குதிரைத் திரள்பட் டபிணத் தையெடுத் துதிரப் புனலிற் குளிக்கு மொருதிரள் ...... 1
குருதிக் கடலைப் பெருகப் பருகிக் குணலைத் திறனிற் களிக்கு மொருதிரள் ...... 2
கொடுகொட் டிபடத் துடிகொட் டிநடத் தடமிட் டுவளைத் திருக்கு மொருதிரள் ...... 3
குடரைப் புயமிட் டுடலைச் சிறுகக் குலையிட் டதிரச் சிரிக்கு மொருதிரள் ...... 4
சதையைச் சிலகைக் கொளமற் றதனைச் சருவிச் சருவிப் பறிக்கு மொருதிரள் ...... 5
தறுகட் சிறுகட் டவளக் கவளத் தரளத் திரளைக் குவித்த டியெனுரல் ...... 6
தலையுக் குளநற் றருணக் கிரணத் தரளத் திரளைக் குவித்த டியெனுரல் ...... 7
தனிலிட் டதனைத் தகுகைத் தலமுற் றிடுநெட் டைமருப் புலக்கை முறைமுறை ...... 8
எதிரிட் டதுகுத் திமுடித் தலையொப் பஅடுப் பெனவைத் தெலுப்பு விறகினை ...... 9
எரியிட் டெரியிட் டுருவத் துடனெட் டுலைவைத் துணவைச் சமைக்கு மொருதிரள் ...... 10
இருள்செற் றதடித் தினையொத் திடுகட் கமெடுத் தெறியத் தெறித்த தலைகளை ...... 11
இதெனக் கதுனக் கதுமற் றதனுக் கெனமொய்த் துலவிப் பொறுக்கு மொருதிரள் ...... 12
அதரத் துவிரற் படவைத் துமிகுத் தரவத் தொடுகொக் கரிக்கு மொருதிரள் ...... 13
அமுதொத் தநிணத் தசைமுக் கியறத் தவசத் துயிலிற் கிடக்கு மொருதிரள் ...... 14
அடவிப் புனமுற் றகுறத் திருவுக் கமைவுற் றமணிப் புயத்தன் அறுமுகன் ...... 15
அடன்மிக் கதயித் தியர்பட் டுவிழப் பொருதிட் டசெருக் களத்தில் அலகையே. ...... 16
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
குதிரைத் திரள்பட் டபிணத் தையெடுத் துதிரப் புனலிற் குளிக்கு மொருதிரள் ...... 1
......... பதவுரை .........
பட்ட குதிரைத் திரள் பிணத்தை எடுத்து ... இறந்து பட்ட குதிரைக் கூட்டங்களின் உடல்களை அப்பாலே தூக்கி எறிந்துவிட்டு
உதிரப் புனலில் குளிக்கும் ஒருதிரள் ... அந்த ரத்த ஆற்றில் குளிக்கும் அலகைகளின் ஒரு கூட்டம்.
குருதிக் கடலைப் பெருகப் பருகிக் குணலைத் திறனிற் களிக்கு மொருதிரள் ...... 2
......... பதவுரை .........
குருதிக் கடலைப் பெருகப் பருகிக் ... ரத்தக் கடலை நிரம்பக் குடித்து விட்டு,
குணலைத் திறனிற் களிக்கு மொருதிரள் ... அந்த வெறியில் கூத்து ஆடுவன ஒரு கூட்டம்.
கொடுகொட் டிபடத் துடிகொட் டிநடத் தடமிட் டுவளைத் திருக்கு மொருதிரள் ...... 3
......... பதவுரை .........
கொடுகொட்டி பட ... கொடு கொட்டி எனும் வாத்தியம் முழங்க
துடி கொட்டி ... உடுக்கையை சப்தித்து
நடத் தளம் இட்டு ... நடன சாலை அமைத்து
வளைத் திருக்கும் ஒரு திரள் ... சூழ்ந்திருக்கும் ஒரு கூட்டம்
குடரைப் புயமிட் டுடலைச் சிறுகக் குலையிட் டதிரச் சிரிக்கு மொருதிரள் ...... 4
......... பதவுரை .........
குடரைப் புயம் இட்டு ... குடல்களை தமது தோள்களில் மாலையாக அணிந்து கொண்டு,
உடலைச் சிறுகக் குலை இட்டு ... உடலை சுருக்கிக் கொண்டு நடுங்குவது போல நடித்து
அதிரச் சிரிக்கும் ஒருதிரள் ... பெரு முழக்கத்துடன் சிரிக்கும் ஒரு கூட்டம்
சதையைச் சிலகைக் கொளமற் றதனைச் சருவிச் சருவிப் பறிக்கு மொருதிரள் ...... 5
......... பதவுரை .........
சதையைச் சில கைக் கொள ... சில பேய்கள் மாமிசத்தைக் கையில் பிடித்திருப்பதைப் பார்த்து
மற்று அதனைச் சருவிச் சருவிப் பறிக்கு மொருதிரள் ... மற்ற பேய்கள் சண்டை இட்டு போராடி அந்த உணவைப் பிடுங்குவன ஒரு கூட்டம்.
தறுகட் சிறுகட் டவளக் கவளத் தமரத் திமிரப் பனைக்கை மதமலை ...... 6
......... பதவுரை .........
தறுகண் சிறுகண் ... கொடுங் கோபமும் சிறிய கண்களை உடையதும்
தவளக் கவள ... வெண்மை நிறமும் கவளம் கவளமாக உண்ணுகின்ற உணவும்
தமரத் திமிரப் ... பெரும் நடையும் பெருமிதமும்
பனைக்கை மதமலை ... பனை மரம் போன்ற துதிக்கையை உடைய மத யானையின்
தலையுக் குளநற் றருணக் கிரணத் தரளத் திரளைக் குவித்த டியெனுரல் ...... 7
......... பதவுரை .........
தலை உட் குள ... மத்தகத்திலிருந்து உதிர்ந்த,
நல் தருணக் கிரணத் தரளத் திரளைக் குவித்து ... சிறப்பான புதியதான ஒளி வீசுகின்ற முத்துக் குவியல்களை
(கரி முத்து மாலை ... கழைமுத்து மாலை - ஸ்ரீ முஷ்டம் திருப்புகழ்).
அடி எனும் உரல் ... அந்த யானையின் பாதங்களான உரலில்
தனிலிட் டதனைத் தகுகைத் தலமுற் றிடுநெட் டைமருப் புலக்கை (முறைமுறை) ...... 8
......... பதவுரை .........
தனில் இட்டு ... தனித் தனியான இட்டு
அதனை ... அந்தக் கரி முத்துக்களை
தகு கைத்தலம் உற்றிடு ... தகுந்த துதிக்கையில் வளைந்திருக்கும்
இடு நெட்டை மருப்ப உலக்கை ... நீண்ட தந்தங்களை இடிக்கும் உலக்கையாகக் கொண்டு
எதிரிட் டதுகுத் திமுடித் தலையொப் பஅடுப் பெனவைத் தெலுப்பு விறகினை ...... 9
......... பதவுரை .........
முறைமுறை எதிரிட்டு அது குத்தி ... கியு வரியைில் எதிர் வந்து அந்த முத்துக்களை குத்தி,
முடி தலை ஒப்ப அடுப்பு என வைத்து எலுப்பு விறகினை ... மயிருடன் கூடிய பொருத்தமான தலைகளை அடுப்பாக வைத்து எலும்புகளை விறகாக்கி
எரியிட் டெரியிட் டுருவத் துடனெட் டுலைவைத் துணவைச் சமைக்கு மொருதிரள் ...... 10
......... பதவுரை .........
எரி இட்டு எரி இட்டு ... நெருப்பை மேன்மேலும் ஊட்டி
உருவத்துடன் ... அழகு பெற,
உலை வைத்து உணவைச் சமைக்கும் ஒரு திரள் ... நீண்ட நேரம் உலை வைத்து சமையல் செய்வது ஒரு கூட்டம்
இருள்செற் றதடித் தினையொத் திடுகட் கமெடுத் தெறியத் தெறித்த தலைகளை ...... 11
......... பதவுரை .........
இருள் செற்றது ... இருட்டை நீக்கும்,
அததினை ஒத்திடு ... மின்னலைப் போன்ற
கட்கம் எடுத்து எறியத் தெறித்த தலைகளை ... வாளை எடுத்து வீசுவதால் வெட்டுண்டு கிடக்கும் தலைகளை,
இதெனக் கதுனக் கதுமற் றதனுக் கெனமொய்த் துலவிப் பொறுக்கு மொருதிரள் ...... 12
......... பதவுரை .........
இது எனக்கு அது உனக்கு மற்றது உனக்கு என ... எனக்கு உனக்கு மற்றவர்களுக்கு என பங்கு போட்டுக் கொண்டு
மொய்த்து உலவிப் பொறுக்கும் ஒருதிரள் ... நெருங்கி அங்கும் இங்குமாக திரிந்துகொண்டு போர்களத்தில் தலைகளைப் பொருக்கி எடுப்பன ஒரு கூட்டம்
அதரத் துவிரற் படவைத் துமிகுத் தரவத் தொடுகொக் கரிக்கு மொருதிரள் ...... 13
......... பதவுரை .........
அதரத்து விரல் பட வைத்து ... உதட்டின் மேல் விரலை வைத்துக் கொண்டு
மிகுத்த அரவத்தொடு கொக்கரிக்கும் ஒரு திரள் ... சீழ்கையை பலமாக ஒலித்துக்கொண்டு அமர்க்களமாக கூச்சல் போடுவன ஒரு கூட்டம்
அமுதொத் தநிணத் தசைமுக் கியறத் தவசத் துயிலிற் கிடக்கு மொருதிரள் ...... 14
......... பதவுரை .........
அமுது ஒத்த நிணத் தசை முக்கி ... தமக்கு அமிர்தம் போன்று சுவை மிக்க மாமிசங்களையும் கொழுப்பையும் வாய் நிறைய உண்டு
அறத்து ... தர்ம சத்திரத்தில்
அவசத் துயிலில் கிடக்கும் ஒரு திரள் ... உண்ட மயக்கத்தில் தம்மை மறந்து உறங்கும் ஒரு கூட்டம் (இவை எல்லாம் எவை என வினாவினால்)
அடவிப் புனமுற் றகுறத் திருவுக் கமைவுற் றமணிப் புயத்தன் அறுமுகன் ...... 15
......... பதவுரை .........
அடவிப் புனம் உற்ற குறத் திருவுக்கு ... காட்டில் தினைக் கொல்லையில் வசித்த கிராத இலக்குமியான வள்ளிக்கு
அமைவுற்ற மணிப் புயத்தன் அறுமுகன் ... பொருத்தமான அழகிய தோள்களை உடையவன், சண்முகன்
அடன்மிக் கதயித் தியர்பட் டுவிழப் பொருதிட் டசெருக் களத்தில் அலகையே. ...... 16
......... பதவுரை .........
அடல் மிக்க தயித்தியர் பட்டு விழ ... வலிமை மிக்க அசுரர்கள் மாண்டு ஒழியும்படிக்கு, விழும்படிக்கு,
பொருதிட்ட செருக்களத்தில் அலகையே ... போரிட்ட செருக் களத்தில் பேய்களே. |