ஒருவனுக்கு நோய் நேர்ந்தால் மூன்று வகையான சிகிட்சைகளை மேற்கொள்ளுவது மரபு. ரட்சை, தாயத்து போன்றவைகளை தரித்துக் கொள்வது மணி எனப்படும். ஜெபங்கள் அருட்பாடல்களை ஓதுவது மந்திரம். நோய்தீர மருந்துகளை உட்கொள்ளுவது ஒளஷதம். பிறவி நோயை அகற்றுவதில் மணியாக திகழ்வது சீர்பாத வகுப்பு. காரணம் என்னவெனில் ஆண்டவனை விட அவனது திருவடிகளே சிறந்தது. நம்மை நன்னெறிக்கு அழைத்துச் செல்வது.
நின்னிற் சிறந்தது நின்தாள் இணையவை
... என்பது பரிபாடல் வாக்கு.
இறைவனின் சீர்பாதங்களே முக்திக்கு வித்தாகும் என்கிற கோட்பாட்டை மாணிக்கவாசகர் சிவ புராணத்தின் துவக்கத்திலேயே,
நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க
என்பதில் சிவபெருமானின் திருவடிகளே பஞ்சாட்சர வஸ்துவாக உள்ளது என்பதை மிகவும் சூட்சகமாக உணர்த்துகிறார். அதேபோல் முருகப் பெருமானின் திருவடிகளே ஆறெழுத்தின் சொருபம் எனக் கொள்ளலாம். ஒருவருக்கு ஆறெழுத்து உபதேசம் செய்யப்படவில்லை என்றாலும் இந்த சீர்பாத வகுப்பை பாராயணம் செய்வதால் ஷடாட்சரத்தை ஜெபித்த பலன் கிட்டும் என்பது திண்ணம்.
சீர்பாத வகுப்பிற்கு மூலாதாரமாக திகழ்வது அருணகிரியார் முருகனிடம் செய்த பிரார்த்தனையே.
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது வரிசை தரும்பத ...... மதுபாடி
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு மகிழ வரங்களு ...... மருள்வாயே
என்று பரவு நெடுங்கதிர் எனத் தொடங்கும் மதுரைத் திருப்புகழில் காணப்படும் வேண்டுதலேயாகும்.
நின்பதயுகள பிரசித்தி என்பன வகுத்து உரைக்க நின்பணி தமிழ் திரயத்தை ...... அருள்வாயே
... எனவும் இறைவனிடம் இறைஞ்சுவதையும் காணலாம்.
அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளாகிய முருகப்பெருமான் அருணகிரியாரின் வேண்டுதலை நிறைவேற்றினார். நமக்குக் கிடைத்தது சீர்பாத வகுப்பு.
உததியிடை கடவுமர கதவருண குலதுரக வுபலளித கனகரத ...... சதகோடி சூரியர்கள் ...... 1
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை யுகமுடிவின் இருளகல ...... ஒருசோதி வீசுவதும் ...... 2
உடலுமுட லுயிருநிலை பெருதல்பொரு ளெனவுலக மொருவிவரு மநுபவன ...... சிவயோக சாதனையில் ...... 3
ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி யுணர்வுவிழி கொடுநியதி ...... தமதூடு நாடுவதும் ...... 4
உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு முழலுவன பரசமய ...... கலையார வாரமற ...... 5
உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ வுளபடியை யுணருமவ ...... ரநுபூதி யானதுவும் ...... 6
உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதய வுருவுடைய மலினபவ ...... சலராசி யேறவிடும் ...... 7
உறுபுணையு மறிமுகமு முயரமரர் மணிமுடியில் உறைவதுவு முலைவிலது ...... மடியேன் மனோரதமும் ...... 8
இதழிவெகு முகககன நதியறுகு தறுகணர இமகிரண தருணவுடு ...... பதிசேர் சடாமவுலி ...... 9
இறைமகிழ வுடைமணியொ டணிசகல மணிகலென இமையமயில் தழுவுமொரு ...... திருமார்பி லாடுவதும் ...... 10
இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி றெரிபுகுத வுரகர்பதி ...... அபிஷேக மாயிரமும் ...... 11
எழுபிலமு நெறுநெறென முறியவட குவடிடிய இளையதளர் நடைபழகி ...... விளையாடல் கூருவதும் ...... 12
இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும் இலகுவெகு கடவிகட ...... தடபார மேருவுடன் ...... 13
இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற எழுபுவியை யொருநொடியில் ...... வலமாக வோடுவதும் ...... 14
எறுழிபுலி கரடியரி கரிகடமை வருடையுழை யிரலைமரை யிரவுபகல் ...... இரைதேர்க டாடவியில் ...... 15
எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய இனிதுபயில் சிறுமிவளர் ...... புனமீ துலாவுவதும் ...... 16
முதலவினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடு முதுவடவை விழிசுழல ...... வருகால தூதர்கெட ...... 17
முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையுமவை முடியவரு வதுமடியர் ...... பகைகோடி சாடுவதும் ...... 18
மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு முறியுமலர் வகுளதள ...... முழுநீல தீவரமும் ...... 19
முருகுகமழ் வதுமகில முதன்மைதரு வதும்விரத முநிவர்கரு தரியதவ ...... முயல்வார் தபோபலமும் ...... 20
முருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறு முககுமர சரணமென ...... அருள்பாடி யாடிமிக ...... 21
மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி முழுகுவதும் வருகவென ...... அறைகூவி யாளுவதும் ...... 22
முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு துலகறிய மழலைமொழி ...... கொடுபாடும் ஆசுகவி ...... 23
முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன முகுளபரி மளநிகில ...... கவிமாலை சூடுவதும் ...... 24
மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய மடுநடுவில் வெருவியொரு ...... விசையாதி மூலமென ...... 25
வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின் வகிருமட லரிவடிவு ...... குறளாகி மாபலியை ...... 26
வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய வளருமுகில் நிருதனிரு ...... பதுவாகு பூதரமும் ...... 27
மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில் மருகனிசி சரர்தளமும் ...... வருதார காசுரனும் ...... 28
மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி மறுகிமுறை யிடமுனியும் ...... வடிவேல னீலகிரி ...... 29
மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர வசனிபயி ரவிகவுரி ...... யுமையாள்த்ரி சூலதரி ...... 30
வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதை வநிதையபி நவையநகை ...... யபிராம நாயகிதன் ...... 31
மதலைமலை கிழவனநு பவனபய னுபயசதுர் மறையின்முதல் நடுமுடிவின் ...... மணநாறு சீறடியே ...... 32
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
உததியிடை கடவுமர கதவருண குலதுரக வுபலளித கனகரத ...... சதகோடி சூரியர்கள் ...... 1
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை யுகமுடிவின் இருளகல ...... ஒருசோதி வீசுவதும் ...... 2
......... சொற்பிரிவு .........
உததி இடை கடவும் மரகத அருண குல துரக உப லளித கனக ரத சதகோடி சூரியர்கள்
உதயம் என அதிக வித கலப கக மயிலின் மிசை யுக முடிவில் இருள் அகல ஒரு சோதி வீசுவதும்
......... பதவுரை .........
உததி இடை ... கடலின் நடுவில்,
கடவு ... கடுமையான வேகத்துடன் செலுத்தப்படுகின்ற,
மரகத அருண ... பசுமை செம்மை முதலான ஏழு நிறங்களை உடைய,
குல துரக ... உயர்ந்த ஜாதியைச் சார்ந்த ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட,
உப லளித ... வனப்பு வாய்ந்த,
கனக ரத ... பொன் மயமான தேரில்,
சத கோடி சூரியர்கள் உதயம் என ... எண்ணற்ற கோடிக்கணக்கான சூரியர்கள் உதித்தார்கள் என எண்ணும்படி,
அதிக வித கலப கக மயிலின் மிசை ... விவரித்துச் சொல்ல முடியாதபடி பல நிறங்களைக் கொண்ட தோகையை உடைய பட்சியான மயிலின் மேல்,
யுக முடிவில் இருள் அகல ... சதுர் யுக முடிவில் உலகெல்லாம் அழியும்படி பிரளய காலத்தில் தோன்றும் பேரிருள் போன இடம் தெரியாமல் ஓடிப் போக,
ஒரு சோதி வீசுவதும் ... ஒப்பற்ற பிரகாசத்தை வீசி எங்கும் வியாபித்திருப்பதும் (மண நாறு சீறடியே).
......... விளக்கவுரை .........
பூதக் கண்ணாடியிலும் கூட காண முடியாத அளவிற்கு மிகவும் சிறியதும் அளவற்ற எண்ணிக்கையில் இருப்பவைகள் உயிர்த் துகள்களாகும். இவைகளே இந்த பூவுலகத்திற்கு அருகாமையில் உள்ள புவர்லோகம் எனப்படும். தம்மை அணுவாக்கிக் கொண்டிருக்கும் காரணத்தால் அவைகளுக்கு ஆணவம் எனப் பெயர் பெற்ற மூல மலத்தின் தொடர்பால் இருள், மறதி, அறியாமை, துன்பம் இவைகள் தாம் இந்த அணுக்கள் பெற்ற அநுபவங்கள். கருணாமுர்த்தியாகிய இறைவன் இந்த நிலையைக் கண்டு உறாமல் சங்கல்பம் செய்ய விண்ணிலிருந்த அணுக்கள் காற்றின் வழியாகவும் மழை நீரின் வழியாகவும் பூமிக்கு வந்து சேர்ந்து, உணவு மூலமாக பரமனின் அருள் நாதத்தால் உருவான பலவித கருக்களில் சார்ந்து அந்தந்த உருவம் எடுக்கின்றன. இது மாதிரியே சுவை, ஒளி, உறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து வித தன் மாத்திரைகளும் அவ்வுயிர்களுடன் சேருகின்றன. இவ்விதமாக முன் சொன்ன ஏழு விதமான உருவங்களை முறையே தேவர், மனிதர், விலங்கு, ஊர்வன, பறப்பன, நீரில் வாழ்வன, தாவரம் எனும் உடல் பெறுகின்றன.
நுட்பமான உயிர்களுக்கு ஸ்தூலமான உடல்கள் இறைவனால் கூட்டப்படுகின்றன. ஆனால் மூர்ச்சை, நித்திரை, மரணம் என்னும் மூன்று நிலைகளிலும் ஆன்மா பல வித அணுவின் நிலையை கவனிக்க வேண்டும். இதிலிருந்து தெரிவது என்னவெனில் இந்த அணுக்களுக்கு எந்தவித தொழிலையும் இயற்றுவதற்கு சுதந்திரம் கிடையாது என்பதே. உடலில் உயிர்களை புகுத்தினபின் மனம், புத்தி, அகங்காரம் என்கிற அந்தக் கரணங்கள் இருத்தி இதற்காகவே தான் படைத்திருக்கும் புவனத்தில் இன்ப துன்பங்களை ஆன்மாக்கள் அனுபவிக்கச் செய்கிறான். அப்போது இருளின் மத்தியில் ஒளியும், மறதியில் நினைவும், அறியாமையில் அறிவும் துன்பத்தில் இன்பமும் தோன்றுகின்றன. இதனால் இவ்வுலகத்தை - மிஸ்ரம் (கலப்பு) - என்பர்.
எந்த வித கலப்பும் இல்லாமல் முழு அறிவும் ஒளியும் நினைவும் இன்பமும் கிடைக்குமா என்று ஏங்கும் ஆன்மாக்களுக்கு அப்படி ஒரு நிலை உள்ளது. அதுவே பெரு வாழ்வு என்று சொல்லப்படும் - வீடு பேறு - என்பதை வேதாகமங்கள் பரவலாக சொல்லி இருக்கின்றன. இந்த நிலையை அடைய பெரு முயற்சி எடுக்கிறது உயிர். இந்த ஆன்மீக வழியில் ஆன்மாக்கள் அழிந்து போகாமல் இயங்குவதற்காக உடல், கரணம், புவனம் இவைகளை ஏற்படுத்தி, கருணா மூர்த்தியான இறைவன் பாதுகாத்து வருகிறான். இவைகள் அனைத்தையும் உயிர்கள் அறிந்திருந்தும் ஆற்றிற்கு குளிக்கப் போய் சேற்றை பூசிக்கொண்டது போல் அவைகள் மேலும் மலத்தை சேர்த்துக் கொள்கின்றன. உடம்பை அளித்த கருணையை ஒரு போதும் உணராத உயிர்கள் இளைப்பாறும் வண்ணம் இறைவன் அவைகளை தன்னுள்ளே ஏற்றுக் கொள்கிறான். இதுவே - சம்ஹாரம் - எனப்படும். உடல், கரணம், புவனம் அனைத்தும் சம்ஹாரத்தில் மறைய அத்துடன் சூரியனும் சந்திரனும் சேர்ந்து மறைந்து போவதினால் பிரபஞ்சம் முழுவதும் அகண்ட இருள் சூழ்ந்து விடுகிறது.
இந்நிலையில் சில காலம் ஓய்வுபெற்ற உயிர்களை மீண்டும் செயலாக்க இறைவனின் திருவுள்ளம் எண்ணுகிறது. அப்போது இறைவன் சொருப இலக்கணத்திலிருந்து - தடள்தம் - எனப்படும் அரு உருவத் திருமேனியை தாங்குகிறான். மானைக் காட்டி மானைப் பிடிப்பது போல் தேகத்தைத் தாங்கும் உயிர்களுக்கு அருள் ஊட்டும் பொருட்டு தானும் ஒரு அருள் மேனி தாங்கி முருகனாக பெரிய தோகையுடன் பல நிறங்கள் கொண்ட மயிலின் மேல் காட்சி அளித்து நடனம் புரிகிறான். பிரணவத்தின் நாதம் ஒலிக்கும் அக்கடலின் நடுவில் கோடிக் கணக்கான சூரியர்கள் ஒரே சமயத்தில் உதயமாவது போல முருகப் பெருமானின் திருவடி ஒளி வீசுகிறது. இந்த பிரகாசம் சராசர பிரபஞ்சம் எங்கும் வியாபித்து காணப்படுகிறது. இதன் உந்துதலினால் படைப்பு முதலான செயல்கள் ஆரம்பமாகின்றன.
மயில் சுத்த மாயை. அதன் மேல் அமர்ந்திருக்கும் குமரன் ஞான சொருபன். பரிபூரண ஞானமாகிய முருகனின் திருவடி அகண்ட இருளை ஒழித்து பேரொளியைப் பரப்புகிறது. நக்கீரரும் இக் கருத்தை திருமுருகாற்றுப்படையின் தொடக்கத்தில்,
பலர் புகழ் ஞாயிறு கடர் கண்டாங்கு
... என்பார். அருணகிரியாரோ முருகப்பெருமானின் திருவடி ஒளியை ஒரு சூரியருக்கு ஒப்பு ஆகாது எனக் கருதி கோடிக் கணக்கான சூரியர்கள் என்கிறார்.
மரகத அருண
மரகத + வருண என பிரிப்பதை விட மரகத + அருண என பிரித்து பார்க்கையில் ஆழமான கருத்து வெளியாவதைக் காணலாம். மரகத நிறம் பசுமையையும் குளிர்ச்சியையும் குறிக்கும். சிவப்பு நிறம் ஒளியையும் ஞானத்தையும் குறிக்கும். இவற்றின் மத்தியில் மற்ற பளிக் கற்றைகள் அடங்கும். ஆகையால் மரகத அருண என பிரித்து பொருள் கொள்வது மிகவும் பொருத்தம் உள்ளது. இறைவன் தனக்கென ஒரு உருவம் இல்லாதவன் எனினும் உலகை பாதுகாத்து நடத்துவதற்காக பல உருவங்களை எடுக்கிறான். தான் கருவில் பிறவாத வகையில் இருந்தாலும் உயிருக்கு உயிராய்த் திகழ்கிறான். இதை அப்பர் பெருமான்,
உருவாகி என்னைப் படைப்பாய் போற்றி
... என்பார் (திருத் தாண்டகம்).
உடலுமுட லுயிருநிலை பெருதல்பொரு ளெனவுலக மொருவிவரு மநுபவன ...... சிவயோக சாதனையில் ...... 3
ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி யுணர்வுவிழி கொடுநியதி ...... தமதூடு நாடுவதும் ...... 4
......... சொற்பிரிவு .........
உடலும் உடல் உயிரும் நிலைபெறுதல் பொருள் என உலகம் ஒருவி வரும் மநுபவன சிவ யோக சாதனையில்
ஒழுகும் அவர் பிறிது பரவசம் அழிய விழி செருகி உணர்வு விழி கொடு நியதி தமது ஊடு நாடுவதும்
......... பதவுரை .........
உடலும் ... ஐம்பூதத்தின் செயர்க்கையாக அமர்ந்திருக்கும் இந்த்த் தேகமும்,
உடல் உயிரும் ... உடலின் உள் இருந்து கொண்டு சதா துன்பங்களைத் தரும் உயிரும்,
நிலை பெறுதல் ... அழிய விடாமல் சதேக முக்தி அடைவதையே,
பொருள் என ... நாம் அடைய வேண்டிய குறி என எண்ணி,
உலகம் ஒருவி ... உலகப் பற்றை அடியோடு நீக்கி,
வரும் ... அந்தப் பக்குவ நிலையில் தோன்றும்,
மநு பவன ... மந்திரங்களுக்கு இருப்பிடமான,
சிவ யோக சாதனையில் ... சிவ யோக பயிற்சியில்,
ஒழுகுமவர் ... நெடிது காலம் நிலை பெற்று நிற்கும் யோகிகள்,
பிறிது பரவசம் அழிய ... கருவி கரணங்கள் வசம் வெளிபட்டுக் கொண்டிருக்கும் நிலமை கெட,
விழி செருகி ... புறக் கண்கள் சுழுமுனையை நோக்கும் நிலையில் மயிர் பாலம் என்று சொல்லப்படும் நெற்றியின் நடு இடத்தில் செருகி நிற்க,
உணர்வு விழி ... ஞானக் கண் கொண்டு,
நியதி ... யோக சாஸ்திரத்தில் விளக்கி இருக்கும் முறைப்படி,
தமதூடு ... தனது இதய கமலமாகிய தகராகாசத்தில்,
நாடுவதும் ... விரும்பி நோக்கியபடி இருப்பதும் (மண நாறு சீறடியே).
......... விளக்கவுரை .........
அதிக வெம்மையும் அதிக குளிர்ச்சியும் இல்லாமல் சமமான இடத்தில், பொருத்தமான பீடத்தில் அமர்ந்து பத்மாசனம் முதலிய நிலையில் வடக்கு பார்த்து இருந்து தீட்சை புரிந்த ஆச்சார்யனின் திருவடி மலர்களை குகப் பெருமானின் திருவடிகளாக பாவித்து மனமும் புலன்களும் தம் போக்கில் போக விடாதபடி தடுக்க வேண்டும். மனம் அடங்கினால் பிராணவாயுவும் அமைதி பெறும். பிராணயாமம் மூலம் நாடிகளை சுத்தி செய்து, சுழுமுனையில் பிராணவாயுவை இழுத்து, நெற்றியின் நடுவில் ஒரு நீல ஒளி இருப்பதாக பாவித்து, வாயுவையும் நாட்டத்தையும் அங்கே செலுத்தி, லடாக யோகம் எனப்படும் நெற்றிக்கு நேரே புருவத்தின் இடையில் உற்று உற்று பார்க்க ஒளிவிடும் மந்திரம்.
பற்றுக்கு பற்றாய் பரமன் இருந்திடம் சிற்றம்பலம் என்று தேர்ந்து கொண்டேனே
... ... திருமந்திரம்
இந்த யோக மார்க்கத்தை ஆதிமுலர் முதல் இக்காலத்தில் யோகாடா முறையில் பயிலும் அமெரிக்கராகிய ராய் டேவிஸ் (Roy Davis) முதலியோர் பயின்று வருகின்றனர்.
நிலை பெறுதல்
யோகிகள் இந்த பூத உடம்புடன் முக்தி அடைவார்கள் என்பதை
இந்தச் சடமுடன் உயிர் நிலை பெற
... என்ற அடிகள் மூலம் அருணகிரியார் அமோதிக்கிறார் ( எந்தத் திகையினும் - சுவாமிமலை திருப்புகழ்). இக்கருத்திற்கு பிரத்யேக சான்றாக இருப்பவர்கள் சைவ சமய ஆச்சார்யர்கள் நால்வருமே.
உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு முழலுவன பரசமய ...... கலையார வாரமற ...... 5
உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ வுளபடியை யுணருமவ ...... ரநுபூதி யானதுவும் ...... 6
......... சொற்பிரிவு .........
உரு எனவும் அரு எனவும் உளது எனவும் இலது எனவும் உழலுவன பரசமய கலை ஆரவாரம் அற
உரை அவிழ உணர்வு அவிழ உளம் அவிழ உயிர் அவிழ உளபடியை உணரும் அவர் அநுபூதி ஆனதுவும்
......... பதவுரை .........
உரு எனவும் ... இறைவன் உருவத் திரு மேனி உடையவன் என்பார் சிலர்,
அரு எனவும் ... இல்லை, அவருக்கென்று உருவம் கிடையாது அவர் நிஷ்கள ருபன் என்பார் சிலர்,
உளது எனவும் ... எங்குமுள்ள பரம் பொருளே இறைவன் என்பது ஒரு கொள்கை,
இலது எனவும் ... கடவுள் என்கின்ற தத்துவமே கிடையாது என்பவர்களும்,
உழலுவன ... இவர்கள் எல்லோரும் மெய்ப் பொருளை காணாமல் பயனின்றி பொழுதைப் போக்கும்,
பரசமய ... பொய் சமயங்களின்,
கலை ஆரவாரம் அற ... தர்க்கம் செய்து கூச்சல் எழுப்பும் நிலை முற்றும் ஒழியவும்
உரை அவிழ ... பேச்சு நின்று மெளனம் உறவும்,
உணர்வு அவிழ ... உணர்ச்சி சிறு எல்லையை விட்டு பெரிய சுற்றில் திகழவும்,
உளம் அவிழ ... நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருகி,
உயிர் அவிழ ... நான் தான் என்று முனைப்புடன் நிற்கும் அகங்காரம் அவிழ்ந்து போக,
உளபடியை ... எப்போதும் சாஸ்வதமாய் திகழும் மெய்ப் பொருளை,
உணருமவர் ... உணர்ந்து அநுபவிக்கும் சிவ ஞானிகளின்,
அநுபூதி ஆனதுவும் ... ஞான சொருபமாக விளங்குவதும் (மண நாறு சீறடியே).
......... விளக்கவுரை .........
சமயங்கள் அனைத்தும் பரம் பொருளை அடைவதற்கு வழியைக் காண்பித்தாலும் முடிவில் சென்று அடையும் இடம் ஒன்றுதான் என்பதை உணராததால், சமய சச்சரவுகள் தலை தூக்கி நிற்கின்றன. இந்தப் பகைமை நீங்கி, உணர்வு மலர்ந்து, உள்ளம் நெகிழ்ந்து, தன்முனைப்பு கெட்ட இடத்தில் முருகப்பெருமானின் திருவடி ஞான அநுபவமாய் காட்சி அளிக்கிறது. கந்தக் கடவுள் பரமசிவருக்கு உபதேசித்த சமயம் அவருக்கு இதே நிலை ஏற்பட்டது என்பார் அருணகிரியார். இக்கருத்தை, சயிலாங்கனை எனத் தொடங்கும் மதுராந்தகத்துத் திருப்புகழில்,
சதிதாண்ட வத்தர் சடையி டத்துக் கங்கை வைத்த நம்பர் ...... உரைமாளச்
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத் த்வம்பெ றப்ப கர்ந்த ...... உபதேசம்
... என்கிறார்.
உணர்வு அவிழ, உளம் அவிழ, உயிர் அவிழ
.. உணர்வு அவிழ்தல் என்றால் பார்த்ததை எல்லாம் உணராதபடி விடுதலை பெறும் முறையில் மலர்ச்சி அடையும் நிலை ஆகும். .. உள்ளம் - உள் நின்று காரியங்களைச் செய்வதால் இதற்கு அந்தக்கர்ணம் என்று பெயர். மெழுகு அனலில் கரைவது போல் அது உருக வேண்டும். .. 96 தத்துவங்களும் கடந்த இடத்தில் பாசம் நீங்கி - இருவினை ஒப்பு மல பரிபாகம் - எய்த உயிர் தழை விடுவதே - உயிர் அவிழ என்கிறார். உயிர்களோடு கலந்து அத்துவிதமாயும் எல்லாம் தன்னுள் அடங்கிய எல்லை இல்லாத சிவமயமாய் நிற்கும் நிலயே அநுபூதி நிலை.
இதற்கு முன் வரிகளில் திருவடியின் தியானத்தைப் பற்றி கூறிய அருணகிரியார், அந்த தியானத்தினால் ஏற்படும் சிவயோகத்தின் முதிர்வில் கிடைக்கும் மெளன சாம்ராஜ்ய இன்ப அநுபவத்தை இவ்வரிகளில் கூறியுள்ளார். கீழ்க்கண்ட வரிகளை ஆழ்ந்து ஆராய்ந்தால் பெரும் உண்மை தெரிய வரும்.
1. திருப்பொற் பாதத் தநுபூதி சிறக்கப் பாலித் ... தருள்வாயே
கருப்பற்றூறி ... திருப்புகழ் - பொதுப்பாடல்கள்,
2. சராசர வியாபக பராபர மநோலய சமாதிய நுபூதிபெற ... நினைவாயே
இலாபமில் ... திருப்புகழ் - விராலிமலை,
3. யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள் உள்ளக்க ணோக்கு ... மறிவூறி
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி லுள்ளத்தை நோக்க ... அருள்வாயே
ககனமும் அநிலமும் ... திருப்புகழ் - வள்ளிமலை.
வேதத்திலும் சித்தாந்தத்திலும் கூறப்படும் அநுபூதி நிலை ஒன்றேயாகும். இந்த உண்மையை அறிந்தவர்களே சித்தர்கள் என்ற கருத்தை தாயுமானவர்,
வேதாந்த சித்தாந்த சமரச நன்நிலை பெற்ற வித்தக சித்தர் கணமே
... என்பார்.
உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதய வுருவுடைய மலினபவ ...... சலராசி யேறவிடும் ...... 7
உறுபுணையு மறிமுகமு முயரமரர் மணிமுடியில் உறைவதுவு முலைவிலது ...... மடியேன் மனோரதமும் ...... 8
......... சொற்பிரிவு .........
உறவு முறை மனைவி மகவு எனும் அலையில் எனது இதயம் உருவுடைய மலினம் பவம் சல ராசி ஏற விடும்
உறுபுணையும் அறிமுகமும் உயரி அமரர் மணி முடியில் உறைவதுவும் உலைவிலதும் அடியேன் மனோரதமும்
......... பதவுரை .........
உறவு முறை ... உற்ற சொந்தம் என்கிற முறையில் வரும்,
மனைவி மகவு எனும் அலையில் ... மனைவி மக்கள் எனப்படும் அலைகள் வீசுகின்ற,
எனது இதய ... எனது உள்ளத்தைப் போன்ற,
உருவுடைய ... சொருபம் உள்ள,
மலின ... பாவங்கள் நிறைந்த,
பவ சல ராசி ... பிறவிக் கடலில் இருந்து,
ஏறவிடும் ... ஏறச் செய்யும்,
உறுபுணையும் ... திடமான தெப்பமும் (மண நாறு சீறடியே)
அறிமுகமும் ... ஞான உலகத்திற்கு வாயில் போன்றதும்,
உயர் அமரர் மணி முடியில் ... சீலம் மிக்க தேவர்களின் மகுடம் தரித்த தலைகளில்
உறைவதுவும் ... தங்குவதும் (மண நாறு சீறடியே)
உலைவிலதும் ... அழிவில்லாததும் (மண நாறு சீறடியே)
அடியேன் மனோ ரதமும் ... அடியேனுடைய சித்தற்கு இலக்காக இருப்பதுவும் (மண நாறு சீறடியே).
......... விளக்கவுரை .........
நமக்கு பிறவியினால் வரும் சொந்த பந்தங்களைத் தவிர திருமண மூலமாக மற்றுமொரு கிளை ஆரம்பமாகிறது. இந்த சங்கிலித் தொடரில் முதல் சங்கிலி மனைவி. அவள் மூலமாக மக்கள். இதையே மனைவி மகவு என்கிறார். நம் மனம் சதா பாவ காரியங்களையே எப்போதும் எண்ணிக் கொண்டிருப்பதினால் அதில் அழுக்கு படிந்து விடுகிறது. இதனால் பிறவிக்கடலாகிய அழுக்குக் கடலில் மூழ்கி விடுகிறோம். ஏழு பிறவிக் கடலிலிருந்து ஏற்றிவிடும் நற்கருணை ஓடக்காரனான முருகப் பெருமானின் மணம் நாறும் சீறடிகளே நாம் சேருவதற்குறிய தெப்பமாகும். இக் கருத்தை கந்தர் அந்தாதியில்,
அனக புரி வாசல் நீக்க திறவு ஆ
... என்பார். அதையே இங்கு ஞானம் அடைய வாசலாக திகழ்கிறார் முருகப் பெருமான் என்கிறார்.
எனது ஆவி கவர் சீர் பாதம்
... என்பார் காதோடு எனத் தொடங்கும் திருமாகாளம் திருப்புகழில்.
இதழிவெகு முகககன நதியறுகு தறுகணர இமகிரண தருணவுடு ...... பதிசேர் சடாமவுலி ...... 9
இறைமகிழ வுடைமணியொ டணிசகல மணிகலென இமையமயில் தழுவுமொரு ...... திருமார்பி லாடுவதும் ...... 10
......... சொற்பிரிவு .........
இதழி வெகுமுக ககனநதி அறுகு தறுகண் அரவு இம கிரண தருண உடுபதி சேர் சடா மவுலி
இறை மகிழ உடை மணியோடு அணி சகல மணி கலென இமைய மயில் தழுவும் ஒரு திரு மார்பில் ஆடுவதும்
......... பதவுரை .........
இதழி ... கொன்றையும்,
வெகு முக ககன நதி ... அளவற்ற கிளைகளை உடைய ஆகாச கங்கையையும்,
அறுகு ... அறுகம் புல்லையும்,
தறுகண் அரவு ... அஞ்சாமையையும் வீரமும் உடைய வாசுகி என்கின்ற சர்ப்பத்தையும்,
இமகிரண தருண உடுபதி ... குளிர்ந்த ஒளி கிரணங்களை உடையதும் இளமை பொருந்தியதும் நட்சத்திர கூட்டங்களுக்கு தலைவனான சந்திரனையும்,
சேர் ... சேர்த்து வைத்துக் கொண்டுள்ள,
சடாமவுலி ... ஜடையாளராகிய,
இறை ... எல்லாப் பொருள்களிலும் விளங்கும் சிவ பொருமான்,
மகிழ ... இன்பமடைய,
உடை மணியோடு ... அரை மணியில் அணிந்துள்ள,
அணி சகல மணி கலென ... அணிந்திருக்கும் தண்டை, வெண்டையம், கிண்கிணி சதங்கை முதலிய ஆபரணங்களின் கலின் என ஒலிக்கும்,
இமைய மயில் தழுவும் ... இமவான் மடந்தையாகிய பார்வதி தேவி தழுவிக் குழையும்,
ஒரு திரு மார்பில் ஆடுவதும் ... ஒப்பற்ற பரமனின் மார்பில் விளையாடல் செய்வதுவும் (மண நாறு சீறடியே).
......... விளக்கவுரை .........
கொன்றை மலர் இறைவன் பிரணவ சொருபி என்பதை விளக்கும் திரு அடையாள மாலையாகும். ஆயிரம் முகங்களை உடைய கங்கை நதி ஆங்காரத்துடன் உலகை அழிக்க வரும்போது, உலகைக் காக்கும் பொருட்டு வேகம் கெடுத்து ஆண்ட வேந்தனாகிய பரமன் அறுகு நுனி பனி போல தனது சடையில் வைத்துக் கொண்டான். இது ஜீவாத்மாக்களின் ஆங்காரத்தை அடக்கி பரமன் தன்னுள்ளே சேர்த்துக் கொள்வதைக் குறிக்கிறது. உயிர்களின் மூல உஷ்ணத்தை தணிப்பதற்கு அடையாளமாக அறுகையும் பரிக்கிரக சக்தியாகிய சர்ப்பங்களை ஏவல் இட்டு அனுப்புவது தான் என்பதைக் காட்ட சர்ப்பங்களையும் சரணாகதியாக தன் காலில் விழுந்தவரையும் காப்பாற்றுவது தான் என்பதைக் காட்ட தக்ஷ யாகத்தில் சபிக்கப்பட்ட சந்திரனை தன் தலையில் தாங்கிக்கொண்டிருப்பதையும் காணலாம். எல்லா ஆக்கங்களையும்கொண்டிருந்தும் பற்றற்றவன் என்பதைக் காண்பிக்க ஜடா முடியனாக இறைவன் உள்ளான். சிவன் 'அ' கார ரூபன். தேவி 'உ' காரவடிவினள். மயில் 'ம' காரம். இங்கு ஓங்காரத்தின் எதிரொலி வருகிறது. இந்த ஓங்காரத்தின் நடு பீடத்தில் ஆனந்தமாக முருகன் ஆடல் புரிகிறான்.
இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி றெரிபுகுத வுரகர்பதி ...... அபிஷேக மாயிரமும் ...... 11
எழுபிலமு நெறுநெறென முறியவட குவடிடிய இளையதளர் நடைபழகி ...... விளையாடல் கூருவதும் ...... 12
......... சொற்பிரிவு .........
இமையவர்கள் நகரில் இறை குடி புகுத நிருதர் வயிறு எரி புகுத உரகர்பதி அபிஷேகம் ஆயிரமும்
எழுபிலமும் நெறுநெறென முறிய வடகுவடு இடிய இளைய தளர் நடைபழகி விளையாடல் கூருவதும்
......... பதவுரை .........
இமையவர்கள் நகரில் ... இமைப்பது இல்லாத விண்ணவரின் பொன்னுலகில்,
இறை குடி புகுத ... இந்நகரின் மன்னனாகிய இந்திரன் மீண்டும் குடியேற,
நிருதர் வயிறு புகுத ... சூரபத்மனின் வயிற்றில் கலி என்ற ஜீரம் நுழைய,
உரகர் பதி ... சர்ப்ப ராஜனான ஆதிஷேசனின்,
அபிஷேக ஆயிரமும் ... ஆயிரம் பணாமுடிகளும்,
எழுபிலமும் ... அதலம் முதல் ஏழு பாதாள உலகங்களும்,
நெறுநெறென முறிய ... மட மடனென முறிந்து போகவும்,
வட குவடு இடிய ... வடக்கில் உள்ள மேரு மலையின் சிகரங்கள் இடியவும்,
இளைய தளர் நடை பழகி ... இளம் பருவத்து தளர்ந்த நடையைப் பயின்று,
விளையாடல் கூருவதும் ... திருவிளையாடல் செய்வதும் (மண நாறு சீறடியே).
......... விளக்கவுரை .........
முருகப் பெருமான் மெல்ல தள்ளாடி தள்ளாடி வருவது சூதகமாக எதிர் காலத்தைக் குறிக்கிறது. தூக்கி எடுக்கும் திருவடி எதிர் காலத்தில் இந்திரனைத் தூக்கி விண்ணில் குடியேற்றப் போவது. ஊன்றிய திருவடி அவுணர் குலத்தை நிலத்தோடு நிலமாக தே...ப் போவது. திருவடிகளின் அதிர்ச்சியில் உலகையே தாங்கும் ஆதிஷேசனின் ஆயிரம் பணாமுடிகள் துன்பப்பட்டாலும் உயிர்களுக்கு எந்த விதமான இன்னலும் நேரவில்லை என்பது தெரிகிறது. 'மணங்கமழ்' எனத் தொடங்கும் கந்தர் அலங்காரப் பாடலில்,
... வேலெடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளை திருவரையிற் கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே
முருகன் நாதத்தத்துவம். ஆகையால் அந்த ஓசைகள் அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒலிக்கின்றன. மூலங்கிளர் எனத்தொடங்கும் பழநித் திருப்புகழில்,
காலின்கழ லோசையு நூபுர வார்வெண்டைய வோசையு மேயுக காலங்களி னோசைய தாநட ...... மிடுவோனே
... என்பார்.
இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும் இலகுவெகு கடவிகட ...... தடபார மேருவுடன் ...... 13
இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற எழுபுவியை யொருநொடியில் ...... வலமாக வோடுவதும் ...... 14
......... சொற்பிரிவு .........
இனிய கனி கடலை பயறு ஒடியல் பொரி அமுது செயும் இலகு வெகுகட விகட தட பார மேருவுடன்
இகலி முது திகிரி கிரி நெரிய வளை கடல் கதற எழு புவியை ஒரு நொடியில் வலமாக ஓடுவதும்
......... பதவுரை .........
இனியகனி ... இனிப்புள்ள வாழை, மா, பலா முதலிய பழங்களையும்,
கடலை பயிர் ... கடலை பயிறு,
ஒடியல் ... பனங்கிழங்கின் பிளவு,
பொரி ... பொரி ஆகியவற்றை,
அமுது செயும் ... திரு அமுதாக உட்கொள்ளும்,
இலகு ... விளங்குகின்ற,
வெகு கட ... அதிகமாக பாயும் மத நீரையும்,
விகடம் ... விசித்திரமான அழகும் உள்ள,
தட பார மேருவுடன் ... பரவிய மகிமை உள்ள மேரு மலை போன்ற கணபதியுடன்,
இகலி ... பகைமை கொண்டது போல் நடித்து,
முது திகிரி கிரி நெரிய ... பழைய சக்ரவாள கிரி நெரியுறவும்,
வளை கடல் கதற ... உலகை வளைத்துள்ள கடல் பயந்து பேரொலி கிளப்பவும்,
எழு புவியை ... கீழ் மேல் தலா ஏழு உலகங்களை,
ஒரு நொடியில் வலமாக ஓடுவதும் ... ஒரு நொடிப் பொழுதில் பிரதட்சணமாக ஓடி வந்ததும் (மண நாறு சீறடியே).
......... விளக்கவுரை .........
இந்தப் போட்டியின் உண்மையான தத்துவத்தின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு பேரும் கனியைக் கேட்டால் சிவ பெருமான் கனியை இரண்டாக்கி தர முடியாதவரா?. ஆனால் அது சாதாரண கனி அன்று. அது பூரண ஞானம். ஞானத்தை இரண்டாகப் பிரிக்க முடியாது. உலகத்தின் ஆதி கர்த்தாவாகிய சிவபிரானால் இன்னொரு கனியை சிருஷ்டித்துத் தர முடியாதா? இந்த விளையாட்டின் மூலம் உலகத்திற்கே ஒரு பெரும் தத்துவத்தை உணர்த்துகிறார். சராசரமும் தம்முள் அடங்கியது என்பதை கணபதியும், தாம் பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பதை இளைய பிள்ளையாரும் காண்பிக்கிறார்கள். கணபதி சாத்வீக ஆகாரங்களை உண்டு ஒப்பில்லாத வலிமை படைத்துள்ளார் என்பது சாத்வீக உணவின் வல்லமையை உறுதி செய்கிறது.
எறுழிபுலி கரடியரி கரிகடமை வருடையுழை யிரலைமரை யிரவுபகல் ...... இரைதேர்க டாடவியில் ...... 15
எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய இனிதுபயில் சிறுமிவளர் ...... புனமீ துலாவுவதும் ...... 16
......... சொற்பிரிவு .........
எறுழி புலி கரடி அரி கடமை வருடை உழை இரலை மரை இரவு பகல் இரை தேர் கடாடவியில்
எயினர் இடும் இதண் அதனில் இளகு தினை கிளி கடிய இனிது பயில் சிறுமி வளர் புனம் மீது உலாவுவதும்
......... பதவுரை .........
எறுழி ... காட்டுப் பன்றிகளும்,
புலி ... புலிகளும்,
கரடி ... கரடிகளும்,
அரி ... சிங்கங்களும்,
கடமை ... காட்டு பசுக்களும்,
வருடை ... மலை ஆடுகளும்,
உழை இரலை மரை ... (மான்களின் வகைகள்) பலவிதமான மான் இனங்களும்,
இரவு பகல் ... எப்பொழுதும்,
இரை தேர் ... உணவைத் தேடித் திரிகின்ற,
கடாடவியில் ... அடர்ந்த பெரும் காட்டில்,
எயினர் இடு ... வேடுவர்களால் அமைக்கப்பட்ட,
இதண் அதனில் ... பரணில் அமர்ந்து,
இளகு தினை கிளி கடிய ... வளப்பம் மிக்க தினைப் பயிரை உண்ண வரும் கிளி வகைகளை ஓட்ட,
இனிது பயில் ... ஆலோலம் பாடிக்கொண்டே ஓட்டும் வழக்கத்தை நன்றாக பழகி வந்த,
சிறுமி ... வள்ளிப் பிராட்டி,
வளர் ... அருமையாக வளர்ந்து வந்த,
புனம் மீது உலாவுவதும் ... தினைப் புனத்தில் உலாவிக் கொண்டிருப்பதுவும் (மண நாறு சீறடியே).
......... விளக்கவுரை .........
அச்சம் விளைவிக்கும் பெரும் காட்டில் தன்னுடைய அடியாரானவளும் தன்னால் முன்பு வரம் கொடுக்கப்பட்டவளுமாகிய வள்ளிப் பிராட்டியை ஆட்கொள்ள வந்த விதத்தில் முருகனுடைய எளிமை கூறப்பட்டது.
பெரும்பைம் புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரனை
... எனும் (6 வது) கந்தர் அலங்கார அடிகளில் இக்கருத்தை காணலாம். பக்திப் பயிரை வளர்ப்பது சாதாரண காரியம் அன்று. காமம் குரோதம் போன்ற பறவைகள் பயிரை தின்ன வரும்போது வைராக்கியம் என்னும் கவணில் முருகக் கடவுளின் திரு நாமாக்கள் என்னும் கற்களை வைத்து பறவைகளை துரத்துகிறாள் வள்ளிப் பிராட்டி.
மேவியபு னத்திதணில் ஓவியமெ னத்திகழு மேதகு குவத்திதிரு வேளைக் காரனே
... 4. திருவேளைக்காரன் வகுப்பு
ஓமெழுத்தி லன்பு மிகவூறி ஓவியத்தி லந்த ...... மருள்வாயே
... காமியத்தழுந்தி - சுவாமிமலைத் திருப்புகழ்.
முதலவினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடு முதுவடவை விழிசுழல ...... வருகால தூதர்கெட ...... 17
முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையுமவை முடியவரு வதுமடியர் ...... பகைகோடி சாடுவதும் ...... 18
......... சொற்பிரிவு .........
முதலவினை முடிவில் இரு பிறை எயிறு கயிறு கொடு முதுவடவை விழிசுழல வருகால தூதர்கெட
முடுகுவதும் அருள் நெறியில் உதவுவதும் நினையுமவை முடிய வருவதும் அடியர் பகைகோடி சாடுவதும்
......... பதவுரை .........
முதலவினை முடிவில் ... பிறவிக்கு வித்தான வினைகளை அனுபவித்து முடிந்த காலத்தில்,
இரு பிறை எயிறு ... சந்திரனின் பிறை போன்று வளைந்த பற்களும்,
கயிறு கொடு ... பாசக் கயிற்றையும் கொண்டு,
முது வடவை விழி சுழல ... பெரிய வடவாமுகாக்னி போன்ற தீப்பொறிகளைக் கக்கும் கண்கள் சுழலும்படி,
வரு ... உயிர்களைப் பிடித்துக் கொண்டு பொக வரும்,
கால தூதர் கெட ... எம தூதர்கள் பின் வாங்கி ஓட,
முடுகுவதும் ... அவர்களை விரட்டி துரத்துவதும் (மண நாறு சீறடியே)
அருள் நெறியில் உதவுவதும் ... உயிர்கள் ஆன்மீக வழியில் செல்லுவதற்கு உதவி புரிந்து கொண்டிருப்பதும் (மண நாறு சீறடியே)
நினையுமவை முடிய வருவதும் ... எண்ணிய எண்ணங்களெல்லாம் இனிதே நிறை பெற உற்ற துணையாக நிற்பதுவும் (மண நாறு சீறடியே)
அடியர் பகை கோடி சாடுவதும் ... அடியவர்களுக்கு ஏற்படும் உட்பகை புறப்பகை போன்றவைகளை மோதி அழிப்பதுவும் (மண நாறு சீறடியே).
......... விளக்கவுரை .........
சில பயிர்கள் குறுகிய காலத்தில் பலனைத் தரும். சில பயிர்கள் பலனைத் தர பல வருடங்கள் ஆகும். அதுபோல வினைகளும் தத்தம் வலிமை எளிமைக்கு ஏற்றபடி அந்தந்த கால கட்டத்தில் வினைப் பயனைத் தரும். இதையே 'முதலவினை' என்கிறார். முன் செய்த வினைகளே சஞ்சித பிரராப்த்த கர்மங்களாய் வரும். இக் கர்மாக்களை அனுபவிக்கக் காரணமாகிய இந்த உடம்பு இன்ப துன்பங்களை அனுபவித்து முடிந்தவுடன் உயிர் தினை அளவு கூட உடம்பில் நிலைத்து நிற்காது. பட்டினத்தார் சொல்லுவார்,
வினைப் போகமே இத்தேகம் கண்டாய் வினை தான் ஒழிந்தால் தினைப் போதளவு நில்லாது கண்டாய்
... என்று.
பிரராப்த்த கர்மாக்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் போதே மேலும் மேலும் ஆகாமிய வினைகளை ஏற்றிக்கொண்டே போகும் உயிரை உடலிலிருந்து பிரித்துச் செல்வதற்கு பயங்கரமான கோலத்துடன் எம தூதர்கள் வருகிறார்கள். சூக்கும பாசத்தால் சுவாசத்தில் கோத்து இழுத்துக்கொண்டு செல் சமயம் நமக்குத் துணையாக யார் வருவார்கள் ? அப்போது முருகப் பெருமானின் திருவடிகள் கால தூதர்களை விரட்டி, ஞான மார்க்கத்தில் செலுத்தி சாயுச்சிய பதவிக்கு கொண்டு செல்கின்றன. தன் அடியார்களைப் பிடிக்க எமனே நேரில் வந்தாலும்,
ஒரு மகிட ...... மிசை ஏறி
அந்தகனும் எனை அடர்ந்து வருகையினில் அஞ்சல் எனவலிய ...... மயில் மேல் நீ
அந்த மறலியோடு உகந்த மனிதன் நமது அன்பன் என மொழிய ...... வருவாயே
... என்பார் ( தந்தபசி - திருச்செந்தூர் திருப்புகழ்). வேண்டுவோர் வேண்டுவன ஈவதில் முருகனுக்கு இணை முருகனே. இக்கருத்தை ஆதிசங்கரரும் சுப்ரமண்ய புஜங்கத்தில் புகழுகிறார். எம பயத்தைக் கடப்பதற்கு உபதேச மூலமாக ஒரு சூழ்ச்சி கற்று தருகிறார். பெருத்த வசன வகுப்பில்,
இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர் கடக்க விடுவதொர் இயற்கை அருள்வதும்
... என்பார். முருகனுடைய வள்ளல் தன்மையை
யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் தியாகாங்க சீலம் போற்றி
... எனவும் அடியவர்களின் பகையை முருகன் அழிப்பதை தேவேந்திர சங்க வகுப்பில்
பகையாமாந்தர்கள் அந்தகன்
... என்கிறார்.
மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு முறியுமலர் வகுளதள ...... முழுநீல தீவரமும் ...... 19
முருகுகமழ் வதுமகில முதன்மைதரு வதும்விரத முநிவர்கரு தரியதவ ...... முயல்வார் தபோபலமும் ...... 20
......... சொற்பிரிவு .........
மொகு மொகு என மதுபம் முரல் குரவு விளவினது குறு முறியும் மலர் வகுள தள முழு நீல தீவரமும்
முருகு கமழ்வதும் அகில முதனை தருவதும் விரத முநிவர் கருத அரிய தவம் முயல்வார் தபோ பலமும்
......... பதவுரை .........
மொகு மொகு என ... மொகு மொகு எனும் ஒலியுடன்,
மதுபம் ... சித்தர்களாகிய வண்டுகள் ரீங்காரம் செய்யும்,
குரவு ... குரா மலரும்,
விளவினது குறு முறியும் ... விளா மரத்தின் இளந்தளிரும்,
வகுள தள ... மகிழ மரத்தின் தளிர்கள் கூடிய மலர்களும்,
முழு நீலம் ... பெரிய செங்குவழை மலர்களும்,
தீவரமும் ... இந்தீவரம் எனப்படும் கருங் குவளை மலர்களையும் (நீலோற்பலம்),
முருகு கமழ்வதும் ... மணம் வீசி விளங்குவதும் (மண நாறு சீறடியே)
அகில முதன்மை தருவதும் ... எல்லாவற்றுளும் முதன்மை ஸ்தானத்தை வழங்க வல்லதும் (மண நாறு சீறடியே)
விரத முநிவர் ... பல விதமான விரதங்களை அநுஷ்டிக்கும் தியாக சீலர்கள் கூட,
கருத அரிய ... நினைக்க முடியாத அளவிற்கு,
தவம் முயக்வார் ... தவத்தை முயன்று செய்கின்ற மேலோரின்,
தபோ பலமும் ... தவத்தின் பயனாக முத்தியைத் தருவதும் (மண நாறு சீறடியே)
......... விளக்கவுரை .........
தெய்வீக வண்டுகள் முருகப் பெருமானின் திருவடிகளில் விளங்கும் சிவ ஞான அமுதைப் பருகுவதற்காக மொகு மொகு என திரண்டு நிற்கின்றன. குரா மலரை ஞான ஆச்சாரியன் தனது சீடர்களுக்கு உபதேசம் செய்யும் வேளைகளில் தரிக்கக் கூடியதாகையினால் தான் ஒருவனே எல்லாரையும் விட உயர்ந்த குருபரன் என்பதை விளக்க குரா மலர் மலையையும், செந்தமிழில் விளவு என்றால் கலப்பு எனும் பொருளாதலால் உயிர்களை இறுதியில் தன் திருவடி நிழலில் கலக்கச் செய்துகொள்பவன் தானே என்பதை விளக்க விளாந் தளிரையும், பேரானந்தத்தை தருபவன் தானே என்பதைக் காண்பிக்க மகிழ மலரையும் மும்மலங்களாலும் பிணையப்பட்டு வாடும் உயிர்களை முழுமை அடையச் செய்பவன் தானே என்பதால் முழு நீல மலரையும், மாயா மண்டலம் தன் ஆட்சியில் அடங்கி, விரிந்து சுருங்குவது என்பதை விளக்க கருங் குவளை மலரையும் தரித்திருக்கிறான் கந்தப் பெருமான்.
விரத முநிவர்களின் நிலை
மனம் லோக விஷயாதிகளின் சென்று சலியாமலும், ஒருமை நோக்கத்துடன் பிறக்கும் போது நேர்ந்த பிறப்பொன்றும் குரு தீட்சையால் ஏற்பட்ட பிறப்பொன்றும் ஆக இரு வகைப் பிறப்பினையும் ஆராய்ந்து காலை, பகல் மாலை எனும் முச்சந்திகளிலும் ஜெபம், தர்ப்பணம், அநுஷ்டானம், ஹோமம் எனும் செயல்களை எல்லாம் தவறாமல் செய்து, நான்மறைகளை ஓதி நீத்தார் வழிபாடு, தெய்வ வழிபாடு, அதிதி பூஜை, சுற்றத்தாருக்கு உணவு அளிப்பது, பின்னர் தன் பசி ஆற்றுவது என்று சொல்லப்படும் ஐந்து வகை வேள்விகளை ஆற்றி பிரணவத்தை சதா தியானம் செய்து கொண்டு சிவ புண்ணியத்தால் தானும் வாழ்வாங்கு வாழ்ந்து பிறரையும் வாழ்விப்பவரே விரத முனிவர்கள். இதைக் கண்டு மகிழ்ந்து அவர்களின் தவப்பயனாக காட்சி கொடுப்பது முருகப் பெருமானின் சீறடிகள். பூத வேதாள வகுப்பில்,
அப்படி பத்தி பழுத்த மனத்தினர் அர்ச்சனை மெச்சிய செச்சை மணிப் புயன்
... என்பார் அருணகிரியார்.
முருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறு முககுமர சரணமென ...... அருள்பாடி யாடிமிக ...... 21
மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி முழுகுவதும் வருகவென ...... அறைகூவி யாளுவதும் ...... 22
......... சொற்பிரிவு .........
முருக சரவண மகளிர் அறுவர் முலை நுகரும் அறுமுக குமர சரணம் என அருள் பாடி ஆடி மிக
மொழி குழுற அழுது தொழுது உருகுமவர் விழி அருவி முழுகுவதும் வருக என அறை கூவி ஆளுவதும்
......... பதவுரை .........
முருக சரவண ... சரவண மடுவில் அவதரித்த ஞான தீபமே,
மகளிர் அறுவர் முலை நுகர் அறுமுக ... கார்த்திகை மகளிர் அறுவரது பயோதரத்தில் வாய் வைத்துப் பருகும் சண்முகனே,
குமர சரணம் என ... குமரா உன்னுடைய திருவடிகளுக்கு அடைக்கலம் என்று,
அருள் பாடி ... அப் பரமனின் கருணையை பாடியும்,
ஆடி ... பக்தி மார்க்கத்தின் உச்ச கட்டமான கூத்து ஆடியும்,
மொழி குழற ... சொற்கள் பெரிதும் குழற,
அழுது ... உள்ளம் நெக்குருகி அழுது,
தொழுது ... கை குவித்து வணங்கி,
உருகுமவர் ... உள்ளம், உடல், ஆவி இவை மூன்றும் உருகி நிற்கும் அடியார்களது,
விழி அருவி முழுகுவதும் ... ஆனந்தக் கண்ணீராகிய அருவியில் மூழ்குவதும் (மண நாறு சீறடியே)
வருக என ... அழுது நிற்கும் அவ்வடியார்களை வருக வருக என,
அறை கூவி ... வீறிட்டு அழைத்து,
ஆளுவதும் ... ஆண்டு ஆளுவதும் (மண நாறு சீறடியே).
......... விளக்கவுரை .........
ஒவ்வொரு நாமத்துடனும் பிரணவத்தை முதலிலே சேர்த்து 'நம' என்று முடிப்பது மரபு. பாடப்பாட பக்தி பெருக்கால் தன்னை மறந்து உடலும் ஆடத் தொடங்கும். ஆரம்பத்தில் முழுதுமாக வந்த சொற்கள் பின் தெளிவற்று குழறத் தொடங்கும். அடியார்களின் இன்பக் கண்ணீராகிய அருவியே அறுமுகனுக்கு திருமஞ்சன நீராகும். அந்த அருவியிலே குளித்தபடியே அடியார்களை பெருங் குரலிட்டு அழைத்து ஆண்டு கொள்கிறது திருவடி என்பது கருத்து. மற்றுமொரு நுண்ணிய கருத்தும் காணக்கிடக்கிறது. கண்ணீர் வெள்ளத்தில் பரமனின் திருவடிகள் மூழ்கினவுடன் தான் மூழ்கின்றேனே - கை கொடுத்து என்னை மீளுங்கள் என்று கூப்பிட, அந்நிலை கண்டு நெருங்கிய அடியார்களை தன்னுடன் அன்போடு ஆண்டு கொள்கிறான் சண்முகப் பெருமான். முன் கூறியது அற வழி. பின்பு வருவது மற வழி அதாவது அன்பு வழி.
முருகு என்கிற சொல் ம் + ர் + க் என்கிற எழுத்துடன் 'உ' கரம் சேரும்போது உண்டாகிறது. இம் மூன்றெழுத்தில் வல்லினம், இடையினம், மெல்லினம் எனும் முன்று வகைகளும் வருவது சிறப்பு. மூன்று விதமான ஆத்மாக்கள். மெலிந்தவராகிய சகலர், இடைப் பட்டவராகிய விஞ்ஞாகலர், வலியவராகிய பிரளயாகலர் எனும் இம் மூன்று வகையினரையும் வேறுபாடு இன்றி ஆளும் தெய்வம் குமார தேவனே என்பதைக் காண்பிக்க 'ம' கரம், 'ர' கரம், 'க' கரம் சேர்ந்து வருவதே 'முருகு' நாமம்.
குமரன் என்பதற்கு பல பொருட்கள் இருப்பினும் இங்கு குச்சிதங்களான அறு பகைகளை வெல்லுபவன் என பொருள் கொள்ளலாம். சரவணன் என்பதற்கு 'நாணல் படுக்கையிலே ஜெனித்தவன்' என்பது பொருள். தர்ப்பைக்கு மின்சார சக்தியை கடத்தும் ஆற்றல் உண்டு. ஆதலால் சிவ பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த அந்த மின் ஆற்றல் தர்ப்பையில் தங்கி, உலகம் உய்ய சண்முக பெருமானாக முருகன் அவதாரம் செய்கிறான். பாம்பன் சுவாமிகளின் கருத்துப்படி, 'ச' - மங்களம், 'ர' - ஒளி, 'வ' - அமைதி, 'ண' - வீரம் என்பது பொருள். ஷடாட்சரம் உச்சரிக்கும்போது 'ண' கரம் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும்.
ஆறுமுகங்களில் கீழ் நோக்கும் - அதோ முகம், மேல் நோக்கும் - ஈசான முகம், மேற்கு நோக்கும் - சத்யோ ஜாத முகம், கிழக்கு நோக்கும் - தத்புருட முகம், தெற்கு நோக்கும் - ...... முகம், வடக்கு நோக்கும் - வாம தேவ முகம், அமைந்து விளங்குகின்றன. கந்தர் கலி வெண்பாவின்படி இப்படி ஒரு பொருளையும் காணலாம். சூரனைக் கடிந்து அசுரர்களை அழித்த முகம் ஒன்று.உயிர்களின் பழவினையை நீக்கி அழியாப் பேரின்பம் அளிப்பது ஒரு முகம். வேதாகமங்களை இயற்றுவது ஒரு முகம். பாச இருளை அகற்றி பேரொளியாக விளங்குவது ஒரு முகம். இரு தேவிமார்களுக்கும் பேரின்பம் அளிப்பது ஒரு முகம். தன் திருவடிகளை நாடுவார்களுக்கு வரமளிப்பது ஒரு முகம். அநுபவிகள் அவரவர்கள் திருஷ்டிக்கு தக்கவாறு எந்த நிலையில் கண்டார்களோ அதை வர்ணித்திருக்கிறார்கள். ஆகையால் திருமுருகாற்றுப்படையில் வேறு விதமாக கூறி இருப்பதைப் பார்த்து ஒருவருக்கொருவர் கருத்துக்கு முரண்பாடு உள்ளதே என குழம்பிவிடக் கூடாது. இதை அளக பார மலைந்து எனத் தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழில்,
உருகு ஞானப ரம்பர தந்திர அறிவி னோர்கரு தங்கொள்சி லம்பணி உபய சீதள பங்கய மென்கழல் ...... தருவாயே
... என்பார்.
முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு துலகறிய மழலைமொழி ...... கொடுபாடும் ஆசுகவி ...... 23
முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன முகுளபரி மளநிகில ...... கவிமாலை சூடுவதும் ...... 24
......... சொற்பிரிவு .........
முடிய வழி வழி அடிமை எனும் உரிமை அடிமை முழுதும் உலகறிய மழலை மொழி கொடு பாடும் ஆசு கவி
முதல மொழிவன நிபுண மதுபம் முகர் இத மவுன முகுள பரிமள நிகில கவி மாலை சூடுவதும்
......... பதவுரை .........
முடிய ... எடுத்த பிறப்பு அனைத்திலும்,
வழி வழி அடிமை ... பரம்பரை பரம்பரையாக திருப்பணி நினைவில் இருந்த அடிமை,
எனும் உரிமை அடிமை ... எனும் தன் அடிமை உரிமையை,
உலகம் முழுதும் அறிய ... உலகனைத்தும் காட்சியாக அறியுமாறு,
ஆசு கவி முதல மொழிவன ... ஆசு கவியாக சொல்லப்பட்ட பாக்களை,
மழலை மொழி கொடு பாடும் ... இனிய மொழி கொண்டு பாடுகின்றதும்,
நிபுண மதுபம் ... பெரும் திரள்களாக வரும் புலவர்களாகிய வண்டுகள்,
முகர் ... முகர்ந்து பார்க்கும் அதாவது சிந்தித்துப் பார்க்கும்,
இதம் மவுனம் முகுள ... இன்பத் தேன் மயமான மவுனம் அரும்பிய நிலையிலிருந்து கூறும்,
பரிமள ... மணம் வீசுகின்ற,
நிகில கவிமாலை சூடுவதும் ... திருப்புகழ் அனைய என்னுடைய சகல பாமாலைகளை சூடிக் கொள்வதும் (மண நாறு சீறடியே).
......... விளக்கவுரை .........
முதல மொழிவன என்பதற்கு ஒரு உட் பொருள் காணலாம். ஆண்டவன் முதன் முதலில் அடி எடுத்துக் கொடுத்த முத்தைத் தரு - சொல்லை வைத்துப் பாடிய திருப்புகழை சூடி இருப்பது சீறடியே. ஒருவன் நல்ல விருந்து சாப்பிட்ட பின் சில நேரம் கழித்து சாப்பிட்ட இனிப்பு பண்டத்தின் ஏப்பம் வருவது போல மெளனமாகிய இன்ப நிலையில் திளைத்து வெளி முகமாக வந்த பின், தான் அநுபவித்த இன்ப உணர்வு அருள் வாக்காக வெளி வருகிறது. இவையே நம்மை வழி காட்டும் திரு நெறியாகும். வேதத்தில் வரும் உபநிஷத்துக்கள் எல்லாம் இப்படிக் கிடைத்தவைகளே.
திருவருணையில் கோபுரத்து இளையனார் தரிசனம் தந்து -சும்மா இரு சொல் அற - என மெளன உபதேசம் செய்த பின் அருணை முனிவருக்கு மோன நிலை கிடைத்து விடுகிறது. எல்லாம் அற தன்னை இழந்த நலத்தில் அவர் வெகு நாட்கள் இருந்ததைக் கண்ட முருகப் பெருமான், அவரை எழுப்பி அவருடைய ஆத்ம ஞான அநுபவங்களை எல்லாம் உலகினர் உய்யும் பொருட்டு, திருப்புகழ் பாக்களாக பாட வைத்தார். மொட்டாக இருந்த நிலை மலராய் மலர்கிறது. மொட்டில் இருக்கும்போது பூஜைக்கு உதவாது. உள்ளிருக்கும் தேனும் வண்டுகளுக்கு உதவாது. அருணகிரியாரின் அநுபவ மொட்டு திருப்புகழ் மலராக மலர்ந்த பின் வழிகாட்ட உதவுகிறது. மெய்ஞானம் வேண்டி வரும் அடியார்களுக்கு வழி காட்டியாக உதவும் தான் புனைந்த கவி மாலையை முருகன் உவப்போடு அணிந்து கொண்டதை, 'இல்லேன்' எனத் தொடங்கும் கந்தர் அநுபூதி பாடலில்,
வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே
... என்பார்
அடிமை சொல்லும் தமிழ்ப் பன்னீர் - இந்தத் திருப்புகழ் பாக்கள்முருகனுக்கு.
மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய மடுநடுவில் வெருவியொரு ...... விசையாதி மூலமென ...... 25
வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின் வகிருமட லரிவடிவு ...... குறளாகி மாபலியை ...... 26
......... சொற்பிரிவு .........
- - - -
......... பதவுரை .........
மத சிகரி ... மும் மத அறிவை உடையதும் மலை போன்ற தோற்றம் உடையதும்,
நெடிய மடு நடுவில் ... நீண்ட தடாகத்தின் மத்தியில் இருந்த,
முது முதலை கவர் தர ... பெரிய முதலையால் பிடித்துக் கொள்ளப் பட்டு,
கதறி ... ஓலமிட்டு அழுது,
வெருவி ... தனக்கு முடிவு காலம் வந்து விட்டதோ என அஞ்சி,
ஒரு விசை ஆதி மூலமே என ... ஒரு முறை ஆதி மூலமே என அழைக்க,
வரு கருணை வரதன் ... உடனே விரைந்து வந்து அந்த கஜேந்திரனைக் காத்த கருணா மூர்த்தியும்,
இகல் இரணியனை ... பகைமை பாராட்டிய இரணியாசுரனை,
நுதி உகிரின் வகிரும் அடல் அரி ... நகத்தின் நுனியால் பிளக்கும் கொலைத் தொழிலை புரியும் நரசிம்ம மூர்த்தியும்,
குறல் வடிவாகி ... குள்ள வடிவங் கொண்ட வாமனா மூர்த்தியாக,
மாபலியை ... மகா பலி சக்ரவர்த்தியை,
......... விளக்கவுரை .........
அருவி பாயும் மலை போன்ற தோற்றம் கொண்டு மதம் பாயும் கஜேந்திரனை யானை என்கிறார். அவ்வளவு பெரிய யானை நீராடப் புகுந்த தடாகமும் அதற்கேற்ப நீளம், அகலம், ஆழத்திலும் பெரிய மடு என்பதைக் குறிக்க 'நெடிய மடு' என்கிறார். முநிவரின் சாபத்தினால் நெடு நாள் வாழ்ந்த முதலை என்பதால் முது முதலை என்கிறார். மண்ணில் யானைக்கு பலம் அதிகம் எனினும் தண்ணீரில் முதலைக்கே பலம் அதிகம். யானை ஆழத்திற்கு சென்று விட்டதினால், இக் காட்சியை மடு நடு என்கிறார். முதலையின் பிடியிலிருந்து மீள முடியாமல் மரண பயம் வந்து விட்டதால் அச்சம் கொண்டு தன்னுடைய வழிபடு தெய்வமாகிய நாராயண மூர்த்திதை அம் முதலை வீரிட்டு அழைத்தது என்பதை ஒரு விசை ஆதி மூலமே என கூறியது என்கிறார். அவ்வளவில் இடர் தீர்க்க எளிமையும் கருணையும் உடையவன் என்பதை கருணை வரதன் என்கிறார். யானைக்கு முதலையின் பிடியிலிருந்து விடுதலையும், அகத்தியரால் யானையாய் இருந்த சாபத்தின் விடுதலையும் தந்து வைகுண்ட பதவி அளித்தும் தேவல முநிவரின் சாபத்தால் ஊகு எனும் காந்தர்வன் முதலையாய் இருந்ததால் அவனை அழிக்கும் சாக்கில் அவனுக்கு சாப விடுதலை தந்த அருமையை எண்ணி திருமாலை வரதன் என்கிறார். எப்படையாலும் இறவா வரம் பெற்ற இரணியனை, நகத்தின் நுனியால் கிழித்துக் கொன்றதை 'நுதி உகிரின் வகிரும் அடல் அரி' என்கிறார். கருணை வரதன், மேகம், குரிசில் என்றெல்லாம் புகழப்படும் திருமாலின் மருகன் எங்கள் முருகன் என்று பெருமை கொள்கிறார் அருணை முநிவர். கஜேந்திரனை மரணம் நெருங்கிய காலத்திலும் சிந்தனை வழுவாது ஒரே மனத்துடன் திருமாலை தியானித்ததை அருண மணி எனத் தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழில்,
செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை தெளிவினுடன் மூல மேயென முந்தச் சிந்தித் ...... தருள்மாயன்
... என்பார்
வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய வளருமுகில் நிருதனிரு ...... பதுவாகு பூதரமும் ...... 27
மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில் மருகனிசி சரர்தளமும் ...... வருதார காசுரனும் ...... 28
......... சொற்பிரிவு .........
- - மகுடம் ஒருபதும் முறிய அடு பகழி விடு குரிசில் மருக நிசிசரர் தளமும் வரு தாரகாசுரனும்
......... பதவுரை .........
வலிய சிறை இட ... கடினமான சிறையில் வைக்க,
வெளியின் முகடு கிழி பட ... அண்டத்தின் உச்சி பிளவுபட,
முடிய வளரு முகில் ... முழுமையாக வளர்ந்த மேகம் அன்ன நிறமும் கொடைத் திறமும் கொண்டவனும்,
நிருதன் இருபது வாகு புதரமும் ... அசுரனான இராவணின் இருபது தோள்களான மலைகளும்,
மகுடம் ஒரு பதும் முறிய ... கிரீடம் அணிந்த பத்து தலைகளும் மொறியப் பட்டு,
அடு பகழி விடு குரிசில் மருக ... போரிடும் கணையை ஏவி பெருமை வாய்ந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக அவதாரம் எடுத்த திருமாலின் மருகனும்
நிசிதரர் தளமும் ... அசுரர் சேனைகளும்,
வரு தாரகாசுரனும் ... யுத்தத்தில் எதிர்த்து வந்த தாரகாசுரனும்,
......... விளக்கவுரை .........
சூரபத்மனின் திக்விஜயம் முதல் போரில் முந்தி வருபவன் தாரகாசுரன் ஆதலால் அவனை வரு தாரகாசுரனும் என்கிறார். போரில் முந்தியபடியே அவனே முதல் கள பலியாகவும் ஆகிறான். உயிர்களுக்கு அளவில்லாத துன்பங்கள் அளித்து வந்த அசுர தாரகன் ஞான தாரகனாகிய முருகப் பெருமானை நினையாத வண்ணம் பய மூட்ட வந்தான். ஆதாலால் இறைவனின் திருப்பெயர் தாங்கி வந்து தீமை புரியும் அவனை ஞான சக்தியாகிய வேற்படை அழித்து விடுகிறது. மருள் ஒழிந்தால் அல்லாது அருள் விளையாது.
இதே போல் தக்கன் வேள்வியை அழிக்கச் சென்ற பூத கணங்களுக்குள் ஒரு பூதம், வித்யாதரர்களுக்கு இருப்பிடமான 'வடசேரி - தென்சேரி' என்ற இரு வெள்ளி மலைகளை வழியில் கண்டு, சிவபெருமான் எழுந்தருளிய மலையின் பெயர் இவைகளுக்குக்கூடாது என்று எண்ணி, அம் மலைகள் இரண்டையும் எடுத்து தன் செவியில் குதம்பை எனும் ஆபரணமாக அணிந்து சென்றது என ஒட்டக்கூத்தர் கூறுகிறார்.
தாரகனை மாயா பலம் எனவும் அசுரப் படைகளை குண விருத்தங்கள் எனவும் கிரவுஞ்சம் முக்குண விகர்ப்பம் எனவும் பாம்பன் சுவாமிகள் கூறுவார்.
அண்டத்திலும் பிண்டத்திலும் உள்ள அசுர கூட்டங்களை ஆறுமுகன் அழிக்கிறான். இந்தப் போருக்கு பின் உயிர்களுக்கு அமைதி அளிக்க தணிந்து நிற்கிறான் தணிகேசன்.
குருபதி
உயிர்கள் உய்வு பெற உபதேசிக்கும் திருமால், இந்திரன், பிரமன், உபமன்யன், தபனன், நந்தி முருகன் எனும் ஏழு குருமார்களில் குமரனே பரம ஆச்சார்யனாக இருப்பவன். ஆகையினால் அனைவரும் சுப்ரமணியனையே வழிபடவேண்டும் என்பதை விளக்க சிவபெருமானே தணிகையில் ஞானோபதேசம் கேட்டு நந்தி ஆற்றங்கரையில் வீராட்டகாச மூர்த்தியாக பெற்று திகழ்கிறார். துந்துபி முதல் நகுலீஸ்வரர் வரை உள்ள யோக குருக்கள் 16 பேர்களுக்கும் பரம குரு குமரனே என கூர்ம புராணம் கூறுகிறது. சிவபெருமான் கேட்க முருகன் உபதேசம் செய்வதை மருவு மஞ்சு எனத் தொடங்கும் திருவிரிஞ்சை திருப்புகழில் பார்க்கலாம்.
அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும் அடிப ணிந்து பேசி ...... கடையூடே
அருளு கென்ற போது பொருளி தென்று காண அருளு மைந்த ஆதி ...... குருநாதா.
மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி மறுகிமுறை யிடமுனியும் ...... வடிவேல னீலகிரி ...... 29
மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர வசனிபயி ரவிகவுரி ...... யுமையாள்த்ரி சூலதரி ...... 30
வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதை வநிதையபி நவையநகை ...... யபிராம நாயகிதன் ...... 31
மதலைமலை கிழவனநு பவனபய னுபயசதுர் மறையின்முதல் நடுமுடிவின் ...... மணநாறு சீறடியே ...... 32
......... சொற்பிரிவு .........
மடிய மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன் நீலகிரி
மருவு குருபதி யுவதி பவதி பகவதி மதுர வசனி பயிரவி கவுரி உமையாள் த்ரிசூலதரி
வநசை மதுபதி அமலை விசயை திரிபுரை புநிதை வநிதை அபினவை அநகை அபிராம நாயகி தன்
மதலை மலைகிழவன் அநுபவன் அபயன் உபய சதுர் மறையின் முதல் நடு முடிவின் மணநாறு சீறடியே
......... பதவுரை .........
மடிய ... இறந்து போகவும்,
மலை பிளவு பட ... கிரவுஞ்ச மலை பிளவுபடவும்,
மகர சலதி நிதி குறுகி மறுகி முறையடே ... மகர மீன்கள் அதிகமாக உள்ள சமுத்திர நீர் வேலின் சூட்டினால் குறைந்து கலங்கி ஓ என்று இரைச்சல் இடவும்,
முனியும் வடிவேலன் ... உக்கிர கோலம் கொள்ளும் சிறந்த வேலாயுதம் ஏந்தியுள்ள பெருமானும்,
நீலகிரி மருவு குருபதி ... மூன்று வேளைகளிலும் மூன்று நீலோற்பல மலர் மலரும் திருத்தணியில் வீற்றிருக்கும் ஆச்சார்ய சிரேஷ்டனும்,
யுவதி ... என்றும் இளமை உடையவள்,
பவதி ... தன்னிடம் இருந்து எல்லாவற்றையும் உற்பத்தி செய்பவள்,
பகவதி ... திரு, செல்வம், புகழ், ஞானம், வீரம், வைராக்யம் எனும் ஆறு குணங்களை உடையவள்,
மதுர வசனி ... தேன் போன்ற இனிய மொழியை உடையவள்,
பைரவி ... காலத்தை அளக்கும் பைரவி,
கவுரி ... விபூதி போன்ற வெண்ணிறம் உடையவள்,
உமையாள் ... பிரணவ ரூபம் கொண்டவள்,
திரிசூலதரி ... முத்தலை சூலம் ஏந்தியவள்,
வனசை ... தாமரையை ஆசனமாகக் கொண்டவள்,
மதுபதி ... காளி,
அமலை ... மலம் அற்றவள்,
விசயை ... துர்க்கை,
திரிபுரை ... கீழ், பூ, மேல் லோகத்தின் தலைவி,
புநிதை ... தூய்மை மிக்கவள்,
வநிதை ... அழகில் சிறந்தவள்,
அபினவை ... என்றும் புதுமையாக இருப்பவள்,
அநகை ... பாபம் அற்றவள்,
அபிராம நாயகி தன்மதலை ... அபரிமித அழகியான தேவியின் குமாரனும்,
மலை கிழவன் ... குறிஞ்சி நில அதிபதியும்,
அநுபவன் ... எல்ல உயிர்களுக்கும் அநுபவ சாட்சியாக உள்ளவனும்,
அபயன் ... பயமழித்து ஆறுதல் அளிப்பவனுமாகிய முருகப் பெருமானின்
சதுர்மறையின் முதல் நடு முடிவின் ... நான்கு வேதங்களின் முதல் இடை கடை ஆகிய நிலைகளிலும்,
மண நாறும் ... அருள் மணம் வீசும்,
உபய சீறடியே ... இரண்டு இளம் திருவடிகளேதான்.
......... விளக்கவுரை .........
ஒடுங்கிய இடத்திலிருந்தே எல்லாம் உதயமாம் எனும் சித்தாந்த கருத்தின்படி தேவி இடத்தில் தனு, கரண, புவன போகங்கள் அனைத்தும் தோன்றி இறுதியில் அவளிடத்திலேயே ஒடுங்குவதினால் அவளை பவதி என்று அழைக்கிறார். 'உ + ம + அ' எனும் எழுத்துக்களின் சேர்க்கையே உமை என்கிற பெயர் ஆகையினால் அவள் பிரணவ வடிவினள் என்பதைக் குறிக்கிறது. தேவியின் திருக்கரத்தில் தாமரை மலரை ஏந்தி இருப்பதாலும், அவள் இதய தாமரையில் வீற்றிருப்வளாதலினாலும் அவளை வநசை என்கிறார். அநுபவன் என்றால் உயிருக்குத் துணையாய் இந்த கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்பது பொருள். கடைசி இரண்டு அடிகளில் 'கிழவன்' எனத் துவங்கி 'இளந் திருவடிகள்' எனக் கூறி நகைசுவை உணர்வைக் காட்டி முடிக்கிறார் அருணை முனிவர்.
'கிழமை' என்ற சொல்லுக்கு உரிமை என்பது பொருள். 'மலை கிழவன்' என்றால் மலைகளுக்கு உரியவன் என்பது பொருளாகும். தன் வேர்களால் பூமியைத் தாங்குகின்றன மலைகள். மலைகளுக்கு உரியவன் என்பது எல்லா உயிர்களையும் தாங்குபவன் முருகன் என்பதே குறிப்பு. மலைப்பை விளைவிப்பதினால் மலை என்று பெயர் பெற்றது. அம் மலைக்குரிய கந்தனின் புகழும் மலைப்பை விளைவிக்கிறது. இக் காரணத்தால்தான் முனிவர்கள் அமைதியாக தவம் புரிய மலைகளை நாடுகிறார்கள். அந்த இறைவன் அங்கு அவர்களுக்கு அநுபவமாகிறான். பயமகற்றி அமைதி தருகிறான். அவனது திருவடிகள் அறிவின் பூரணமாக வேதங்களின் அனைத்து பாகங்களிலும் அருள் மணம் கொழிக்கின்றன.
......... தொகுப்புரை .........
திருமால் மருகன், உமையாள் குமரன், குறிஞ்சிக் கிழவன், அநுபமாக வருபவன், அச்சம் அகற்றுபவனாகிய முருகனின் நான்மறைகள் முழுவதும் மணம் கொழிக்கும் இரண்டு இளம் திருவடிகள்,
1. அகண்ட இருள் அகற்றி பேரொளி வீசுவன, 2. சிவயோக சாதனையர் உள்ளத்தில் காணக் கிடைப்பன, 3. பசு ஞானம் கெட்டவர் அநுபவத்திற்கு அநுபூதியாவன, 4. பிறவிக் கடலில் இருந்து உயிர்களைக் கரையேற்ற மரக்கலமாய் வருவன, 5. எல்லாவற்றையும் சாட்சி ரூபமாய் பார்த்துக் கொண்டிருப்பன, 6. உயர்ந்த வானவர் தலைகளில் உறைவன 7. என்றும் நித்தியமாக இருப்பன 8. இழிந்த எனது மனத்திற்கு இன்பம் அளிப்பன 9. சிவபிரான் மகிழ உமையாள் தழுவும் திருமார்பில் ஆனந்தமாக ஆடுவன, 10. அறமும் மறமும் அளவு இல்லாத ஆற்றலும் காட்சியாக இளைய தளிர் நடை பழகி விளையாடல் புரிவன, 11. எண்ணும் அடியவர் நினைக்கும் இடங்கள் எங்கே இருப்பினும் அக்கணத்திலேயே அங்கே சென்று அருள வல்ல வல்லமையையும் உயிர்களைக் கரையேற்றுவதற்கு காரணமாகவும் இருப்பன, 12. காப்பவன் நானே என உயிர்களுக்கு காட்டும் வகையில் வள்ளியின் தினைப் புனத்தில் உலாவுவன, 13. அடியவரை நெருங்கும் எம படரைத் துரத்துவன, 14. நிஷ்காமியமாக அருள் மார்க்கத்தை நாடுபவர்களுக்கு அருள் புரிவன, 15. காமிய பக்தி உடையவர்களுக்கு நினைத்த காரியம் அநுகூலமே புரிவன, 16. அடியவர்களுக்கு நேரும் புறப்பகை அகப்பகைகளை அழிப்பன, 17. தெய்வ லட்சணம் இலங்கும்படி மணங்கமழ் மாலைகளை சூடுவன, 18. எவரவர் இருந்திடத்தும் ஒருவன் இவன் என்று சொல்லும்படி அடியவருக்கு சர்வ முதன்மை தருவன, 19. தவத்தின் பயனாக வருவன, 20. உள்ளம் உருகும் அடியவரின் ஆனந்தக் கண்ணீரில் மூழ்குவன, 21. அன்பர்களை வருக வருக என கூறி அழைத்து அருளுவன, 22. மெளன ஞானிகள் பாடும் அன்பு கசியும் மணப் பாமாலைகளை சூடுவன
... என்றெல்லாம் சுப்ரமண்யப் பரத்துவத்தை பாடுகிறார் நமது அருணை முனிவர். |