(இப்படி சிலநாள்)
இப்படி சிலநாள் ஏக இதன்மிசை வைகல் ஒன்றில்
ஒப்பருங் கந்த வெற்பில் உறைவது கருதிச் செவ்வேள்
செப்புறழ் கொங்கை யோடுஞ் சினகரந் தணந்து செல்ல
அப்பரி சுணர்ந்து வேதா ஆதியர் யாரும் போந்தார். ......
1(பெருந்தகை யனை)
பெருந்தகை யனைய காலைப் பிரமன்மால் முதலோர் யாரும்
விரைந்துதம் பதங்கள் செல்ல விடைபுரிந் தங்கண் வானத்
திருந்தர சியற்ற விண்ணோர்க் கிறைவனை நிறுவித் தெய்வத்
திருந்திழை அணங்கி னோடுஞ் சென்றுதன் தேரிற் புக்கான். ......
2(தேரிடைப் புகுந்த)
தேரிடைப் புகுந்த ஐயன் திறலுடை மொய்ம்பன் பாகாய்ப்
பாரிடைச் சென்று முட்கோல் பற்றினன் பணியா லுய்ப்பப்
போருடைச் சிலைவல் லோரும் பூதர்தங் கடலுஞ் சுற்றக்
காருடைக் களத்துப் புத்தேள் கயிலைமால் வரையிற் போந்தான். ......
3(போனதோர் காலை)
போனதோர் காலை வையம் பொள்ளென இழிந்து முக்கண்
வானவன் தன்னை ஆயோ டடிகளை வணக்கஞ் செய்து
மேனதோர் கருணை யோடும் விடைபெறீஇ விண்ணு ளோர்கள்
சேனையந் தலைவன் கந்தச் சிலம்பினிற் கோயில் புக்கான். ......
4(புக்கதோர் குமர)
புக்கதோர் குமர மூர்த்தி பொருதிறல் வயவர் யாருந்
தொக்கனர் பணியில் நிற்பத் தொல்படைக் கணங்கள் போற்ற
மைக்கருங் குவளை ஒண்கண் மடவர லோடு மேவி
மிக்குயர் மணிப்பீ டத்தில் வீற்றிருந் தருளி னானே. ......
5(துய்யதோர் மறைக)
துய்யதோர் மறைக ளாலுந் துதித்திடற் கரிய செவ்வேள்
செய்யபே ரடிகள் வாழ்க*
1 சேவலும் மயிலும் வாழ்க
வெய்யசூர் மார்பு கீண்ட வேற்படை வாழ்க அன்னான்
பொய்யில்சீ ரடியார் வாழ்க வாழ்கஇப் புவன மெல்லாம். ......
6ஆகத் திருவிருத்தம் - 8212