......... மூலம் .........
அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி அநந்தமா யினுமேவினால்
அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல் அறியாது சூரனுடலைக்
கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங் கடியகொலை புரியு மதுசெங்
கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக் கடுக்கின்ற துங்க நெடுவேல்
தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட தானவாந் தகன்மாயவன்
தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத் தமனியச் சுடிகையின் மேல்
வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை மங்கையும் பதம்வருடவே
மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன் வாகைத் திருக்கை வேலே.
......... சொற்பிரிவு .........
அண்டங்கள் ஒருகோடி ஆயினும் குலகிரி அநந்தம் ஆயினும் மேவினால்
அடைய உருவி புறம் போவது அல்லது தங்கல் அறியாது சூரன் உடலைக்
கண்டம் பட பொருது காலனும் குலைவு உறும் கடிய கொலை புரியும் அது செம்
கநக அசலத்தை கடைந்து முனை இட்டு கடுக்கின்ற துங்க நெடு வேல்
தண்டம் தநு திகிரி சங்கு கட்கம் கொண்ட தானவ அந்தகன் மாயவன்
தழல் விழி கொடுவரி பரு உடல் பல தலை தமனிய சுடிகையின் மேல்
வண்டு ஒன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை மங்கையும் பதம் வருடவே
மதுமலர் கண் துயில் முகுந்தன் மருகன் குகன் வாகைத் திருக் கை வேலே.
......... பதவுரை .........
அண்டங்கள் ஒரு கோடி ஆயினும் ... கோடிக்கணக்கான உலகங்கள் எதிரே நின்றாலும்,
குலகிரி அநந்தம் ஆயினும் ... கணக்கில்லாத பெரிய மலைகள் எதிரே நின்றாலும்,
மேவினால் ... அவைகள் எதிர்த்தால்,
அடைய உருவி ... அவற்றிக்குள் நுழைந்து போய்,
புறம் போவது அல்லது ... பின்புறமாக வெளியே போவது அன்றி,
தங்கல் அறியாது ... தான் எடுத்துக்கொண்ட காரியத்தை முடிக்காமல் தங்கி நின்றது என்கிற சரித்திரமே இல்லாது,
சூரன் உடலை ... சூரபத்மாவின் தேகத்தை,
கண்டம் பட பொருது ... போரில் துண்டு துண்டுாக வெட்டி,
காலனும் குலைவுறும் ... எமனும் அச்சப்படும் வண்ணம்,
கடிய கொலை புரியும் அது ... போர்க்களத்தில் கொடூரமான கொலைகளைச் செய்வதும்,
செம் கநக அசலத்தைக் கடைந்து ... பொன் மயமான மேருமலையைக் கடைந்ததுபோல்,
முனையிட்டு ... கூரிய முனைபடைத்து,
கடுக்கின்ற ... கோபம் கொண்டுள்ள,
துங்க நெடு வேல் ... பரிசுத்தமான நெடிய வேல்
(அது யாருடையது என வினவினால்)
தண்டம் ... கெளமோதகி என்கிற கதை,
தநு ... சார்ங்கம் என்கிற வில்,
திகிரி ... சுதர்சனம் சக்கரம்,
சங்கு ... பாஞ்சசன்யம் என்கிற சங்கு,
கட்கம் ... நாந்தகம் என்கிற வாள் (இந்த பஞ்ச ஆயுதங்களைக் கொண்டவனும்),
தானவ அந்தகன் ... அசுரர்களுக்கு எமன் போன்றவனும்,
மாயவன் ... மாயாரூபனும்,
தழல் விழி ... நெருப்பைப்போல் எரியும் கண்கள்,
கொடுவரி ... வளைந்த கோடுகள்,
பரு உடல் ... பருத்த உடல்,
பல தலை ... ஆயிரம் தலைமுடிகள் கொண்ட
தமனிய ... ஆதிசேடனின் பொன்நிறமான,
சுடிகையின் மேல் ... படுக்கையின் மேல்,
வண்டு ஒன்று கமலத்து மங்கையும் ... வண்டுகள் மொய்க்கும் செந்தாமரையில் வாசம் செய்யும் ஸ்ரீதேவியும்,
கடலாடை மங்கையும் ... கடலை ஆடையாகத் தரித்துள்ள பூ தேவியும்,
பதம் வருடவே ... தன் திருப்பாதங்களை வருடிக் கொடுக்க,
மது மலர் கண் துயில் ... தேன் சிந்தும் தாமரை போன்ற அழகான கண்களை மூடிக் கொண்டு தூங்குகின்ற,
முகுந்தன் மருகன் ... மஹாவிஷ்ணுவின் மருமகனும்,
குகன் வாகைத் திருக் கை வேலே ... குக மூர்த்தியின் வெற்றியே காணும் வேலாயுதமே அது.
......... விளக்கவுரை .........
வேல் ஞானா சக்தி ஆதலினால் ஞானத்திற்கு முன் அசுர பலம் என்றும் நிற்காது என்பதை முதல் இரண்டு அடிகளில் உணர்த்துகிறார். எவரையும் கொல்லும் எமன் வேலாயுதம் செய்யும் போர்க்கள கொலைத் தொழிலைக் கண்டு அஞ்சுகிறான் என்பதைக் 'காலனும் குலைவுறும்' என்கிறார்.
நாக மெத்தையில் திருமால் துயின்ற சரித்திரத்தை இங்கு அழகாக விவரிக்கிறார். ஆனால் அவர் தூங்குவது யோக நித்திரை. உலகில் எங்கு கலகம் நேர்ந்தாலும் அங்கு சென்று அடியார்களைக் காக்க தயாராக அவர் இருக்கிறார் என்பதை,
கனைக்குந்தண் கடற்சங்கங் கரத்தின்கண் தெரித்தெங்குங் கலக்கஞ்சிந் திடக்கண்துஞ் சிடுமாலும்
.. என 'மனத்தின் பங்கு .. ' எனத் தொடங்கும் திருச்செந்தூர்த் திருப்புகழில் கூறுகிறார். (பாடல் 86). |