(ஏழா நாள்முதல் பத்தா நாள்வரை சூரபன்மன் வதை நிகழ்ச்சி ஆகும்.*
1)
(கொற்ற வேற்படை பரி)
கொற்ற வேற்படை பரித்திடும் ஆயிர கோடி
ஒற்றர் தங்களை நோக்கியே சூரனாம் உரவோன்
மற்றென் ஆட்சியாம் அண்டங்கள் எங்கணும் வைகிச்
சுற்று தானையைத் தம்மினோ கடிதெனச் சொன்னான். ......
1(சொன்ன காலையின்)
சொன்ன காலையின் நன்றென வணங்கியே தூதர்
பன்ன ருங்கதி கொண்டனர் விண்டனர் படர்ந்து
பொன்னின் மேதகும் அண்டங்கள் இடைதொறும் புகுந்து
மன்னர் மன்னவன் தன்பணி முறையினை வகுத்தார். ......
2(வகுத்த காலையில்)
வகுத்த காலையில் ஆண்டுறை அவுணமன் னவர்கள்
தொகுத்த நாற்பெருந் தானையங் கடலொடுந் துவன்றி
மிகுத்த அண்டத்தின் புடைதொறும் புடைதொறும் மேனாட்
பகுத்து வைத்திடும் வாயிலின் நெறிகளாற் படர்ந்தார். ......
3(முந்தை அண்டத்தின்)
முந்தை அண்டத்தின் நெறிதனில் முழங்கிருஞ் சேனை
வந்து வந்திவட் செறிவன விதியொடு மாறாய்ச்
சுந்த ரங்கெழு மாயன்இவ் வுலகுயிர் துய்ப்ப
உந்தி யின்வழி அங்கவை தோன்றுமா றொப்ப. ......
4(பூதம் யாவையும்)
பூதம் யாவையும் உயிர்களும் புவனமுள் ளனவும்
பேதம் நீங்கிய சுருதியா கமங்களும் பிறவும்
ஆதி காலத்தின் அநாதியாம் எம்பிரான் அளப்பில்
பாத பங்கயத் துதிப்பவும் போன்றன பகரின். ......
5(இனைய தன்மையால் அண்ட)
இனைய தன்மையால் அண்டத்தின் நெறிதனில் ஏகும்
வனைக ருங்கழல் அவுணர்தம் படையிவண் வரலுங்
கனலி தன்சுடர் மறைந்தன நடுங்கினன் கனலும்
அனிலன் தானுமெய் வியர்த்தனன் நெருக்கமுற் றயர்வான். ......
6(ஆர்த்த ஓசையால்)
ஆர்த்த ஓசையால் அகிலமுந் துளங்கிய அவுணர்
கார்த்த மெய்யொளி கதுவலால் இருண்டன ககனந்
தூர்த்த பூழியால் ஆழிகள் வறந்தன துணைத்தாள்
பேர்த்து வைத்திடு தன்மையால் அண்டமும் பிளந்த. ......
7(கூடும் இப்பெருந்)
கூடும் இப்பெருந் தானையை நோக்கிமெய் குலைவுற்
றோடு தற்கிடம் இன்றிநின் றிரங்கினர் உம்பர்
வீடி னானென வாசவன் மருண்டனன் விதியும்
நீடு மாயனும் முடிவதென் னோவென நினைந்தார். ......
8(பூத லந்தனில் அம்பர)
பூத லந்தனில் அம்பர நெறிதனில் புடைசூழ்
மாதி ரங்களில் அளக்கரில் வரைகளில் வழியில்
பாத லங்களில் பிறவினில் அவுணர்தம் படைகள்
ஏதும் வெள்ளிடை இன்றியே சென்றன ஈண்டி. ......
9(மலர யன்பதம் மால்)
மலர யன்பதம் மால்பதம் முனிவர்கள் வைகும்
உலகம் வாசவன் தொன்னகர் ஏனையோர் உறையுள்
அலரி யாதியர் செல்கதி பிலங்களில் அனிகம்
பலவும் நின்றன செல்லிடம் பெறாதபான் மையினால். ......
10(மாறி லாதன தொல்)
மாறி லாதன தொல்லையண் டங்களின் வந்த
வீறி லாததோர் தூசிகள் படர்ந்திடும் எல்லை
நூறு கோடியோ சனைகளென் றறிஞர்கள் நுவன்றார்
வேறு பின்வருந் தானையின் பெருமையார் விதிப்பார். ......
11(குறுமை யாமுயிர்)
குறுமை யாமுயிர் வாழ்க்கையர் கொண்டதொல் வளம்போற்
சிறுமை யோவிது விரித்திட அவுணர்கோன் சேனை
அறிஞர் கூறிய பெருந்தொகை தன்னினும் அடங்கா
பிறிது மற்றிதற் குவமையும் ஒன்றிலை பேசின். ......
12(அஞ்சு பட்டிடு)
அஞ்சு பட்டிடு பூதங்கள் பல்லுரு வமைந்து
நெஞ்சு பட்டிடும் உயிர்கொடு நேருமேல் நிகரும்
அஞ்சு பட்டிடு பொருப்பெலாஞ் சூறைமுன் மயங்கும்
பஞ்சு பட்டிட நடந்திடு தூசிமுற் படையே. ......
13(அந்த மின்றியே)
அந்த மின்றியே அகன்புவி கொண்டஅண் டத்தில்
வந்தி டுந்திறற் படைகளின் பெருமையார் வகுப்பார்
முந்து தூசிகள் மகேந்திரப் பெருநகர் மூடி
இந்த வண்டத்தின் இடமெலாம் நிறைந்தன இமைப்பில். ......
14(ஆன காலையில் ஒற்றர்)
ஆன காலையில் ஒற்றர்போய்ச் சூரனை யடைந்து
பானல் மெல்லடி கைதொழு தையநீ படைத்த
சேனை வந்தயல் நின்றன தூசிமுற் சென்று
வானு லாவுபேர் அண்டத்தை நெருக்கின மன்னோ. ......
15(என்னும் எல்லையில்)
என்னும் எல்லையில் நன்றென அவுணர்கோன் எழுந்து
தன்ன தாகிய உறையுள்போய்த் தடம்புன லாடித்
துன்னும் ஐவகை உணவுடன் அறுசுவை தொடர்ந்த
அன்னம் உண்டனன் நஞ்சுகொல் மருந்துகொல் அதுவே. ......
16(நீற ணிந்தனன்)
நீற ணிந்தனன் நெற்றிமெய்ந் நிறைவிரை களபச்
சேற ணிந்தனன் பூந்தொடை பங்கியிற் செறித்தான்
மாறில் பொற்சுடர்க் கலையுடன் அணிகலன் மாற்றி
வேறு வேறுநன் கினியன புனைந்தனன் விரைவில். ......
17(ஈசன் மாப்படை ஏனை)
ஈசன் மாப்படை ஏனையோர் பெரும்படை யாவும்
மாசில் ஆயிர கோடிதேர் செலுத்தியே அவையுங்
கேச ரித்திறல் யானமுங் கேடில்பொற் றேரும்
பாச னத்திறல் அவுணர்கொண் டேகுவான் பணித்தான். ......
18(ஆங்க வெல்லையிற்)
ஆங்க வெல்லையிற் சூரபன் மாவெனும் அவுணன்
பாங்கர் வந்திடு வலவர்தந் தொகையினைப் பாரா
ஓங்கு மோர்தடந் தேரினைக் கொணர்திரென் றுரைப்பப்
பூங்க ழற்றுணை வணங்கியே நன்றெனப் போனார். ......
19(வாட்டு கேசரி)
வாட்டு கேசரி எழுபதி னாயிரம் வயமாக்
கூட்டம் அங்கணோ ரெழுபதி னாயிரங் கூளி
ஈட்ட மாகிய தெழுபதி னாயிரம் ஈர்ப்பப்
பூட்டி நன்குறப் பண்ணினார் ஆங்கொரு பொலன்தேர். ......
20(மண்ட லத்தினும்)
மண்ட லத்தினும் ஆன்றபேர் இடத்தது மருங்கில்
தெண்டி ரைக்கட லாமென ஆர்ப்பது செறிந்த
அண்ட மாயிர கோடியுந் தன்னிடத் தாற்றிக்
கொண்டு நின்றிடும் வலியது மடங்கலங் கொடித்தேர். ......
21(முடியும் எல்லையில்)
முடியும் எல்லையில் எழுதரு மருத்தினும் உந்திக்
கடிது செல்வது சென்றிடு விசையினால் ககுபத்
தடநெ டுங்கிரி அலமரத் தபனருங் குளிர
வடவை யங்கிகள் விளிந்திடப் புரிவதம் மான்தேர். ......
22(ஏழு நேமியும் இடை)
ஏழு நேமியும் இடைப்படு தீபமும் யாவுஞ்
சூழு கின்றபேர் அடுக்கலும் ஒன்றிய தொடர்பின்
கேழில் பன்மணி ஓவியப் பத்திகள் கெழுவும்
ஆழி தாங்கிய அண்டமொத் திலங்கிய தகன்தேர். ......
23(தொழுத குந்திறல்)
தொழுத குந்திறல் அவுணர்கோன் வேள்வியில் துஞ்சி
எழுவ தாகிய எல்லையில் தோன்றிய தெதிர்ந்தார்
குழுவி ரிந்திடத் துரப்பது நான்முகக் குரிசில்
அழியும் நாளினும் அழிந்திடா திருப்பதவ் வகல்தேர். ......
24(கண்ண கன்படை)
கண்ண கன்படை அளப்பில பரித்தது காமர்
விண்ண வர்க்குள வலியெலாங் கொண்டது மேனாள்
அண்ணல் நல்கிய இந்திர ஞாலமும் அனைய
தெண்ணின் மேற்படு மியாணர்பெற் றுடையதவ் விரதம். ......
25(அனைய தாகிய தேரி)
அனைய தாகிய தேரினை வலவர்கொண் டணைந்து
தினக ரன்தனை வெகுண்டவன் தாதைமுன் செலுத்தத்
துனைய மற்றதில் இவர்ந்தனன் இவர்தலுந் தொழுது
புனைதி வாகையென் றவுணர்கள் பூமழை பொழிந்தார். ......
26(பொழிந்த காலையில்)
பொழிந்த காலையில் வலவர்கள் அங்கதிற் புக்குக்
கழிந்த சீர்த்தியான் ஆணையால் தேரினைக் கடவத்
தழிந்த ழீமெனப் பல்லியம் இயம்பின சகங்கள்
அழிந்த நாளெழு கடலென அவுணர்கள் ஆர்த்தார். ......
27(அங்கி யன்னபொற்)
அங்கி யன்னபொற் படியகங் கோடிகம் அடைப்பை
திங்கள் வெண்குடை கவரிகொண் டொழுகினர் சிலதர்
துங்க மிக்கவன் சீர்த்தியும் ஆணையுந் தொடர்ந்து
மங்க லந்திகழ் உருக்கொடு சூழ்ந்திடும் வகைபோல். ......
28(அண்ணல் மேவரு)
அண்ணல் மேவரு கோநகர் எல்லையுள் அடைந்த
எண்ணில் மாப்பெருஞ் சிகரியின் வாயில்கள் இகந்தே
கண்ண கன்ஞெள்ளல் ஆயிர கோடியுங் கடந்து
வண்ண மாமணிக் கோபுர முதற்கடை வந்தான். ......
29வேறு(தானவர் கோமகன்)
தானவர் கோமகன் தடம்பொற் றேரொடு
மாநகர் முதற்கடை வாயில் போதலும்
ஆனது நோக்கியே அங்கட் சூழ்தரு
சேனைகள் ஆர்த்தன உடுக்கள் சிந்தவே. ......
30(ஞெலித்திடு பரவை)
ஞெலித்திடு பரவையின் நீல வெவ்விடம்
ஒலித்தெழுந் தாலென உலப்பில் தானைகள்
கலித்தன படர்ந்தன கண்ண கன்புவி
சலித்தது கொடியரைத் தரிக்கொ ணாமையால். ......
31(நேரியம் பரியதோர்)
நேரியம் பரியதோர் நிசாளஞ் சல்லிகை
பேரியம் பணைவயிர் பிறங்கு தண்ணுமை
தூரியங் காகளந் துடிமு தற்படு
சீரியம் பலவுடன் இயம்பிச் சென்றவே. ......
32(சேயின குஞ்சிகள்)
சேயின குஞ்சிகள் செறிந்த தானவர்
பாயின தானையில் படர்ந்த பூழிகள்
வாயின பரவைமேல் வடவைத் தீவிராய்ப்
போயின நாளெழு புகையைப் போன்றவே. ......
33(வானினும் மண்ணி)
வானினும் மண்ணினும் மாதி ரத்தினுந்
தானிறை கடலினுந் தணப்பின் றாகியே
மேனிறை பூழிகள் மிடைய எங்கணுஞ்
சோனைகொள் பின்பனித் தூவல் போன்றவே. ......
34(சூரனி கத்தெழு)
சூரனி கத்தெழு தூளி அந்நகர்
ஆரகில் ஆவியும் யாரும் ஆடிய
பூரிகொள் சுண்ணமும் பொருந்திப் போவது
காரின மின்னொடு கடலுண் டேகல்போல். ......
35(திண்டிறற் கரிகளில்)
திண்டிறற் கரிகளில் தேரில் வெண்கொடி
மண்டுறு பூழிதோய் வானிற் செல்வன
கொண்டலின் இருதுவிற் கொக்கின் மாலைகள்
தண்டுளி யுறைப்புழிப் படருந் தன்மைபோல். ......
36(படைவகை திசை)
படைவகை திசையெலாம் படரப் பாயிருள்
அடைவது சூரறிந் தண்டம் யாவினும்
மிடைதரு கதிர்களை விளிக்க வந்தெனக்
குடைநிரை எங்கணுங் குழுமு கின்றவே. ......
37(வெம்பரி கரியுமிழ்)
வெம்பரி கரியுமிழ் விலாழி மாமதம்
இம்பரின் நகரெலாம் யாற்றின் ஏகலால்
உம்பர்மற் றல்லதை ஒருவன் தானைகள்
அம்புவி சென்றிடற் கரிய தானதே. ......
38(இவ்வகை தானைகள்)
இவ்வகை தானைகள் ஈண்டிச் சென்றிடத்
தெவ்வலி அவுணர்கோன் செம்பொற் றேரின்மேல்
மைவரை மேருவின் வருவ தாமெனக்
கவ்வையின் அமர்புரி களரி ஏகினான். ......
39(பூசலின் எல்லையில்)
பூசலின் எல்லையில் புரவ லன்செலத்
தூசிய தாகியே தொடர்ந்த தானைகள்
ஈசன தருள்மகன் இனிது வைகிய
பாசறை சூழ்ந்தன படியும் வானுமாய். ......
40(உரற்றிய கணமழை)
உரற்றிய கணமழை உம்பர் சூழ்ந்தென
விரற்றொடு சூழ்படை ஈட்டம் நோக்கியே
மரற்றுறு பலங்களில் வாரி கண்வர
அரற்றினர் வெருவினர் அமரர் யாவரும். ......
41(அழுங்கினன் புரந்தரன்)
அழுங்கினன் புரந்தரன் அகிலம் யாவையும்
விழுங்குறும் இருவரும் விம்மி னாருளம்
புழுங்கினர் வீரர்கள் பூதர் ஏங்கினார்
கொழுங்கனல் இடைப்படு விலங்கின் கொள்கைபோல். ......
42(ஆவதோர் காலையில் அரி)
ஆவதோர் காலையில் அரியும் நான்முகத்
தேவனும் ஏனைய திசையி னோர்களும்
மூவிரு முகமுடை முதல்வன் தன்னிரு
பூவடி பணிந்திவை புகறல் மேயினார். ......
43வேறு(அந்தமி லாத அண்டம்)
அந்தமி லாத அண்டம் ஆயிரத் தெட்டுத் தன்னில்
வந்திடு தானை யோடு மாபெருஞ் சூர பன்மன்
உந்திய தேரின் மேலான் உறுசமர் புரிவான் போந்தான்
முந்திய தூசி நந்தம் பாசறை மொய்த்த தென்றார். ......
44(என்னலும் முறுவல்)
என்னலும் முறுவல் செய்தாங் கிலங்கெழில் தவிசின் வைகும்
பன்னிரு கரத்து வள்ளல் பவனனைக் குறிப்பின் நோக்க
முன்னம துணர்ந்து வல்லே முளவுகோல் கயிறு பற்றிப்
பொன்னவிர் மனவே கப்பேர்ப் புரவிமான் தேர்முன் உய்த்தான். ......
45(உய்த்திடு கின்ற கால)
உய்த்திடு கின்ற காலத் தொய்யென எழுந்து காமர்
புத்தலர் நீபத் தாரான் புகர்மழுக் குலிசஞ் சூலஞ்
சத்திவாள் பலகை நேமி தண்டெழுச் சிலைகோல் கைவேல்
கைத்தலங் கொண்டான் என்னின் அவன்தவங் கணிக்கற் பாற்றோ. ......
46(மாறிலா அருக்கன்)
மாறிலா அருக்கன் நாப்பண் வைகிய பரம னேபோல்
ஆறுமா முகத்து வள்ளல் அலங்குளைப் புரவி மான்தேர்
ஏறினான் வீர வாகு இலக்கரோ டெண்ம ராகும்
பாறுலாங் குருதி வேலார் பாங்கராய்ப் பரசி வந்தார். ......
47(இராயிர வெள்ள மாகு)
இராயிர வெள்ள மாகும் எண்டொகைப் பூதர் யாரும்
மராமரம் பிறங்கல் ஈட்டம் வரம்பறு படைகள் பற்றி
விராவினர் சூழ்ந்து சென்றார் விரிஞ்சனே முதலோர் யாரும்
பராவொடு புடையின் நின்று பனிமலர் மாரி தூர்த்தார். ......
48(தூர்த்திடு கின்ற காலை)
தூர்த்திடு கின்ற காலைச் சுருதியின் தொகைக்கும் எட்டாத்
தீர்த்தன்மான் றேர்மே லாகித் திண்புவி அண்டந் தன்னில்
பேர்த்திடும் உயிர்கள் மாற்றப் பின்னுறு முன்னோன் போல
ஆர்த்திடு தானை வெள்ளத் தவுணர்கள் மீது போனான். ......
49(ஆங்கது காலை தன்னில் ஆறி)
ஆங்கது காலை தன்னில் ஆறிரு தடந்தோள் ஐயன்
பாங்குறு பூதர் யாரும் பாரொடு திசையும் வானும்
நீங்குத லின்றிச் சூழும் நேரலன் படையை நோக்கி
ஏங்கினர் தொல்லை வன்மை இழந்தனர் இனைய சொற்றார். ......
50(தீயன புரியுஞ் சூரன்)
தீயன புரியுஞ் சூரன் செய்திடு தவத்தாற் பெற்ற
ஆயிர விருநான் கண்டத் தவுணரும் போந்தார் அன்றே
ஏயதோ ரண்டம் ஒன்றில் இருந்தனர் இவர்மற் றன்றால்
மாயிருந் திசையும் விண்ணும் வையமுஞ் செறிந்து நின்றார். ......
51(வரத்தினிற் பெரியர்)
வரத்தினிற் பெரியர் மாய வன்மையிற் பெரியர் மொய்ம்பின்
உரத்தினிற் பெரியர் வெம்போர் ஊக்கத்திற் பெரியர் எண்ணில்
சிரத்தினிற் பெரியர் சீற்றச் செய்கையிற் பெரியர் தாங்குங்
கரத்தினிற் பெரியர் யாருங் காலனிற் பெரியர் அம்மா. ......
52(மாகத்தின் வதிந்த)
மாகத்தின் வதிந்த வானோர் வன்மையும் வளனும் வவ்விச்
சோகத்தை விளைத்து வெம்போர் தொடங்கியே தொலைவு செய்தோர்
மோகத்தின் வரம்பாய் நின்றோர் முழுதுயிர்க் கடலுள் வேட்கை
மேகத்தின் வலிந்த தீயோர் விரிஞ்சன்ஏற் றிடினும் வெல்வோர். ......
53(கூற்றெனும் நாமத்)
கூற்றெனும் நாமத் தண்ணல் கொண்டிடும் அரசுஞ் செங்கேழ்
நூற்றிதழ்க் கமல மேலான் நுனித்தனன் விதிக்கு மாறு
மாற்றிடுஞ் செய்கை வல்லோர் மாநில முழுதுண் டாலும்
மாற்றரும் பசிநோய் மிக்கோ ரண்டங்கள் அலைக்குங் கையோர். ......
54(வெங்கனல் சொரி)
வெங்கனல் சொரியுங் கண்ணார் விரிகடற் புரைபேழ் வாயார்
பங்கமில் வயமேற் கொண்டோர் பவத்தினுக் குறையு ளானோர்
செங்கதிர் மதியந் தோயுஞ் சென்னியர் செயிர்தீர் ஆற்றல்
அங்கத விறையும் பேர அடிபெயர்த் துலவும் வெய்யோர். ......
55(அங்கிமா முகத்தி)
அங்கிமா முகத்தி னான்போல் அடைந்தனர் பல்லோர் யாளித்
துங்கமா முகத்தி னான்போல் தோன்றினர் பல்லோர் சூழி
வெங்கைமா முகத்தி னான்போல் மேயினர் பல்லோர் மேலாஞ்
சிங்கமா முகத்தி னான்போல் திகழ்ந்தனர் பல்லோர் அன்றே. ......
56(மதுவொடு கைட)
மதுவொடு கைட பன்போல் வந்தனர் பல்லோர் யாருந்
துதியுறு புகழ்ச்சுந் தோப சுந்தரிற் செறிந்தோர் பல்லோர்
அதிர்கழற் சலந்த ரன்போல் ஆர்த்தனர் பல்லோர் ஆற்ற
முதிர்சின மகிடன் போல மொய்த்தனர் பல்லோர் அம்மா. ......
57(அரன்படை பரித்தோர்)
அரன்படை பரித்தோர் பல்லோர் அப்புயத் தவிசின் மேவும்
வரன்படை பரித்தோர் பல்லோர் மழுவொடு தண்டந் தாங்குங்
கரன்படை பரித்தோர் பல்லோர் கால்படை பரித்தோர் பல்லோர்
முரன்படை படுத்த கொண்டல் முதுபடை பரித்தோர் பல்லோர். ......
58(ஆனதொ ரவுண வெள்)
ஆனதொ ரவுண வெள்ளம் அநந்தகோ டியதாம் என்றே
தானுரை செய்வ தல்லாற் சாற்றவோ ரளவும் உண்டோ
வானமும் நிலனும் ஏனை மாதிர வரைப்பும் எங்குஞ்
சேனைக ளாகிச் சூழின் யாமென்கொல் செய்வ தம்மா. ......
59(ஓரண்டத் தவுணர்)
ஓரண்டத் தவுணர் போரால் உலைந்தயாம் ஒருங்கே யெல்லாப்
பேரண்டத் தோருந் தாக்கிற் பிழைப்புறு பரிசும் உண்டோ
காரண்ட அளக்கர் சாடிக் கனவரை எறியுங் கால்கள்
ஏரண்டச் சூழல் புக்கால் அவைபின்னும் இருக்க வற்றோ. ......
60(ஒருவரே எம்மை)
ஒருவரே எம்மை எல்லாம் உரப்பியே துரப்பர் பின்னை
இருவரே சென்று தாக்கின் யார்இவண் உய்ய வல்லார்
துருவரே யனைய துப்பிற் சூழுறும் அவுணர் யாரும்
பொருவரே என்னில் நேர்போய்ப் பூசலார் தொடங்கற் பாலார். ......
61(எல்லையில் ஆற்றல்)
எல்லையில் ஆற்றல் கொண்ட எம்முடைத் தலைவர் யாரும்
அல்லன வீரர் தாமும் அவுணரை எதிர்க்க லாற்றார்
கல்லொடு மரத்தால் யாமோ அவர்திறல் கடக்க வல்லேம்
ஒல்லைநம் உயிரும் இன்றே ஒழிந்தன போலும் அன்றே. ......
62(நாற்படை அவுணர்)
நாற்படை அவுணர் தாக்கின் நாமெலாம் விளிதும் வீரர்
காற்படு பூளை யேபோற் கதுமென இரிவர் வாகைப்
பாற்படு திறலோன் நிற்கிற் பழிபடும் இனைய ரோடும்
வேற்படை யொருவன் அன்றி வேறியார் எதிர்க்க வல்லார். ......
63(நீடுறு திசையும்)
நீடுறு திசையும் வானும் நிலனும்வெள் ளிடைய தின்றிப்
பாடுற வளைந்து கொண்டார் பற்றலர் அதனால் யாமும்
ஓடியும் உய்ய லாகா ஒல்லுமா றவரைத் தாக்கி
வீடுதல் உறுதி யென்றே விளம்பிமேற் சேற லுற்றார். ......
64(மற்றது காலை தன்னில் மாபெ)
மற்றது காலை தன்னில் மாபெரும் பூத சேனைக்
கொற்றவர் பலரும் ஏனை வீரர்தங் குழுவி னோரும்
வெற்றிகொள் மொய்ம்பன் தானும் மிடைந்துசூழ் படையை நோக்கி
இற்றன கொல்லோ நந்தம் வன்மையென் றெண்ண முற்றார். ......
65(அண்டர்கள் முதல்வன்)
அண்டர்கள் முதல்வன் தானும் அமரரும் அகில மெங்குந்
தண்டுத லின்றிச் சூழுந் தானவர் அனிக மெல்லாங்
கண்டனர் துளங்கி அஞ்சிக் கவன்றனர் அவருட் காரி
வண்டுள அலங்கற் சென்னி வானவற் கினைய சொல்வான். ......
66(ஆண்டகை முருகன்)
ஆண்டகை முருகன் தன்மேல் ஆயிர விருநா லண்டத்
தீண்டிய தானை யெல்லாம் இறுத்தன இவற்றி னோடு
மூண்டமர் இயற்றி வெல்ல வூழிநாள் முடியும் என்றான்
மாண்டிடு கின்ற தெங்ஙன் அவுணர்கள் மன்னன் மன்னோ. ......
67(அடுதிறல் வலிபெற்)
அடுதிறல் வலிபெற் றுள்ள அவுணராம் பானாட் கங்குல்
விடிவதும் அமரர் தங்கள் வெஞ்சிறை வீடு மாறும்
நெடியதொல் வெறுக்கை தன்னை நீங்கிய நமது துன்பம்
முடிவது மில்லை கொல்லோ மொழிந்தருள் முதல்வ என்றான். ......
68(இந்திரன் இனைய)
இந்திரன் இனைய தன்மை இசைத்தலும் இலங்கை காத்த
ஐந்திரு சென்னி யானை அடுதிறல் கொண்டு நின்ற
செந்திரு மருமத் தண்ணல் தேவரை அளிக்குந் தொல்லோன்
புந்திகொள் கவலை நாடி இனையன புகலா நின்றான். ......
69(காலமாய்க் காலம்)
காலமாய்க் காலம் இன்றிக் கருமமாய்க் கரும மின்றிக்
கோலமாய்க் கோலம் இன்றிக் குணங்களாய்க் குணங்கள் இன்றி
ஞாலமாய் ஞாலம் இன்றி அநாதியாய் நங்கட் கெல்லாம்
மூலமாய் இருந்த வள்ளல் மூவிரு முகங்கொண் டுற்றான். ......
70(குன்றுதொ றாடல்)
குன்றுதொ றாடல் செய்யுங் குமரவேள் மேரு வென்னும்
பொன்றிகழ் வெற்பின் வந்து புவனங்கள் முழுதும் அங்கட்
சென்றுறை உயிர்கள் முற்றுந் தேவருந் தன்பாற் காட்டி
அன்றொரு வடிவங் கொண்ட தயர்த்தியோ அறிந்த நீதான். ......
71(பொன்னுரு வமைந்த)
பொன்னுரு வமைந்த கஞ்சப் புங்கவ னாகி நல்கும்
என்னுரு வாகிக் காக்கும் ஈசன்போல் இறுதி செய்யும்
மின்னுரு வென்ன யார்க்கும் வெளிப்படை போலும் அன்னான்
தன்னுரு மறைக ளாலுஞ் சாற்றுதற் கரிய தன்றே. ......
72(பாயிருங் கடலிற்)
பாயிருங் கடலிற் சூழ்ந்த பற்றலர் படையை எல்லாம்
ஏயெனும் முன்னம் வீட்டுஞ் சிறுவனென் றெண்ணல் ஐய
ஆயிர கோடி கொண்ட அண்டத்தின் உயிர்கட் கெல்லாம்
நாயகன் அவன்காண் நாஞ்செய் நல்வினைப் பயனால் வந்தான். ......
73(சூரனே முதலோர்)
சூரனே முதலோர் தம்மை இமைப்பினில் தொலைக்க உன்னின்
மூரலால் அடுவன் கொண்ட முனிவினால் அடுவன் வாய்மைச்
சீரினால் அடுவன் நாட்டச் செய்கையால் அடுவன் என்றால்
நேரிலா முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற் பாலார். ......
74(பாரிடர் சேனை யோடு)
பாரிடர் சேனை யோடு படர்ந்ததும் இலக்கத் தொன்பான்
வீரர்கள் புடையிற் போற்ற மேயதும் படைகள் பற்றிச்
சூரனை அடுவான் வந்த சூழ்ச்சியுந் தூக்கின் மாதோ
வாரண முதலா மேலோற் கனைத்துமோ ராட லேகாண். ......
75(துய்யதோர் குமர)
துய்யதோர் குமர னேபோல் தோன்றிய முதல்வன் சூழ்ந்த
வெய்யதா னவரை யெல்லாம் விரைந்துடன் அறுத்து நீக்கிக்
கையில்வேல் அதனாற் சூரன் ஆற்றலுங் கடக்கும் யாதும்
ஐயுறேல் காண்டி யென்றான் அறிதுயில் அமர்ந்த பெம்மான். ......
76(மாலிவை பலவுங்)
மாலிவை பலவுங் கூறி மகபதி உளத்தைத் தேற்றி
ஓலமொ டவுண வெள்ளம் உம்பருஞ் செறிந்த செவ்வேள்
பாலுற நின்று போரின் பரிசினைப் பார்த்து மென்றே
வேலுடை முதல்வன் பாங்கா விண்ணவ ரோடும் போந்தான். ......
77வேறு(அன்ன தன்மைகண்)
அன்ன தன்மைகண் டறுமுகன் முறுவல்செய் தடுபோர்
உன்னி யேகலும் வானமும் வையமும் ஒன்றாத்
துன்னு தானவப் பெருங்கடல் ஆர்த்தமர் தொடங்க
முன்ன மேகிய பாரிடர் யாவரும் முரிந்தார். ......
78(முரிந்த காலையில்)
முரிந்த காலையில் பூதரின் முதல்வர்கள் முரட்போர்
புரிந்து சாய்ந்தனர் இலக்கரோ டெண்மரும் பொருதே
இரிந்து நீங்கினர் இன்னதோர் தன்மைகள் எல்லாந்
தெரிந்து திண்டிறல் மொய்ம்பினோன் சிலைகொடு சேர்ந்தான். ......
79(சேர்பு தன்சிலை)
சேர்பு தன்சிலை வாங்கியே சரமழை சிதறி
நேர்பு குந்திடும் அவுணர்கள் நெடுந்தலை புயங்கள்
மார்பு வெங்கரங் கழலடி வரைகளாய் வீழ
ஈர்பு நின்றமர் இயற்றினன் சிறுவரை இகலி. ......
80(மாக மேல்நிமிர் ஆயிர)
மாக மேல்நிமிர் ஆயிர கோடிமா கடலுள்
நாக மொன்றுசென் றலைத்தென நண்ணலர் எதிர்போய்
ஆக வம்புரிந் துலப்புறாத் தன்மைகண் டழுங்கி
ஏக நாயகன் தனதுபால் வந்தனன் இளவல். ......
81(காலை யங்கதில்)
காலை யங்கதில் அவுணர்தந் தானையோர் கணத்தின்
சாலம் ஓடின பூதரில் தலைவருஞ் சாய்ந்தார்
கோல வெஞ்சிலை வீரரும் முரிந்தனர் குழவிப்
பால னேயிவண் வருமெனச் சூழ்ந்தனர் பலரும். ......
82(தண்டு நேமியுங்)
தண்டு நேமியுங் குலிசமுஞ் சூலமுந் தனுக்கள்
உண்டு மிழ்ந்திடு வாளியும் உடம்பிடித் தொகையும்
பிண்டி பாலமுங் கணிச்சியும் பாசமும் பிறவும்
அண்டர் தந்திடு படைகளுஞ் சொரிந்துநின் றார்த்தார். ......
83(பாரி டங்களின் படை)
பாரி டங்களின் படையெலாம் நெக்கதும் பாங்கர்
வீர மொய்ம்பனும் இளைஞரும் வருந்திமீண் டதுவுங்
காரி னம்புரை அவுணர்தஞ் செய்கையுங் காணா
மூரல் செய்தனன் எவ்வகைத் தேவர்க்கு முதல்வன். ......
84(நாட்டம் மூன்றுடை)
நாட்டம் மூன்றுடைத் தாதைபோற் சிறிதிறை நகைத்து
நீட்ட மிக்கதோர் சிலையினை நெடுங்கரம் பற்றிக்
கோட்டி நாணொலி கொண்டிட அண்டருங் குலைந்தார்
ஈட்ட மிக்கபல் லுயிர்களுந் துளக்கமெய் தினவே. ......
85வேறு(முக்கணன் உதவிய)
முக்கணன் உதவிய திருமுருகன் முரணுறு வரிசிலை முதிரொலிபோய்த்
தொக்கன செவிதொறும் நுழைதலுமே தொலைவறும் அவுணர்கள் தொகைமுழுதும்
நெக்கன பகிர்வன இரதமெலாம் நிரைபட வருபரி புரள்வனவே
மைக்கரி தரைமிசை விழுவனவான் மதிதொடு நெடுவரை மறிவனபோல். ......
86(மாசறு மறைகளின்)
மாசறு மறைகளின் மறையதனை மலைமுனி யுணர்வகை யருள்புரியுந்
தேசிக முதலவன் வரிசிலையிற் செறிமுகில் உறைவகை சிதறுவபோல்
ஆசுகம் அளவில கடவினனால் அடல்கெழும் அவுணர்கள் புடைவளையும்
காசினி அகலமும் விரிகடலுங் ககனமும் மிடைவன கணையெனவே. ......
87(கொடிகளை அடுவன)
கொடிகளை அடுவன அளவிலவே குடைகளை அடுவன அளவிலவே
படைகளை அடுவன அளவிலவே பரிகளை அடுவன அளவிலவே
கடகரி அடுவன அளவிலவே கனையொலி இரதமொ டவுணர்கள்தம்
முடிகளை அடுவன அளவிலவே முழுதுல குடையவன் விடுசரமே. ......
88(பரவிய தருவினம்)
பரவிய தருவினம் எனஅவுணப் படைநிரை விழுவன தொடுகடலில்
திரையென விழுவன புரவிஇனந் திருநெடு வரைகளின் விழுவனதேர்
கருமைகொள் மணிமுகில் இனமெனவே கடகரி விழுவன கனவரைசூழ்
இரவியும் மதியமும் விழுவனபோல் எழுவன கவிகையும் விழுவனவே. ......
89(செல்லுறு தாள்களும்)
செல்லுறு தாள்களும் அடுபடைகள் சிந்திய செங்கைக ளுந்திறலே
சொல்லிய வாய்களும் விம்மலுறுந் தோள்களும் நோக்குறு துணைவிழியுங்
கல்லென ஆர்த்திடு கந்தரமுங் கவசமும் வீரர்கள் துவசமுடன்
எல்லையி லாதமர் தனிமுதல்வன் எய்திடும் வாளிகள் கொய்திடுமே. ......
90வேறு(வட்டணை கொண்டி)
வட்டணை கொண்டிடு மால்வரையும்
எட்டெனும் ஓங்கலும் யானைகளும்
பட்டுரு விக்கணை பாறினவால்
ஒட்டலர் எங்ஙனம் உய்குவதே. ......
91(பொன்னுல கெல்லை)
பொன்னுல கெல்லைபு குந்துலவும்
அன்னமு யர்த்திடும் அண்ணல்பதந்
துன்னுறும் அச்சுதர் தொல்லுலகின்
மின்னென வேசெலும் வேள்கணையே. ......
92(மேதினி கீண்டு)
மேதினி கீண்டு விரைந்துபுகும்
பாதல மூடு பரந்துசெலும்
மூதகும் அண்ட முகட்டுருவும்
மாதிரம் ஏகுறும் வள்ளல்சரம். ......
93(மூவிரு செய்ய முக)
மூவிரு செய்ய முகத்தொருவன்
ஏவிய செஞ்சரம் எங்குமுறா
மேவலர் தங்களை வீட்டிடும்வே
றேவர்கள் கண்ணும் இறுத்திலவே. ......
94(ஆனனம் ஆறுள)
ஆனனம் ஆறுள அண்ணல்சரம்
தானவர் சென்னிகள் தள்ளுதலும்
வானிடை போயின மாண்கதிர்கள்
மேனிம றைப்புறும் வெய்யவர்போல். ......
95(வாளெழு வேல்பிற)
வாளெழு வேல்பிற வாங்கினர்தந்
தோள்களை வாளி துணித்தெறிய
நீளிடை சென்று நிரந்திடுதங்
கேளிரை அட்டன கீழ்மையர்போல். ......
96(மாசகல் வானக)
மாசகல் வானக மாதிரவாய்
காசினி வேலைகளத் தின்அகம்
பாசறை சுற்றிய பாடியெலாம்
ஆசற அட்டனன் அற்புதனே. ......
97(அட்டிடு கின்றுழி)
அட்டிடு கின்றுழி அம்புயன்மால்
ஒட்டுறு வாசவன் உள்மகிழாக்
கெட்டனர் தானவர் கேடில்துயர்
விட்டனம் என்று விளம்பினரே. ......
98(அடைந்தனர் விம்மி)
அடைந்தனர் விம்மிதம் ஆங்கவுணர்
மிடைந்தது நோக்கினர் வேற்படையோன்
தடிந்தது காண்கிலர் தாரணிமேற்
கிடந்தது கண்டனர் கேசரரே. ......
99(அலமரு பாரிடர்)
அலமரு பாரிடர் அவ்வவர்தந்
தலைவர்கள் ஏனையர் தானவர்தம்
மலிபடை சாய்த்து வயம்புனைவிற்
புலவனை ஆர்ப்பொடு போற்றினரே. ......
100(வள்ளல்ச ரம்பட)
வள்ளல்ச ரம்பட வான்முகடு
கொள்ளுறு தானை குழாந்தொலைய
வெள்ளிடை யாயின விண்ணவர்தம்
உள்ளக மாற்றவு வப்புறவே. ......
101(அண்டக டாகம)
அண்டக டாகம தப்புறமாய்க்
கொண்டிடு தானவர் கொள்கையிது
கண்டிறை வன்கழல் காணநெறி
உண்டினி யென்றனர் உள்மகிழ்வார். ......
102(காற்றென அண்ட)
காற்றென அண்ட கடாகநெறி
தோற்றிய வாயில் தொடர்ந்துபுகா
மேற்றிகழ் தேர்கரி வெம்பரியின்
ஏற்றமொ டொல்லென ஏகினரால். ......
103(அந்நெறி ஏகியிவ்)
அந்நெறி ஏகியிவ் வண்டமெலாந்
துன்னினர் வான்புவி சூழ்ந்துவெளி
என்னது மில்லென ஈண்டினரால்
முன்னுற வந்து முடிந்தவர்போல். ......
104(சூரன் எனப்படு)
சூரன் எனப்படு தொல்லிறைவன்
பேரமர் ஆற்றிடு பெற்றியினால்
தேரிடை வந்துறு செய்கைதெரீஇ
ஆர்வமொ டேநெடி தார்த்தனரே. ......
105(ஆர்த்தனர் தம்முன்)
ஆர்த்தனர் தம்முன் அடைந்துளர்தாம்
பேர்த்திடு கின்ற பிணக்கிரியாய்
ஈர்த்திடு சோரி இடைப்படுதல்
பார்த்தனர் சிந்தை பரிந்தனரே. ......
106(பரிந்தனர் நம்படை)
பரிந்தனர் நம்படை பட்டிடவே
புரிந்திடு வானொடு போர்புரியா
விரைந்து வயங்கொடு மீடுமெனாத்
தெரிந்தனர் சிந்தனை தேற்றினரே. ......
107(தேற்றிடு கின்றுழி)
தேற்றிடு கின்றுழி தேவரெலாம்
போற்றிட வீரர் புடைக்கணுற
ஆற்றல்கொள் பூதர்கள் ஆர்த்திடவே
தோற்றினன் ஈறொடு தோற்றமிலான். ......
108(சேயுரு வாகிய)
சேயுரு வாகிய சீர்முதல்வன்
மேயது கண்டு மிகச்சிறியன்
பாய்பரி யானை படைத்துமிலான்
ஏயிவ னேநம தெண்ணலனே. ......
109(ஆண்டகை மைந்த)
ஆண்டகை மைந்தனிவ் வண்டமெலாம்
ஈண்டிய தானை இமைப்பொழுதின்
மாண்டிட அட்டனன் மற்றிதுதான்
ஈண்டிடும் அற்புத நீர்மையதே. ......
110(அன்னது நின்றிட)
அன்னது நின்றிட அங்கவன்மேல்
மன்னவர் மன்னவன் வந்துபொரு
முன்னமர் ஆற்றி முடிக்குதும்யாம்
என்ன இயம்பினர் யாவருமே. ......
111(தற்பமொ டின்னன)
தற்பமொ டின்னன சாற்றியவண்
முற்படு தானவர் முக்கணுடைத்
தற்பரன் நல்கிய சண்முகனை
வற்புடன் ஆர்த்து வளைந்தனரால். ......
112(வளைந்திடு காலை)
வளைந்திடு காலையில் வானவர்கள்
உளைந்தனர் பூதர்கள் உட்கிமனந்
தளர்ந்தனர் வீரர் சலித்தனரால்
விளைந்தது பேரமர் மீட்டுமெனா. ......
113வேறு(ஐயன்ம ருத்தினை)
ஐயன்ம ருத்தினை அத்துணை நோக்கிக்
கையணி நெற்றி கடைக்குழை யாகி
வெய்யவர் தானைகள் மேவுழி யெல்லாம்
வையம்வி டுக்குதி வல்லையில் என்றான். ......
114(அட்டுறு நீப அல)
அட்டுறு நீப அலங்கல் புனைந்தோன்
கட்டுரை கொண்டு கரந்தொழு காலோன்
ஒட்டுறு நண்ணலர் உற்றுழி காணா
விட்டனன் அம்ம விறற்பரி மான்தேர். ......
115(மண்ணிடை சென்றிடு)
மண்ணிடை சென்றிடு மாதிர நீந்தும்
விண்ணிடை சூழ்தரும் வேலையின் மீதாங்
கண்ணுறும் எப்படி கைதொழும் வானோர்
எண்ணினும் நாடரி தெந்தைபி ரான்தேர். ......
116(சேயது காலை திற)
சேயது காலை திறத்திற மாகி
மூயின தானவர் மொய்ம்புறு தானை
சாய்வுற ஓர்தொடை தன்னில் அநந்தம்
ஆயிர கோடிக ளாக்கணை தொட்டான். ......
117(பரிந்தன சூழ்ந்தவர்)
பரிந்தன சூழ்ந்தவர் பாணிகள் மொய்ம்பு
சிரந்துணி வுற்றன செம்புன லாழி
சொரிந்த பிணக்கிரி துற்றிய வற்றால்
நெரிந்தது வையம் நெளிந்தது நாகம். ......
118(பொய்கொலை ஆற்)
பொய்கொலை ஆற்றிய பூரியர் உக்கார்
செய்குவர் நன்மை செறிந்துள ரேனுங்
கைகெழு ஞாளிக ளேகறித் துண்ட
மைகெழு தானவர் மாண்டிடும் யாக்கை. ......
119(ஒன்னலர் மீதின்)
ஒன்னலர் மீதின் உயிர்க்குயி ரானோன்
மின்னென வீசிய வெஞ்சர மாரி
பின்னுற முந்து பெயர்ந்திடு மென்றால்
அன்னவன் தேர்விரை வார்கணிக் கின்றார். ......
120(பரத்தினு மேதகு)
பரத்தினு மேதகு பண்ணவன் வார்வில்
கரத்தினை யும்விரை வாற்கரந் தூண்டுஞ்
சரத்தினை யுந்தடந் தேரினை யுங்கால்
உரத்தினை யும்புகழ் வார்புடை யுள்ளார். ......
121(வெவ்விச யப்படை)
வெவ்விச யப்படை வீட்டிடும் வாளிச்
செவ்விசை தேர்விசை நாடினர் செவ்வேள்
கைவிசை யோநெடுங் கால்விசை தானோ
வெவ்விசை யோவிசை என்றனர் வானோர். ......
122(துய்யவன் வாளி துணி)
துய்யவன் வாளி துணித்திட வீரர்
கையொடு வானிடை செல்வ கணிப்பில்
ஐயிரு வட்டம ராப்புடை பற்ற
வெய்யவர் பற்பலர் விண்ணெழல் போலும். ......
123(காலொரு பாங்கர்)
காலொரு பாங்கர் கழுத்தொரு பாங்கர்
வாலொரு பாங்கர் மருப்பொ டெருத்தம்
மேலொரு பாங்கர் வியன்கையொர் பாங்காத்
தோலினம் இவ்வகை யேதுணி கின்ற. ......
124(பல்லணம் அற்றன)
பல்லணம் அற்றன பன்முழு தற்ற
செல்லுறு தாளொடு சென்னியும் அற்ற
ஒல்லொலி அற்ற உரந்துணி வுற்ற
வல்லமர் நீந்துறு மாத்தொகை முற்றும். ......
125(மாழைகொள் வையம்)
மாழைகொள் வையம் மடிந்திட நேமி
ஆழிகொள் சோரியின் ஆழ்வன மேருச்
சூழுறும் வெய்யவர் தொல்புவி கீண்டே
கீழுறும் எல்லை கெழீஇயின போலும். ......
126(ஏறிய தேர்களும்)
ஏறிய தேர்களும் யானைகள் யாவுஞ்
சூறைகொள் வாசிக ளுந்துணி வுற்றே
வீறகல் வீரர்மி சைப்பட வீழ்ந்த
மாறவை ஆற்றிடும் வல்வினை யேபோல். ......
127(ஞாலமும் வானமும்)
ஞாலமும் வானமும் நண்ணலர் ஆவி
மாலொடு வாரி மடங்கல் உலைந்தான்
சாலுமி வற்கிது தாள்வலி யாற்கொல்
கால னெனப்புகல் கட்டுரை பெற்றான். ......
128(எறிபடை யாவையும்)
எறிபடை யாவையும் ஏமம தாகச்
செறிபடை யாவையுஞ் சேயவன் ஏவால்
முறிபடு கின்ற முனிந்துவ ணப்புட்
கறிபட மெய்துணி கட்செவி யேபோல். ......
129(முன்னுறு வார்கள்)
முன்னுறு வார்கள் முரட்படை தூவிப்
பின்னுறு வார்பெய ராதுபு டைக்கண்
துன்னுறு வார்கள் எலாந்துணி வாக
மின்னென எங்கணும் வேள்கணை தூர்த்தான். ......
130(சூலம தேகொல்)
சூலம தேகொல் கணிச்சிகொல் தொல்லை
மாலெறி நேமிகொல் வச்சிர மேகொல்
காலொடு சென்ற கனற்குழு வேகொல்
வேலது கொல்லென வேள்கணை விட்டான். ......
131வேறு(மழைத்திடு மெய்)
மழைத்திடு மெய்யுடை மாற்றலர்கள்
இழைத்திடு மாய இயற்கைகளும்
விழுத்தக வீசும் விறற்படையும்
பிழைத்தன தாங்கள் பிழைத்திலரால். ......
132(முக்கணன் மாமகன்)
முக்கணன் மாமகன் மொய்கணைகள்
தொக்கவர் யாக்கை துணித்திடலும்
மெய்க்கிடு பல்கலன் மீன்விழல்போல்
திக்குல விப்படி சிந்தினவே. ......
133(அண்ணல் சரங்கள்)
அண்ணல் சரங்கள் அறுத்திடலும்
எண்ணலர் யாக்கைகள் இற்றவைதாம்
மண்ணை யளந்தயில் மாலெனவே
விண்ணை யளந்து விழுங்கினவே. ......
134(சூழுறு தானை)
சூழுறு தானை துணிந்தஉடல்
ஏழெனும் நேமியும் எண்டகுபேர்
ஆழியும் விண்ணும் அடைத்திமையோர்
வாழுல கங்களை வௌவியவே. ......
135(காடி யிழந்து கவந்)
காடி யிழந்து கவந்தமதாய்
ஆடின வெள்ளமும் ஆயிரமா
கோடி யதுண்டு குகன்கணையால்
வீடின எல்லை விதிக்குநர்யார். ......
136(வீழுறு மாற்றலர்)
வீழுறு மாற்றலர் மெய்க்குருதி
ஆழிக ளாகி அகன்புவியில்
பூழைக ளோடு புகுந்துபிலம்
ஏழுள எல்லையும் ஈண்டியதே. ......
137வேறு(பாதல எல்லை பர)
பாதல எல்லை பரந்திடு சோரி
பூதல மீண்டு புகுந்து பராவி
ஓத நெடுங்கடல் ஓங்கிய வாபோல்
மாதிரம் எங்கும் மறைத்தன அன்றே. ......
138(மீனுடு வாக விள)
மீனுடு வாக விளங்கிய திங்கள்
பானு மலர்ந்திடு பங்கய மாகச்
சோனைகொள் மாமுகில் தோணிய தாக
வானிமிர் செம்புனல் மாகடல் ஒக்கும். ......
139(மாசறு கூற்றனும்)
மாசறு கூற்றனும் மற்றுளர் தாமுங்
கேசர ராகிய கிங்கரர் யாரும்
பாசம லைந்திடு பல்பிணி பற்றா
வீசினர் ஆருயிர் மீன்கள் கவர்ந்தார். ......
140(பாலுறு கின்ற பணி)
பாலுறு கின்ற பணிக்கிறை நாப்பண்
மாலரு ளில்துயில் மாட்சிமை யென்ன
நீலுறு திங்கள் நிணங்கெழு செந்நீர்
வேலையின் மீது விளங்கிய தம்மா. ......
141(மட்டறு செம்புனல்)
மட்டறு செம்புனல் வாரிதி நீந்தி
ஒட்டலர் யாக்கையின் ஓங்கல் அறுத்துத்
தட்டுறு செங்கதிர் சண்முக மேலோன்
விட்டிடு நேமியின் விண்மிசை செல்லும். ......
142(சிறைப்புற வுக்கருள்)
சிறைப்புற வுக்கருள் செய்திட மெய்யூன்
அறுப்பவன் என்ன அடைந்தனர் விண்ணின்
நெறிப்படு வானவர் நேரலர் யாக்கை
உறப்படு சோரிமெய் உற்றிடு நீரால். ......
143(ஆனதொ ரெல்லையில் அண்)
ஆனதொ ரெல்லையில் அண்ட நிறைந்த
சேனைகள் வீழ்ந்தன செம்மல் சரத்தால்
ஊனுயிர் பூதமொ ழிந்தன முக்கண்
வானவன் மூரலின் மாய்ந்திடு மாபோல். ......
144வேறு(அண்டம் ஈங்கிது)
அண்டம் ஈங்கிது முற்றொருங் கீண்டிய அவுணர்
தண்ட மாய்தலும் ஏனைய அண்டங்கள் தம்மில்
கொண்ட தானைகள் பின்னரும் வந்திடக் குமரன்
கண்டு மற்றவை தொலைத்தனன் செலுத்திடு கணையால். ......
145(அறுத்து வெம்முனை)
அறுத்து வெம்முனைத் தானையை யாண்டுசெல் லனிகம்
மறித்தும் வந்துவந் தடைதரும் இவணென மனத்துட்
குறித்து வெங்கணை மாரியால் அண்டகோ ளகையின்
நெறித்த ரும்பெரு வாயிலை யடைத்தனன் நிமலன். ......
146(ஆண்டு சென்னெறி)
ஆண்டு சென்னெறி மாற்றியே அண்ணல்வெங் கணையால்
மாண்ட தானைகள் சோரியுங் களேவர மலிவும்
நீண்ட பாதலங் கடற்புவி கொண்டுவான் நிமிர்ந்தே
ஈண்டு கின்றது கண்டனன் வரைபக எறிந்தோன். ......
147(நெற்றி நாட்டத்தின்)
நெற்றி நாட்டத்தின் உலகெலாம் அட்டிடு நிமலன்
பெற்ற மாமகன் பன்னிரு விழிகளும் பிறங்கு
கற்றை வெஞ்சுடர் வடவைபோல் ஆக்கியக் கணத்தில்
உற்று நோக்கினன் நெரிந்தன களேவரத் தோங்கல். ......
148(வெந்து நுண்டுகள்)
வெந்து நுண்டுகள் பட்டன களேவரம் விசும்பின்
உந்து சோரிநீர் வறந்தன மூவகை உலகு
முந்து போலவே அமைந்தன முளரியான் முகுந்தன்
இந்தி ராதியர் ஆர்த்தனர் குமரனை ஏத்தி. ......
149(பாறு லாவரு களே)
பாறு லாவரு களேவரத் தமலையும் படிமேல்
வீறு சோணித நீத்தமும் வேவுற விழித்து
நீற தாக்கினான் சூரனை அட்டிலன் நின்றான்
ஆறு மாமுகன் ஆடலை உன்னினன் ஆங்கொல். ......
150(ஆகும் எல்லையின்)
ஆகும் எல்லையின் ஒல்லையின் அடுகளத் தடைந்த
சேகு நெஞ்சுடைச் சூரன்இத் திறமெலாந் தெரிந்து
மாக நீடுநந் தானையை அலைத்தமாற் றலனை
நாகர் தம்மொடு முடிக்குவன் யானென நவின்றான். ......
151(மாற்றம் இத்திறம்)
மாற்றம் இத்திறம் இசைத்திடும் அவுணர்கோன் மனத்தில்
சீற்ற மூண்டிட அமர்வினை குறித்தனன் திகிரிக்
காற்றின் ஒல்லைவந் தேற்றலும் மருத்துவன் கடவிப்
போற்று தேர்மிசை முருகனுஞ் சென்றெதிர் புகுந்தான். ......
152(புக்க காலையில் அறுமுக)
புக்க காலையில் அறுமுகன் தோற்றமும் புடையின்
மிக்க பன்னிரு கரங்களும் வியன்படைக் கலனுந்
தொக்க வீரமும் வன்மையும் நோக்கியே தொல்லைத்
தக்க னேயென அவுணர்கோன் இன்னன சாற்றும். ......
153(சிறந்த வான்மதி)
சிறந்த வான்மதி மிலைச்சினோன் அருள்புரி செயலால்
இறந்தி டேனியான் என்றுமிப் பெற்றியாய் இருப்பேன்
மறந்தும் என்னொடு பொருதிலர் தேவரும் மலைந்தே
இறந்து ளார்பலர் உணர்ந்திலை போலுநீ இதுவே. ......
154(உள்ளம் நொந்து)
உள்ளம் நொந்துநொந் தென்பணி ஆற்றியே உலைந்து
தள்ளு றுஞ்சுரர் மொழியினைச் சரதமென் றுன்னிப்
பிள்ளை மென்மதி யாலிவண் வந்தனை பெரிதும்
அள்ள லுற்றுழிப் புகுந்திடுங் கயமுனி யதுபோல். ......
155(உடைப்பெ ரும்படை)
உடைப்பெ ரும்படை செறுத்தனை பாலனென் றுன்னை
விடுப்ப தில்லையால் வெரிந்து கொடுக்கினும் விரைவில்
படுப்பன் வானவர் தொகையுடன் பாரிடர் தமையுங்
கெடுப்ப னென்றனன் தன்பெருங் கிளையுடன் கெடுவான். ......
156(வெம்பு ரைத்தொழி)
வெம்பு ரைத்தொழிற் கொருவனாங் கயவநீ வெறிதே
வம்பு ரைத்தனை யாவதொன் றில்லைநின் மார்பஞ்
செம்பு ரைப்பட யாம்விடு கின்றதோர் திறல்வாய்
அம்பு ரைத்திடு மாறுனக் கென்றனன் அமலன். ......
157(ஆரும் நேரிலாப்)
ஆரும் நேரிலாப் புங்கவன் சேயின தறையச்
சூர னாகிய அவுணர்கோன் துண்ணெனச் செயிர்த்து
மேரு நேர்வதோர் வரிசிலை யெடுத்துவிண் ணிழியும்
வாரி போன்றிடு நாணினை ஏற்றியே வளைத்தான். ......
158(வளைத்த டங்கிரி)
வளைத்த டங்கிரி புரைவதோர் சிலையினை வயத்தால்
வளைத்த செய்கையைக் காண்டலும் பாரிடர் வானோர்
வளைத்த டங்கடல் வந்திடு நஞ்சொடு மலைவான்
வளைத்த தன்மைபோல் அவுணர்தம் முதல்வனை வளைத்தார். ......
159(சிலையை வீசினர்)
சிலையை வீசினர் கொடுமரம் வீசினர் செறிமூ
விலையை வீசினர் படையெலாம் வீசினர் எதிர்ந்தார்
உலைய வீசியே அடல்செயும் மும்மதத் துவாவை
வலையை வீசியே பிணித்திட மதித்துளார் என்ன. ......
160(கண்டு மற்றதை)
கண்டு மற்றதை அவுணர்கோன் வில்லுமிழ் கணையாங்
கொண்டல் நுண்துளி சிதறியே கணங்கள்கூட் டறுத்து
விண்டு லாவர அரக்கினாற் குயின்றதோர் வெற்பைச்
சண்ட வெங்கனல் உடைப்பது போலவே தடிந்தான். ......
161(வீடி னார்களும்)
வீடி னார்களும் புயங்கரந் துணிந்திட மெலிந்து
வாடி னார்களும் மயங்கிவீழ்ந் தார்களும் வல்லே
ஓடி னார்களும் ஓடவும் வெருவிவேற் றுருவங்
கூடி னார்களும் ஆயினர் பாரிடக் குழாத்தோர். ......
162(பூதர் சாய்ந்துழி)
பூதர் சாய்ந்துழி இலக்கரோ டெண்மரும் பொருவில்
வேத நாயகன் தூதனுஞ் சூழ்ந்துடன் மேவிக்
கோதை தூங்கிய கொடுமர மாயின குனித்துச்
சோதி வான்கணை மாரிகள் அவுணன்மேற் சொரிந்தார். ......
163(சொரிந்த வெங்கணை)
சொரிந்த வெங்கணை எங்கணும் வருதலுஞ் சூரன்
தெரிந்து வாளிதொட் டறுக்கலன் நின்றதோர் செவ்வி
விரைந்து வந்தவை ஆங்கவன் மெய்ப்பட விளிந்து
பரிந்து போயின செய்ததொன் றில்லைஅப் பகழி. ......
164(பரப்பின் ஈண்டிய)
பரப்பின் ஈண்டிய வீரர்தஞ் சூழ்ச்சியைப் பாரா
உரப்பி ஆவலங் கொட்டியே வெகுளிகொண் டொருதன்
பொருப்பு நேர்சிலை குனித்துவெஞ் சிலீமுகம் பொழிந்து
திருப்பெ ருந்தடந் தேரொடுஞ் சாரிகை திரிந்தான். ......
165(நூறு கோடிவெஞ்)
நூறு கோடிவெஞ் சரமொரு தொடையுற நூக்கிச்
சூறை யாமென வட்டணை திரிந்துளான் சூழ்வோர்
மாறு தூண்டிய சரங்களைத் துணித்துமற் றவர்கள்
ஏறு தேருடன் பிடித்திடு சிலைகளை இறுத்தான். ......
166(வையம் வில்லுடன்)
வையம் வில்லுடன் இற்றபின் மற்றவர் மலைவு
செய்ய உன்னுமுன் மொய்ம்பினும் உரத்தினுஞ் சிரத்துங்
கையி னுங்கணை ஆயிர மாயிரங் கடுந்தீப்
பெய்யும் மாரிபோற் செறித்தனன் செம்புனல் பெருக. ......
167(புரந்த னிற்செறி)
புரந்த னிற்செறி கறையினார் புலம்புகொள் மனத்தார்
உரந்த ளர்ந்துளார் வில்வலி இழந்துளார் ஒருங்கே
இரிந்து நீங்கினர் இலக்கரோ டெண்மரும் இளவல்
திருந்த லன்தடந் தேர்மிசைப் பாய்ந்தனன் சினத்தால். ......
168(பாய்ந்து திண்டிறல் மொய்)
பாய்ந்து திண்டிறல் மொய்ம்பினான் பரமன்முன் னளித்த
நாந்த கந்தனை யுரீஇக்கொடு நண்ணலர்க் கிறைவன்
ஏந்து வில்லினைத் துணித்தனன் துணித்தலும் எரிபோல்
காய்ந்து வெய்யவன் புடைத்தனன் உரத்திலோர் கரத்தால். ......
169(அங்கை கொண்டுசூர்)
அங்கை கொண்டுசூர் ஒருபுடை புடைத்தலும் அகலம்
பொங்கு சோணிதம் அலைத்திட வாகையம் புயத்துச்
சிங்கம் வீழ்ந்தயர் வுற்றிடத் தூதனைச் செகுத்தல்
இங்கெ னக்கடா தென்றெடுத் தும்பரின் எறிந்தான். ......
170(எறிந்த காலையில் விண்)
எறிந்த காலையில் விண்ணிடைப் படர்ந்திடும் ஏந்தல்
அறிந்து மீண்டுசென் றாறுமா முகன்புடை அடைந்தான்
தறிந்து போகிய சிலையினைத் தரைமிசை யிட்டுச்
சிறந்த தோர்தனு எடுத்தனன் தீயரில் தீயோன். ......
171(அத்த மேல்கிரி)
அத்த மேல்கிரி உதயமால் வரைத்துணை யான்று
நித்த லும்பிறர்க் கிடர்செய்து மேருவின் ஈண்டு
கொத்து நீடுபல் குவடுடைத் தாகியே குமரன்
சத்தி யாலட நின்றவெற் பனையதத் தனுவே. ......
172(வனைக ருங்கழல்)
வனைக ருங்கழல் அவுணனக் கார்முகம் வளைத்துப்
புனலும் அங்கியும் காலுடன் ஒலிப்பது புரைய
எனைவ ருந்துளக் குறும்வகை நாணொலி யெடுத்தான்
அனைய பெற்றியை அறிந்தனன் அமரரை அளித்தோன். ......
173(புயலின் மேனியன்)
புயலின் மேனியன் புவிநுகர் காலையும் போதன்
துயிலு மாலையுந் துஞ்சிய வேலையுந் தொலையா
தியலு மண்டத்தின் அடிமுடி உருவிநின் றிலங்குங்
கயிலை போல்வதோர் நெடுஞ்சிலை எடுத்தனன் கந்தன். ......
174(வாரி யாலுல கழிந்தி)
வாரி யாலுல கழிந்திடும் எல்லையின் மருங்கின்
மேரு வாதியாம் வரைகளுங் கிரிகளும் விசும்பில்
காரு மேலுள உலகமும் அமரருங் கயிலைச்
சாரல் சூழ்தல்போல் விரவியார்ப் புடையதத் தனுவே. ......
175(நீட்ட மிக்கதோர்)
நீட்ட மிக்கதோர் அப்பெருஞ் சிலையினை நிமலன்
தோட்டு ணைக்கொடு வாங்கியேழ் வகையினால் தோன்றும்
ஈட்ட மிக்கபல் லுயிர்களும் வான்உரும் ஏற்றின்
கூட்ட மாகியே யார்த்தெனக் குணத்தொலி கொண்டான். ......
176(குணங்கொள் பேரொ)
குணங்கொள் பேரொலி கோடலும் இரலையூர் கொற்றத்
தணங்கு லாவரு கார்முகங் குழைத்துளை யவதி
இணங்க வாங்கியே பத்துநூ றாயிரத் திரட்டி
கணங்கொள் வெஞ்சரம் உகைத்தனன் கூற்றினுங் கடியோன். ......
177(வான்ம றைத்தன)
வான்ம றைத்தன மாதிரம் மறைத்தன மதிதோய்
மீன்ம றைத்தன கதிர்வெயின் மறைத்தன வேலை
தான்ம றைத்தன வசுமதி மறைத்தன தருவார்
கான்ம றைத்தன வரைகளை மறைத்தன கணைகள். ......
178(காற்றிற் செல்வன)
காற்றிற் செல்வன அங்கியிற் படர்வன கடுங்கட்
கூற்றிற் கொல்வன வேலைவெவ் விடத்தினுங் கொடிய
பாற்றுத் தொல்சிறை உள்ளன பஃறலை படைத்த
நாற்றிக் கும்புகழ் அவுணர்கோன் ஆணையின் நடப்ப. ......
179(பருமி தத்தன மேரு)
பருமி தத்தன மேருவைத் துளைப்பன பாங்கர்
வரைகி ழிப்பன அண்டமும் பொதுப்பன வான்தோய்
உருமி டிக்குலம் பொருவன விடத்தையுண் டுமிழ்வ
கருமை பெற்றன சேயன தீயவன் கணைகள். ......
180(துண்ட வெண்பிறை)
துண்ட வெண்பிறை வாளெயிற் றவுணர்கோன் துரப்ப
மிண்டு வெங்கணை யெங்கணுஞ் செறிந்திட விண்ணோர்
கண்டு கண்ணனை அணுகியே கைகுலைத் தைய
உண்டு கொல்நமக் கொளிப்பதோர் இடமென உரைத்தார். ......
181(உரைத்து ளார்க்கு)
உரைத்து ளார்க்குமால் மாறுரை வழங்குமுன் ஒள்வேல்
கரத்தி லேந்திய குமரவேள் இன்னது கண்ணால்
தெரித்து வெங்கனல் விடுத்திடும் ஊதைபோற் சிலதன்
சரத்தி னாலவன் தூண்டிய கணையெலாந் தடிந்தான். ......
182(மடிந்தி டும்படி)
மடிந்தி டும்படி மாற்றலன் சரங்களை வள்ளல்
தடிந்த தன்மைகண் டமரர்கள் உவகையில் தழைத்தார்
படர்ந்து நீடிய கங்குலின் பாயிருள் புலர
விடிந்த காலையின் எழுங்கதிர் கண்டமே தினிபோல். ......
183வேறு(அங்க வெல்லை அவு)
அங்க வெல்லை அவுணர்கோன்
எங்கள் நாதன் எதிருற
மங்குல் போல்வ ரம்பிலாச்
செங்கண் வாளி சிதறினான். ......
184(ஆய காலை அறு)
ஆய காலை அறுமுகன்
தீயன் உந்து செறிகணை
மாய வாளி மாமழை
ஏயெ னாமுன் ஏவினான். ......
185(எங்கள் நாதன் ஏவிய)
எங்கள் நாதன் ஏவிய
துங்க வாளி சூர்விடும்
புங்க வங்க ளைப்புரத்
தங்கி போல றுத்தவே. ......
186(அறுத்த பின்னும்)
அறுத்த பின்னும் அறனிலான்
மறுத்தும் வாளி மாமழை
கறுத்த கண்டர் காளைமேல்
செறுத்து வல்லை சிந்தினான். ......
187(சிந்து கின்ற செஞ்ச)
சிந்து கின்ற செஞ்சரம்
வந்து றாமுன் வந்தெனக்
கந்தன் நூறு கணைதொடா
அந்தில் பூழி ஆக்கினான். ......
188(பூழி செய்து பொள்)
பூழி செய்து பொள்ளென
ஊழி நாதன் ஒண்சரம்
ஏழு நூற தேவினான்
சூழு மாயை தோன்றல்மேல். ......
189(மாயை மைந்தன் மற்)
மாயை மைந்தன் மற்றதை
ஆய வாளி யால்அறுத்
தேயி னானி ராயிரஞ்
சேயின் முன்சி லீமுகம். ......
190வேறு(விட்டதனை அத்)
விட்டதனை அத்தொகை விறற்பகழி தன்னால்
அட்டுவிரை விற்கடவுள் ஆயிர விரட்டி
கட்டழலை யொத்துள கடுங்கணைகள் தம்மைத்
தொட்டனன் வருத்தமொடு சூர்கிளை துளங்க. ......
191(முராரியுத வுஞ்சுத)
முராரியுத வுஞ்சுதனை முந்துதளை இட்டாண்
டொராயிரம் அளித்தபரன் உய்த்தகணை செல்ல
இராயிர நெடும்பகழி ஏவியவை நீக்கி
அராவிறையும் வையமும் அழுங்கலுற ஆர்த்தான். ......
192(ஆர்த்தவன் விடுங்க)
ஆர்த்தவன் விடுங்கணை அனைத்தினையும் முக்கண்
மூர்த்திதரு கான்முளை செலச்செல முடித்தான்
கார்த்தெழு புகைப்படலை கான்றுநிமிர் செந்தீச்
சேர்த்தினவை யாவையும் மிசைந்திடு திறம்போல். ......
193(ஐயன்விடு வாளிகளை)
ஐயன்விடு வாளிகளை அவ்வசுரன் நீக்கும்
வெய்யன்விடு வாளிகளை வேள்கடி தறுக்கும்
எய்யுநெடு வெம்பகழி இற்றவைகள் சிந்தி
வையமிசை போகியன வானமணித் தென்ன. ......
194(முற்றிய அமர்த்தலை)
முற்றிய அமர்த்தலை முனிந்திவர் செலுத்துங்
கொற்றநெடு வாளிகள் குறைந்துழி எழுந்தீப்
பற்றியது பாரிடை பகிர்ந்தவரை முற்றும்
வற்றிய அளக்கரும் வறந்துளது கங்கை. ......
195(தார்கெழுவு வேற்படை)
தார்கெழுவு வேற்படை தடக்கையுடை யோனுஞ்
சூரனும் இவாறமர் இயற்றுதொழில் காணா
வீரமட மாதுளம் வியந்திவர் தமக்குள்
ஆரிடை நடத்துமென ஐயமொடு நின்றாள். ......
196(ஆளரிதன் முன்னிள)
ஆளரிதன் முன்னிளவல் ஆனைவத னத்துக்
காளைமகிழ் பின்னிளவல் கார்முகம் உகைக்கும்
வாளிமழை ஏயலது மற்றவர்கள் தம்மை
நீள்விழியி னால்தெரிகி லார்புடையின் நின்றோர். ......
197(நீடுசமர் இன்னணம்)
நீடுசமர் இன்னணம் நிகழ்ச்சியுறும் எல்லை
மேடமிசை ஊர்பரன் விடுத்தகணை எல்லாம்
ஈடுபட நூறியவன் ஏறிவரு மான்தேர்
ஆடுறு பதாகையை அறுத்துவிரைந் தார்த்தான். ......
198(ஆர்த்துவிறல் வால்)
ஆர்த்துவிறல் வால்வளையை அம்பவள வாயில்
சேர்த்தியிசைத் தான்தனது சீர்த்தியிசைத் தென்ன
மூர்த்தமது தாழ்க்கிலன் முனிந்துகணை பின்னுந்
தூர்த்துமுரு கன்தனது தோற்றமறைத் திட்டான். ......
199(மறைத்தபக ழித்தொகை)
மறைத்தபக ழித்தொகையை வாளிமழை தன்னாற்
குறைத்தவுணன் ஊர்ந்திடு கொடிஞ்சிநெடு மான்தேர்
விறற்கொடி தனைக்கொடிய வெஞ்சரமொ ரேழால்
அறுத்துமுரு கன்பரவை யாழ்கடலின் இட்டான். ......
200வேறு(தான வர்க்குத் தலை)
தான வர்க்குத் தலைவன் தனிக்கொடி
மீன வேலையில் அற்றுடன் வீழ்ந்துழிப்
பானு கம்பனெ னப்படு பாரிடர்
சேனை காவலன் தெற்றென நோக்கினான். ......
201(கண்டு சிந்தை களி)
கண்டு சிந்தை களித்துப் பெருமிதங்
கொண்டு குப்புற் றிசைத்துக் குனித்திடா
அண்டர் போற்றத்தன் ஆயிரம் வாயினும்
ஒண்தி ரட்சங்கம் ஒல்லைவைத் தூதினான். ......
202(கானு கம்படு கந்து)
கானு கம்படு கந்துகத் தேருடைப்
பானு கம்பன் பனிமதி ஆயிரம்
மானு கம்பவை வாய்வைத் திசைத்தலுந்
தானு கம்பல தங்கிற்றவ் வோசையே. ......
203(பாய்பெ ரும்புகழ்)
பாய்பெ ரும்புகழ்ப் பானுகம் பன்வளை
ஆயி ரங்களும் ஆர்த்திட அண்டர்தம்
நாய கன்தன் விறல்கண்டு நாரணன்
தூய சங்கு முழங்கிற்றுத் துண்ணென. ......
204(போதம் அங்கதிற்)
போதம் அங்கதிற் புங்கவர் யாவருஞ்
சோதி வேற்படைத் தூயவன் ஏறுதேர்
மீது கேதனம் இல்லை வியன்கொடி
ஆதி நீயென் றழலினை ஏவினார். ......
205(ஏவ லோடும் எரி)
ஏவ லோடும் எரிதழற் பண்ணவன்
வாவு குக்குட மாண்கொடி யாகியே
தேவதேவன் திருநெடுந் தேர்மிசை
மேவி ஆர்த்தனன் அண்டம் வெடிபட. ......
206(படியி லாதமர் பண்ண)
படியி லாதமர் பண்ணவன் தேர்மிசைக்
கொடிய தாய்நின்று குக்கு டங்கூயது
கடிய தானவர் கங்குல் புலர்ந்திடும்
விடியல் வைகறை வேலையைக் காட்டல்போல். ......
207(சங்க மோடு தபனனு)
சங்க மோடு தபனனும் ஆர்த்தலும்
மங்குல் வண்ணத்து மாயவன் ஆர்த்தனன்
பங்க யாசனப் பண்ணவன் ஆர்த்தனன்
திங்கள் ஆர்த்தது செங்கதிர் ஆர்ப்பவே. ......
208(மறலி ஆர்த்தனன்)
மறலி ஆர்த்தனன் மாருதங் கட்கெலாம்
இறைவன் ஆர்த்தனன் இந்திரன் ஆர்த்தனன்
அறைக டற்கர சானவன் ஆர்த்தனன்
குறைவில் செல்வக் குபேரனும் ஆர்த்தனன். ......
209(ஆர்த்த ஓசைபோய்)
ஆர்த்த ஓசைபோய் அண்டத்தை முட்டியே
சூர்த்த நோக்குடைச் சூரபன் மன்செவிச்
சீர்த்து ளைக்குட் செறிதலுந் தேவரைப்
பார்த்த னன்கடு உண்டன்ன பான்மையான். ......
210(மாறி லென்முன்)
மாறி லென்முன் வருவதற் கஞ்சியே
பாறு போன்று பழுவத்து லைந்துளார்
தேறி வந்து தெழித்தனர் என்முனும்
ஆறு மாமுகன் ஆற்றல்கொண் டேகொலாம். ......
211(நன்று நன்றிது நான்)
நன்று நன்றிது நான்முகன் ஆதியா
நின்ற தேவர் நிலையழித் தொல்லையில்
கொன்று பின்னர்க் குமரனை வெல்வனால்
என்று சீறினன் யாரையும் எண்ணலான். ......
212(இருக்க மைந்தன்)
இருக்க மைந்தன் இகலிவண் விண்ணிடைச்
செருக்கு தேவர் திறலினைச் சிந்துவான்
அருக்க னோடிய அந்தரத் துய்க்குதி
தருக்கு தேரினைச் சாரதி நீயென்றான். ......
213(மற்றிவ் வாறு வல)
மற்றிவ் வாறு வலவனை நோக்கியே
சொற்ற காலைத் தொழுதெந்தை நன்றெனாப்
பொற்றை போலும் பொலன்மணித் தேரினை
வெற்றி யாகென விண்மிசைத் தூண்டினான். ......
214(பாகன் தூண்டிய)
பாகன் தூண்டிய பாண்டிலந் தேரெழீஇ
மேகங் கீண்டு மிசைப்படு சூறையின்
ஆகங் கீறி அமரர்கள் ஈண்டிய
மாகஞ் சென்றது வானிழிந் தென்னவே. ......
215(சென்ற தேரொடு)
சென்ற தேரொடு சேணிடைப் புக்குளான்
குன்ற மன்ன கொடுஞ்சிலை கோட்டியே
துன்று தேவர் தொகைஇரிந் தோடுற
மன்ற வாளி மழைகளை வீசினான். ......
216(வீசு கின்றுழி விண்)
வீசு கின்றுழி விண்ணவர் மேற்சரம்
நீசன் விட்டிடு நீர்மையை நோக்கியே
ஈசன் மாமகன் ஈண்டுநின் றெண்ணிலா
ஆசு கங்களுய்த் தங்கவை சிந்தினான். ......
217வேறு(மற்றவை துணித்த)
மற்றவை துணித்தபின் வடிக்கயிறு முட்கோல்
பற்றிய தடக்கையுள பாகுதனை நோக்கிக்
கொற்றஅயில் தூண்டியொரு குன்றைவெளி கண்டோன்
தெற்றெனவிண் மேல்நமது தேர்விடுதி யென்றான். ......
218(என்னலும் இறைஞ்)
என்னலும் இறைஞ்சிஇர லைப்பரியின் மேலோன்
பொன்னுலகு பாருலகு புக்கெழுவ தென்ன
மின்னின்மிளிர் தேரதனை விண்மிசைக டாவி
நன்னெறி செலாஅவுணர் நாயகன்முன் உய்த்தான். ......
219(வையநெடு வான)
வையநெடு வானமிசை வல்லைபுகும் எல்லை
ஐயன்இமை யோர்கள்அயர்ந் தோடுவது நோக்கி
நையலிர் புலம்பலிர் நடுங்கலிர்கள் என்றோர்
செய்யகரம் ஏந்திமுரு கன்கருணை செய்தான். ......
220(கந்தன்மொழி வான)
கந்தன்மொழி வானவர்க ணத்தவர்கள் கேளா
எந்தையிவண் வந்திடலின் யாமுயிர் படைத்தே
உய்ந்தனம் எனாவிரைவில் ஓடுவது நீங்கிச்
சிந்தைமகிழ் வத்தொடு திகந்தமுற நின்றார். ......
221(நின்றிடலும் வெவ்)
நின்றிடலும் வெவ்வவுணன் நீர்மையது நோக்கிப்
பின்றிடுவ ராம்பிரம னேமுதல தேவர்
ஒன்றொர்சிறு வன்கொலெனை உற்றெதிரு நீரான்
நன்றிதென வேவெகுளி கொண்டுநகை செய்தான். ......
222(காய்சின மிகுந்த)
காய்சின மிகுந்தவுணர் காவலன் அநந்தம்
ஆசுகம் விரைந்துபடர் ஆசுகம தென்ன
வீசுதலும் வாளிபல விட்டவை விலக்கி
ஈசனருள் மாமதலை ஏற்றிகல் புரிந்தான். ......
223(சுறுக்கொள மயிர்)
சுறுக்கொள மயிர்ப்பொடி உயிர்ப்புவிடு சூரன்
கறைக்கதிர் அயிற்பொலி கரத்தன்இவர் தம்மில்
செறுத்துடன் வடிக்கணை செலுத்திஅகல் வானம்
மறைப்பது மறுக்குவது மாகிமலை வுற்றார். ......
224வேறு(விரைந்திரு வோர்)
விரைந்திரு வோர்களும் வியன்கணை மாரிகள்
சொரிந்தனர் பேரமர் தொடர்ந்துசெய் போழ்தினில்
எரிந்தது மாதிரம் இரங்கினர் பாருளர்
திரிந்தன சாரிகை சிறந்தவர் தேர்களே. ......
225(கறங்கினம் போல்வன)
கறங்கினம் போல்வன கலஞ்செய் குலாலன
திறங்கொளும் ஆழிகள் திரிந்தன மானுவ
மறங்கெழு சூறைகள் மயங்கின போல்வன
துறுங்கணை மாரிகள் சொரிந்தவர் தேர்களே. ......
226(பாதல மூழ்குவ பாரி)
பாதல மூழ்குவ பாரிடை சூழ்குவ
மாதிர மோடுவ வாரிதி சேர்குவ
பூதர மேவுவ பூமல ரோன்நகர்
மீதினும் ஏகுவ மீளுவ தேர்களே. ......
227(எண்டிசை சூழும்)
எண்டிசை சூழும் இருங்கடல் பாய்வன
விண்டொடு நேமி வியன்கிரி வாவுவ
கொண்டலின் ஆரிருள் கொண்டுழி போகுவ
அண்டமுன் ஏகுவ அங்கவர் ஏறுதேர். ......
228(பெயர்ந்திடு தேருறு)
பெயர்ந்திடு தேருறு பிழம்பவை காணுபு
தியங்கினர் நான்முகர் தெரிந்திலர் சீருரு
மயங்கினர் ஆதவர் மருண்டனர் வானவர்
உயங்கினர் பாருளர் உலைந்தனர் நாகரே. ......
229(முதிர்ந்திடு போரி)
முதிர்ந்திடு போரினர் முழங்கிய தேர்செல
அதிர்ந்தது பாருல கலைந்தன வேலைகள்
பிதிர்ந்தன மால்வரை பிளந்தது வான்முக
டுதிர்ந்தன தாரகை உகுந்தன கார்களே. ......
230வேறு(தேரிவை இரண்டு)
தேரிவை இரண்டு மாகித் திகழுமூ தண்ட மெங்குஞ்
சாரிகை வருத லோடுஞ் சண்முகன் மீது செல்லச்
சூரெனும் அவுணர் கோமான் தொலையுநாள் எழிலி பொங்கி
ஆரழல் மழைகான் றென்ன அடுசர மாரி தூர்த்தான். ......
231(மழுப்படை அநந்த)
மழுப்படை அநந்த கோடி வச்சிரந் திகழ்முச் சென்னிக்
கழுப்படை அநந்த கோடி கப்பணம் அநந்த கோடி
கொழுப்படை அநந்த கோடி குலிசம்வேல் அநந்த கோடி
எழுப்படை அநந்த கோடி இடையிடை இடிபோல் உய்த்தான். ......
232(கூற்றுயிர் குடிக்கு)
கூற்றுயிர் குடிக்குந் துப்பிற் கொடும்படை மாரி தன்னை
ஆற்றலின் அவுணர் கோமான் விடுத்துழி அவற்றை யெல்லாங்
காற்றெனப் பகழி தூண்டி முறைமுறை கடிதிற் சிந்தி
மாற்றினன் திரிந்தான் ஐயன் மூதண்ட வரைப்பு முற்றும். ......
233(இத்திறந் திரிந்த)
இத்திறந் திரிந்த செவ்வேள் இடைதெரிந் தேழொ டேழு
பொத்திரந் தன்னைத் தூண்டிப் புகழுறும் அவுணர் செம்மல்
சித்திரத் தேரும் மாவின் தொகுதியுஞ் சிந்தி நீக்கக்
கைத்தனு வோடுந் தீயோன் கதுமெனப் புவிக்கண் உற்றான். ......
234(நாணுடை வரிவில்)
நாணுடை வரிவில் வாங்கி நண்ணலன் நஞ்சு பில்கும்
ஏணுடை வயிர வாளி எண்ணில தூண்டி ஏற்பத்
தாணுவின் மதலை கண்டு தன்பெருஞ் சிலையைக் கோட்டித்
தூணிகொள் கணையின் மாரி தொடுத்தவை துணித்து விட்டான். ......
235(துணிப்புறும் எல்லை)
துணிப்புறும் எல்லை வல்லே சுடர்க்கணை அநந்த கோடி
தணப்பற விடுத்த லோடுஞ் சண்முகன் அவற்றை யெல்லாங்
கணைப்பெரு மழையால் மாற்றிக் காசிபன் தனது செம்மல்
அணிப்படு தோள்மேற் பின்னும் ஆயிரம் பகழி உய்த்தான். ......
236(ஊழியின் முதல்வன்)
ஊழியின் முதல்வன் மைந்தன் ஒராயிரங் கணையுஞ் சூரன்
பாழியம் புயத்து மீது படுதலுங் கடிதே இற்றுச்
சூழுறச் சிதறிற் றம்மா தொலைவிலா வயிரங் கொண்ட
காழ்கிளர் வரைமேல் வீழ்ந்த கன்மழைத் தன்மை யேபோல். ......
237(அந்தமில் வன்மை சான்ற அவு)
அந்தமில் வன்மை சான்ற அவுணன்மற் றதனை நோக்கி
முந்துறு வெகுளி தூண்ட முறுவலும் உயிர்ப்புந் தோன்ற
எந்தைதன் மொய்ம்பிற் செல்ல இராயிரம் பகழி வாங்கிச்
சிந்தையிற் கடிது தூண்டித் தேவரும் மருள ஆர்த்தான். ......
238(உட்டெளி வுற்றோர்)
உட்டெளி வுற்றோர் காணும் ஒப்பிலா முதல்வன் தோள்மேல்
விட்டிடு பகழி முற்றும் வெந்துவெந் துகள தாகிப்
பட்டன திசைகள் முற்றும் பரந்தன பரத்தின் மேலோன்
கட்டழல் அதனால் மாய்ந்த காமவேள் யாக்கை யேபோல். ......
239(ஆங்கது காலை தன்னில் அறு)
ஆங்கது காலை தன்னில் அறுமுகம் படைத்த ஐயன்
நீங்கரு நெறியால் உய்த்த நெடுஞ்சரம் அனைத்தும் மாற்றிப்
பாங்கமர் வயவர் மீதும் பாரிடப் படைகள் மீதுந்
தீங்கணை அழுத்த லுற்றான் தேவரை இடுக்கண் செய்தான். ......
240(தன்னிணை தானே)
தன்னிணை தானே யாகி நின்றிடுந் தனிவேல் வீரன்
அன்னதோர் தன்மை கண்டோ ராயிரம் பகழி பூட்டித்
துன்னலன் குனித்த சாபந் துணித்தனன் துணியா முன்னம்
பின்னுமோர் சிலையை ஏந்திப் பெருமுகில் இரிய ஆர்த்தான். ......
241(இம்பரின் மலைந்த)
இம்பரின் மலைந்த சூரன் இம்மென வருக்கொண் டேகி
அம்பரத் திடையே தோன்ற அன்னது குமரன் காணா
உம்பரிற் சென்று தாக்க ஓரிறை எதிர்ந்து நின்று
நம்பியொ டாடல் செய்வான் நவிலரும் மாயை சூழ்வான். ......
242(விண்ணிடை நின்ற)
விண்ணிடை நின்ற சூரன் விரைந்துடன் கரந்து சென்று
மண்ணிடை மீட்டுஞ் செல்ல மாநில வரைப்பிற் செவ்வேள்
துண்ணென வந்து வெம்போர் தொடங்கலுந் தோற்ற மாற்றிக்
கண்ணகல் தூய நீத்தக் கனைகடல் நடுவண் ஆனான். ......
243(ஆயிடை முருக வேள்)
ஆயிடை முருக வேள்சென் றடுசமர் இயற்றும் எல்லை
மாயையின் மறைந்து சூரன் மாதிர முடிவில் தோன்ற
ஏயென ஆண்டுஞ் செவ்வேள் ஏகியே நெடும்போர் ஆற்றக்
காய்கனல் உமிழும் வேலான் கரந்துபா தலத்தின் நின்றான். ......
244(ஆறிரு தடந்தோள் வள்ளல்)
ஆறிரு தடந்தோள் வள்ளல் அதுகண்டு பிலத்து ளேகி
மாறமர் இயற்றும் எல்லை வல்லைதன் னுருவ மாற்றி
வீறுள சிமையச் செம்பொன் மேருவின் குவட்டின் நிற்ப
ஏறுடை முதல்வன் மைந்தன் இம்மென அங்கட் சென்றான். ......
245(மேருவின் சிகரம்)
மேருவின் சிகரம் நண்ணி வேலுடைத் தடக்கை வீரன்
பேரமர் இயற்றத் தீயோன் பின்னரும் ஆண்டு நீங்கி
நாரணன் உலகில் தோன்ற நம்பியுந் தொடர்ந்து போந்து
சூரெனும் அவுண னோடு தொல்சமர் ஆற்றி நின்றான். ......
246(ஆற்றிடு கின்ற)
ஆற்றிடு கின்ற காலத் தவுணர்கோன் அண்ட கோள
மேற்றிகழ் வாயில் செல்ல விமலனும் அங்கண் ஏகி
ஏற்றெதிர் மலையா அன்னான் ஏறிய இவுளித் தேரைக்
கூற்றுறழ் பகழி தன்னால் அட்டனன் கொற்றங் கொண்டான். ......
247(கந்துக விசய மான்)
கந்துக விசய மான்தேர் இற்றலுங் கடுங்கோன் மன்னன்
இந்திர ஞாலம் என்னும் எறுழ்மணித் தடந்தேர் தன்னைச்
சிந்தனை செய்த லோடுஞ் சேண்கிளர் செலவிற் றாகி
வந்திட அதன்மேல் ஏறி வல்லைபோர் புரிதல் உற்றான். ......
248(மண்டமர் புரியும்)
மண்டமர் புரியும் எல்லை வள்ளல்தன் பகழி தன்னால்
அண்டம தடைந்த வாயில் அடைத்ததும் அப்பால் உள்ள
தண்டம தெல்லாஞ் செல்லாத் தன்மையுந் தகுவர் கோமான்
கண்டனன் நன்று நன்றென் இறைத்தொழிற் காவ லென்றான். ......
249(இறைத்தொழில்)
இறைத்தொழில் அவுணர் செம்மல் ஏந்துதன் சிலையை வாங்கித்
திறத்தொடும் அநந்த கோடி செஞ்சரந் தூண்டி அண்ட
நெறிப்படு வாயில் பொத்து நெடுங்கணைக் கதவ முற்றும்
அறுத்துநுண் தூளி ஆக்கி அம்பரஞ் சுழல விட்டான். ......
250(காவலன் அண்ட)
காவலன் அண்ட வாயிற் கணைகளின் கபாடம் நீக்கி
மாவொடு களிறுந் தேரும் வயவரும் வரம்பின் றாகி
ஓவரு நெறியின் அப்பால் உற்றதன் தானை தன்னைக்
கூவினன் வருக என்று குவவுத்தோள் கொட்டி ஆர்த்தான். ......
251(ஆர்த்திடு கின்ற)
ஆர்த்திடு கின்ற காலத் தண்டத்தின் அப்பால் நின்ற
தேர்த்தொகை களிற்றின் ஈட்டந் திறல்கெழும் இவுளிப் பந்தி
சூர்த்திடும் அவுண வெள்ளந் துண்ணென ஈண்டை ஏகிப்
போர்த்தொழில் முயன்று செவ்வேள் புடையுறத் தெழித்துச் சூழ்ந்த. ......
252(நீணுதல் விழியின்)
நீணுதல் விழியின் வந்த நிருமலக் கடவுள் தன்னை
ஏணொடும் அண்டத் தப்பால் இருந்திடு தானை சுற்றச்
சேணுறு நெறிக்கண் நின்ற திசைமுகன் முதலாந் தேவர்
காணுத லோடும் உள்ளங் கலங்கிமற் றினைய சொல்வார். ......
253(காலமோ டுலகம்)
காலமோ டுலகம் உண்ணக் கனன்றெழு கரிய தீயின்
கோலமோ அண்டத் தப்பாற் குரைபுனல் நீத்தந் தானோ
ஆலமோ அசனிக் கொண்மூ ஆயிர கோடி சூழ்ந்த
சாலமோ யாதோ என்று தலைபனித் திரியல் போனார். ......
254(ஆயின காலை தன்)
ஆயின காலை தன்னில் அண்டங்கள் தோறும் நின்ற
மாயிருந் தகுவன் தானை வந்துதன் மருங்கு சுற்றிப்
பாய்புனல் முகில்கான் றென்னப் படைத்தொகை வீசி ஆர்ப்பத்
தீயுரு வான செம்மல் சிறிதுதன் நாட்டம் வைத்தான். ......
255(அடலையின் நல)
அடலையின் நலத்தை வீட்டி அரும்பெறல் ஆக்கஞ் சிந்தி
அடலையின் உணர்வின் றாகும் அவுணர்கோன் தானை முற்றும்
அடலையின் நெடுவேல் அண்ணல் அழலெழ விழித்த லோடும்
அடலையின் உருவாய் அண்டத் தொல்லுரு வழித்த மன்னோ. ......
256(முற்படும் அனிக)
முற்படும் அனிக முற்றும் முடிதலும் முடித லின்றி
எற்படும் அண்டத் தப்பால் ஈண்டிய பதாகி னிக்குள்
பிற்பட அளப்பில் சேனை பெயர்ந்துமற் றீண்டை துன்னிச்
சிற்பரன் குமரன் தன்பாற் படைமுறை சிதறிச் சூழ்ந்த. ......
257(பரப்பொடு மிடைந்த)
பரப்பொடு மிடைந்த தானைப் பரவையை நோக்கி ஐயன்
நெருப்புமிழ் தன்மைத் தென்ன நெட்டுயிர்ப் பனில முந்தி
உரப்பினன் சிறிதே அற்றால் உம்பரில் குவிந்த பூளைப்
பொருப்பிடை அழல்புக் கென்னப் பூழியாய் உலகம் போர்த்த. ......
258(மாட்சியின் உலவு)
மாட்சியின் உலவு சேனை வடிவெலாம் விடுத்துத் தொல்லை
மாட்சியின் உயிரே தாங்கி மலைதுமென் றுன்னிப் பின்னுஞ்
சூட்சியின் வளைந்த வாபோற் சோதிவேற் குமரன் தன்பாற்
சூட்சியின் மேவிற் றம்மா தூயநுண் துகளின் ஈட்டம். ......
259(அந்தமில் தானை)
அந்தமில் தானை முற்றும் அத்தன்ஓர் உங்கா ரத்தால்
வெந்துக ளாகப் பின்னும் மேலையண் டத்துள் நின்ற
தந்தியும் பரியுந் தேருந் தானவப் படையும் ஆர்த்து
வந்துவந் தயலிற் சூழ வரம்பிலா முதல்வன் கண்டான். ......
260(திருத்தமிழ் மதுரை)
திருத்தமிழ் மதுரை தன்னிற் சிவன்பொருள் நிறுக்கு மாற்றால்
உருத்திர சரும னாகி உற்றிடு நிமலன் வெம்போர்
அருத்திகொள் கணிச்சி சூலம் ஆழிதண் டெழுவ தாகுங்
கரத்தினிற் படைகள் தம்மை நோக்கியே கழற லுற்றான். ......
261(வென்றியம் படை)
வென்றியம் படைகாள் கேண்மோ விரைந்துடன் தழுவி நம்பாற்
சென்றிடும் அனிகந் தன்னைச் சென்னெறி பெறாமல் அப்பால்
நின்றிடு படையை எல்லாம் நீவிர்பல் லுருக்கொண் டேகிக்
கொன்றிவண் வருதி ரென்று கூறிமற் றிவற்றைத் தொட்டான். ......
262(ஆதிநா யகன்விட்)
ஆதிநா யகன்விட் டுள்ள படையெலாம் அநந்த கோடி
சோதியார் கதிருந் தீயும் பணிகளும் போலத் தோன்றி
ஏதிலான் அனிக மாகி இம்பருற் றனவி மைப்பின்
பாதியின் முன்னம் அட்டுப் பெருவிறல் படைத்த மன்னோ. ......
263(தூயதோர் குமரற்)
தூயதோர் குமரற் சூழ்ந்த படையைமுன் தொலைத்து வீட்டி
ஏயின படையோ ரைந்தும் இம்பரே ஒழிய நின்ற
ஆயிரத் தோரேழ் அண்டத் தகலமுஞ் சென்று சென்றாங்
கோய்வற எழுந்த தானை முழுதுமட் டுலவு கின்ற. ......
264(ஐவகைப் படைகள்)
ஐவகைப் படைகள் முற்றும் அண்டங்கள் தோறும் நின்ற
வெவ்விய அவுணர்த் தேய்த்து விரைவொடு திரித லோடுந்
தெவ்வியல் அவுணர் மன்னன் செயிர்த்துமற் றிதனை நோக்கி
இவ்வொரு கணத்தின் முன்னம் இவனுயிர் உண்பன் என்றான். ......
265(சாற்றியித் தன்மை)
சாற்றியித் தன்மை தன்னைத் தானவர்க் கரசன் முன்னங்
கூற்றுயிர் குடித்த நோன்றாட் பண்ணவன் கொடுப்பக் கொண்ட
மாற்றருந் திகிரி தன்னை வாங்கினன் வழிபட் டேத்திக்
காற்றினுங் கடிது செல்லக் கந்தவேள் மீது விட்டான். ......
266(விட்டிடு திகிரி)
விட்டிடு திகிரி யாரும் வெருக்கொள விரைந்து சென்று
கிட்டிய காலைச் செவ்வேள் கிளர்ந்ததோர் பாணி நீட்டி
வட்டணை நேமி தன்னை வருதியால் என்று பற்ற
ஒட்டலன் அதனை நோக்கி உளந்தளர்ந் துயிர்த்து நின்றான். ......
267(உண்ணிலா மாயை)
உண்ணிலா மாயை வல்ல ஒருதனித் தேர்மேல் நின்றோன்
எண்ணிலா உருவங் கொண்டே இருங்கணை மாரி தூர்ப்பத்
தெண்ணிலா மௌலி அண்ணல் உதவிய செம்மல் நோக்கி
நண்ணலான் ஒருவன் மாய நன்றுநன் றென்று நக்கான். ......
268(சிறுநகை செய்து)
சிறுநகை செய்து மேலாஞ் சேதனப் பகழி பூட்டி
அறுமுகன் அவுணர் செம்மல் ஆற்றிடு மாய முற்றும்
இறைதனில் முடித்தி யென்றே ஏவலும் விரைவின் ஏகி
முறைநெறி பிழைத்தோன் மாயம் முற்றொருங் கட்ட தன்றே. ......
269(மாயையின் உருவ)
மாயையின் உருவ நீங்க வலியழிந் துள்ளம் மாழ்கித்
தீயவன் ஒருவ னாகிச் சேணுயர் தேரின் நின்றான்
ஆயது தெரிந்து வானோர் அறுமுகத் தவனைப் போற்றிப்
பாய்புனற் கடலின் ஆர்த்துப் பனிமலர் மாரி தூர்த்தார். ......
270(தூர்த்தலுந் தேரு)
தூர்த்தலுந் தேருந் தானுந் துண்ணெனக் கரந்து சூரன்
பேர்த்திடு மண்ட கூடப் பித்திகை வாயி லெய்தி
ஆர்த்தறை கூவிப் புக்காங் கப்புறத் தண்டஞ் செல்லத்
தீர்த்தனும் அதனை நோக்கித் தீயனைத் தொடர்ந்து போனான். ......
271(தொடர்ந்துதன்)
தொடர்ந்துதன் மனத்திற் செல்லுந் தொல்லைமால் இரதத் தோடுங்
கடந்தபேர் ஆடல் மிக்க காசிபன் தனயன் நின்ற
இடந்தலைப் படலும் அன்னான் எந்தையோ டிகற்போ ராற்றி
அடுந்திறல் மாயை நீரால் அப்புறத் தண்டம் போனான். ......
272(இந்நிலை அவுணர்)
இந்நிலை அவுணர் கோமான் இருநிலத் தண்ட முற்றும்
மின்னெனப் படர்ந்து தோன்றி வெய்யபோர் விளைத்து நின்று
பின்னருங் கரந்து செல்லப் பிரானும்அவ் வண்டந் தோறுந்
துன்னலன் தனைவி டாது தொடர்ந்தமர் இயற்றிப் போனான். ......
273வேறு(ஆய காலை அயன்)
ஆய காலை அயன்முதல் தேவர்கள்
நேய மிக்க குரவரை நீங்கிய
சேயி னோர்களில் தேம்பித் திருமகள்
நாய கன்றனை நோக்கி நவிலுவார். ......
274(வலங்கை வாளுடை)
வலங்கை வாளுடை மாயைதன் மாமகன்
பொலன்கொள் அண்டப் புரைதனுட் போயினான்
இலங்கு வேற்படை யெந்தைதன் போரிடை
விலங்கி னானலன் என்றும் விளிகிலான். ......
275(மாயை ஆற்றவும்)
மாயை ஆற்றவும் வல்லவன் ஈண்டொரீஇப்
போய தன்மை புணர்ச்சிய தேயலால்
ஆயின் வேறிலை ஆறிரு மொய்ம்புடைத்
தூயன் மற்றது சூழ்ந்திலன் போலுமால். ......
276(வாடி னானென)
வாடி னானென மாற்றல னைத்தொடர்ந்
தோடி னான்எந்தை ஒல்லையிற் சூரனைக்
கூடி னான்கொல் குறுகல னாகியே
நாடி னான்கொல் அறிகிலம் நாமெலாம். ......
277(மாக மேல்நிமிர் மற்றை)
மாக மேல்நிமிர் மற்றையண் டத்தினுஞ்
சேகு லாவிய சிந்தையன் தன்னுடன்
ஏகி னான்ஐயன் என்னினித் தான்விளை
வாகு மோவென்றும் அஞ்சுதும் ஏழையேம். ......
278(என்ற காலையில் அங்கெ)
என்ற காலையில் அங்கெழிற் பூவைபோல்
நின்ற மாயவன் நீள்மல ரோன்முதல்
துன்றும் வானவர் சூழலை நோக்கியே
ஒன்றும் அன்பொ டுளப்பட ஓதுவான். ......
279வேறு(வஞ்ச மேதகும்)
வஞ்ச மேதகும் அவுணர்கோன் ஆற்றலை மதித்தீண்
டஞ்சி அஞ்சியே இரங்கலிர் அறுமுகத் தொருவன்
செஞ்சி லைத்தனி வன்மையும் வீரமுந் தெரிந்து
நெஞ்ச கத்திடை ஐயுறு கின்றது நெறியோ. ......
280(ஓதி யாகியும் உணர்)
ஓதி யாகியும் உணர்ந்தவர்க் குணரவும் ஒண்ணா
நீதி யாகியும் நிமலம தாகியே நிகழுஞ்
சோதி யாகியுந் தொழுதிடும் எம்மனோர்க் கெல்லாம்
ஆதி யாகியும் நின்றவன் அறுமுகன் அன்றோ. ......
281(ஈறி லாதமர் பரம)
ஈறி லாதமர் பரமனே குழவியின் இயல்பாய்
ஆறு மாமுகங் கொண்டுதித் தானென்ப தல்லால்
வேறு செப்புதற் கியையுமோ மேலவன் தன்மை
தேறி யுந்தெளி கின்றில உமதுசிந் தையுமே. ......
282(ஐயம் எய்தலிர் ஆயி)
ஐயம் எய்தலிர் ஆயிர கோடி அண்டத்தும்
வெய்ய னேகினுந் தொடர்ந்துபோய் வெஞ்சமர் இயற்றிச்
செய்ய வேலவன் துரந்துவந் திடுந்தினைத் துணையில்
கையின் நெல்லிபோற் காட்டுவன் நீவிருங் காண்டீர். ......
283(என்று மாயவன் கழ)
என்று மாயவன் கழறலும் அயன்முதல் எவரும்
நன்றெ னத்தெளி வுற்றனர் அவ்வழி நண்ணான்
ஒன்றின் ஆயிர கோடியண் டத்தினும் ஓடி
நின்று நின்றமர் ஆடினன் எந்தையை நேர்ந்து. ......
284(வெந்தி றற்சமர் ஆற்)
வெந்தி றற்சமர் ஆற்றியே அவுணர்கோன் மீட்டும்
இந்த வண்டத்து மகேந்திர வரைப்பில்வந் திறுத்தான்
முந்து நீழலை விடாதுசெல் வோரென முனிந்து
கந்த னுந்தொடர்ந் தவனொடு போந்தனன் கடிது. ......
285வேறு(போந்திடு தன்மை)
போந்திடு தன்மை நோக்கிப் புராரிதன் புதல்வன் நங்கள்
ஏந்தலைத் தொடர்ந்தான் என்னா இம்பரில் அவுணர் தானை
தீந்தழ லென்னப் பொங்கிச் செங்கையிற் படைகள் வீசி
ஆய்ந்திடும் உணர்வின் மேலாம் ஆதிதன் புடைசூழ்ந் தார்த்தார். ......
286(நாதனும் அதனை)
நாதனும் அதனை நோக்கி நன்றிவர் முயற்சி யென்னா
ஓதினன் முறுவல் செய்ய ஒன்னலன் தானை தொன்னாள்
மூதெயில் என்ன நீறாய் வெந்துடன் முடிந்த தம்மா
தாதைதன் செய்கை மைந்தன் செய்வது தக்க தன்றோ. ......
287(ஆனதோர் காலை தன்)
ஆனதோர் காலை தன்னில் அறுமுகம் படைத்த அண்ணல்
தூநகை அங்கி செல்லத் துண்ணெனப் பதைத்து வீழ்ந்து
தானவர் அனிகம் வெந்த சாம்பரின் குன்றை நோக்கி
வானவர் மகிழ்ந்து பூத்தூய் வள்ளலை வழுத்தி நின்றார். ......
288(முருகவிழ் தொடை)
முருகவிழ் தொடைய லான்றன் முறுவலான் அனிக முற்றும்
விரைவின்நுண் துகளதாகி வீழ்தலும் அவுணர் வேந்தன்
ஒருவனுந் தமியன் நின்றான் ஒண்டமிழ் முனிவன் உண்ணத்
திரைகட லின்றித் தோன்றுந் தீப்பெருங் கடவுள் ஒத்தான். ......
289(முன்படை குமரன்)
முன்படை குமரன் அங்கண் முறுவலித் திட்ட வாறும்
தன்படை அழிந்த வாறும் தமியன்றான் நின்ற வாறும்
கொன்படை வீர ரோடு குறட்படை ஆர்க்கு மாறும்
துன்படை அவுணன் கண்டாங் குளத்தொடுஞ் சொல்ல லுற்றான். ......
290(பின்னுறு துணை)
பின்னுறு துணைவர் மைந்தர் பேரியல் அமைச்சர் ஏனோர்
முன்னுற முடிந்தார் இன்று முடிவுறாத் தானை முற்றும்
பன்னிரு கரத்து மைந்தன் படுத்தனன் தமிய னானேன்
என்னிவண் செய்வ தென்னா உயிர்த்தனன் எண்ண மிக்கான். ......
291(மாயவள் தன்னை)
மாயவள் தன்னை மன்னன் மனத்திடை நினைத்த லோடும்
ஆயவள் வந்து தோன்றி அரும்பெறல் ஆற்றல் மைந்த
நீயொரு தமிய னாகி நின்றுளந் தளர்ந்தே என்னைக்
கூயினை முன்னிற் றென்னை தெரிவுறக் கூறு கென்றாள். ......
292(அறிந்திடு மாயை)
அறிந்திடு மாயை இவ்வா றறைதலுங் குமரன் போரின்
மறந்தகு துணைவர் மைந்தர் மந்திரி தானை முற்றும்
இறந்திட எஞ்சி னேன்யா னியாவரும் எழுதற் கொத்த
திறந்தனை அருண்மோ என்ன நகைத்தவள் செப்ப லுற்றாள். ......
293(உறுபடை சுற்ற)
உறுபடை சுற்றந் துஞ்ச ஒருவனே யாயும் விண்ணோர்
சிறைவிடுத் துய்யு மாறு சிந்தனை செய்தி லாய்நீ
அறுமுகன் தன்னோ டின்னும் அமர்செயக் குறித்தி யாயின்
நிறைபெருஞ் செல்வ வாழ்க்கை நீங்கினை போலும் அன்றே. ......
294(பன்னிரு தடந்தோள் கொண்ட)
பன்னிரு தடந்தோள் கொண்ட பகவனைப் பாலன் என்றே
உன்னலை அவன்கை வேலால் ஒல்லையிற் படுதி கண்டாய்
இன்னுயிர் துறக்க நின்றாய் என்மொழி கேட்பாய் அன்றே
சென்னியில் விதியை யாவ ராயினுந் தீர்ந்தார் உண்டோ. ......
295(நின்றிட அனைய)
நின்றிட அனைய தன்மை நின்னுளம் மகிழு மாற்றால்
பொன்றினர் எழுதல் வேண்டில் புறக்கடற் கொருசா ராக
மன்றல்கொள் அமுத சீத மந்தர கூடம் என்றோர்
குன்றுள ததனை ஈண்டே கொணருதி கூடும் என்றாள். ......
296(இவ்வகை உரைத்து)
இவ்வகை உரைத்து மாயை ஏகினள் ஏக லோடும்
மைவரை யென்ன நின்ற மன்னவர் மன்னன் கேளா
அவ்வைதன் சூழ்ச்சி நன்றால் அடுகளத் தவிந்தோர் யாரும்
உய்வகை இதுவே என்னா உன்னினன் உவகை மிக்கான். ......
297(ஆவகை உவகை)
ஆவகை உவகை கொள்ளா அமுதமந் தரங்கொண் டேக
ஏவரை விடுத்தும் என்றே இறைப்பொழு தவுணர் தங்கள்
காவலன் முன்னி மாயக் கடுமுரண் தேரின் நீங்கித்
தேவியல் அரிமான் ஏற்றுத் திறலுடை எருத்தம் புக்கான். ......
298(இந்திர ஞாலந் தன்)
இந்திர ஞாலந் தன்னை இறையவன் விளித்து நீயென்
புந்தியின் விரைந்து சென்று புறக்கடல் மருங்கின் மேவி
அந்தம தடைந்தோர்க் காவி அளித்திடும் அமுதங் கொண்ட
மந்தர கிரியைக் கீண்டு மற்றிவண் கொணர்தி யென்றான். ......
299(விழுமிய மாய மான்)
விழுமிய மாய மான்தேர் வினவியோர் கணத்தின் முன்னம்
எழுகட லினுக்கும் அப்பால் இருந்திடு கடலின் சார்போய்
அழிவுறா தங்கண் நின்ற அமுதமந் தரத்தைக் கொண்டு
வழிபடர் கதியின் மீண்டு மகேந்திரம் புக்க தன்றே. ......
300வேறு(அக்காலையில் இரத)
அக்காலையில் இரதந்தரும் அமுதத்தனி வரையின்
மெய்க்கால்வர அந்நாள்வரை வெம்பூசல் இயற்றி
மைக்காலன்மெய் யுயிருண்டிட மறியும்படை முழுதும்
தொக்காலம தெழுந்தாலெனத் துண்ணென் றெழுந்தனவே. ......
301(பரியின்தொகை)
பரியின்தொகை முழுதுய்ந்தன பனைபோலிய நெடுங்கைக்
கரியின்தொகை முழுதுய்ந்தன கடுந்தேர்த்தொகை ஈர்க்கும்
அரியின்தொகை முழுதுய்ந்தன அவுணப்படை யாகி
விரியுந்தொகை முழுதுய்ந்தன மெய்யூறது நீங்கி. ......
302(வடிவற்றுடல் அழி)
வடிவற்றுடல் அழிந்திட்டிடும் உயிரானவும் மருமம்
அடிகைத்தலம் முடிதோள்முதல் அங்கங்கள் குறைந்தே
முடிவுற்றிடும் உயிரானவும் முளரிக்கனல் உண்ணப்
பொடிபட்டிடும் உயிரானவும் எழுந்திட்டன புவிமேல். ......
303(மிண்டிக்கடி துயிர்)
மிண்டிக்கடி துயிர்பெற்றெழு வெஞ்சூர்முதல் அனிகம்
எண்டிக்கொடு புவிபாதலம் இருநாற்கடல் எங்கும்
மண்டிக்கக னத்தேழ்வகை உலகங்களும் மல்கி
அண்டத்தனி முடிகாறும் அடைந்திட்டன மிடைந்தே. ......
304(மாதண்டம்எ ழுத்)
மாதண்டம்எ ழுத்தோமரம் வயிரப்படை வாள்கோல்
கோதண்டமு தற்பல்படை கொடுதானவர் அனிகம்
வேதண்டமெ னச்சேணுயர் வேழம்பரி நிரைகள்
மூதண்டம்வெ டிக்கும்படி முழங்குற்றன அன்றே. ......
305(எழுந்தான்வயப் புலி)
எழுந்தான்வயப் புலிமாமுகன் இரவிப்பகை எழுந்தான்
எழுந்தான்எரி முகவெய்யவன் இளமைந்தனும் எழுந்தான்
எழுந்தான்அறத் தினைக்காய்பவன் இருபாலரும் எழுந்தார்
எழுந்தார்ஒரு மூவாயிரர் ஏனோர்களும் எழுந்தார். ......
306(சூர்க்கின்றதொல் வடி)
சூர்க்கின்றதொல் வடிவங்கொடு துண்ணென்றெழு கின்றோர்
பார்க்கின்றனர் அனிகங்களைப் பகுவாய்திறந் திடிபோல்
ஆர்க்கின்றனர் தமதாடலை அறைகின்றனர் நம்மேல்
போர்க்கின்றுவந் தனர்யாரெனப் புகல்கின்றனர் இகலால். ......
307(ஈடுற்றிடு சமரெல்லை)
ஈடுற்றிடு சமரெல்லையில் இடையுற்றிடு படைகள்
நாடுற்றிவண் எடுத்திட்டனர் நறையுற்றிடு தும்பை
சூடுற்றிடு மணிமாமுடிச் சூரன்புடை தன்னில்
கூடுற்றனர் வெம்போர்செயுங் குறிப்புற்றனர் அன்றே. ......
308வேறு(உய்ந்திவர் யாவரும்)
உய்ந்திவர் யாவரும் ஒல்லை எழுந்தே
அந்தமில் சேனையொ டார்த்திடு காலை
இந்திர ஞாலம் எனப்படு மான்தேர்
வந்தது தானவர் மன்னவன் முன்னம். ......
309(பொற்றையி னோடு)
பொற்றையி னோடு பொலன்கெழு மான்தேர்
உற்றதும் அன்பினர் உய்ந்தெழு மாறும்
இற்றப தாதி இரைத்தெழு மாறுந்
தெற்றென மாயவள் செம்மல் தெரிந்தான். ......
310(மகிழ்ந்தனன் ஆர்த்த)
மகிழ்ந்தனன் ஆர்த்தனன் வானவர் தம்மை
இகழ்ந்தனன் விம்மிதம் எய்தினன் யாயைப்
புகழ்ந்தனன் மேனி பொடித்தனன் நெஞ்சந்
திகழ்ந்தனன் நன்னகை செய்தனன் அன்றே. ......
311(உந்திநி ரப்புறும் உண்)
உந்திநி ரப்புறும் உண்டிய தின்றி
முந்திநி ரப்பிடை மூழ்கினன் வல்லே
வெந்திறல் ஆளி வியன்றவி சேறி
இந்திர நல்வளம் எய்திய தொத்தான். ......
312(ஓங்கிய சென்னி உயர்)
ஓங்கிய சென்னி உயர்ந்தன மொய்ம்பு
வீங்கிய தாலுடன் மிக்கு மதர்ப்புத்
தேங்கிய சிந்தை சிலிர்த்த உரோமம்
ஆங்கவன் எய்திய தாரறை கிற்பார். ......
313(வஞ்சன் இதந்திடு)
வஞ்சன் இதந்திடு மைந்தன்இவ் வாற்றால்
நெஞ்ச மகிழ்ந்தவண் நின்றிடு காலை
நஞ்சம் எழுந்திடு நாள்கொலி தென்றே
அஞ்சி நடுங்கினர் அண்டர்கள் எல்லாம். ......
314(பொன்னகர் வாழ்க்கை)
பொன்னகர் வாழ்க்கை புவித்திசை வாழ்க்கை
பின்னுறு கின்ற பெரும்பத வாழ்க்கை
எந்நகர் வாழ்க்கையும் எய்திய இன்னே
ஒன்னலர் கொல்லுமுன் ஓடுதும் என்றார். ......
315(ஊர்ந்திடும் ஊர்திகள்)
ஊர்ந்திடும் ஊர்திகள் ஓர்புடை தம்பாற்
சார்ந்தவர் ஓர்புடை தாமொரு பாலாய்ச்
சேர்ந்திடு கைப்படை சிந்திவிண் ணோர்கள்
பேர்ந்திரி கின்றனர் பின்னது நோக்கார். ......
316(கிள்ளை புறாமயில்)
கிள்ளை புறாமயில் கேழ்கிளர் அன்னம்
பிள்ளை மணிக்குயில் பேரிசை ஆந்தை
கள்ளுணும் வண்டு கரண்டம தாதிப்
புள்ளுரு வங்கொடு வானவர் போனார். ......
317(அங்கது நோக்கி அட)
அங்கது நோக்கி அடற்கண வீரர்
மங்கிய தானையும் மாண்டுளர் யாரும்
இங்கெழு கின்றனர் யாமிவண் வீந்தாஞ்
சங்கையி லென்று தளர்ந்தலை வுற்றார். ......
318(இலக்கரும் எண்மரும்)
இலக்கரும் எண்மரும் ஏந்தலும் நோக்கி
அலக்கணும் அச்சமும் அற்புத நீருங்
கலக்கமும் வெய்ய கடுஞ்சின முங்கொண்
டுலைக்கனல் அன்ன உயிர்ப்பொடு நின்றார். ......
319வேறு(வென்றி கொண்ட)
வென்றி கொண்டவேற் குமரன்இவ் விளைவெலாம் நோக்கி
நின்ற ஒன்னலன் சூழ்ச்சியும் வலவைசொல் நெறியுங்
குன்றின் வன்மையும் உய்ந்தெழு பரிசனர் குழுவும்
நன்று நன்றெனக் கையெறிந் தழலெழ நகைத்தான். ......
320(ஆன காலையில் அரிமுகன்)
ஆன காலையில் அரிமுகன் அலரிதன் பகைஞன்
ஏனை மைந்தர்கள் அறத்தினை வெகுண்டிடும் ஏந்தல்
சேனை காவலர் யாவருஞ் சூரன்முன் சென்று
மான வீரமோ டிறைஞ்சிநின் றினையன வகுப்பார். ......
321(எந்தை நீயிவண்)
எந்தை நீயிவண் நிற்குதி யாமெலாம் ஏகிக்
கந்த வேளுடன் அவன்படை வீரரைக் கடிந்து
சிந்த ராகிய பூதர்தந் தொகையையுஞ் செகுத்து
வந்து நின்னடி வணங்குதும் வல்விரைந் தென்றார். ......
322(கொற்ற வீரர்கள்)
கொற்ற வீரர்கள் இவ்வகை உரைத்தலுங் கொடியோன்
மற்றிவ் வாசகம் நன்றெனைப் போற்றுவான் வந்தீர்
பற்ற லன்பெரு வன்மையும் வீரமும் படுத்து
வெற்றி இன்றெனக் கருளுதி ராலென விடுத்தான். ......
323(விடுத்த காலையில் விடா)
விடுத்த காலையில் விடாதுசூழ் அனிகங்கள் விரவி
அடுத்து வந்திடப் பொள்ளென ஏகியே ஆர்த்துப்
பிடித்த பல்வகைப் படைகளும் உருமெனப் பெய்து
வடித்த வேற்படை நம்பியை அன்னவர் வளைத்தார். ......
324(தீங்க னற்பெருங்)
தீங்க னற்பெருங் கடவுள்பாற் செறியிருட் டொகைபோல்
வாங்கு விற்கரத் தையனை அவுணர்கள் வளைப்ப
ஏங்கல் உற்றனர் பாரிடர் ஏனையோர் எம்மால்
தாங்கு தற்கரி திப்பெரும் படையெனத் தளர்ந்தார். ......
325(விறலு டைப்பஃ றா)
விறலு டைப்பஃ றானையும் வெய்யவர் தொகையும்
நொறிலு டைக்கதி கொண்டுசூழ் வுற்றது நோக்கி
அறுமு கத்தனிப் பண்ணவன் உயிர்த்தொகை அனைத்தும்
இறுதி யைப்புரி கடவுள்மாப் படையினை எடுத்தான். ......
326(அங்கை யிற்கொடு)
அங்கை யிற்கொடு சிந்தையால் வழிபடல் ஆற்றிச்
சிங்க மாமுகன் ஆதியாம் அவுணர்தந் திறத்தைச்
சங்கை இன்றியே நின்றிடு தானைகள் தம்மை
இங்கு வல்லையில் அடுதியால் எனவிடுத் திட்டான். ......
327(விடுத்த காலையில் கட்)
விடுத்த காலையில் கட்செவி நிரைகளும் விடமும்
இடிக்கு ழாங்களும் உருத்திரர் உருக்களும் எரியுங்
கடற்பெ ருங்கணத் தொகுதியும் அளவிலாக் கடவுட்
படைக்க லங்களு மாய்விரிந் ததுசிவன் படையே. ......
328(இன்ன தன்மையால்)
இன்ன தன்மையால் அரன்படை மூதண்டம் எங்குந்
துன்னி யார்த்தெழீஇத் துண்ணெனச் சென்றுசூழ் வுற்று
முன்னர் உய்ந்தெழும் அவுணர்தம் படையெலாம் முருக்கி
ஒன்ன லன்தமர் யாரையும் ஒருங்குகொன் றதுவே. ......
329(முந்து வெய்யசூர்ப்)
முந்து வெய்யசூர்ப் பரிசனத் தொகையெலாம் முருக்கி
இந்தி ரப்பெரு ஞாலமாந் தேர்மிசை இருந்த
மந்த ரப்பெருங் கிரியினைத் துகளெழ மாய்த்துக்
கந்த வேள்படை மீண்டது சிவன்படைக் கலமே. ......
330(அரிமு கத்தவன்)
அரிமு கத்தவன் ஆதவன் தனைமுனம் அழன்றோன்
எரிமு கத்தவன் வச்சிர மொய்ம்பன்நூற் றிருவர்
முரண்மி குத்தமூ வாயிரர் அறப்பகை முதலோர்
விரிக டற்படை வெற்பொடு முடிந்தவண் வீழ்ந்தார். ......
331(தன்மை அங்கவை)
தன்மை அங்கவை யாவையுங் கண்டனன் தளர்ந்தான்
வன்மை நீங்கினன் கவன்றனன் இரங்கிமெய் மறந்தான்
புன்மை யாயினன் உயிர்த்தனன் செயிர்த்தனன் புலர்ந்தான்
தொன்மை போலவே தமித்தனன் துணையிலாச் சூரன். ......
332(கண்ட கன்படை)
கண்ட கன்படை முற்றொருங் கிறந்தது காணா
எண்டொ கைப்படு பூதரும் ஏனைவீ ரர்களும்
முண்ட கந்தனில் இருந்திடு புங்கவன் முதலாம்
அண்டர் யாவருந் துயரொரீஇ உவகைபெற் றார்த்தார். ......
333(அழுந்தும் ஆரிருள்)
அழுந்தும் ஆரிருள் ஒருவிவிண் மிசைதனில் அடைவோர்
கழிந்த தோரிடை ஊற்றினான் மீட்டும்அக் கதியில்
விழுந்த தேயெனத் துன்பொடு நின்றனன் விளிவுற்
றெழுந்த தானையை இழந்திடும் அவுணருக் கிறைவன். ......
334(அனைய தன்மையின்)
அனைய தன்மையின் நின்றிடும் அவுணர்கோன் ஆற்றச்
சினம தெய்தியென் படையெலாஞ் சிதைத்தபா லனையுந்
தனிமை செய்துபின் வெல்வனென் றுளங்கொடு தழற்கண்
முனைவன் நல்கிய தேரினை நோக்கியே மொழிவான். ......
335(கொச்ச கத்தியற்)
கொச்ச கத்தியற் குதலைவாய் மதலைபாற் குழீஇய
வச்சி ரத்தெயி றுடையவெம் பூதரை வயின்சூழ்
கைச்சி லைத்திறல் வீரரைக் கவர்ந்துபோய் அண்டத்
துச்சி யிற்கொடு வைத்தனை இருத்தியென் றுரைத்தான். ......
336(உரைத்த காலை)
உரைத்த காலையில் நன்றென வினவியே ஓடித்
திருத்த குந்திறல் வாகுவை முதலினோர் திறத்தைக்
கிருத்தி மப்பெருந் தானையைக் கிளையொடும் வாரிக்
கருத்தை மாமயல் செய்தது கைதவன் கடுந்தேர். ......
337(கையர் தன்மை)
கையர் தன்மையிற் கடற்படை முழுவதுங் கவர்ந்து
மையல் சிந்தையிற் செய்துதன் வயினிடைத் தாங்கி
ஒய்யெ னச்சென்று மூதண்ட கோளகை யுழிப்போய்
வெய்ய வன்பணி ஆற்றிஆண் டிருந்தது வியன்தேர். ......
338(நிமலன் அவ்வழி)
நிமலன் அவ்வழித் தானையம் பெருங்கடல் நீங்கத்
தமியன் நின்றனன் ஆங்கது தகுவர்கோன் காணா
நமது தேர்வலி நன்றென உவகையால் நகைத்தான்
அமரர் அச்செயல் நோக்கியே பின்னரும் அயர்ந்தார். ......
339(சூரி டத்துறு சூழ்)
சூரி டத்துறு சூழ்ச்சியுந் துணைவர்கள் தம்மைப்
பாரி டத்தொடு முகந்தெழீஇ மாயையிற் படர்ந்த
தேரி டத்தியல் வன்மையும் ஆங்ஙனந் தெரிந்தான்
நேரி டப்பிறர் இன்றியே தமியனாம் நெடியோன். ......
340(கண்டு சீறியோர்)
கண்டு சீறியோர் கார்முகம் வாங்கியே கடிதோர்
திண்டி றற்கணை பூட்டிநஞ் சேனையைப் பற்றி
அண்ட கோளகை புக்குறும் அடுமுரண் தேரைக்
கொண்டு வல்லையின் வருகென விடுத்தனன் குமரன். ......
341(விடுந்த னிக்கணை)
விடுந்த னிக்கணை வேலெனச் சென்றுவில் வீசி
இடந்தி கழ்ந்திடும் ஏழ்வகை உலகமும் இமைப்பில்
கடந்து மற்றுள பதங்களும் நீங்கியோர் கணத்தில்
தொடர்ந்து மூதண்ட கோளகை புகுந்தது துன்னி. ......
342(துன்னி வெஞ்சரம்)
துன்னி வெஞ்சரம் மாயமான் தேர்வலி தொலைச்சி
அன்ன தைக்கொணர்ந் தொல்லையின் மீண்டுள தம்மா
மின்னு லாய்நிமிர் எழிலியை விண்ணினும் பற்றி
இந்நி லத்தினிற் கொடுவரும் மாருதத் தியல்போல். ......
343வேறு(வெந்திறல் நெடு)
வெந்திறல் நெடுங்கணை மீண்டு ஞாலமேல்
இந்திர ஞாலமாம் இரதத் தைக்கொடு
கொந்தவிழ் மாலைவேற் குமரன் தன்முனம்
வந்தது வானவர் வழுத்தி ஆர்ப்பவே. ......
344(முப்புரம் முடித்தவன்)
முப்புரம் முடித்தவன் முருகன் தன்கணை
இப்புவி வருதலும் இலக்கத் தெண்மரும்
ஒப்பரும் இளவலும் ஒல்லென் பூதருங்
குப்புறல் உற்றனர் கொடியன் தேரினும். ......
345(குதித்தனர் புடவியில்)
குதித்தனர் புடவியில் குமர வேள்இரு
பதத்திரு மலர்தனைப் பணிந்து பன்முறை
துதித்தனர் புடையராய்த் துன்னி நின்றனர்
கதித்திடு பேரருட் கடலின் மூழ்கியே. ......
346(ஆவதோர் காலையில் அகி)
ஆவதோர் காலையில் அகிலம் யாவுமாம்
மூவிரு முகனுடை முக்க ணான்மகன்
வாவியல் வனப்புடை மாயத் தேர்தெரீஇத்
தேவர்கள் பரசுற இனைய செப்புவான். ......
347(தொல்லையில் வரம்)
தொல்லையில் வரம்பெறு சூரன் தன்புடை
செல்லலை ஆங்கவன் முடிகை திண்ணமால்
மல்லலந் திருவுடை மாயத் தேரைநீ
நில்லிவண் என்றனன் நிகரில் ஆணையான். ......
348(ஆண்டது வினவுறா)
ஆண்டது வினவுறா அவுணர் கோன்புடை
மீண்டிடல் அஞ்சியே மேலை வன்மைபோய்
மாண்டிடல் பிறப்பிலான் மதலை மாடுறப்
பாண்டிலந் தேரது பணியின் நின்றதே. ......
349(அண்டம தடைந்ததேர்)
அண்டம தடைந்ததேர் ஐயன் வாளியால்
மண்டலம் இழிந்து தன்மருங் குறாததும்
எண்டகு பூதரும் யாரும் மீண்டதுங்
கண்டனன் அவுணர்கோன் கனலிற் சீறினான். ......
350(அன்னது காண்டலும்)
அன்னது காண்டலும் அவுணன் ஆங்கொரு
கொன்னெடுஞ் சிலையினைக் குனித்து வல்லையிற்
பன்னிரு கரமுடைப் பண்ண வன்மிசை
மின்னிகர் பகழிகள் மீட்டும் வீசினான். ......
351(மாசறு கங்கைதன்)
மாசறு கங்கைதன் மதலை அவ்வழிக்
காய்சினங் கொண்டொரு கார்மு கம்வளைஇ
ஆசுக மாரிபெய் தவுணர் கோமகன்
வீசிய கணையெலாம் விலக்கி னானரோ. ......
352(கையனும் அத்துணை)
கையனும் அத்துணை காய்சி னங்கொளீஇ
ஒய்யென எந்தைதேர் உய்க்கும் வன்மையோன்
மெய்யிடம் எங்கணும் வெளியு றாவகை
செய்யன பகழிகள் செறித்துப் போர்செய்தான். ......
353(பொருந்தலன் கணை)
பொருந்தலன் கணைபடப் புலம்பிக் காற்றினோன்
வருந்தினன் மயங்கினன் மாக்கள் தூண்டலன்
இருந்தனன் வறிதவன் இயற்கை யாவையுந்
தெரிந்தனன் குமரவேள் அருளின் செய்கையான். ......
354(கண்டிடு முருகவேள்)
கண்டிடு முருகவேள் கணைகள் ஆயிரம்
விண்டொடர் செலவினால் விடுத்து வெய்யசூர்
கொண்டிடு சிலையினைக் குறைத்துப் பல்பெருந்
துண்டம தாக்கினான் அமரர் துள்ளவே. ......
355(கைச்சிலை முரிய)
கைச்சிலை முரியச் சூரன் கண்ணுதற் பெருமான் தந்த
முச்சிகைப் படையொன் றேந்தி முடங்குளை யூர்தி தன்னை
உச்சியின் நீபஞ் சூடும் உலகுடை யொருவ னூர்ந்த
அச்சுறு தடந்தேர் முன்னர் அணுகுறத் தூண்டிச் சென்றான். ......
356(தூண்டிய அரிமான்)
தூண்டிய அரிமான் ஏறு சூரன துளத்திற் போந்து
மாண்டகு தனது தீய வள்ளுகிர்க் கரத்தால் எந்தை
பாண்டிலந் தேரை ஆற்றும் பரித்தொகை பதைப்ப மோதி
ஆண்டயல் நின்ற பூதர் அலமர ஆர்த்த தன்றே. ......
357(அன்னது பொழுது)
அன்னது பொழுது தன்னில் அரிமிசைச் சென்ற சூரன்
தன்னுடை வலங்கை கொண்ட தனிப்பெருஞ் சூலந் தன்னைப்
பன்னிரு தடந்தோள் கொண்ட பகவன்மேற் றிரித்து வீச
மின்னென நிலவு கான்று விண்வழிப் படர்ந்த தன்றே. ......
358(நீடிய சூலஞ் செல்ல)
நீடிய சூலஞ் செல்ல நிமிர்ந்தன எழுந்து செந்தீக்
கூடின அசனி ஈட்டங் குழீஇயின படையின் கொள்ளை
ஆடியல் கணங்கள் ஈண்டி ஆர்த்தன அதனை நோக்கி
ஓடினர் அமரர் ஆனோர் உலகெலாம் வெருவிற் றம்மா. ......
359(அண்ணலும் அதனை)
அண்ணலும் அதனை நோக்கி ஆயிர கோடி வாளி
கண்ணகன் சிலையிற் பூட்டிக் கதுமென எதிர்தந் துய்ப்பத்
துண்ணென அவற்றை எல்லாஞ் சூலவேல் துணித்து வீட்டி
நண்ணலன் வெகுளித் தீயின் உருவென நடந்த தன்றே. ......
360(நடத்தலும் முகமா)
நடத்தலும் முகமா றுள்ளோன் ஞானநா யகன்ஈந் துள்ள
படைத்திறல் வன்மை உன்னிப் பாணியொன் றதனின் மேவி
அடுத்திடு குலிசந் தன்னை அடையலன் உய்த்த சூலம்
பிடித்தனை வருதி யென்று பேசினன் செல்ல விட்டான். ......
361(விட்டிடு கின்ற எல்லை)
விட்டிடு கின்ற எல்லை வியன்பெருங் குலிசம் ஏகி
நெட்டழற் சிகைமீக் கான்று நிமிர்ந்திடு சூலந் தன்னைக்
கிட்டுத லொடும் பற்றிக் கிளர்ந்தமுத் தலையுங் கவ்வி
ஒட்டலன் சிந்தை உட்க ஒய்யென மீண்ட தன்றே. ......
362(முத்தலைப் படை)
முத்தலைப் படையைக் கொண்டு முரண்மிகு குலிசஞ் செவ்வேள்
கைத்தலம் உய்த்துத் தானுங் கதுமென இருந்த தம்மா
பைத்தலைப் பாந்தள் போற்றும் பருவரைச் சிகர மூன்றும்
இத்தலப் புணரி தன்னில் இடுமருத் தியற்கை யேபோல். ......
363(ஆண்டது காலை)
ஆண்டது காலை தன்னில் அறுமுகத் தையன் கையில்
தூண்டிய குலிசத் தோடு சூலமும் வருத லோடுங்
காண்டகும் அமரர் எல்லாங் கரதலம் உச்சி கூப்பி
ஈண்டிவன் தன்னை அட்டே எமையளித் திடுதி யென்றார். ......
364(என்னலும் எந்தை)
என்னலும் எந்தை கேளா இராயிரம் பகழி பூட்டி
ஒன்னலன் ஊர்ந்து செல்லும் ஒருபெரு மடங்கல் ஏற்றின்
சென்னியில் அழுத்த லோடுஞ் சேண்கிளர்ந் தரற்றி வீழ்ந்து
தன்னுயிர் ஒல்லை வீந்து தரையிடைப் பட்ட தன்றே. ......
365(ஊர்திய திறந்து)
ஊர்திய திறந்து வீழ ஒருதனிச் சூரன் காணாப்
பார்தனிற் பாய்ந்து நின்று பராபரன் செம்மல் கையில்
கூர்தரு சூலம் போன கொள்கையுந் தெரிந்து பின்னாட்
சேர்தரு வடவை என்னச் செயிர்த்திவை சிந்தை செய்வான். ......
366(தேரொடு படையை)
தேரொடு படையை வௌவித் திறலுடை மடங்கல் சிந்தி
நேரலன் வலிய னேபோல் நின்றனன் அனையன் தன்னைச்
சாரதர் தொகையை ஏனைத் தலைவர்கள் தம்மை எல்லாம்
ஓருருக் கொண்டி யானே விழுங்குவன் ஒல்லை என்றான். ......
367(என்றிவை மனத்தி)
என்றிவை மனத்தி லுன்னி இணையறு மாயை நீரால்
நின்றுள அவுணர் செம்மல் நேமியம் புள்ளே போல
ஒன்றொரு வடிவ மெய்தி ஒலிதிரைக் கடலின் ஆர்த்துத்
தன்துணைச் சிறகர் பெற்ற தனிப்பெருங் கிரிபோ லுற்றான். ......
368(கறையடித் தந்தி)
கறையடித் தந்தி சிந்துங் காய்சின அரிமேல் உய்க்கும்
நறையடிக் கமலத் தையை ஞாட்பிடை ஆடற் கொத்த
பறையடித் திட்ட தேபோல் படிமகள் உடலம் விள்ளச்
சிறையடிக் கொண்டு தீயோன் சேணிடை எழுத லுற்றான். ......
369(மண்ணிடை வரைப்பு)
மண்ணிடை வரைப்பு முற்றும் மணிச்சிறை யதனான் மூடி
விண்ணிடைப் பரிதி யொள்வாள் விலக்கியே சுழலும் வேலைக்
கண்ணிடைப் பெருமீன் குப்பை கவர்ந்திட ஊக்கிற் றென்னத்
துண்ணெனப் பூதர் தானைச் சூழல்புக் கெறியு மாதோ. ......
370(அடித்திடுஞ் சிறகர்)
அடித்திடுஞ் சிறகர் தன்னால் அளவையில் பூதர் தம்மைப்
பிடித்திடும் புலவு நாறும் பெருந்தனி மூக்கிற் குத்தி
மிடற்றிடைச் செறித்து மெல்ல விழுங்கிடும் விறல்வேல் அண்ணல்
கொடித்தடந் தேரைச் சூழுங் கொடியபுள் வடிவக் கூற்றம். ......
371(சுற்றிடுங் குமரன் தே)
சுற்றிடுங் குமரன் தேரைத் தூண்டிய வலவன் தன்னை
எற்றிடுங் கொடிஞ்சி எஞ்ச இறுத்திடும் பரிகள் தம்மைக்
குற்றிடு மூக்கிற் சென்னி கொய்திடுங் குழீஇய வீரர்ப்
பற்றிடும் படைகள் முற்றும் பறித்திடு முறித்து வீசும். ......
372(இத்திறம் அவுணர்)
இத்திறம் அவுணர் செம்மல் இருஞ்சிறைப் புள்ள தாகி
அத்தலைக் கறங்கி வீழ்வுற் றந்தரந் திரித லோடும்
முத்தியை உதவு நோன்றாள் மூவிரு முகத்தன் காணாக்
கைத்தலம் புடைத்து நக்கு நன்றிவன் கற்பி தென்றான். ......
373(எறித்தரு சுடர்வேல்)
எறித்தரு சுடர்வேல் அண்ணல் இம்மென வெகுண்டு போரில்
நிறுத்திய மேரு வென்ன நிமிர்ந்ததோர் வரிவில் வாங்கி
விறற்கணை அநந்த கோடி மிசைமிசைக் கடிது பூட்டித்
திறத்தியல் புள்ளாய்ச் சூழும் அவுணன்மேற் செல்ல வுய்த்தான். ......
374(நெறித்திகழ் பகழி)
நெறித்திகழ் பகழி மாரி நிமலன்விட் டிடலும் வெய்யோன்
சிறைப்புடைக் கொண்டு பாங்கிற் சிந்திட அவற்றை மோதிக்
குறைத்திடுந் துண்டந் தன்னாற் கொய்திடுந் தாளிற் பற்றி
முறித்திடுங் கிளர்ந்து வானம் முழுவதுஞ் சுழன்று செல்லும். ......
375(வேலைகள் எல்லை)
வேலைகள் எல்லை முற்றும் படர்ந்திடும் விராவி மேவு
ஞாலம தகல முற்றும் படர்ந்திடு நாகர் வைகும்
வாலிய உலக முற்றும் படர்ந்திடும் வந்து பூத
சாலம தெறிந்து கவ்வித் தலைத்தலை மயங்கிச் செல்லும். ......
376(சூரன்மற் றினைய)
சூரன்மற் றினைய வாற்றால் சுலாய்க்கொடு திரித லோடும்
பூரணன் அதனைக் காணாப் புள்ளெனப் பெயர்வான் தன்னைத்
தேரொடுந் தொடர்ந்து கோறல் பழியெனச் சிந்தை செய்து
வாரணம் உயர்த்தோன் தன்னை நோக்கினன் வானோர் தம்முள். ......
377(இந்திரன் அனைய காலை - 1)
இந்திரன் அனைய காலை எம்பிரான் குறிப்புந் தன்மேல்
அந்தமில் அருள்வைத் துள்ள தன்மையும் அறிந்து நோக்கிச்
சுந்தர நெடுங்கட் பீலித் தோகைமா மயிலாய்த் தோன்றி
வந்தனன் குமரற் போற்றி மரகத மலைபோல் நின்றான். ......
378(நின்றிடு மஞ்ஞை)
நின்றிடு மஞ்ஞைப் புத்தேள் நெடுநிலங் கிழிய மேருக்
குன்றமும் புறஞ்சூழ் வெற்புங் குலைந்திடக் கரிகள் வீழ
வன்றிரை அளக்கர் நீத்தம் வறந்திடப் பணிகள் அஞ்சத்
தன்றுணைச் சிறகால் மோதி இனையன சாற்ற லுற்றான். ......
379(ஐயகேள் அமர)
ஐயகேள் அமர ரெல்லாம் வழிபட அளியன் தன்பால்
செய்ய பேரருளை வைத்தாய் ஆதலிற் சிறுமை தீர்ந்தேன்
உய்யலாம் நெறியுங் கண்டேன் உன்னடி பரிக்கப் பெற்றேன்
பொய்யுலா மாய வாழ்க்கைப் புன்மையும் அகல்வன் மன்னோ. ......
380(அல்லல்செய் தெமரை)
அல்லல்செய் தெமரை எல்லா மருஞ்சிறைப் படுத்தி வீட்டிப்
பல்வகை உலகை யாண்ட அவுணர்கோன் பறவை யாக்கை
செல்லுழிச் சென்று சென்று செருவினை இழைத்து வெல்வான்
ஒல்லையில் அடியேன் தன்மேல் ஏறுதி ஊர்தற் கென்றான். ......
381(என்னலும் உளத்திற்)
என்னலும் உளத்திற் செல்லும் இவுளிமான் தேரின் நீங்கிப்
பன்னிரு நாட்டத் தண்ணல் படர்சிறை மயூர மாகி
முன்னுறு மகவான் தன்மேல் மொய்ம்புடன் புக்கு வைகி
ஒன்னலன் செலவு நோக்கி உம்பரில் ஊர்த லுற்றான். ......
382(ஆறுமா முகத்தெம்)
ஆறுமா முகத்தெம் மண்ணல் அசனிபோல் அகவி ஆர்க்கும்
மாறிலா மயூர மென்னும் வயப்பரி தனைந டாத்தி
ஈறுசேர் பொழுதிற் சூழும் எரியினை அடுவான் முன்னிச்
சூறைமா ருதஞ்சென் றென்ன அவுணனைத் தொடர்ந்து சூழ்ந்தான். ......
383(ஆகிய பொழுது)
ஆகிய பொழுது தன்னில் ஆழியம் புள்ளாய்த் தோன்றி
மாகம துலவு கின்ற மாற்றலன் அதனை நோக்கிச்
சீகர அளக்க ரென்னத் தெழித்துமேற் சென்று தாக்கக்
கேகய அரசன் தானுங் கிடைத்தமர் புரித லுற்றான். ......
384(நிறங்கிளர் பசலை)
நிறங்கிளர் பசலைத் துண்ட நீட்டியே யாக்கை முற்றும்
மறங்கொடு கீண்டு செந்நீர் வாய்ப்படக் கவ்வி வாங்கிப்
புறங்கிளர் சிறைகள் தம்மாற் புடைத்துவெங் காலில் தாக்கிப்
பிறங்குபுள் ளுருவ மானோர்இவ்வகை பெரும்போர் செய்தார். ......
385(இத்திறம் பொரு)
இத்திறம் பொருத காலைப் பிணிமுகத் தேந்தல் தன்னைப்
பைத்தலை யுடைய தூவி பறித்திடா வதன முற்றுங்
குத்திவெங் குருதி வீட்டிக் குருமணிக் கலாபம் ஈர்த்து
மெய்த்துயர் புரிந்தான் நேமிப் புள்ளுருக் கொண்ட வெய்யோன். ......
386(அச்செயல் முருகன்)
அச்செயல் முருகன் காணா ஆரழல் என்ன நக்குக்
கைச்சிலை யதனை வாங்கிக் கடுந்தொழில் அவுணர் மன்னன்
உச்சியின் முகத்திற் காலில் உரத்தினில் சிறைகள் தம்மில்
வச்சிர நெடுங்கண் வாளி வரம்பில தொடுத்து விட்டான். ......
387(விட்டிடு கின்ற வாளி)
விட்டிடு கின்ற வாளி வெய்யவன் அங்க மெங்கும்
பட்டிடு கின்ற காலைப் பதைபதைத் துதறிச் சிந்தி
எட்டுள திசையும் வானும் இருங்கடல் உலக மெங்குங்
கட்டழல் சிந்திச் சீறிக் கறங்கெனத் திரியா நின்றான். ......
388(திரிந்திடு கின்ற)
திரிந்திடு கின்ற காலைச் செஞ்சுடர்த் தனிவேல் அண்ணல்
புரந்தரன் உருவாய் நின்ற பொறிமயில் நடாத்தி யேகி
அரந்தெறு கணைகள் தூண்டி அகிலமும் அவுணன் தன்னைத்
துரந்தமர் இழைக்க லுற்றான் விண்ணவர் தொழுது போற்ற. ......
389(அத்தகும் எல்லை தன்)
அத்தகும் எல்லை தன்னின் அவுணர்கள் எவர்க்கும் மேலோன்
எய்த்துளம் மெலிந்து சால இடருழந் திரக்க மெய்தி
மெய்த்தழ லென்னச் சீறி வேற்படை கொண்ட செம்மல்
கைத்தலத் திருந்த வில்லைக் கறிப்பது கருதி வந்தான். ......
390(வருவது நிமலன்)
வருவது நிமலன் காணா மலர்க்கரம் ஒன்றில் வைகும்
ஒருதனி ஒள்வாள் வீசி ஒன்னலன் பறவை யாக்கை
இருதுணி யாகி வீழ எறிந்தனன் எறித லோடும்
அரியயன் முதலாந் தேவர் அனைவரும் ஆடல் கொண்டார். ......
391வேறு(தாரார் வாகை சூடிய)
தாரார் வாகை சூடிய வேலோன் தன்கையிற்
கூரார் வாளாற் புள்ளுரு வத்தைக் குறைவிக்கச்
சூராம் வெய்யோன் அண்டமு கட்டைத் தொடவோங்கிப்
பாராய் நின்றான் விண்ணவர் யாரும் பரிவெய்த. ......
392(ஏழுட் பட்ட ஆழ்)
ஏழுட் பட்ட ஆழ்திரை நேமி யிடை தூர்த்துத்
தாழ்விற் செல்லு மாதவர் தேரைத் தடைசெய்து
சூழிக் கால்கள் வானெறி செல்லுந் துறைமாற்றிப்
பாழித் திக்கை மூடினன் நின்றான் படியானோன். ......
393(ஆறார் சென்னிப்)
ஆறார் சென்னிப் பண்ணவன் மைந்த னதுகாணாச்
சீறா நன்றாற் சூர்புரி மாயத் திறன்என்னாக்
கூறா அங்கைச் செஞ்சிலை தன்னைக் குனிவித்தே
ஊறார் வெங்கோல் ஏழு தொடுத்தே யுரைசெய்வான். ......
394(நெடுவா னத்தின்)
நெடுவா னத்தின் காறும் எழுந்தே நிமிர்வெய்தி
முடிவான் வெய்யோன் பாரக மாய்என் முன்நின்றான்
கடலேழ் என்னுந் தன்மையின் நீவிர் கடிதேகி
அடுவீர் என்றே விட்டனன் யார்க்கும் அறிவொண்ணான். ......
395(ஒற்றைச் செவ்வே)
ஒற்றைச் செவ்வே லோன்விடு வாளி யுலகெல்லாஞ்
சுற்றிக் கொண்டே உண்டிடு நேமித் தொகைபோலாய்ச்
செற்றத் தோடும் ஆர்ப்பொடும் ஏகித் திரைவீசி
மற்றச் சூரன் தன்னுரு வத்தை வளைவுற்ற. ......
396(வளையா வெஞ்சூர்)
வளையா வெஞ்சூர் மாயிரு ஞால வடிவத்தைக்
களையா உண்டே இன்மைய தாக்கிக் கணையேழுந்
திளையார் நீத்தத் தொல்லுரு நீங்கிச் செருவின்கண்
விளையா டுற்ற எம்பெரு மான்பால் மீண்டுற்ற. ......
397(காணா வெய்யோன்)
காணா வெய்யோன் பாருரு நீங்கிக் கடல்எல்லாம்
ஊணா வையம் வானொடும் உண்டற் கெழுமாபோல்
ஏணார் நீத்தத் தோர்வடி வாகி யிறைமுன்னம்
நீணா கத்தின் காறும் நிமிர்ந்தே நின்றிட்டான். ......
398(நேரான் மாயத்)
நேரான் மாயத் தொல்லுரு வத்தின் நிலைநோக்கிக்
கூரார் வாளி நூறு தொடுத்தே கொடியோன்பாற்
சேரா வூழித் தீயியல் பாகிச் செறிவுற்றுப்
பேரா தட்டே வம்மென விட்டான் பெயர்வில்லான். ......
399(அவ்வா றாக வாளி)
அவ்வா றாக வாளிகள் நூறும் அருள்நீரால்
வெவ்வாய் அங்கிப் பேருரு வாகி விரவிப்போய்த்
தெவ்வாய் நின்றோன் நீத்தம தாகுஞ் செயல்நீங்க
வெவ்வா யுஞ்சென் றுண்டன அம்மா இறைதன்னில். ......
400(தண்டா தார்க்கும்)
தண்டா தார்க்கும் நீத்த இயற்கை தனையெல்லாம்
உண்டா லித்தே வாளிகள் மீண்டே யுறுகாலைக்
கண்டான் மாயத் தன்மை படைத்தோன் கனல்மேனி
கொண்டான் அண்டங் காறும் நிமிர்ந்தே குலவுற்றான். ......
401(குலவுங் காலைக்)
குலவுங் காலைக் கண்டு நகைத்தே கூற்றென்ன
நிலவுஞ் செங்கோல் ஆயிரம் வாங்கா நீடூழி
சுலவுஞ் சண்டச் சூறையின் ஏகிச் சூர்மாயம்
பலவுஞ் செற்றே வம்மென உய்த்தான் பரமானோன். ......
402(உய்க்குங் காலத்)
உய்க்குங் காலத் தொய்யென ஏகி யுலகெங்குந்
திக்கும் வானுஞ் சூழு மருத்தின் திறனெய்தி
மைக்குந் தூமம் போல்பவன் மெய்த்தீ வடிவெல்லாம்
பொய்க்கும் வண்ணஞ் சாடின ஐயன் புகர்வாளி. ......
403வேறு(வண்டு லாவரு)
வண்டு லாவரு வாகையந் தாரினான்
கொண்டெ ழுந்த கொழுந்தழல் யாக்கையை
உண்டு வாளிகள் ஒய்யென மீண்டொராய்
அண்டர் நாயகன் பாங்கர் அணைந்தவே. ......
404(ஆங்க வெல்லையில்)
ஆங்க வெல்லையில் அவ்வடி வத்தினை
நீங்கு மாற்றலன் நீள்சின மேற்கொளா
ஓங்கு மோதை உருவுகொண் டார்த்தலும்
ஞாங்கர் எந்தை நகையொடு நோக்கினான். ......
405(ஆய்ந்து வாளியொ)
ஆய்ந்து வாளியொ ராயிர நூற்றினை
வாய்ந்த கைக்கொடு மாற்றலன் வன்மையைப்
பாந்த ளாகிப் படுத்து வம்மோவெனா
ஏந்தல் கூறி இமைப்பினில் தூண்டினான். ......
406(அவ்வ யிற்கணை)
அவ்வ யிற்கணை அந்தரத் திற்செலாச்
செவ்வி திற்கிளர் செந்தழல் போல்எழீஇப்
பைவி ரித்த பஃறலைப் பன்னகம்
வெவ்வு ருக்கொடு சூர்மிசை மேயதே. ......
407(கூற்றம் அன்ன)
கூற்றம் அன்ன கொடுந்தொழில் மன்னவன்
காற்றின் யாக்கை கரப்ப மிசைந்திடா
ஆற்றல் மேவி அணைந்துடன் மீண்டன
வேற்ற டக்கை விமலன் புடைதனில். ......
408(இன்ன தன்மையில் ஈரிரு)
இன்ன தன்மையில் ஈரிரு நாள்வரைத்
துன்ன லன்தொலை யாதமர் ஆற்றியே
பின்னும் மாயையின் பெற்றியைப் புந்தியுள்
உன்னி யேபல் லுருக்கொடு தோன்றினான். ......
409வேறு(ஓவாஇயல் புரிமூவரில்)
ஓவாஇயல் புரிமூவரில் ஒருசார்வரு மொழியுந்
தேவாசுரர் பிறராமென ஒருசார்வரும் சேணாள்
கோவாமென ஒருசார்வரும் ஒருசார்வருங் குறள்போல்
ஆவாவெனக் கொடுங்கூற்றென ஒருசார்வரும் அன்றே. ......
410(பேயாமென ஒரு)
பேயாமென ஒருபால்வரும் பிறழ்வெம்புகைப் படலைத்
தீயாமென ஒருபால்வரும் திசைஎங்கணும் சுழலும்
ஓயாமருத் தினமாமென ஒருபால்வரும் அகிலம்
பாயாவெழு திரையாழியில் ஒருபால்வரும் பரவி. ......
411(ஒருசார்விட மென)
ஒருசார்விட மெனவந்திடும் ஒருசார்வரும் பணிபோல்
ஒருசார்முகி லெனவந்திடும் ஒருசார்வரு மிருள்போல்
ஒருசாருரு மெனவந்திடும் ஒருசார்வரும் வரைபோல்
ஒருசார்தன துருவாய்வரும் ஒருசார்வருங் கதிர்போல். ......
412(தொக்கார்பல படை)
தொக்கார்பல படையாமென ஒருசார்வருஞ் சூழுந்
திக்கார்களிற் றினமாமென ஒருசார்வருஞ் சினத்தால்
நக்கார்தரும் அரியேறென ஒருசார்வரும் நலிவான்
அக்கால்வரு தனிப்புள்ளென ஒருசார்வரும் அன்றே. ......
413(கரியின்முகத் துணை)
கரியின்முகத் துணைவன்னென ஒருசார்வருங் கடுங்கண்
அரியின்முகத் திளையோனென ஒருசார்வரும் அளக்கர்ப்
பரியின்முகத் தினில்வந்திடு பாழிக்கனல் படுக்கும்
எரியின்முகத் தனிமைந்தனில் ஒருசாரிடை யேகும். ......
414(எல்லோன்றனை வெகு)
எல்லோன்றனை வெகுண்டோனென ஒருசார்வரும் ஏனைச்
சொல்லோங்கிய திறன்மைந்தரில் ஒருசார்வருஞ் சூழ்ச்சி
வல்லோனென ஒருசார்வரு மானப்படை மள்ளர்
பல்லோர்களுஞ் செறிந்தாலென ஒருசாரிடைப் படரும். ......
415(இத்தன்மையில் அவுண)
இத்தன்மையில் அவுணர்க்கிறை யாண்டுஞ்செறி வாகி
அத்தன்தனைப் புடைசூழ்தலும் அவைநோக்கிய இமையோர்
சித்தந்தளர்ந் திரிகுற்றனர் திரிகுற்றனர் அம்மா
கத்துங்கடற் புவிமாய்ந்திடு காலத்துயிர் எனவே. ......
416வேறு(அங்கதன் நிலைமை)
அங்கதன் நிலைமைநோக்கி ஆயிர கோடி வாளி
செங்கையில் வாங்கி வாங்குந் திருநெடுஞ் சிலையிற் பூட்டி
இங்குள அமரர் தங்கள் இருஞ்சிறை அகற்ற வந்து
பங்கயற் சிறைசெய் திட்ட பகவன்மற் றிதனைச் சொல்வான். ......
417(தெவ்வடு பகழி)
தெவ்வடு பகழி யென்னும் தேவிர்காள் நீவி ரேகி
மெய்வலி படைத்து நின்ற மேவலன் ஒருவன் கொண்ட
அவ்வுரு வனைத்து மெய்தி ஆங்கவன் மாய முற்றும்
இவ்விடை அட்டு நீக்கி ஏகுதி ரென்று விட்டான். ......
418(விட்டிடு சிலீமு கங்)
விட்டிடு சிலீமு கங்கள் விரைந்துபோய் வெகுளி வீங்கி
ஒட்டலன் கொண்ட ஒவ்வொன் றுருவினுக்*
2 கெழுமை யாகி
எட்டுள புலமும் வானும் இருநில வரைப்பும் ஈண்டி
அட்டடல் பெற்ற அம்மா அனையவன் மாயந் தன்னை. ......
419(உடல்சின மோடு)
உடல்சின மோடு சூரன் ஒருவனாய் அங்கண் நின்றான்
அடல்வலி கொண்ட வாளி அந்தர நெறியான் மீண்டு
புடையுறு சரங்க ளோடு பொள்ளெனத் தூணி புக்க
சுடர்நெடுந் தனிவே லண்ணல் அவன்முகம் நோக்கிச்சொல்வான். ......
420(வெம்புய லிடையில்)
வெம்புய லிடையில் தோன்றி விளிந்திடு மின்னு வென்ன
இம்பரில் எமது முன்னம் எல்லையில் உருவங் கொண்டாய்
அம்பினில் அவற்றை யெல்லாம் அட்டனம் அழிவி லாத
நம்பெரு வடிவங் கொள்வ நன்றுகண் டிடுதி யென்றான். ......
421(கூறிமற் றினைய)
கூறிமற் றினைய தன்மை குரைகடல் உலகந் திக்கு
மாறிலாப் புவனம் அண்டம் வானவர் உயிர்கள் யாவும்
ஆறுமா முகத்து வள்ளல் மேனியில் அமைந்த தன்றி
வேறிலை என்ன ஆங்கோர் வியன்பெரு வடிவங் கொண்டான். ......
422(உள்ளடி வரைகள்)
உள்ளடி வரைகள் யாவும் ஒண்புற வடியின் நீத்தம்
வள்ளுகிர் விரல்கள் முற்றும் வான்உரு மேறு நாள்கோள்
எள்ளரும் பரடு தன்னில் இரும்புனற் கிறைவன் சோமன்
நள்ளிருள் அனைய மேனி நிருதியோ டரக்கர் நண்ண. ......
423(அடிதிரள் கணைக்கால்)
அடிதிரள் கணைக்கால் தன்னில் ஆரிடர் மணிகள் சானு
வடிவமை முழந்தாள் விஞ்சை வானவ ராதி யானோர்
தொடைதனின் மகவான் மைந்தன் தொடைமுதல் நடுவன் காலன்
கடிதடத் தசுரர் பக்கங் கடவுளர் யாரும் நிற்ப. ......
424(இருப்பினில் நாகர்)
இருப்பினில் நாகர் கோச எல்லையில் மருந்தே யுந்திக்
கருப்படும் உயிர்கள் மார்பிற் கலைகள்முந் நூலிற் போதம்
அருப்பயில் உரோமத் தண்டம் அங்கையில் அகில போகந்
திருபெருந் தடந்தோள் வைப்பிற் செங்கண்மால் விரிஞ்சன் மேவ. ......
425(மெல்லிதழ் அனைய)
மெல்லிதழ் அனைய செங்கை விரல்மிசை அணங்கின் நல்லார்
ஒல்லொலி அங்கி கண்டம் ஒப்பிலா மணிவாய் வேதம்
பல்லிடை யெழுத்து நாவிற் பரமவா கமத்தின் பேதம்
நல்லிதழ் மனுவின் விஞ்சை நாசியிற் பவனன் மன்ன. ......
426(கருணைகொள் விழி)
கருணைகொள் விழியில் சோமன் கதிரவன் செவியில் திக்குத்
திருநுதற் குடிலை வைப்புச் சென்னியில் பரம ஆன்மா
மரபினின் மேவித் தோன்ற மாறிலா திருக்குந் தொல்லை
ஒருதன துருவங் காட்டி நிற்றலும் உம்பர் கண்டார். ......
427(செஞ்சுடர் அநந்த)
செஞ்சுடர் அநந்த கோடி செறிந்தொருங் குதித்த தென்ன
விஞ்சிய கதிர்கான் றுள்ள வியன்பெரு வடிவை நோக்கி
நெஞ்சகந் துளங்கி விண்ணோர் நின்றனர் நிமல மூர்த்தி
அஞ்சல்மின் அஞ்சல் மின்னென் றருளினன் அமைத்த கையான். ......
428(அண்டர்கள் யாரும்)
அண்டர்கள் யாரும் எந்தை அருள்முறை வினவி யுள்ளம்
உண்டிடு விதிர்ப்பு நீங்கி உவகையால் தொழுது நின்றார்
தண்டுளி வரைய தென்னத் தணப்பறச் சிதறும் ஊழிக்
கொண்டலின் தோற்றம் நோக்கிக் குலவுறு மஞ்ஞை யேபோல். ......
429(இறுதியும் முதலும்)
இறுதியும் முதலும் இல்லா இப்பெரு வடிவந் தன்னைக்
கறைவிட முறழுஞ் சூரன் கண்டுவிம் மிதத்தின் நிற்ப
அறிவரும் உணர்தல் தேற்றா ஆறுமா முகத்து வள்ளல்
சிறிதுநல் லுணர்ச்சி நல்க இனையன செப்ப லுற்றான். ......
430(எண்ணிலா அவுணர்)
எண்ணிலா அவுணர் தானை யாவையும் இமைப்பிற் செற்று
விண்ணுலா அண்டந் தோறும் வியன்சமர் ஆற்றி என்பால்
நண்ணினார் தம்மை எல்லாம் நாமறத் தடிந்து வீட்டி
வண்ணமான் தேரும் மீண்டு வராநெறி தடுத்தான் மன்னோ. ......
431(திண்டிறல் உடையேன்)
திண்டிறல் உடையேன் தூண்டுந் திறற்படை யாவும் நீக்கிக்
கொண்டவென் மாய முற்றுங் கொடுஞ்சரம் அதனான் மாற்றி
அண்டமும் புவனம் யாவும் அமரரும் பிறவுந் தன்பாற்
கண்டிடும் வடிவ மொன்று காட்டியென் கண்முன் நின்றான். ......
432(கோலமா மஞ்ஞை)
கோலமா மஞ்ஞை தன்னிற் குலவிய குமரன் தன்னைப்
பாலனென் றிருந்தேன் அந்நாட் பரிசிவை யுணர்ந்தி லேன்யான்
மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும்
மூலகா ரணமாய் நின்ற மூர்த்திஇம் மூர்த்தி அன்றோ. ......
433(ஒற்றென முன்னம்)
ஒற்றென முன்னம் வந்தோன் ஒருதனி வேலோன் தன்னைப்
பற்றிக லின்றி நின்ற பராபர முதல்வன் என்றே
சொற்றனன் சொற்ற எல்லாந் துணிபெனக் கொண்டி லேனால்
இற்றையிப் பொழுதில் ஈசன் இவனெனுந் தன்மை கண்டேன். ......
434(மீயுயர் வடிவங்)
மீயுயர் வடிவங் கொண்டு மேவிய தூதன் சொற்ற
வாய்மைகள் சரதம் அம்மா மற்றியான் பெற்ற அண்டம்
ஆயவை முழுது மற்றும் அறுமுகம் படைத்த செம்மல்
தூயபொற் பதரோ மத்தில் தோன்றியே நிற்கும் அன்றே. ......
435(அண்டர்கள் முனிவர்)
அண்டர்கள் முனிவர் ஏனோர் அகிலமுங் காட்டி அண்ணல்
கொண்டிடு படிவ முற்றுங் குறித்தியார் தெரிதற் பாலார்
எண்டரு விழிகள் யாக்கை எங்கணும் படைத்தோர்க் கேனுங்
கண்டிட அநந்த கோடி கற்பமுங் கடக்கும் அன்றே. ......
436(சீர்க்கும ரேசன்)
சீர்க்கும ரேசன் கொண்ட திருப்பெரு வடிவந் தன்னில்
ஏர்க்குறும் ஒளியுஞ் சீரும் இளமையும் எழிலும் எல்லாம்
ஆர்க்குள வுலகில் அம்மா அற்புதத் தோடும் பல்காற்
பார்க்கினுந் தெவிட்டிற் றில்லை இன்னுமென் பார்வை தானும். ......
437(நேரில னாகி ஈண்டே)
நேரில னாகி ஈண்டே நின்றிடும் முதல்வன் நீடும்
பேருரு வதனை நோக்கிப் பெரிதுமச் சுறுவ தல்லால்
ஆரிது நின்று காண்பார் அமரரில் அழிவி லாத
சீரிய வரங்கொண் டுள்ளேன் ஆதலில் தெரிகின் றேனால். ......
438(ஆயிர கோடி காமர்)
ஆயிர கோடி காமர் அழகெலாந் திரண்டொன் றாகி
மேயின எனினுஞ் செவ்வேள் விமலமாஞ் சரணந் தன்னில்
தூயநல் லெழிலுக் காற்றா தென்றிடின் இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்க வல்லார். ......
439(இங்கென துயிர்போல்)
இங்கென துயிர்போல் உற்ற இளவலும் இளைய சேயுஞ்
செங்கையில் வேலோன் றன்னைச் சிறுவனென் றெண்ணல் கண்டாய்
பங்கயன் முதலோர் காணாப் பரமனே யாகும் என்றார்
அங்கவர் மொழிந்த வாறுஞ் சரதமே ஆன தன்றே. ......
440(அண்ணலார் குமரன்)
அண்ணலார் குமரன் மேனி அடிமுதல் முடியின் காறும்
எண்ணிலா வூழி காலம் எத்திறம் நோக்கி னாலுங்
கண்ணினால் அடங்கா துன்னிற் கருத்தினால் அடங்கா தென்பால்
நண்ணினான் அமருக் கென்கை அருளென நாட்ட லாமே. ......
441(திருகிய வெகுளி)
திருகிய வெகுளி முற்றுந் தீர்ந்தன செருவின் ஊக்கம்
அருகிய துரோமம் புள்ளி ஆயின விழியில் தூநீர்
பெருகிய திவன்பால் அன்பு பிறந்தன தமியேற் குள்ளம்
உருகிய தென்பு தானும் உலைமெழு காகும் அன்றே. ......
442(போயின அகந்தை)
போயின அகந்தை போதம் புகுந்தன வலத்த தான
தூயதோர் தோளுங் கண்ணுந் துடித்தன புவன மெங்கும்
மேயின பொருள்கள் முற்றும் வெளிப்படு கின்ற விண்ணோர்
நாயகன் வடிவங் கண்டேன் நற்றவப் பயனீ தன்றோ. ......
443(சூழுதல் வேண்டு)
சூழுதல் வேண்டுந் தாள்கள் தொழுதிடல் வேண்டும் அங்கை
தாழுதல் வேண்டுஞ் சென்னி துதித்திடல் வேண்டுந் தாலு
ஆழுதல் வேண்டுந் தீமை அகன்றுநான் இவற்கா ளாகி
வாழுதல் வேண்டும் நெஞ்சம் தடுத்தது மானம் ஒன்றே. ......
444(ஒன்னலர் பொருட்டா)
ஒன்னலர் பொருட்டா லேகி உறுசமர் இழைத்த செம்மல்
தன்னுரு வதனைக் காண்கின் முனிவதே தகுதி யாகும்
வன்னிகொள் வெண்ணெ யேபோல் வலியழிந் துருகிற் றென்றால்
என்னுடை வயத்த வன்றோ உணர்ச்சியு மியாக்கை முற்றும். ......
445(ஏடவிழ் அலங்கல் மார்)
ஏடவிழ் அலங்கல் மார்பன் என்னுடன் இந்நாள் காறும்
நீடிய இகற்போர் ஆற்றி நீங்கலான் நின்ற தெல்லாம்
ஆடலின் இயற்கை யென்றே அறிந்தனன் அஃதான் றன்னான்
சாடிய வேண்டு மென்னின் யாரது தாங்கற் பாலார். ......
446(ஏதமில் அமரர்)
ஏதமில் அமரர் தம்மை யான்சிறை செய்த தெல்லாந்
தீதென உரைத்தார் பல்லோர் அன்னதன் செயற்கை யாலே
வேதமும் அயனும் ஏனை விண்ணவர் பலருங் காணா
நாதனிங் கணுகப் பெற்றேன் நன்றதே யான தன்றே. ......
447(ஒன்றொரு முதல்)
ஒன்றொரு முதல்வ னாகி உறைதரு மூர்த்தி முன்னம்
நின்றமர் செய்தேன் இந்நாள் நெஞ்சினித் தளரேன் அம்மா
நன்றிதோர் பெருமை பெற்றேன் வீரனும் நானே யானேன்
என்றுமிப் புகழே நிற்கும் இவ்வுடல் நிற்ப துண்டோ. ......
448(வானுளோர் சிறை)
வானுளோர் சிறையை நீக்கி வள்ளலை வணங்கி இந்த
ஊனுலாம் உயிரைப் போற்றி அளியர்போல் உறுவன் என்னின்
ஆனதோ எனக்கி தம்மா ஆயிர கோடி யண்டம்
போனதோர் புகழும் வீரத் தன்மையும் பொன்றி டாவோ. ......
449(என்னஇத் தகை)
என்னஇத் தகைய பன்னி நிற்றலும் எவர்க்கும் மேலோன்
உன்னருந் தகைத்தாய் நின்ற ஒருபெருந் தோற்றம் நீத்து
மின்னிவர் கலாபம் ஊர்ந்த வியனுருக் கொண்டு நண்ணித்
துன்னலன் போத மாற்றித் தொன்மைபோ லாகச் செய்தான். ......
450(காரண னாகித் தானே)
காரண னாகித் தானே கருணையால் எவையும் நல்கி
ஆருயிர் முழுது மேவி அனைத்தையும் இயற்றி நிற்கும்
பூரண முதல்வன் மைந்தன் போதகம் அளித்து மாற்றிச்
சூரனை மயக்கஞ் செய்யுஞ் சூழ்ச்சியோ அரிய தன்றே. ......
451(அத்தகு காலை தானே)
அத்தகு காலை தானே அவுணர்கோன் உணர்ச்சி நீங்கிச்
சித்தம திடையே தொல்லைச் சீற்றமும் இகலும் உற்ற
மெய்த்தகு குழவித் திங்கள் விண்ணெறி செல்லச் செல்லும்
எத்திசை இருளும் அன்ன தகன்றுழி எழுந்த தேபோல். ......
452(பிணிமுகம் உயர்த்து)
பிணிமுகம் உயர்த்து நின்ற பெருந்தகை தோற்றங் காணூஉத்
தணிவருஞ் சினமேற் கொண்டு சமரின்மேல் ஊக்கஞ் சேர்த்தி
அணியதென் றிண்மை என்னா அங்கையோ டங்கை தாக்கி
மணிமுடி துளக்கி நக்கு மற்றிவை புகலல் உற்றான். ......
453(சேயுரு வமைந்த)
சேயுரு வமைந்த கள்வன் செருவினை இழைக்க லாற்றான்
மாயையி னொன்று காட்டி எனையிவண் மையல் செய்தான்
ஆயது துடைத்தேன் என்றால் ஆரெனக் கொப்புண் டென்றுங்
காயம தழிவி லாதேன் கருத்தழி கின்ற துண்டோ. ......
454(குன்றினை எறிந்த வே)
குன்றினை எறிந்த வேற்கைக் குமரனோ டமர தாற்றி
வென்றிடு கின்றேன் மெல்ல மேலது நிற்க இந்த
வன்றிறற் சமரை மூட்டி நின்றவா னவரை யெல்லாம்
தின்றுயிர் குடித்து முன்னென் சினஞ்சிறி தகல்வன் என்றான். ......
455(ஆயது துணிவாக்)
ஆயது துணிவாக் கொண்ட அவுணர்கள் மன்னன் பின்னும்
தீயதோர் தொல்லை மாயச் சீர்கொள்மந் திரத்தைப் பன்னி
ஞாயிறு மருட்கை கொள்ள ஞாலமுங் ககன முற்றும்
மாயிருள் உருவங் கொண்டு மறைந்துநின் றார்க்க லுற்றான். ......
456(தெண்டிரை நேமி தன்)
தெண்டிரை நேமி தன்னில் தீவிடம் எழுந்த தென்ன
எண்டிசை எல்லை முற்றும் இருநில வரைப்பும் எல்லா
அண்டமு மாகி ஈண்டும் ஆரிருள் வடிவை வானோர்
கண்டனர் அவுணன் மாய மீதெனக் கலக்க முற்றார். ......
457(அத்துணை அவுணர்)
அத்துணை அவுணர் மன்னன் அவ்விருள் இடையே பாய்ந்து
பத்திகொள் சிகர மன்ன பஃறலை அளவை தீர்ந்த
கைத்தல முளதோர் யாக்கை கதுமெனக் கொண்டு விண்ணோர்
மெய்த்தொகை நுகர்வான் உன்னி விண்ணிடைக் கிளர்ந்து சென்றான். ......
458(ஆடியல் கொண்ட சூரன்)
ஆடியல் கொண்ட சூரன் அந்தரத் தெழலும் வானோர்
கூடிய ஓதி தன்னால் குறிப்பினால் தெரிந்து நம்மைச்
சாடிய வருவன் என்னாத் தலைத்தலை சிதறி நில்லா
தோடினர் கூற்றை நேர்ந்த உயிரென இரங்க லுற்றார். ......
459(நண்ணினர்க் கினி)
நண்ணினர்க் கினியாய் ஓலம் ஞானநா யகனே ஓலம்
பண்ணவர்க் கிறையே ஓலம் பரஞ்சுடர் முதலே ஓலம்
எண்ணுதற் கரியாய் ஓலம் யாவையும் படைத்தாய் ஓலம்
கண்ணுதற் பெருமான் நல்குங் கடவுளே ஓலம் ஓலம். ......
460(தேவர்கள் தேவே)
தேவர்கள் தேவே ஓலம் சிறந்தசிற் பரனே ஓலம்
மேவலர்க் கிடியே ஓலம் வேற்படை விமலா ஓலம்
பாவலர்க் கெளியாய் ஓலம் பன்னிரு புயத்தாய் ஓலம்
மூவரு மாகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம். ......
461(கங்குலின் எழுந்த)
கங்குலின் எழுந்த கார்போல் கனையிருள் மறைவின் ஏகி
நுங்கிய செல்வான் சூரன் ஓடவும் நோன்மை யில்லேம்
எங்கினி உய்வம் ஐய இறையுநீ தாழ்க்கல் கண்டாய்
அங்கவன் உயிரை உண்டெம் மாவியை யருளு கென்றார். ......
462(தேற்றலை போலு)
தேற்றலை போலு மீது சிறிதுநீ பாணிப் பாயேல்
ஆற்றலின் மறைந்து நின்றே அகிலமுந் தானே யுண்ணும்
மாற்றலன் ஆவி தன்னை வாங்குதி வல்லை யென்னாப்
போற்றினன் முதல்வன் தன்னை மயூரமாய்க் கொண்ட புத்தேள். ......
463(அங்கவர் மொழியும்)
அங்கவர் மொழியும் வெய்யோன் ஆற்றலுந் தெரிந்து செவ்வேள்
செங்கைய தொன்றில் வைகுந் திருநெடு வேலை நோக்கி
இங்கிவன் ஆகம் போழ்ந்தே ஏகுதி இமைப்பின் என்னாத்
துங்கம துடைய சீர்த்திச் சூரன்மேற் செல்லத் தொட்டான். ......
464(ஏயென முருகன்)
ஏயென முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்
ஆயிர கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து தோன்றித்
தீயழற் சிகழி கான்று சென்றிட அவுணன் கொண்ட
மாயிருள் உருவ முற்றும் வல்விரைந் தகன்ற தன்றே. ......
465(அன்னவன் தனது மாய)
அன்னவன் தனது மாயம் அழிந்ததும் ஐயன் வைவேல்
முன்னுறு மாறு நோக்கி முடிவிலா வரத்தி னேனை
என்னிவட் செய்யும் அம்மா இவன்விடும் எஃக மென்னா
உன்னினன் முறுவல் எய்தி உருகெழு சீற்றங் கொண்டான். ......
466(வாரிதி வளாகந்)
வாரிதி வளாகந் தன்னை மாதிர வரைப்பை மீக்கீழ்ச்
சேருறு நிலயந் தன்னைத் திசைமுகன் முதலா வுள்ள
ஆருயி ரோடும் வீட்டி அடுவன்மே லிதனை என்னாச்
சூரெனும் அவுணன் மற்றைத் தொடுகடல் நடுவண் ஆனான். ......
467(வன்னியின் அலங்கல்)
வன்னியின் அலங்கல் கான்று வான்தழை புகையின் நல்கிப்
பொன்னென இணர்கள் ஈன்று மரகதம் புரையக் காய்த்துச்
செந்நிற மணிகள் என்னத் தீம்பழங் கொண்டு கார்போல்
துன்னுபல் கவடு போக்கிச் சூதமாய் அவுணன் நின்றான். ......
468(மாசறு ககன கூட)
மாசறு ககன கூட வரம்பதன் அளவு மேல்போய்
ஆசையின் எல்லை காறும் அளவைதீ ருலவை ஓச்சிக்
காசினி அகலந் தாங்குங் கச்சபத் துணைத்தூ ரோட்டிப்
பாசடை பொதுளி வெஞ்சூர் பராரைமால் வரையின் நின்றான். ......
469(ஒராயிர நூற தென்)
ஒராயிர நூற தென்னும் ஒசனை அளவை யான்ற
பராரைமா வுருவ மாகிப் பலவுடைச் சினைமாண் கொம்பர்
விராவிய சூழ்ச்சி தன்னால் வேலைகள் முழுதும் விண்ணும்
தராதல வரைப்பும் எல்லாந் தண்ணிழல் பரப்பி நின்றான். ......
470(நெடுங்கலை முயல்)
நெடுங்கலை முயல்மான் கொண்டு நிலவும்அம் புலியும் நீத்தம்
அடுங்கதிர் படைத்த கோவும் அளகையை யாளி தானுங்
கடங்கலுழ் கின்ற ஆசைக் கரிகளுங் கடாவிற் செல்லும்
மடங்கலும் வெருவச் சூரன் மாவுருக் கொண்டு நின்றான். ......
471(மிக்குயர் உவணம்)
மிக்குயர் உவணம் அன்ன மிசைப்படும் எகினப் புள்ளும்
மைக்குயில் சேவ லாகி மயூரமாம் வலியன் தானும்
புக்கமர் தெரிக்கும் ஆடற் பூவையுங் கொடிய தான
குக்குட முதலும் அஞ்சக் கொக்குரு வாகி நின்றான். ......
472(காலெனு மொய்ம்பன்)
காலெனு மொய்ம்பன் உட்கக் கட்செவி கவிழ்ந்து சோர
வாலிய வசுக்கள் ஏங்கி மலர்க்கரம் மறிக்க வெய்யோன்
பாலர்மெய் வியரா நிற்பப் பணைமுலை அரிவை மார்கள்
சேலெனும் விழிகள் பொத்தச் சேகர மாகி நின்றான். ......
473(அத்தியின் அரசு பேர)
அத்தியின் அரசு பேர ஆலமும் தெரிக்கில் ஏங்க
மெய்த்திறல் வாகை வன்னி மெலிவுற வீரை யாவுந்
தத்தம திருப்பை நீங்கத் தாதவிழ் நீபத் தாரோன்
உய்த்திடு தனிவேல் முன்னர் ஒருதனி மாவாய் நின்றான். ......
474(நிலமிசை இனைய)
நிலமிசை இனைய வாறோர் நெடும்பெருஞ் சூத மாகி
உலவையின் செறிவு தன்னால் உம்பருந் திசையும் எற்றித்
தலைமுதல் அடியின் காறுஞ் சாலவுந் தளர்ந்து தள்ளுற்
றலமரு வாரிற் றானே அசைந்தனன் அசைவி லாதான். ......
475(பைவிரி பாந்தட்)
பைவிரி பாந்தட் புத்தேள் பரம்பொறா தழுங்கப் பாரின்
மைவிரி படிவச் சூறை மாருதம் எறிய மாழை
மெய்விரி குடுமிக் கோட்டு மேருவெற் பசைந்தா லென்ன
மொய்விரி அவுணன் யாக்கை அலைத்தனன் முடிவ தோரான். ......
476(இடிந்தன சரிந்த)
இடிந்தன சரிந்த ஞாலம் ஏழ்வகைப் பிலங்கள் முற்றும்
பொடிந்தன கமட நாகம் புரண்டன புழைக்கை மாக்கள்
முடிந்தன மறிந்த வேலை முழுவதும் ஒன்றா குற்ற
மடிந்தன உயிரின் பொம்மல் வரைக்குலம் அறிந்த அன்றே. ......
477(தாரகை உதிர்ந்த)
தாரகை உதிர்ந்த கோளுந் தலைபனித் திரிந்த வெய்யோன்
தேரொடு மாவுந் தானுந் தியங்கினன் திங்கட் புத்தேள்
பேருறு மானம் நீங்கிப் பெயர்ந்தனன் ஏனை வானோர்
மேருவுங் கயிலை வெற்பும் புக்கனர் வெருவு நீரார். ......
478(ஏற்றமில் சுவர்க்க)
ஏற்றமில் சுவர்க்க முற்றும் இற்றன அதற்கும் அப்பால்
மேற்றிகழ் முனிவர் வைகும் உலகமும் பகிர்ந்து வீழ்ந்த
நாற்றிசை முகத்தன் மாயோன் நண்ணிய உலகும் அற்றே
சாற்றுவ தென்கொல் அண்டச் சூழலுந் தகர்ந்த தன்றே. ......
479(தெண்டிரை நடுவண்)
தெண்டிரை நடுவண் நின்ற தீயவன் செயலும் அன்னான்
கொண்டிடும் உருவும் உள்ளக் கொள்கையும் வலியுஞ் சீரும்
அண்டர்கள் எவர்க்கும் மேலாம் ஆதியம் பகவன் தொட்ட
விண்டொடர் தனிவேல் காணா வெஞ்சினம் விளைத்த தன்றே. ......
480(தேயுவின் எடுத்த)
தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும் பிறங்கு ஞாலத்
தாயிர கோடி அண்டத் தங்கியும் ஒன்றிற் றென்ன
மீயுயர்ந் தொழுகி ஆன்றோர் வெருவருந் தோற்றங் கொண்டு
நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்த தன்றே. ......
481(வயிர்த்திடு நிலைமை)
வயிர்த்திடு நிலைமை சான்ற வன்கணான் உயிரை வௌவச்
செயிர்த்திடுந் தெய்வச் செவ்வேல் திணிநில வரைப்பில் அண்டம்
மயிர்த்தொகை யாக ஏனைப் பூதமும் அழிய அங்கண்
உயிர்த்தொகை முருக்கத் தோன்றும் ஒருவனிற் சென்ற தன்றே. ......
482(மாறமர் உழந்து)
மாறமர் உழந்து பன்னாள் வரம்பறு பிரம மாவார்
வேறிலை யாமே என்ற இருவரும் வெருவி நீங்க
ஈறொடு முதலும் இன்றி எழுகிரி விலக்கி விண்மேற்
சேறலின் நிலைமை காட்டிப் படர்ந்தது கடவுட் செவ்வேல். ......
483(வேதனை அகத்த)
வேதனை அகத்த ராகும் விண்ணவர் படைகள் தம்முள்
யாதனை இதற்கு நேரா இயம்புவ தெரியில் தோன்றிப்
பூதனை உயிருண் கள்வன் புண்டரீ கத்தன் வன்மை
சோதனை புரிந்த மேலோன் சூலமே என்ப தல்லால். ......
484(மண்டல நிலத்தின்)
மண்டல நிலத்தின் வைப்பும் வாரிதி ஏழு மற்றைத்
தெண்டிரைக் கடலும் வானுஞ் சேணுயர் பிறங்கல் முற்றும்
எண்டிசைப் புறமும் அண்டத் தேணியின் பரப்பும் ஈண்ட
ஒண்டழற் சிகையின் கற்றை உமிழ்ந்ததால் ஒருங்கு ஞாங்கர். ......
485(பற்றிய ஞெகிழி)
பற்றிய ஞெகிழி பாரில் படர்ந்தன பௌவம் யாவுஞ்
சுற்றிய திசையும் வானுஞ் சூழ்ந்தன சோதி வைகும்
பொற்றைய தொன்றே அல்லாப் பொருப்பெலாஞ் செறிந்த பொன்றோய்
கற்றையங் கதிரின் அண்டச் சூழலுங் கதுவ லுற்ற. ......
486(விடம்பிடித் தமலன்)
விடம்பிடித் தமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப் பாணி
இடம்பிடித் திட்ட தீயில் தோய்த்துமுன் இயற்றி யன்ன
உடம்பிடித் தெய்வம் இவ்வா றுருகெழு செலவின் ஏகி
மடம்பிடித் திட்ட வெஞ்சூர் மாமுதல் தடிந்த தன்றே. ......
487(ஆடல்வேல் எறித)
ஆடல்வேல் எறித லோடும் ஆமிர வடிவாய் அண்ட
கூடமும் அலைத்த கள்வன் அரற்றொடு குறைந்து வீழ்ந்தும்
வீடிலன் என்ப மன்னோ மேலைநாள் வரத்தின் என்றால்
பீடுறு தவமே அன்றி வலியது பிறிதொன் றுண்டோ. ......
488(கிள்ளையின் வதனம்)
கிள்ளையின் வதனம் அன்ன கேழ்கிளர் பசுங்காய் தூங்கித்
தள்ளரும் நிலைத்தாய் நின்ற மாவுருச் சாய்த லோடும்
உள்ளுறு சினமீக் கொள்ள ஒல்லைதொல் லுருவம் எய்தி
வள்ளுறை யுடைவாள் வாங்கி மலைவது கருதி ஆர்த்தான். ......
489(செங்கதிர் அயில்வாள்)
செங்கதிர் அயில்வாள் கொண்டு செருமுயன் றுருமின் ஆர்த்துத்
துங்கமொ டெதிர்ந்து சீறுஞ் சூருரங் கிழித்துப் பின்னும்
அங்கம திருகூ றாக்கி அலைகடல் வரைப்பில் வீட்டி
எங்கணும் மறைகள் ஆர்ப்ப எஃகம்வான் போயிற் றம்மா. ......
490(புங்கவர் வழுத்திச்)
புங்கவர் வழுத்திச் சிந்தும் பூமழை யிடையின் ஏகி
அங்கியின் வடிவம் நீங்கி அருளுருக் கொண்டு வான்றோய்
கங்கையிற் படிந்து மீண்டு கடவுளர் இடுக்கண் தீர்த்த
எங்கள்தம் பெருமான் செங்கை எய்திவீற் றிருந்த தவ்வேல். ......
491(தாவடி நெடுவேல்)
தாவடி நெடுவேல் மீளத் தற்பரன் வரத்தால் வீடா
மேவலன் எழுந்து மீட்டும் மெய்பகிர் இரண்டு கூறுஞ்
சேவலும் மயிலு மாகிச் சினங்கொடு தேவர் சேனை
காவலன் தன்னை நாடி அமர்த்தொழில் கருதி வந்தான். ......
492(மணிகிளர் வரைய)
மணிகிளர் வரைய தொன்றும் மரகதப் பிறங்க லொன்றுந்
துணையடி சிறகர் பெற்றுச் சூற்புயல் அழிய ஆர்த்துத்
திணிநில விசும்பின் மாட்டே சென்றெனச் சேவ லோடு
பிணிமுக வுருவாய் வந்து பெருந்தகை முன்னம் புக்கான். ......
493(ஆட்படு நெறியிற்)
ஆட்படு நெறியிற் சேர்த்தும் ஆதியின் ஊழ்தந் துய்க்கத்
தாட்படை மயூர மாகித் தன்னிகர் இல்லாச் சூரன்
காட்படை யுளத்த னாகிக் கடவுளர் இரியல் போக
ஞாட்பியல் செருக்கில் வந்தான் ஞானநா யகன்றன் முன்னம். ......
494(மருள்கெழு புள்ளே)
மருள்கெழு புள்ளே போல வந்திடு சூரன் எந்தை
அருள்கெழு நாட்டஞ் சேர்த்த ஆங்கவன் இகலை நீங்கித்
தெருள்கெழு மனத்த னாகி நின்றனன் சிறந்தார் நோக்கால்
இருள்கெழு கரும்பொன் செம்பொன் னாகிய இயற்கை யேபோல். ......
495(தீயவை புரிந்தா)
தீயவை புரிந்தா ரேனுங் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவ ராகி மேலைத் தொல்கதி யடைவர் என்கை
ஆயவும் வேண்டுங் கொல்லோ அடுசமர் இந்நாட் செய்த
மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள்பெற் றுய்ந்தான். ......
496(அக்கணம் எம்பிரான்)
அக்கணம் எம்பிரான்தன் அருளினால் உணர்வு சான்ற
குக்குட வுருவை நோக்கிக் கடிதில்நீ கொடியே ஆகி
மிக்குயர் நமது தேரின் மேவினை ஆர்த்தி என்னத்
தக்கதே பணியி தென்னா எழுந்தது தமித்து விண்மேல். ......
497(செந்நிறங் கெழீஇய)
செந்நிறங் கெழீஇய சூட்டுச் சேவலங் கொடியொன் றாகி
முன்னுறு மனத்திற் செல்லும் முரண்டகு தடந்தேர் மீப்போய்
இந்நில வரைப்பின் அண்டம் இடிபட உருமே றுட்க
வன்னியும் வெருவ ஆர்த்து மற்றவண் உற்ற தன்றே. ......
498(சீர்திகழ் குமர மூர்த்தி)
சீர்திகழ் குமர மூர்த்தி செறிவிழி கொண்ட தொல்லை
ஊர்தியின் இருக்கை நீங்கி உணர்வுகொண் டொழுகி நின்ற
சூர்திகழ் மஞ்ஞை யேறிச் சுமக்குதி எம்மை என்னாப்
பார்திசை வானம் முற்றும் பரியென நடாத்த லுற்றான். ......
499(தடக்கடல் உடைய)
தடக்கடல் உடைய மேருத் தடவரை இடிய மற்றைப்
படித்தலம் வெடிப்பச் செந்தீப் பதைபதைத் தொடுங்கச் சூறை
துடித்திட அண்ட கூடந் துளக்குறக் கலாபம் வீசி
இடித்தொகை புரள ஆர்த்திட் டேகிற்றுத் தோகை மஞ்ஞை. ......
500(படத்தினின் உலகம்)
படத்தினின் உலகம் போற்றும் பணிக்கிறை பதைப்பப் பாங்கர்
அடுத்திடு புயங்கம் முற்றும் அலமர அவனி கேள்வன்
இடத்தமர் கின்ற பாம்பும் ஏங்குற விசும்பிற் செல்லும்
உடற்குறை அரவும் உட்க உலாயது கலாப மஞ்ஞை. ......
501(பாரொடு விரிஞ்சன்)
பாரொடு விரிஞ்சன் தன்னைப் படைத்திட பன்னாள் மாயன்
காரென வந்து முக்கட் கடவுளைப் பரித்த தேபோல்
வீரருள் வீரனாகும் வேலுடைக் குமரன் தன்னைச்
சூருரு வாகி நின்ற தோகைமேல் கொண்ட தம்மா. ......
502(வெயில்விடும் அநந்த)
வெயில்விடும் அநந்த கோடி வெய்யவர் திரண்டொன் றாகிப்
புயல்தவழ் கடவுள் வானில் போந்திடு தன்மை யேபோல்
அயிலினை யுடைய செவ்வேள் மரகதத் தழகு சான்ற
மயிலிடை வைகி ஊர்ந்தான் மாமுகந் திசைகள் முற்றும். ......
503(நேமிகள் ஏழும் ஒன்)
நேமிகள் ஏழும் ஒன்றாய் நிமிர்ந்தெழும் வடவை முற்றுந்
தாமொரு வடிவாய் அங்கட் சார்ந்திடு நிலைமை யென்ன
மாமயில் உயர்த்துச் சென்ற வாகைவேல் வீரன் மீண்டு
தீமைகொள் அவுணன் மூதூர்ச் செருநிலத் தெல்லை புக்கான். ......
504(புக்குள குமர மூர்த்தி)
புக்குள குமர மூர்த்தி பொறிமயில் உருவ மாயுங்
குக்குட மாயும் நின்ற அமரரைக் குறித்து நோக்கி
மிக்கநும் மியற்கை யாகி மேவுதிர் விரைவின் என்ன
அக்கணம் அவருந்தொல்லை வடிவுகொண் டடியில் வீழ்ந்தார். ......
505(வள்ளலை வணங்கி)
வள்ளலை வணங்கிப் பல்கால் வழுத்தியே தொழுது தத்தம்
உள்ளமும் புறத்தில் என்பும் உருகிட விழியில் தூநீர்
தள்ளுற வுரைகள் முற்றுந் தவறிடப் பொடிப்ப யாக்கை
கள்ளுண வுற்ற வண்டின் களிமகிழ் சிறந்து நின்றார். ......
506(வீசுறு சுடர்வேல் ஐயன்)
வீசுறு சுடர்வேல் ஐயன் வெய்யசூர் முதலைச் சாடித்
தேசுறு மஞ்ஞை ஊர்ந்து வந்தது தெரிந்து போர்செய்
காசினி யிடையே நின்ற கணங்களும் வீரர் யாரும்
ஆசறும் இளவ லுஞ்சென் றடிதொழு தார்த்துச் சூழ்ந்தார். ......
507ஆகத் திருவிருத்தம் - 7794