மணி மந்திர ஒளசதத்தில் தேவேந்திர சங்க வகுப்பு மந்திரம் போன்றது. வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள், ஸ்ரீவித்யாவில் மிகவும் சிறப்பான சாம்பவி முத்திரை இவ் வகுப்பில் உள் முகமாக பதிந்து இருப்பதாக கூறுவார்.
தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி ...... 1
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை ...... 2
சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை ...... 3
தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி ...... 4
இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள் ...... 5
இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின் யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில் ...... 6
இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை ...... 7
எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள் ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி ...... 8
கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் ...... 9
கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் ...... 10
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு ...... 11
கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர் காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன் ...... 12
அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில் வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன் ...... 13
அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள் தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன் ...... 14
அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் ...... 15
அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர் ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே ...... 16
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தரணியி லரணிய முரணிர ணியனுடல் தனைநக நுதிகொடு சாடோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி ...... 1
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை தாதாம்புய மந்திர வேதாந்தப ரம்பரை ...... 2
......... சொற்பிரிவு .........
தரணியில் அரணிய முரண் இரணியன் உடல்தனை நக நுதி கொடு சாடு ஓங்கு நெடுங் கிரி ஓடு ஏந்து பயங்கரி
தமருகம் பரிபுரம் ஒலி கொடு நட நவில் சரணிய சதுர் மறை தாது அம்புய மந்திர வேதாந்த பரம்பரை
......... பதவுரை .........
தரணியில் ... பூவுலகத்தில்,
அரணிய ... கோட்டைகளை அமைத்துக் கொண்டு முரட்டுத்தனமாக வாழ்ந்து வந்த,
முரண் ... பகைவனாகிய,
இரணியன் உடல்தனை ... இரண்யாசுரனின் உடலை,
நக நுதி கொடு ... நகங்களின் கூரிய நுனியைக் கொண்டு,
சாடு ... எதிர்த்து அழித்து,
ஓங்கு நெடும் கிரி ... பெரிய மலை போல் உயர்ந்த நரசிங்க அவதாரத்தை எடுத்தவள்,
ஓடு ஏந்து ... ப்ரம்ம கபாலத்தை கையில் ஏந்தி உள்ளவள்,
பயங்கரி ... அடியார்களின் அச்சத்தை நீக்குபவள், பகைவர்களுக்கு அச்சத்தை தருபவள்,
தமருக பரிபுர ஒலி கொடு ... உடுக்கை சிலம்பு இவைகள் ஒலிக்க,
நட நவில் ... சங்கார நிர்த்தனம் புரியும்,
சரணிய ... திருவடிகளை உடையவள்,
சதுர் மறை ... நான்கு வேதங்களினாலும் துதிக்கப் படுபவள்,
தாது அம் புய ... மகரந்தப் பொடி நிறைந்துள்ள தாமரை மலரைப் போன்ற திரு அடிகளை உடையவள்,
மந்திர ... பஞ்சாட்சர ஷடாச்சர முதலிய ஸ்ரீ வித்யா ரூபமாக திகழ்பவள்,
வேதாந்த ... வேதங்களின் முடிவாக விளங்குபவள்,
பரம்பரை ... மேலான யாவருக்கும் மேலானவள்,
......... விளக்கவுரை .........
(அரியும் தேவியும் ஒரே ரூபமே என ஆன்றோர்கள் கருத்து.
அரி அல்லால் தேவி இல்லை ஐயன் ஐயனார்க்கே
... என்கிறது தேவாரம். அருணகிரியார், செறிதரும் எனத் தொடங்கும் காஞ்சி திருப்புகழில்,
புனிதசங் கத்துக் கைத்தல நிர்த்தன் பழையசந் தந்தைப் பெற்றம டப் பெண்
... என்பார். காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் தாம் பாடி அருளிய ஸ்ரீ சுப்ரமண்யக் கடவுள் சேத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில்,
மயலான பரை ஆதி இச்சைஞா னக்கிரியை வந்துதரு மேக சத்தி
மகிழ்சிவன் போககா லத்திற் பவானியாய் வளர் கோப காலத்திலே
அயிலாரும் வேற்காளி யாய்யுத்த காலத்தில் அதிபல மகாதுர்க்கையாய்
அகிலந் துதிக்கும்நாள் அரிதுயில்கொள் அரியாம் அனந்தகல் யாணகுணமே
... என்பார். இவ்வரிகளில் புதைந்திருக்கும் ஒரு மகா ரகசியத்தை பார்க்கலாம். தேவி பாகவதத்தின்படி அம்பிகையின் பத்து விரல் நகங்களில் இருந்து ராமர் கிருஷ்ணர் முதலான பத்து அவதாரங்களும் தோன்றின என்பதே. இந்த சாக்த மதக் கொள்கையை நமக்கு நினைவூட்டும் வகையில், தேவியே நரசிம்மமாய் வந்தாள் என்பதையும் தக்க யாகப் பரணியிலும் பார்க்கலாம். ப்ரம்மனின் மண்டை ஓட்டை அம்பிகை தன் கையில் ஏந்தி இருப்பதை, நாலு சதுரத்த எனத் தொடங்கும் தில்லைத் திருப்புகழில், அருணகிரியார்,
ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ ழுந்திலி ஆரணர் தலைக்க லங்கொளி ...... செம்பொன்வாசி
ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி யென்றனை ஆளுமை பரத்தி சுந்தரி ...... தந்த சேயே
... எனத் துதிப்பார்).
சரிவளை விரிசடை யெரிபுரை வடிவினள் சததள முகுளித தாமாங்குச மென்றிரு தாளாந்தர அம்பிகை ...... 3
தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி ...... 4
......... சொற்பிரிவு .........
சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித தாம அங்குச மென் திரு தாள் அந்தர அம்பிகை
தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி தான் ஆம்படி செங்கையில் வாள் வாங்கிய சங்கரி
......... பதவுரை .........
சரிவளை ... முன் கையில் வளையல் கூட்டங்களை கொண்டவள்,
விரி சடை ... சடை விரிந்த தவக் கோலம் கொண்டவள்,
எரி புரை வடிவினள் ... மூண்டு எரியும் நெருப்பு போன்ற வடிவம் கொண்டவள்,
சத தள முகுளித ... நூறு இதழ்களைக் கொண்ட தாமரை அரும்பு விட்டது போல் காட்சி கொடுக்கும்,
தாம ... மாலைகளை பூண்டிருக்கும்,
குச ... மார்பை உடையவள்,
மென் திரு தாளாந்திர அம்பிகை ... மென்மையான தாள்களை உடைய தேவி,
தரு பதி சுரரொடு ... கற்பகத் தருவைக் கொண்ட நகரமாகிய அமராவதியில்வாழும் தேவர்களுடன்,
சருவிய ... மாறுபட்டு போரிட்ட,
அசுரர்கள் ... அரக்கர்களின்,
தட மணி முடி பொடி தானாம் படி ... அகன்ற ரத்னங்கள் பதித்த கிரீடங்கள் பொடியாகும்படி,
செங் கையில் வாள் வாங்கிய சங்கரி ... அழகிய கையில் வாளை ஏந்தி இருக்கும் சங்கரி,
இரணகி ரணமட மயின்ம்ருக மதபுள கிதவிள முலையிள நீர்தாங்கிநு டங்கிய நூல்போன்றம ருங்கினள் ...... 5
இறுகிய சிறுபிறை யெயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின் யானேங்குதல் கண்டெதிர் தானேன்றுகொ ளுங்குயில் ...... 6
......... சொற்பிரிவு .........
இரண கிரண மடமயில் ம்ருகமதம் புளகித இளமுலை இள நீர் தாங்கி நுடங்கிய நூல் போன்ற மருங்கினள்
இறுகிய சிறுபிறை எயிறு உடை எம படர் எனது உயிர் கொள வரின் யான் ஏங்குதல் கண்டு எதிர் தான் ஏன்றுகொளும் குயில்
......... பதவுரை .........
இரண ... பொன் நிறத்தவளாகி,
கிரண ... ஒளி வீசுபவளாகிய,
மட மயில் ... மடப்பமுடைய (delicate) மயிலன்ன சாயலை உடையவள்,
ம்ருக மத ... கஸ்தூரி பூசியதும்,
புளகித ... புளகாங்கிதம் கொண்டதுமான,
இள முலை இள நீர் ... இள நீரின் குரும்பை போன்ற யவ்வன மார்பை தாங்குவதால்,
நுடங்கிய ... ஓடிந்து விடுவது போல் காட்சி தரும்,
நூல் போன்ற மருங்கினள் ... சிறிய நூல் போன்ற நுண் இடையினை உடையவள்,
இறுகிய சிறு பிறை ... இறுக்கி இருக்கும் பிறைச் சந்திரனைப் போன்ற,
எயிறுடை ... பற்களை உடைய,
எம படர் ... எம தூதர்கள்,
எனதுயிர் கொளவரின் ... எனது உயிரை பறித்துப் போக வந்தால்,
நான் ஏங்குதல் கண்டு ... நான் அப்போது அடையும் பெரும் துயரைக் கண்டு,
எதிர் ... என் எதிரில் தோன்றி,
தானேன்று கொளும் குயில் ... எனக்கு அபயம் அளித்து ஆட்கொண்டு அருளும் குயில் போன்றவள்,
இடுபலி கொடுதிரி யிரவலர் இடர்கெட விடுமன கரதல ஏகாம்பரை யிந்திரை மோகாங்கசு மங்கலை ...... 7
எழுதிய படமென இருளறு சுடரடி யிணைதொழு மவுனிகள் ஏகாந்தசு லந்தரு பாசாங்குச சுந்தரி ...... 8
......... சொற்பிரிவு .........
இடு பலி கொடு திரி இரவலர் இடர் கெட விடும் மன கர தல ஏகாம்பரை இந்திரை மோகாங்க சுமங்கலை
எழுதிய படமென இருள் அறு சுடர் அடி இணை தொழும் மவுனிகள் ஏகாந்த சுகந்தரு பாசம் அங்குச சுந்தரி
......... பதவுரை .........
இடுபலி ... பிச்சை வாங்குவதற்காக,
திரி கொடு ... உலகத்தில் உழலும்,
இரவலர் ... நலிந்தவர்கள்,
இடர் கெட ... துன்பங்கள் அகலும்படி,
இடு மன ... அவர்களுக்கு வேண்டியவற்றை கொடுக்கும் மனமும்,
கர தல ... கைத்தலமும் கொண்டு,
ஏகாம்பரை ... காஞ்சியில் ஏகாம்பர நாதரின் மனைவியான காமாட்சி,
இந்திரை ... மோட்ச லட்சுமி,
மோகாங்க சுமங்கலை ... கவர்ச்சிகரமான உறுப்புகளை உடைய, என்றும் மங்கள ருபிணி,
(தன் படைப்புகளான உயிர்கள் எங்கு எந்த நிலையில் இருந்தாலும் அவைகளுக்கு அந்தந்த வேளையில் உணவு போய் சேர அம்பிகையின் திருவுள்ளம் எண்ணுகிறது. 'கல்லினுள் தேரை' எனும் பாடலே இதற்குச் சான்று. காஞ்சியில் இரு நாழி நெல்லைக் கொண்டு 32 அறங்களை வளர்த்த குறிப்பு இங்கு வருகிறது. சாவா மூவா சிவபெருமானின் பத்தினி அம்பிகை ஆதலின் அவள் சுமங்கலை).
எழுதிய படமென ... திரையில் தீட்டப்பட்ட ஓவியம் போல் கருவி கரணங்கள் அடங்கி,
இருளறு சுடரடி ... இருளை அகற்றி ஞான ஒளி வீசும் தன் திருவடிகள்,
இணை தொழும் மவுனிகள் ... இரண்டையும் தியானிக்கும் மவுன ஞானிகளுக்கு,
ஏகாந்த சுகம் தரு ... முடிவான பேரின்ப நிலையை அருளுகின்ற,
பாச அங்குச சுந்தரி ... பாசத்தையும் அங்குசத்தையும் கையில் ஏந்தியுள்ள திவ்ய அழகி,
(கருவி கரணங்கள் ஒடுங்கி அத்துவித நிலையில் தன்னை தியானிக்கின்ற அடியார்களுக்கு பேரின்ப அநுபூதி நிலையைத் தருபவள். தன்னுடைய கைகளில் உள்ள பாசத்தால் அடியார்களின் ஆணவம் என்னும் களிற்றை பிடித்து அடக்கி அங்குசத்தால் அதனை அடியோடு மாய்த்து விடுகிறாள் அம்பிகை).
கரணமு மரணமு மலமொடு முடல்படு கடுவினை கெடநினை காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் ...... 9
கனலெரி கணபண குணமணி யணிபணி கனவளை மரகத காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் ...... 10
......... சொற்பிரிவு .........
கரணமும் மரணமும் மலமொடு உடல் படு கடு வினைகெட நினை கால அந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சு உமிழ்
கனல் எரி கண பண குணமணி அணி பணி கன வளை மரகத காசாம்பர கஞ்சுளி தூசு ஆம் படி கொண்டவள்
......... பதவுரை .........
கரணமும் ... ஐந்து இந்திரியங்களின் சேஷ்டைகள்,
மரணமும் ... இறப்பு,
மலமொடும் ... மும் மலங்கள்,
உடல் படு கடு வினை ... சரீரம் அநுபவிக்கும் கொடிய சஞ்சிதம், ப்ராராப்தம், ஆகாமியம் என்ற வினைகள்,
கெட ... (இவை எல்லாம்) அடியார்களை அணுகாவண்ணம்,
நினை ... திருவுள்ளம் கொள்ளும்,
காலாந்தரி ... மூன்று காலங்களையும் கடந்து அதற்கும் மேற்ப்பட்ட நிலையில் நிற்பவள்,
கந்தரி ... அடியார்களின் இதய குகையில் வீற்றிருப்பவள்,
நீலாஞ்சனி ... நீல நிறத்துடன் விளங்குபவள்,
நஞ்சுமிழ் ... விஷத்தை உமிழ்வதும்,
கனலெரி ... நெருப்பு ஜ்வாலையை கக்குவதுமானதும்,
கண பண ... கூட்டத்துடன் விளங்கும் பணா மகுடங்களை கொண்டதும்,
குணமணி ... சிறந்த ஜாதி ரத்னங்களை,
அணி ... முடியில் தாங்கும்,
பணி ... சர்ப்பத்தை,
கன வளை ... பெருமை மிக்க கையில் வளையளாக தரித்திருப்பவள்,
மரகத ... பச்சை நிறத்தவள்,
காசு ... காயாம்பூ நிறமுள்ள
அம்பர ... உடையும்,
கஞ்சுளி ... சட்டையும்,
தூசாம்படி கொண்டவள் ... வஸ்திரமாக ஏற்றுக் கொண்டவள்,
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிக மலைகுழை காதார்ந்தசெ ழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு ...... 11
கரைபொழி திருமுக கருணையி லுலகெழு கடனிலை பெறவளர் காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன் ...... 12
......... சொற்பிரிவு .........
கனை கழல் நினையலர் உயிர் அவி பயிரவி கவுரி கமலை குழை காதார்ந்த செழும் கழுநீர் தோய்ந்த பெரும் திரு
கரை பொழி திருமுக கருணையில் உலகு எழு கடல் நிலை பெற வளர் காவு ஏந்திய பைங்கிளி மா சாம்பவி தந்தவன்
......... பதவுரை .........
கனை கழல் ... ஒலி செய்யும் தனது இணையடிகளை,
நினையலர் ... அன்புடன் தியானிக்காத பாவிகளின்,
உயிர் அவி ... உயிரைப் போக்குகின்ற,
பயிரவி ... பயிரவி தேவி,
கவுரி ... பொன் நிறமானவள்,
கமலை ... கமலாம்பிகை,
குழை காதார்ந்த ... காதில் குழையாக,
செழுங்கழுநீர் தோய்ந்த ... நீலோற்பல மலரை தரித்திருக்கும்,
பெருந்திரு ... மோட்ச லட்சுமி, (பார்வதி),
கரை பொழி ... உள்ளம் கனிந்து வீசுகின்ற,
திரு முக கருணையில் ... கருணா கடாட்சத்தால்,
உலகு ஏழு கடல் ... ஏழு உலகங்களும், ஏழு சமுத்திரங்களும் (ஏழு இடை நிலை தீபம்),
நிலை பெற ... நிலைத்திருக்கும்படி,
வளர் ... பரிபாலனம் செய்யும்,
காவு ஏந்திய ... காத்தல் தொழிலை மேற்கொண்டுள்ள,
பைங்கிளி ... பசுமையான கிளி போன்றவள்,
மா சாம்பவி ... மகா சாம்பவியான பார்வதி தேவி,
தந்தவன் ... தந்து அருளியவன்,
அரணெடு வடவரை யடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில் வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்கும ரன்குகன் ...... 13
அறுமுக னொருபதொ டிருபுய னபினவ னழகிய குறமகள் தார்வேந்தபு யன்பகை யாமாந்தர்கள் அந்தகன் ...... 14
......... சொற்பிரிவு .........
அரண் நெடு வட வரை அடியொடு பொடி பட அலை கடல் கெட அயில் வேல் வாங்கிய செந்தமிழ் நூலோன் குமரன் குகன்
அறுமுகன் ஒருபதோடு இரு புயன் அபினவன் அழகிய குறமகள் தார் வேய்ந்த புயன் பகை ஆம் மாந்தர்கள் அந்தகன்
......... பதவுரை .........
அரண் ... இந்த உலகத்திற்கு கோட்டை போல் விளங்கும்,
நெடுவரை ... நெடிய மேரு மலை,
அடியொடு பொடி பட ... முற்றிலும் தூளாகும்படியும்,
அலைகடல் கெட ... அலை வீசும் சமுத்திரம் வற்றிப் போகும்படியும்,
அயில் வேல் வாங்கிய ... கூரிய வேலாயுதத்தை செலுத்திய,
செந்தமிழ் நூலோன் ... தீந் தமிழ் நூல்களுக்கெல்லாம் உரிமையானவன்,
குமரன், குகன், அறுமுகன் ... குமரன், குகன், வேலாயுதக் கடவுள்,
ஒருபதொடு இருபுயன் ... பன்னிரு புயங்களை உடையவன்,
அபிநவன் ... என்றும் புதியவன்,
அழகிய குற மகள் ... அழகு மிக்க வள்ளியின்,
தார் வேய்ந்த ... மண மாலை சூடிய,
புயன் ... தோள்களை உடையவன்,
பகையா மாந்தர்கள் அந்தகன் ... பகைவர்களுக்கு எமன் போன்றவன்,
அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் ...... 15
அதிபதி யெனவரு பெருதிறல் முருகனை அருள்பட மொழிபவர் ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே ...... 16
......... சொற்பிரிவு .........
அடல் மிகு கட தட விகடித மத களிறு அனவரதமும் அகலா ஆமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம் படி செந்திலில்
அதிபதி என வரு பொரு திறல் முருகனை அருள் பட மொழிபவர் ஆராய்ந்து வணங்குவர் தேவேந்தர சங்கமே
......... பதவுரை .........
அடல் மிகு ... வலிமை உள்ளவரும்,
கட தட ... மதம் வாய்ந்த கன்னங்களை உடையவரும்,
விகடித ... விநோத அழகு உடையவருமாகிய,
மத களிறு ... மஹா கணபதியை,
அனவரதமும் ... எப்போதும்,
அகலா மாந்தர்கள் ... தியானித்து இருக்கும் மனிதர்களின்,
சிந்தையில் வாழ்வாம் படி ... உள்ளத்தில் தானும் வந்து குடி புகுந்து,
செந்திலில் அதிபதி என வரும் ... செந்தில் நாயகன் என விளங்கும்,
பொரு திறல் முருகனை ... போரில் வல்ல முருகப் பெருமானை,
அருள் பட மொழிபவர் ... அருள் கிட்டும்படி துதித்து வணங்குபவர்களை,
ஆராய்ந்து வணங்குவர் ... ஆராய்ந்து கண்டுபிடித்து வணங்குவார்கள்,
தேவேந்திர சங்கமே ... தேவேந்திரனும் அவனுடைய பரிவாரங்களும்.
(திருப்புகழ், கந்தர் அந்தாதி, திரு எழுக்கூற்றிருக்கை தவிர ஏனைய படைப்புகளில், அருணகிரி பெருந்தகை, 'முருகனே ஞான சம்பந்தர்' என்ற கருத்தை காண முடியவில்லை. ஆனால் இங்கு 'செந்தமிழ் நூலோன்' என்ற சொல் ஞான சம்பந்தரை கூறுவதாக அமைந்தள்ளது.
கணபதியை சிந்திப்பவர்கள் மனதில் கந்தனும் விளங்குவான் என்பதற்கு ஒரு தத்துவப் பொருளும் கூறலாம். சத்தும் சித்தும் சேரும்போது விளைவது ஆனந்தம். சத்து மேலோங்கி வரும்போது கணபதி அதே ஆனந்தம் சித்து வழி வரும்போது முருகன். ஆகையில் முருகனும் கணபதியும் பிரியாதிருப்பதில் வியப்பில்லை). |