐராவதம் என்னும் யானையை,
கடவுள் ... வாகனமாகக் கொண்ட இந்திரன்,
பதத்து இடு ... கால்களில் சூரபத்மனால் இடப்பட்ட,
நிகளத்து ... விலங்கின்,
முளை ... ஆணியானது,
தெரிக்க அரம் ஆகும் ... உடை பட்டு விழ அரம் போல் செயல்படும் (குகன் வேலே).
......... விளக்கவுரை .........
(பால் கடலில் தோன்றியதால் பால் போன்ற வெண்மை கொண்டது ஐராவதம் என்பதால் அதனை 'தவள கசம்' என்கிறார்.இந்திரன் விலங்கிடப் பட்டான் எனகிற போது அவனது பரிவார தேவதைகளும் அதே நிலையில் இருந்தார்கள் என்பது சொல்லாமலே உணரப் பெறும். காலில் விலங்கிடப்பட்ட அவர்களது வருத்தத்தைக் கண்ட வேற்படை முறையே ஆணிகளைக் கழற்றி விலங்கை அவிழ்க்காமல் உக்ரத்தோடு ஒரே மோதலில் தெரித்து தானே விலங்கு கழன்றது என்பதை அழகாக சித்தரித்துள்ளார்.
'பதம்' என்பதற்கு 'இந்திரப் பதவி' எனவும் பொருள் கொள்ளலாம். புண்ணியப் பயனால் இந்திரனுக்குக் கிடைத்த தேவேந்திரப் பதவிக்கும் ஆபத்து வந்தபோது அவனைக் காப்பாற்றியது வேலாயுதமே. தேவர்களுக்கு ஏற்பட்ட சோதனைக்கு மூல காரணம் தக்கன் வேள்வியில் கலந்து கொண்டதுதான். அஞ்ஞானத்தால் ஏற்பட்ட சிவ அபராதத்தை வேற்படை என்னும் ஞான சக்தி நீக்கி விடுதலை அளித்தது என்பதை இங்கு உணர வேண்டும்).
பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும் ...... 3
......... பதவுரை ......... 
பழுத்த ... ஞானம் கனிந்த,
முது ... பழமை வாய்ந்த,
தமிழ்ப் பலகை ... மதுரை தமிழ்ச் சங்க பலகையில்,
இருக்கும் ... தலைவனாக அமர்ந்திருக்கும்,
ஒரு கவிப் புலவன் ... ஒப்பற்ற பாக்கள் இயற்றும் அறிவில் சிறந்த நக்கீரனுடைய
இசைக்குருகி ... பாட்டின் இனிய பொருள் மிக்க ஒலிக்கு திருவுள்ளம் உருகி,
வரைக் குகையை ... திருப்பரங்கிரி மலைக் குகையை,
இடித்து வழி காணும் ... அங்கு 'கற்கிமுகி' எனும் பூதத்தால் அடைக்கப் படடிருந்த நக்கீரர் முதலிய புலவர்கள் அனைவரையும் அக்குகையிலிருந்து வெளி வர வழி செய்து கொடுத்தது (குகன் வேலே).
......... விளக்கவுரை .........
(முருகன் 'வைதாரையும் வாழ வைக்கும் தெய்வம்' ஆதலால் அம் மொழியின் முதிர்ச்சியை வளர்ச்சியை அவர் விரும்புகிறார் எனப் பொருள் படும். அதையே அருணகிரியார் 'பழுத்த தமிழ்' என்கிறார். இம்மொழி புதிதாகத் தோன்றியது அன்று. இறைவன்போல் அதுவும் உள்ளது என்பார். இதனால் தமிழ் மொழியை 'முது தமிழ்' என்கிறார். இவ் வார்த்தையை 'பழுத்த அமுது' என்று பிரித்தால், அமுதம் போன்றது, சிறந்த சீரான தன்மை கொண்டது எனவும் பொருள் கொள்ளலாம். கல்லையும் உருகவைக்கும் திருமுருகாற்றுப்படை, கல் போன்ற மனதையும் உருக்க வல்லது என்பதை,
கீதை இசை கூட்டி வேதமொழி சூட்டு கீரர்
... என வீணை இசை எனத் தொடங்கும் பொதுப்பாடல் திருப்புகழில், கூறுகிறார். மேலும் திருமுருகாற்றுபடையை வேதம் ஓதுவதுபோல் கூறவேண்டும் என்பதுவும் தெரிய வருகிறது.
குமரவேள் ஏவிய வேற்படை வழி காணும் என்பதால் 'முத்திக்கு வழி காணும்' என்றும் பொருள் கொள்ளலாம். மதுரையில் தருமிக்கு பாடி அளித்த 'கொங்கு தேர் வாழ்க்கை' என்கிற பாசுரத்திற்கு தன் கல்விச் செருக்கால் நக்கீரர் குற்றம் கண்டுபிடித்தது மட்டுமல்லாமல் சிவபெருமானையே அவமதித்த காரணத்திற்காக சிறைபட நேர்ந்தது. ஞானாசக்தியாகிய வேற்படை அவருக்கு சிவ ஞானத்தை நல்கி பூதத்திலிருந்து உடலையும் சிவ துரோகமாகிய பாவத்திலிருந்து உயிரையும் காப்பாற்றியது என்பது உணரத்தக்கது).
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும் ...... 4
......... பதவுரை ......... 
அலகை ... பேய்கள்,
பசித்து ... பசி கொண்டு,
முசித்து ... மெலிந்து,
அழுது ... அழுது புலம்பி,
முறைப் படுதல் ஒழித்து ... 'எங்கள் பசி தாங்க முடியவில்லையே' என முறையிடுதலை அறவே நீக்கி,
அவுணர் ... அசுரர்களின்,
உரத்து உதிரம் ... உடலின் இரத்தம் தோய்ந்த,
நிணத்தசைகள் ... கொழுப்போடு சேர்ந்த மாமிசத்தை,
புசிக்க ... அப்பேய்கள் உண்ண,
அருள் நேரும் ... மறக்கருணையால் உடன்படும் (குகன் வேலே).
......... விளக்கவுரை .........
(அவுணர் என்ற சொல்லில் 'அ' எனும் எழுத்து 'தகாது' எனும் பொருளைக் குறிக்கும். அதாவது, உயிர்கள்பால் கருணை இல்லாது, அவைகளை கொன்று உண்ணும் கூட்டத்தாரே அவுணர் எனப்படுவர். தூய காய்கறி உணவு உண்பவர்களை நாடாமல் உணவில் ஒழுக்கம் கெட்ட அவுணர்களின் உடலையே உண்ண பேய்கள் விரையும் போலும்.
கொன்றது கொன்றன, தின்றது தின்றன
... பட்டினத்தார்.
அவுணர் செய்த வினையின் வெம்மை தேவியின் கணங்களின் ஒரு பகுதியான பேய்களின் வயிற்றில் பெரும் பசியாய் நுழைந்து, எரி வீச பசி தாங்காமல் அந்தப் பேய்கள் கத்துவதைக் கண்ட வேற்படை, அவைகளின் குறை அகலவும் ஈட்டின வினைகள் அழியவும் உபகாரம் செய்தமையால், 'அருள் நேரும் வேலே' என்கிறார். ஞானா சக்தி மறக்கருணை காட்டுவதையே இவ்வடிகள் குறிக்கின்றன. பேய்களின் முறையீட்டை அகற்றியவன் முருகனே என்று தாக்கயாகப் பரணியும் கூறுகிறது).
சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும் இடுக்கண்வினை சாடும் ...... 5
......... பதவுரை ......... 
சுரர்க்கும் ... வானோர்களுக்கும்,
முனிவர்க்கும் ... தவ சிரேஷ்டர்களுக்கும்,
மகபதிக்கும் ... இந்திரனுக்கும்,
விதிதனக்கும் ... பிரம்மனுக்கும்,
அரி தனக்கும் ... திருமாலுக்கும்,
நரர் தமக்கும் ... உலக மக்களுக்கும்,
உறும் ... நேர்ந்த,
இடுக்கண் ... துன்பத்திற்கு காரணமான,
வினை ... தீவினைக் கூட்டங்களை,
சாடும் ... மோதி அழிக்கும். (குகன் வேலே).
......... விளக்கவுரை .........
(துஷ்டனான சூரபத்மனுக்கு வைதீக வானவர் மீன் கொண்டு வரவும், அவன் முன்னிலையில் பிரம்மன் பஞ்சாங்கம் வாசிக்கவும், இன்னும் பல அவல நிகழ்ச்சிகளை தக்கன் வேள்வியில் கலந்துகொண்ட பாவத்தினால் வந்தன. இந்த சாபத்தினால் சாகா வரம் பெற்ற தேவர்கள் அனைவரும் துன்பம் அடைந்தனர். அவர்களின் ஓலத்திற்கு மனம் இரங்கி, இறைவன் 'ஆறுமுகம் படைத்த குமரனாய்' அவதரித்தான். இறுதிப் போரில் சூரன் இமையோரை விழுங்க பெரும் இருள் வடிவம் எடுக்கிறான். வேற்படை இருளை அகற்ற, சூரபத்மன் தீப்போல் தளிரும் புகை போல், தளையும் பொன் போல், பூங்கொத்தும் மரகதக் காயும் செந்நிறப் பழமும் அண்டம் அளாவிய கிளைகளை உடையதாய் நிலத்தின் கீழ் பாதாளம் வரை வேர் ஓட்டி கடலின் நடுவில் மாமரமாய் நிற்கிறான். உயிர் கூட்டம் துடிப்பதைக் கண்ட வேல் தெய்வம், மாமரத்தைப் பிளந்து, அனைவருக்கும் விடுதலை கொடுத்து, வானவரின் பழைய வினைகளையும் நீக்கிற்று. இக் கருத்தை கலக வாள் எனத் தொடங்கும் பழநித் திருப்புகழில்,
அலைவி லாதுயர் வானோ ரானோர் நிலைமை யேகுறி வேலா சிலா
... என்பார்).
சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும் ...... 6
......... பதவுரை ......... 
சுடர் பருதி ஒளிப்ப ... ஒளியை உடைய செங்கதிரோன் தோற்றுப்போய் ஒளித்துக்கொள்ளவும்,
நிலவு ஒழுக்குமதி ஒளிப்ப ... குளிர்ந்த கிரணங்களை உடைய வெண்கதிரோனும் ஒளித்துக்கொள்ளவும்,
அலை அடக்கு தழல் ஒளிப்ப ... கரை கடந்து உலகை அழிக்காதபடி சமுத்திரத்தை அடக்கிக் கொண்டிருக்கும் வடவாமுக அக்னி ஒளித்துக்கொள்ளவும்,
ஒளிர் ... பிரகாசிக்கின்ற,
ஒளிர் பிரபை வீசும் ... ஒளியை உடைய ஞானாசக்தியை எங்கும் பரவும்படி செய்யும்
......... விளக்கவுரை .........
(வடவாமுக அக்னி மற்ற ஐந்து தழல்களையும் மிஞ்சுவதாக கூறுவர். மற்ற ஐந்து தழல்கள்
1. யுகாந்தாக்னி 2. அகத்தியர் உதராக்னி 3. ஆலகால விஷாக்னி 4. ராம சராக்னி 5. பதிவிரதாக்னி.
வேலாயுதத்தின் அளவற்ற வெப்பத்தைக் கண்டு ஆற்றாது ஆதவனும், அமுத சீதள கிரணம் கண்டு ஆற்றாது அம்புலியும், பொருக்க முடியாத எரிவு கண்டு மேற் சொன்ன ஆறு தழல்களும் ஒளித்துக் கொள்ளுகின்றன. இம் மூன்றினையும் காய்ந்து, குளிர்ந்து, எரிக்கும் வேல் என்பதைக் குறிப்பிட 'ஒளிர் ஒளி பிரபை' என்கிறார். திருப்போருர் சன்னதி திருமுறையில் ஒரு மேற்கோள்:
ஒளியால் கதிர் அவுணர் உடலால் காலன் அடியால் குளிர் மதியே யாகும் போருரில் வீரன் கரத்து ஏந்தும் வேல்)
துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கோர்துணை யாகும் ...... 7
......... பதவுரை ......... 
துதிக்கும் ... தன்னைப் போற்றி வணங்கும்,
அடியவர்க்கு ... அன்பர்களுக்கு,
ஒருவர் ... வேறு யாரேனும் ஒருவர்,
கெடுக்க ... அந்த அடியவரை அழிக்க,
இடர் நினைக்கின் ... ஏதேனும் துன்பம் செய்ய மனதில் எண்ணினாலும்,
அவர் குலத்தை ... அவர் வம்சத்தையே,
முதல் அற களையும் ... வேருடன் அழித்து களைந்து விடும்,
எனக்கு ஓர் துணையாகும் ... எனக்கு ஒப்பற்ற துணையாக இருந்து உதவி புரியும் (குகன் வேலே).
......... விளக்கவுரை .........
(அடியவர்களுக்கு இடையூறுகள் பல உருவில் வரும். முன்னும் பின்னும் துன்ப இருப்பு அடியவர்களை சுற்றும்படி தீமை புரிபவர்கள் எல்லாரும் உலகில் பாவ வளர்ச்சிக்கு வழி செய்வார்கள். ஆதலால் அன்னவர் பரம்பரையை வேரோடு களைந்தால் அன்றி சிவ ஞானப்பயிர் செழிக்காது. ஆகையால், ஞானசக்தியாகிய வேல் அத்திருப்பணியை செய்துகொண்டே இருக்கும்.
வேல் வகுப்பு பாராயணம் செய்யும்போது 'எனக்கோர் துணையாகும்' என்கின்ற வரிகளை கூறுகின்ற சமயம், அருணகிரியாரின் திருக்கரங்களும் இரண்டும் அவரின் இதயத்திற்கு நேரே குவிந்திருக்கும் என்பது செவி வழிச் செய்தி. இந்த அடிகளின் சினத்தவர் முடிக்கும் எனத் தொடங்கும் திருத்தணித் திருப்புகழில்,
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவ ருயிர்க்கும் ...... சினமாகச
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென ...... றறிவோம்யாம்
... என்கிறார்).
சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு மறத்தைநிலை காணும் ...... 8
......... பதவுரை ......... 
சொலற்கரிய ... அருமை பெருமைகளை அளவிட்டுச் சொல்ல இயலாத,
திருப்புகழை ... இறைவனது அருள் சம்பந்தப்பட்ட திருப்புகழை,
உரைத்தவரை ... விருப்புடன் செப்பியவரை,
அடுத்த பகை ... நெருங்கிவரும் பகை நிலைமையை,
அறுத்தெறிய ... வேருடன் அறுத்து எறிவதற்கு,
உறுக்கி எழும் ... உக்ரத்துடன் புறப்படும்,
அறத்தை நிலை காணும் ... தர்மத்தை நிலை பெறச் செய்யும் (குகன் வேலே).
......... விளக்கவுரை .........
(சிவபெருமான் பார்வதி தேவியிடம், 'தேவி உன்னுடைய திருக்குமரனின் பெருமையை விவரித்துச் சொல்ல 100 கோடி வருடங்கள் காணாது' என்று சொல்லும் அளவிற்கு கந்தனின் மகிமை விரிந்திருப்பதினால், 'சொலற்கரிய திருப்புகழ்' என்கிறார். சூக்குமை, வைசந்தி, மத்திமை, வைக்கரி என்னும் நான்கு நல்வாக்குகளின் பகுதியான வேதம் ஆகிய நூல்களும் அளந்து காண இயலா முருகனின் திருப்புகழை அளந்து கண்டது என்றால், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழின் அருமை விரித்து காண்பது அரிது. கல்லால மரத்தின் அடியில் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் மெய்ப் பொருளை வாக்கினால் சொல்ல முடியாது என்று கையை மட்டும் காட்டிப் போனார் தட்சிணா முர்த்தியார். ஆனால் கருணை மிகுதியால் முருகனின் திருப்புகழை பல பாக்களினால் விவரித்திருக்கிறார் எனில் திருப்புகழின் பெருமை ஓரளவுதான் அளவிட முடியும். 'பரித்ராணாய' எனும் சுலோகத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லிய மாதிரியே வேலாயுதமும் அடியவர்களைக் காத்து, துஷ்டர்களை அழிக்கும் என்பதை இவ்வடிகள் உறுதி செய்கின்றன. மேலும் இதே கருத்தை கருப்புவிலில் எனத் தொடங்கும் பழநித் திருப்புகழில்,
திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை செயித்தருளு மிசைப்பிரிய
... என்கிறார்).
தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிக ராகும் ...... 9
......... பதவுரை ......... 
நமன் ... எமன்,
தருக்கி ... இறுமாப்புடன்,
முருக்வரின் ... அழிக்க வந்தால்,
எருக்கு ... எருக்க மலரையும்,
மதி ... திங்களையும்,
தரித்த முடி படைத்த ... சூடிய ஜாடா பாரத்தை உடைய,
விறல் படைத்த ... வெற்றி அமைந்து,
இறை கழற்கு ... எங்கும் இருப்பவரான சிவபிரானின் திருவடிக்கு,
நிகராகும் ... ஒப்பாகும் (குகன் வேலே).
......... விளக்கவுரை .........
(திருவாசகம் கூறுவது போல் சிவபெருமானின் திருவடியே ஐந்தெழுத்தாகும்.
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
... என்ற அடிகளே இதற்குச் சான்றாகும். வேலாயுதம் சிவபெருமானின் திருவடிக்கு ஒப்பாகும் என்பதால் அதுவே பஞ்சாட்சரம் என ஊகிக்க முடிகிறது. இக்கருத்தை உறுதி செய்யும்படிக்கு பருவம் எனத் தொடங்கும் சிதம்பரத்து திருப்புகழில்,
செருவெங் களத்தில் அவுணன் தெறித்து மங்க சிவமஞ் செழுத்தை முந்த ...... விடுவொனே
... என்கிறார். ஆதலால் ஐந்தெழுத்தை ஓத இயலாதவர்கள் 'வேல் வேல்' என பாராயணம் செய்வதே அதற்கு நிகராகும். இவ்வடிகளின் கருத்தை பல திருப்புகழ் பாக்களில் குறிப்பிடுகிறார். அவைகளில் சில,
சினத்தொடும் சமன் உதைபட நிருவிய பரன்
... கறுக்கும் அஞ்சன , திருப்பரங்குன்றம்,
காலன் வந்து பாலன் ஆவி காயம் வென்று பாசம் வீசு காலம் வந்து ஓலம் ஓலம் ...... எனும் ஆதி
... நாலுமைந்து , திருச்செந்தூர்,
நமனை விழி கொளும் அழலின் இணைகழல்
... குமரகுருபர , சுவாமிமலை,
மறலியின் நாட்ட மற சரணீட்டி
... பாட்டில் உருகிலன் , தீர்த்தமலை.
தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும் ...... 10
......... பதவுரை ......... 
தலத்தில் உள ... தமது ஆட்சியில் உள்ள,
கணத்தொகுதி ... சிவக் கண கூட்டம்,
களிப்பின் உண ... மகிழ்வோடு உண்பதற்கு,
அழைப்பதென ... அழைப்பதுபோல்,
மலர்க் கமல கரத்தின் ... மலர்ந்த தாமரை அன்ன திருக் கரத்தில்,
முனை ... நுனியை,
விதிர்க்க வளைவு ஆகும் ... அசைக்க வளையும் (குகன் வேலே).
......... விளக்கவுரை .........
(தன்னை வழிபட்டு சூழும் கணங்களுக்கு ஆனந்த சேவையும் ஆனந்த அமுதும் அளிக்க குமரன் தன் திருக்கையின் விரல்களினால் 'வருக' என அழைக்கும்போதெல்லாம், அப் பரமன் ஏந்தியுள்ள திருக்கரத்து வேலாயுதமும் உடன் வளைந்து காட்டும் காட்சியை அனுபவித்த அருணகிரியார் இவ்வண்ணம் கூறுகிறார். என்றும் எதற்கும் வளையாத வேல் அடியாரை, பெருமான் அழைக்கும் தருணத்தில் தானும் வளையும் என்பதே இதன் குறிப்பு. பேய்களுக்கு விருந்தளிக்க அழைத்தல் என்பது பொருந்தாது. பேய்களே சூழ்ந்திருப்பன என பொருள் காண்பன என்பது பொருந்தாத ஒன்றாகும்).
தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு பகற்றுணைய தாகும் ...... 11
......... பதவுரை ......... 
தனித்து ... துணையின்றி தன்னந் தனியாய்,
வழி நடக்கும் ... வழியில் நடக்கின்ற,
எனது இடத்தும் ... எனது இடப் பக்கமும்,
ஒரு வலத்தும் ... ஒப்பற்ற வலது புறத்தும்,
இரு புறத்தும் ... முன்னும் பின்னுமான இரண்டு பக்கங்களிலும்,
அருகு அடுத்து ... அண்டையில் நெருங்கி,
இரவு பகல் துணையதாகும் ... இராக் காலத்திலும் பகல் காலத்திலும் துணையாக இருந்து என்னைக் காப்பாற்றும் (குகன் வேலே).
......... விளக்கவுரை .........
('பரமனைத் தரிசிக்கும் வேட்கையால் இரவென்றும் பகலென்றும் பாராமல் குமரக் கோட்டங்களை எண்ணி எண்ணி வழி நோக்கி தன்னம் தனியாக செல்லும் எனக்கு பூத பிசாசுகள், கள்வர், இயற்கை சீற்றங்கள் இவைபோன்ற பற்பல துன்பங்கள் நேராதபடி குகன் வேல் என்னைக் காக்கும்' என்கிறார் அருணகிரியார். ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் எல்லாம் என்னைக் கைவிட்டு மறலி ஊர்புகும் மரண உாத்திரையின் போதும், தியன காலத்தில் இரவு பகல் அற்ற இடத்தே செல்லும்போதும் ஞான சக்தியாகிய வேலாயுதம் என்னைக் காக்கும் என்பதும் குறிப்பு).
சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில் விருப்பமொடு சூடும் ...... 12
......... பதவுரை ......... 
சலத்து வரும் அரக்கர் உடல் ... கோபப்பட்டு வருகின்ற அசுரர்களின் உடம்பில்,
கொழுத்து வளர் ... பல தகாத உணவு வகைகளை உண்டு கொழுப்படைந்து வளர்ந்துள்ள,
பெருத்த குடர் ... பெருத்திருக்கின்ற குடல்களை,
சிவத்த தொடை என ... சிவத்த பூ மாலை போல,
சிகையில் விருப்பமொடு சூடும் ... தன் உச்சியில் பிரியத்துடன் தரித்துக் கொள்ளும் (குகன் வேலே).
......... விளக்கவுரை .........
(எங்குமே, என்றுமே அமைதி காணாது பெரும் சினத்தோடு விளங்கும் அவுணரை 'சலத்து வரும்' என்கிறார். அசுரர்கள் அரக்கு போன்ற சென்னிற மேனியர் ஆதலால் அவர்களை அரக்கர் என்கிறார். அசுரர்கள் தின்பதைத் தவிர மற்ற ஒன்றும் செய்து அறியாதவர்கள். ஆதலால் அவர்களை 'கொழுத்துவளர்' என்கிறார். வேல் தனது ஆற்றலுக்கு இசைய அந்த அரக்கர்களது சிறு குடல்களை நீக்கி நீண்டு வளர்ந்துள்ள பெருங் குடல்களையே மாலைகளாக சூடும் என்பதால் 'பெருத்த குடர்' என்கிறார். அசுரரை அழிப்பது வேலுக்கு உவகை தரும் தொழில். ஆகையினால் 'விருப்பமொடு சூடும்' என்கிறார். இக் கருத்தை மற்றொரு வகுப்பான கடைக்கண்ணியல் வகுப்பில்,
முதியவுணர் அன்றுபட்ட முதியகுடர் நன்று சுற்று முதுகழுகு பந்தர் இட்ட ...... வேலினான்
... என்பதையும் காணலாம்).
திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர நிறைத்துவிளை யாடும் ...... 13
......... பதவுரை ......... 
திரைக்கடலை ... அலைகள் வீசும் கடலை,
உடைத்து ... பிளந்து,
உடையும் ... உடைப்பு எடுத்து ஓடும் (நீரை)
உடைப்பை அடைய அடைத்து ... உடைப்பு முழுவதும் பல வகையிலும் சிதறாதபடி ஆங்காங்கு அணையிட்டது போல் அடைத்து,
நிறை புனர் கடிது குடித்து ... சமுத்திரத்தில் நிறைந்துள்ள நீரை விரைவில் உருஞ்சிப் பருகி,
உதிரம் நிறைத்து விளையாடும் ... வெற்றிடமாய் இருந்த கடல் பரப்பில் அவுணர்களின் இரத்தத்தை நீருக்குப் பதிலாக நிரப்பி விளையாடி நிற்கும் (குகன் வேலே).
......... விளக்கவுரை .........
(இந்த அரிய செயல் குகனின் வேற்படைக்கு ஒரு சிறு விளையாட்டு காரியமாக இருந்தது என்கிறார் அருணை முனிவர்).
திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும் ...... 14
......... பதவுரை ......... 
திசைக் கிரியை ... எட்டு திக்குகளிலும் உள்ள மலைகளை,
முதற் குலிசன் ... தேவர்களில் முதன்மை வாய்ந்த இந்திரன்,
அறுத்த சிறை முளைத்ததென ... அறுத்துத் தள்ளின இறக்கைகள் மறுபடியும் முளைத்தது என்று பார்ப்போர்கள் கூறுமாறு,
முகட்டினிடை பறக்க ... அண்ட உச்சியின் நடுவில் பறந்துகொண்டு,
அற விசைத்து ... அளவில்லா வேகம் கொண்டு,
அதிர ஓடும் ... அகில உலகங்கள் நடுங்கும்படி விரைந்து ஓடும் (குகன் வேலே).
......... விளக்கவுரை .........
(பண்டை காலத்தில் மலைகள் அனைத்தும் சிறகுகளுடன் பறந்து உலகோருக்கு கேடு விளைத்து வந்தன. இதை அறிந்த இந்தரன், வஜ்ராயுத்தால் மலைகளின் சிறகுகளை அறுத்து எறிந்தான். அன்று முதல் மலைகளனைத்தும் நிலத்தில் அழுந்தி, 'பூதரம்' எனப் பெயர் பெற்றன. பின்பு முருகனுடைய வேற்படை அண்ட உச்சியில் அதிவேகத்தோடு பறந்தபோது, உலகெல்லாம் கிடுகிடு என அதிர்ந்தன. மீண்டும் மலைகளுக்கு சிறகுகள் முளைத்தனவோ என உலகோர் அஞ்சினர் என்கிறார்).
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும் ...... 15
......... பதவுரை ......... 
சினத்தவுணர் ... கோபத்தை உடைய அசுரர்கள்,
எதிர்த்த ரண களத்தில் ... போர் செய்த யுத்த களத்தில்,
வெகு குறைத்தலைகள் ... உடலில் இருந்து அறுக்கப்பட்ட அளவற்ற தலைகள்,
சிரித்து ... நாம் எப்படி எல்லாம் இருந்தோம், இப்போது இந்த நிலைக்கு வந்து விட்டோமே என்று வருந்தி தமக்குத் தாமே சிரித்துக்கொண்டு,
எயிறு கடித்து ... பற்களை நற நற என் கடித்துக் கொண்டு,
விழி விழித்து ... கண்களை உறுட்டிப் பார்த்து,
அலற மோதும் ... வாய் விட்டு அலறும்படி அசுரர்களைத் தாக்கும் (குகன் வேலே).
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ...... 16
......... பதவுரை ......... 
திருத்தணியில் ... சாந்திநிகேதனம் எனப்படும் தணிகையம்பதியில்,
உதித்தருளும் ஒருத்தன் ... ஞான சூரியனாய் காட்சி நல்கும் ஒப்பற்றவனும்,
மலை விருத்தன் ... மலைக் கிழவனும்,
எனது உளத்துரை கருத்தன் ... என்னுடைய மனதில் எழுந்தருளி இருக்கும் கடவுளும் ஆகிய,
மயில் நடத்து குகன் வேலே ... மயிலை வாகனமாகக்கொண்ட முருகப் பெருமானது வேலாயுதமே (மேற்சொன்ன சிறப்புகளைக்கொண்டதாகும்).
......... தொகுப்புரை .........
உலகங்கள் அனைத்திற்கும் ஒளி விளங்க, அமைதி நிலையமான திருத்தணியில் உதயமாகும் ஞான திவாகரன், உலகம் அனைத்தையும் தாங்கும் குறிஞ்சிக் கிழவன், அடியேன் உள்ளத்தில் தங்கி இருக்கும் கடவுள், மயில் எனப்படும் ஆவரண சக்தியை ஏறி நடத்தும் எம்மான், உயிர்களின் உள்ளமாம் குகையில் எப்போதும் உறைகின்ற ஒப்பற்றவன் ஆகிய குகப் பெருமான் திருக்கரத்தில் தாங்கி இருக்கும் ஞான சக்தியாகிய வேலாயுதம்,
1. வள்ளிப் பிராட்டியின் திருக்கண்களுக்கு ஒப்பாகும், 2. இந்திரனின் கால் விலங்கின் முளை தெறிக்க அராவும் அரமாகும், 3. குகையை இடித்து வழி தெரியும்படி செய்யும், 4. பேய்களின் பசி அகல உபகரிக்கும், 5. அனைவரையும் துன்பப்படுத்தும் வினைப் பெருக்கங்களை மோதி அழிக்கும் 6. ஒளி எல்லாம் நாண பேரொளி வீசும், 7. அடியவர்களுக்கு இடையூறு செய்பவர்களின் குலத்தையே நாசம் செய்யும் 8. எனக்கு எப்போதும் ஒப்பற்ற துணையாக வந்து உதவும், 9. திருப்புகழ் பாடுவோருக்கு நேரும் பகைகளை அறுத்து எறிய ஆக்ரமித்து புறப்படும், 10. அறத்தை நிலை பெறச் செய்யும், 11. எமன் பற்றவரின் மார்க்கண்டேயரைக் காக்க சிவபிரான் நீட்டிய திருவடி போல் விரைந்து வந்து அந்த எமனை கண்டித்து அடியாரைக் காக்கும், 12. இறைவனின் திருக்கரங்கள் அசையும்போதெல்லாம் சிவ கணங்களை அழுதுண்ண அழைப்பதுபோல் தானும் தனது திருமுடியை வளைத்து காட்டும், 13. தனி வழியில் வேறு துணையின்றி செல்லும்போதெல்லாம் இரவும் பகலும் துணையாக வந்து அச்சம் அகற்றும், 14. அரக்கர்களின் பெருங்குடல்களை எடுத்து மாலைபோல் விருப்பமுடன் சூடிக்கொள்ளும், 15. கடலை உடைத்து, புனலைக் குடித்து, உடைந்த உடைப்பை அடைத்து அதில் அவுணரது குருதி நிறைத்து விளையாடும், 16. சிறகுகளுடன் மலைகள் பறக்கின்றது என கண்டவர்கள் கூறுமளவிற்கு விண்ணில் வேகமுடன் அதிர்ச்சி காட்டி ஓடும், 17. போர்க்களத்தில் எதிர்த்த அவுணர்களின் தலைகளை அறுத்து, பற்களை கடித்து, கண்ணை உருட்டி, வீறிட்டு அலற அவைகளை மோதும்
... என்றெல்லாம் 'அறக்கருனை மறக்கருணை' இருப்பைப் பாடும் முறையில் வேலாயுதத்தின் பரத்துவத்தை பாடுகிறார் நம் அருணை முனிவர். |