......... மூலம் .........
வலாரியல லாகுலமி லாதகல வேகரிய மாலறியு நாலு மறைநூல்
வலானலை விலானசி விலான்மலை விலானிவர் மநோலய உலாசம் உறவே
உலாவரு கலோலம கராலய சலங்களும் உலோகநிலை நீர்நிலையிலா
வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல் உலாவிய நிலாவு கொலைவேல்
சிலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச னாசின சிலாத ணிவிலா
சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய சேவக சராப முகிலாம்
விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை மேவிய விலாச அகலன்
விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு வேழம்இளை ஞன்கை வேலே.
......... சொற்பிரிவு .........
வலாரி அலல் ஆகுலம் இலாது அகலவே கரிய மால் அறியும் நாலு மறை நூல்
வலான் அலைவு இலான் நசிவு இலான் மலை விலான் இவர் மநோலய உலாசம் உறவே
உலாவரு கலோலம் மகர ஆலய சலங்களும் உலோக நிலை நீர் நிலை இலா
ஒலா ஒலி நிசாசரர் உலோகம் அது எலாம் அழல் உலாவிய நிலாவிய கொலைவேல்
சிலா வட கலா விநொதவா சிலி முகா விலொசனா சின சிலா தணி விலா
சிலா மலர் எலாம் மதியம் மோதி மதி சேல் ஒழிய சேவக சராப முகில் ஆம்
விலாச கலியாண கலை சேர பசு மேலை முலை மேவிய விலாச அகலன்
விலாழி இனில் ஆழி அகல் வானில் அனல் ஆரவிடு வேழம் இளைஞன் கை வேலே.
......... பதவுரை .........
வலாரி ... வலாசுரனின் பகைவனாகிய இந்திரனின்,
அலல் ... துன்பங்களும்,
ஆகுலம் ... மன வருத்தங்களும்,
இலாது அகலவே ... நீங்கும்படியும்,
கரிய மால் ... மேக வண்ணனாகிய திருமாலும்,
அறியும் நாலுமறைநூல் ... அறியப்பட்ட நான்கு வேத சாஸ்திரங்களையும்,
வலான் ... ஓத வல்ல பிரம்மனும்,
அலைவு இலான் ... அலைச்சல் இல்லாதவனும்,
நசிவு இலான் ... அழிவு இல்லாதவனும்,
மலை விலான் ... மேரு மலையை வில்லாக வளைத்தவனும் (ஆகிய சிவபெருமான்),
இவர் ... இவர்களின்,
மநோலயம் உலாசம் உறவே ... மனம் அமைதி அடைந்து மகிழ்ச்சி அடையவும்,
உலா வரு ... புரண்டு வரும்,
கலோல ... அலைகள் நிறைந்த,
மகர ஆலயம் ... மகர மீன்களுக்கு இருப்பிடமான கடலின்,
உலோக நிலை நீர் நிலையிலா ... இவ்வுலகத்தில் உள்ள உயிர்களும் நீரில் வாழும் உயிரினங்களும் அழிந்து போகும்படி,
ஒலா ஒலி ... விகாரமான பேரொலி எழுப்பி (போரிட்ட),
நிசாசரர் ... அசுரர்களின்,
உலோகமெலாம் ... வாழும் உலகங்களிலெல்லாம்,
அழல் ... நெருப்பு,
உலாவிய நிலாவு ... பரவும்படி உலாவி வந்த,
கொலை வேல் ... கொடிய கொலைகளை செய்த வேல்
(அது யாருடையது என வினவினால்)
சிலா வட (வட சிலா) கலா விநோதவா ... வடக்கே உள்ள கந்தமாதன கிரியில் சகல கலா வல்லவனாகியும், (சிலா .. மலைகளை தனது இருப்பிடமாக கொண்டவனும், வட கலா விநோதவா .. வடமொழியாகிய சமஸ்கிருதத்தில் அதிக பிரியமுடையவன்),
சிலிமுகா ... வண்டு ரூபம் எடுத்தவன்,
விலோசனா ... விஷேசமான (கருணை நிறைந்த) கண்களை உடையவரும்,
சின சிலா தணி ... சினம் தணிந்து தணிகாசலத்தில் வீற்றிருப்பவரும்,
வலா ... வில்லேந்திய வேலனும்,
மலர் எலாம் ... சுனையிலுள்ள மலர்கள் எல்லாம்,
மதிய மோதி ... சந்திரன்மேல் உரசி,
மதி சேல் ஒழிய ... சந்திரனில் உள்ள சேல் மீன்கள் போன்ற களங்கம் அழியும்படி
சேவக ... வீரத்தைக் காட்டிய போர் வீரனும்,
சிலா ... வள்ளி மலையில்,
சராப முகிலாம் ... சரப பட்சி போன்று மேக நிறமுடைய திருமால்,
வலாச கலியாண ... அகன்ற மங்களகரமான,
கலை சேர ... கலைமான் உருவெடுத்த மஹா லட்சுமியை சேர,
மேலை ... முன் ஒரு காலத்தில்,
பசு ... அப்போது தோன்றிய உயிராகிய வள்ளிப் பிராட்டியின்
முலை மேவிய விலாச அகலன் ... தனபாரங்களைத் தழுவிய அகன்ற திரு மார்புகளை உடையவனும்,
விலாழி இனில் ... தனது துதிக்கையினால் நீரினால்,
ஆழி ... சமுத்திரத்திலும்,
அகல் வானில் ... அகன்ற ஆகாயத்திலும்,
அனல் ... வெப்பத்தை,
ஆரவிடு ... தணியும்படி பொழிந்த,
வேழம் ... யானைமுகக் கணபதியின்,
இளைஞன் கை வேலே ... இளையோனாகிய முருகப் பெருமானின் கையில் உள்ள வேலாயுதமே அது.
......... விளக்கவுரை .........
இந்தரன், பிரம்மா, திருமால் ஆகியவர்கள் சூரனால் நேர்ந்த துன்பம் நீங்கி களிப்புற்றார்கள். அதை சிவபெருமானுக்கு சொல்வது பொருத்தமாகாது. தான் கொடுத்த வரங்களை வைத்துக்கொண்டு தேவர்களை எல்லாம் யுக காலமாக வாட்டி வதைத்ததைப் பார்த்து மன வருத்தம் கொண்டார் சிவ பெருமான். அந்தத் துயரம் சூரனின் அழிவால் உல்லாசம் ஆனது.
பிரமனுக்கு பிரவணவத்தின் பொருள் தெரியாததினால், அவன் சிறையில் முருகப் பெருமானால் அடைக்கப்பட்டான். உனக்கு மட்டும் பிரணவத்தின் பொருள் எப்படித் தெரியும் என்று கேட்டதற்கு,
.. முன்பு நீங்கள் அம்மாவுக்கு உபதேசம் செய்தபோது அவளின் கூந்தலில் வண்டாக இருந்து கேட்டேன் ..
... எனக் கூறுகிறார்.
.. சிலி முகம் (வண்டு) கொந்தார் பைங்குழலில் உறை வண்டே ..
... எனக் குமரகுருபரர் முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழில் முருகனை வண்டே என விளிப்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
சூரியனின் வெப்பத்தால் உயிர்கள் அவதி அடையாதபடி தனது துதிக்கை நீரை கடலிலும் ஆகாயத்திலும் வீசி வெப்பத்தைத் தணிக்கிறார் என்பதை,
.. விலாழி இனில் ஆழி அகல் வானில் ஆர விடு வேழம் ..
... என்கிறார்.
வேல் விருத்தத்திற்கெனத் தனியாக விநாயகர் துதி இல்லை என்றாலும், இதன் முதல் பாடலான 'மகரம் .. ' எனத்தொடங்கும் பாடலின் பின் பாதியிலும், கடைசிப் பாடலான 'இதிலும் வேழம் இளைஞனே .. ' என விநாயகரை அருணகிரியார் நினைவு கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகர் ஓங்கார வடிவம். வேலாயுதம் சக்தியின் சொரூபம். ஆதலால் ஆரம்பத்திலும் முடிவிலும் ஓங்காரமும் நடுவில் சக்தியும் (சக்தி வேல்) வருவதால்,
.. ஓம் சக்தி ஓம் ..
எனும் மஹா மந்திரம் இருப்பதை உணரலாம். |