(ஆன சிற்சில வைகல்)
ஆன சிற்சில வைகல்சென் றிடுதலும் அணங்குந்
தானும் உற்றிடும் உறையுளை ஒருபகல் தணந்து
வான வர்க்கிறை வினைக்குறை நிரப்புதல் வலித்துக்
கோன கர்ப்பெரும் புதவினில் வந்தனன் குமரன். ......
1(உவாவின் மாதுடன்)
உவாவின் மாதுடன் உவாவினுக் கிளையவன் உவாவில்
திவாக ரன்மதி யாமென வருதலுந் தெரிந்து
தவாத அன்புடை வயவருஞ் சாரதர் எவரும்
அவாவொ டன்னவர் அடிமுறை வணங்கிநின் றார்த்தார். ......
2(அனிகம் ஆர்த்திடல்)
அனிகம் ஆர்த்திடல் செவிப்புலம் படர்தலும் அடல்வேல்
புனித நாயகன் போந்தனன் போந்தனன் என்று
வனச மேலவன் மாலவன் மகபதி வானோர்
முனிவர் யாவரும் எழுந்தனர் விரைசெலல் முன்னி. ......
3வேறு(எழுதரு கின்றவர்)
எழுதரு கின்றவர் யாரும் ஓரிமைப்
பொழுதுறும் அளவையிற் போந்து மன்னுயிர்
முழுதருள் புரிதரு முதல்வன் சேவடி
தொழுதனர் இறைஞ்சினர் சூழ்ந்து போற்றலும். ......
4(கொந்தவிழ் அலங்கல)
கொந்தவிழ் அலங்கலங் குவவுத் தோளினான்
வந்துவந் தனைபுரி வதனை நோக்கியே
நந்தனி யூர்தியை நடாத்திச் செல்கெனச்
சிந்தையில் விரைதரு தேர்கொண் டேகினான். ......
5(ஆசுகன் உய்த்திடும்)
ஆசுகன் உய்த்திடும் அம்பொற் றேர்மிசை
வாசவன் அருள்புரி மடந்தை தன்னுடன்
தேசுடை அறுமுகச் செம்மல் கண்ணுதல்
ஈசனுங் கவுரியும் என்ன எய்தினான். ......
6வேறு(சூரி னோடு துனை)
சூரி னோடு துனைபரித் தேர்மிசைச்
சூரி னோடு துணைவன்வந் தெய்தலும்
வாரி வீசினர் மாமலர் பன்முறை
வாரி வீசினர் வானவர் யாருமே. ......
7(பூத வீரரும் போர்)
பூத வீரரும் போர்ப்படை மள்ளரும்
மூது ணர்ந்த முனிவன் சிறார்களுங்
கோதை வேலுடைக் கொற்றவற் காம்பணி
ஏதும் ஆற்றி இனிதயற் சுற்றினார். ......
8(மாகர் யாரும் வணங்க)
மாகர் யாரும் வணங்க அவரவர்
சேக ரத்தினிற் சேவடி சூட்டியே
தோகை மாமயில் தோன்றல்முன் நின்றதால்
ஆகை யால்தவம் ஆற்றலதே அன்றோ. ......
9(பூவி னன்முதற் புங்க)
பூவி னன்முதற் புங்கவர் யாரையும்
மூவி ரண்டு முகத்தவன் கண்ணுறீஇ
நீவிர் எல்லிரும் நேர்ந்தநும் ஊர்தியின்
மேவி யெம்மொடு செல்லுமின் விண்ணென்றான். ......
10(என்ன லோடும் இனி)
என்ன லோடும் இனிதென நான்முகன்
அன்ன மீதினும் அச்சுதப் பண்ணவன்
பன்ன கேசன் பகைஞன்றன் மீதினும்
முன்னர் ஏறி முதல்வனை எய்தினார். ......
11(மாறில் வெள்ளி மலை)
மாறில் வெள்ளி மலைப்படு தெண்கயத்
தூறு நீத்தத் தொழுக்கென மும்மதத்
தாறு பாயும் அடல்அயி ராவதத்
தேறி வந்தனன் இந்திரன் என்பவன். ......
12(மற்று நின்றுள வான)
மற்று நின்றுள வானவர் யாவரும்
முற்று ணர்ந்த முனிவருந் தத்தமக்
குற்ற வூர்திகள் ஊர்ந்தெம் மிறைவனைச்
சுற்றி நின்று துதித்துடன் மேயினார். ......
13(வள்ளல் இத்துணை)
வள்ளல் இத்துணை வானுல கத்திடைப்
பொள்ளெ னப்புகப் போதுகின் றானெனாக்
கொள்ளை யிற்பலர் கூறலுங் கூளியின்
வெள்ள முற்றும் விரைந்தெழுந் திட்டவே. ......
14(குடமு ழாப்பணை)
குடமு ழாப்பணை கொக்கரை தண்ணுமை
படக மாதிய பல்லியம் ஆற்றியே
புடைநெ ருங்கிய பூதரில் எண்ணிலார்
இடிமு ழங்கிய தென்ன இயம்பினார். ......
15(ஈங்கித் தன்மையின்)
ஈங்கித் தன்மையின் ஈண்டு பரிசனம்
பாங்குற் றேகப் பரஞ்சுடர்ப் பண்ணவன்
ஓங்கற் கொண்ட ஒருதனிக் கோநகர்
நீங்கிச் சேணின் நெடுநெறிப் போயினான். ......
16(அந்த ரத்தில் அமருல)
அந்த ரத்தில் அமருல கந்தனைக்
கந்த னங்கொரு கன்னலின் நீங்கியே
இந்தி ரப்பெயர் எய்திய மாதுலன்
முந்தி ருந்த முதுநகர் மேவினான். ......
17வேறு(விண்டொடர் பொன்)
விண்டொடர் பொன்னகர் மேலைச் சூர்மகன்
நுண்டுகள் செய்திட நொய்தின் உற்றதும்
அண்டர்கள் இறையவன் அகங்கொள் வேட்கையுங்
கண்டனன் குமரவேள் கருணை யாழியான். ......
18(வீக்குறு கனைகழல்)
வீக்குறு கனைகழல் விமல நாயகன்
ஆக்கமில் விண்ணுல களிக்கும் பெற்றியால்
தேக்கிய விஞ்சையின் தெய்வத் தச்சனை
நோக்கினன் இனையன நுவறன் மேயினான். ......
19(செல்லலை யகன்றிடு)
செல்லலை யகன்றிடு தேவர் மன்னவன்
எல்லையில் வளனொடும் இருக்கும் பான்மையால்
தொல்லைய தாமெனத் துறக்க நல்குதி
வல்லையில் என்றலும் வணங்கிப் போயினான். ......
20வேறு(நூறெ ரிந்திடு நோன்)
நூறெ ரிந்திடு நோன்மையோன்
மாறில் பொன்னகர் மாடுற
வீறு மாமதில் விண்ணுலாம்
ஆறு பாய அமைத்தனன். ......
21(ஆயி ரம்மலர் அம்பு)
ஆயி ரம்மலர் அம்புயன்
சேய வாய்கள் திறந்தென
ஞாயில் மாமதில் நள்ளுற
வாயில் நான்கு வகுத்தனன். ......
22(நாற்றி சைக்கண)
நாற்றி சைக்கண நாதரும்
ஆற்ற வேயரி தாமென
ஏற்ற கோபுரம் ஏழ்நிலை
வீற்று வீற்று விதித்தனன். ......
23(வண்ண மாமதில்)
வண்ண மாமதில் வைப்பினுள்
அண்ண லங்கிரி யாழிசூழ்
கண்ண கன்புவிக் காட்சிபோல்
எண்ணில் வீதி இயற்றினான். ......
24(பூவின் மேல்வரு புங்க - 1)
பூவின் மேல்வரு புங்கவத்
தேவு நாணுறு செய்கையில்
காவல் மாநக ரத்திடைக்
கோவில் ஒன்று குயிற்றினான். ......
25(தேவு காமுறு செய்)
தேவு காமுறு செய்வரை
காவி மல்கு கயத்தொடு
வாவி பொய்கை வரம்பில
ஓவில் பான்மையின் உதவினான். ......
26(மாட மாளிகை மண்டபம்)
மாட மாளிகை மண்டபம்
ஈடு சேரரி ஏற்றணை
பாடு சேர்தரு பாழிகள்
நாடி ஏர்தக நல்கினான். ......
27வேறு(ஏறுசீர் இந்திரன்)
ஏறுசீர் இந்திரன் இருக்குங் கோயிலும்
ஆறுமா முகப்பிரான் அமருங் கோட்டமும்
மாறிலா மாலயன் மந்தி ரங்களும்
வேறுளார் இருக்கையும் விதித்திட் டானரோ. ......
28(கூன்முக வால்வளை)
கூன்முக வால்வளைக் குரிசில் ஊரினும்
நான்முகன் ஊரினும் நலத்த தென்றிட
வான்முக வியனகர் வளமை சான்றிட
நூன்முக நாடியே நுனித்து நல்கினான். ......
29வேறு(பொன்னி னுக்குப்)
பொன்னி னுக்குப் புகலிட மாகவான்
மன்னி னுக்குச்செய் மாநகர் வண்மையை
என்னி னுக்கும் இயம்பவற் றோகலை
மின்னி னுக்கும் விதிப்பருந் தன்மையே. ......
30(இனைத்தி யாவும் இமை - 1)
இனைத்தி யாவும் இமைப்பிடைச் சிந்தையின்
நினைப்பிற் செய்த நிலைமையை நோக்கியே
நனைத்து ழாய்முடி நாரணன் நான்முகன்
மனத்தி னூடு மகிழ்ச்சியை மேவினார். ......
31(வல்லை வேதன் வகு)
வல்லை வேதன் வகுப்பது மற்றுனக்
கில்லை நேரென் றினிது புகழ்ந்திட
அல்லல் தீர்அம ரர்க்கிறை காண்குறீஇப்
புல்லி னான்அப் புனைவனை என்பவே. ......
32(அணங்கு சால்புரம்)
அணங்கு சால்புரம் அவ்வகை நல்கியே
நுணங்கு நூலவன் சண்முகன் நோன்கழல்
வணங்கி நிற்பவ ருள்செய்து மாடுறு
கணங்க ளோடு கதுமெனப் போயினான். ......
33(அன்ன காலை அரம்)
அன்ன காலை அரம்பைய ரோடொரு
பொன்னின் மானம் புகுந்து புலோமசை
கன்னல் ஒன்றினில் காமரு பொன்னகர்
மன்னன் மந்திரம் வந்தடைந் தாளரோ. ......
34(அடையும் எல்லை)
அடையும் எல்லை அறுமுகப் பண்ணவன்
இடைநி லைப்படும் இந்திரன் கோநகர்க்
கடைமு தற்செலக் கஞ்சனை யாதியோர்
உடைய தத்தம தூர்தியின் நீங்கினார். ......
35(அக்க ணந்தனில் அண்ட)
அக்க ணந்தனில் அண்டர்கள் யாவரும்
தொக்கு டன்வரத் தோகையன் னாளுடன்
செக்கர் மாமணித் தேரினுந் தீர்ந்தொராய்ப்
புக்கு மேயினன் பொன்புனை மன்றமே. ......
36வேறு(தன்றுணை மஞ்ஞை)
தன்றுணை மஞ்ஞை யாகித் தாங்குதல் தெரிந்தி யானும்
இன்றிவற் பரிப்பன் என்னா இளவலும் அமைந்த தென்ன
மன்றிடை இருந்த தெய்வ மடங்கலந் தவிசின் உம்பர்
வென்றியந் தனிவேல் அண்ணல் வீற்றிருந் தருளி னானே. ......
37(அன்னதோர் அளவை தன்)
அன்னதோர் அளவை தன்னில் அறுமுகன் அலரிற் புத்தேள்
முன்னவர் தம்மை எல்லாம் முழுதருள் புரிந்து நோக்கி
இந்நகர் அரசு போற்ற இமையவர் இறைவற் கின்னே
பொன்னணி மவுலி தன்னைப் பொள்ளெனப் புனைதி ரென்றான். ......
38(என்றிவை குமரன் கூற இனி)
என்றிவை குமரன் கூற இனிதென இசைவு கொள்ளா
அன்றொரு கணத்தின் முன்னர் அட்டமங் கலமுந் தந்து
மன்றல்கொள் கவரி ஒள்வாள் மணிமுடி கவிகை யோடு
நின்றுள உறுப்பும் ஏனைப் பொருள்களும் நெறியின் உய்த்தார். ......
39(அரசியல் உரிமைத்)
அரசியல் உரிமைத் தெல்லாம் ஆங்கவர் அழைத்துக் கங்கைத்
திரைசெறி தெண்ணீர் ஆட்டிச் செழுந்துகில் கலன்கள் சாந்தம்
விரைசெய்தார் புனைந்து சீய வியன்பெருந் தவிசின் ஏற்றி
வரிசையோ டிந்திரற்கு மணிமுடி சூட்டி னாரால். ......
40(சுடர்த்தனி மவுலி)
சுடர்த்தனி மவுலி தன்னைச் சூட்டலுந் துறக்கத் தண்ணல்
அடித்துணை பணிந்தார் வானோர் அனைவரும் ஆசி தன்னை
எடுத்தெடுத் தியம்ப லுற்றார் இருடிகள் அரம்பை மாதர்
நடித்தனர் விஞ்சை வேந்தர் நல்லியாழ் நவின்றி சைத்தார். ......
41(இந்திரன் அனைய காலை - 2)
இந்திரன் அனைய காலை எம்பிரான் முன்னர் ஏகி
வந்தனை புரிந்து போற்றி வளமலி துறக்க நாடு
முந்துள அரசுஞ் சீரும் முழுதொருங் களித்தி எந்தாய்
உய்ந்தனன் இதன்மேல் உண்டோ ஊதியம் ஒருவர்க் கென்றான். ......
42(என்றலும் அருள்செய்)
என்றலும் அருள்செய் தண்ணல் இந்நகர் அரசு போற்றி
நன்றிவண் இருத்தி என்னா நாகர்கோன் தன்னை வைத்து
நின்றுள அமரர் தம்மை நிலைப்படும் இருக்கைக் கேவித்
தன்துணை அணங்குந் தானுந் தன்பெருங் கோயில் போந்தான். ......
43(குறினெடில் அளவு)
குறினெடில் அளவு சான்ற கூளியும் வயவர் யாரும்
வறியதோ ரணுவுஞ் செல்லா மரபினால் வாயில் போற்ற
உறையுளின் இருக்கை நண்ணி ஒருபெருந் தலைவி யோடும்
அறுமுக வள்ளல் பல்வே றாடல்செய் திருந்தான் அன்றே. ......
44(தூவியந் தோகை)
தூவியந் தோகை மேலோன் துணைவியோ டிருந்த காலைப்
பூவினன் முதலோர் தத்தம் புக்கிடம் அமர்ந்தார் அன்றே
தேவர்கள் இறைவன் தானுஞ் சேயிழை சசியு மாக
மேவினன் இன்பந் துய்த்து விண்ணுல கரசு செய்தான். ......
45(இனைத்தியல் கின்ற)
இனைத்தியல் கின்ற எல்லை இந்திர வளனே அன்றி
அனைத்துல கத்து முள்ள ஆக்கமும் தாம்பெற் றென்ன
மனத்திடை உவகை கொண்டு மாநகர் இருக்கை புக்குத்
தனித்தனி அமரர் எல்லாஞ் சாறயர்ந் தமர்த லுற்றார். ......
46ஆகத் திருவிருத்தம் - 8206