......... மூலம் .........
தேடுதற் கரிதான நவமணி அழுத்தியிடு செங்கரனை யமுதம் வாய்கொள்
செயமளித் தருளெனக் கெனஉவப் பொடுவந்து சேவடி பிடித்ததெனவும்
நீடுமைக் கடல்சுட்ட திற்கடைந் தெழுகடலும் நீயெமைக் காக்க எனவும்
நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் காவெனவும் நிகழ்கின்ற துங்கநெடுவேல்
ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற் றடலெரிக் கொடிய உக்ர
அழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக் கரசினைத் தனியெடுத்தே
சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற் றாய்திமித் துடனடிக்குஞ்
சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன் சண்முகன் தன்கை வேலே.
......... சொற்பிரிவு .........
தேடுதற்கு அரிது ஆன நவமணி அழுத்தி இடு செம் கரனை அமுதம் வாய் கொள்
செயம் அளித்து அருள் எனக்கு என உவப்பொடு வந்து சேவடி பிடித்தது எனவும்
நீடு மை கடல் சுட்டதிற்கு அடைந்து எழு கடலும் நீ எமைக் காக்க எனவும்
நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் கா எனவும் நிகழ்கின்ற துங்க நெடு வேல்
ஆடும் ஐ கணபண கதிர் முடி புடை எயிற்று அடல் எரி கொடிய உக்ர
அழல் விழி படு கொலை கடைய கட்செவியினுக்கு அரசினை தனி எடுத்தே
சாடும் மைப்புயல் எனப் பசுநிற சிகரியில் தாய் திமித்துடன் நடிக்கும்
சமர மயில் வாகனன் அமரர் தொழும் நாயகன் சண்முகன் தன்கை வேலே.
......... பதவுரை .........
தேடுதற்கு அரிதான நவமணி ... தேடினாலும் கிடைப்பதற்கு அரிதான, கோமேதகம், நீலம், பவளம், மாணிக்கம், மரகதம், முத்து, புஷ்பராகம், வைடூரியம், வைரம் என்கிற நவ ரத்தினங்களை,
அழுத்தி இடு ... தனக்குள்ளே கொண்டது போல் பிரகாசிக்கும்,
செம் கரனை ... சிவந்த கிரணங்களை உடைய சூரியனை,
அமுதம் வாய் கொள் ... மழை மேகம் மூடும்படியாக,
செயம் அளித்து அருளென உவப்போடு வந்து ... களிப்புடன் வந்து, எனக்கு வெற்றியைத் தர வேண்டும் என பிரார்த்தித்து,
சேவடி பிடித்ததெனவும் ... வேலாயுதத்தின் திருவடிகளைப் பிடித்து எனவும்,
நீடு மை கடல் சுட்டதற்கு ... நெடிய இருண்ட சமுத்தரத்தைத் தனது சூட்டால் பொசுக்கினதற்காக,
அடைந்த எழு கடலும் ... ஏழு கடல்களும் வேலாயுதத்தை சரண் அடைந்து,
நீ எமைக் காக்க எனவும் ... நீ எங்களைக் காக்க வேண்டும் எனவும்,
நிபிட முடி நெடிய கிரி ... நெருங்கிய சிகரங்களை உடைய உயர்ந்த மலைகள்,
எந்தமைக் கா எனவும் ... எங்களைக் காத்து ரட்சிப்பாய் என்று சொல்லவும்,
நிகழ்கின்ற துங்க நெடு வேல் ... சிறப்புடன் விளங்கும் பரிசுத்தமுடைய வேல்
(அது யாருடையது என வினவினால்)
ஆடு ... ஆடுகின்றதும்,
மை கணபண ... பசுமை பெருந்திய கூட்டமான,
கதிர் முடி ... ஒளி வீசும் உச்சியான முடிகளைக் கொண்டதும்,
புடை எயிற்று ... வாயின் பக்கத்தில் உள்ள பற்களில்,
அடல் எரி கொடிய உக்ர தழல் விழி ... வலிமையான கொடிய நெருப்பை வீசுவதும் நெருப்புக் கண்களைக் கொண்டதும்,
படு கொலை ... பெரிய கொலைகளை,
கடைய கட்செவியினுக்கு அரசினை ... செய்யக்கூடியதுமான சர்ப்ப ராஜாவான ஆதிசேஷனை,
தனி எடுத்தே ... தனியாக எடுத்து,
சாடுமைப் புயலென ... வேகமுடன் வீசும் கரிய புயல் மேகம்போல்,
பசு நிறச் சிகரியில் ... பசுமை நிறைந்த மலை உச்சியில்,
தாய் ... தாவி மிதித்து,
திமித்த நடிக்கும் ... நடன தாளங்களுடன் நடிப்பினை செய்யும்,
சமர மயில் வாகனன் ... போரில் வல்லமை கொண்ட மயில் வாகனக் கடவுள்,
அமரர் தொழும் நாயகன் ... தேவர்கள் வணங்கும் தலைவன் ஆகிய
சண்முகன் தன் கை வேலே ... ஆறுமுகப் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் வேலாயுதமே அது.
......... விளக்கவுரை .........
எப்பொழுதும் சூரியனைக் கண்டால் மேகங்கள் விலகி ஓடும். ஒருமுறையாவது சூரியனை மறைக்கும் வெற்றியை எங்களுக்குத் தரவேண்டும் என்று மேகங்கள் வேலாயுதத்தினை வணங்குகின்றன. முன்பு சூர சம்காரத்தின்போது கடலை வற்றச் செய்ததுபோல், இனி ஒரு பொழுதும் எங்களை வற்றச் செய்யாதே என்று சமுத்திரங்கள் வேலாயுதத்தை பிரார்த்தனை செய்கின்றன. முன்பு கிரெளஞ்சம் முதலிய மலைகளை அழித்ததுபோல் எங்களை இனி எதுவும் செய்துவிடாதே என்று மலைகள் வேலாயுதத்தை வணங்குகின்றன.
இந்த விருத்தத்தில் ஒரு நுணுக்கமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். வேலும் மயிலும் துணை என்கிற மகா மந்தரத்திற்கு இணங்க, பாடலின் முற்பகுதியில் வேலின் மகிமைகளைச் சொல்லி, பின் பாதியில் மயிலின் வல்லமைகளைக் கூறுகிறார். மலை உச்சியில் ஆதிசேஷனை தூக்கி எடுத்து மிதித்து நடனமாடுவதை யோகபரமான பொருளைக் காணலாம். சுழுமுனையாகிய மலையின் உச்சியில் குண்டலிணி சர்ப்பத்தை அடக்கி மகாமாயையான விந்துவான மயில் பரமானந்த நடனம் ஆடுகிறது. இதையே,
'மயிலாடு சுத்த வெளி'
என 'வாத பித்தமொடு' எனத் தொடங்கும் சிதம்பரத் திருப்புகழில் கூறுகிறார். (பாடல் 487). |