(தந்தை இவ்வகை)
தந்தை இவ்வகை உரைத்தலுங் கேட்டுணர் தக்கன்
     முந்து வீடுசேர் நெறியினை முன்னலன் முக்கண்
          எந்தை யால்அயன் முதலவர் தம்மினும் யானோற்
               றந்த மில்வளம் பெறுவனென் றுன்னினன் அகத்துள். ......    
1(ஏத வல்வினை)
ஏத வல்வினை உழந்திடும் ஊழினால் இதனைக்
     காத லோடுனித் தந்தையை வணங்கிநீ கழறும்
          ஆதி தன்னையான் பரமென அறிந்தனன் அவன்பால்
               மாத வத்தினால் பெற்றிட வேண்டினன் வளனே. ......    
2(கணிப்பில் மாதவம்)
கணிப்பில் மாதவம் புரிதர ஓரிடங் கடிதில்
     பணித்து நல்குதி விடையென நான்முகப் பகவன்
          இணைப்பி லாததன் மனத்திடைத் தொல்லைநாள் எழுந்த
               மணிப்பெ ருந்தடத் தேகென விடுத்தனன் மன்னோ. ......    
3(ஈசன் நல்லருள்)
ஈசன் நல்லருள் அன்னதோர் மானதம் என்னும்
     வாச நீர்த்தடம் போகிஓர் சாரிடை வைகி
          வீசு கால்மழை ஆதபம் பனிபட மெலியாப்
               பாசம் நீக்குந ராமென அருந்தவம் பயின்றான். ......    
4(காலை நேர்பெற)
காலை நேர்பெற ஓட்டியே கனலினை மூட்டிப்
     பால மார்பயன் வீட்டியே தன்னுறு படிவத்
          தேலும் அன்பினில் மஞ்சனம் ஆட்டியே இறைக்குச்
               சீல மாமலர் சூட்டியுட் பூசனை செய்தான். ......    
5(சுத்தம் நீடிய)
சுத்தம் நீடிய தன்னுளம் ஒருமையில் தொடர
     இத்தி றத்தினால் எம்பிராற் கருச்சனை இயற்றிச்
          சித்த மேல்அவன் நாமமும் விதிமுறை செப்பிப்
               பத்து நூறியாண் டருந்தவம் புரிந்தனன் பழையோன். ......    
6(அன்னம் ஊர்திசேய்)
அன்னம் ஊர்திசேய் அன்னமா தவஞ்செயும் அதனை
     முன்னி நல்வளன் உதவுவான் மூரிவெள் ளேற்றில்
          பொன்னின் மால்வரை வெள்ளியங் கிரிமிசைப் போந்தால்
               என்ன வந்தனன் உமையுடன் எம்மையாள் இறைவன். ......    
7(வந்த செய்கையை)
வந்த செய்கையைத் தெரிதலும் விரைந்தெழீஇ மற்றென்
     சிந்தை எண்ணமும் முடிந்தன வால்எனச் செப்பி
          உந்து காதலுங் களிப்புமுள் புக்குநின் றுலவ
               எந்தை தன்னடி பரவுவல் யானென எதிர்ந்தான். ......    
8(சென்று கண்ணுதல்)
சென்று கண்ணுதல் அடிமுறை வணங்கியே சிறப்பித்
     தொன்று போலிய ஆயிரந் துதிமுறை யுரையா
          நின்ற காலையில் உன்செயல் மகிழ்ந்தனம் நினக்கென்
               இன்று வேண்டிய தியம்புதி யால்கடி தெனலும். ......    
9(ஆற்று தற்கரு நோன்)
ஆற்று தற்கரு நோன்மைய னாகியோன் அமலன்
     பேற்றின் வேண்டுவ கொள்கென இசைத்தலும் பிறவி
          மாற்றும் முத்திய திரந்திலன் தொல்விதி வழியே
               ஏற்ற புந்தியுஞ் சேறலின் மயங்கியீ திசைப்பான். ......    
10வேறு(நீணி லப்பெரு)
நீணி லப்பெரு வைப்பும் நிகரிலா
     வீணை வல்லவர் ஏனையர் மேவிய
          சேணும் மாலயன் ஊரும் திசையுமென்
               ஆணை செல்ல அளித்தருள் செய்தியால். ......    
11(உன்னை வந்து)
உன்னை வந்து வழுத்தும் உயிரெலாம்
     என்னை வந்து வழுத்தவும் யானினி
          நின்னை யன்றி நெஞ்சாலும் பிறர்தமைப்
               பின்னை வந்தியாப் பெற்றியும் ஈதியால். ......    
12(ஆய தேவர் அவுணர்)
ஆய தேவர் அவுணர்கள் யாரும்யான்
     ஏய செய்கை இயற்றவும் எற்குநற்
          சேயி னோர்களுஞ் சிற்றிடை மாதரும்
               மாய்வில் கொள்கையில் மல்கவும் நல்குதி. ......    
13(ஆதி யாகி அனைத்தை)
ஆதி யாகி அனைத்தையும் ஈன்றநின்
     பாதி யான பராபரை யான்பெறு
          மாத ராக மறையவ னாகிநீ
               காத லாகக் கடிமணஞ் செய்தியால். ......    
14(என்று தக்கன் இயம்)
என்று தக்கன் இயம்பலும் இங்கிது
     நன்று னக்கது நல்கினம் நன்னெறி
          நின்றி யென்னில் நிலைக்குமிச் சீரெனா
               மன்று ளாடிய வானவன் போயினான். ......    
15(ஈசன் அவ்வரம்)
ஈசன் அவ்வரம் ஈந்தனன் ஏகலும்
     நேச மோடவன் நீர்மையைப் போற்றியே
          தேசின் மிக்க சிறுவிதி யாரினும்
               பேசொ ணாத பெருமகிழ் வெய்தினான். ......    
16(ஓகை மேயவன்)
ஓகை மேயவன் ஓதிம வூர்திமேல்
     ஏகும் ஐயனை எண்ணலும் அச்செயல்
          ஆக மீதுகண் டன்னவன் மங்கையோர்
               பாகன் ஈந்த பரிசுணர்ந் தானரோ. ......    
17வேறு(பெற்றிடு மதலை)
பெற்றிடு மதலை யெய்தும் பேற்றினை அவன்பால் மேல்வந்
     துற்றிடு திறத்தை யெல்லாம் ஒருங்குற வுணர்வால் நாடித்
          தெற்றென உணர்ந்து தக்கன் சிவனடி உன்னிப் பன்னாள்
               நற்றவம் புரிந்த வாறும் நன்றென உயிர்த்து நக்கான். ......    
18(முப்புர முடிய)
முப்புர முடிய முன்னாள் முனிந்தவன் நிலைமை யான
     மெய்ப்பொருள் பகர்ந்தேன் மைந்தன் வீடுபெற் றுய்ய அன்னான்
          இப்பரி சானான் அந்தோ என்னினிச் செய்கேன் நிம்பங்
               கைப்பது போமோ நாளுங் கடலமிர் துதவி னாலும். ......    
19(ஆலமார் களத்தோன்)
ஆலமார் களத்தோன் தானே ஆதியென் றுணர்ந்து போந்து
     சாலவே இந்நாள் காறுந் தலையதாந் தவத்துள் தங்கி
          ஞாலமேல் என்றும் நீங்கா நவையொடு பவமும் பெற்றான்
               மேலைநாள் வினைக்கீ டுற்ற விதியையார் விலக்க வல்லார். ......    
20(செய்வதென் இனி)
செய்வதென் இனியான் என்னாச் சிந்தையின் அவலஞ் செய்து
     மைவளர் தீய புந்தி மைந்தனை அடைந்து வல்லே
          மெய்வகை யாசி கூறி மேவலும் வெய்ய தக்கன்
               இவ்விடை நகர மொன்றை இயற்றுதி ஐய வென்றான். ......    
21(என்னஅத் தக்கன்)
என்னஅத் தக்கன் கூற இமைப்பினில் அமைப்பன் என்றே
     கொன்னுறு கமலத் தண்ணல் குறிப்பொடு கரங்க ளாலே
          தன்னகர் என்ன ஒன்று தக்கமா புரியீ தென்றே
               பொன்னகர் நாணுக் கொள்ளப் புவியிடைப் புரிந்தான் அன்றே. ......    
22(அந்தமா நகரந்)
அந்தமா நகரந் தன்னில் அருந்தவத் தக்கன் சென்று
     சிந்தையுள் உவகை பூத்துச் சேணகர் தன்னுள் ஒன்றும்
          இந்தவா றணிய தன்றால் இணையிதற் கிஃதே என்னாத்
               தந்தைபால் அன்பு செய்து தன்பெருங் கோயில் புக்கான். ......    
23(தன்பெருங் கோயில்)
தன்பெருங் கோயில் எய்தித் தவமுனி வரர்வந் தேத்த
     மன்பெருந் தன்மை கூறும் மடங்கலந் தவிசின் உம்பர்
          இன்புறு திருவி னோடும் இனிதுவீற் றிருந்தான் என்ப
               பொன்புனை கிரியின் மீது பொலஞ்சுடர்க் கதிருற் றென்ன. ......    
24(கேசரி அணையின்)
கேசரி அணையின் மீது கெழீஇயின தக்கன் எண்டோள்
     ஈசன்நல் வரம்பெற் றுள்ள இயற்கையை ஏமஞ் சான்ற
          தேசிக னாகும் பொன்போய்ச் செப்பலுந் துணுக்க*
1 மெய்தி
               வாசவன் முதலா வுள்ள வானவர் யாரும் போந்தார். ......    
25(வானவர் போந்த)
வானவர் போந்த பான்மை வரன்முறை தெரிந்து மற்றைத்
     தானவர் குரவ னானோன் தயித்தியர்க் கிறையைச் சார்ந்து
          போனதுன் னவலம் அஞ்சேல் புரந்தரன் தனக்குத் தக்கன்
               ஆனவன் தலைவ னானான் அன்னவன் சேர்தி என்றான். ......    
26(சேருதி யென்னு)
சேருதி யென்னு மாற்றஞ் செவிதளிர்ப் பெய்தக் கேளா
     ஆரமிர் தருந்தி னான்போல் அகமுறும் உவகை பொங்க
          மேருவின் ஒருசார் வைகும் வெந்திறல் அவுணர் கோமான்
               காரென எழுந்து தொல்லைக் கிளைஞரைக் கலந்து போந்தான். ......    
27(ஆளரி ஏறு போலும்)
ஆளரி ஏறு போலும் அவுணர்கோன் சேற லோடும்
     வாளுறு கதிர்ப்புத் தேளும் மதியமும் மற்று முள்ள
          கோளொடு நாளும் ஏனைக் குழுவுறு கணத்தி னோரும்
               நீளிருந் தடந்தேர் மீதும் மானத்தும் நெறியிற் சென்றார். ......    
28(மங்குல்தோய் விண்)
மங்குல்தோய் விண்ணின் பாலார் மாதிரங் காவ லோர்கள்
     அங்கத நிலயத் துள்ளார் அனையவர் பிறரும் உற்றார்
          இங்கிவர் யாருந் தக்கன் இணையடி வணங்கி ஈசன்
               பொங்குபே ரருளின் ஆற்றல் புகழ்ந்தன ராகி நின்றார். ......    
29(அவ்வகை முளரி)
அவ்வகை முளரி அண்ணல் ஆதியாம் அமரர் தத்தஞ்
     செய்வினை யாக வுன்னி வைகலுஞ் செறிந்து போற்ற
          மெய்வகை உணராத் தக்கன் வியன்மதிக் குடையுங் கோலும்
               எவ்வகை உலகுஞ் செல்ல இருந்தர சியற்றல் செய்தான். ......    
30ஆகத் திருவிருத்தம் - 8340