(நீளுந் தகைசேர்)
நீளுந் தகைசேர் நிலமா மகள்தன்
கோளுந் தியபூங் குழல்வார்ந் தெனலாய்
நாளுந் தியவீ நணுகிக் கரிதாங்
காளிந் தியெனுங் கடிமா நதியே. ......
1(முத்துங் கதிரும்)
முத்துங் கதிரும் முழுமா மணியுந்
தொத்துந் தியசெந் துகிரும் மகிலும்
நத்தும் பிறவுந் நனிநல் குவபோல்
ஒத்துந் துவதவ் வொலிநீர் நதியே. ......
2(எண்மேல் நிமிரும்)
எண்மேல் நிமிரும் மிருநீர் பெருகி
விண்மேல் உலவா விரிகின் றதொரீஇ
மண்மேல் ஒலியா மலிகார் தழுவிக்
கொண்மூ வரவொத் துளதக் குடிஞை. ......
3(மீனார் விழிமங்)
மீனார் விழிமங் கையர்விண் ணுறைவோர்
வானார் செலவின் வருநீள் இடையில்
கானா மெனவுங் கடலா மெனவுந்
தானா குவதத் தடமா நதியே. ......
4(பாரின் புடையே)
பாரின் புடையே படரந் நதியை
நேரும் படியோர் நெடுநீ ருளதோ
காருந் தெளியாக் கடலீ தெனவே
யாரும் பெருமைத் தஃதா யிடவே. ......
5(துப்பா யினதாய்த்)
துப்பா யினதாய்த் துவரத் தகைசேர்
அப்பா யுவரற் றழிவில் பொருளின்
வைப்பா யருளால் வருமவ் வொலியற்
கொப்பா குவதோ உவரா ழியதே. ......
6(பாலோங் கியவிற்)
பாலோங் கியவிற் பணிலம் படர்வாள்
நீலோங் கியஅம் பொடுநே மியெலாம்
மேலோங் கியதன் மையின்மெய்த் துயில்கூர்
மாலோன் றனையொத் ததுமற் றதுவே. ......
7(மீன்பட் டமையால்)
மீன்பட் டமையால் விரியுந் தொழுதிக்
கான்பட் டிடவுங் கழுநீ ருறலால்
தேன்பட் டிடவுந் திரைபட் டிடவும்
வான்பட் டிடுமோ சைமலிந் ததுவே. ......
8(ஊன்பெற் றலகில்)
ஊன்பெற் றலகில் உயிர்பெற் றகிலம்
வான்பெற் றவள்வால் வளையா யுறவெங்
கோன்பெற் றிடுமக் கொடிமெய் யுருவந்
தான்பெற் றதையொத் ததுமா நதியே. ......
9வேறு(நஞ்செனக் கொலை)
நஞ்செனக் கொலைசெய் கூர்ங்கண் நங்கையர் குடையக் கூந்தல்
விஞ்சிய நானச் சேறும் விரைகெழு சாந்தும் ஆர்ந்து
தஞ்செனக் கொண்ட நீலத் தன்மை குன்றாது மேலோர்
அஞ்சனப் போர்வை போர்த்தால் அன்னதால் அனைய நீத்தம். ......
10(இவ்வுல கத்தோர்)
இவ்வுல கத்தோர் உள்ளத் தெய்திய இருளும் அன்னார்
வெவ்வினை இருளுந் தன்பால் வீழ்த்தியே விளங்கி ஏக
அவ்விருள் அனைத்துந் தான்பெற் றணைந்தென அங்கங் காராய்ச்
செவ்விதின் ஒழுகிற் றம்மா சீர்திகழ் யமுனை யாறே. ......
11(எத்திறத் தோரும்)
எத்திறத் தோரும் அஞ்ச எழுந்துமால் வரையிற் சார்ந்து
மெய்த்தலை பலவும் நீடி விரிகதிர் மணிகள் கான்றிட்
டொத்திடு கால்கண் மேவி ஒலிகெழு செலவிற் றாகி
மைத்துறு புனற்கா ளிந்தி வாசுகி நிகர்த்த தன்றே. ......
12(நிலமகள் உரோம)
நிலமகள் உரோம வல்லி நிலையென நகிலின் நாப்பண்
இலகிய மணித்தார் என்ன இருங்கடற் கேள்வன் வெஃகுங்
குலமகள் என்ன நீலக் கோலவா ரமுத மென்ன
உலவிய யமுனை எம்மால் உரைக்கலாந் தகைமைத் தாமோ. ......
13(இன்னபல் வகைத்தாய்)
இன்னபல் வகைத்தாய் நீடும் இரும்புனல் யமுனை யின்கண்
மன்னிய நெறிசேர் மாசி மகப்புன லாட வேண்டி
அந்நிலத் தவர்கள் யாரும் அடைந்தனர் உலக மெல்லாந்
தன்னிகர் இன்றி யாளுந் தக்கன்இத் தன்மை தேர்ந்தான். ......
14(மெய்ப்பயன் எய்து)
மெய்ப்பயன் எய்து கின்ற வினைப்படும் ஊழின் பாலால்
அப்பெரு நதியில் அஞ்ஞான் றாடலை வெஃகித் தக்கன்
மைப்படுங் கூர்ங்கண் வேத வல்லியை மகளி ரோடும்
ஒப்பில்பல் சனத்தி னோடும் ஒல்லைமுன் செல்ல உய்த்தான். ......
15(மாற்றமர் செம்பொற்)
மாற்றமர் செம்பொற் கோயில் வயப்புலித் தவிசின் மீதாய்
வீற்றிருந் தருடல் நீங்கி விரிஞ்சனு முனிவர் யாரும்
ஏற்றதோர் ஆசி கூற இமையவர் கணமா யுள்ளோர்
போற்றிட யமுனை யென்னும் புனலியா றதன்கட் போனான். ......
16(போனதொர் தக்கன்)
போனதொர் தக்கன் என்போன் புரைதவிர் புனற்கா ளிந்தித்
தூநதி யிடைபோய் மூழ்கித் துண்ணென வரலும் ஓர்பால்
தேனிமிர் கமல மொன்றிற் சிவனிடத் திருந்த தெய்வ
வானிமிர் பணிலம் வைக மற்றவன் அதுகண் ணுற்றான். ......
17வேறு(கண்ணுறுவான் நனி)
கண்ணுறுவான் நனிமகிழ்ந்தே கையினையுய்த்
தெடுத்திடுங்காற் காமர் பெற்ற
பெண்ணுருவத் தொரு குழவி யாதலும்விம்
மிதப்பட்டுப் பிறைதாழ் வேணி
அண்ணலருள் புரிவரத்தாற் கவுரியே
நம்புதல்வி யானாள் என்னா
உண்ணிகழ்பே ருணர்ச்சியினாற் காணுற்றுத்
தேவர்குழாம் ஒருவிப் போனான். ......
18(அந்நதியின் பால்)
அந்நதியின் பால்முன்னர் அவன்பணியாற்
சசிமுதலாம் அணங்கி னோர்கள்
துன்னினராய் வாழ்த்தெடுப்பத் துவன்றுபெருங்
கிளைஞரொடுந் தூநீ ராடி
மன்னுமகன் கரைஅணுகி மறையிசைகேட்
டமர்வேத வல்லி யென்னும்
பன்னிதனை யெய்தியவள் கரத்தளித்தான்
உலகீன்ற பாவை தன்னை. ......
19(ஏந்துதனிக் குழவியினை)
ஏந்துதனிக் குழவியினைத் தழீஇக்கொண்டு
மகிழ்ந்துகுயத் திழிபா லார்த்திக்
காந்தண்மலர் புரைசெங்கைச் சூர்மகளிர்
போற்றிசைப்பக் கடிதின் ஏகி
வாய்ந்ததன திருக்கையிடைப் புக்கனளால்
தக்கன் அங்கண் வானோ ரோடும்
போந்துமணிக் கோயில்புக்குத் தொன்முறைபோல்
அரசியற்கை புரிந்தி ருந்தான். ......
20ஆகத் திருவிருத்தம் - 8540