......... மூலம் .........
ஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய் ஆதவனின் வெம்மைஒளிமீ
தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென் றமைந்தன்ப ருக்கு முற்றா
மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை முடித்திந்தி ரர்க்கு மெட்டா
முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த மூதண்ட மும்புகழும் வேல்
ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து மின்பணைக ளுமிழு முத்தும்
இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம் இலவங்க நறவமாருந்
தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர் தருவநிதை மகிழ்நன் ஐயன்
தனிநடம் புரிசமர முருகன்அறு முகன்குகன் சரவணக் குமரன் வேலே.
......... சொற்பிரிவு .........
ஆலமாய் அவுணருக்கு அமரருக்கு அமுதமாய் ஆதவனின் வெம்மை ஒளி மீது
அரிய தவமுநிவருக்கு இந்துவின் தண் என்று அமைந்து அன்பருக்கு முற்றா
மூலமாம் வினை அறுத்து அவர்கள் வெம் பகையினை முடித்து இந்திரர்க்கும் எட்டா
முடிவில் ஆநந்தம் நல்கும் பதம் அளித்து எந்த மூதண்டமும் புகழும் வேல்
ஏல மா யானையின் கோடு அதில் சொரி முத்தும் இன்பணைகள் உமிழும் முத்தும்
இனி வாடை மான் மதம் அகிலோடு சந்தனம் இலவங்க நறவம் ஆரும்
தாலம் மா மரம் முதல் பொருள் படைத்திடும் எயினர் தரு வநிதை மகிழ்நன் ஐயன்
தனிநடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன் சரவண குமரன் வேலே.
......... பதவுரை .........
ஆலமாய் அவுணருக்கு ... பகைவர்களாகிய அரக்கர்களுக்கு ஆலகால விஷத்தைப் போல் நின்று அவர்களை அழித்தும்,
அமரருக்கு அமுதமாய் ... (தன்னைத் துதித்த) தேவர்களுக்கு அமிர்தம் போல் புத்துயிர் கொடுப்பதாயும்,
ஆதவனின் வெம்மை ஒளி மீது ... சூரியனின் தேஜசை மீறியுள்ள வகையில்,
அரிய தவ முனிவருக்கு ... செயற்கரிய தவம் செய்து தவக்கினியால் ஜொலிக்கும் ரிஷிகளுக்கு,
இந்துவின் தண் என்று அமைந்து ... சந்திரனின் குளிர்ச்சியைப்போல் அவர்களின் தவ வெப்பத்தை சமப்படுத்துவதாய் அமைந்து,
அன்பருக்கு ... தன்னைத் துதிக்கும் அடியவர்களுக்கு,
முற்றா மூலமாம் வினை அறுத்து ... எப்பொழுதும் முற்றுப் பெறாத வகையில் மீண்டும் மீண்டும் கிளம்பி எழும் சஞ்சித பிராப்த வினைகளை அடியோடு ஒழித்து,
அவர்கள் வெம் பகையினை முடித்து ... அந்த அன்பர்களின் அகப்பகை புறப்பகை இரண்டையும் அடியோடு ஒழித்து,
இந்திரருக்கும் எட்டா ... தேவர்களுக்குக்கூட கிடைப்பதற்கு அரிய
முடிவில் ஆநந்த நல்கும் பதம் அளித்து ... அழிவில்லாத பேரின்பமாகிய சாயுச்ய பதவியைக் கொடுத்து,
எந்த மூதண்டமும் புகழும் வேல் ... எல்லா அண்டங்களும் போற்றும் வேலாயுதம்
(அது யாருடையது என வினவினால்)
ஏல மா யானையின் கோடு அதில் ... பொருந்தி இருக்கும் பெரிய யானைத் தந்தத்திலிருந்து
சொரி முத்து ... உயிர்கின்ற முத்துக்களையும்,
இன் பணைகள் உமிழும் முத்தும் ... இனிய மூங்கில்களில் இருந்து விழும் முத்துக்களையும்,
இனி வாடை மான் மதம் ... இனிய மணம் வீசும் கஸ்தூரி,
அகிலோடு சந்தனம் ... அகில், சந்தனம்,
இலவங்க நரவம் ... இலவங்கம் (கிராம்பு), தேன்,
ஆரும் ... இவைகைள் எல்லாவற்றையும்,
தால மா மர முதல் ... பனை, மா முதலிய மரங்களையும்,
பொருள் படைத்திடும் ... தனது சொத்துக்களாக கொண்டிருக்கும்,
எயினர் தரு வனிதை ... வேடர்களால் வளர்க்கப்பட்ட வள்ளி நாயகியுடன்,
மகிழ்னன் ஐயன் ... மகிழ்ந்து மணந்த பெருமான்,
தனி நடனம் புரி சமர முருகன் ... போர்க் களத்தில் ஒப்பற்ற நடனம் புரிந்த முருகன்,
அறுமுகன் குகன் சரவணக் குமரன் வேலே ... ஆறுமுகன், குகன், ஸரவணபவன், குமாரக் கடவுளின் வேலாயுதமே.
......... விளக்கவுரை .........
வேலாயுதம் கொடியவர்களுக்கு தீமையையே விளைவிக்கும் என்பதை, 'வஞ்ச வேல்' என்கிற சொற்றொடரால் அறிய முடிகிறது. தேவர்கள் கந்தப் பெருமானையும் அவனது வேலாயுதத்தையும் பூஜித்ததினால் அமிர்தம் உண்டும், அசுரர்களால் மரணம் அடையும் அவர்கள் வேலாயுதத்தின் மூலமாக பரிபூரண அமிர்தத் தன்மை பெறுகிறார்கள்.
முனிவர்கள் தவாக்னியால் குண்டலிணி சக்தி தேகத்தை கனல் போல் சுற்றி இருப்பதினால் உலகம் இந்த வெப்பத்தை தாங்க முடியாது என்று கருணை உள்ளம் கொண்ட வேலாயுதம் சந்திரனின் அமிர்த சக்தியைப் போல் அவ் வெப்பத்தை சமன் படுத்துகிறது. இதற்கு குண்டலிணி யோகத்தில் ஒரு குறிப்பு காண முடிகிறது. யோகாப்பியாசம் செய்பவர்கள் சுழு முனை நாடியில் மூன்று மண்டலத்தைக் கடக்க வேண்டும். முதலில் சூரிய மண்டலம், பின் அக்னி மண்டலம். கடைசியில் சந்தர மண்டலம். அக்னி மண்டலத்தின் வெப்பத்தை சந்திர மண்டலத்தின்,
.. கலா இன்ப அமுதூரல் ..
தெளிவிக்கிறது. ஆதலால் யோகாப்பியாசம் செய்பவர்கள் வேலாயுதத்தை தியானித்தால் யோகத் தவம் கைகூடும் என்பது ஒரு ரகசிய குறிப்பு.
பிரம்மனின் மானசீக புத்திரனான கிருதன் என்பவனுக்கு வால கல்யர் என்கிற 60,000 புத்திரர்கள். இவர்கள் கட்டை விரல் அளவே உருவம் கொண்டவர்கள். இவர்கள் தாம் செய்த சிவ தவத்தால், சூரியன் பவனி வரும்போது அவனது தேரைச் சுற்றி வருவர். இதன் நோக்கம் சூரியனுடைய அளவு கடந்த வெப்பம் பூலோகத்தில் உள்ள உயிர்களை பாதிக்காமலிருக்க கருணை உள்ளமே. சூரியன் சுற்றி வரும்போது ஒரு அசுரர் கூட்டம் இவர்களுடன் போர் புரிகின்றன. அப்போது இந்த ரிஷிகளுக்கு துணையாகப் போவது வேலாயுதமே.
புய வகுப்பின் ஆரம்பத்தில்,
வசைதவிர் ககன சரசிவ கரண மகாவ்ரத சீலசால வரமுநி சித்தரை அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித் துநின்றன.
.. என வரும் அடிகள் இவர்களையே குறிக்கும்.
தேவர்களுக்கு தேவலோக வாழ்க்கை அவர்கள் செய்த தவத்தின் மூலமாக கிடைத்தது என்றாலும் அந்த வாழ்வு ஸ்திரமானது ஆகாது. அந்த புண்ய வினை முடிந்தவுடன் மீண்டும் அவர்கள் பூலோகத்திற்கு வருவர். ஆனந்தப் பெருவாழ்வை அடியார்களுக்கு கொடுப்பது முருகனின் திருவருளே.
முருகனின் திருவருட் சக்தியே வேலாயுதம். அது நம்மை பெருவாழ்வுக்கு இலக்காக்கும். வேடர்களுக்கு சொத்தான முத்துக்கள் மற்றும் காட்டு விளை பொருட்கள் எல்லாவற்றையும் முருகன் வள்ளி பிராட்டி மூலமாக பெற்றான் என்பதை,
.. சீதனம் கோடு ..
.. எனத் தொடங்கும் கந்தர் அந்தாதி பாடக் கூறுகிறது. இப் பாடலில் வரும் கடைசி அடியில் 'சிலை அரசு' என முடிவது எல்லா மலைகளுக்கும் .. ஆதிபத்யம் = முருகனுக்கு வள்ளி பிராட்டி மூலமாகக் கிடைத்தது எனக் குறிப்பிடுகிறார் அருணை முனிவர்.
... தனி நடன புரி சமர ...
வஞ்சக அசுரர்களை வெல்வதற்காக தெய்வங்கள் செய்த நடனங்கள் மதிவாணண், பரத சேனாபதி போன்ற கூத்து நூல் ஆசிரியர்களால் தெய்வ விருத்தி என அழைக்கப்படுகின்றன. அந்த நடனங்கள் பதினொன்று வகைப்படும்.
1. அல்லியம்
அருணகியாரின் வாக்குப்படி, ('சீ உதிரம்' எனத் தொடங்கும் பழநித் திருப்புகழ்) (பாடல் 158),
மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு பார்முழுது மண்ட கோளமுந டுங்க வாய்பிளிறி நின்று மேகநிகர் தன்கை யதனாலே
வாரியுற யுற அண்டி வீறொடுமு ழங்கு நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த வாரண இரண்டு கோடொடிய வென்ற நெடியோனாம்
.. வஞ்சகன் கம்சனால் அனுப்பப்பட்ட குவலாபீடம் என்கிற யானையை, ஸ்ரீ கண்ணபிரான் சென்று அழித்தபோது ஆடிய நடனம் இதுவாகும்.
2. கொடுகொட்டி
'ஆனாத ஞான' - பொதுத் திருப்புகழ் (பாடல் 1129)
மாநாக நாண்வ லுப்பு றத்து க்கியோர் மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி லொருமூவர்
மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர் தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர்
.. ஆன சிவபெருமான், திரிபுர சம்ஹாரம் செய்து முடித்தவுடன் தனது திருக் கைகளைக் கொட்டி ஆடிய நடனமே இதுவாகும்.
3. குடம்
மகாபலியின் புத்திரனான பாணாசுரன் சிவபெருமானை வேண்டி ஆயிரம் கரங்களைப் பெற்றான். அவன் தினமும் ஆயிரம் லிங்கங்களை வைத்துப் பூஜை செய்த பிறகு அவைகளை நதியில் விட்டு விடுவது வழக்கம். (இவைகளே நதியின் படுகையிலிருந்து நமக்குக் கிடைக்கும் பாணாலிங்கங்கள். இவைகளையே நாம் சாலிக்கராமங்கள் என பூஜையில் வைத்து வணங்குகிறோம்).
இவனுடைய மகள் உஷையை மன்மதனின் மகன் அனிருத்தன் களவில் புணர, பாணாசுரனுக்கு இது தெரிந்து அவனை சிறையில் அடைக்க, அவனை மீட்பதற்காக ஸ்ரீ கண்ணபிரான் பாணாசுரனின் நகரமான சோணிதபுரத்தில் மாறு வேடங்கொண்டு ஒரு குடத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆடிய நடனம் இதுவே.
4. பாண்டரங்கம்
பிரம்மன் சிவபெருமானுக்கு தேர் சாரதியாக இருந்து ரதத்தை ஓட்டும் போது அவன் சரஸ்வதியின் பிரிவால் தளர்ந்த சமயம் இதை உணர்ந்த சிவபெருமான் சரஸ்வதியின் உருவமெடுத்து ஆடிய நடனம் இது.
5. மல்
'முருக மயூர' - பொதுத் திருப்புகழ் (பாடல் 1274)
சகடுதை யாமற் போர்செய்து விளையாடி பொதுவியர் சேரிக்கே வளர் புயல் ..
.. ஆகிய கண்ணபிரான் கம்சனால் ஏவப்பட்ட சானுரன் என்ற மல்லனை கொன்றபோது ஆடிய கூத்து இது.
6. கடையம்
சோணிதபுரி கோட்டை வாயிலுக்கு வெளியே இந்திராணி ஆடிய நடனம் இது.
7. பேடு
மன்மதன் தன் மகனைக் காப்பாற்றுவதற்காக பேடி ரூபம் எடுத்து ஆடிய விசித்திரமான நடனம் இது.
8. மரக்கால்
துர்கா தேவியை எதிர்த்து போரிட்ட அசுரர்கள் வஞ்சனையால், பாம்பு, தேள் போன்ற கொடிய விஷ ஜந்துக்கள் ரூபம் எடுத்துவர, காளி தேவி மரக்காலின் மேல் ஏறி நடனம் ஆடி அவைகளை உதைத்து அழித்த கூத்து இது.
9. பாவை
மஹாலட்சுமி அசுரர்களைக் கொல்வதற்காக கொல்லிப் பாவை உருவம் எடுத்து அவர்களை அழித்தபோது ஆடிய நடனம் இது.
10. குடை
யுத்த களத்தில் அசுரர்கள் தம்மிடம் இருந்த தவர், வாள், தோமரம், சூலம் போன்ற ஆயுதங்களை முருகன் மேல் எறிய, அவைகள் புஷ்பங்கள் மாதிரி முருகனின் திருவடிகளில் விழுந்து தூளாகி விடுகின்றன. மேலே செய்வது என்ன என்று அறியாமல் திகைத்து நிற்கின்றனர். நிர் ஆயுதபாணிகளாக நிற்கும் அவர்களைக் கொல்வது யுத்த தர்மமாகாது என எண்ணி முருகன் ஒரு திருவிளையாடல் செய்கிறான். பூதங்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு குடையை எடுத்து முன் பக்கமாக திருப்பி ஒரு நடனம் செய்கிறான். இதுவே குடை நடனம். இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி அசுரர்கள் ஓடி விடுகின்றனர்.
11. துடி
சூர பத்மா நூறு கோடி யோசனை அளவுள்ள மா மரமாய் கடலில் தலைகீழாக நின்றபோது அதன் களைகளில் இருந்து திக்ரமான அக்னி ஜ்வாலை வீசுகின்றது. இதைக் கண்டு உலகமே அஞ்சியது. அப்போது முருகப் பெருமான் தனது தந்தை மாதிரி உடுக்கையை கையில் பிடித்து நடனமாடி ஒலிக்க, சூரனின் மாயை எல்லாம் அடங்கி அவன் நிற்க, தனது வேலாயுத்தினால் அவனது மார்பைப் பிளந்து அருளுகிறார்.
இந்த இரு விதமான நடனங்களைத்தான் அருணகிரிநாதர் இந்த விருத்தத்தில்
.. தனி நடனம் புரி சமரன் ..
என விவரிக்கிறார். |