(அந்தநல் லமைய)
அந்தநல் லமையந் தன்னின் அவுணர்கோன் ஏவல் போற்றி
முந்துசெல் லொற்ற ரானோர் மூரிநீர்க் கடலை வாவிச்
செந்தியிற் சென்று கந்தன் சேனையும் பிறவுந் தேர்ந்து
வந்தனர் விரைவின் அங்கண் மன்னனை வணங்கிச் சொல்வார். ......
1(ஏற்றவெம் பூத)
ஏற்றவெம் பூத வெள்ளம் இராயிரம் படையின் வேந்தர்
நூற்றுடன் எண்மர் பின்னும் நுவலருஞ் சிறப்பின் மிக்கோர்
மேற்றிகழ் இலக்கத் தொன்பான் வீரர்மற்றி னையரோடுந்
தோற்றமில் பரமன் மைந்தன் தொடுகடல் உலகின் வந்தான். ......
2(சரதமீ தவுணர்)
சரதமீ தவுணர் கோவே தாரக வீரன் தன்னைக்
கரையறு மாயை போற்றுங் காமரு பிறங்கல் தன்னை
இருபிள வாக வேலால் எறிந்தனன் ஈறு செய்து
திரைபொரும் அளக்கர் வேலைச் செந்திமா நகரின் உற்றான். ......
3(விலங்கிய கதிர்வேல்)
விலங்கிய கதிர்வேல் அண்ணல் விரைந்திவண் மேவு மாற்றால்
உலங்கிளர் மொய்ம்பில் தூதன் ஒருவனை விடுத்தான் அன்னான்
இலங்கையை அழித்து வந்தான் யாளிமா முகவன் றன்னை
வலங்கையின் வாளாற் செற்று வாரிதி கடந்து போனான். ......
4(செங்கதிர் அயில்)
செங்கதிர் அயில்வேல் மைந்தன் தெண்டிரைப் புணரி வாவி
பொங்குவெங் கணங்க ளோடும் போர்ப்படை வீர ரோடும்
இங்குவந் தாடல் செய்வான் எண்ணினன் இருந்தான் ஈது
சங்கையென் றுன்னல் வாய்மை தகுவன உணர்தி யென்றார். ......
5(ஒற்றர்சொல் வினவி)
ஒற்றர்சொல் வினவி மன்னன் ஒருதனி இளவல் தன்னை
அற்றமில் கேள்வி சான்ற அமைச்சரை மைந்தர் தம்மைச்
சுற்றமொ டமைந்த தானைத் தொல்பெருந் தலைமை யோரை
மற்றொரு கணத்தின் முன்னர் மரபொடு கொணரு வித்தான். ......
6வேறு(ஆங்கவர் யாவரும்)
ஆங்கவர் யாவரும் அவுணர் மன்னவன்
பூங்கழல் கைதொழூஉப் புடையின் வைகலுந்
தீங்கனல் சுடுவதோர் சீற்றம் உள்ளெழ
வீங்கிய உயிர்ப்பினன் விளம்பல் மேயினான். ......
7(போற்றல ராகிய)
போற்றல ராகிய புலவர் யாரையும்
மாற்றருஞ் சிறையில்யான் வைத்த பான்மையைத்
தேற்றிய மகபதி சென்று சென்னிமேல்
ஆற்றினை வைத்திடும் அமலற் கோதினான். ......
8(கண்ணுத லுடைய)
கண்ணுத லுடையதோர் கடவுள் வல்லையோர்
அண்ணலங் குமரனை அளித்து மைந்தநீ
விண்ணவர் சிறையினை வீட்டிச் செல்கெனத்
துண்ணென நம்மிசைத் தூண்டி னானரோ. ......
9(வாய்த்திடு கயிலை)
வாய்த்திடு கயிலைமால் வரையை வைகலுங்
காத்திடு நந்திதன் கணத்து வீரரும்
மீத்தகு பூதரும் விரவ மாலயன்
ஏத்திட அரன்மகன் இம்பர் எய்தினான். ......
10(பாரிடை யுற்றுளான்)
பாரிடை யுற்றுளான் பாணி கொண்டதோர்
கூருடை வேலினாற் கொடிய குன்றொடு
தாரக இளவலைத் தடிந்து பின்னுற
வாரிதி யகன்கரை வந்து வைகினான். ......
11(அன்னதோர் அறுமுகன்)
அன்னதோர் அறுமுகன் ஆங்கொர் தூதனை
என்னிடை விடுத்தலும் ஏகி மற்றவன்
மைந்நிற நெடுங்கடல் வரைப்பிற் பாய்ந்தொராய்ப்
பொன்னவிர் இலங்கைமா புரத்தை வீட்டினான். ......
12(இலங்கையங் காவலும்)
இலங்கையங் காவலும் இகப்புற் றின்னதோர்
பொலங்கெழு திருநகர் நடுவட் புக்குலாய்
நலங்கிளர் என்னவைக் களத்தின் நண்ணினான்
கலங்கலன் நிறையது மாயைக் கற்பினான். ......
13(நண்ணினன் எதிரு)
நண்ணினன் எதிருற நவையில் வீரர்போல்
விண்ணவர் பாங்கராச் சிலவி ளம்பியென்
கண்முனஞ் சிலருயிர் களைந்து வன்மையால்
எண்ணலன் பின்னுற எழுந்து போயினான். ......
14(போயவன் இந்நகர்)
போயவன் இந்நகர் பொடித்துச் சிந்தியான்
ஏயின வேயின படைஞர் யாரையும்
மாயுறு வித்தனன் மற்றும் என்னிளஞ்
சேயுயர் கொண்டனன் செருக்கு நீங்கலான். ......
15(அழிந்ததித் திருநகர்)
அழிந்ததித் திருநகர் அளப்பில் தானைகள்
கழிந்தன செறிந்தது களேப ரத்தொகை
கிழிந்தது பாரகங் கெழீஇய சோரியா
றொழிந்ததென் னாணையும் உயர்வுந் தீர்ந்ததால். ......
16(ஒற்றென வந்தவ)
ஒற்றென வந்தவவ் வொருவன் தன்னையும்
பற்றிவெஞ் சிறையிடைப் படுத்தி னேன்அலேன்
செற்றிலன் ஊறதே எனினுஞ் செய்திலேன்
எற்றினி வசையுரைக் கீறு கூறுகேன். ......
17(இம்பரின் இவையெலாம்)
இம்பரின் இவையெலாம் இழைத்த தூதுவன்
நம்பதி இகந்துபோய் இலங்கை நண்ணிய
மொய்ம்புடை யாளிமா முகவற் சாடியே
அம்புதி கடந்தனன் அவனி யெய்தினான். ......
18(கார்பொரு மிடற்ற)
கார்பொரு மிடற்றவன் காதன் மாமகன்
வாரிதி கடந்திவண் வந்து நம்மொடும்
போர்பொர நினைகுவான் போலும் இவ்வெலாஞ்
சாரணர் மொழிந்தனர் சரத மாகுமால். ......
19(நெற்றியில் அனிக)
நெற்றியில் அனிகமாய் நின்ற பூதரைச்
செற்றிகல் வீரரைச் செகுத்துச் சேயினை
வெற்றிகொண் டேனையர் தமையும் வீட்டியே
மற்றொரு விகலைமுன் வரவல் லேனியான். ......
20(சூரனென் றொரு)
சூரனென் றொருபெயர் படைத்த தொல்லையேன்
பாரிடர் தம்மொடும் பாலன் தன்னொடும்
போரினை இழைத்திடல் புரிந்து வெல்லினும்
வீரம தன்றெனா வறிது மேவினேன். ......
21(துய்த்திடுந் திருவி)
துய்த்திடுந் திருவினில் வலியிற் சூழ்ச்சியில்
எத்துணைப் பெரியர்தாம் எனினும் மேலையோர்
கைத்தொரு வினைசெயக் கருதிற் றம்முடை
மெய்த்துணை யோரைமுன் வினவிச் செய்வரால். ......
22(ஆதலின் வினவி)
ஆதலின் வினவினன் யானு மாற்றுதல்
ஈதென வுரைத்திரால் என்று மன்னவன்
ஓதினன் அன்னதை உணர்ந்து கைதொழூஉ
மேதியம் பெயரினான் இவைவி ளம்பினான். ......
23(மேலுயர் மாயைகள்)
மேலுயர் மாயைகள் விளைக்கும் வெற்பினை
மாலினை வென்றநின் வலிய தம்பியை
ஏலவொர் கணத்தின்முன் எறிந்த வீரனைப்
பாலெனென் றுரைப்பதும் உணர்வின் பாலதோ. ......
24(மேதகு தாரக)
மேதகு தாரக வீரன் தானையை
ஆதிபர் தம்முடன் அட்ட தீரரை
ஏதுமோர் வலியிலா எளிய ரென்பதும்
பூதரென் றிகழ்வதும் புலமைப் பாலவோ. ......
25(மீதெழு திரைக்கடல்)
மீதெழு திரைக்கடல் விரைவிற் பாய்ந்துநம்
மூதெயில் வளநகர் முடித்து நின்னுடைக்
காதல னுயிரையுங் கவர்ந்த கள்வனைத்
தூதனென் றுரைப்பதும் அறிஞர் சூழ்ச்சியோ. ......
26(கற்றையஞ் சிறை)
கற்றையஞ் சிறையுடைக் கலுழன் ஊர்தரு
கொற்றவன் திசைமுகன் அமரர் கோமகன்
மற்றொரு வடிவமாய் வந்த தேயலால்
ஒற்றுவன் நிலைமைவே றுணரற் பாலதோ. ......
27(உன்றனி இளவலும்)
உன்றனி இளவலும் ஒருநின் னோங்கலும்
பொன்றிய காலையே புராரி மைந்தன்மேற்
சென்றிலை யல்லதுன் சேனை தூண்டியும்
வென்றிலை தாழ்த்திவண் வறிது மேவினாய். ......
28(தீயழல் வறியதே)
தீயழல் வறியதே எனினுஞ் சீரியோர்
ஏயிது சிறிதென எள்ளற் பாலரோ
வாயத னாற்றலை அடக்க லாரெனின்
மாயிரும் புவியெலாம் இறையின் மாய்க்குமால். ......
29(மாற்றலர் சூழ்ச்சி)
மாற்றலர் சூழ்ச்சிய தெனினும் மாறதாய்
வீற்றொரு நிலைமைய தெனினும் மேவுமுன்
ஏற்றெதிர் காப்பரே என்னின் அன்னவர்க்
காற்றரும் இடுக்கண்வந் தடைதற் பாலதோ. ......
30(துறந்திடா வளந்த)
துறந்திடா வளந்தனைத் துய்த்துச் செய்வகை
மறந்தன மாகியே வன்மை யாளரை
எறிந்தவர் தமையிகழ்ந் திங்ஙன் வாழ்துமேற்
சிறந்தவர் யாமலால் ஏவர் சீரியோய். ......
31(முன்னமக் குமரன்)
முன்னமக் குமரன்மேல் முனிந்து சேறியேல்
உன்னகர்க் கேகுமோ ஒற்று மற்றுநீ
அன்னது புரிந்திலை ஆடல் மைந்தனோ
டிந்நகர் அழிந்ததென் றிரங்கற் பாலையோ. ......
32(மொய்யுடை நின்முகன்)
மொய்யுடை நின்முகன் முடிந்த தன்மையும்
ஐயநின் திருநகர் அழிவ தானதுஞ்
செய்யுறு நிலைமைகள் தெரிந்து செய்திடா
மையலின் கீழ்மையால் வந்த வாகுமால். ......
33(கழிந்திடு பிழை)
கழிந்திடு பிழையினைக் கருதிச் சாலவுள்
அழிந்திடல் இயற்கையன் றறிஞர்க் காதலால்
ஒழிந்தன போகவொன் றுரைப்பன் கேண்மியா
விழிந்ததென் றுன்னலை இமைப்பிற் செய்திநீ. ......
34(ஆயது பிறவிலை)
ஆயது பிறவிலை அவுணர் தம்மொடு
மேயின படையொடும் விரைந்து கண்ணுதற்
சேயினை வளைந்தமர் செய்யப் போதியால்
நீயினித் தாழ்க்கலை நெருநல் போலவே. ......
35(என்றிவை மேதியன்)
என்றிவை மேதியன் இசைப்பக் கேட்டலும்
நன்றிது வாமென நவின்று கையெறிந்
தொன்றிய முறுவலும் உதிப்ப நல்லறங்
கொன்றிடு துர்க்குணன் இனைய கூறுவான். ......
36(வன்றிறல் உவணன்)
வன்றிறல் உவணன்மேல் வந்த மாயன்மேல்
நின்றிடும் அமரர்மேல் நேர்ந்து போர்செயச்
சென்றிலை இளையரால் திறல்கொண் டேகினாய்
இன்றினிப் பாலன்மேல் ஏக லாகுமோ. ......
37(இறுதியில் ஆயுளும்)
இறுதியில் ஆயுளும் இலங்கும் ஆழியும்
மறுவிலா வெறுக்கையும் வலியும் வீரமும்
பிறவுள திறங்களுந் தவத்திற் பெற்றனை
சிறுவனொ டேயமர் செய்தற் கேகொலாம். ......
38(மேதகு பசிப்பிணி)
மேதகு பசிப்பிணி அலைப்ப வெம்பலிக்
காதல்கொண் டலமருங் கணங்கள் தம்மையுந்
தூதுவன் தன்னையுந் தொடர்ந்து போர்செயப்
போதியோ அமரரைப் புறங்கண் டுற்றுளாய். ......
39(இன்றுநின் பெரும்படை)
இன்றுநின் பெரும்படைக் கிறைவர் யாரையுஞ்
சென்றிட விடுக்குதி சிறிது போழ்தினில்
குன்றெறி பகைஞனைக் கூளி தம்மொடும்
வென்றிவண் மீள்குவர் வினைய மீதென்றான். ......
40(கருதிடு துர்க்குண)
கருதிடு துர்க்குணக் கயவன் இன்னன
உரைதரு முடிவினில் ஒழிக இங்கெனாக்
கருமணி யாழியங் கைய மைத்தரோ
தருமவெம் பகையுடை யமைச்சன் சாற்றுவான். ......
41(குலம்படு நவமணி)
குலம்படு நவமணி குயின்று பொன்புனை
அலம்படை கொண்டுபுன் முதிரை ஆக்கத்தாற்
புலம்படக் கீறுவ போலும் வீரநீ
சிலம்படி மைந்தனோ டாடல் செய்வதே. ......
42(மேலுயர் கண்ணுதல்)
மேலுயர் கண்ணுதல் விமலன் அன்றெனின்
ஆலவன் அன்றெனின் அயனும் அன்றெனில்
காலனும் அன்றெனிற் காவல் வீரநீ
பாலனொ டமர்செயிற் பயனுண் டாகுமோ. ......
43(மன்னிளங் குதலை)
மன்னிளங் குதலைவாய் மதலை மீதினும்
இன்னினி அமர்செய இறத்தி யென்னினும்
அன்னவன் நினதுபோ ராற்றல் காண்பனேல்
வென்னிடும் எதிர்ந்துபோர் விளைக்க வல்லனோ. ......
44(நேரலர் தங்களை)
நேரலர் தங்களை நேர்ந்து ளாரெனப்
பேரிகல் ஆற்றியே பெரிது மாய்வதும்
பூரியர் கடனலாற் புலமைக் கேற்பதோ
சீரியர் கடனவை தெரிந்து செய்வதே. ......
45(எரிமுகன் இரணியன்)
எரிமுகன் இரணியன் எனுமுன் மைந்தரில்
ஒருவனுக் காற்றலர் இலக்கத் தொன்பது
பொருதிறல் வயவரும் பூதர் யாவரும்
அரனருள் புரிதரும் அறுமு கத்தனும். ......
46(கீள்கொடு நகங்கொடு)
கீள்கொடு நகங்கொடு கிள்ளும் ஒன்றினை
வாள்கொடு தடியுமோ வன்மை சான்றதோர்
ஆள்கொடு முடித்திடும் அவரை வென்றிட
நீள்கொடு மரங்கொடு நீயுஞ் சேறியோ. ......
47(மாணிமை கூடுறா)
மாணிமை கூடுறா மகவு தன்னொடு
மேணறு சாரதர் இனங்கள் தம்மொடும்
பூணுதி செருவெனும் புகற்சி கேட்பரேல்
நாணுவர் நமரெலாம் நகுவர் தேவரும். ......
48(பொற்றையை முடித்த)
பொற்றையை முடித்தனன் பொருவில் தம்பியைச்
செற்றனன் என்றிளஞ் சிறுவன் தன்னையும்
வெற்றிகொள் புதல்வனை வீட்டி னானெனா
ஒற்றையும் மதித்தனை தொன்மை உன்னலாய். ......
49(ஆறணி செஞ்சடை)
ஆறணி செஞ்சடை அண்ணல் தந்திடும்
பேறுடை வேலினைப் பிள்ளை உய்த்தலும்
மாறுள படையினான் மாற்ற லாமையால்
ஈறது வாயினன் இளவல் தாரகன். ......
50(குறுமுனி தொல்லை)
குறுமுனி தொல்லைநாட் கூறும் வாய்மையால்
இறுதியை யடைந்ததாங் கிருந்த மால்வரை
அறிகிலை ஈதெலாம் ஆற்றல் கூடுறாச்
சிறுவன செய்கையே சிந்தை கோடியால். ......
51(எச்சமொ டழிவுறா)
எச்சமொ டழிவுறா இரதஞ் சாலிகை
கைச்சிலை பெற்றிலன் கருதி நீயவை
அச்சொடு புரிந்திலை அதனில் தூதனால்
வச்சிர வாகுவாம் மகனுந் துஞ்சினான். ......
52(பலவினி மொழி)
பலவினி மொழிவதென் படியில் தானவத்
தலைவரில் ஒருவனை விளித்துத் தானையோ
டிலையயின் முருகன்மேல் ஏவு வாயெனின்
அலைவுசெய் தொல்லையின் அடல்பெற் றேகுவான். ......
53(அன்னது செய்கென)
அன்னது செய்கென அறத்தைச் சீறுவான்
சொன்னதோர் இறுதியின் முறுவல் தோன்றிடக்
கன்னிகர் மொய்ம்புடைக் கால சித்தெனுங்
கொன்னவில் வேலினான் இனைய கூறுவான். ......
54(செந்தியின் இருந்தி)
செந்தியின் இருந்திடுஞ் சிறுவன் சாரதர்
தந்தொகை தன்னொடு மீண்டு சாருமேல்
எந்தையொர் சிலவரை ஏவல் அல்லது
மந்திரம் வேண்டுமோ மற்றி தற்குமே. ......
55(வயந்தன தையனை)
வயந்தன தையனை வாச வன்றனைச்
சயந்தனைப் பிறர்தமைச் சமரின் வென்றநாள்
இயைந்தெமை வினவலை இன்றொர் பாலற்கா
வியன்பெரு மந்திரம் வேண்டிற் றாங்கொலோ. ......
56(அண்டர்கள் ஒடுங்கி)
அண்டர்கள் ஒடுங்கினர் அரக்கர் அஞ்சினர்
எண்டிசைக் கிழவரும் ஏவ லாற்றுவர்
மண்டமர் அவுணரின் வலியர் பூதராங்
கண்டனம் இன்றியாங் கலியின் வண்ணமே. ......
57(பணிக்குதி தமியனை)
பணிக்குதி தமியனைப் பரமன் மைந்தனைக்
கணத்தொகை வீரரைக் கால பாசத்தாற்
பிணித்திவண் வருகுவன் என்று பேசலுந்
துணுக்கெனச் சண்டன்என் றொருவன் சொல்லுவான். ......
58(கழிபசி நோயட)
கழிபசி நோயடக் கவலும் பூதரும்
மழலையம் பிள்ளையும் மற்ற வற்குறு
தொழில்புரி சிலவருஞ் சூழ்ச்சிப் பாலரோ
அழகிது மந்திரம் அவுணர்க் காற்றவே. ......
59(கொல்லுவன் பூதரை)
கொல்லுவன் பூதரைக் குமரன் றன்னையும்
வெல்லுவன் பிறரையும் விளிவு செய்வனான்
மல்லலந் தோளுடை மன்னர் மன்னவுன்
சொல்லதின் றென்னஇத் துணையுந் தாழ்த்துளேன். ......
60(ஏவுதி தமியனை)
ஏவுதி தமியனை இமைப்பிற் சென்றியான்
மூவர்கள் காப்பினும் முரணிற் றாக்கியே
தூவுறு சாரதத் தொகுதி தன்னொடு
மேவலன் தனைஇவண் வென்று மீள்வனால். ......
61(எனவிவை சண்ட)
எனவிவை சண்டனாங் கிசைத்த வெல்லையின்
அனலியென் றுரைத்திடும் அவுணர் காவலன்
சினமொடு முறுவலுஞ் சிறிது தோன்றிட
வினையமொ டிம்மொழி விளம்பல் செய்குவான். ......
62(தெம்முனை மரபி)
தெம்முனை மரபிலோர் சிறுவன் என்னினும்
வெம்மையொ டேற்குமேல் வெகுண்டு மேற்செலா
தெம்மொடு மந்திரத் திருப்ப ரேயெனின்
அம்மவோ சூரருக் கழகி தாற்றலே. ......
63(என்றிது மொழி)
என்றிது மொழிதலும் எரியுங் கண்ணினன்
ஒன்றிய முறுவலன் உயிர்க்கு நாசியன்
கன்றிய மனத்தினன் கறித்து மெல்லிதழ்
தின்றிடும் எயிற்றினன் சிங்கன் கூறுவான். ......
64(வெந்தொழில் மற)
வெந்தொழில் மறவரை விளித்த தன்மையும்
மந்திரம் இருந்தது மனங்கொள் சூழ்ச்சியும்
இந்திரன் உதவிசெய் இளையன் வன்மையைச்
சிந்திட வேகொலாம் நினைந்த செய்கையே. ......
65(இருநில அண்டமேல்)
இருநில அண்டமேல் இருந்து ளோரெலாம்
மருவல ராகியே வருக வந்திடின்
ஒருதமி யேன்பொரு துலையச் செய்வனால்
தெரியலை போலுநின் னடியன் திண்மையே. ......
66(வன்மையை உரை)
வன்மையை உரைப்பது மரபன் றால்எனைச்
சென்மென விடுக்குதி சேனை யோடுபோய்
உன்முனி வுற்றிடும் ஒன்ன லாரையட்
டின்மைய தாக்கியே வருவன் ஈண்டென்றான். ......
67(இன்னவை போல்வன)
இன்னவை போல்வன இயல்பி னேன்ஐய
துன்னெறி அமைச்சருஞ் சூழ்ச்சித் தொல்படை
மன்னரும் இசைத்தலும் வயங்கு செங்கதிர்
ஒன்னலன் கையமைத் துரைத்தல் மேயினான். ......
68(சென்றிடு முனிவரர்)
சென்றிடு முனிவரர் தியங்க மாயைசெய்
குன்றுடன் இளவலைக் குமரன் கொன்றிடும்
அன்றெனை விடுத்திலை அழைத்தொன் றோர்ந்திலை
இன்றிது வினவுவ தென்னை யெந்தைநீ. ......
69(உள்ளுறு கரவினன்)
உள்ளுறு கரவினன் ஒருவ னும்பரான்
எள்ளரும் ஒற்றுவந் தீண்டு போர்செயின்
முள்ளெயி றின்னமும் முற்றுந் தோன்றிலாப்
பிள்ளையை விடுக்குமோ பெரியை சாலநீ. ......
70(இழித்தகு தூதனால்)
இழித்தகு தூதனால் இடர்ப்பட் டாயெனும்
பழித்திறம் பூண்டனை பாலன் ஆவியை
ஒழித்தனை நகரமும் ஒருங்கு சீரற
அழித்தனை நீயுன தறிவி லாமையால். ......
71(பொருளல தொன்றி)
பொருளல தொன்றினைப் பொருளெ னக்கொடு
வெருவுதல் செய்வது வினைய மோர்கிலா
தொருசெயல் விரைந்துசெய் துயங்கி வாழ்தலும்
பெரியவர் கடமையோ பேதைத் தன்மையே. ......
72(பொற்றையொ டிள)
பொற்றையொ டிளவலைப் பொன்ற வீட்டினோன்
கொற்றமும் பூதர்தங் குழாத்தி னாற்றலும்
ஒற்றுவன் நிலைமையும் உணரிற் சென்றியான்
பற்றிமுன் னுய்க்குவன் பிணித்துப் பாசத்தால். ......
73(ஆயிரத் தெட்டெனும் அண்டத்)
ஆயிரத் தெட்டெனும் அண்டத் துக்கெலாம்
நாயக முதல்வநீ நம்பன் நல்கிய
சேயமர் குறித்தெழல் சீரி தன்றெனை
ஏயினை வெற்றிகொண் டிருத்தி எம்பிரான். ......
74(ஆண்டெனை விடுத்தி)
ஆண்டெனை விடுத்தியேல் அமர தாற்றிட
மூண்டிடும் அவர்தொகை முருக்கித் தேவராய்
ஈண்டுறு வோரையும் இமைப்பில் வென்றுபின்
மீண்டிடு வேனென விளம்பி னானரோ. ......
75(இரவியம் பகையவன்)
இரவியம் பகையவன் இனைய சிற்சில
உரைதரும் இறுதியின் உலைவு றாததோர்
முரணுறு தாதைதன் முகத்தை நோக்கியே
குரைகழல் இரணியன் கூறல் மேயினான். ......
76வேறு(வள்ளல் தன்மைசேர்)
வள்ளல் தன்மைசேர் வயப்பெருஞ் சூரனோர் மழலைப்
பிள்ளைப் போர்வலிக் கிரங்கினன் எனுமொழி பிறக்கின்
உள்ளத் தேநினை நினைக்கினும் வெருவும்ஒன் னலரும்
எள்ளற் கேதுவாம் விடுத்தியான் மந்திரம் இனியே. ......
77(மைதி கழ்ந்திடு)
மைதி கழ்ந்திடு மிடற்றவன் மதலைமா நிலத்தின்
எய்தி னான்அமர்க் கென்றலும் என்றனை விளித்து
வெய்தெ னப்பொர விடுத்திலை வெறுத்தியோ வினையேன்
செய்தி டுந்தவ றுண்டுகொல் உனக்கொரு சிறிது. ......
78(பானல் போலொளிர்)
பானல் போலொளிர் மிடற்றினன் பாலன்மேற் பசிநோய்க்
கூனை வேட்டுழல் பூதர்மேல் ஒழிந்துளார் தம்மேன்
மான வெஞ்சமர்க் கெம்முனோன் சேறலும் வசையே
சேனை யோடியான் ஏகுவன் செருத்தொழில் புரிய. ......
79(வெற்றிப் பேரமர்)
வெற்றிப் பேரமர் ஆற்றியே மேவலர் தொகையைச்
செற்றுத் தேவர்கள் யாரையுந் தடிந்துசெல் குவனால்
இற்றைக் கங்குலின் என்றனை ஏவுதி யெனலும்
மற்றைத் தம்பியாம் எரிமுகன் இனையன வகுப்பான். ......
80(இணையி லாவண்டம்)
இணையி லாவண்டம் ஆயிரத் தெட்டினுக் கிறைநீ
துணைய தாயொரு வீரகே சரியுளன் சுதராய்க்
கணித மில்லவர் யாமுளங் கரிபரி கடுந்தேர்
அணிகொ டானவப் படையுள அலகிலா தனவே. ......
81(அழிவில் பாகுள)
அழிவில் பாகுள தேருள சிலையுள அஃதான்
றொழிவி லாதமர் அம்புபெய் தூணியும் உளவால்
இழிவில் தெய்வதப் படைகண்முற் றும்முள இறைமைத்
தொழில் நடாத்துறு பரிதியும் ஒன்றுண்டு தொல்லோய். ......
82(அண்டம் ஆயிரத் தெட்டை)
அண்டம் ஆயிரத் தெட்டையுங் கன்னலொன் றதனில்
கண்டு மீடரும் இந்திர ஞாலமுங் கவனங்
கொண்ட தோர்தனி மடங்கலும் உனக்குள குறிக்கின்
விண்டு மாலுறு மாயைகள் பலவுள மேலோய். ......
83(இன்ன பான்மைசேர்)
இன்ன பான்மைசேர் வெறுக்கைபெற் றீறிலா துறையும்
மன்னர் மன்னநிற் போன்றுளார் யாவரே மலையக்
கன்னி பாலகன் தூதுவன் சிறுதொழில் கருத்தின்
உன்னி யுன்னியே இரங்கவுந் தகுவதோ உனக்கே. ......
84(குழந்தை வெண்பிறை)
குழந்தை வெண்பிறை மிலைச்சினோன் மதலையைக் குறுத்தாள்
இழிந்த பூதரைப் பிறர்தமை வென்றிட எமரில்
விழைந்த மானவர் ஒருவரை விடுப்பதே யன்றி
அழிந்தி ரங்கியே வினவுமோ இதுகொல்உன் னறிவே. ......
85(மூளும் வெஞ்சமர்)
மூளும் வெஞ்சமர் புரிந்தஎன் னிளவல்பன் முடியும்
வாளி னாலடும் ஒற்றனை மற்றுளார் தம்மைக்
கேளொ டுந்தடிந் தல்லது கேடில்சீர் நகர்க்கு
மீள்க லேனெனப் பகர்ந்தனன் வெய்யசூ ளுரையே. ......
86(கரந்தை சூடுவான் குமர)
கரந்தை சூடுவான் குமரனைப் பொருதல்கா தலியா
இருந்த வீரர்கள் அளப்பில ராயினும் இப்போர்
விரைந்து நீயெனக் குதவுதி ஏகுவன் மேனாட்
பொருந்து பாதலத் தரக்கர்மேற் சென்றதே போல. ......
87(வலிய தோர்சிலை)
வலிய தோர்சிலை ஈறிலாக் கவசம்வான் படைகள்
உலகு தந்தவன் அளித்திட முன்புபெற் றுடையேன்
குலம டங்கவாள் அரக்கரைத் தடிந்திசை கொண்டேன்
மெலியன் அன்றியான் அறுமுகன் மேலெனை விடுத்தி. ......
88(என்னு மாற்றங்கள் எரி)
என்னு மாற்றங்கள் எரிமுக முடையவன் இசைப்ப
அன்ன வன்றனை விலக்கியே கரதலம் அமைத்துச்
சென்னி ஆயிரம் பெற்றுள சிங்கமா முகத்தோன்
மன்னர் மன்னனை நோக்கியே வகுத்துரை செய்வான். ......
89(மந்தி ரத்தரு)
மந்தி ரத்தருந் தானையந் தலைவரும் மகாருந்
தந்த மக்கியல் வன்மையே சாற்றிய தல்லால்
இந்தி ரப்பெருந் திருவுறும் உன்றனக் கியன்ற
புந்தி சொற்றிலர் இம்மொழி கேளெனப் புகல்வான். ......
90வேறு(பெற்றிடு திருவினில்)
பெற்றிடு திருவினில் பிறந்த வெஞ்சினங்
கற்றவர் உணர்வையுங் கடக்கும் அன்னது
முற்றுறு கின்றதன் முன்னம் அன்பினோர்
உற்றன கூறியே உணர்த்தல் வேண்டுமால். ......
91(மன்னவர் செவியழல்)
மன்னவர் செவியழல் மடுத்த தாமென
நன்னெறி தருவதோர் நடுவு நீதியைச்
சொன்னவர் அமைச்சர்கள் துணைவர் மேலையோர்
ஒன்னலர் விழைந்தவாறு ரைக்கின் றார்களே. ......
92(முற்றுற வருவது)
முற்றுற வருவது முதலும் அன்னதால்
பெற்றிடு பயன்களும் பிறவுந் தூக்கியே
தெற்றென உணர்ந்துபின் பலவுஞ் செய்வரேல்
குற்றமொன் றவர்வயிற் குறுக வல்லதோ. ......
93(மால்வரு தொடர்)
மால்வரு தொடர்பினால் வனத்துச் செல்லுமீன்
கோல்வரும் உணவினைக் குறித்து வவ்வியே
பால்வரு புணர்ப்பினிற் படுதல் போலநீ
மேல்வரு கின்றதை வினவல் செய்கிலாய். ......
94(இந்திர னாதியாம்)
இந்திர னாதியாம் இறைவர் தங்களை
அந்தரத் தமரரை யலைத்த தீயவர்
முந்துறு திருவொடு முடிந்த தல்லதை
உய்ந்துளர் இவரென உரைக்க வல்லமோ. ......
95(தேவர்கள் யாரை)
தேவர்கள் யாரையுந் திரைகொள் வேலையின்
மேவரு மீன்றொகை விரைவிற் றம்மென
ஏவினை இனிதுகொல் இனிய செய்கைதம்
மாவியில் விருப்பிலார் அன்றி யார்செய்வார். ......
96(அறைகழல் வாசவ)
அறைகழல் வாசவற் கலக்கண் ஆற்றியே
இறையினை அழித்தனை இருந்த மாநகர்
நிறைதரு வளனெலாம் நீக்கு வித்தனை
சிறையிடை உய்த்தனை தேவர் யாரையும். ......
97(அத்தகு தேவரால்)
அத்தகு தேவரால் ஐய நங்களுக்
கித்துணை அலக்கண்வந் தெய்திற் றிங்கிது
மெய்த்திற மாமென விரைந்துட் கொள்ளலை
பித்தரின் மயங்கினை பேதை ஆயினாய். ......
98(பொன்னகர் அழிந்த)
பொன்னகர் அழிந்தநாட் புகுந்த தேவரை
இன்னமும் விட்டிலை இரக்கம் நீங்கினாய்
அன்னதற் கல்லவோ ஆறு மாமுகன்
உன்னுடன் போர்செய வுற்ற தன்மையே. ......
99வேறு(பேறு தந்திடு பிஞ்ஞ)
பேறு தந்திடு பிஞ்ஞகன் பெருந்திரு வுடனீர்
நூறு தன்னுடன் எட்டுகம் இருமென நுவன்றான்
கூறு கின்றதோர் காலமுங் குறுகிய ததனைத்
தேறு கின்றிலை விதிவலி யாவரே தீர்ந்தார். ......
100(எத்தி றத்தரும்)
எத்தி றத்தரும் நுங்களை வெல்கிலர் எமது
சத்தி வென்றிடும் என்றனன் கண்ணுதற் றலைவன்
அத்தி றத்தினால் அல்லவோ அறுமுகக் குமரன்
உய்த்த செய்யவேல் உண்டது தாரகன் உயிரை. ......
101(பேதை வானவர்)
பேதை வானவர் தங்களைச் சிறையிடைப் பிணித்தாய்
ஆத லாலுனக் கானதென் றுன்பமே அல்லால்
ஏது மோர்பயன் இல்லதோர் சிறுதொழில் இயற்றி
வேத னைப்படு கின்றது மேலவர் கடனோ. ......
102(குரவ ரைச்சிறு)
குரவ ரைச்சிறு பாலரை மாதரைக் குறைதீர்
விரத நற்றொழில் பூண்டுளோர் தம்மைமே லவரை
அரும றைத்தொழி லாளரை ஒறுத்தனர் அன்றோ
நிரய முற்றவுஞ் சென்றுசென் றலமரும் நெறியோர். ......
103(அமரர் தம்பெருஞ்)
அமரர் தம்பெருஞ் சிறையினை நீக்குதி யாயிற்
குமர நாயகன் ஈண்டுபோ ராற்றிடக் குறியான்
நமது குற்றமுஞ் சிந்தையிற் கொள்ளலன் நாளை
இமையொ டுங்குமுன் கயிலையின் மீண்டிடும் எந்தாய். ......
104(சிட்ட ராகியே)
சிட்ட ராகியே அமர்தரும் இமையவர் சிறையை
விட்டி டாதுநீ யிருத்தியேன் மேவலர் புரங்கள்
சுட்ட கண்ணுதல் குமரனங் குலமெலாந் தொலைய
அட்டு நின்னையும் முடித்திடுஞ் சரதமென் றறைந்தான். ......
105(தடுத்து மற்றிவை)
தடுத்து மற்றிவை உரைத்தலும் வெய்யசூர் தடக்கை
புடைத்து வெய்துயிர்த் துரப்பியே நகைநிலாப் பொடிப்பக்
கடித்து மெல்லிதழ் அதுக்கிமெய் பொறித்திடக் கனன்று
முடித்த னித்தலை துளக்கியே இன்னன மொழிவான். ......
106(ஏவற் றொண்டு)
ஏவற் றொண்டுசெய் தின்னமுங் கரந்தஇந் திரற்குந்
தேவர்க் குஞ்சிறு பாலற்குஞ் சிவனுறை கயிலைக்
காவற் பூதர்க்கும் அஞ்சினை கருத்தழிந் தனையோ
மூவர்க் கும்வெலற் கரியதோர் மொய்ம்புகொண் டுடையோய். ......
107(எல்லை நாள்வரை)
எல்லை நாள்வரை இழைத்ததும் எம்பெருஞ் சத்தி
வெல்லு நுங்களை என்றதுங் கண்ணுதல் விமலன்
சொல்ல யான்முன்பு கேட்டிலன் வஞ்சமுஞ் சூழ்வும்
வல்லை வல்லைகொல் எம்பிநீ புதிதொன்று வகுத்தாய். ......
108(நூற்றின் மேலுமோ)
நூற்றின் மேலுமோ ரெட்டுக நுவலருந் திருவின்
வீற்றி ருந்தர சியற்றுதிர் என்னினும் மேனாள்
ஆற்றி னைச்சடை வைத்தவன் கொடுத்திடும் அழியாப்
பேற்றை யாவரே விலக்குவார் அதுபிழை படுமோ. ......
109(ஆதி நாயகன் எம்)
ஆதி நாயகன் எம்பெருஞ் சத்தியே அல்லால்
ஏதி லார்வெலார் என்னினுஞ் சத்தியும் இறையும்
பேத மோவரங் கொடுத்தவன் அடுமென்கை பிழையே
ஓத லாவதோர் வழக்கமே உண்மைய தன்றால். ......
110(பழுது றாதுநம்)
பழுது றாதுநம் போலவே வேள்வியைப் பயிலா
தழிவி லாவரம் பெற்றிலன் தாரகன் அதனால்
ஒழிவ தாயினன் வச்சிர வாகுவும் உணர்வில்
குழவி யாதலின் மாய்ந்தனன் ஈதுகொல் குறையே. ......
111(அண்ட மாயிர)
அண்ட மாயிரத் தெட்டையுந் தனியர சாட்சி
கொண்டு வைகினன் குலத்தொடும் அமரர்தங் குழுவைத்
தொண்டு கொண்டனன் யாவர்வந் தெதிர்க்கினுந் தொலையேன்
உண்டு கொல்லிவண் எனக்குநே ராகவே ஒருவர். ......
112(தவமு யன்றுழல்)
தவமு யன்றுழல் அமரரின் அரக்கர்கள் தம்மின்
அவுணர் தங்களின் ஆயிரத் தெட்டெனும் அண்டம்
புவன முற்றவும் ஒருதனி யாழியால் புரந்தே
எவரெ னக்குநே ராகவே அழிவிலா திருந்தார். ......
113(மால யன்முத லாகி)
மால யன்முத லாகிய முதுவர்கள் வரம்பில்
கால மாகயான் அமரரைச் சிறைசெயக் கண்டுஞ்
சால வென்றனக் கஞ்சியே இருந்தனர் தனியோர்
பால னேகொலாம் அழிவிலா என்னுயிர் படுப்பான். ......
114(வேறு பாடுறா வச்சி)
வேறு பாடுறா வச்சிரப் படிவமும் மிடலும்
ஈறி லாததோர் ஆயுளும் பெற்றிடும் என்னை
ஊறு தான்செயக் கூடுறா தொருவர்க்கு மென்றான்
மாறு போர்செய்து பாலனோ எனையட வல்லான். ......
115(எண்ணி லாததோர்)
எண்ணி லாததோர் பாலகன் எனைவெல்வன் என்கை
விண்ணி லாதவன் றன்னையோர் கனியென வெஃகிக்
கண்ணி லாதவன் காட்டிடக் கையிலா தவன்போய்
உண்ணி லாதபேர் ஆசையால் பற்றுமா றொக்கும். ......
116(என்று மற்றிவை சூரபன்)
என்று மற்றிவை சூரபன் மாவிசைத் திடலுந்
துன்று பஃறலைச் சீயமா முகமுடைத் துணைவன்
நன்று நன்றென வினவியே இன்னமும் நானிங்
கொன்று கூறுவன் முனியலை கேட்டியென் றுரைப்பான். ......
117(வாலி தாமதிச் சடில)
வாலி தாமதிச் சடிலமும் பவளமால் வரையே
போலும் மேனியும் முக்கணும் நாற்பெரும் புயமும்
நீல மாமணிக் கண்டமுங் கொண்டுநின் றனனால்
மூல காரணம் இல்லதோர் பராபர முதல்வன். ......
118(தன்னை நேரிலா)
தன்னை நேரிலாப் பரம்பொருள் தனியுருக் கொண்ட
தென்ன காரணம் என்றியேல் ஐந்தொழில் இயற்றி
முன்னை யாருயிர்ப் பாசங்கள் முழுவதும் அகற்றிப்
பின்னை வீடுபே றருளுவான் நினைந்தபே ரருளே. ......
119(அப்ப ரன்றனை)
அப்ப ரன்றனை உன்னியே அளவைதீர் காலம்
மெய்ப்பெ ருந்தவம் இயற்றினை அதுகண்டு வெளிப்பட்
டொப்பி லாவர முதவியே ஆங்கதற் கொழிவுஞ்
செப்பி வைத்தனன் தேர்ந்திலை போலுமத் திறனே. ......
120(பெறல ருந்திரு)
பெறல ருந்திரு வுடையநீ அறத்தினைப் பேணி
முறைபு ரிந்திடா தாற்றலால் அமரரை முனிந்து
சிறையில் வைத்தனை அதுகண்டு நின்வலி சிந்தி
இறுதி செய்திட உன்னினன் யாவர்க்கும் ஈசன். ......
121(வரம ளித்தயாம்)
வரம ளித்தயாம் அழிப்பது முறையன்று வரத்தால்
பெருமை பெற்றுள சூரனை அடுவது பிறர்க்கும்
அரிதெ னப்பரன் உன்னியே தன்னுரு வாகும்
ஒரும கற்கொடு முடித்துமென் றுன்னினான் உளத்தில். ......
122(செந்நி றத்திரு)
செந்நி றத்திரு மேனியுந் திருமுக மாறும்
அன்ன தற்கிரு தொகையுடைத் தோள்களு மாக
முன்ன வர்க்குமுன் னாகிய பராபர முதல்வன்
தன்னு தற்கணால் ஒருதனிக் குமரனைத் தந்தான். ......
123(மானு டத்தரில்)
மானு டத்தரில் விலங்கினில் புட்களில் மற்றும்
ஊன முற்றுழல் யாக்கையில் பிறந்துளார் ஒப்ப
நீநி னைக்கலை பரஞ்சுடர் நெற்றியந் தலத்தே
தானு தித்தனன் மறைகளுங் கடந்ததோர் தலைவன். ......
124(சீல மில்லவர்)
சீல மில்லவர்க் குணரவொண் ணாதசிற் பரனைப்
பால னென்றனை அவனிடத் திற்பல பொருளும்
மேலை நாள்வந்து தோன்றிய சிறியதோர் வித்தின்
ஆலம் யாவையும் ஒடுங்கியே அவதரித் ததுபோல். ......
125(அருவு மாகுவன்)
அருவு மாகுவன் உருவமு மாகுவன் அருவும்
உருவு மில்லதோர் தன்மையும் ஆகுவன் ஊழின்
கருமம் ஆகுவன் நிமித்தமு மாகுவன் கண்டாய்
பரம னாடலை யாவரே பகர்ந்திடற் பாலார். ......
126(வேதக் காட்சிக்கும்)
வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரித்த
போதக் காட்சிக்குங் காணலன் புதியரில் புதியன்
மூகக் கார்க்குமூ தக்கவன் முடிவிற்கு முடிவாய்
ஆதிக் காதியாய் உயிர்க்குயி ராய்நின்ற அமலன். ......
127(ஞானந் தானு)
ஞானந் தானுரு வாகிய நாயகன் இயல்பை
யானும் நீயுமாய் இசைத்துமென் றாலஃ தெளிதோ
மோனந் தீர்கலா முனிவருந் தேற்றிலர் முழுதுந்
தானுங் காண்கிலன் இன்னமுந் தன்பெருந் தலைமை. ......
128(தத்த மாற்றங்கள்)
தத்த மாற்றங்கள் நிறுவிய சமயிகள் பலருங்
கத்து புன்சொலை வினவினர் அவன்செயல் காணார்
சுத்த வாதுள முதலிய தந்திரத் தொகுதி
உய்த்து ணர்ந்திடு நீரரே ஒருசிறி துணர்வார். ......
129(கருவி மெய்ப்புலன்)
கருவி மெய்ப்புலன் காட்டுவான் காண்பவன் காட்சிப்
பொருளெ னப்படு நான்மையும் ஐவகைப் பொறியும்
இருதி றத்தியல் வினைகளுங் காலமும் இடனும்
மரபின் முற்றுறு பயனுமாய் நின்றவன் வள்ளல். ......
130(ஞால முள்ளதோர்)
ஞால முள்ளதோர் பரம்பொருள் நாமெனப் புகலும்
மாலும் வேதனும் மாயையாம் வரம்பினுட் பட்டார்
மூல மாகிய தத்துவ முழுவதும் கடந்து
மேலு யர்ந்திடு தனிமுத லவன்அன்றி வேறார். ......
131(தூய பார்முத லாக)
தூய பார்முத லாகவே குடிலையின் துணையுங்
மேய அண்டமும் உயிர்களும் வியன்பொருள் பலவு
மாயும் நின்றனன் அல்லனு மாயினன் அவன்றன்
மாயை யாவரே கடந்தனர் மறைகளும் மயங்கும். ......
132(இன்ன தன்மைசேர் முதல்)
இன்ன தன்மைசேர் முதல்வனைச் சிறுவனென் றிகழ்ந்து
பன்னு கின்றனை அவுணர்தங் கிளையெலாம் படுத்து
நின்னை யுந்தடிந் திடுவனோர் இமைப்பினின் இரப்புந்
தன்ன ருட்டிறங் காட்டுவான் வந்தனன் சமர்மேல். ......
133(அற்றம் இல்வகை)
அற்றம் இல்வகை ஆயிரத் தெட்டெனும் அண்டம்
பெற்ற னம்மென வியந்தனை தத்துவ பேதம்
முற்று ணர்ந்திலை தரணியோ அளப்பில வுளகாண்
மற்றை அண்டங்கள் கேட்டியேல் மருளுதி மன்னோ. ......
134(குடிலை யீறதா)
குடிலை யீறதா வாரியே முதலதாக் குழுமி
யுடைய அண்டங்கள் அலகில என்பரொன் றொன்றின்
அடைத லுற்றிடு புவனத்தின் பெருமையார் அறிந்தார்
முடிவு றாததோர் பொருளினை முடிவுகூ றவற்றோ. ......
135(அன்ன வாகிய)
அன்ன வாகிய அண்டங்கள் அனந்தகோ டியையுந்
தன்ன தாணையால் ஓரிமைப் பொழுதினில் தரவும்
பின்னர் மாற்றவும் வல்லதோர் ஆதியம் பிரான்காண்
உன்னொ டேபொரும் ஆடலாற் செந்திவந் துற்றான். ......
136(வச்சி ரத்தனி)
வச்சி ரத்தனி யாக்கைபெற் றனமென மதித்தாய்
இச்சி ரத்தையை விடுமதி இருவினைக் கீடா
அச்செ டுத்திடும் உயிர்கண்மாய்ந் திடுமென அறிஞர்
நிச்ச யித்தனர் முடிவுறா திருத்திகொல் நீயே. ......
137(பெருமை பெற்றிடு)
பெருமை பெற்றிடு வானத்தின் நிலத்திடைப் பிறந்தோர்
இருமை பெற்றிடு காயமும் இறந்திடுந் திண்ணம்
பருமி தத்துநின் வச்சிர யாக்கையும் பாரின்
உரிமை பெற்றுள தாதலான் அழிவின்றி யுறுமோ. ......
138(அழிவில் மெய்வரம்)
அழிவில் மெய்வரம் பெற்றனம் என்றனை அதற்கு
மொழித ரும்பொருள் கேண்மதி முச்சகந் தன்னுட்
கெழிய மன்னுயிர் போற்சில வைகலிற் கெடாது
கழிபெ ரும்பகல் இருந்திடும் பான்மையே கண்டாய். ......
139(அச்சு தன்அயன்)
அச்சு தன்அயன் அமரரா கியபெய ரவர்க்கு
நிச்ச யம்படு முகமனே யானபோல் நினது
வச்சி ரத்தனி யாக்கையும் அழிவிலா வரமும்
முச்ச கந்தொழப் பல்லுகம் இருத்தலாய் முடியும். ......
140(வான்செய் தேவரை)
வான்செய் தேவரை நீயலைக் கின்றதை மதியா
ஊன்செய் கின்றபல் லுயிருக்கும் உயிரதாம் ஒருவன்
தான்செய் கின்றதொல் வரத்தினைத் தான்தவிர்த் திடுமேல்
ஏன்செய் தாயென வினவியே நிறுவுவார் எவரே. ......
141(கெடுத லில்லதோர்)
கெடுத லில்லதோர் வளனொடு நீயுநின் கிளையும்
படுத லின்றியே வாழ்தியென் றின்னன பகர்ந்தேன்
இடுதல் கொண்டிடு சிறையிடைத் தேவரை யின்னே
விடுதல் செய்குதி யென்றனன் அறிஞரின் மிக்கான். ......
142(இன்ன பான்மையான்)
இன்ன பான்மையான் மடங்கலம் பெருமுகத் திளவல்
சொன்ன வாசகம் வினவியே மணிமுடி துளக்கிக்
கன்ன மூடுசெங் கனல்செறித் தாலெனக் கனன்று
முன்னை யாகியோன் பின்னருஞ் சிற்சில மொழிவான். ......
143(காற்றிற் றள்ளுண்டு)
காற்றிற் றள்ளுண்டு நெருப்பினிற் சூடுண்டு கங்கை
ஆற்றில் தாக்குண்டு சரவணம் புக்கலை யுண்டு
வேற்றுப் பேர்முலை உண்டழு தேவிளை யாடும்
நேற்றைப் பாலனை யோபரம் பொருளென நினைந்தாய். ......
144(பிரம மாகிய ஒரு)
பிரம மாகிய ஒருபொருள் உயிரெனப் பேர்பெற்
றுருவ மெண்ணில கொண்டுதன் மாயையால் உலப்பில்
கரும பேதங்கள் ஆற்றிடும் பல்புனற் கடத்துள்
இரவி தன்னுருத் தனித்தனி காட்டிய இயல்பின். ......
145(கடந்த கர்ந்துழி)
கடந்த கர்ந்துழி அவற்றிடை வெளிகக னத்தோ
டடைந்த வாறுபோல் யாக்கையின் பேதகம் அனைத்தும்
முடிந்த காலையில் தொன்மைபோல் அபேதமாம் மொழிக்குந்
தொடர்ந்த சிந்தைக்கும் நாடொணா தமர்பெருஞ் சோதி. ......
146(பிரம மேயிவர் அல்ல)
பிரம மேயிவர் அல்லவர் இவரெனப் பேதித்
திருமை யாகவே கொள்ளலை யாக்கையே வேறு
பரம மாகிய உயிரெலாம் ஒன்றுபல் பணியும்
பொருள தாகியே ஒருமையாய் முடிந்தவா போல. ......
147(விறலும் வன்மை)
விறலும் வன்மையும் இல்லவர் தாழ்வர்மே தக்க
நெறியர் ஓங்குவர் ஈதுல கத்திடை நிகழ்ச்சி
இறுதி யில்லதோர் பெரியன்யான் அறுமுகன் என்போன்
சிறியன் ஆதலின் அவனையான் வெல்குவன் திண்ணம். ......
148(தொகைமை சான்ற)
தொகைமை சான்றநங் குரவர்பல் லோருயிர் தொலைத்த
பகைஞ ராதலின் அமரரைச் சிறையிடைப் படுத்தேன்
மிகைசெய் தார்களை நாடியே வேந்தொறுத் திடுதல்
தகைமை யேயென மனுமுறை நூல்களுஞ் சாற்றும். ......
149(மாக ராயுளோர்)
மாக ராயுளோர் காப்பினை விடுகிலன் மற்றைப்
பாக சாதனன் தன்னையும் அருஞ்சிறைப் படுப்பன்
ஏக நாயகன் எய்தினும் எதிர்ந்துபோர் புரிவன்
ஆகை யால்இனி இச்சிறு மொழிகளை அயர்த்தி. ......
150(உரைப்ப தென்னி)
உரைப்ப தென்னினி ஒருவயிற் றென்னுடன் உதித்துப்
பெருக்க முற்றனை நங்குலப் பகைஞரைப் பெரிது
நெருக்கல் இன்றியே அவர்கள்பாற் பட்டனை நீயே
இருக்க மற்றொரு தெவ்வரும் வேண்டுமோ எனக்கே. ......
151(பத்துக் கொண்ட)
பத்துக் கொண்டநூ றுடையதோர் சென்னியும் பலவாங்
கொத்துக் கொண்டமர் தோள்களுங் கரங்களின் குழுவும்
எத்துக் காற்றினை வன்மையும் வீரமும் இழந்தாய்
பித்துக் கொண்டவர் தம்மினும் பேதைமை பிடித்தாய். ......
152வேறு(தானவர் வழிமுறை)
தானவர் வழிமுறை தன்னை விட்டனை
வானவர் போன்றனை வன்மை சிந்தினை
மேனிகழ் திட்பமும் விறலு மாண்டனை
மோனமொ டருந்தவ முயலப் போதிநீ. ......
153(மறந்தனை இழந்த)
மறந்தனை இழந்தனை மான நீங்கினை
சிறந்திடும் அவுணர்தஞ் சீர்த்தி மாற்றிடப்
பிறந்தனை ஈண்டொரு பயனும் பெற்றிலை
இறந்தனை போலுநீ இருந்து ளாய்கொலோ. ......
154(மந்திரி யாதியான்)
மந்திரி யாதியான் மற்றி தற்குநீ
சிந்தையில் வெருக்கொளின் திசைமு கத்தர்போல்
ஐந்தியல் அங்கமொன் றங்கை பற்றுதி
வெந்திற லேயெனப் படையும் வீசியே. ......
155(கிளைத்திடு கள்ளி)
கிளைத்திடு கள்ளியின் கிளைக ளாமென
வளர்த்தனை பலதலை வரம்பில் கைத்தலம்
நெளித்தனை சுமந்தனை நெடிது காலமா
இளைத்தனை வலியிலாய் யாது செய்திநீ. ......
156(பண்டுணர் வில்ல)
பண்டுணர் வில்லதோர் பருவம் ஆதலின்
சண்டனை வருணனைத் தளையின் இட்டனை
அண்டரை யலைத்தனை அறிவு கூடலின்
பெண்டிரின் நடுங்கினை பேடி போலுநீ. ......
157(பன்னெடுந் தலை)
பன்னெடுந் தலையுடைப் பால னாகுமுன்
வன்மையும் ஆடலும் வந்து பார்த்திட
இன்னமும் வந்திலள் வருந்தி ஈன்றதாய்
அன்னைதன் குறைகொலோ அருவ மானதே. ......
158(பகையென ஒன்று)
பகையென ஒன்றுறிற் பதைபதைத் தெழீஇச்
சிகையுடை வாலுளைச் சீயஞ் சீறியே
தகுவிறல் கொள்ளுமால் அவற்றின் தன்மையாய்
மிகுதலை பெற்றதும் வீண்கொல் எம்பிநீ. ......
159(பூதரைத் தலைவரை)
பூதரைத் தலைவரைப் புராரி மைந்தனை
ஏதிலர் யாரையும் யான்வென் றேகுவன்
நீதளர் வெய்திடல் நினது மாநகர்
போதுதி என்றனன் புலனில் புந்தியான். ......
160(என்றிவை அவுணர்)
என்றிவை அவுணர்கோன் இசைத்த காலையின்
நன்றிவன் உணர்வென நகைத்துக் கண்டொறுந்
துன்றிய பேரழல் சொரிய வெஞ்சினத்
தொன்றிய தன்னுளத் தினைய உன்னுவான். ......
161(உறுதியை உரைத்த)
உறுதியை உரைத்தனன் உணர்வி லாதவன்
வறிதெனை இகழ்ந்தனன் வருவ தோர்கிலன்
இறும்வகை நாடினன் யாதொர் புந்தியை
அறிவிலர்க் குரைப்பவர் அவரிற் பேதையோர். ......
162(உய்த்தனர் தேன்)
உய்த்தனர் தேன்மழை உதவிப் போற்றினுங்
கைத்திடல் தவிருமோ காஞ்சி ரங்கனி
அத்தக வல்லவோ அறிவி லாதவன்
சித்தம துணர்வகை தெருட்டு கின்றதே. ......
163(தொலைக்கருந் திரு)
தொலைக்கருந் திருவுடைச் சூரன் புந்தியைக்
கலக்கினும் உய்வகை கருது கின்றிலன்
அலக்கணுற் றிருந்துநாம் இரங்கி ஆவதென்
விலக்கரும் விதியையாம் வெல்ல வல்லமோ. ......
164(ஆவது விதியெனின்)
ஆவது விதியெனின் அனைத்து மாயிடும்
போவது விதியெனின் எவையும் போகுமால்
தேவருக் காயினுந் தீர்க்கத் தக்கதோ
ஏவரும் அறியொணா ஈசற் கல்லதே. ......
165(நீண்டசெஞ் சடை)
நீண்டசெஞ் சடைமுடி நிமலன் ஈந்தநாள்
மாண்டது மாய்ந்திடு மெல்லை வந்ததால்
ஈண்டுளார் யாவரும் இறையுந் துஞ்சுமால்
பூண்டிடும் அமரர்கோன் தவமும் பொய்க்குமோ. ......
166(இறப்பது சரதமேல்)
இறப்பது சரதமேல் இறைவன் என்னுரை
வெறுத்தனன் இகழுமேல் வேண்டி இன்னும்யான்
மறுத்தெதிர் மொழியலன் மன்ன என்பிழை
பொறுத்தியென் றின்னுரை புகல்வ தல்லதே. ......
167(மன்னவர் மன்னவன்)
மன்னவர் மன்னவன் வள்ளல் வேலினால்
இன்னினி இறந்திடும் இதுவும் நோக்கியே
பின்னுமிங் கிருந்திடல் பிழைய தாகுமால்
முன்னுற முடிவதே முறைய தாமெனா. ......
168(சிந்தனை செய்திடு)
சிந்தனை செய்திடு சிங்க மாமுகன்
தந்தையை நிகர்வரு தம்முன் தாள்தொழா
வந்தனை செய்தனன் மன்ன சீறிடேல்
புந்தியி லேன்பிழை பொறுத்தல் வேண்டுமால். ......
169(சிறியவர் ஒருபிழை)
சிறியவர் ஒருபிழை செய்யின் மேலவர்
பொறையொடு பின்னரும் போற்றல் அல்லதை
இறையதும் வெகுள்வரோ யானுஞ் செய்பிழை
அறிவன்நீ அன்றியே ஆர தாற்றுவார். ......
170(பொறுத்தனை கோடி)
பொறுத்தனை கோடியென் புன்மை யுள்ளமேற்
செறுத்தெனை இகழ்ந்திடல் செருவிற் சென்றியான்
மறுத்தெதிர் மலைந்திடு மாற்ற லார்தமை
ஒறுத்திடு கின்றனன் அதனை ஓர்திநீ. ......
171(செருவினுக் கேகுவன்)
செருவினுக் கேகுவன் செறுநர் தம்மிசைத்
தருதியால் விடையெனத் தம்பி கேட்டலும்
பெரிதுள மகிழ்ந்தனன் பிறங்கு காதலால்
வருதியென் றனையனை மார்பிற் புல்லினான். ......
172(பையர வளித்திடும்)
பையர வளித்திடும் பாத லத்தினில்
வையக வரைப்பினில் திசையின் வான்களிற்
செய்யஅண் டங்களிற் செய்யும் வென்றியுள்
ஐயநிற் கேதுகொல் அரிய தானதே. ......
173(நீக்கமில் கேள்வி)
நீக்கமில் கேள்வியாய் நீமுன் சொற்றன
தூக்குறின் என்மனத் துணிவுந் திட்பமும்
ஊக்கமு முணரவே ஒன்ன லாரெனும்
மாக்களை அடுவதோர் மடங்கல் அல்லையோ. ......
174(சென்றனர் மாற்றலர்)
சென்றனர் மாற்றலர் என்கை தேர்தியேல்
கொன்றபின் அல்லது கும்பிட் டோடிட
வென்றபின் அல்லது வெகுளி தீர்தியோ
உன்றன தாற்றலை உணர்கி லேன்கொலோ. ......
175(இற்றைநாள் நின்ன)
இற்றைநாள் நின்னகர் ஏகி ஆயிடை
உற்றிடு படையெலாம் ஒருங்கு கொண்டுநீ
கொற்றமொ டிருக்குதி குமரன் ஈண்டுறின்
மற்றுனை விளிக்குவன் வருதி யாலென்றான். ......
176(ஒல்லென முருக)
ஒல்லென முருகவேள் உனது மாநகர்
செல்லினும் ஏகலை செருவுக் கன்னது
சொல்லினை விடுத்தியோர் தூதன் தன்னையான்
வல்லையின் அமர்செய வருகின்றேன் என்றான். ......
177(என்றலும் அவுணரு)
என்றலும் அவுணருக் கிறைவன் ஈங்கிது
நன்றென விடையது நல்கத் தாழ்ந்துபோய்த்
தன்றிரு மாநகர் சார்ந்து வைகினான்
வன்றிறல் உடையதோர் மடங்கற் பேரினான். ......
178(ஆனதோர் பொழுதினில் அர)
ஆனதோர் பொழுதினில் அரசன் ஆண்டுறை
தானையந் தலைவரைத் தனயர் தங்களை
ஏனையர் யாரையும் ஏகச் செய்துதன்
மாநகர் இந்திர வளத்தின் வைகினான். ......
179(அந்தமில் வளனுடை)
அந்தமில் வளனுடை அவுணர் காவலன்
மந்திரம் இருந்தது வகுத்துக் கூறினாம்
இந்திரன் முதலினோர் யாரும் ஏத்திடச்
செந்தியின் அமர்ந்தவன் செய்கை செப்புவாம். ......
180ஆகத் திருவிருத்தம் - 4890