(நேரொரு சிறிதும்)
நேரொரு சிறிதும் இல்லா நின்மலன் தனது வேலால்
சூருடல் பிளந்தி யாணர் மஞ்ஞையில் தோன்று காலைப்
பாருல கயின்ற கண்ணன் பங்கயன் அமரர் கட்கோர்
ஆரமிர் தெய்திற் றென்ன அன்னது கண்டே ஆர்த்தார். ......
1(ஆர்த்தனர் எழுந்து)
ஆர்த்தனர் எழுந்து துள்ளி ஆடினர் பாடா நின்றார்
போர்த்தனர் பொடிப்பின் போர்வை பொலங்கெழு பூவின்மாரி
தூர்த்தனர் அருளை முன்னித் தொழுதனர் சுடர்வேல் கொண்ட
தீர்த்தனை எய்திச் சூழ்ந்து சிறந்துவாழ்த் தெடுக்க லுற்றார். ......
2வேறு(கார்தடிந்து துய்க்கு)
கார்தடிந்து துய்க்குங் கனைகடலின் நீர்வறப்பப்
போர்தடிந்து செல்லும் புகர்வேல் தனைவிடுத்துச்
சூர்தடிந்தாய் அன்றே தொழுமடியேம் வல்வினையின்
வேர்தடிந்தாய் மற்றெமக்கு வேறோர் குறையுண்டோ. ......
3(மாறுமுகங் கொண்டு)
மாறுமுகங் கொண்டுபொரு வல்லவுணர் மாளாமல்
நூறு முகமெட்டு நோதக் கனபுரியத்
தேறு முகமின்றித் திரிந்தேமை ஆளவன்றோ
ஆறு முகங்கொண்டே அவதரித்தாய் எம்பெருமான். ......
4(நீதி முறையதனில்)
நீதி முறையதனில் நில்லா அசுரர்புரி
தீது பலவுளவுந் தீர்ந்தோம் பழியகன்றோம்
வேத நெறிதொல்லை வெறுக்கையொடு பெற்றனமால்
ஏதும் இலையால் எமக்கோர் குறையெந்தாய். ......
5(மன்ற அவுணர் )
மன்ற அவுணர் வருத்திடஇந் நாள்வரையும்
பொன்றி னவரென்னப் புலம்பித் திரிந்தனமால்
இன்று பகைமாற்றி எமக்கருள்நீ செய்கையினால்
சென்றஉயிர் மீண்ட திறம்பெற்ற னம்ஐயா. ......
6(செய்யும்அவ னும்புல)
செய்யும்அவ னும்புலனுஞ் செய்வித்து நிற்போனும்
எய்த வரும்பொருளும் யாவையுநீ யேயென்கை
ஐய அடியேங்கள் அறிந்தனமால் அன்னதனால்
வெய்ய பவமகன்று வீடுமினிக் கூடுதுமால். ......
7(ஈண்டே எமரு)
ஈண்டே எமருக் கிடர்செய் அவுணரெலாம்
மாண்டே விளியும் வகைபுரிந்து காத்தனையால்
வேண்டேம் இனியாதும் மேலாய நின்கழற்கே
பூண்டேந் தொழும்பு புகழேம் பிறர்தமையே. ......
8(என்னா இயம்பி எவரு)
என்னா இயம்பி எவருமினி தேத்துதலுங்
கொன்னார் அயில்வேற் குமர னதுகேளா
அந்நா ரணன்விரிஞ்சன் ஆதியாம் வானோர்க்குத்
தன்னா ரருளின் தலைமை புரிந்தனனே. ......
9ஆகத் திருவிருத்தம் - 7803