அதிர்த்த பரிபுர பதத்தி பயிரவி அமைத்த கரதலி ப்ரியத்தை யுடையன ...... 1
அடித்த தமருக கரத்தர் பயிரவர் நடித்த நவரச நடத்தை யறிவன ...... 2
அருக்கர் பதமல வுடுக்கள் பதமள வடுக்கு பிணமொரு குறட்டி லடைசுவ ...... 3
அளக்கர் உடைபட மிகுத்த குருதியை அடைத்து மடைபட வுடைத்து விடுவன ...... 4
அரக்கர் முடிகளை யடுப்பு வகிர்வன அவற்றின் உலையென இரத்தம் விடுவன ...... 5
அடுக்கல் எனுமவர் எயிற்றை யவர்கர அகப்பை யவைகொடு புகட்டி அடுவன ...... 6
அமிழ்த்தி அடிவிழு பிணத்தின் நிணவெளி றளற்றி னிடையடி வழுக்கி விழுவன ...... 7
அடப்பை யிடவரும் அணுக்க ருடன்வரு தடக்கை மதமலை நடத்தி வருவன ...... 8
குதித்து மகிழ்வொடு மிதித்து நடமிடு குறட்கு மிகுதசை கொடுத்து வருவன ...... 9
கொழுத்த குரகத இறைச்சி வகைவகை குவித்து முறைமுறை அவித்து நுகர்வன ...... 10
குருத்து மலரினும் வெளுத்த நிணமது கொளுத்தி அனலதில் வெதுப்பி யிடுவன ...... 11
குதட்டி நெடுயன உதட்டில் இடுதசை கொடிக்கு முதுசின நரிக்கும் உமிழ்வன ...... 12
குணக்கு வளைகடல் வடக்கி யமதிசை குடக்கு முழுவது மடக்கு வயிறின ...... 13
குரக்கு மிடறின கரத்தில் எழுகிரி குலுக்கி யடியொடு பறித்து நிமிர்வன ...... 14
குதித்து முழுகியும் இரத்த நதியிடை குடித்தும் உணர்வொடு களித்து வருவன ...... 15
குறத்தி யிறைவனை நிறைத்து மலரடி குறித்து வழிபடு குணத்தை யுடையன ...... 16
துதிக்கை மலைகளை அடுக்கி அலகைகள் துதிக்க அவைமிசை யிருக்கும் அரசின ...... 17
துளக்கம் உறுசுடர் விளக்கை யனையன சுழித்து வெருவர விழித்த விழியின ...... 18
துதித்து வழிபட நடத்தல் குறையன சுகித்து வெளிபட நகைத்து வருவன ...... 19
துணித்த கரியுடல் திணித்த மிடறிடை துவக்கி அவசமொ டுவிக்கி நிமிர்வன ...... 20
தொலைத்த முடிநிரை பரப்பி வயிரவர் சுழற்றி நடமிடு துருத்தி இடுவன ...... 21
துணுக்கம் உளஅவர் துணுக்கம் இலையென எடுத்த கழிநெடில் படித்து வருவன ...... 22
சுரர்க்கு மகபதி தனக்கும் இனியொரு துளக்கம் இலையென மகிழ்ச்சி புகல்வன ...... 23
தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுஎன நடித்து வருவன ...... 24
எதிர்த்து மலைவன முடித்து வெளிமுக டிடித்து விழும்இடி இடித்த குரலின ...... 25
இரட்டை இளமதி உதித்த எனவெளி றெயிற்றில் நிலவெழும் இருட்டு வடிவின ...... 26
இயக்க முறுபல ரதத்தின் உருளைகள் இருத்தி அணிதரு பெருத்த குழையின ...... 27
இடக்கை குடமுழ வுடுக்கை துடிபறை எடுத்து முகிலென முழக்கி வருவன ...... 28
இதத்த கயிசிகம் இனித்த பயிரவி எழுப்பி எழுவகை நிருத்தம் இடுவன ...... 29
இறப்பும் வரும்எழு பிறப்பும் அறஇனி திருத்தும் எனமயில் விருத்த மொழிவன ...... 30
இடைக்க ழியில்ஒரு செருத்த ணியிலினி திருக்கும் அறுமுகன் ஒருத்தன் இளையவன் ...... 31
இளைத்து நிசிசரர் பதைத்து மடியவொர் இமைப்பில் அமர்பொரு களத்தின் அலகையே. ...... 32
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 
அதிர்த்த பரிபுர பதத்தி பயிரவி அமைத்த கரதலி ப்ரியத்தை யுடையன ...... 1
......... பதவுரை ......... 
அதிர்த்த ... மிகுத்த ஒலி எழுப்பும் (... அதிருங்கழல் - திருப்புகழ் - குன்றுதோறாடல்)
பரிபுர பதத்தி ... சிலம்பு அணிந்த பாதங்களை உடையவள்
பயிரவி ... கால பைரவரின் துணைவி
அமைத்த கரதலி ... அஞ்சேல் என அடியார்களுக்கு அபயம் அளிக்கும் கர முத்திரை உடையவள் (ஆகிய தேவியின்)
ப்ரியத்தை யுடையன ... அன்பைப் பெற்று இருப்பன
(பொரு களத்தின் அலகையே).
அடித்த தமருக கரத்தர் பயிரவர் நடித்த நவரச நடத்தை யறிவன ...... 2
......... பதவுரை ......... 
தமருக அடித்த கரத்தர் பயிரவர் ... உடுக்கை ஒலிக்கும் கைகளை உடைய அஷ்டபைரவர்கள்,
நடித்த நவரச நடத்தை யறிவன ... அற்புதம், இன்பம், அவலம், நகைச்சுவை, நடுநிலை, ருத்ரம், வீரம், பயம், இழிப்பு முதலிய நவரச கூத்தின் இலக்கண விதியை அறிந்து அவர்களின் ஆட்டத்தை மெச்சுவன
(பொரு களத்தின் அலகையே).
அருக்கர் பதமல வுடுக்கள் பதமள வடுக்கு பிணமொரு குறட்டி லடைசுவ ...... 3
......... பதவுரை ......... 
அருக்கர் பதமல ... ஆதித்த மண்டலம் மட்டுமல்லாமல் அதற்கு மேலும் உள்ள
உடுக்கள் பதமளவு ... நட்சத்திர மண்டலம் எட்டும் அளவுக்கு
அடுக்கு பிணம் ... அடுக்கி வைத்துள்ள அசுரர்களின் பிணங்களை
ஒரு குறட்டி லடைசுவ ... திண்ணை போல் அலங்காரமாக அடுக்கி வைப்பன
(பொரு களத்தின் அலகையே).
அளக்கர் உடைபட மிகுத்த குருதியை அடைத்து மடைபட வுடைத்து விடுவன ...... 4
......... பதவுரை ......... 
அளக்கர் உடைபட மிகுத்த குருதியை ... கடற்கரை உடைந்து பெருகுவது போல் அதிகமாகப் பெருகி வரும் ரத்த வெள்ளத்தை
அடைத்தும் அடைபட உடைத்து விடுவன ... முதலில் பெருகாமல் அடைத்தும் மீண்டும் உடைத்துப் பெருக விடுவன
(பொரு களத்தின் அலகையே).
அரக்கர் முடிகளை யடுப்பு வகிர்வன அவற்றின் உலையென இரத்தம் விடுவன ...... 5
......... பதவுரை ......... 
அரக்கர் முடிகளை அடுப்பு வகிர்வன ... மாண்ட அசுரர்களின் தலைகளை குப்புற கவித்து சமையல் அடுப்பாக நிர்மாணித்து,
அவற்றின் உலையென இரத்தம் விடுவன ... அவற்றின் உலை நீராக அசுரர்களின் ரத்தம் நிரப்புவன
(பொரு களத்தின் அலகையே).
அடுக்கல் எனுமவர் எயிற்றை யவர்கர அகப்பை யவைகொடு புகட்டி அடுவன ...... 6
......... பதவுரை ......... 
அடுக்கல் எனும் அவர் எயிற்றை ... மலையாக குவிந்து கிடக்கும் அந்த அசுரர்களின் பற்களை
அவர் கர அகப்பை அவைகொடு புகட்டி அடுவன ... அவர்களின் கைகளை அகப்பை போல் பாவித்து உலை நீரில் (அரிசியாக) போட்டு சமையல் செய்வன
(பொரு களத்தின் அலகையே).
அமிழ்த்தி அடிவிழு பிணத்தின் நிணவெளி றளற்றி னிடையடி வழுக்கி விழுவன ...... 7
......... பதவுரை ......... 
அமிழ்த்தி ... ரத்தக் குழம்பில் அமிழும்படி
அடி விழு பிணத்தின் நிணவெளி அளற்றின் இடை ... காலடியில் வந்து விழுகின்ற பிணங்களின் கொழுத்த மாமிச சேற்றில்
அடி வழுக்கி விழுவன ... கால் வழுக்கி கீழே விழுவன
(பொரு களத்தின் அலகையே).
அடப்பை யிடவரும் அணுக்க ருடன்வரு தடக்கை மதமலை நடத்தி வருவன ...... 8
......... பதவுரை ......... 
அட ... கொல்வதற்காக
பையிட வரும் ... சினத்துடன் வேகமாக வரும்
அணுக்கருடன்வரு ... பக்கத்தே தன்னுடன் நெருக்கமாக இருக்கும் யானைப்பாகருடன்
தடக்கை மதமலை நடத்தி வருவன ... நடந்து வருகின்ற பெரிய துதிக்கையை உடைய மலை போன்ற மதயானைகளை பிடித்து அழைத்து வருவன
(பொரு களத்தின் அலகையே).
குதித்து மகிழ்வொடு மிதித்து நடமிடு குறட்கு மிகுதசை கொடுத்து வருவன ...... 9
......... பதவுரை ......... 
குதித்து மகிழ்வொடு ... மகிச்சியோடு களிப்புடன் குதித்து
மிதித்து ... காலால் பூமியை மிதித்து
நடமிடு குறட்கு மிகுதசை கொடுத்து வருவன ... நடனமிடும் குட்டி பூதங்களுக்கு ஆட்டத்தின் பரிசாக மிச்சம் இருந்த மாமிச உணவைக் கொடுத்து வருவன
(பொரு களத்தின் அலகையே).
கொழுத்த குரகத இறைச்சி வகைவகை குவித்து முறைமுறை அவித்து நுகர்வன ...... 10
......... பதவுரை ......... 
கொழுத்த குரகத இறைச்சி ... போர்களத்தில் மாண்டு கிடக்கும் பருத்த குதிரைகளின் இறைச்சியை
வகைவகை குவித்து முறைமுறை அவித்து நுகர்வன ... குவியல் குவியல்களாக திரட்டி வைத்து பல சமையல் முறையில் சமையல் செய்து சாப்பிடுவன
(பொரு களத்தின் அலகையே).
குருத்து மலரினும் வெளுத்த நிணமது கொளுத்தி அனலதில் வெதுப்பி யிடுவன ...... 11
......... பதவுரை ......... 
குருத்து மலரினும் வெளுத்த நிணமது ... குரந்து மரத்து மலரைவிட வெண்ணிறமுள்ள கொழுப்பை
கொளுத்தி அனல் அதில் வெதுப்பி யிடுவன ... நெருப்பில் சுட்டு நாலு பக்கங்களிலும் பரிமாறுவன
(பொரு களத்தின் அலகையே).
குதட்டி நெடுயன உதட்டில் இடுதசை கொடிக்கு முதுசின நரிக்கும் உமிழ்வன ...... 12
......... பதவுரை ......... 
குதட்டி ... நன்றாக மென்று
நெடுயன உதட்டில் இடு தசை ... நீண்டு தொங்கும் தன் உதட்டின் வழியாக இட்ட மாமிசத்தை
கொடிக்கும் முதுசின நரிக்கும் உமிழ்வன ... காக்கைக்கும் பசியால் சினத்துடன் இருக்கும் கிழட்டு நரிகளுக்கும் உணவாக தருவன (நாம் சாப்பிடுவதற்கு முன் காக்கைக்கு இடுவது மாதிரி)
(பொரு களத்தின் அலகையே).
குணக்கு வளைகடல் வடக்கி யமதிசை குடக்கு முழுவது மடக்கு வயிறின ...... 13
......... பதவுரை ......... 
குணக்கு வளைகடல் ... கிழக்கே உள்ள குடாக் கடல் (விரிகுடா)
வடக்கி யம திசை குடக்கு ... வடக்கு தென் மேற்கு திசைகளில் உள்ள சமுத்திரங்கள்
முழுவதும் அடக்கு வயிறின ... எல்லாவற்றையும் முழுங்கக் கூடிய அளவிற்கு பெரிய வயிறுகளைஉடையன
(பொரு களத்தின் அலகையே).
குரக்கு மிடறின கரத்தில் எழுகிரி குலுக்கி யடியொடு பறித்து நிமிர்வன ...... 14
......... பதவுரை ......... 
குரக்கு மிடறின ... முடக்கு வாதம் பிடித்த கழுத்தை உடையன
கரத்தில் எழுகிரி குலுக்கி யடியொடு பறித்து நிமிர்வன ... கைகளில் சூரனுக்கு அரணாக இருந்த ஏழு மலைகளையும் அசைத்து வேரிலிருந்து பறித்து நிமிர்ந்து எழுவன
(பொரு களத்தின் அலகையே).
குதித்து முழுகியும் இரத்த நதியிடை குடித்தும் உணர்வொடு களித்து வருவன ...... 15
......... பதவுரை ......... 
குதித்து முழுகியும் இரத்த நதியிடை ... ரத்த நதியிடை குதித்து முழுகியும்
குடித்தும் உணர்வொடு களித்து வருவன ... ரத்த ஆற்றில் வேகமாக குதித்து குளித்து, குருதியைக் குடித்து உணர்வோடு களித்து வருவன
(பொரு களத்தின் அலகையே).
குறத்தி யிறைவனை நிறைத்து மலரடி குறித்து வழிபடு குணத்தை யுடையன ...... 16
......... பதவுரை ......... 
குறத்தி யிறைவனை ... (ஆனாலும் இவ்வளவு அனாசார வாழ்க்கையை உடையனவாக இருந்தாலும்) வள்ளி மணாளனின்
அடி குறித்து ... பாதங்களைத் தியானித்து
மலர் நிறைத்து ... மிகுந்த புஷ்பங்களால்
வழிபடு குணத்தை யுடையன ... அர்ச்சித்து தொழும் பண்பாட்டை கொண்டு உள்ளன
(பொரு களத்தின் அலகையே).
துதிக்கை மலைகளை அடுக்கி அலகைகள் துதிக்க அவைமிசை யிருக்கும் அரசின ...... 17
......... பதவுரை ......... 
துதிக்கை மலைகளை அடுக்கி ... மாண்ட யானைகளின் உடல்களை ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கி,
அலகைகள் துதிக்க அவைமிசை யிருக்கும் அரசின ... சேவகப் பேய்கள் சுற்றி நின்று போற்றி பாட யானை உடல் சிம்மாசனத்தின் மேல் அமர்ந்து அரசாட்சி செய்வன
(பொரு களத்தின் அலகையே).
துளக்கம் உறுசுடர் விளக்கை யனையன சுழித்து வெருவர விழித்த விழியின ...... 18
......... பதவுரை ......... 
துளக்கம் உறு ... மென்மையாக ஆடுகின்ற
சுடர் விளக்கை யனையன ... தீபம் போன்ற
சுழித்து வெருவர விழித்த விழியின ... வட்டமாக அச்சம் தரும்படி கண்களைக்கொண்டு பார்ப்பன
(பொரு களத்தின் அலகையே).
துதித்து வழிபட நடத்தல் குறையன சுகித்து வெளிபட நகைத்து வருவன ...... 19
......... பதவுரை ......... 
துதித்து வழிபட ... எப்போதும் தன் இறைவனை துதி செய்து
நடத்தல் குறையன ... வணங்கும் வாழ்க்கையே விரதமாக கொண்டிருப்பன
(பொரு களத்தின் அலகையே).
சுகித்து வெளிபட நகைத்து வருவன ... மகிழ்ச்சி பொங்க பகிரங்கமாய் நகைத்து வருவன
(பொரு களத்தின் அலகையே).
துணித்த கரியுடல் திணித்த மிடறிடை துவக்கி அவசமொ டுவிக்கி நிமிர்வன ...... 20
......... பதவுரை ......... 
துணித்த கரியுடல் ... தலை அறுக்கப்பட்ட யாைானகளின் உடல்களை
திணித்த மிடறிடை ... அவசர அவசரமாய் திணிக்கப்பட்ட தொண்டை
துவக்கி ... கட்டினது போல் சிக்கிக் கொண்டு
அவசமொ டுவிக்கி நிமிர்வன ... மயக்கம் வந்தது போல் அவஸ்தை பட்டு விக்கல் ஏற்பட்டு அதை சமாளிக்க முதுகை நிமிர்த்தி நிற்பன
(பொரு களத்தின் அலகையே).
தொலைத்த முடிநிரை பரப்பி வயிரவர் சுழற்றி நடமிடு துருத்தி இடுவன ...... 21
......... பதவுரை ......... 
தொலைத்த ... உயிர் பிரிந்து போன
முடிநிரை பரப்பி ... தலைகளை வரிசையாக பரப்பி வைத்து
வயிரவர் சுழற்றி நடமிடு துருத்தி இடுவன ... வயிரவர்கள் ஆடுவதற்கு ஏற்றபடி ஆடல் அரங்கம் அமைப்பன
(பொரு களத்தின் அலகையே).
துணுக்கம் உளஅவர் துணுக்கம் இலையென எடுத்த கழிநெடில் படித்து வருவன ...... 22
......... பதவுரை ......... 
துணுக்கம் உளஅவர் துணுக்கம் இலையென ... இவ்வளவு நாட்கள் அசுரர்களுக்காக பயந்திருந்த அனைவரும் இனிமேல் பயம் நீங்கிவிட்டது எனும்படி
எடுத்த கழி நெடில் படித்து வருவன ... தாம் இயற்றிய அறுசீர் முதலிய விருத்தப்பாக்களை முருகனின் வெற்றியைப் பாடுவன
(பொரு களத்தின் அலகையே).
சுரர்க்கு மகபதி தனக்கும் இனியொரு துளக்கம் இலையென மகிழ்ச்சி புகல்வன ...... 23
......... பதவுரை ......... 
சுரர்க்கு மகபதி தனக்கும் ... தேவர்களுக்கும் இந்திரனுக்கும்
இனியொரு துளக்கம் இலையென மகிழ்ச்சி புகல்வன ... இனிமேல் நடுங்குவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று சொல்லும்படிக்கு களிப்புடன் பேசுவன
(பொரு களத்தின் அலகையே).
தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுஎன நடித்து வருவன ...... 24
......... பதவுரை ......... 
தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுஎன நடித்து வருவன ... தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகு என்று பல தாள ஒலிகளுடன் ஆடி வருவன
(பொரு களத்தின் அலகையே).
எதிர்த்து மலைவன முடித்து வெளிமுக டிடித்து விழும்இடி இடித்த குரலின ...... 25
......... பதவுரை ......... 
எதிர்த்து மலைவன ... விளையாட்டாக ஒன்றோடு ஒன்று மல்யுத்தம் புரிவன
முடித்து ... அந்த விளையாட்டின் முடிவில்
வெளிமுகடு இடித்து விழும் இடி இடித்த குரலின ... ஆகாய கபாலமே உடைந்து போகும்படி இடி போன்ற பெரிய வெற்றி முழக்கத்தை எழுப்புவன
(பொரு களத்தின் அலகையே).
இரட்டை இளமதி உதித்த எனவெளி றெயிற்றில் நிலவெழும் இருட்டு வடிவின ...... 26
......... பதவுரை ......... 
இரட்டை இளமதி உதித்த என ... இரு பிறைச் சந்திரன் தோன்றின என்று சொல்லும்படிக்கு
வெளிறு எயிற்றில் நிலவெழும் இருட்டு வடிவின ... வெண்மை நிறமான பற்களில் இருந்து வீசும் ஒளியில் கருப்பு நிறத்தைக் காண்பிப்பன
(பொரு களத்தின் அலகையே).
இயக்க முறுபல ரதத்தின் உருளைகள் இருத்தி அணிதரு பெருத்த குழையின ...... 27
......... பதவுரை ......... 
இயக்க முறு ... உருண்டு ஓடுகின்ற
பல ரதத்தின் உருளைகள் ... அநேக வித தேர்களின் சக்கரங்களை
இருத்தி ... எடுத்து பொருத்தி
அணிதரு பெருத்த குழையின ... அழகிய பெரிய காதணிகளாக தரித்திருப்பன
(பொரு களத்தின் அலகையே).
இடக்கை குடமுழ வுடுக்கை துடிபறை எடுத்து முகிலென முழக்கி வருவன ...... 28
......... பதவுரை ......... 
இடக்கை குடமுழவு உடுக்கை துடி பறை ... இடக்கை குடமுழவு உடுக்கை துடி பறை எனப்படும் வாத்தியங்களை
எடுத்து முகிலென முழக்கி வருவன ... கையில் வைத்துக் கொண்டு மேக கர்ஜனை போல் முழக்கி வருவன
(பொரு களத்தின் அலகையே).
இதத்த கயிசிகம் இனித்த பயிரவி எழுப்பி எழுவகை நிருத்தம் இடுவன ...... 29
......... பதவுரை ......... 
இதத்த கயிசிகம் இனித்த பயிரவி ... சுகமான கைசிகை இனிமையான பைரவி முதலிய ராகங்களை
எழுப்பி ... பாடல்களில் அமைத்து
எழுவகை நிருத்தம் இடுவன ... குரவை, கள நடனம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பவை விதுச கூத்து முதலிய ஏழு வகையான நடனங்களை ஆடிக் காண்பிப்பன
(பொரு களத்தின் அலகையே).
இறப்பும் வரும்எழு பிறப்பும் அறஇனி திருத்தும் எனமயில் விருத்த மொழிவன ...... 30
......... பதவுரை ......... 
இறப்பும் வரும் எழு பிறப்பும் அற ... இறத்தலையும் மீண்டும் எழு வகை ஜஜனம் (தேவர், மக்கள், விலங்கு, பறப்பன, ஊர்வன, நீரில் வாழ்வன, தாவரம்) எடுப்பதையும் நீக்கி
இனி திருத்தும் என மயில் விருத்த மொழிவன ... இன்ப முத்தி நிலையை அளிக்கும் என்கிற நூற்பயனைச் சொல்லி மயில் விருத்தங்களைப் பாராயணம் செய்வன
(பொரு களத்தின் அலகையே).
இடைக்க ழியில்ஒரு செருத்த ணியிலினி திருக்கும் அறுமுகன் ஒருத்தன் இளையவன் ...... 31
......... பதவுரை ......... 
இடைக்கழியில் ஒரு செருத்தணியில் இனிது இருக்கும் அறுமுகன் ஒருத்தன் இளையவன் ... திருவிடைக்கழியில் ஒப்பற்ற திருத்தணியில் களிப்புடன் வீற்றிருக்கும் சண்முகன் ஒப்பற்ற குமாரக் கடவுள்
இளைத்து நிசிசரர் பதைத்து மடியவொர் இமைப்பில் அமர்பொரு களத்தின் அலகையே. ...... 32
......... பதவுரை ......... 
இளைத்து நிசிசரர் பதைத்து மடிய ... அசுரர்களைப் பகைத்து அவர்கள் துடித்து இறக்கும்படி
ஓர் இமைப்பில் அமர்பொரு களத்தின் அலகையே ... கண நேரத்தில் யுத்தம் செய்யும் போர் களத்தில் குழுமி இருந்த பேய்க் கூட்டங்களே. |