(மாயையின் வலியோ)
மாயையின் வலியோ னாகி மான்முத லோரை வென்றே
ஆயிரத் தோரெட் டண்டம் அரசுசெய் துகநூற் றெட்டுக்
காயம தழிவின் றாகிக் கடவுளர்க் கலக்கண் செய்த
தீயசூர் முதலைச் செற்ற குமரன்றாள் சென்னி வைப்பாம். ......
1(உலகினுள் மேல)
உலகினுள் மேல தாகி ஓங்குபே ரொளியாய் வான்மேல்
தலைமைய தாகி வைகுஞ் சத்திய வுலகந் தன்னில்
புலனுணர் முனிவர் தேவர் புதல்வர்கள் புடையிற் போற்ற
மலரயன் தனது கோயில் மன்றில்வீற் றிருந்தான் அன்றே. ......
2(இருந்திடு காலை)
இருந்திடு காலை வேதா யாவையும் அளிப்ப மேனாள்
தெரிந்தருள் பதின்ம ராகுஞ் சீர்கெழு குமரர் தம்முட்
பொருந்திய தக்கன் என்னும் புந்தியின் மேலோன் முன்செய்
அருந்தவ நெறியால் ஈதொன் றையனை வினவ லுற்றான். ......
3(தேவரின் முதல்வ)
தேவரின் முதல்வ ராகிச் சிற்குணத் தலைவ ராகி
மூவரில் உயர்ந்தோ ராகி முடிவிலா ஒருவ ராகி
ஓவற வுயிர்கள் தோறும் உயிரென வுறைவோ ராகி
மேவினர் தம்மைத் தேற விளம்புதி மேலோ யென்றான். ......
4(என்றுதன் மைந்தன்)
என்றுதன் மைந்தன் இவ்வா றியம்பலும் மலரோன் கேளா
நன்றிது மொழிவன் கேட்டி நாரணன் தானும் யானும்
அன்றமர் இயற்றும் எல்லை அழலென எழுந்து வானில்
சென்றதோர் சிவனே யார்க்கு மேலவன் தெளிநீ என்றான். ......
5(தருசெயல் வல்லோன்)
தருசெயல் வல்லோன் ஈது சாற்றலுஞ் செயலோர் மூன்றின்
இருசெயல் புரியும் நீவிர் ஏதில ராகப் பின்னர்
ஒருசெயல் புரியும் ஈசன் உங்களுக் கிறைவ னாகி
வருசெயல் என்னே சிந்தை மயக்கற வுரைத்தி யென்றான். ......
6(தற்புகழ் கருத்தின்)
தற்புகழ் கருத்தின் மிக்க தக்கன்ஈ துரைத்த லோடுஞ்
சிற்பரன் நிலைமை அன்னான் அருளினால் தெரிந்த வேதாச்
சொற்படு மறைகள் முன்நீ துகளறக் கற்றுத் தூய
நற்பொருள் தெரிந்த வாறு நன்றுநன் றென்ன நக்கான். ......
7(பின்னுற முடிப்பான்)
பின்னுற முடிப்பான் தன்னைப் பிரானெனத் தேற்றுந் தன்மை
என்னென வுரைத்தி மைந்த எங்களைச் சுரரை ஏனைத்
துன்னிய வுயிர்கள் தம்மைத் தொலைவுசெய் திடுவன் ஈற்றில்
அன்னவன் என்னில் முன்னம் அளித்தவன் அவனே அன்றோ. ......
8(அந்தநாள் ஒருவ)
அந்தநாள் ஒருவ னாகி ஆருயிர்த் தொகையைத் தொன்னாள்
வந்தவா றொடுங்கச் செய்து மன்னியே மீட்டும் அன்னை
தந்தையாய் உயிர்கட் கேற்ற தனுமுதல் அளிக்கும் முக்கண்
எந்தைதன் செய்கை முற்றும் இனையதென் றிசைக்கற் பாற்றோ. ......
9(செங்கண்மால் தன்னை)
செங்கண்மால் தன்னை என்னைத் திண்டிறல் மொய்ம்பின் நல்கி
அங்கண்மா ஞாலங் காப்பும் அளிப்பதும் உதவி யாமும்
உங்கள்பால் இருத்து மென்றெம் முயிருள்நின் றியற்றா நின்றான்
எங்களால் முடியுஞ் செய்கை யாவதும் இல்லை கண்டாய். ......
10(உயிருள்நின் றியற்றல்)
உயிருள்நின் றியற்றல் அன்றி உற்றநஞ் சிந்தை உள்ளும்
இயன்முறை வழாது காப்போன் இருவிழி யகத்து மானான்
மயலுறு பொழுதும் எம்பால் வந்தருள் செய்வன் தானோர்
செயல்புரி கின்றான் போல எம்மொடு செறிவன் அன்றே. ......
11(எள்ளுறும் எண்ணெய்)
எள்ளுறும் எண்ணெய் என்ன எறிமணி அரவ மென்னக்
கள்ளுறு போது கான்ற கடியெனச் சலாகை தன்னில்
தள்ளுற அரிய சோதி தானென உலக மெங்கும்
உள்ளொடு புறமு மாகி ஒருமையாற் பரவும் அன்றே. ......
12(வேதமே முதலா வுள்ள)
வேதமே முதலா வுள்ள வியன்கலை அனைத்துந் தொன்னாள்
ஓதினான் அவனே எங்கட் குரைத்திட உணர்ந்தா மன்றே
ஈதுநீ அவற்றிற் காண்டி யாருமொன் றாகக் கொண்டாய்
பேதையோ பெரிது மென்னப் பிதாமகன் இனைய சொற்றான். ......
13(அவனிது புகற லோடும்)
அவனிது புகற லோடும் அருள்மகன் இசைப்பான் மேலாஞ்
சிவனருள் வேதம் பூதத் திறத்தையும் உயிர்க ளோடும்
எவரையும் பிரம மென்றே இசைப்பதென் எனது நெஞ்சங்
கவலுறு கின்ற தெந்தை கழறுதி கடிதின் என்றான். ......
14(என்னலுங் கமலத்)
என்னலுங் கமலத் தண்ண லியாவருந் தெரிதல் தேற்றா
உன்னரும் பெற்றி ஈதென் றுணர்தரக் கேட்டி அன்னான்
சொன்னதோர் மறைகள் தம்மில் துணிபுகேள் இறுதி யில்லா
முன்னவற் காத லுண்மை ஒழிந்தன முகம னாமால். ......
15(ஆதலால் ஈசன் அல்லா)
ஆதலால் ஈசன் அல்லா அனைவர்க்கும் உயிர்க்கும் ஐந்தாம்
பூதமா னவைக்கும் ஏற்றம் புகலுதல் முகம னாகும்
ஓதலா மேல தாக ஒருபொருள் புகழ வேண்டின்
வேதபா ரகரை அன்றோ யானென விளம்பு கின்றார். ......
16(யாதொரு பொருளை)
யாதொரு பொருளை யாவர் இறைஞ்சினும் அதுபோய் முக்கண்
ஆதியை அடையும் அம்மா அங்கது போலத் தொல்லை
வேதம துரைக்க நின்ற வியன்புகழ் அனைத்தும் மேலாம்
நாதனை அணுகும் எல்லா நதிகளுங் கடல்சென் றென்ன. ......
17(கேளினி மைந்த)
கேளினி மைந்த வேதக் கிளையெலாம் இயம்பு கின்ற
சூளுரை சிவனே யெல்லாந் தோற்றுவித் தளித்து மாற்றி
மீளவுந் தருகின் றானும் வியனுயிர்க் கருளை நல்கி
ஆளும்நா யகனும் ஆதி அந்தமி லோனும் என்னும். ......
18(அத்தனும் பகவன்)
அத்தனும் பகவன் தானும் அருவமும் உருவு மாகுஞ்
சுத்தனும் உணர்தற் கொண்ணாச் சோதியு மியாண்டு மேவுஞ்
சித்தனும் அநாதி தானுந் தேவர்கள் தேவு மென்று
நித்தனும் உயிர்க்குள் நீங்கா நிருத்தனும் அவனே என்னும். ......
19(மூன்றெனும் உலகந்)
மூன்றெனும் உலகந் தன்னில் முளைத்திடு பொருளை யெல்லாம்
ஈன்றருள் புரியுந் தாதை எனுந்திரயம் பகனும் யார்க்குஞ்
சான்றென நிற்கின் றோனும் தாணுவும் பரனுந் தன்னைப்
போன்றவர் உயர்ந்தோர் இல்லாப் புங்கவன் தானும் என்னும். ......
20(அண்ணலும் ஏகன்)
அண்ணலும் ஏகன் தானும் அளப்பருங் குணத்தி னானும்
கண்ணனும் அயனுந் தம்மால் காணிய நில்லான் தானும்
பெண்ணொடாண் அலிய தென்னும் பெற்றியி லோனும் யாரும்
எண்ணிய எண்ணி யாங்கே ஈபவன் தானும் என்னும். ......
21(விதிமுதல் உரைக்க)
விதிமுதல் உரைக்க நின்ற வியனுயிர்த் தொகைகட் கெல்லாம்
பதியென அருளுந் தொன்மைப் பசுபதி தானும் அன்னோர்க்
கதிகனென் றெவருந் தேற ஆங்கவர் துஞ்ச வெந்த
பொதிதரு பலியும் என்பும் புனைபவன் தானும் என்னும். ......
22(ஊன்புகும் எவரை)
ஊன்புகும் எவரை யுந்தன் ஒண்குணத் தொடுக்கித் தானே
வான்புக லாகி நின்று மற்றவர் குணங்க ளூடு
தான்புக லில்லா தோனுந் தன்னியல் இனைய தென்றே
யான்புக லரிய தேவும் ஈசனும் அவனே என்னும். ......
23(அன்றியும் ஒன்று கேண்)
அன்றியும் ஒன்று கேண்மோ அம்புய னாதி யாகி
நின்றவர் தம்மை யெல்லாம் நீக்கியச் சிவனென் றுள்ள
ஒன்றொரு முதல்வன் தானே உய்த்திடு முத்தி வேண்டின்
என்றும்அஃ தியம்பிற் றென்னின் யாவரே தேவர் ஆவார். ......
24(பரசிவன் உணர்ச்சி)
பரசிவன் உணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையு மென்றும்
விரவிய துயர்க்கீ றெய்தி வீடுபே றடைதும் என்றல்
உருவமில் விசும்பின் தோலை உரித்துடுப் பதற்கொப் பென்றே
பெருமறை இயம்பிற் றென்னில் பின்னுமோர் சான்றும் உண்டோ. ......
25(இன்னமும் பலவுண்)
இன்னமும் பலவுண் டன்னாற் கியம்பிய மறையின் வாய்மை
அன்னதை எனக்கும் உன்னி அறையொணா தறைவன் என்னில்
பன்னெடுங் காலந் தேயும் பகரினும் உலவா தென்பால்
முன்னமீ துணர்ந்தா யேனும் மோகமுற் றாய்கொல் ஐயா. ......
26(காரெழில் புரையும்)
காரெழில் புரையும் மேனிக் கண்ணனை என்னைப் பின்னை
ஆரையும் புகழும் வேதம் அரன்றனைத் துதித்த தேபோல்
ஓருரை விளம்பிற் றுண்டோ உரைத்தது முகமன் என்றே
பேருல கறிய முன்னும் பின்னரும் விலக்கிற் றன்றே. ......
27(நான்மறை தனிலோர்)
நான்மறை தனிலோர் பாகம் நாரமார் கடவுட் சென்னி
மேன்மைய தியம்பும் எம்மை விண்ணவர் தம்மை ஏனைப்
பான்மைகொள் பூதந் தன்னைப் பல்பொருள் தனையும் பாதி
தான்மொழிந் திடுமால் ஈது தவறல உணர்தி தக்கோய். ......
28(நம்மையும் பரமென்)
நம்மையும் பரமென் றுன்னி நாதனிற் சிறப்புச் செய்யும்
வெம்மைகொள் நெஞ்சர் தீரா விழுமவெந் நிரயம் வீழ்வர்
தம்மையஃ தெடுத்தல் செய்யா சமமெனப் புகல்கிற் போர்கள்
எம்மையுந் துயர மென்னும் இருங்கடற் படுப்பர் அன்றே. ......
29(கானுறு புலித்தோ)
கானுறு புலித்தோ லாடைக் கண்ணுதற் கடவுட் கன்பர்
ஆனவ ரென்றும் அன்னாற் கடித்தொழில் புரிந்து வாழும்
வானவ ரென்றும் எம்மை வழுத்தினர்க் கருள்வோம் அல்லா
ஏனையர் தம்மைத் தெவ்வென் றேண்ணியே இருத்தும் யாமே. ......
30(பதியரன் பாசந்)
பதியரன் பாசந் தன்னில் பட்டுழல் பசுநாம் என்றே
விதியொடு மறைகள் கூறும் மெய்ம்மையைத் தெளிய வேண்டின்
இதுவென வுரைப்பன் யாங்கள் இவ்வர சியற்ற ஈசன்
அதிர்கழல் அருச்சித் தேத்தும் ஆலயம் பலவுங் காண்டி. ......
31(அவனருள் பெறாது)
அவனருள் பெறாது முத்தி அடைந்தனர் இல்லை அல்லால்
அவனருள் இன்றி வாழும் அமரரும் யாரு மில்லை
அவனருள் எய்தின் எய்தா அரும்பொருள் இல்லை ஆணை
அவனல திறைவன் இல்லை அவனைநீ யடைதி என்றான். ......
32ஆகத் திருவிருத்தம் - 8310