......... மூலம் .........
அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல அங்கியும் உடன்சுழலவே
அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல அகிலதல முஞ்சுழலவே
மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர மாணப் பிறங்கியணியும்
மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம வகைவகையி னிற்சுழலும் வேல்
தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய சந்தமுட னும்பிறைகள்போல்
தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு தன்புறம் வருஞ்சமனையான்
கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண கஞ்சம்உத வுங்கருணைவேள்
கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி கணவன் அடல் கொண்ட வேலே.
......... சொற்பிரிவு .........
அண்டர் உலகும் சுழல எண்திசைகளும் சுழல அங்கியும் உடன் சுழலவே
அலை கடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல அகில தலமும் சுழலவே
மண்டலம் நிறைந்த ரவி சத கோடி மதி உதிரம் மாணப் பிறங்க அணியும்
மணி ஒலியினில் சகல தலமும் மருளச் சிரம வகை வகையில் சுழலும் வேல்
தண்டமுடம் கொடிய பாசமுடனும் கரிய சந்தமுடனும் பிறைகள்போல்
தந்தமுடனும் தழலும் வெம் கணுடனும் பகடு தன்புறம் வருஞ் சமனை யான்
கண்டு குலையும் பொழுதில் அஞ்சல் என மென்சரண கஞ்சம் உதவும் கருணைவேள்
கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம் புதல்வி கணவன் அடல் கொண்ட வேலே.
......... பதவுரை .........
வேல் வருகின்ற வேகத்தினால் நடந்தவைகள்
அண்டர் உலகம் சுழல ... தேவலோகம் சுழற்சி அடையவும்,
எண் திசைகளும் சுழல ... எட்டு திசைகளும் நிலை தடுமாறி சுற்றவும்,
அங்கியும் உடன் சுழலவே ... எல்லாவற்றையும் நீறாக்கக் கூடிய அக்னி தேவனும் சுற்றவும்,
அலை கடல்களும் சுழல ... அலை வீசும் சமுத்திரம் கொதிப்படைந்து கொந்தளிக்கவும்,
அவுணர் உயிரும் சுழல ... அசுரர்களின் உயிர்கள் தமக்கு முடிவு காலம் வந்து விட்டதே என எண்ணி பதட்டத்தினால் சுற்றவும்,
அகில தலமும் சுழலவே ... எல்லா பிரபஞ்சமும் சுழலவும்,
மண்டல நிறைந்த சத கோடி ரவி ... வட்ட வடிவமாயுள்ள ஆயிரம் கோடி சூரியர்கள் போலவும்,
சதகோடி மதி ... ஆயிரம் கோடி சந்திரர்கள் போலவும் (விளங்கிக் கொண்டு),
உதிர மாணப் பிறங்கி ... அசுரர்களின் குருதி ஏராளமாக பெருக,
அணியும் மணி ஒலி ... தான் பூஷணமாக அணிந்திருக்கும் மணிகளின் சப்தத்தால்
சகல தலமும் மருள ... எல்லா உலகங்களும் மருட்சி அடையவும்,
சிரம வகை வகையினில் சுழலும் வேல் ... ஆயுதப் பயிற்சியை படையில் பலவித நடைகளுடன் சுழன்று வருகின்ற வேலாயுதம்
(அது யாருடையது என வினவினால்)
தண்டமுடனும் ... தண்டாயுதத்துடனும்,
கொடிய பாசமுடனும் ... கொடுமையான பாசக் கயிற்றுடனும்,
கரிய சந்தமுடனும் ... கருத்த நிறத்துடனும்,
பிறைகள் போல் தந்தமுடனும் ... சந்திர பிறை போல் வளைந்த கோரப் பற்களுடனும்,
தழலும் வெங்கணுடனும் ... தீக் கொப்புளிக்கின்ற கொடிய கண்களுடனும்,
பகடு தன் புறம் ... எருமைக் கடாவில் ஏறி வரும்,
சமனை ... எமனை,
யான் கண்டு குலையும் பொழுதில் ... நான் பார்த்து அச்சப்பட்டு நடுங்கும்போது,
அஞ்சல் என ... பயப்படாதே என்று,
மென் சரண கஞ்சம் உதவும் கருணைவேள் ... தன்னுடைய மிருதுவான தாமரை மலரன்ன திருவடித் தாமரையை தந்தருளும் கருணாமூர்த்தி,
கந்தன் ... கந்தப் பெருமான்,
முருகன் ... முருகப் பெருமான்,
குமரன் ... குகப் பெருமான்
வண் குறவர் ... வளப்பமான வாழ்க்கையை உடைய வேடர்களின்,
தம் புதல்வி ... புத்திரியான வள்ளிப் பிராட்டியின்,
கணவன் ... மணாளன்,
அடல் கொண்ட வேலே ... மிகவும் வளமையான வேலாயுதமே அது.
......... விளக்கவுரை .........
வேலாயுதம் எப்படி உலகத்தை எல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதற்கு ஒரு ரகசிய குறிப்பு கந்தர் அலங்காரத்தின் 3 வது பாட்டில் காணலாம்.
தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற் கூரணி யிட்டணு வாகிக் கிரெளஞ்சங் குலைந்தரக்கர் நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்தது சூர்ப் பேரணி கெட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே
வேலாயுதம் அணுகுண்டு போல் சகல பிரபஞ்சத்தையும் அழிக்க வல்லது என்பதை மேற்கண்ட அலங்காரத்தால் உணரலாம்.
எமன் அடியார்களைப் பற்ற வரும்போது, எப்படி மார்க்கண்டேயரைப் பிடிக்க வந்த எமனை சிவபெருமானின் திருப்பாதம் உதைத்து விரட்டிவிட்டதோ, அதுபோல முருகப் பெருமானின் வேலாயுதமும் நம்மைக் காக்கும் என்பதை வேல் வகுப்பில்,
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிக ராகும்
... என்கிறார் அருணகிரியார்.
முருகன் வேறு .. வேலாயுதம் வேறு என்பது கிடையாது என்கிற ரகசியக் கருத்தை,
உததியிடை கடவுமர கதவருண குலதுரக வுபலளித கனகரத சதகோடி சூரியர்கள் உதயமென ..
என்கிற அதே அடை மொழியை வேலுக்கும் கூறுகிறார். முருகனுக்கு ஒரே சமயத்தில் சூரிய ஒளியுடன் சந்திர ஒளியும் உண்டு என்பதை 'சந்தர நிறங்களும்' என்கிற அடியில் காணலாம். அதாவது சூரியனைப்போல ஒளியுண்டு. ஆனால் வெப்பம் கிடையாது. சந்தரனைப்போல குளிர்ச்சி உண்டு. |