Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

previous padalam   3 - தக்கன் மகப்பெறு படலம்   next padalamThakkan magappeRu padalam

Ms Revathi Sankaran (7.41mb)
(ஆங்கவன் தேவி)

ஆங்கவன் தேவி யானாள் அருந்ததிக் கற்பின் மிக்காள்
     வாங்கிய நுசுப்பின் நல்லாள் மறைக்கொடி யெனுநா மத்தாள்
          பூங்கம லத்துப் புத்தேள் பொன்னடி தன்னில் வந்தாள்
               ஓங்குதொல் லுலகுக் கெல்லாம் ஒருதனி முதல்வி யானாள். ......    1

வேறு

(சேயிழை அவளொடு)

சேயிழை அவளொடு செறிந்து புல்லியே
     மீயுயர் கமலமேல் விரிஞ்சன் காதலன்
          மாயிரும் பணிபதி மணிகள் ஈன்றென
               ஆயிர மைந்தரை அருளி னானரோ. ......    2

(அப்பெரு மைந்தர்)

அப்பெரு மைந்தர்கள் ஆயி னோர்க்கெலாம்
     முப்புரி நூல்விதி முறையின் ஆற்றியே
          செப்பரு மறைகளின் திறமும் ஈந்துபின்
               இப்பரி சொன்றினை இசைத்தல் மேயினான். ......    3

(நல்லதோர் மானதம்)

நல்லதோர் மானதம் நணுகி நீவிர்கள்
     எல்லிரும் ஈசனை எண்ணி நோற்றிரீஇப்
          பல்லுயி ருந்தரும் பரிசு பெற்றிவண்
               செல்லுதி ராலெனச் செப்பி ஏவினான். ......    4

(ஏயின காலையில்)

ஏயின காலையில் இறைஞ்சி மைந்தர்கள்
     போயினர் மானதப் பொய்கை புக்கனர்
          ஆயிடைப் படிந்தனர் அரனை உன்னியே
               மாயிரு நோன்பினை இயற்றி வைகினார். ......    5

(நேரற இன்னணம்)

நேரற இன்னணம் நெடிது நோற்புழி
     நாரதன் என்பவன் நண்ணி ஆயிடை
          வாரியுள் ஆற்றவும் வருந்து கிற்றிரால்
               காரியம் யாவது கழறு வீர்என்றான். ......    6

(என்னலும் முனிவகே)

என்னலும் முனிவகே ளியாங்கள்*1 நல்கிடும்
     முன்னுற நல்குவான் முயன்று முக்கணான்
          தன்னடி உன்னியே தவத்தை ஆற்றுதும்
               அன்னதும் எந்தைதன் ஆணையா லென்றார். ......    7

(அறிந்திடு முனிவரன்)

அறிந்திடு முனிவரன் அதனைக் கேட்டலுஞ்
     செறிந்திடு கரத்தொடு செங்கை தாக்குற
          எறிந்தனன் நகைத்தனன் இதுகொல் ஈசனால்
               பெறும்பரி சேயெனப் பின்னுங் கூறினான். ......    8

(ஈசனை யேநினை)

ஈசனை யேநினைந் திறைஞ்சி யேத்தியே
     பேசரும் அருந்தவம் பிடித்து மூவகைப்
          பாசம தகல்நெறி படரச் சிந்தியீர்
               ஆசுறு படைப்பினுக் கார்வஞ் செய்திரோ. ......    9

(சிறப்புள அருந்தவஞ்)

சிறப்புள அருந்தவஞ் செய்து நீர்இனி
     உறப்படு கதிமுறை உரைப்பக் கேட்டிரால்
          பிறப்புள திடருள தன்றிப் பின்னரும்
               இறப்புள ததுநுமக் கினிய தாகுமோ. ......    10

(இன்றுநீர் வெஃகிய)

இன்றுநீர் வெஃகிய தியற்று நான்முகன்
     தன்றலை ஐந்தினில் ஒன்று சங்கரன்
          பொன்றிகழ் கரங்கொளப் புகுந்த தீமையும்
               நின்றதோர் பழியையும் நினைக்கி லீர்கொலோ. ......    11

(என்னல திறையவர்)

என்னல திறையவர் இல்லை யார்க்கும்யான்
     முன்னவன் என்றுநான் முகத்தன் மாலொடு
          பன்னெடு நாளமர் பயின்று சோதிகண்
               டன்னம தானதும் அறிந்தி லீர்கொலோ. ......    12

(நேயமெண் ணுற்றென)

நேயமெண் ணுற்றென நிறைந்த கண்ணுதல்
     நாயகன் விதித்திட நம்மில் யாவையும்
          ஆயவென் றகந்தையுற் றமர்வன் அன்னவன்
               மாயமென் றுரைத்திடுந் தளையின் வன்மையால். ......    13

(பற்றொடு முழுதுயிர்)

பற்றொடு முழுதுயிர் படைக்கும் பான்மையால்
     பெற்றிடு பயனெவன் பெருமை யல்லது
          நற்றவ முனிவிர்காள் நன்கி தென்றொரு
               பொற்றளை தம்பதம் பூட்ட லாகுமோ. ......    14

(எத்துணை எத்துணை)

எத்துணை எத்துணை இன்பம் வேண்டுநர்க்
     கத்துணை அலக்கண்வந் தடையும் ஆங்கது
          மெய்த்திறம் நீவிரும் விதியின் நிற்றிரேல்
               கைத்துறு துயரெனுங் கடலில் சார்திரால். ......    15

(அன்றியும் ஈசனை)

அன்றியும் ஈசனை அயர்த்தி யாமிறை
     என்றுளம் உன்னுதிர் இசைவில் தீவினை
          மன்றவு மாற்றுதிர் மயக்கங் கொள்ளுதிர்
               ஒன்றிய பேருணர் வொருவிப் போதிரால். ......    16

(வீட்டிடும் இச்செயல்)

வீட்டிடும் இச்செயல் வீடு சேர்தர
     மோட்டுறு நிலைகொடு முயன்று கூடுதிர்
          ஈட்டுறு நன்னெறிக் கியைவ தொன்றினைக்
               காட்டியே இனைத்தெனக் கழற லாகுமோ. ......    17

(அற்றமில் தவம்புரி)

அற்றமில் தவம்புரிந் தரிய வீட்டினைப்
     பெற்றவர் அளப்பிலர் பெறுவ தாகியே
          உற்றவர் அளப்பிலர் உலகில் சிற்சில
               மற்றவர் தமதியல் வகுப்பக் கேண்மினோ. ......    18

(சுற்றம தரனடித் தொண்)

சுற்றம தரனடித் தொண்டர் அல்லது
     மற்றிலர் அவனடி மலர்க ளேயலால்
          பற்றிலர் சாலவும் இனிய பண்பினர்
               குற்றம தகன்றதோர் கொள்கை மேயினார். ......    19

(நேசமுற் றடைபவர்)

நேசமுற் றடைபவர் நினைப்பின் நீக்கரும்
     ஆசறுத் தருள்பொழி அறிவின் மேலையோர்
          ஈசனைக் குறுகியெஞ் ஞான்றும் வாழ்பவர்
               பேசுதற் கரியதோர் பெருமை எய்தினார். ......    20

(ஆதலின் அவரென)

ஆதலின் அவரென அவாஇன் றுற்றிடு
     மேதகு நெறியுறீஇ வீடு சேருதிர்
          ஏதமில் வெறுக்கைபெற் றெண்ணந் தீர்ந்திடுந்
               தாதைதன் பணியினைத் தவிர்திர் என்னவே. ......    21

(அந்தமில் வீடுபே)

அந்தமில் வீடுபே றடையும் ஊழுடை
     மைந்தர் கள்ஓர்புடை வந்து தேர்வுறாத்
          தந்தைசொல் லினுமிது தக்க தேயெனப்
               புந்திகொண் டடிகளை வணங்கிப் போற்றினார். ......    22

வேறு

(போற்று மைந்த)

போற்று மைந்த ரைப்பெரும் புறந்தழீஇ அரன்புகழ்
     சாற்றி வீடு வெஃகுறுந் தவத்தினோர்கள் நிலையினைத்
          தேற்றி மந்தி ரங்களுஞ் செயற்கையும் புணர்த்தியே
               மாற்றினன் தொல்லுணர்வு தன்னை மற்றொருண்மை உதவினான். ......    23

(வேறொ ருண்மை)

வேறொ ருண்மை உதவல்செய்து விதியின்நாடி வேதநூல்
     கூறு கின்ற முறைபுரிந்து குமரர்யாரும் இன்னணம்
          ஈறின் மாத வங்கள்ஆற்றி எல்லைதீர்ந்த முத்தியில்
               சேறி ரென்று முனிவன்ஒல்லை சேணெழுந்து போயினான். ......    24

(போகு நார தற்புகழ்)

போகு நார தற்புகழ்ந்து பொன்னடித் தலத்தின்மேல்
     ஓகை யோடு தாழ்ந்துமுன் உணர்த்துபான்மை உன்னியே
          மோக மாதி யானதீமை முழுதுமாற்றி மோனிகள்
               ஆகி மைந்தர் எவரும் அங்கண்ஆற்றினார் அருந்தவம். ......    25

(அருந்த வங்கள் பல)

அருந்த வங்கள் பலவும்ஆற்றி அவர்கள்வீடு சேர்தலும்
     இருந்த வம்பு ரிந்த தக்கன் இளைஞர்பெற்றி இன்னமுந்
          தெரிந்த தில்லைஎன்று சிந்தை செய்துபோத வுணர்வினால்
               பொருந்த நோக்க லுற்ற வட்பு குந்த பான்மை கண்டனன். ......    26

(மானதத்த டத்தி னூடு)

மானதத்த டத்தி னூடு மாற்றருந்த வத்தராய்
     மோனமுற்ற சிறுவர் பாலின் முன்னிவந்து நாரதன்
          ஞானமுற்று மோதி யென்சொல் நவையதென்று மாற்றியே
               மேனிலைக்கண் உய்த்து மீண்டு விண்படர்ந்து போயினான். ......    27

(மிக்க மைந்தர்அவன்)

மிக்க மைந்தர்அவன் உரைத்த விதியினின்று வீடுபே
     றொக்க லோடுமே யினார்கள் ஒருவரின்றி எற்கினி
          மக்க ளின்றெனத் தெரீஇ வருத்தமுற்றி ருந்திடுந்
               தக்கன் மற்றும் ஆயிரந் தவச்சிறாரை உதவினான். ......    28

(பெற்ற மைந்தரைத்)

பெற்ற மைந்தரைத் தழீஇப் பிறங்குகாமர் மீச்செல
     அற்றமில் சிறப்பின் வேதம் அறிவுறுத்தி ஆதியாம்
          நெற்றியங் கணானை உன்னி நீவிர்யாவும் நல்குவான்
               நற்ற வஞ்செய் தணைதிர் மானதத்தடத் தில்என்னவே. ......    29

(கேட்ட மைந்தர்)

கேட்ட மைந்தர் தாதைதாள் கெழீஇயதங்கள் சென்னியில்
     சூட்டி ஏவல் போற்றிஅன்ன தூமலர்த் தடத்திடை
          ஈட்ட மோடு சென்றிருந் திருந்தவம் புரிந்தனர்
               காட்டி லுள்ள கயமுனிக் கணங்கள்அங் கணுற்றென. ......    30

வேறு

(ஆன காலையில் அனை)

ஆன காலையில் அனைய மைந்தர்கள்
     ஊன மின்றிநோற் றொழுக முன்னரே
          போன நாரதன் புணர்ப்பொன் றோர்ந்திடா
               மான தத்தட மருங்கில் எய்தினான். ......    31

(எய்தி யாவர்நீர் யாரும்)

எய்தி யாவர்நீர் யாரும் மாதவஞ்
     செய்திர் எப்பொருள் சேர்தல் வெஃகினீர்
          நொய்தில் அன்னது நுவல வேண்டுமால்
               கைத வம்பெறாக் கருத்தி னீரென. ......    32

(தந்தை யாகியோன்)

தந்தை யாகியோன் தக்கன் ஆங்கவற்
     கந்தி வண்ணனார் அருளும் பேற்றினால்
          வந்த மைந்தரேம் யாங்கண் மற்றவன்
               இந்த வான்தடத் தெம்மை ஏவினான். ......    33

(தேவ தேவனைச்)

தேவ தேவனைச் சிந்தை யிற்கொடே
     ஆவி யோடுடல் அலச நோற்றிரீஇ
          ஓவில் பல்லுயிர் உதவல் பெற்றிட
               ஏவி னானெமை என்று சொற்றனர். ......    34

(சொற்ற காலையில்)

சொற்ற காலையில் துகளில் தூயவன்
     நற்ற வஞ்செய்வீர் தாதன் தாளையே
          பற்ற தாவுளீர் பயனென் றுன்னலீர்
               குற்றம் யாவரே குறுக லார்களே. ......    35

(நோற்றி யாவையும்)

நோற்றி யாவையும் நோக்கிச் செய்வினைப்
     பேற்றை எய்துவீர் பிறப்பு மாய்வது
          மாற்று வீரலீர் மயக்கந் தீர்திரோ
               ஏற்றம் என்கொல்நீர் ஈகின் றீரினும். ......    36

(மேய மாசுதோய்)

மேய மாசுதோய் விழைவின் மெய்யினர்
     தூய தோர்தடந் துறையை எய்தியுஞ்
          சேய சேதகந் திளைத்தல் போலுமால்
               நீயிர் கொண்டதோர் நிலைமை தானுமே. ......    37

(தலைய தாகிய தவ)

தலைய தாகிய தவந்த னக்குநீர்
     விலைய தாப்பெறும் விதியின் செய்கையும்
          நிலைய தாகுமோ நீடு நாளொடே
               உலக மீதுசீர் உறுவ தன்றியே. ......    38

வேறு

(போவதும் வருவதும்)

போவதும் வருவதும் பொருமலும் நன்குமின்
     றாவதோர் கதியதே ஆருயிர்க் குறுதியாம்
          நீவிரக் கதியினை நினைகிலீர் இறுதியும்
               ஓவரும் பிறவியும் உம்மைவிட் டகலுமோ. ......    39

(சிறுவர்தம் முள்ளமுஞ்)

சிறுவர்தம் முள்ளமுஞ் சேயிழை மகளிர்தம்
     அறிவுமா லெய்தினோர் சிந்தையும் ஆனவால்
          உறுவதோர் பனுவலும் உற்றிடும் பெற்றியே
               பெறுவதாம் அன்றியே பின்னரொன் றாகுமோ. ......    40

(ஆதலால் உங்களு)

ஆதலால் உங்களுக் கருள்செயுந் தன்மையான்
     தாதையா கின்றதோர் தக்கனே எனின்அவன்
          பேதையாம் ஈசனால் பெருவளம் பெற்றவன்
               பாததா மரையினில் பரிவுறா நெறிமையால். ......    41

(ஆங்கவன் மையலோன்)

ஆங்கவன் மையலோன் ஆதலால் அவனருள்
     நீங்களும் அனையரே நெறிதருந் தேசிகன்
          தீங்கெலாம் நீக்கியே சிவகதிப் பாற்பட
               ஓங்குபேர் அருளொடும் உணர்த்துவான் அல்லனோ. ......    42

(முந்துமா யிரவரும்)

முந்துமா யிரவரும் முன்பரிப் பொய்கைவாய்த்
     தந்தைதன் பணியின்மூ தாதைபோல் நல்கவே
          வந்துளார் நோற்றுழி மயலறத் தேற்றியே
               அந்தமா நெறிநிறீஇ அரியவீ டருளினாம். ......    43

(என்னலும் நாரதன்)

என்னலும் நாரதன் எழில்மலர்த் தாளிணை
     சென்னிமேற் சேர்த்தியே சிறியரேம் உய்யவே
          உன்னியீண் டேகிநீர் உணர்த்துமெய்ந் நெறியினை
               இன்னதென் றுணர்கிலேம் எமக்கருள் புரிதிரால். ......    44

(என்பவர்க் கருள்புரி)

என்பவர்க் கருள்புரிந் தெண்ணிலார் வத்தொடு
     நன்பொருட் காட்சியை நானுமக் குதவியே
          வன்புலத் தாறுபோய் மதிமருண் டின்பமுந்
               துன்புமுற் றுழல்பவந் தொலைவுசெய் திடுவனால். ......    45

(ஆதியார் தாளிணை)

ஆதியார் தாளிணை அருளொடே வழிபடும்
     நீதியாம் நீரினார் நிலைமையாய் நின்றிடும்
          பாதநான் கவர்பெறும் பதமுநான் கதனுளே
               ஓதியார் பெறுவதோர் உயர்பெருங் கதியதே. ......    46

(முத்தியென் றிடுவதே)

முத்தியென் றிடுவதே மொழிவதோர் நாமமாம்
     அத்திறங் கடவுளர்க் காயினுந் தெரிவதோ
          நித்தன்அன் புறுவதோர் நெறியராய் இருவினை
               ஒத்தபண் போர்களால் உணரலாம் அல்லதே. ......    47

(அந்நிலைக் கண்ணுளார்)

அந்நிலைக் கண்ணுளார் ஆதியார் தாளடைந்
     தின்னலுக் கிடையதாம் இப்பெரும் பிறவியுட்
          பின்னருற் றிடுகிலர் பேசுதற் கரியதோர்
               நன்னலத் தொடுகெழீஇ நாளுமின் புறுவரே. ......    48

(ஆதலால் நீவிரும்)

ஆதலால் நீவிரும் அந்நெறிப் பாலுறீஇ
     மேதைசால் யோகினால் வீடுசே ருதிரெனா
          ஆதியாம் இறைவனூல் அறையுமுண் மைகளெலாம்
               நாதனார் அருளினால் நாரத னுரைசெய்தான். ......    49

(அன்றுநா ரதமுனி)

அன்றுநா ரதமுனி அவரெலாம் அவ்வழி
     நின்றிடும் படிநிறீஇ நெறிகொள்வா னுலகமேல்
          சென்றனன் பின்னரச் சிறுவரா யிரவரும்
               ஒன்றுசிந் தனையினால் உயர்தவத் தொழுகினார். ......    50

(உயர்தவக் கிழமையில்)

உயர்தவக் கிழமையில் ஒழுகியே யுற்றுளோர்
     மயல்தொலைத் தருள்சிவன் மன்னுபே ரருளினால்
          வியனெறிப் பாலதாம் வீடுபே றெய்தினார்
               அயன்மகற் கினிமைகூர் ஆயிரங் குமரரும். ......    51

(உங்ஙனம் நாரதன்)

உங்ஙனம் நாரதன் ஓதிய துணர்வுறா
     இங்ஙனம் வீடுபே றெய்தலுஞ் சிறுவர்கள்
          எங்ஙனம் போயினார் இன்னும்வந் திலரெனா
               அங்ஙனஞ் சிறுவிதி அயருவான் ஆயினான். ......    52

வேறு

(போதத் துணர்வால்)

போதத் துணர்வால் அவர்க்கண் ணுறும் போழ்து தன்னின்
     மேதக்க மைந்தர் தமைநாரதன் மேவி மேலாம்
          ஓதித் திறமுள்ளன கூற உணர்ந்து நோற்றுத்
               தீதற்று வீடு புகுதன்மை தெரிந்த தன்றே. ......    53

(தெரிகின்ற வேலைக்)

தெரிகின்ற வேலைக் கிளர்கின்றது சீற்றம் உள்ளம்
     பரிகின்ற தாவி பதைக்கின்றது பையுள் மாலை
          விரிகின்ற தம்மா வியர்க்கின்றது மேனி விண்ணின்
               றிரிகின் றதுகோள் இரங்குற்றது ஞால மெல்லாம். ......    54

(தன்பா லகர்தஞ்)

தன்பா லகர்தஞ் செயல்கண்டு தளர்ந்து சோரும்
     வன்பா லினனா கியதக்கன் வரத்தை வேண்டும்
          என்பாலர் என்பால் இலதாக்கினன் எண்ண மிக்கு
               நன்பா லுலகத்து ழல்வானினி நாளு மென்றான். ......    55

(மேனா ரதன்செய்)

மேனா ரதன்செய் புணர்ப்புன்னி வெகுண்டு தக்கன்
     நோனாது சாபம் நுவன்றே நனிநோற்க மைந்தர்
          ஆனாரை நல்கேன் மகப்பெற்ற தமையு மென்னா
               மானார் தமையே புரியத்தன் மனம்வ லித்தான். ......    56

வேறு

(இருபதின் மேலும் மூவர்)

இருபதின் மேலும் மூவர் ஏந்திழை மாரை நல்கிப்
     பெருமை கொள்தக்கன் தன்மன் பிருகுவே மரீசி யென்போன்
          கருணை கொள்பு லத்தியன் அங்கிராப் புலகன் வசிட்டன்
               திரிவில் அத்திரி தீவேள்வி சீர்ப்பி தராவுக் கீந்தான். ......    57

(துய்யதோர் சுபுத்தி)

துய்யதோர் சுபுத்தி புத்தி சுரசையே திருதி துட்டை
     செய்யநற் கிரியை கீர்த்தி சிரத்தையோ டிலச்சை மேதா
          மைவிழிக் கத்தி சாந்தை வபுவைமுன் தருமன் வேட்டுப்
               பொய்தவிர் இருபா னேழு புதல்வரை அளித்தான் மன்னோ. ......    58

(கேதமில் பிருகு என்)

கேதமில் பிருகு என்பான் கியாதியைக் கொண்டு புல்லி
     ஏதமில் விதாதாத் தாதா என்றிரு சிறாரை ஈன்று
          சீதள வனசங் கொண்ட செந்திரு வையுமுன் தந்து
               மாதவன் தனக்கு நல்கி மாதவத் திருந்தான் மாதோ. ......    59

(தாரணி புகழ்ம ரீசி)

தாரணி புகழ்ம ரீசி சம்பூதி தன்னை வேட்டாங்
     கீரிரு பிணாக்கள் ஈந்தான் இவர்வழிப் பிறந்தார் பல்லோர்
          போரியல் புலத்தை வென்ற புலத்திய முனிவன் என்பான்
               நாரிசன் னதியை வேட்டு நன்மகார் பலரைத் தந்தான். ......    60

(அங்கிரா மிருதி)

அங்கிரா மிருதி என்னும் ஆயிழை தனைம ணந்து
     பங்கமில் அங்கி தீரன் பரதனாம் மகாரைப் பெற்று
          மங்கையர் நால்வர் தம்மை மகிழ்ந்துடன் அளித்தான் அன்னார்
               தங்குடிப் பிறந்த மேலைத் தவத்தரும் அளப்பி லோரால். ......    61

(பெருமைகொள் புல)

பெருமைகொள் புலகன் என்போன் பிருதியைக் கொண்டு தத்தாத்
     திரிதனைப் பயந்தான் அன்னோன் சீர்வழிக் கும்பன் போந்தான்
          ஒருமைசேர் வசிட்டன் என்போன் ஊற்சையை மணஞ்செய் தாங்கோர்
               தெரிவையை நல்கி மைந்தர் எழுவரைச் சிறப்பில் தந்தான். ......    62

(அத்திரி என்னு மேலோ)

அத்திரி என்னு மேலோன் அனசூயை தன்னை வேட்டுச்
     சத்தி நேத்திரனே திங்கள் சனிசங்க தானன் என்னும்
          புத்திரர் தம்மைத் தந்தான் பொங்குதீச் சுவாவை வேட்டு
               மெய்த்திறல் படைத்த மைந்தர் மூவரை விரைவொ டீந்தான். ......    63

(கவிபுகழ் கிரது வானோ)

கவிபுகழ் கிரது வானோன் கமைதனை மணத்திற் கூடி
     உவகையின் மூன்று பாலர் உதவினன் பிதரா என்போன்
          சுவதையென் றிசைக்க நின்ற துடியிடை தன்னை வேட்டுத்
               தவலருஞ் சிறப்பின் மேனை தரணிமங் கையரைத் தந்தான். ......    64

(அந்தநன் மேனை)

அந்தநன் மேனை தன்னை ஆர்வமோ டிமவான் கொண்டான்
     முந்துறு தரணி தன்னை முறையினால் மேரு வேட்டு
          மந்தர கிரியை நல்க மற்றது நோற்று முக்கண்
               எந்தைதன் னிடத்தெஞ் ஞான்றும் இருந்திடப் பெற்ற தன்றே. ......    65

(விண்ணுயர் மேருப்)

விண்ணுயர் மேருப் பின்னர் வேலையென் பவளை நல்கித்
     தண்ணுறு கடற்கு நல்கச் சரவணி என்ன ஆங்கோர்
          பெண்ணினை அனையன் பெற்றுப் பெரும்புகழ்ப் பிராசி னப்பேர்
               அண்ணலுக் குதவ அன்னான் ஐயிரு மகாரைத் தந்தான். ......    66

ஆகத் திருவிருத்தம் - 8406
*1. பா-ம்: நல்கிட.

(எண் = செய்யுளின் எண்)

*1. மறைக்கொடி - வேதவல்லி.

*3. மறைகளின் திறம் - வேதங்களை ஓதும் தன்மைகள்.

*4. பல்லுயிரும் தரும் பரிசு - பலவுயிர்களையும் படைக்கும் தன்மை.

*9. மூவகைப் பாசம் - ஆணவம் முதலியவை.

*10. உறப்படு - அடையத்தக்க.

*11. வெஃகியது - பெற விரும்பியது.

*13-1. நேயமெண்ணுற்றென நிறைந்த - எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்த. (நேயம் - நெய், எண் - எள்).

*13-2. தளை - பாசம்.

*14. பொற்றளை - பொன்விலங்கு.

*15. கைத்துறு - வெறுக்கத்தக்க.

*21. வெறுக்கை - செல்வம்.

*22-1. ஊழ்உடை - ஊழ்வினையினை உடைய.

*22-2. அடிகளை - நாரதன் அடிகளை.

*23-1. புறந்தழீஇ - மார்பொடு தழுவி.

*23-2. ஒரு உண்மை - ஒப்பற்ற முத்தி நிலையின் உண்மையினை.

*24. வேறொருண்மை - ஞான நிலை.

*26. போதவுணர்வு - ஞான உணர்ச்சி.

*27. மோனம் - மௌன நிலை.

*28. மற்றும் - பின்னரும்.

*30. கயமுனிக்கணங்கள் - யானைக்கன்றுகள்.

*32-1. நொய்தில் - விரைவில் *32-2. கைதவம் - வஞ்சனை.

*33. அந்திவண்ணனார் - சிவன்.

*36. ஈகின்றீர் - படைக்கப் போகின்றீர்.

*37. சேதகந்திளைத்தல் - சேற்றினைப் பூசிக்கொள்ளுதல்.

*39-1. பொருமலும் - துன்புறுதலும்.

*39-2. நன்கும் - இன்படைதலும்.

*41. பரிவுஉறா - அன்பு பொருந்தாத.

*42-1. ஆங்கவன் - அத்தக்கன்.

*42-2. நெறி - ஞான மார்க்கம்.

*42-3. அல்லனோ - அல்லவா.

*43. மூதாதைபோல் - பிரமனான பாட்டனைப்போல்.

*46-1. பாதம் நான்கு - சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன.

*46-2. பதம் நான்கு - சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்பன.

*46-3. ஓதியார் - ஞானமுடையவர்.

*47. கடவுளர் - தேவர்.

*54-1. பையுள்மாலை - துன்பவரிசை.

*54-2. கோள் - நவக்கிரகம்.

*54-3. இரிதல் - விலகி ஓடுதல்.

*56. மானார்தமை - பெண்மக்களை.

*57-1. தன்மன் - தருமன்.

*57-2. தீ - அக்கினி தேவன்.

*57-3. வேள்வி - பலி; இஃது இங்குக் 'கிரது' என்பவரைக் குறிக்கும் போலும்.

*59-1. செந்திரு - இலக்குமி.

*59-2. மாதவன் - திருமால்.

*59-3. மாதவம் - சிறந்த தவம்.

*64-1. கவி - கவிந்த.

*64-2. தரணி - பூமி.

*65-1. இமவான் - மலையரசன்.

*65-2. மேரு - மேருமலை.previous padalam   3 - தக்கன் மகப்பெறு படலம்   next padalamThakkan magappeRu padalam

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]