Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

previous padalam   1 - ஏமகூடப் படலம்   next padalamyEmakUdap padalam

Ms Revathi Sankaran (4.47mb)




(நாரண னென்னு)

நாரண னென்னுந் தேவும் நான்முகத் தவனும் முக்கட்
     பூரணன் தானு மாகிப் புவிபடைத் தளித்து மாற்றி
          ஆரண முடிவுந் தேறா அநாதியாய் உயிர்கட் கெல்லாம்
               காரண னாய மேலோன் கழலிணை கருத்துள் வைப்பாம். ......    1

(திண்ணிய அவுணர்)

திண்ணிய அவுணர் தம்மைச் செற்றிட இன்னே செவ்வேற்
     பண்ணவன் ஏகும் எல்லா அமரரும் பாங்கிற் செல்வர்
          துண்னென யானும் ஏகா தொழிவது சூழ்வன் றென்னா
               எண்ணிவந் திடுவான் போல இரவிவந் துதயஞ் செய்தான். ......    2

(இரவிவந் துதய)

இரவிவந் துதய வெற்பின் எய்திய காலை தன்னின்
     அரியணை மிசையே வைகும் அறுமுகங் கொண்ட அண்ணல்
          பிரமன்மால் மகவான் தேவர் முனிவரர் பிறருங் கேட்ப
               வரமிகு சிறப்பின் வீர வாகுவை நோக்கிச் சொல்வான். ......    3

(பாவமே பயிலு)

பாவமே பயிலுஞ் சூர பன்மனும் அவுண ரானோர்
     ஏவரும் முடிவா ராக இமையவர் இடும்பை நீங்க
          மாவியல் கின்ற வீர மகேந்திர புரத்துக் கின்னே
               போவது புரிது நந்தேர் பொள்ளெனக் கொணர்தி என்றான். ......    4

(வள்ளல்மற் றிதனை)

வள்ளல்மற் றிதனைச் செப்ப மாலயன் மகவா னாதி
     உள்ளபண் ணவர்கள் கேளா உவகையங் கடலின் மூழ்கித்
          தெள்ளிதின் எமது துன்பந் தீர்ந்தது தீர்ந்த தென்னாத்
               துள்ளினர் ஆடிப் பாடி அவனடி சூட லுற்றார். ......    5

(ஆயது காலை தன்னின்)

ஆயது காலை தன்னின் அரும்பெருங் கயிலை போற்றும்
     நாயக நந்தி அண்ணல் நற்கணத் தலைமை பூண்டோன்
          சேயதோர் மனவே கப்பொற் றேரொடு வலவன் தன்னைக்
               கூயினன் கொண்டு வல்லே குமரவேள் முன்னர் உய்த்தான். ......    6

(முன்னுற மருத்தன்)

முன்னுற மருத்தன் தூண்டு முரண்டகு தடந்தேர் நண்ண
     அன்னதை அருளின் நோக்கி அறுமுகம் படைத்த அண்ணல்
          பன்னெடுஞ் சீயந் தாங்கும் பைம்பொனின் தவிசு தன்னின்
               மன்னினன் இருத்தல் நீங்கி எழுந்தனன் மறைகள் போற்ற. ......    7

(மாறில்பொன் சுடரும்)

மாறில்பொன் சுடரும் மேரு வரைமிசை இருமூ வெய்யோர்
     வேறிலா தொருபாற் பட்டு விளங்கிவந் திவரு மாபோல்
          ஆறுமா முகத்தெம் மையன் அனையதொல் இரத மீக்கண்
               ஏறினான் ஏறிச் சூழ்வோர்க் கினையதொன் றியம்பு கின்றான். ......    8

(வார்திரை அளக்கர்)

வார்திரை அளக்கர் நாப்பண் வரம்பிலா அளவைத் தாகிச்
     சீர்திகழ் மகேந்தி ரப்பேர்த் திருநகர் முன்னர் ஏகிச்
          சூர்தனை அடுவான் போதுந் துண்ணென நீவிர் நுந்தம்
               ஊர்திகள் தம்மில் மேவி ஊர்ந்திவண் வருதி ரென்றான். ......    9

(இப்படி முகமா)

இப்படி முகமா றுள்ள எம்பிரான் இசைத்த லோடும்
     அப்பணி இசையா வேதன் அன்னத்தும் ஆழி மேலோன்
          ஒப்பரும் உவண மீதும் உம்பர்கோன் மான மீதுஞ்
               செப்புறும் ஏனை விண்ணோர் தத்தமூர் தியனுஞ் சேர்ந்தார். ......    10

(அந்தமில் இலக்க)

அந்தமில் இலக்கத் தோரும் அவரலா எண்மர் தாமும்
     மந்தரம் உறழும் வீர வாகுவாம் வன்மை யோனும்
          எந்திர வயமான் தேரின் வீற்றுவீற் றேறி யார்க்குஞ்
               சிந்தையி னானும் எட்டாத் தேவர்க டேவற் சூழ்ந்தார். ......    11

(சுப்பிரன் மேக)

சுப்பிரன் மேக மாலி சுவேதசீ ரிடன்க பாலி
     அப்பிர சித்துச் சித்தி ராங்கனே சுவால தாலு
          ஒப்பில்வச் சிரனே வீமன் உக்கிரன் உக்கி ரேசன்
               பிப்பிலன் நந்தி சேனன் பிரமசன் பிரம சேனன். ......    12

(பதுமனே கராளன்)

பதுமனே கராளன் தண்டன் பத்திரன் பரிக நேமி
     உதவகன் புட்ப தந்தன் உருத்திரா காரன் வீரன்
          மதிசயன் கேது மாலி வக்கிரன் பிரம கேசன்
               அதிபதி கலிங்கன் கோரன் அச்சுதன் அசலன் சாந்தன். ......    13

(சித்திர சேனன்)

சித்திர சேனன் பூரி சுசீலன்மா சயனே சிங்கன்
     உத்தர மடங்கற் பேரோன் உபதிட்டன் சயனே ஈசன்
          மத்தகன் மதங்கன் சண்டி மகாபலன் சுவேதன் நீல
               பத்திரன் சுவாகு அண்டா பரணனே காக பாதன். ......    14

(பிங்கலன் சமானன்)

பிங்கலன் சமானன் மாயன் பிறங்கிய நிகும்பன் கும்பன்
     சங்கபா லன்வி சாகன் சதநாவன் அயக்கி ரீவன்
          அங்கையா யிரத்தன் செங்கண் அயுதத்தன் அனந்தன் வாமன்
               மங்கல கேசன் சோமன் வச்சிர மாலி சண்டன். ......    15

(அசமுகன் சரபன்)

அசமுகன் சரபன் குந்தன் ஆடகன் கவந்தன் மேகன்
     விசயன்வித் துருமன் தண்டி வியாக்கிரன் கால பாசன்
          தசமுகன் குமுதன் பானு தனஞ்சயன் இடப ரூபன்
               சுசிமுகன் அனல கேசன் சுபத்திரன் கேது மோகன். ......    16

(மத்தனுன் மத்தன்)

மத்தனுன் மத்தன் நந்தி மனோபவன் வாயு வேகன்
     பத்துநூ றடிகள் பெற்றோன் பானுகம் பன்ப தங்கன்
          சுத்தனே அனிகன் சீதன் சுனாதனே சுமாலி மாலி
               அத்திரி அவுணர் கூற்றன் அரிகேசன் சுவால கேசன். ......    17

(இங்கிவர் பூத வெள்ள)

இங்கிவர் பூத வெள்ளத் திறையவர் ஒருநூற் றெண்மர்
     பொங்குவெஞ் சினத்தர் எல்லாப் புவனமும் அடவென் றாலும்
          அங்கொரு நொடிப்பின் முன்னர் அடுபவர் ஆடல் மிக்கோர்
               சங்கையில் வலியோர் யாருஞ் சண்முகத் தவனைச் சூழ்ந்தார். ......    18

(ஏயெனப் பகரும்)

ஏயெனப் பகரும் முன்னம் இவ்வகை எவருஞ் செவ்வேற்
     சேயினைச் சூழ்த லோடுஞ் செய்கைமற் றதனைக் காணூஉ
          மாயிருட் பரவை ஞாலம் வரைக்குலம் பனிப்ப ஆர்த்திட்
               டாயிரத் திரட்டி வெள்ளத் தனிகமும் எழுந்த அன்றே. ......    19

(எழுந்தன அனிக)

எழுந்தன அனிக வெள்ளம் ஈண்டிய எங்கும் விண்ணோர்
     பொழிந்தனர் பூவின் மாரி பூதர்தந் தெழிப்பு விண்ணும்
          ஒழிந்திடு திசையும் பாரும் உற்றன உலைந்த தாழி
               அழிந்தன கருவி வானம் அண்டம்நெக் குடைந்த மாதோ. ......    20

(கல்லென இரங்கு)

கல்லென இரங்கு பேரி கரடிகை துடியே காளஞ்
     சல்லரி திமிலை தக்கை தண்ணுமை படகங் கோடு
          வல்லியல் உடுக்கை சங்கம் வான்குட முழவ மாதிப்
               பல்லியம் அனந்த கோடி பாரிடம் இயம்பிச் சென்ற. ......    21

(கள்ளலம் புற்ற)

கள்ளலம் புற்ற தண்டார் கவினிய மொய்ம்பிற் பூத
     வெள்ளமங் கேக லோடும் விரிந்தெழு பூழி மாலை
          தள்ளருஞ் சுடர்கண் மாற்றி அகிலமுந் தானே யாகி
               அள்ளலங் கடலின் பேழ்வாய் அடைத்தது திடரே யாக. ......    22

(கலகல மிழற்றும்)

கலகல மிழற்றும் நோன்றாட் கழல்புனை பூத வெள்ளம்
     வலவயின் எஃகம் ஏந்தும் வள்ளல்தாள் வழுத்திச் சூழ்ந்து
          செலவுறு கிரிகள் மானச் சென்றுதந் தலைவ ரோடும்
               அலைபொரும் அளக்கர் வேலை அகன்கரை இறுத்த அம்மா. ......    23

(மடங்கலை உறழும்)

மடங்கலை உறழும் மொய்ம்பின் மாபெரும் பூத வெள்ளந்
     தடங்கழல் கலிப்பத் தாளிற் சலசல ஒலிப்ப மாறா
          நெடுந்திரை அலமந் துள்ள நேமியங் கடலே ஆறா
               நடந்தன பொறையாற் றாது சேடனும் நடுக்கம் உற்றான். ......    24

(படிதவிர் பூத வெள்ள)

படிதவிர் பூத வெள்ளம் படர்தலும் பரட்டின் காறாக்
     கடலள வமைந்த தன்றே கனல்விழிச் சுறவு சின்னை
          கெடலருந் திமிங்கி லாதி கீடம்போல் உலவா நின்ற
               அடியுறை பரலே போன்ற அதற்படு கிரிகள் முற்றும். ......    25

(தந்திரப் பூத வெள்ள)

தந்திரப் பூத வெள்ளந் தடங்கட லாற்றிற் சார
     வெந்திறல் துணைவர் யாரும் விரிஞ்சனும் மாலும் மற்றை
          இந்திரத் தலைவன் தானும் இமையவர் பலருஞ் சூழ
               அந்தரத் தாற்றிற் சென்றான் அறுமுகன் அணித்திண் தேர்மேல். ......    26

(மாறுபட் டவர்மே)

மாறுபட் டவர்மேற் செல்லும் வயப்பெரும் பூதர் ஏக
     ஆறுபட் டமரும் முந்நீர் அலமந்து தெளிவின் றாகிச்
          சேறுபட் டிறைய தொன்று தேய்ந்திடு முன்னம் அஃதே
               நீறுபட் டெழுந்து சென்றெவ் வுலகமும் நிமிர்ந்து சூழ்ந்த. ......    27

(இவ்வகை அயில்)

இவ்வகை அயில்வேல் அண்ணல் இராயிரம் பூத வெள்ளங்
     கவ்வையின் அமைந்து செல்லக் கனைகடல் வரைப்பின் ஏகி
          எவ்வம தடைந்த தொல்லை இலங்கையங் குவடு நீங்கி
               மைவரை புரைசூர் மேவு மகேந்திர புரமுன் போந்தான். ......    28

வேறு

(போந்தகாலை அயலி)

போந்தகாலை அயலின்வந்து போற்றியங்கை கூப்பியே
     நாந்தகஞ் சிலைகதை நலங்கொள் சங்குசக்கரம்
          ஏந்தினோனும் நான்முகனும் இந்திரத் தலைவனும்
               ஆய்ந்துநேடி இன்னதன்மை ஆர்வமோ டியம்பினார். ......    29

(காண்டியீது சூரனூர்)

காண்டியீது சூரனூர் கடுங்கண்நீசர் செறிதலால்
     ஆண்டுசேறல் முறையதன் றதற்கடுத்த எல்லையாம்
          ஈண்டுபாச றைத்தலம் இயற்றுவித் திருந்தபின்
               வேண்டுமாறு புரிதிஐய வினையநாடி என்னவே. ......    30

(குன்றெறிந்த முருகன்)

குன்றெறிந்த முருகன்அன்ன கூற்றுணர்ந்தி சைந்திடா
     நன்றிதென் றருட்கண்வைத்து நாகர்கம்மி யன்தனை
          மன்றஅன்பொ டேவிளித்து வல்லைஈண்டு பாசறை
               ஒன்றுசெய்தி டென்னலும் உளஞ்சிறந்து புகலுவான். ......    31

(தாரகற் கடந்தவேற்)

தாரகற் கடந்தவேற் றடக்கைவீர ஈண்டியான்
     ஓரிறைக்கு முன்னமாக ஓங்குபா சறைத்தலஞ்
          சீரிதிற் படைக்குவன் தெரிந்துகாண்டி உனதுபேர்
               ஆரருட் டிறத்தினென் றடித்தலம் பணிந்துபின். ......    32

(மாடகூட மண்டபம்)

மாடகூட மண்டபம் வளங்கொள்சோலை வாவிகள்
     பீடுலாய கோபுரம் பிறங்குவீதி ஓர்திசை
          கோடிகோடி ஆக்கிமற்றொர் கோநகர் இயற்றியே
               நாடுமேம கூடமென்று நாமமொன்று நாட்டினான். ......    33

(கருத்திலன்ன வன்)

கருத்திலன்ன வன்செயுங் கவின்கொள்பாடி வீடுகண்
     டருத்தியான் மகிழ்ச்சியெய்தி அருள்புரிந்து கந்தவேள்
          திருத்தகுஞ் சனங்கள் போற்றி செய்யஆண்டு சென்றபின்
               மருத்தன்உந்து தேரிழிந்து மந்திரத்தை நண்ணினான். ......    34

(அந்தமற்ற பூதர்)

அந்தமற்ற பூதர்தம்மை ஆவணங்கள் நிறுவியே
     முந்துகொற்ற வயவர்நான் முகத்தனாதி அவரொடும்
          மந்திரத்துள் ஏகியே மகிழ்ந்துவீற் றிருந்தனன்
               இந்திரப்பெ ருமடங்கல் ஏறுதாங்கு தவிசின்மேல். ......    35

(ஒன்பதோடி லக்கவீ ரர்)

ஒன்பதோடி லக்கவீ ரர் ஓங்கலாளர் அறுவர்கள்
     அன்புசெய்து போற்றிசெய்ய அறுமுகேசன் அமரர்கள்
          முன்புசெய் பணித்திறம் முறைப்படப் புரிந்திட
               இன்பினோடும் ஏமகூட வெழிலிருக்கை வைகினான். ......    36

ஆகத் திருவிருத்தம் - 4926



previous padalam   1 - ஏமகூடப் படலம்   next padalamyEmakUdap padalam

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  




  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  



Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]