(இன்னபல் கிளைகள்)
இன்னபல் கிளைகள் மல்க இருந்திடுந் தக்கன் பின்னர்த்
துன்னிய நாண்மீ னத்துள் தொகைபெறும் இருபா னேழு
கன்னியர் தம்மை நல்கிக் கடிமண விதியி னீரால்
தன்னிகர் இல்லாப் பொற்பின் தண்மதிக் கடவுட் கீந்தான். ......
1(ஈந்தபின் மதியை)
ஈந்தபின் மதியை நோக்கி யார்க்குமோர் பெற்றித் தாக
வாய்ந்திடும் ஆர்வம் உய்த்து மருவுதி சிலர்பால் அன்பில்
தோய்ந்தொரு சிலரை எள்ளிச் சுளிகிற்பாய் அல்லை என்னா
ஆய்ந்திவை புகன்று தேற்றி அனையரோ டேகச் செய்தான். ......
2(ஏகிய கடவுட்)
ஏகிய கடவுட் டிங்கள் இலங்கெழில் மானத் தேறி
மாகநீள் நெறியிற் போந்து மடந்தையர் அவரை யெல்லாம்
ஓகையால் மேவ வுன்னி ஓர்பகற் கொருவர் பாலாய்ப்
போகமார் இன்ப மாற்றி வைகலும் புணர்ச்சி செய்தான். ......
3(இன்னணம் புணர்ச்சி)
இன்னணம் புணர்ச்சி போற்றி ஏகிய திங்கட் புத்தேள்
பன்னியர் அனையர் தம்மில் பழுதிலா ஆரல் தானும்
பின்னவள் தானும் ஆற்றப் பேரெழி லுடைய ராக
அன்னவர் திறத்து மேலாம் ஆர்வமோ டணுக லுற்றான். ......
4(ஏனையர் தம்பால்)
ஏனையர் தம்பால் சேரான் இருதுவின் வேலை பூத்த
தேனிமிர் சொல்லார் மாட்டுச் சேருறாக் கணவ ரேபோல்
வானிடை மதியப் புத்தேள் மறுத்தனன் திரியும் வேலை
ஆனதோர் பான்மை நோக்கி அவரெலாம் முனிந்து போனார். ......
5(போந்தனர் தக்கன்)
போந்தனர் தக்கன் தன்பால் பொருமியே பொலம்பூட் கொங்கை
ஏந்திழை மாதர் தங்கள் கேள்வன தியற்கை கூறக்
காந்திய உளத்த னாகிக் கனன்றவன் கலைகள் எல்லாம்
தேய்ந்தில வாக என்று தீமொழிச் சாபஞ் செய்தான். ......
6(செப்பருந் திருவில்)
செப்பருந் திருவில் வைகுஞ் சிறுவிதி என்பான் சொற்ற
இப்பெருஞ் சாபந் தன்னால் என்றுமெஞ் சாத திங்கள்
ஒப்பருங் கலைகள் வைகற் கோரொரு கலையாய் அஃகாப்
பொய்ப்பெருஞ் செல்வம் பெற்றோன் புகழெனக் குறைந்த அன்றே. ......
7(மூன்றுறழ் ஐந்து)
மூன்றுறழ் ஐந்து வைகல் முடிந்துழி மதியம் என்போன்
ஆன்றதண் கலையின் மூவைந் தழிதலும் அவனே யென்னச்
சான்றுரை செய்தல் போல்ஓர் தண்கலை இருத்த லோடும்
மான்றனன் மெலிந்து வெள்கி வானவர் கோனை உற்றான். ......
8(தக்கனென் பவன்)
தக்கனென் பவன்சா பத்தால் தண்கலை அனைத்தும் போகி
இக்கலை யொன்று நின்ற தீதும்இன் றிறக்கும் என்னில்
மிக்கஎன் னியல்புங் குன்றும் வியன்பெயர் தொலையும் யாண்டும்
புக்கதொல் புகழும் போகும் புகல்வசை யாகும் அன்றே. ......
9(ஈங்கினிச் செய்வ)
ஈங்கினிச் செய்வ தென்னோ உணர்கிலேன் எற்கோர் புந்தி
தீங்கற வுரைத்தி யென்னச் செப்பினன் இரங்கி ஏங்கித்
தாங்கரும் பையுள் வேலை சார்தலுந் தழுவி எற்கோர்
பாங்கனை அஞ்சல் என்னா இவைசில பகர்தல் உற்றான். ......
10(எந்தைவாழ் கயிலை)
எந்தைவாழ் கயிலை தன்னில் இபமுகன் முதிரை யாவுந்
தந்தபே ரகடும் அங்கைச் சகுலியும் நோக்கி நக்காய்
அந்தநாள் அனையான் சீறி ஆரும்நிற் காணா ராகி
நிந்தைசெய் தகல வேநீ நீசரின் திகழ்தி என்றான். ......
11(என்றவச் சாபந்)
என்றவச் சாபந் தன்னா லியாவரும் இறப்ப எள்ளி
அன்றுதொட் டுனைநோக் காராய் அகலநீ வெள்கி விண்மேல்
சென்றிலை ஒடுங்கல் நாடித் திசைமுகன் முதலோர் வெள்ளிக்
குன்றிடை ஏகி முன்னோன் குரைகழல் பணிந்து சொல்வார். ......
12(காண்டகு நினது)
காண்டகு நினது மேன்மை கருதிடான் இகழ்ந்து மாசு
பூண்டனன் அதனால் திங்கள் பொருமலுற் றொடுங்கும் அன்னான்
வேண்டுமிவ் வுலகிற் கெந்தை விதித்திடு சாபத் தன்மை
ஆண்டொரு வைகல் போற்ற அருள்புரிந் தளித்தி என்றார். ......
13(ஐங்கரன் அதனை)
ஐங்கரன் அதனைக் கேளா அவ்வகை அருள வெய்யோன்
திங்களின் முதலாம் பாலிற் செல்லுறு நாலாம் வைகல்
மங்குல்சூ ழுலகம் நோக்கா மரபினால் வதிந்தாய் மற்றப்
புங்கவற் கந்நாள் மிக்க பூசனை புரிய மேலோர். ......
14(இதுபழி ஒன்று)
இதுபழி ஒன்று நிற்க இன்றுநீ தக்கன் தன்னால்
புதியதோர் குறையும் பெற்றாய் பொலிவொடு திருவுந் தீர்ந்தாய்
மதியினை மதிய தற்றாய் மற்றினி வல்லை சென்று
விதியொடு பகர்தி சேயை வேண்டியீ தகற்று மென்றான். ......
15(வச்சிரம் எடுத்த)
வச்சிரம் எடுத்த செம்மல் மற்றிவை புகலும் எல்லை
இச்செயல் இனிது வல்லே ஏகுவல் அவ்வா றென்னா
அச்சென வெழுந்து திங்கள் அவன்பணி தலைக்கொண் டேகி
முச்சகந் தன்னின் மேலாம் முளரியான் உலகம் புக்கான். ......
16(தாமரை என்னு)
தாமரை என்னுந் தண்பூந் தவிசிடைத் திகழ்ந்த அண்ணல்
மாமல ரடியின் வீழா மாதுலன் வெகுண்டு சொற்ற
தீமொழி யுணர்த்தி உன்றன் சேயினைத் தெருட்டித் தீயேன்
தோமுறு கவலை மாற்றித் துடைத்திஇச் சாப மென்றான். ......
17(அன்னது மொழிந்த)
அன்னது மொழிந்த திங்கட் கம்புயன் மொழிவான் ஈண்டுத்
தன்னுள நெறிப்பால் அன்றிச் சார்கிலன் தக்கன் என்பான்
என்னுரை இறையுங் கொள்ளான் யான்அவன் மாட்டுஞ் செல்லேன்
முன்னுளன் அல்லன் யார்க்கும் முதல்வனே யாகி நின்றான். ......
18(சொல்லுவ பிறஎன்)
சொல்லுவ பிறஎன் வேறு தொல்லைநாள் யானே கூற
அல்லுறழ் கண்டத் தெந்தை அரும்பெருந் தன்மை யாவும்
ஒல்லையின் உணர்ந்து பன்னாள் உழந்ததோர் தவத்தால் இந்த
எல்லையில் திருவின் வைகி இறையும்அங் கவனை எண்ணான். ......
19வேறு(செக்கரிற் படர்சடை)
செக்கரிற் படர்சடைத் தீயின் தோற்றமாம்
முக்கணா யகன்எதிர் மொழிந்து வேண்டலாம்
எக்குறை யாயினும் எவரும் ஈண்டையில்
தக்கன்முன் ஓருரை சாற்ற லாகுமோ. ......
20(அண்ணலந் திருவிடை)
அண்ணலந் திருவிடை அழுந்தி யாரையும்
எண்ணலன் செந்நெறி இயற்ற வோர்கிலன்
கண்ணிலன் மதியிலன் களிப்பி னோர்மகன்
மண்ணிடை விரைவொடும் வழிக்கொண் டாலென. ......
21(களியுறு பெற்றியன்)
களியுறு பெற்றியன் கறுவு சிந்தையன்
அளியறு முகத்தினன் அருளில் வாய்மையன்
தெளிதரு முணர்விலன் சிதைந்து மேலிவன்
விளிவுறு பொருட்டின்இம் மேன்மை பெற்றுளான். ......
22(ஈண்டிவன் விளிதலும்)
ஈண்டிவன் விளிதலும் இன்றி எம்மனோர்
பூண்டநன் னிலைகளும் போக்கல் சிந்தியான்
நீண்டசெஞ் சடைமுடி நிமலன் அன்னவன்
வேண்டிய வரமெலாம் விரைவில் நல்கினான். ......
23(அன்னது நிற்கயாம்)
அன்னது நிற்கயாம் அவனை வேண்டுவம்
என்னினும் முனிவுறா இகழும் எம்மையும்
நின்னுறு சாபமும் நீக்க லான்இனிப்
பின்னொரு நெறியுள பேசக் கேண்மியா. ......
24(செய்யனைக் கண்ணு)
செய்யனைக் கண்ணுதற் சிவனை எம்மனோர்க்
கையனை அடிகளை அமல னாகிய
மெய்யனை அடைந்து நின்மேனி மாசினை
ஒய்யென அகற்றிலை உணர்வி லாய்கொலோ. ......
25(ஈதவன் முன்புசென்)
ஈதவன் முன்புசென் றிசைக்க நீக்குநின்
பேதுற அனையது பேசல் வேண்டுமோ
மேதகும் இருளினால் விளங்கி டாதவை
ஆதவன் காட்டுதற் கையஞ் செய்வரோ. ......
26(சிறாரென நமை)
சிறாரென நமையெலாஞ் சிறப்பின் நல்கிய
இறால்புரை சடைமுடி எந்தைக் கன்பராய்
உறாதவர் தம்மையும் உற்ற பான்மையர்
பெறாததோர் பொருளையும் பேச வல்லமோ. ......
27(தெருளொடு தன்னடி)
தெருளொடு தன்னடி சேருந் தொண்டினோர்
பருவரல் ஒழித்திடும் பான்மைக் கல்லவோ
விரிசுடர் கெழுவிய வெள்ளி ஓங்கலின்
அருளுரு வெய்தியே அமலன் மேயதே. ......
28(இடுக்கணங் கொருவர்)
இடுக்கணங் கொருவர்மாட் டெய்தின் எந்தைதன்
அடித்துணை அரணமென் றடைவ ரேயெனில்
துடைத்தவர் வினைகளுந் தொலைக்கும் இப்பொருள்
பிடித்திலை ஆற்றவும் பேதை நீரைநீ. ......
29(அந்தியஞ் சடைமுடி)
அந்தியஞ் சடைமுடி அண்ணல் தன்னடி
சிந்தைசெய் தடைந்திடு சிறுவன் மேல்வரு
வெந்திறல் நடுவனை விலக்கி அன்றுமுன்
வந்தருள் புரிந்தது மறத்தி போலுமால். ......
30(விஞ்சிய திரைகெழு)
விஞ்சிய திரைகெழு வேலை தன்வயின்
நஞ்சமன் றெழுதலும் நடுங்கி நாம்அவன்
தஞ்சென அடியிணை சாரத் தான்மிசைந்
தஞ்சலென் றருளிய தயர்க்க லாகுமோ. ......
31(வார்த்தன உமையவள்)
வார்த்தன உமையவள் மலர்க்கைத் தோன்றியே
ஆர்த்தெழு கங்கையிவ் வகிலம் எங்கணும்
போர்த்திட வெருவியாம் போற்றச் சென்னியில்
சேர்த்தியன் றளித்ததுந் தேற்றி லாய்கொலோ. ......
32(அளப்பருங் குணத்தின்)
அளப்பருங் குணத்தின்எம் மண்ணல் அன்பரால்
கொளப்படும் பேரருள் கூற்றின் பாலதோ
கிளத்திட அரியதேல் கேடில் பல்பகல்
உளப்பட உன்னினும் உலவிற் றாகுமோ. ......
33(ஆதலின் ஈண்டுநின்)
ஆதலின் ஈண்டுநின் றாதி நாயகன்
காதலின் மேயவக் கயிலை யுற்றவன்
பாதமிங் கரணெனப் பற்றி வல்லைநின்
பேதுறல்*
1 ஒழிமதி பெருந்தண் மாமதி. ......
34(என்றலும் அயன்பத)
என்றலும் அயன்பதத் திறைஞ்சி எம்பிரான்
நன்றிவை புகன்றனை ஞான மூர்த்திபால்
சென்றடை வேனெனச் செப்பி வெள்ளியங்
குன்றினை அணைந்து பொற்கோயில் மேயினான். ......
35(தன்னுறு பருவரல்)
தன்னுறு பருவரல் சாற்றக் காவலோன்
மன்னருள் நிலையொடு மரபின் உய்த்திடப்
பொன்னவிர் செஞ்சடைப் புனித நாயகன்
முன்னுற வணங்கினன் முடிவில் அன்பினால். ......
36(மேற்றிகழ் உபநிட)
மேற்றிகழ் உபநிட வேத வாய்மையால்
போற்றலும் வந்ததென் புகல்தி யாலெனச்
சாற்றினன் உயிர்தொறுந் தங்கித் தொல்வினை
தேற்றுபு வினைமுறை செலுத்துந் தொன்மையோன். ......
37(நங்களை அலைத்திடு)
நங்களை அலைத்திடு நண்ண லன்தனை
இங்கிவண் அடுதும்என் றிருட்கள் சூழ்ந்தென
மங்குலின் நிறங்கொடு வடிவம் வேறதாந்
திங்கள்நின் றெம்பிராற் கினைய செப்புவான். ......
38(வன்றிறல் தக்கன்)
வன்றிறல் தக்கன்முன் வழங்கு தீச்சொலால்
துன்றிருங் கலையெலாந் தொலைந்து போந்திட
ஒன்றிவண் இருந்ததால் உதுவுந் தேய்ந்திடும்
இன்றினி வினையினே னியாது செய்வதே. ......
39(எஞ்சிய இக்கலை)
எஞ்சிய இக்கலை இருக்கத் தேய்தரு
விஞ்சிய கலையெலா மேவ நல்குதி
தஞ்சநின் னலதிலை என்னத் தண்மதி
அஞ்சலை என்றனன் அருளின் ஆழியான். ......
40(தீர்ந்தன அன்றியே)
தீர்ந்தன அன்றியே திங்கள் தன்னிடை
ஆர்ந்திடு கலையினை அங்கை யாற்கொளா
வார்ந்திடு சடைமிசை வயங்கச் சேர்த்தினான்
சார்ந்தில தவ்வழித் தக்கன் சாபமே. ......
41(மேக்குயர் தலைவராம்)
மேக்குயர் தலைவராம் விண்ணு ளோர்கள்பால்
தாக்குறு வினையையுஞ் சாபம் யாவையும்
நீக்கிய தலைவன்இந் நிலவின் சாபத்தைப்
போக்கினன் என்பது புகழின் பாலதோ. ......
42(நெற்றியங் கண்ணுடை நிமலத்)
நெற்றியங் கண்ணுடை நிமலத் தெம்பிரான்
உற்றவர்க் கருள்புரி கின்ற உண்மையைத்
தெற்றென உணர்த்தல்போல் திங்க ளின்கலை
கற்றையஞ் சடைமிசைக் கவின்று பூத்ததே. ......
43வேறு(எந்தை அவ்வழி)
எந்தை அவ்வழி மதியினை நோக்கிநீ யாதுஞ்
சிந்தை செய்திடேல் எம்முடிச் சேர்த்திய சிறப்பால்
அந்த மில்லையிக் கலையிவண் இருந்திடும் அதனால்
வந்து தோன்றுநின் கலையெலாம் நாடொறும் மரபால். ......
44(நின்ன தொல்கலை)
நின்ன தொல்கலை ஐந்துமுப் பகலிடை நிரம்பிப்
பின்னர் அவ்வழி தேய்ந்துவந் தோர்கலை பிரியா
தின்ன பான்மையே நிகழுமெக் காலமு மென்றான்
முன்னை ஆவிதோ றிருந்தெலாம் இயற்றிய முதல்வன். ......
45(முதல்வன் இவ்வகை)
முதல்வன் இவ்வகை யருள்புரிந் திடுதலும் முளரிப்
பதயு கங்களில் வணங்கினன் விடைகொடு படரா
மதிய வானவன் தன்னுல கடைந்துதொன் மரபில்
கதிகொள் செய்வினை புரிந்தனன் வளர்ந்தன கலையே. ......
46(ஒன்று வைகலுக்)
ஒன்று வைகலுக் கோர்கலை யாய்நிறைந் தோங்கி
நின்ற தொன்னிலை நிரம்பியே பின்னுற நெறியே
சென்று தேய்ந்துவந் தொருகலை சிதைவுறா தாகி
என்றும் ஆவதும் அழிவதும் போன்றனன் இரவோன். ......
47(செங்க ணான்முதல்)
செங்க ணான்முதல் அனைவரும் அம்மதித் திறத்தை
அங்கண் நாடியே தக்கனால் இவன்கலை அனைத்தும்
மங்கு மாறுமேல் வளர்வதும் இயற்கையா வகுத்தான்
எங்கள் நாயகன் செய்கை யார்அறிந்தனர் என்றார். ......
48(செக்கர் வானமேற்)
செக்கர் வானமேற் கிளர்ந்தெழு திங்களின் செயலை
ஒக்க நாடிய சிந்தையாந் தூதினால் உணர்ந்து
தக்க னென்பவன் கனன்றியான் உரைத்தசா பத்தை
நக்க னேகொலாந் தடுக்கவல் லானென நகைத்தான். ......
49(எந்தை தன்றந்தை)
எந்தை தன்றந்தை யாவரும் மருகனுக் கியான்முன்
தந்த வாய்மையை விலக்கிலர் விலக்கஎன் றன்முன்
வந்தும் வேண்டிலர் அச்சமுற் றிருந்தனர் மற்றத்
தந்தை தாயிலா ஒருவனாம் என்னுரை தடுப்பான். ......
50(நன்று நன்றியாம்)
நன்று நன்றியாம் பரம்பொருள் நான்முகன் முதலாந்
துன்று தொல்லுயிர் யாவையும் அழித்தும்ஐந் தொழிலும்
நின்று நாம்புரி கின்றனம் எங்கணும் நீங்காம்
என்று தன்மனத் தகந்தையுற் றான்கொலோ ஈசன். ......
51(அன்ன தன்றியே)
அன்ன தன்றியே இன்னமொன் றுண்டுபா ரகத்தில்
தன்னை யேநிகர் தக்கனும் நோற்றிடு தவத்தான்
என்ன இத்திரு வுதவினம் என்பதை நினைந்தோ
என்ன தாணையை இகழ்ந்தனன் இத்திறம் இழைத்தான். ......
52(செய்ய தோர்பரம்)
செய்ய தோர்பரம் பொருளியா மென்பது தெளிந்தும்
வைய மீதில்இத் திருவெலாம் பெற்றுநம் மலர்த்தாள்
கையி னால்தொழான் என்றுகொல் முன்னியான் கழறும்
வெய்ய வாய்மையை விலக்கினன் சிவனென வெகுண்டான். ......
53(தகவும் ஈரமும்)
தகவும் ஈரமும் நீங்கிய புரைநெறித் தக்கன்
புகலும் வாய்மையைத் தேர்ந்துழிப் புலகன்என் றுரைப்போன்
நிகரில் கண்ணுதற் கடவுளை எள்ளலை நின்னை
இகழ்வர் யாவரும் எஞ்சும்உன் வெறுக்கையும் என்றான். ......
54(என்ற வன்முக)
என்ற வன்முக நோக்கியே தவத்தினால் என்கண்
நின்ற இத்திரு நீங்குமோ நெடியமால் முதலோர்
என்றும் என்பணி மறுத்திலர் எள்ளுவ துண்டோ
நன்று நன்றுநின் னுணர்வெனச் சிறுவிதி நக்கான். ......
55(முறுவ லித்திடு)
முறுவ லித்திடு தக்கனைக் கண்ணுறீஇ முனிவன்
பிறரி ழிப்புரை கூடுறா தென்னினும் பெருஞ்சீர்
குறைவு பெற்றிடா தென்னினும் நினக்கருள் கொடுத்த
இறைவ னைப்பழித் திடுவது தகுவதோ என்றான். ......
56(புலகன் என்றிடு)
புலகன் என்றிடு முனிவரன் இனையன புகல
விலகு தீநெறி யாற்றிய சிறுவிதி வினவி
அலகி லாததன் னாற்றலும் பெருந்திரு அனைத்தும்
உலகில் நீங்குவான் பெருமிதங் கொண்டிவை உரைப்பான். ......
57(நோற்று முன்னியான்)
நோற்று முன்னியான் பெற்ற இத்திரு நுகர்ந்திடுமுன்
மாற்று வான்அலன் செய்வினை முறையலால் வலிதின்
ஏற்ற மாகஒன் றிழைக்கலன் ஆதலால் என்பால்
ஆற்ற லால்அரன் செய்கின்ற தென்னென அறைந்தான். ......
58(அறைத லோடுமப்)
அறைத லோடுமப் புலகனென் றுரைப்பவன் அனைத்தே
உறுதி யாயினும் ஈசனை இகழ்ந்தவர் உய்யார்
மறையெ லாமவை சொற்றது மற்றவன் தன்னை
இறையும் எள்ளலை மனங்கொடு பராவுதி இனிநீ. ......
59(தன்ன டைந்தவர்)
தன்ன டைந்தவர் ஆகுல மாற்றியே தகவால்
என்ன தோர்பொருள் வெஃகினும் ஈகின்ற தியற்கை
அன்ன வற்கது மதிதெரிந் தடைதலும் அவன்பால்
நின்னின் உற்றசா பத்தினை நீக்கினன் நெறியால். ......
60(கற்றை வான்கலை)
கற்றை வான்கலை நிறைந்தபின் முன்னநீ கனன்று
சொற்ற வாய்மையும் நிறுவினன் நாடொறுஞ் சுருங்கச்
செற்றம் என்இனித் திங்கள்நின் மருகன்அச் சிவனாம்
பெற்றம் ஊர்தியும் அம்முறை யாவனால் பின்னாள். ......
61(என்ன இத்திறம்)
என்ன இத்திறம் மொழிதலுஞ் சினமகன் றிமையோர்
அன்னம் ஊர்தியோ னியாவரும் புகழ்தர அனையான்
பன்னெ டும்பகல் அரசின்வீற் றிருந்தனன் பரையாங்
கன்னி மற்றவன் மகண்மையாய் வருதல் கட்டுரைப்பாம். ......
62ஆகத் திருவிருத்தம் - 8468