......... மூலம் .........
பந்தாட லிற்கழங் காடலிற் சுடர்ஊசல் பாடலினொ டாடலின்எலாம்
பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்தி ரற்கரசு பாலித்த திறல் புகழ்ந்தே
சந்தாரு நாண்மலர்க் குழல்அரம் பையர்களும் சசிமங்கை அனையர்தாமுந்
தன்னைஅன் பொடுபாடி ஆடும்ப்ர தாபமும் தலைமையும் பெற்ற வைவேல்
மந்தாகிநித்தரங் கச்சடில ருக்கரிய மந்த்ரஉப தேச நல்கும்
வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார வாரணக் கொடி உயர்த்தோன்
கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங் குவளையுஞ் செங்காந்தளுங்
கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன் கோலத் திருக்கை வேலே.
......... சொற்பிரிவு .........
பந்து ஆடலில் கழங்கு ஆடலில் சுடர் ஊசல் பாடலினொடு ஆடலில் எலாம்
பழம் தெவ்வர் கட்கம் துணித்து இந்திரற்கு அரசு பாலித்த திறல் புகழ்ந்தே
சந்தம் ஆரு நாள் மலர்க் குழல் அரம்பையர்களும் சசிமங்கை அனையர்தாமும்
தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும் தலைமையும் பெற்ற வைவேல்
மந்தாகிநித் தரங்கச் சடிலருக்கு அரிய மந்த்ர உபதேச நல்கும்
வரதேசிகன் கிஞ்சுகச் சிகா அலங்கார வாரணக் கொடி உயர்த்தோன்
கொந்து ஆர் மலர்க் கடம்பும் செச்சை மாலையும் குவளையும் செம் காந்தளும்
கூதாள மலரும் தொடுத்து அணியும் மார்பினன் கோலத் திருக் கை வேலே.
......... பதவுரை .........
பந்து ஆடலில் ... பல விதமான பந்து ஆட்டங்களிலும்,
கழங்கு ஆடலில் ... கழச்சிக் காய் ஆட்டங்களிலும்,
சுடர் ஊசல் பாடலினொடு ... ஒளி வீசுகின்ற ஊஞ்சல் பாடலினோடு,
ஆடலில் எலாம் ... மற்ற கும்மி கோலாட்டம் போன்ற ஆட்டங்களில் எல்லாம்,
பழம் தெவ்வர் கட்கம் துணித்து ... பழைய பகைவர்களான அசுரர்களின் வாளையும் வீரத்தையும் அடக்கி,
இந்திரற்கு அரசு பாலித்த திறல் பகழ்ந்தே ... தேவேந்திரனுக்கு மீண்டும் அரசாட்சியைக் கொடுத்த திறமையைப் புகழ்ந்து,
சந்தம் ஆரு நாள் மலர் குழல் அரம்பையர் ... அழகு மிகுந்த புதிய மலர் மாலையை கூந்தலில் அணிந்திருக்கும் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை போன்ற தேவ மாதர்கள்,
சசி மங்கை ... இந்திராணி,
அனையர் ... அன்னையர் (முருகனைப் பெற்றெடுத்த கெளரி, கங்கை, கார்த்திகைமார்கள் அனைவரும்),
தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ராதாபமும் ... தன்னை அன்போடு புகழ்ந்து பாடி நடனம் புரிகின்ற கீர்த்தியையும்,
தலைமையும் ... ஆதிபத்யத்தையும்,
பெற்ற வை வேல் ... தன்னகத்தே பெற்ற கூரிய வேலாயுதம்
(அது யாருடையது என வினவினால்)
மந்தாகினி தரங்க ... அலை வீசும் கங்கையை
சடிலருக்கு ... ஜடா முடியில் தரித்திருக்கும் சிவ பெருமானுக்கு,
அரிய மந்த்ர உபதேசம் நல்கும் ... கிடைத்தற்கரிய பிரணவ உபதேசம் செய்த,
வர தேசிகன் ... சிறந்த ஆச்சார்ய மூர்த்தியும்,
கின்சுக சிகா அலங்கார ... சிவந்த நிறமுள்ள அழகான கொண்டையை உடைய,
வாரண கொடி உயர்த்தோன் ... சேவற் கொடியை உயர்த்தி பிடித்திருப்பவனும்,
கொந்து ஆர் மலர்க் கடம்பும் ... பூங்கொத்துக்கள் நிறைந்த கடப்ப மாலையையும்
செச்சை மாலை ... இருவாச்சி மாலையையும்,
குவளையும் செம் காந்தளும் ... நீலோர்பலமும் காந்தள் பூவையும்,
கூதாள மலரும் ... நீலச் சங்கு புஷ்பத்தையும்,
தொடுத்தணியும் மார்பினன் ... மாலையாகத் தொடுத்து அணிந்திருக்கும் திருமார்பினை உடைய முருகப் பெருமானின்,
கோல திருக் கை வேலே ... அழகியத் திருக் கரத்தில் வீற்றிருக்கும் வேலாயுதமே.
......... விளக்கவுரை .........
முன் காலத்தில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டினை தெய்வீக மணம் கமழும்படியாக அமைத்திருந்தார்கள். திருவாசகத்தில் வரும் திருச் சாழல், திரு அம்மானை போன்றவைகள் இதற்கு உதாரணம். அதேபோல வேலாயுதத்தின் கீர்த்திகளை பாடிக்கொண்டே சிறுமிகள் கோலாட்டம், பந்தாட்டம் முதலிய விளையாடல்களை புரிந்தனர் என இப்பாடலில் இருந்து ஊகிக்க முடிகிறது.
ஒருவர் ஞானோபதேசம் பெறுவதற்கு முன் மாந்தரித்த நீரை அவர் தலையில் தெளித்து அவரை உபதேசம் பெறுவதற்கு தகுதி உடையவராக்குவர். இதையே கிருத்துவர்களும் ஞானஸ்நானம் என்பர். சிவபெருமான் ஞானோபதேசம் பெறுவதற்கு முன் கங்கையின் ஜலம் அவரை புனிதமாக்கியது என்பதை,
.. மந்தாகிநி தரங்க சடிலருக்கு அரிய மாந்திர உபதேசம் நல்கும் வரதேசிகன் ..
... என நயம்படக் கூறுகிறார் அருணை முனிவர்.
முருகப் பெருமானின் சேவல் சாத்வீகக் குணத்தையும் ரஜோ குணத்தையும் கொண்டுள்ளது என்பதை அதன் வெள்ளை நிறமும் சிவப்பான கொண்டையும் எடுத்துக் காட்டுகிறது. அந்தச் சேவலானது அடியார்களுக்கு சாத்வீகமாகவும் பகைவர்களுக்கு வீர குணமுடையதாகவும் இருக்கும் என்கிறார். |