......... மூலம் .........
மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய் வலியதா னவர்மார்பிடம்
வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு மகவான் தனைச்சி றைவிடுத்
தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில் உம்பர்சொற் றுதிபெற்றுநா
உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில் ஒப்பில்புகழ் பெற்ற வைவேல்
சோமகல சப்ரபா லங்கார தரஜடா சூடிகா லாந்தகாலர்
துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல துரககே சரமாம்பரச்
சேமவட வாம்புயப் பரணசங் காபரண திகம்பர த்ரியம்பகமகா
தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன் செம்பொற் றிருக்கை வேலே.
......... சொற்பிரிவு .........
மா முதல் தடிந்து தண் மல்கு கிரி ஊடு போய் வலிய தானவர் மார்பு இடம்
வழி கண்டு கமல பவனத்தனை சிறையிட்டு மகவான்தனை சிறைவிடுத்து
ஓம இருடி தலைவர் ஆசி பெற்று உயர் வானில் உம்பர்சொல் துதி பெற்று நா
உடைய கீரன் தனது பாடல் பெற்று உலகுதனில் ஒப்பு இல் புகழ் பெற்ற வை வேல்
சோமகலச ப்ரபா அலங்கார தர ஜடா சூடி கால அந்த காலர்
துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசம் சூலம் துரக கேசரம் அம்பரம்
சேம வடவாம் அம்புயம் பரண சங்கு ஆபரண திகம்பர த்ரியம்பக மகா
தேவ நந்தன கஜாநந சகோதர குகன் செம்பொன் திருக்கை வேலே.
......... பதவுரை .........
மாமுதல் தடிந்து ... முதல்வனாய் நின்று மா மரமாய் மாறின சூரபத்மனை அழித்து,
தண்கு மல்கு கிரி ஊடுபோய் ... குளிர்ந்த ஏழு மலைகளையும் ஊடுருவிச் சென்று
வலிய தானவர் மார்பிடம் ... அந்த மலைகளில் வசித்த அசுரர்களின் வலிய மார்பினை,
வழி கண்டு ... பிளந்து அப்புறமாகச் சென்றும்,
கமலபவத்தனை ... தாமரைப் பூவினில் வாசம் செய்யும் பிரமனை,
சிறை இட்டு ... பிரணவப் பொருளை தெரியாமல் இருந்த குற்றத்திற்காக சிறையில் அடைத்தும்,
மகாவான் தனை ... நூறு அஸ்வமேத யாகம் செய்த இந்திரனை,
சிறை விடுத்தும் ... சூர பத்மா அடைத்த சிறையினின்றும் விடுவித்தும்,
ஓம இருடி தலைவர் ஆசி பெற்று ... யாகங்கள் செய்யும் முனிவர்களின் வாழ்த்து பெற்று,
உயர் வானில் உம்பர் சொல் துதி பெற்று ... மேலே சொர்க்கத்தில் தேவர்களால் செய்யப்பட்ட துதிகளைப் பெற்று,
நா உடைய கீரன் தனது பாடல் பெற்று ... நா வன்னை உடைய கீரனின் துதி பாடல்களைப் பெற்று,
உலகுதனில் ஒப்பில் புகழ் பெற்ற வை வேல் ... இந்த உலகங்களில் யாருக்குமே இல்லாத வகையில் கீர்த்தியைப் பெற்ற கூரிய வேலாயுதம்
(அது யாருடையது என வினவினால்)
கலச சோம ... கிண்ணம் போன்ற பிறைச் சந்திரனின்,
பிரபா அலங்கார ... ஒளிவீசும் அலங்காரத்தை,
ஜடா சூடி தர ... ஜடா முடியில் தரித்துள்ளவரும்,
கால அந்த காலர் ... எமனுக்கும் மரணத்தை விளைவிப்பவரும்,
துங்க ரட்ச துரோண ... பரிசுத்தம் வாய்ந்து உலகை பாதுகாக்கும் வில்,
கட்கம் குலிசம் சூல ... வாள் வஜ்ராயுதம் சூலம் இவைகளைக் கொண்டுள்ளவரும்
துரக ... குதிரையின் உருவத்தைக் கொண்டு,
கேசரம் ... சிங்கம் போன்ற கம்பீரத்துடன்,
அம்பரம் ... சமுத்திரத்தை,
சேம ... பாதுகாத்து வரும்,
வடவா ... வடவாமுகாக்னியை,
அம்புய ... அபிஷேக நீராக,
பரண ... கொள்பவரும்,
சங்கு ஆபரண ... வெண் சங்கை காதில் ஆபரணமாக கொண்டவரும்,
திகம்பர ... திக்குகளை ஆடையாகக் கொண்டவரும்,
த்ரியம்பக ... முக்கண்ணரும் ஆகிய,
மகா தேவ நந்தன ... சிவபெருமானின் குமாரனும்,
கஜானன சகோதர ... யானைமுகக் கடவுளான விநாயகப் பெருமானின் சகோதரனுமாகிய,
குகன் ... முருக மூர்த்தியின்,
செம் பொன் திருக் கை வேலே ... அழகிய பொன்போன்ற கரத்தில் தங்கும் வேலாயுதமே அது.
......... விளக்கவுரை .........
பிரணவத்திற்கு பொருள் தெரியாமல் அகங்காரங் கொண்ட பிரமனைச் சிறையில் அடைத்தும் பணிவுடன் தன்னைத் துதித்த இந்திரனை சிறையிலிருந்து விடுவித்ததையும் ஒன்று சேரக் கூறுவது அருணகிரியாரின் வழக்கம். இதே கருத்தை, 27ம் கந்தர் அந்தாதியில்,
.. சேவின்மைமீன் தேடிக் கொடும்படை கோமான் சிறைபட வேறுளபுத் தேடிக் கொடும்படை யாவெகுநாட்டன் சிறைகளை ..
... என்று கூறுவார்.
பிரமனைத் தண்டித்த அதே வேலாயுதம்தான் அவனைக் கொண்டு போய் சிறையிலும் அடைத்தது என்பதை
.. தலராசி தந்தானை சிறையிட்ட வேல்
... எனக் கூறுவார். 'தேதென வாச முற்ற' என்று ஆரம்பிக்கும் திருப்புகழில், (திருவருணை, பாடல் 430).
மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில் வேலடை யாள மிட்ட பெருமாளே
... என்பார். வியாபார நிறுவனங்களிலும் வங்கிகளிலும் இரவில் அவைகளை மூடிவிட்டு செல்லும்போது, பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, பூட்டைச் துணியால் சுற்றி மூடி, அந்த நிறுவனத்தின் இலச்சியினை அரக்கால் காய்ச்சி இட்டு, அந்த இடத்தில் அடையாளமிடுவர். அதுபோல பிரமனை சிறை இட்டு அவனது விலங்கின் மேல் தனது சின்னமான வேலாயுத இலச்சினை பொறித்தார் முருகப் பெருமான்.
இந்திரனை சிறையினின்று மீட்டு வந்ததும் வேலாயுதமே என்பதை வேல் வகுப்பில் கூறுவார்,
பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும்.
முனிவர்கள் செய்யும் ஹோமத்திற்கு உரியவன் முருகனே என்பதை கந்தர் அந்தாதியில், 'ஓமரண' என்பார்.
அந்தண் மறை வேள்விக்காரனாகிய முருகன் யாகங்களை ரட்சிப்பதற்கு வேலாயுதத்தையே அனுப்புகிறார்.
வேலாயுதத்தின் நற்பணியை வாழ்த்தி முனிவர்கள் 'ஜெய விஜயீ பவ' என ஆசி கூறுகிறார்கள். சிவனார் வேலாயுதத்தைக் கொடுத்து அருளியபோது, 'அன்பர் அவை தழைக்க விண் கா' எனச் சொன்னதை சிரமேற்கொண்டு அந்த வேலாயுதமே விண்ணுலகை காத்து வந்ததால் தேவர்கள் அனைவரும் வேலாயுதத்தைத் துதிக்கின்றனர்.
நக்கீரனுடைய பாடலைப் பெற்றதாகச் சொன்னது அவர் பாடின திருமுருகாற்றுப்படையின் கடைசியில் வரும் வெண்பாக்களில் ஒன்றான,
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் .. வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றுந் தொளைத்தவே லுண்டே துணை
... என்ற பாடலைக் குறிப்பதாகும்.
எல்லா ஜீவராசிகளுக்கும் காலத்தை கணக்கிட்டு முடிப்பவன் காலன். அவனுக்கும் அந்திம காலமாகிய மரணத்தைக் கொடுப்பவர் சிவபெருமான். அவரே 'கால அந்த காலர்' ஆவார். இந்த உயர்ந்த நாமம் வேதங்களில் நடுநாயகமாக திகழும் ஸ்ரீருத்ரத்தில் வருகிறது.
பகன் என்பவன் பிருகு முனிவரின் பேரன். தன்னுடைய தந்தை கிருத வீரியன் இறந்ததை அறிந்து அதற்குக் காரணமாயிருந்த வம்சத்தை அழிக்க கடும் தவம் செய்கிறான். ஆனால் நடுவில் அவனுடைய பித்ருக்கள் ஆகாயத்தில் தோன்றி, அந்த தவத்தைக் கைவிடும்படி வற்புறுத்த அவனும் கைவிட்டுவிடுகிறான். தனது தவாக்னியை சமுத்திரத்தில் கொண்டு விடுகிறான். அது பெண் குதிரை வடிவமெடுத்து வடவாமுகாக்னியாகி கடல் நீர் உலகை அழித்துவிடாதபடி பாதுகாத்து வருகிறது. யுக முடிவில் சிவபெருமான் இந்த வாடவாமுகாக்னியை தனது அபிஷேக நீராக எடுத்துக்கொண்டதினால் கடல் நீர் பெருகி இவ்வுலகை அழிக்கும்போது மாகா பிரளயம் ஏற்படுகிறது. |