......... மூலம் .........
மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி மதியும்இர வியுமலையவே
வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல மகிழ்வுபெறு மறுசிறையவாஞ்
சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு செநெல்களொடு தரளம் இடவே
செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி திடர்அடைய நுகரும் வடிவேல்
தகரமிரு கமதமென மணமருவு கடகலுழி தருகவுளும் உறுவள் எயிறுந்
தழைசெவியும் நுதல்விழியும் உடையஒரு கடவுள்மகிழ் தருதுணைவன் அமரர்குயிலுங்
குகரமலை எயினர்குல மடமயிலும் எனஇருவர் குயமொடமர் புரியுமுருகன்
குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள் குலையவிடு கொடியவேலே.
......... சொற்பிரிவு .........
மகரம் அளறு இடைபுரள உரகம் கணபண மவுலி மதியும் இரவியும் அலையவே
வளர் எழிலி குடர் உழல இமையவர்கள் துயர் அகல மகிழ்வு பெறும் *அறு சிறையவாம்
சிகரவரை மனை மறுகு தொறும் நுளைய மகளிர் செழு செநெல்களொடு தரளம் இடவே
செகம் சிரம் பகிரதி முதல் நதிகள் கதி பெற உததி திடர்அடைய நுகரும் வடிவேல்
தகரம் மிருகமதம் என மணம் மருவு கட கலுழி தரு கவுளும் உறு வள் எயிறும்
தழை செவியும் நுதல் விழியும் உடைய ஒரு கடவுள் மகிழ் தரு துணைவன் அமரர் குயிலும்
குகர மலை எயினர் குல மட மயிலும் என இருவர் குயமொடு அமர் புரியும் முருகன்
குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள் குலைய விடு கொடிய வேலே.
......... பதவுரை .........
மகரம் அளறு இடை புரள ... பெரிய சுறா மீன்கள் சேற்றில் புரளவும்,
உரகம் கண மவுலி ... ஆதிஷேசனின் கூட்டமான ஆயிரம் முடிகளின் மேல்,
மதியும் இரவியும் அலையவே ... சந்திர ஒளியும் சூரிய ஒளியும் சேர்ந்து தாக்கவும்
வளர் எழிலி குடர் உழல ... பெரிதாக பரந்திருக்கும் மேகங்களின் உட் பாகம் சுழற்சி அடையவும்,
இமையவர்கள் துயர் அகல ... தேவர்களின் துன்பம் நீங்கவும்,
மகிழ்வு பெறும் ... களிப்படைந்த,
*அறு சிறையவாம் ... சிறகுகள் அறுக்கப்பட்ட,
சிகர வரை ... மலைகளின் சிகரங்களிலும்,
மனை ... வீடுகளிலும்,
மறுகு தொறும் ... முச்சந்திகளிலும்,
நுளைய மகளிர் ... மலை ஜாதிப் பெண்கள்,
செழு செநெல்களோடு தரளம் இடவே ... செழுமையான நெல் தானியங்களுடன் முத்துக்களையும் உரலில் இட்டு குற்றவும்,
செகம் சிரம் ... இந்த உலகில் முதன்மை ஸ்தானம் வகிக்கும்
பகீரதி முதல் நதிகள் கதி பெற ... கங்கை முதலாகிய மற்ற நதிகள் பழையபடி தங்களுடைய ஓட்டத்தை ஆரம்பிக்கவும்,
உததி திடர் அடையவும் ... சமுத்திரம் வற்றி மண் திடலாக போகும்படி,
நுகரும் வடி வேல் ... அந்த ஜலத்தை எல்லாம் உறிஞ்சிய,
வடி வேல் ... கூரிய வேலாயுதம்
(அது யாருடையது என வினவினால்)
தகர ... வாசனைச் சாந்து,
மிருக மதம் ... கஸ்தூரி (இவைகளின்)
மண மருவு ... வாசனை கொண்டு நறு மணம் வீசும்,
கட கலுழி தரு ... ஊற்றுப் போல் பெருக்கெடுக்கும் மதநீர் தோன்றும்,
கவுளும் ... கபோலமும்,
உறு வள் எயிறும் ... உறுதியான திண்மை பொருந்திய (பற்கள்) தந்தமும்,
தழை செவியும் ... தழைந்துள்ள இரண்டு காதுகளும்,
நுதல் விழியும் ... நெற்றிக் கண்ணும்,
உடைய ஒரு கடவுள் ... கொண்டு விளங்கும் ஒப்பற்ற விநாயகப் பெருமான்,
மகிழ் தரு துணைவன் ... மகிழ்கின்ற சகோதரனும்,
அமரர் குயிலும் ... தேவர்களால் வளர்க்கப்பட்ட குயில் போன்ற இனிய குரலுடைய தேவசேனை,
குகர மலை ... குகைகள் நிறைந்துள்ள மலையின் வசிக்கின்ற,
எயினர் குல மட மயிலும் ... வேடர் குலத்தில் வளர்ந்த அழகிய மயில் போன்ற வள்ளிப் பிராட்டி,
என இருவர் ... என்கிற இரு நாயகிகளின்,
குயமோடு அமர் புரியும் ... மார்பகங்களை அணைக்கும்,
முருகன் ... முருகப் பெருமான்,
குமரன் ... பால சுப்ரமணியன்,
அறுமுகன் ... சண்முகன் ஆகிய முருகப் பெருமானை,
எதிரும் ... எதிர்த்து,
விருது ... பல வெற்றிச் சின்னங்களுடன் வந்த,
நிசிசரர் ... அரக்கர்களின்,
அணிகள் ... சேனைகளை,
குலைய விடு ... சிதறிப் போகும்படி செய்த,
கொடிய வேலே ... வீரம் மிகுந்த வேலே தான் அது.
......... விளக்கவுரை .........
கடலின் மத்தியில் மாமரமாய் நின்ற சூரபத்மாவின் மேல் வேலை எறிந்த போது, வேலின் வெப்பத்தை தாங்க முடியாமல் கடல் நீர் ஆவியாகி அடியில் சேறு மட்டும் இருந்தது. அந்தச் சேற்றில் பெரிய மீன்கள் நெளிந்து புரண்டபோது, சேற்றின் நடுவில் அங்காங்கே துவாரங்கள் தெரிய, அந்தப் பிளவுகளின் வழியாக அதல பாதாளத்தில் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷனின் ஆயிரம் பணா மகுடங்கள் தெரிகின்றன. சேற்றின் சந்துகளின் மூலமாக சூரிய சந்திரர்களின் ஒளிக் கற்றைகள் அந்தப் படங்களின் மேல் விழ அதிலுள்ள ஆயிரக் கணக்கான ரத்தினங்கள் ஒளி விட்டு பிரகாசிக்கின்றன.
வேலாயுதத்தின் வேகத்தில் மேகங்களின் உட் பகுதி சுழற்சி அடைந்து மழை பெய்கிறது. இதுகாலும் பட்ட துன்பங்கள் தீர்ந்து தேவர்கள் களிப்படைகின்றனர். சூரனாகிய மா மரம் நதிகள் சமுத்திரத்தில் விழாமல் அடைத்து நின்றதால், நதிகளின் ஓட்டம் நிறுத்தப்பட்டதால் மலைகள் ஆடத் தொடங்குகின்றன. சூர மா மரம் பிளக்கப்பட்டதால் இப்போது நதிகள் முன் போல் பாயத் தொடங்கியதால் மலைகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதுகாலும் வானிலை, நீர்நிலை தடுமாற்றம் அடைந்த அவலம் போய் பழையபடி மழை பெய்து நதிகள் பாய்வதால் மலை வயல்களில் செழிப்பாக நெற்ப்பயிர்கள் விளைந்து ஆறுகளிலும் முத்துக்கள் கொழித்து வர, இவை இரண்டையும் சேர்த்து மலைப் பெண்கள் உரலில் இடுகின்றனர்.
தன் அடியார்களின் குறைகளை தீர்ப்பதற்காக விநாயகப் பெருமானுக்கு தழைத்த பெரிய செவிகள் உள்ளன. அடியார்களின் பகையை ஓட்டுவற்காக அவருக்கு நெற்றியில் மூன்றாவது கண். வேலைப்பற்றி பாடுவதாலும், வேல் ஞானத்தின் சொரூபமாக உள்ளதாலும் தனியாக கணபதி துதிபாடாமல், இப் பாட்டின் பின் பகுதியிலேயே விநாயகப் பெருமானை எண்ணி வழிபாடு செய்கிறார் அருணகிரியார்.
துணைவன் என்பதில் ஒரு இனிய கருத்து. தன் சகோதரரான விநாயகப் பெருமானை தொழும் அடியார்களுக்கு முருகன் துணையாக வருவான் என்பதே இக் கருத்தாகும். இதை தேவேந்திரசங்க வகுப்பிலும்,
அடன்மிகு கடதட விகடித மதகளி றனவர தமுமக லாமாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி
.. கூறுவார். முருகன் கிரவுஞ்ச கிரியையும் சூரனுக்குக் காவலாய் இருந்த ஏழு மலைகளுடன் போர் புரிந்தது மட்டுமல்லாமல் தனது நாயகிமார்களுடைய திருமார்பலங்களுடனும் போர் புரிந்தார் என நயம் பட கூறுகிறார் நமது அருணை வள்ளல்.
* அறு சிறை
முன் காலத்தில் மலைகளுக்கெல்லாம் சிறகுகள் (சிறை) இருந்தன. அவைகள் பறந்து சென்று கண்ட இடங்களில் எல்லாம் இறங்கி உலகோருக்கு துன்பம் விளைவித்ததால் அவற்றின் சிறகுகளை இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் வெட்டி விட்டான். இதையே அருணகிரியார் 'அறு சிறை' எனக் குறிப்பிடுகிறார். |