Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   5 - தேவ காண்டம்   next kandam5 - dhEva kANdam

previous padalam   5 - இந்திரபுரிப் படலம்   next padalamIndhiraburip padalam

Ms Revathi Sankaran (7.59mb)




(காசினி வியத்தகு)

காசினி வியத்தகு கந்த வெற்பிடைத்
     தேசுடை முருகவேள் சேர்ந்த செய்கையைப்
          பேசினன் இங்கினிப் பிறங்கு பொன்னகர்
               வாசவன் இயற்கையும் மற்றுங் கூறுகேன். ......    1

(துண்ணென அவுண)

துண்ணென அவுணரைத் தொலைத்த வேற்படைப்
     பண்ணவன் அருளினால் பலரும் போற்றிட
          விண்ணர சியற்றிய வேந்தன் ஓர்பகல்
               எண்ணினன் உளந்தனில் இனைய நீரதே. ......    2

(பற்றலர் சிறுதொழில்)

பற்றலர் சிறுதொழில் பலவு மாற்றியே
     உற்றதும் அளப்பிலா உகமொ ளித்தது
          மற்றதன் இடையிடை வந்த தீமையும்
               பெற்றிடு துன்பமும் பிறவும் உன்னினான். ......    3

(மறுத்தனன் சசியுடன்)

மறுத்தனன் சசியுடன் வைகும் வாழ்க்கையை
     வெறுத்தனன் வெறுக்கையை வேந்தியற் கையுஞ்
          செறுத்தனன் தவத்தினாற் சேர்வன் வீடெனாத்
               துறத்தலை உன்னினன் துறக்க மேயினான். ......    4

(இந்திரன் இயற்கை)

இந்திரன் இயற்கையை எண்ணி வானவர்
     மந்திரி யாகியும் மன்ன னாகியும்
          அந்தண னாகியும் அமரும் பொன்னவன்
               புந்தியில் ஈதொரு புணர்ப்பை உன்னினான். ......    5

(உன்னிய மேலவன்)

உன்னிய மேலவன் உம்ப ருக்கெலாம்
     மன்னவ னுழைதனில் வந்து வைகியே
          கொன்னவில் வச்சிரங் கொண்ட பாணியாய்
               இன்னன கேளென இயம்பல் மேயினான். ......    6

(புன்றொழி லாகிய)

புன்றொழி லாகிய பொய்யும் வாய்மையாம்
     ஒன்றொரு பெரும்பயன் உதவு மாயிடின்*1
          என்றனர் சுரகுரு இந்தி ரன்பதம்
               நின்றிட ஈதொரு நிகழ்ச்சி கூறுவான். ......    7

வேறு

(அன்பு நீங்கிய)

அன்பு நீங்கிய அவுணருக் கரசனாற் பட்ட
     துன்ப மானதை உன்னியே துறக்கமேல் அரசும்
          இன்ப வாழ்க்கையும் வெறுத்தனை இவைவெறுத் தனையேல்
               பின்பு நோற்றுநீ ஆற்றலால் பெறும்பயன் யாதோ. ......    8

(சிந்தை வெந்துயர்)

சிந்தை வெந்துயர் உழந்தவ ரல்லரோ திருவும்
     அந்த மில்பெரு வாழ்க்கையும் எய்துவர் அதுதான்
          மைந்த வாழிகேள் நின்னள வன்றுகாண் மதிக்கின்
               இந்த மூவுல கந்தனில் வழங்கிய இயற்கை. ......    9

(ஓவ ருந்தவம் இய)

ஓவ ருந்தவம் இயற்றிய முனிவரில் உலகத்
     தேவர் தங்களில் பாதலத் தோர்களிற் சிறந்த
          மூவ ரென்றுபேர் பெற்றிடு முதல்வர்கள் தம்மில்
               ஏவர் மங்கையர் முலைத்தலைப் போகம்விட் டிருந்தோர். ......    10

(போன துன்பினு)

போன துன்பினுக் கஞ்சியே புகுந்தவித் திருவை
     ஊன மாமெனத் துறந்துநீ தமியைநோற் றுழலின்
          ஆன போதுறுந் துயரினுக் கவதியும் உண்டோ
               கானல் நீந்திட வெருவியே கடல்புக வற்றோ. ......    11

(ஆக நோவுற வருத்தி)

ஆக நோவுற வருத்தியே ஐம்புலன் அவித்து
     மோக மாதியாம் மூவிரு குற்றமும் முருக்கி
          யோகு செய்திடும் மேலையோர் பெறும்பயன் உரைக்கில்
               போக மன்றிஒன் றில்லைகாண் எல்லைதீர் புகழோய். ......    12

(காண்ட கும்புலன்)

காண்ட கும்புலன் ஒடுங்குமாங் கரணமும் இலையாம்
     பூண்ட செய்கையும் ஒழியுமா மியாக்கையும் போமாம்
          ஆண்டொர் பேரின்பம் உண்டென்பர் அதனையார் அறிந்தார்
               ஈண்டு கண்டதே மெய்யென்பர் உலகுளோர் யாரும். ......    13

(பொய்ம்மை உற்றிடு)

பொய்ம்மை உற்றிடு கானலைப் புனலென விரும்பிக்
     கைம்மிசைக் கொண்ட அமிர்தினைக் கமருகுத் தாங்கு
          மெய்ம்மை யிற்சிலர் உண்டெனும் வீடுபே றுன்னி
               இம்மை யிற்பயன் இழக்குதி நன்றுநின் எண்ணம். ......    14

(மங்கை மார்இடத்)

மங்கை மார்இடத் தின்பமே இன்பமற் றவரோ
     டிங்கு வாழ்வுறும் வாழ்க்கையே இயல்புறும் வாழ்க்கை
          அங்க வர்ப்பெறு செல்வமே செல்வம்ஆங் கவர்தங்
               கொங்கை புல்குறா வறுமையே கொடியதோர் வறுமை. ......    15

(மறுவி லாதவாள்)

மறுவி லாதவாள் மதிமுக மடந்தையர் புணர்ப்பைச்
     சிறிய இன்ப மென்றுரை செய்வர் அன்னதன் சிறப்பை
          அறிவ ரேயெனின் ஆங்கதே பேரின்ப மாகும்
               இறைவ நீயது கேட்டியேல் மொழிகுவன் என்றான். ......    16

(ஏமஞ் சான்றிடு)

ஏமஞ் சான்றிடு குரவன்மற் றிவையிவை இசைப்ப
     நாமஞ் சான்றிடு குலிசமாப் படையினன் நகையா
          ஓமஞ் சான்றிடு தீமுன்னர் இழுதென உடைந்து
               காமஞ் சான்றிடும் உளத்தனாய் இனையன கழறும். ......    17

(பொருந்து மாசினை)

பொருந்து மாசினை அகற்றிநற் காட்சியைப் புரியும்
     மருந்து போலுறு குரவநீ மடந்தையர் சிறப்புந்
          திருந்து காமநல் லின்பமும் எனக்கருள் செய்யா
               திருந்த காரண மென்கொலோ இன்றுகா றென்றான். ......    18

வேறு

(வெற்றுட லத்தில்)

வெற்றுட லத்தில் விழித்தொகை பெற்ற
     சிற்றறி வோன்இவை செப்புத லோடும்
          மற்றிவன் உள்ளம் மயங்கினன் என்னாக்
               கற்றுணர் மந்திரி கட்டுரை செய்வான். ......    19

(மாதர்கள் மேன்மை)

மாதர்கள் மேன்மைகள் மன்மத நன்னூல்
     ஓதிடும் உண்மையை ஓர்ந்துணர் கின்ற
          காதல் இலாவழி கட்டுரை செய்யார்
               ஆதலின் ஐய அறைந்திலன் இந்நாள். ......    20

(கோண்மதி யேகுடை)

கோண்மதி யேகுடை யாவரு கோன்தன்
     மாண்மதி நூலெனும் வான்கடன் முற்றும்
          நீண்மதி யால்உணர்ந் தேன்அதன் நீர்மை
               கேண்மதி யென்று கிளத்திடு கின்றான். ......    21

(ஈறில வென்றும்)

ஈறில வென்றும் இயம்பினர் பத்தே
     நூறுடன் எட்டெனும் நூலும் நுவன்றார்
          வேறும் இசைத்தனர் மெய்ச்சம யந்தான்
               ஆறென ஓதினர் ஆங்கவை தம்முள். ......    22

(சுதையமு தேயென)

சுதையமு தேயெனத் துய்த்திடு நீரார்க்
     கிதமிக நல்குவ திம்மையின் முத்திக்
          கதியருள் கிற்பது காமர் உலோகா
               யதமென வேநெறி யொன்றுள தன்றே. ......    23

(அச்சம யத்தலை)

அச்சம யத்தலை யாற்றிடை நின்றே
     எச்சமில் வீடுபெற் றின்புறு கின்றோர்
          மெச்சியல் ஆடவர் மேலதை ஈவோர்
               நச்சுறு கூர்விழி நாரியர் தாமே. ......    24

(அம்மட வார்இய)

அம்மட வார்இய லானவும் அன்னோர்
     தம்மை அடைந்திடு தன்மையும் மேவுஞ்
          செம்மைகொ ளாடவர் செய்கையும் எல்லாம்
               மெய்மைய தாக விளம்பிடும் வேள்நூல். ......    25

(சாதி இயற்கைகள்)

சாதி இயற்கைகள் தத்துவம் மாந்தர்
     தீதில் குணத்தொடு தேசம் அவத்தை
          போது கருத்திவை ஆதிய போர்வேள்
               வேதம் உரைக்கும் விழுப்பொருள் மாதோ. ......    26

(வசைதவிர் மானினி)

வசைதவிர் மானினி மால்வட வைப்பேர்
     இசையினி அத்தினி ஏந்திழை யோர்க்காம்
          அசைவறு தொல்மர பாடவர் யார்க்குஞ்
               சசன்இட பன்அசு வன்இவை தாமே. ......    27

(முன்னம் உரைத்திடும்)

முன்னம் உரைத்திடும் மும்மர புக்குட்
     கன்னியர் ஆடவர் காமர் குறிக்கு
          மன்னிய ஆழமும் நீளமும் முற்றும்
               இன்னன வென்றிட ஏற்ப தியற்கை. ......    28

(அந்தமில் தேவர்)

அந்தமில் தேவர் அருந்தவர் நாகர்
     கந்தரு வத்தர் கணங்கெழு பூதர்
          முந்தும் அரக்கர் இயக்கர் முரட்பேய்
               தந்திறன் ஆவது தத்துவ மாமே. ......    29

(எண்மைகொள் தத்து)

எண்மைகொள் தத்துவ யாற்றிடை நின்ற
     பெண்மைய ரைவளி பித்தென ஓதும்
          வண்மைகொள் முக்குணம் மன்னினர் மற்றவ்
               வுண்மை படைத்திடல் ஒண்குண னாமே. ......    30

வேறு

(உருவும் வண்ணமும்)

உருவும் வண்ணமும் ஓங்கும் செயற்கையும்
     அரிவை மார்கள்தம் நாளும் அனையவுந்
          தெரிய நாடித் தெளிந்தறி கிற்பரால்
               மரபு தான்முதல் வான்குணத் தீறுமே. ......    31

(ஏறு தேசந்தொ)

ஏறு தேசந்தொ றீண்டிய மாதர்தம்
     ஊறும் நீதியும் உள்ளமுஞ் செய்கையும்
          வேறு வேறு வினவியெல் லோர்களுந்
               தேற நிற்பது தேச இயற்கையே. ......    32

(தரித்த வாலை தரு)

தரித்த வாலை தருணை பிரவுடை
     விருத்தை யாகும் வியன்பரு வங்களின்
          உரைத்த காலமும் உள்ளத்தின் வேட்கையும்
               பிரித்த றிந்திடப் பெற்றத வத்தையே. ......    33

(கோல மாம்முக் குண)

கோல மாம்முக் குணத்தர்முப் பான்மையர்
     நால்வர் எண்மராம் நாரியர் பற்றுற
          ஏலும் ஆடவர் எய்துதற் கேற்றபல்
               கால முந்தெரி கிற்பது காலமே. ......    34

(மக்கள் காமம் வடி)

மக்கள் காமம் வடிவினில் வைகலும்
     பக்கந் தோறும் இழிந்துயர் பான்மையால்
          புக்க தோரிடை நாடிப் புரையொரீஇத்
               தக்க செய்வதுஞ் சாற்றிய மேலதே. ......    35

(பற்று ளோரையும்)

பற்று ளோரையும் பற்றிலர் தம்மையும்
     முற்று ளோரையும் முற்றிலர் தம்மையும்
          மற்று ளோரையும் மாந்தர்கள் தேற்றுமால்
               துற்ற செய்கை உளங்கொள் கருத்ததே. ......    36

வேறு

(இங்கிவை ஆடவர்)

இங்கிவை ஆடவர் இயல்புஞ் சால்புறு
     மங்கையர் பான்மையும் வகுத்த தன்னவர்
          பொங்கிய புணர்வகை புணர்ச்சிக் கேற்பதோர்
               அங்கிதம் பிறவுமேல் அறைய நின்றவே. ......    37

(புல்லுதல் சுவைத்தி)

புல்லுதல் சுவைத்திடல் புணர்ந கக்குறி
     பல்லுறல் மத்தனம் பயிலுந் தாடனம்
          ஒல்லொலி கரணமோ டுவகை ஆதிய
               எல்லையில் புணர்நிலைக் கியைந்த என்பவே. ......    38

வேறு

(விரைதலே சமந்தூ)

விரைதலே சமந்தூக் கென்னும் வேகமும் உச்சம் நீசம்
     புரைதவிர் சமமென் றோதும் பொருண்மையுங் குணத்திற் பற்றிப்
          பரவும்ஐ வகையில் ஈரைம் பகுதியாற் பிறவாற் சேர்தல்
               உரைதரு புணர்ச்சி யாகும் உபரியும் அனைய தொன்றே. ......    39

(உறுத்தலே நெருக்கல்)

உறுத்தலே நெருக்கல் மெல்ல உரோசுதல் உறுதல் முன்னா
     மறுத்தவிர் தருவு சூழ்ந்த வல்லியே மரமேற் கோடல்
          செறித்தவெள் ளரிசி பாலார் தீம்புனல் செயிர்தீர் காட்சிப்
               புறத்தி லோர்உறுப் புறுத்தல் புணர்ச்சியிற் புல்லற் பால. ......    40

(வைத்தலே துடித்தல்)

வைத்தலே துடித்தல் ஒற்று மரபொப்பு விலங்கு சுற்றே
     உத்தர மதுக்கல் உள்ளீ டோங்குசம் புடாதி தன்னால்
          பத்துடன் ஒன்றும் ஏனைப் பல்வகை உறுப்பு நாடி
               முத்திறத் தமிர்தம் உண்டல் முன்மொழி சுவைத்த லாமே. ......    41

(சுரிதகம் எண்ணாட்)

சுரிதகம் எண்ணாட் டிங்கள் தூயமண் டலமே மஞ்ஞை
     நிரலடி முயலின் புன்கால் நெய்தலின் இதழே வேங்கை
          உருகெழு நகவி ரேகை உருவில்ஏழ் உறுப்பி லெங்கும்
               வரன்முறை நகத்தால் தீட்டல் வள்ளுகிர்க் குறிய தன்றே. ......    42

(துவர்படு பவள)

துவர்படு பவள மாலை சுனகமூ டிகமே ஏனக்
     கவரடி மணிபோழ் வட்டக் கடிகண்டப் பிரத முற்றும்
          இவைஅல பிறவும் போல இன்னமு துண்ட தானம்
               அவைதமில் நெறியால் தந்தம் அழுத்தல் பற்குறிய தம்மா. ......    43

(உரமுதல் ஐந்தில்)

உரமுதல் ஐந்தில் ஐம்பால் உணர்தொழில் முறையால் ஏற்பப்
     பொருவரு புணர்ச்சி வேலை புடைத்திடல் புடைப்ப தாகும்
          கரிகர மாதி யாய கனங்குழை மகளிர் வெஃக
               மருவிய வழிபா டன்றே மத்தனம் என்ப வல்லோர். ......    44

(மயில்புற வன்ன)

மயில்புற வன்னங் காடை வண்டு வாரணஞ் செம்போத்துக்
     குயிலென இசைக்கும் எட்டின் குரலினைப் பயின்று காமர்
          இயலுறு மகளிர் பாங்கர் எய்துழி இவையில் வேண்டுஞ்
               செயல்வகை புரியு மாறு சிறந்தசீற் கார மாமே. ......    45

(பாரியல் கிராமி)

பாரியல் கிராமி யஞ்சீர்ப் பவுத்திக நாக பாசம்
     ஏரியல் நாக ரீகம் இந்திரா ணிகமே கூர்மஞ்
          சாரிதம் ஆய்தம் மூர்த்தஞ் சங்கிரா ணிகமண் டூகம்
               பாரிசம் பிடிதஞ் சூலஞ் சுரும்பிதம் பதும பீடம். ......    46

(எண்டகுஞ் சம்பு)

எண்டகுஞ் சம்பு டம்வேட் டிதம்விசும் பிதமுற் புல்லம்
     பிண்டிதம் பீடி தம்மே பிரேதுகை அநுபா தந்தான்
          பண்டதங் கடக மத்த பத்மவா சனஞ்ச மூர்த்தம்
               தண்டகம் லளிதம் வேணுச் சாரிதஞ் சமவே சன்னம். ......    47

(ஆடவஞ் சமபு)

ஆடவஞ் சமபு டத்தோ டமர்பரி வத்த கஞ்சங்
     காடகந் தேனு கம்மற் கடகம்ஐம் பதமே சானு
          மாடமர் துகிலம் பீனம் ஆத்திக மேகூர்ப் பன்னம்
               பீடிதோ ருகமம் பீதம் பீடிகை யோடு பின்னும். ......    48

(ஒட்டுவிக் கிரம)

ஒட்டுவிக் கிரம மேகோ யூதகம் என்னும் நாற்பான்
     எட்டுள திறத்தி னானும் இவையல பிறவாற் றானும்
          மட்டமா குழலி னார்கள் மகிழ்தர மதனூல் தேறுஞ்
               சிட்டர்கள் புணரும் பான்மை சித்திரக் கரண மாமே. ......    49

(திணைநிலை மகளிர்)

திணைநிலை மகளிர் தத்தந் திறங்களுஞ் சேர்தல் மாண்பும்
     உணர்குவ ரெனினும் மற்ற ஒண்குழு வதனுள் நின்ற
          கணிகையிற் பரத்தை காமக் கன்னியர் ஒழிந்தோர் தம்மைப்
               புணர்கையும் பிறவுந் தேர்தல் புலமையோர் கடனாம் அன்றே. ......    50

(முன்னுற மதன)

முன்னுற மதன நூலின் முறையெலாந் தொகையிற் கூறி
     அன்னதன் வகையுங் கூறி அகலமும் எடுத்துக் கூறிப்
          பொன்னவன் இருத்த லோடும் புரந்தரன் அவற்றை ஓர்ந்து
               கன்னியைப் புணருங் காமக் கவலைமேற் கருத்தை வைத்தான். ......    51

(கொற்றவெங் குலிச)

கொற்றவெங் குலிச வள்ளல் குரவனை இறைஞ்சி எந்தை
     சொற்றிடு பான்மை யெல்லாந் துணிவது வாகக் கொண்டேன்
          மற்றொரு பொருளும் வெஃகேன் வரம்பிலா இன்பந் தன்னைப்
               பெற்றனன் போலும் என்னப் பெருமகிழ் வெய்திப் போனான். ......    52

வேறு

(திரைசெறி கடலென)

திரைசெறி கடலெனத் திளைக்கும் இன்பநூல்
     உரைசெய்து பொன்னவன் உவப்பிற் போந்திட
          விரைசெறி தொங்கலான் மேலைப் பொன்னகர்
               அரசினை மதலைபால் ஆக்கி னானரோ. ......    53

(விண் ணுல காளு)

விண் ணுல காளுறும் வேந்தி யற்கையை
     அண் ணலஞ் சயந்தனுக் கருளி இந்திரன்
          தண் ணுறு சசிமுகச் சசியைக் கூடியே
               எண் ணரும் போகமுற் றினிது வைகினான். ......    54

(அலைகடல் அமிர்தி)

அலைகடல் அமிர்தினை வெறுக்கும் ஆயிழை
     இலவிதழ் அமுதமே இனிதென் றுண்டிடுங்
          கொலையயி ராவதந் துறக்குங் கோல்வளை
               முலையயி ராவத முயங்கி மேவுமே. ......    55

(வெல்குறும் வலியுடை)

வெல்குறும் வலியுடை விருத்தி ரன்மிசைச்
     செல்குறுந் தெய்வதத் தேரைச் சீறிடும்
          ஒல்குறு நுசுப்பினை உடைய மங்கைதன்
               அல்குலந் தேர்மிசை அசைந்து வைகுமே. ......    56

(கருங்கடல் சூழ்)

கருங்கடல் சூழ்புவி கவிழ்ந்து துன்புற
     இரங்கிய இடிக்கொடி இகழ்ந்து காய்ந்திடும்
          பொருங்கணை விழியுடைப் புலோம சைத்திரு
               மருங்குல்மின் கொடியின்மேல் மகிழ்ச்சி கொள்ளுமே. ......    57

(இயற்படு தவமுனி)

இயற்படு தவமுனி யாக்கை என்பினாற்
     செயற்படு வச்சிரஞ் செங்கை நீத்திடு
          மயிற்பெடை யன்னதோர் மடந்தை கண்ணெனும்
               அயிற்படை சேர்ந்திட அதனைத் தாங்குமே. ......    58

(இருள்நிற விசும்பி)

இருள்நிற விசும்பினில் இடைய றாமலே
     வருசிலை இரண்டையும் மறக்கு மாமலர்த்
          திருநிகர் வனப்புடைத் தெய்வ மங்கைதன்
               புருவவெஞ் சிலைகளே பொருளென் றுன்னுமால். ......    59

(ஏந்தலம் புயலினை)

ஏந்தலம் புயலினை இகழும் ஏந்திழை
     கூந்தலம் புயல்மிசை உவகை கூர்ந்திடும்
          பூந்தரு வல்லியை முனியும் பூண்முலை
               வாய்ந்திடும் உரோமமாம் வல்லி புல்லுமே. ......    60

(இத்திறம் இந்திரன்)

இத்திறம் இந்திரன் இந்தி ராணிபால்
     வைத்திடும் உளத்தினன் மறுமை எய்தினுங்
          கைத்திடு கருத்தினன் காமத் தின்பமே
               துய்த்தனன் மதனனூல் துணிபு நாடியே. ......    61

வேறு

(அன்னதோர் நாளில்)

அன்னதோர் நாளில் ஓர்நாள் அமரர்கோன் ஆணை போற்றிப்
     பொன்னகர் செங்கோல் ஓச்சிப் புரந்திடு சயந்தன் என்போன்
          தன்னயல் வந்து வைகுந் தாபதர் அமரர் தம்முள்
               முன்னுறு கின்ற ஆசான் முகனெதிர் நோக்கிச் சொல்வான். ......    62

(எந்தைகேள் மலரோன்)

எந்தைகேள் மலரோன் ஆதி இயம்பிய அமரர் யாரும்
     அந்தமில் முனிவர் யாரும் ஆற்றல்வெஞ் சூரன் தன்னால்
          வெந்துயர் உழந்து தொல்லை மேன்மையும் இழந்து தாழ
               வந்தகா ரணம தென்கொல் என்றலும் மறையோன் சொல்வான். ......    63

(விண்ணவ ராயி)

விண்ணவ ராயி னோர்க்கும் மேதகு முனிவர் யார்க்கும்
     எண்ணமில் சூரன் தன்னால் எய்திய தீமை யெல்லாம்
          நண்ணலர் புரமூன் றட்ட நாதனை அன்றித் தக்கன்
               பண்ணிய மகத்திற் புக்க பாவத்தால் விளைந்த தென்றான். ......    64

(என்றலுஞ் சயந்தன்)

என்றலுஞ் சயந்தன் கேளா ஈதுகா ரணமேல் அந்தப்
     புன்றொழில் தக்கன் வாழ்க்கை புரமெரி படுத்த தேவை
          அன்றியே செய்த வேள்வி ஆயிடை நிகழ்ச்சி யாவும்
               ஒன்றற உரைத்தல் வேண்டும் சிறியனேன் உணர்தற் கென்றான். ......    65

(சயந்தனென் றுரை)

சயந்தனென் றுரைக்கும் வள்ளல் சாற்றிய துணரா ஆற்ற
     வயந்தனை எய்தி வாழி மதலைகேள் இதனை என்னா
          வியந்திடும் அகந்தை தன்னால் மிக்குறு தக்கன் காதை
               நயந்தரு மொழியால் ஆசான் இத்திறம் நவிலல் உற்றான். ......    66

ஆகத் திருவிருத்தம் - 8278




*1. 'பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த, நன்மை பயக்கு மெனின்' என்னும் திருக்குறள் கருத்தினை இங்கு ஒப்பு நோக்குக.

தேவ காண்டம் முற்றுப் பெற்றது

ஆகக் காண்டம் ஐந்துக்குத் திருவிருத்தம் - 8,278

கச்சியப்ப சிவாசாரியர் திருவடி வாழ்க



previous padalam   5 - இந்திரபுரிப் படலம்   next padalamIndhiraburip padalam

previous kandam   5 - தேவ காண்டம்   next kandam5 - dhEva kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]