Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

previous padalam   5 - உமை கயிலை நீங்கு படலம்   next padalamUmai Kayilai neengu padalam

Ms Revathi Sankaran (5.49mb)




(கமல மூர்த்தி)

கமல மூர்த்தியுங் கண்ணனுங் காண்கிலா
     அமல மேனியை அன்பினர் காணுற
          நிமல மாகிய நீள்கயி லாயமேல்
               விமல நாயகன் வீற்றிருந் தானரோ. ......    1

(வீற்றி ருந்தவன்)

வீற்றி ருந்தவன் மெல்லடி கைதொழூஉப்
     போற்றி யுன்றன் பொருவரு மெய்மையைச்
          சாற்று வாயெனச் சங்கரி வேண்டலும்
               ஆற்ற அன்புசெய் தாங்கருள் செய்குவான். ......    2

வேறு

(உருவொடு குண)

உருவொடு குணஞ்செயல் ஒன்றும் இன்றியே
     நிருமல மாய்ச்சிவன் நிறைந்து நின்றதும்
          பரவிய வுயிர்த்தொகைப் பந்தம் நீக்குவான்
               ஒருதனிச் சத்தியால் உன்னல் உற்றதும். ......    3

(ஐந்தியற் சத்திகள்)

ஐந்தியற் சத்திகள் ஆயி னோர்தமைத்
     தந்ததும் அருவுருத் தாங்கி அவ்வழிச்
          சிந்தனை அருச்சனை செய்தி யாவரும்
               உய்ந்திடச் சதாசிவ வுருவைந் துற்றதும். ......    4

(இருபதின் மேலும்ஐந்)

இருபதின் மேலும்ஐந் தீசன் கேவல
     உருவம தாகியே உறைந்த பெற்றியும்
          விரவிய குடிலையின் விளைவு செய்துபின்
               அருள்புரி மூர்த்திக ளாய பேதமும். ......    5

(முந்திய மாயைகள்)

முந்திய மாயைகள் மூல மாகவே
     அந்தமில் தத்துவம் ஆறொ டாறுமுன்
          வந்திட அளித்தது மரபின் ஐந்தொழில்
               சிந்தைகொள் கருணையான் நடாத்துஞ் செய்கையும். ......    6

(விதித்திடு மூவகை)

விதித்திடு மூவகை வியனு யிர்த்தொகை
     கதித்திடு தத்துவக் கணங்கள் அங்குளார்
          உதித்திடு முறைமையின் ஒடுங்கச் செய்துதான்
               மதித்தொரு தன்மையாய் மன்னி நிற்பதும். ......    7

(ஆனதன் னியற்கை)

ஆனதன் னியற்கைகள் அனைத்துங் கண்ணுதல்
     வானவன் ஆகம மறையின் வாய்மையான்
          மேனிகழ் தொகைவகை விரிய தாகவே
               தானருள் புரிந்தனன் தலைவி கேட்கவே. ......    8

(சுந்தரி இவ்வகை)

சுந்தரி இவ்வகை உணர்ந்து தோமிலா
     எந்தைநிற் குருவிலை என்றி பின்னுற
          ஐந்தொடு பலவுரு அடைந்த தென்னெனக்
               கந்தனை அருளுவான் கழறல் மேயினான். ......    9

(உருவிலை நமக்கென)

உருவிலை நமக்கென ஒன்று நம்வயின்
     அருளுரு அவையெலாம் என்ன அன்னதோர்
          பொருளென உன்னியே புவனம் ஈன்றவள்
               பெருமகிழ் வெய்தியிப் பெற்றி கூறினாள். ......    10

(அந்நிலை வடிவெலாம்)

அந்நிலை வடிவெலாம் அருளின் ஆதலால்
     உன்னருள் யானென உரைப்ப துண்மையே
          என்னுரு வாம்அவை என்று பாங்கமர்
               கன்னிகை வியந்தனள் கழறும் வேலையே. ......    11

(கயந்தன தீருரி)

கயந்தன தீருரி கவின்று பொற்புறப்
     புயந்தனில் அணிந்தருள் புனிதன் நங்கைநீ
          நயந்தரு நின்புகழ் நாடி நம்முனம்
               வியந்தனை உனையென விளம்பி மேலுமே. ......    12

(இருளுறும் உயிர்)

இருளுறும் உயிர்தொறும் இருந்து மற்றவை
     தெருளுற இயற்றுதும் அதனைத் தீர்துமேல்
          மருளுறு சடமதாய் மாயும் ஏனைய
               பொருளுறு நிலைமையைப் புகல வேண்டுமோ. ......    13

(உன்னிடை தனினும்)

உன்னிடை தனினும்யாம் உறுத லில்வழி
     நின்னுயிர் உணர்வுறா நினக்குக் காட்டுதும்
          அன்னது காண்கெனா அயனை யாதிய
               மன்னுயிர் இயற்றிடும் வண்ணம் நீங்கினான். ......    14

(தேவர்கள் நாயகன்)

தேவர்கள் நாயகன் செயலி லாமையால்
     ஆவிகள் யாவையுஞ் சடம தாகியே
          ஓவிய மேயென உணர்வின் றுற்றன
               பூவுல கேமுதற் புவனம் யாவினும். ......    15

(ஆட்டுவித் திடுபவன்)

ஆட்டுவித் திடுபவன் அதுசெ யாவழிக்
     கூட்டுடைப் பாவைகள் குலைந்து வீழ்ந்தென
          நாட்டிய பரனருள் நடாத்தல் இன்மையால்
               ஈட்டுபல் லுயிர்த்தொகை எனைத்து மாய்ந்தவே. ......    16

(இந்தவா றுயிர்த்)

இந்தவா றுயிர்த்தொகை யாவும் ஒல்லையில்
     நந்தியே சடமதாய் நணிய வெல்லையில்
          சிந்தைசெய் தினையது தெருமந் தஞ்சியே
               சுந்தரி அரனடி தொழுது சொல்லுவாள். ......    17

(அறிகிலன் எந்தைந)

அறிகிலன் எந்தைநீ அனைத்து மாகியே
     செறிவது முழுதுயிர்த் திறன்இ யற்றியே
          உறுவதை என்பொருட் டொருவி நின்றனை
               இறுதியின் அவையெலாம் இருளின் மூழ்கவே. ......    18

(ஓரிறை யாகுமீ)

ஓரிறை யாகுமீ துனக்கு யிர்க்கெலாம்
     பேருகம் அளப்பில பெயரும் என்பிழை
          சீரிய வுளங்கொளல் தேற்றம் பெற்றெழீஇ
               ஆருயிர் மல்குமா றருளு வாயெனா. ......    19

(பன்முறை பரவினள்)

பன்முறை பரவினள் பணிந்து நிற்றலும்
     அன்மலி கூந்தலுக் கருளி யாவிகள்
          தொன்மையில் வினைப்பயன் துய்ப்ப நல்குவான்
               நின்மலன் நினைந்தனன் கருணை நீர்மையால். ......    20

(திருத்தகு தனதருள்)

திருத்தகு தனதருள் சேர்ந்த பல்வகை
     உருத்திரர் தமக்குமுன் னுணர்வு செய்துழி
          நிருத்தனை அவ்வழி நினைவுற் றிச்செயல்
               கருத்திடை யாதெனக் கருதி நாடினார். ......    21

(நாடிய எல்லையில்)

நாடிய எல்லையில் நான்மு கத்தன்மால்
     தேடிய அண்ணல்தன் செய்கை யீதெனக்
          கூடிய ஓதியாற் குறித்து முன்னுற
               வீடிய உயிர்த்தொகை எழுப்ப வெஃகியே. ......    22

(கண்ணுதல் எந்தை)

கண்ணுதல் எந்தைதன் கழல்கள் அர்ச்சனை
     பண்ணுதல் உன்னியப் பகவன் தொல்சுடர்
          விண்ணிடை இன்மையின் வேலை காண்கிலா
               மண்ணிடை அருச்சுன வட்டத் தெய்தினார். ......    23

(எங்க ணும் கனையிருள்)

எங்க ணும் கனையிருள் இறப்ப வீசலிற்
     கங்குலே போன்றதிக் காலை கண்ணுதற்
          புங்கவற் கேற்றிடு பூசை செய்துமென்
               றங்கவர் யாவரும் ஆய்தல் மேயினார். ......    24

(முண்டக மலர்கெழு)

முண்டக மலர்கெழு முக்கண் மேலையோன்
     கொண்டதோர் ஐம்பெருங் கோலத் தேவரும்
          எண்டகு மூவகை இயல்பு ளாங்கவர்
               மண்டல விதியினால் வடிவ தாக்கியே. ......    25

(எண்ணிரு திறத்தவாய்)

எண்ணிரு திறத்தவாய் இயன்ற நற்பொருள்
     உண்ணிகழ் அளியொடும் உய்த்து வேதனுங்
          கண்ணனும் வழிபடு கங்குற் பூசையைப்
               பண்ணுதல் முயன்றனர் பரிவின் மேலையோர். ......    26

(ஆறிரு நாலுடன்)

ஆறிரு நாலுடன் அஞ்செ ழுத்தையுங்
     கூறினர் எண்ணினர் கோதில் கண்டிகை
          நீறொடு புனைந்திறை நிலைமை யுட்கொளா
               வேறுள முறையெலாம் விதியிற் செய்துபின். ......    27

(வான்குலாம் வில்லு)

வான்குலாம் வில்லுவம் மருமென் பாசடை
     தேன்குலா மரையிதழ் செய்ய சாதிவீ
          கான்குலாம் வலம்புரி கடவுள் தொல்பெயர்
               நான்கியா மத்தினும் நவின்று சாத்தியே. ......    28

(ஏயவான் பயறுபால்)

ஏயவான் பயறுபால் எள்நல் ஓதனந்
     தூயநல் லுணவிவை தொகுத்துக் கண்ணுதல்
          நாயகன் முன்னுற நான்கியா மத்தும்
               நேயமொ டம்முறை நிவேதித் தேத்தியே. ......    29

(பின்னரும் இயற்றிடு)

பின்னரும் இயற்றிடு பெற்றி யாவையுந்
     தொன்னிலை விதிகளில் தோமு றாவகை
          உன்னினர் புரிந்துழி யுவந்து ருத்திரர்
               முன்னுற வந்தனன் முக்கண் மூர்த்தியே. ......    30

(அவ்விடை மருதினில்)

அவ்விடை மருதினில் ஐந்தும் ஆறுமாம்
     மெய்வகை உருத்திரர் வேண்டி யாங்கருள்
          செய்வதொர் கண்ணுதல் தேவன் தொன்மைபோல்
               எவ்வகை உயிரையும் இயற்ற வுன்னலும். ......    31

(எழுந்தனர் மாலயன்)

எழுந்தனர் மாலயன் இந்தி ராதியர்
     எழுந்தனர் எழுந்தனர் யாரும் வானவர்
          எழுந்தனர் முனிவரர் ஏனை யோர்களும்
               எழுந்தன உயிர்த்தொகை இருளும் நீங்கிற்றால். ......    32

(அல்லிடை உறங்கினர்)

அல்லிடை உறங்கினர் அறிவு சேர்ந்துழி
     மெல்லென அயர்ந்தகண் விழித்தெ ழுந்தபோல்
          எல்லையில் உயிர்த்தொகை யாவும் அவ்வழி
               ஒல்லையில் எழுந்தன உலகில் எங்கணும். ......    33

(ஓங்கலுங் கரிகளும்)

ஓங்கலுங் கரிகளும் உலப்பில் நாகமுந்
     தாங்கின தரணிபா தலத்திற் கூர்மமாம்
          ஆங்கது போற்றிய தண்டந் தன்னிடைத்
               தீங்கதிர் மதியுடுப் பிறவுஞ் சென்றவே. ......    34

(அன்னதொர் திறமெலாம்)

அன்னதொர் திறமெலாம் அமலன் ஆணையால்
     தொன்னிலை அமைந்தவத் தொடர்பு நோக்கியே
          இந்நெறி யாவையும் ஈசன் செய்கையே
               பின்னிலை என்றனர் பிரம னாதியோர். ......    35

வேறு

(மற்றிவை நிகழும்)

மற்றிவை நிகழும் வேலை மன்னுயிர்க் குணர்ச்சி நல்கி
     உற்றனன் எந்தை என்றே உருத்திரர் உணர்ந்து தம்முன்
          பற்றலர் எயில் மூன் றட்ட பண்ணவன் வரநேர் சென்று
               பொற்றிரு வடியில் வீழ்ந்து போற்றலும் அமலன் சொல்வான். ......    36

(ஈண்டெமை அருச்சி)

ஈண்டெமை அருச்சித் திட்ட இயல்பினால் உயிர்கட் கெல்லாம்
     மாண்டதொல் லுணர்ச்சி நல்கி எழுப்பினம் மற்று நீவிர்
          வேண்டின யாவுங் கேண்மின் விரைந்தென அமலன் தன்கண்
               பூண்டதொ ரன்பு மிக்கோர் இனையன புகலல் உற்றார். ......    37

(நிற்றலும் அல்லில்)

நிற்றலும் அல்லில் எம்போல் நின்னடி எனைய ரேனும்
     பற்றுடன் அருச்சித் தோர்க்குப் பழிதவிர் மாசுத் திங்கள்
          உற்றிரு கதிரு மொன்றும் ஒண்பகல் முதனாட் கங்குல்
               பெற்றிடு சிறப்பு நல்க வேண்டுமால் பெரும என்றார். ......    38

(நீவிர்செய் பூசை)

நீவிர்செய் பூசை தன்னை நெடிதுநாம் மகிழ்ந்த வாற்றால்
     ஆவிகள் அனைத்தும் உய்ந்த அருவினை அகன்று நும்போல்
          பூவினில் என்றும் பூசை புரிந்தவர்க் கெல்லாம் முத்தி
               மேவர அளித்தும் என்றே வியனருள் புரிந்து போந்தான். ......    39

(எம்பெருந் தலைவன்)

எம்பெருந் தலைவன் ஏக வுருத்திரர் யாரும் ஈண்டித்
     தம்பதங் குறுகி முன்போற் சார்ந்தனர் அனைய காலை
          அம்புய னாதி வானோர் அனைவருங் கயிலை புக்கு
               நம்பனை வணக்கஞ் செய்து தொழுதிவை நவிலல் உற்றார். ......    40

(மன்னுயிர்க் குயிராய் உற்ற)

மன்னுயிர்க் குயிராய் உற்ற வள்ளல்கேள் யாங்கள் எல்லாம்
     உன்னருள் உறாத நீரால் உணர்வொரீஇச் சடம தாகிப்
          பன்னெடுங் காலம் வாளா கிடந்தனம் பவமூழ் குற்றேம்
               அன்னது தனக்குத் தீர்வொன் றருளென அண்ணல் சொல்வான். ......    41

(மங்கியே உணர்வு)

மங்கியே உணர்வு சிந்தி மறைமுறை புரியா நீரால்
     உங்கள்பால் வருவ வெல்லாம் உமையிடத் தாகு மன்றே
          இங்குநீர் இன்று பற்றி இயற்றுநுங் கடன்கள் என்னப்
               பங்கயா சனனுந் தேவர் யாவரும் பணிந்து போனார். ......    42

வேறு

(வாலி தாமயன்)

வாலி தாமயன் முதலினோர் வணங்கினர் ஏக
     ஏல வார்குழல் உமையவள் பிரான்கழல் இறைஞ்சி
          மேலை நாளுயிர்த் தொகையினுக் கெய்திய வினையென்
               பால்வ ரும்பரி சென்கொலோ பணித்தருள் என்ன. ......    43

(முன்பு நீயுனை விய)

முன்பு நீயுனை வியந்தனை அத்துணை முனிந்து
     நின்பொ ருட்டினால் உயிர்கள்தம் முணர்ச்சியை நீக்கிப்
          பின்பு ணர்த்தினம் ஆதலின் அன்னவை பெற்ற
               மன்பெ ரும்பவம் யாவையும் நின்னிடை வருமால். ......    44

(முறைய தாகுமால்)

முறைய தாகுமால் பின்னுமொன் றுண்டுயிர் முற்றும்
     பெறுவ தாமுனக் கல்லது பெரும்பவம் அவற்றால்
          பொறைபு ரிந்திடற் கெளியவோ போற்றுநீ யென்றான்
               சிறுவி திக்கருள் பரிசினை முடிவுறச் செய்வான். ......    45

(நாதன் அவ்வுரை)

நாதன் அவ்வுரை இயம்பலும் உளம்நடு நடுங்கிப்
     பேதை யேன்செயும் பிழைதணித் தென்வயிற் பெருகும்
          ஏத மாற்றவோர் பரிசினை உணர்த்துதி என்னாப்
               பாத பங்கயந் தொழுதலும் இனையன பகர்வான். ......    46

(ஆல மேபுரை நிற)

ஆல மேபுரை நிறத்ததாய் அமிழ்தினுஞ் சுவைத்தாய்
     ஞால மார்தர வொழுகிய காளிந்தி நதிபோய்
          மூல மெய்யெழுத் தன்னதோர் முதுவலம் புரியின்
               கோல மாகிநோற் றிருத்தியால் உலகருள் குறிப்பால். ......    47

(அந்ந திக்குள்நீ)

அந்ந திக்குள்நீ பற்பகல் இருந்துழி அயன்சேய்
     என்ன நின்றிடு தக்கனென் பவன்அவண் எய்தி
          உன்னை நேர்ந்துசென் றெடுத்தலுங் குழவியின் உருவாய்
               மன்னி யாங்கவன் பன்னிபாற் சிறுமியாய் வளர்தி. ......    48

(ஐந்தி யாண்டெனும்)

ஐந்தி யாண்டெனும் அளவைநிற் ககன்றுழி அதற்பின்
     புந்தி ஆர்வமோ டெமைநினைந் தருந்தவம் புரிதி
          வந்தி யாமது காணுறா மணஞ்செய்து மறையால்
               இந்த மால்வரை யிடைஉனைத் தருதுமென் றிசைத்தான். ......    49

(இசைத்த வாசகம்)

இசைத்த வாசகம் உணர்தலும் இறையுரத் தழுந்தத்
     தசைத்த பூண்முலை உமையவள் அன்னவன் சரணின்
          மிசைத்தன் வார்குழல் தைவர வணங்கியே விடைபெற்
               றசைத்த சிந்தையள் நீங்கினள் உலகுநோற் றதனால். ......    50

(ஆதி தேவனை ஒரு)

ஆதி தேவனை ஒருவியே புடவியில் அணுகி
     ஓத வேலையை மாறுகொள் காளிந்தி யுழிப்போய்
          வேத மூலநேர் வால்வளை உருக்கொடு விளங்கி
               ஏத மில்லதோர் பதுமபீ டத்தின்மேல் இருந்தாள். ......    51

(தெளித ருஞ்சிவ)

தெளித ருஞ்சிவ மந்திரஞ் சிந்தனை செய்தே
     அளவில் பற்பகல் அன்னைநோற் றிருந்தனள் அவட்கண்
          டுளம கிழ்ந்தெடுத் தேகுவான் ஓங்குகா ளிந்தி
               நளிகொள் சிந்துவில் தக்கன்உற் றனஇனி நவில்வாம். ......    52

ஆகத் திருவிருத்தம் - 8520




(எண் = செய்யுளின் எண்)

*1-1. கமல மூர்த்தி - பிரமதேவன்.

*1-2. அமலம் - பரிசுத்தம்.

*2-1. சங்கரி - அம்பிகை.

*2-2. ஆற்ற - மிகுந்த.

*3-1. பரவிய - விரிந்துகிடக்கும்.

*3-2. தனிச்சத்தி - ஏகசத்தி; பராசத்தி.

*4-1. ஐந்தியல் சத்திகள் - பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானாசத்தி, கிரியாசத்தி என ஐவகை சத்திகள்.

*4-2. சதாசிவ உரு ஐந்து - ஐந்து திருமுகங்களைக் கொண்ட சதாசிவமூர்த்தி.

*5-1. இருபதின் மேலும் ஐந்து ஈசன் - சகல வடிவுகொண்ட இருபத்தைந்து மகேசுவர வடிவங்கள்.

*5-2. குடிலை - ஒரு சத்தி.

*6. தத்துவம் ஆறொடு ஆறு - முப்பத்தாறு தத்துவங்கள்.

*7. மூவகை வியன் உயிர்த்தொகை - விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவகை ஆன்மாக்கள்.

*9. ஐந்து - பஞ்ச சாதக்கிய வடிவு.

*11. அந்நிலை வடிவு எலாம் - அச்சதாசிவாதி வடிவமனைத்தும்.

*12-1. இருள் - மலவிருள்.

*12-2. சடம் - உடல்.

*15. ஆவிகள் - உயிர்கள்.

*16. நந்துதல் - கெடுதல்.

*19. ஓர் இறை - ஒரு இமைப்பொழுது.

*20. அன்மலி, அன் - சாரியை.

*21-1. திருத்தகு - அழகிய.

*21-2. பல்வகை உருத்திரர் - பதினோரு உருத்திரர்கள்.

*23-1. அருச்சுன வட்டம் - திருவிடைமருதூர்.

*23-2. அருச்சுனம் - மருதமரம்.

*25. ஐம்பெருங்கோலம் - பஞ்ச மூர்த்திகள்.

*26. எண் இரு பதினாறு.

*27-1. ஆறு இரு நாலுடன் அஞ்செழுத்து - சோடசகலா பிரசாத மந்திரம்; இது பிரணவ பீசங்களுடன் கூடி பதினாறு மாத்திரைகளுடன் ஒலிக்கும் சூக்கும பஞ்சாக்கரம் என்பர்.

*27-2. கண்டிகை - உருதிராட்சம்.

*27-3. வேறுளமுறை - பூதசுத்தி, அந்தரியாகம் முதலியன.

*28-1. வீ - பூ; இங்கு மல்லிகை.

*28-2. வலம்புரி - நந்தியாவட்டம்.

*29. ஓதனம் - சோறு.

*31-1. மருதினில் - திருவிடைமருதூரில்.

*31-2. ஐந்தும் ஆறுமாம் உருத்திரர் - ஏகாதச ருத்திரர்.

*33. அல் - இரவு.

*34-1. நாகம் - பாம்பு.

*34-2. கூர்மம் - ஆதி கூர்மம் (கூர்மம் = ஆமை).

*36. பற்றலர் எயில் மூன்று - திரிபுரம்.

*38. மாகத்திங்கள் ... முதனாட்கங்குள் - மகா சிவராத்திரி.

*41. மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்.

*42. மறைமுறை - வேத முறைப்படி (கன்மாதிகளை).

*43-1. வாலிதாம் - வெண்ணிறமான.

*43-2. ஏலம் - மயிர்ச்சாந்து.

*45. பரிசினை - வரத்தினை.

*47-1. ஆலமேபுரை - விடம்போலும் (கரிய).

*47-2. காளிந்தி நதி - யமுனா நதி.

*47-3. மூலமெய் எழுத்து - பிரணவம்.

*47-4. வலம்புரி - வலம்புரிச் சங்கு.

*48. பன்னி - மனைவி; இங்கு வேதவல்லி.

*49. தருதும் - அழைத்து வருகின்றோம்.

*51-1. புடவி - உலகம்.

*51-2. ஓதம் - அலை.

*51-3. வேதமூலம் நேர் - பிரணவத்தை ஒத்த.

*51-4. வால்வளை - வெள்ளிய சங்கு.

*52-1. நளி - குளிர்ச்சி.

*52. சிந்து - ஆறு; இங்கு யமுனா நதி.



previous padalam   5 - உமை கயிலை நீங்கு படலம்   next padalamUmai Kayilai neengu padalam

previous kandam   6 - தக்ஷ காண்டம்   next kandam6 - dhaksha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]