......... மூலம் .........
வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி வெல்லா எனக்கருதியே
சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ் சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே தனிஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி கெளமாரி கமலாசனக்
கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை கெளரிகா மாஷிசைவ
சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன் செம்பொற் றிருக்கை வேலே.
......... சொற்பிரிவு .........
வெங்காள கண்டர் கைச்சூலமும் திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர் பதி குலிசமும் சூரன் குலம் கல்லி வெல்லா எனக் கருதியே
சங்க்ராம நீசயித்து அருள் எனத் தேவரும் சதுர்முகனும் நின்று இரப்ப
சயிலமொடு சூரன் உடல் ஒருநொடியில் உருவியே தனி ஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி கெளமாரி கமலாசனக்
கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை கெளரி காமாஷி சைவ
சிங்காரி யாமளை பவாநி கார்த்திகை கொற்றி த்ரியம்பகி அளித்த செல்வ
சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குல அந்தகன் செம்பொன் திருக்கை வேலே.
......... பதவுரை .........
வெங்காளர் கண்டர் கைச் சூலமும் ... கொடிய ஆலகால விஷத்தை அடக்கிக் கொண்டிருக்கும் கழுத்தை உடைய சிவ பெருமானின் சூலாயுதமும்,
திருமாயன் வெற்றிபெறு சுடராழியும் ... திருமாலின் வெற்றிச் சின்னமான ஒளி வீசுகின்ற சக்ராயுதமும்,
விபுதர்பதி குலிசமும் ... தேவர்களின் தலைவனான இந்திரனின் வஜ்ராயுதமும்,
சூரன் குலம் ... சூரபத்மாவின் சுற்றம் முழுவதையும்,
கல்லி ... அடியோடு பெயர்த்து,
வெல்லா ... வெற்றி காணும் திறமை உடையன அல்ல,
எனக் கருதியே ... என்று நினைத்து,
சங்ராம நீ சயித்து அருள் என ... 'சிறந்த போர் வீரனே, நீ ஜெயித்து எங்களுக்கு அருள வேண்டும்' என்று,
தேவரும் சதுர்முகனும் நின்று இரப்ப ... தேவர்களும் பிரம்மனும் வேண்ட,
சயிலமொடு சூரனுடல் ஒரு நொடியில் உருவியே ... கிரவுஞ்ச மலையையும் சூரபத்மாவின் உடலையும் ஒரே நிமிடத்தில் உருவி அழித்து வெளி வந்த
தனி ஆண்மை கொண்ட நெடு வேல் ... ஒப்பற்ற ஆண்மை கொண்ட நெடிய வேலாயுதம்
(அது யாருடையது என வினவினால்)
கங்காளி ... ஊழிகாலத்தில் தேவர்கள் முக்தி அடையும் பொருட்டு அந்த தேவர்களின் எலும்புக் கூட்டை மாலையாக போட்டுக் கொண்டவள்,
சாமுண்டி ... மகிஷாசுரனைக் கொன்று அவனின் எருமைத் தலைமேல் நிற்பவளும்,
வராகி ... சப்த மாதர்களில் ஒருவளான வராக மூர்த்தியின் சக்தியாக இருப்பவள்,
இந்திராணி ... இந்திரனின் சக்தியானவள்,
கெளமாரி ... குமார மூர்த்தியின் சக்தி,
கமலாசனக் கன்னி ... தாமரையை ஆசனமாகக் கொண்டிருக்கும் இளமை மாறாத கன்னி,
நாரணி ... காக்கும் சக்தியாகிய விஷ்ணுரூபிணி,
குமரி ... பால்ய பருவத்தினள்,
திரிபுரை ... மும் மூர்த்திகளுக்கும் மேலானவள்,
பைரவி ... பைரவரின் சக்தி,
அமலை ... மலம் அற்றவள்,
கெளரி ... பொன்னிறமானவள்,
காமாட்சி ... அடியார்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கண்களை உடையவள்,
சைவ சிங்காரி ... சிவனுடைய தேவியாகிய பேரழகி,
யாமளை ... நீல நிறத்தவள்,
பவானி ... சம்சாரக் கடலை அகற்றுபவள்,
கார்த்திகை ... கார்த்திகை மாதர்களாக வருபவள்,
கொற்றி ... யுத்தகளத்திற்கு அதிபதி,
திரியம்பகி ... முக்கண்ணுடையவள் ஆகிய தேவி,
அளித்த ... பெற்றருளிய
செல்வச் சிறுவன் ... உலகுக்கெல்லாம் முத்திச் செல்வத்தை கொடுக்கும் பாலகன்
அறுமுகன் ... சண்முகன்,
முருகன் ... ஞானசொரூபி,
நிருதர்கள் குல அந்தகன் ... அரக்கர் குலத்தினை அழித்தருளிய கந்த பிரான்,
செம் பொன் திருக்கை வேலே ... திருக்கையிலே விளங்கும் பொன்னொளி வீசும் அழகிய வேலாயுதமே அதுவாகும்.
......... விளக்கவுரை .........
முதல் இரண்டு அடிகளில் கூறப்பட்டுள்ள கருத்தை ஆதிசங்கரர் தான் அருளிச் செய்த 'ஆன்ம போதம்' என்கிற நூலில், ஒரு பொருள் மற்றொரு பொருளை அழிக்கவேண்டுமானால் அவர்களுக்கு இடையே பகைமை இருக்கவேண்டும். உதாரணமாக பூனைக்கு எலிமேல் பகை. ஆதலால் பூனை எலியைக் கண்டால் கொன்றுவிடும். ஆனால் பசு எலியைக் கொல்லாது. காரணம் அவைகளுக்குள் பகை கிடையாது. அது போல அஞ்ஞானத்தை அழிக்க அதற்கு நேர்ப் பகையாகிய ஞானத்தால்தான் முடியும். அஞ்ஞானத்தின் முழு உருவமான சூரபத்மாவை ஞான சக்தியாகிய வேலாயுதத்தினால்தான் அழிக்க முடியும். சூலாயுதமோ, சக்ராயுதமோ அல்லது வஜ்ராயுதமோ முழு ஞானசக்தி இல்லாததினால் அவைகளால் சூரனைக் கொல்ல முடியவில்லை. இதனால்தான் உலக வழக்கில் ஞான வேல் என்ற பெயரை மனிதர்கள் தரித்திருக்கிறார்கள். ஞான சூலம், ஞான சக்ராயுதன் என்கிற பெயர்களைக் காண முடியாது.
சூரனின் மேல் வேலை பிரயோகித்ததை கூறும் பொழுது,
.. சிவம் அஞ்சு எழுத்தை முந்த விடுவோனே ..
என்று பாடுகிறார். சிதம்பரத் திருப்புகழ் - 'பருவம் பணை' (பாடல் 465) அதாவது பஞ்சாட்சரமே வேல் என்கிற ரகசியத்தை மறைமுகமாக உணர்த்துகிறார்.
.. எம் புதல்வா வாழி வாழி என வீரான வேல் தர ..
என 'கொம்பனையார் .. ' எனத் தொடங்கும் திருச்செந்தூர்த் திருப்புகழில், (பாடல் 53), பார்வதி தேவியே முருகனுக்கு வேல் கொடுத்தார் என மேலும் கூறுகிறார். இன்றும் சிக்கலில், முருகன் வேல் வாங்குகிற காட்சியை பிரம்மோட்சவத்தில் காணலாம்.
இந்த வேல் விருத்தத்தில் அடுக்கடுக்காக தேவியின் திருநாமாக்கள் கூறி இருப்பதில் ஒரு சூக்கும கருத்து உள்ளது. தேவியின் பீஜாட்சரமாகிய 'ஹ்ரீம்' என்பதுடன் 'ஓம் நமசிவாய' என்கிற பஞ்சாட்சரமும் சேர்ந்து, 'ஓம் ஹ்ரீம் நம சிவாய' என்கிற சக்தி பஞ்சாட்சரியாக மாறுகிறது. இந்த 'சக்தி பஞ்சாட்சர' சொரூபமே வேலாயுதம் என்பதே ரகசிய மந்திர கருத்து.
ஆதிசங்கரரும் தாம் இயற்றிய வேலாயுத துதியில், 'சக்தே பஜே த்வாம்' என்று வேலாயுதத்தை பெண்பாலாக கூறுகிறார். வேலாயுதத்தில் சிவத்துடன் சக்தியும் சேர்ந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். |