......... மூலம் .........
வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும் வெகுளுறு பசாசகணமும்
வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில் வெம்பசி ஒழிக்கவந்தே
ஆதார கமடமுங் கணபண வியாளமும் அடக்கிய தடக்கிரியெலாம்
அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை அருந்திப் புரந்தவைவேல்
தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை தனிப்பரங் குன்றேரகம்
தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி தடங்கடல் இலங்கைஅதனிற்
போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப் புகழும்அவ ரவர்நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன் புங்கவன் செங்கை வேலே.
......... சொற்பிரிவு .........
வேதாள பூதமொடு காளி காளாத்ரிகளும் வெகுளுறு பசாச கணமும்
வெம் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில் வெம்பசி ஒழிக்க வந்தே
ஆதார கமடமும் கணபண வியாளமும் அடக்கிய தடக்கிரி எலாம்
அலைய நடமிடு நெடுந் தானவர் நிணத்தசை அருந்திப் புரந்த வைவேல்
தாது ஆர் மலர்ச் சுனைப் பழநி மலை சோலை மலை தனிப் பரங்குன்று ஏரகம்
தணிகை செந்தூர் இடைக்கழி ஆவினன்குடி தடங்கடல் இலங்கை அதனில்
போது ஆர் பொழில் கதிர்காமத் தலத்தினைப் புகழும் அவர் அவர் நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன் புங்கவன் செம் கை வேலே.
......... பதவுரை .........
வேதாள பூதமொடு ... முருகனின் சேனைகளான வேதாள கணங்களும் பூத கணங்களும்,
காளி காளாத்தரிகளும் ... நச்சுப் பற்களை உடைய கொடிய நாக சர்ப்பங்களும்,
வெகுளுறு ... பசியால் சினங் கொண்டிருக்கும்,
பசாச கணங்களும் ... பிசாசு கூட்டங்களும்,
வெங்கழுகுடன் ... கொடிய பருந்துகள்,
கொடி ... காக்கைகள்,
பருந்து ... பருந்துகள் (இவைகளுடன்),
செம்புவனத்தில் ... செழிப்பான இவ்வுலகத்தில்,
வெம்பசி ஒழிக்க வந்து ... கொடிய பசியைத் தீர்க்கும்படி போர்க் களத்தில் எழுந்தருளி,
ஆதார கமடமும் ... உலகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் கூர்ம ராஜனும்,
கணபண வியாளமும் ... கூட்டமான படங்களை உடைய ஆதிஷேசனும்,
அடக்கிய ... தாங்கி இருக்கும்,
தடக் கிரி எலாம் ... பரந்த மலைகளில் எல்லாம்,
அலைய நடமிடு ... அங்கும் இங்கும் நடந்துகொண்டு துன்பத்தை விளைவித்த,
நெடும் தானவர் ... பெரிய வடிவுள்ள அரக்கர்களின்,
நிணத்தசை ... கொழுப்பையும் மாமிசத்தையும்,
அருந்தி ... உணவாகக் கொண்டு,
புரந்த ... உலகத்தை எல்லாம் காப்பாற்றி அருளிய,
வை வேல் ... கூரிய வேல்,
(அது எது என வினவினால்)
தாதார் மலர்ச் சுனை ... மகரந்தப் பொடிகள் நிறைந்துள்ள பூஞ்சோலைகள் அருவிகள் விளங்கும்,
பழநி மலை ... பழநி மலை,
சோலை மலை ... பழமுதிர்ச்சோலை,
தனிப்பரங் குன்று ... ஒப்பற்ற திருப்பரங்குன்றம்,
ஏரகம் ... சுவாமி மலை,
செந்தூர் ... திருச்செந்தூர்,
இடைக்கழி ... திருவிடைக்கழி,
ஆவினன் குடி ... திருவாவினன் குடி,
தடங்கடல் இலங்கை அதனில் ... பெரிய கடல் சூழ்ந்த இலங்கைத் தீவில்,
போதார் பொழில் ... மலர்கள் நிறைந்த பூங்காக்கள் உள்ள,
கதிர்காம தலத்தினை ... கதிர்காமப் பதியை,
புகழும் அவரவர் ... விரும்பித்துதிக்கின்ற அடியார்களின்,
நாவில் ... நாவிலும்,
புந்தியில் ... சித்தத்திலும்,
அமர்ந்தவன் ... வீற்றிருக்கும்,
கந்தன் ... கந்தக் கடவுள்,
முருகன் ... முருகப் பெருமான்,
குகன் ... குகன்,
புங்கவன் ... புனித மூர்த்தியின்,
செங்கை வேலே ... அழகிய வேலாயுதமே அது.
......... விளக்கவுரை .........
முப்பிறவியில் செய்த பாவத்தின் பலனாக, உயிர்கள் வேதாள பூதங்களாக மாறி, அவைகளில் சில முருகனின் சேனைகளில் வந்திருக்கின்றன. அவைகள் எப்பொழுதும் முருகப் பெருமானையே புகழ்ந்து பாடி அதன் மூலம் உய்வு பெறுகின்றன என்பதை பூத வேதாள வகுப்பிலும், திருப்புகழிலும் அநுபூதியிலும் காணலாம்.
.. கள முழுதும் வாழிய திருப்புகழ் முழக்குவன ..
(பூத வேதாள வகுப்பு)
.. வேதாள கணம் புகழ் வேலவனே
(அநுபூதி பாடல் 38 - 'ஆதாளியை').
நாக சர்ப்பத்திற்கு 'காளி', 'காளாத்தரி', 'எமன்', 'எமதூதி' என நான்கு விஷப் பற்கள் உண்டு. அவற்றில் இரண்டை இங்கு குறிப்பிடுகிறார்.
மந்தர மலையை தாங்கி நிற்கும் திருமாலாகிய கூர்மத்தை இந்த வகுப்பில் குறிப்பிடுகிறார் என்பது பல உரை ஆசிரியர்களின் கருத்து. ஆனால் திருமாலாகிய கூர்மம் திருப்பாற்கடலை கடைந்த பிறகு மீண்டும் தனது இருப்பிடமாகிய வைகுண்டத்திற்கே செல்கிறார். இங்கு, ஆமைகளுக்கெல்லாம் தலைவனாகிய கூர்ம ராஜனைத்தான் குறிப்பிடுகிறார் என பொருளாகக் கொள்வதே சிறப்பாகும்.
அசுரர்கள் மலைகளில் எல்லாம் உலாவி பெரும் துன்பம் விளைவித்தனர் என்பதை,
'மலை நிருதர் உக'
என்னும் 'குழல் அடவி முகில் .. ' எனத் தொடங்கும் பழநித் திருப்புகழ் அடியில் காணலாம். (பாடல் 147)
அருணகிரியார், இங்கு பல தலங்களை வரிசைப்படுத்தி கூறும்போது, பழநியையும் திருவாவினன்குடியையும் தனித்தனியாக குறிப்பிடுவது கவனத்திற்கு உரியது. ஆறு படை வீடுகளைத் தவிர அதற்கு சமமான பெருமையுடன் கதிர்காமத்தையும் திருவிடைக்கழியையும் சேர்த்திருப்பது ஆராய்ச்சிக்குரியது.
முருகனின் திருப்புகழைப் பாடும் அடியார்களின் நாவில் முருகன் குடிகொண்டுள்ளான் என்பதை பல இடங்களில் குறிப்பிடுகிறார்.
1. .. பல கலை படித்தோது பாவாணர் நாவிலுறை ..
பழநித் திருப்புகழ் - 'தலைவலி மருத்தீடு' (பாடல் 166)
2. .. நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக நிர்த்தம தாடு மாறு முகவோனே
வைத்தீசுரன் கோயில் திருப்புகழ் - 'எத்தனை கோடி' (பாடல் 780)
3. நினைத்தார் சித்தத் துறைவோனே
திருக்காளத்தித் திருப்புகழ் - 'சிரத்தானத்தி' (பாடல் 447). |