(இன்ன பண்பினாற்)
இன்ன பண்பினாற் சிவனடி வழிபடல் இயற்றி
அந்நி லைக்கள நீங்கியே அமரர்கண் முனிவர்
தன்ன தானையந் தலைவர்கள் புடைதழீஇச் சாரப்
பொன்னின் மஞ்ஞையின் எருத்தமேல் கொண்டனன் புனிதன். ......
1(சீர்தயங் கியம யூர)
சீர்தயங் கியம யூரமேல் அமர்தருஞ் செவ்வேள்
சார்த லுற்றிடு மாலயன் மகபதி தம்மை
நேர்த லில்படை வீரரை நோக்கியே நீவிர்
ஊர்தி மேலராய் வம்மின் நம்புடையென உரைத்தான். ......
2வேறு(மற்றது காலையில்)
மற்றது காலையில் வண்டு ழாய்முடிக்
கொற்றவன் முதலிய குழுக்கொ டேவரும்
வெற்றிகொள் வீரரும் வேறு தத்தமக்
குற்றிடும் ஊர்திமேல் ஒருங்குற் றீண்டினார். ......
3(ஞாயிறு கறங்கென)
ஞாயிறு கறங்கென நணுகும் பொன்முடிக்
கோயிலின் மருங்கினில் குழீஇக் குழீஇயிரண்
டாயிர வெள்ளமாம் அடல்வெம் பூதரும்
ஏயென எழுந்தனர் எழுந்த பூழியே. ......
4(மிக்குயர் அறிஞரை)
மிக்குயர் அறிஞரை மேவில் கீழ்மைசெய்
மக்களு மேல்நெறி அடைதல் வாய்மையே
தக்கதொல் பூதர்கள் சரணந் தோய்தலில்
புக்கது பொன்நகர் புவியும் பூழியாய். ......
5(அழற்றிய பல்கதிர்)
அழற்றிய பல்கதிர் ஆத பத்திரம்
நிழற்றிய விண்ணளாய் நிமிர்ந்த கேதனங்
குழற்றிய துளைவயிர் கோடு காகளம்
மிழற்றிய பேரிகை மிகவும் ஆர்த்தவே. ......
6(மேக்குயர் வட்டமும்)
மேக்குயர் வட்டமும் விளங்கு காம்புமாய்
நீக்கமில் கவிகைகள் நிழற்றி மல்குவ
மாக்கிளர் பஃறொடை வானக் கம்பலந்
தூக்கிய திறனெனத் தோன்று கின்றவே. ......
7(மேற்றலை கடவிய)
மேற்றலை கடவிய வெய்யன் வெம்மையால்
நோற்றலை எய்திவான் உணங்க நோன்றிரை
ஆற்றலை முயன்றென அனிக வேலையுட்
கோற்றலை அசைவவெண் கொடியின் கானமே. ......
8(பாங்கமை பதலை)
பாங்கமை பதலையே முதல பல்லியம்
ஆங்கொலி வழங்குவ அவுணத் தீயரைத்
தாங்கினை யென்றிறை தண்டஞ் செய்திட
வாங்கிய திரைக்கடல் வாய்விட் டொக்குமால். ......
9(காந்தளஞ் சென்னி)
காந்தளஞ் சென்னியன் கடவு மாமயில்
கூந்தொறுங் கூந்தொறுங் குலைந்து பஃறலைப்
பாந்தளங் கசைதலும் பசலை மூக்கினால்
ஆய்ந்திடு கின்றன அகிலங் குத்தியே. ......
10(மூக்குடை அலகினால்)
மூக்குடை அலகினால் முகிலைக் கீறியே
ஊக்கொடு பரலென உருமுப் பற்றுமால்
தீக்கிளர் வன்னதோர் செய்ய சூட்டுடைக்
கூக்குரல் வாரணங் கொடிய தாகையால். ......
11(இந்நிகழ் வுற்றிட)
இந்நிகழ் வுற்றிட எழுந்த தானைகள்
முன்னயல் கடைக்குழை மொய்த்துச் சென்றிடப்
பன்னிரு மொய்ம்புடைப் பகவர் மேலவன்
அந்நக ரத்தினும் அகன்று போயினான். ......
12(பொரியரை விளவு)
பொரியரை விளவுகால் புனிற்றுத் தீங்கனி
வருபயன் கொண்டுதாம் வறிது வீழ்த்தெனக்
கரியினம் பாரிடக் கணங்கள் ஆர்ப்பினால்
வெருவின உணர்வில மயங்கி வீழ்ந்தவே. ......
13(சாற்றிடில் தம்வினை)
சாற்றிடில் தம்வினை தம்மைச் சூழுமால்
ஆற்றலில் பெற்றம தலைக்கும் வல்லியம்
மாற்றருந் துப்புடை வயவர் தானையுள்
ஏற்றுரி முரசினுக் கிடைந்த ழிந்தவே. ......
14(குஞ்சரம் எறிந்திடு)
குஞ்சரம் எறிந்திடுங் கொலைவல் கோளரி
எஞ்சலில் கயமுகர் எண்ணில் பூதர்கள்
விஞ்சிய பிளிற்றொலி வினவி மெய்பனித்
தஞ்சின நஞ்செழ அயர்ந்த தேவர்போல். ......
15(உரங்குறை போழ்)
உரங்குறை போழ்தில்யார் ஒடுங்கல் இல்லவர்
வரங்குறை மான்முக வயவர் ஓதையால்
கரங்குறை வின்றிநீள் கடுங்கண் யாளிபோய்க்
குரங்குறை சூழலுட் குலைந்து புக்கவே. ......
16(வசைபடு பாரிடம்)
வசைபடு பாரிடம் வழுக்க லில்வகை
மிசைபடும் ஊற்றமாய் மேற்கொண் டுற்றன
இசைபடு பாரிடம் இடிக்குங் கொட்பினால்
அசைபடு கின்றன அடுக்க லானவே. ......
17(உரகமும் மடங்கலும்)
உரகமும் மடங்கலும் ஒடுங்கி உட்கியே
வரைகளின் முழைபுக வானத் தார்ப்பன
அரிமுக வீரர்தம் அரவத் தன்மையால்
இரிவன புரள்வன எழிலி யேறெலாம். ......
18(காட்டக எயினர்)
காட்டக எயினர்தங் கல்லென் சும்மையால்
கூட்டுறை புட்குலங் குலைவுற் றாலெனச்
சூட்டுடை வாரணந் தோகை ஆர்ப்பது
கேட்டுளம் நடுங்கினர் கிலேசங் கொண்டுளார். ......
19(அரங்குறு மதலை)
அரங்குறு மதலைமேல் ஆடு நீரரின்
மரங்களை அலைத்திடு கடுவன் மந்திகள்
கரங்குலை வோடுபற் காட்டி வாய்வெரீஇ
இரங்கின சேவலங் கொடியி டிப்பினால். ......
20(ஆரண முழங்கொலி)
ஆரண முழங்கொலி அமரர் வாழ்த்தொலி
சீரண இயவொலி சேனைப் பேரொலி
காரணம் இல்லவன் கடவு மாமயில்
வாரண வொலிகளான் மறைத லுற்றவே. ......
21(இடனுறு குறிஞ்சி)
இடனுறு குறிஞ்சியில் இனைய தன்மையால்
நடவைகொள் பெரும்படை நடுவண் ஏகியே
சுடர்பொழி வேலினான் தூய கூடலின்
குடதிசை யமர்பரங் குன்றை எய்தினான். ......
22(ஆவதோர் பொழுதி)
ஆவதோர் பொழுதினில் அங்கண் முன்னுறை
மூவிரு தவத்தரும் முளரி யான்முதல்
ஏவரும் எந்தையை இறைஞ்சி இவ்விடை
மேவுதி சிறந்ததிவ் வெற்பென் றோதினார். ......
23(என்றலும் முருகவேள்)
என்றலும் முருகவேள் யாமும் இவ்வரைச்
சென்றிட நினைந்தனம் அதனைச் செப்பினீர்
நன்றும தெண்ணமும் நமது சிந்தையும்
ஒன்றிய வேயென உவப்பிற் கூறினான். ......
24(மைம்மலை துழனியும்)
மைம்மலை துழனியும் வடிவும் பெற்றுடைக்
கைம்மலை பொழிதரு கடாங்கொள் சாரலின்
அம்மலை யேறினன் அமலை தன்னொரு
செம்மலை யாகிவந் துதித்த சிற்பரன். ......
25(வற்றருந் திரைக்கடல்)
வற்றருந் திரைக்கடல் வடாது மாதிரப்
பொற்றையை நுகர்ந்தெனப் பூத சேனைகள்
கொற்றவன் வருபரங் குன்றின் சாரலைச்
சுற்றிய மிசையினுந் துவன்றிப் புக்கவே. ......
26(காலையங் கதுதனி)
காலையங் கதுதனிற் கடவுட் கம்மியன்
மாலுறு கிரிதனில் வரம்பில் வீதியுங்
கோலநற் றெய்வதக் குலமுங் கோயிலுஞ்
சோலையும் வாவியுந் துவன்ற நல்கினான். ......
27(அத்துணை எம்பிரான்)
அத்துணை எம்பிரான் அமரர் கம்மியன்
கைத்தொழில் நோக்கியே கருணை செய்துபோய்ச்
சித்திர மறுகிடைச் சேனை வீரரை
வைத்தனன் மந்திர வரைப்பை எய்தினான். ......
28(ஏயின மஞ்ஞைநின்)
ஏயின மஞ்ஞைநின் றிழிந்து நான்முகன்
மாயவன் மகபதி வயவர் மற்றையோர்
ஆயினர் புடைவர அவையி னூடுபோய்ச்
சீயமெல் லணைமிசைச் சிறப்பின் வைகினான். ......
29(பரீஇயயல் வந்திடு)
பரீஇயயல் வந்திடு பங்க யன்முதல்
மரீஇயினர் தமையெலாம் வயின்வ யின்றொறும்
ஒரீயினன் அமரரை ஒல்லை யேவினான்
பொரீஇயினர் இல்லதோர் புனித மேலையோன். ......
30(குலக்கிரி பொருவி)
குலக்கிரி பொருவிய குறளின் வேந்தரும்
வெலற்கருந் திறலுடை வீர மொய்ம்பனும்
இலக்கரும் எண்மரும் யாரும் எந்தைதன்
மலர்க்கழல் தொழுதனர் மருங்கின் ஈண்டினார். ......
31(ஏவலின் இயன்றனர்)
ஏவலின் இயன்றனர் இனையர் நின்றிட
மூவிரு பராசர முனிசி றார்களுஞ்
சேவலை யுயரிய தேவ நாயகன்
பூவடி அருச்சனை புரிந்து போற்றினார். ......
32(வழிபடு புதல்வர்கள்)
வழிபடு புதல்வர்கள் வழுத்தி நின்றுழி
உழுவலன் போடுகண் ணோடிச் செஞ்சடைக்
குழவிவெண் பிறையினான் கூறுந் தொல்லருள்
முழுவதும் நினைந்தனன் முற்று ணர்ந்துளான். ......
33(சலம்புரி யும்பரா)
சலம்புரி யும்பரா சரனெ னும்முனி
குலம்புரி தவமெனுங் குமரர் தேர்வுறப்
புலம்புரி போதகப் பொருண்மை யாவையும்
நலம்புரி குமரவேள் நவின்று வைகினான். ......
34(பொருவரு மகேந்திர)
பொருவரு மகேந்திர புரத்தை நீங்கியே
தரணியில் வந்தவா சாற்றி னாம்இனிப்
பெருமைகொள் இந்திரன் பெண்ணை எம்பிரான்
திருமணஞ் செய்திடுஞ் செய்கை செப்புவாம். ......
35ஆகத் திருவிருத்தம் - 7892