(ஊக வான்படை)
ஊக வான்படை உலப்ப வச்சிர
வாகு மாண்டதும் வாகை மொய்ம்பினான்
ஏகுந் தன்மையும் ஏவல் தூதுவர்
சோக மோடுபோய்ச் சூர்முன் கூறினார். ......
1(ஈரைஞ் சென்னிசேர்)
ஈரைஞ் சென்னிசேர் இளைய கான்முளை
வீரஞ் சிந்தியே விளிந்த வாற்றினைச்
சூரன் கேட்டலுந் துளங்கித் துன்பெனும்
வாரி யுள்ளுற மயங்கி வீழ்ந்தனன். ......
2வேறு(கண்ணிடை நெடும்)
கண்ணிடை நெடும்புனல் கால மைந்தன்மேல்
உண்ணிகழ் அன்புசென் றுயிரை ஈர்ந்திடத்
துண்ணென உயிர்ப்பெனும் புகையுஞ் சுற்றிட
எண்ணருஞ் செல்லல்கொண் டிரங்கி ஏங்கினான். ......
3(ஏங்கினன் புலம்பலும்)
ஏங்கினன் புலம்பலும் இனைய வெய்யசூர்
பாங்கமர் தமர்களும் பரிச னத்தருந்
தீங்குசெய் அரக்கருந் தெரிவை மார்களும்
நீங்கற அழுதனர் நெடுங்கண் நீருக. ......
4(பழிதவிர் கற்புடை)
பழிதவிர் கற்புடைப் பதுமை தன்மகன்
ஒழிவுறு தன்மையை ஓர்ந்து மாமலர்க்
குழலவிழ்ந் தலமரக் கொங்கை மேற்புடைத்
தழுதனள் வீழ்ந்தனள் மறிக்கும் அங்கையாள். ......
5(தொல்லியல் இழு)
தொல்லியல் இழுக்கிய சூர னென்பவன்
புல்லிய பின்முறைப் புணர்வின் மாதருஞ்
சில்லியற் கூந்தல்தாழ் சேடி மார்களும்
எல்லவ ருந்தழீஇ யிரங்கல் மேயினார். ......
6(களமெழு மிசை)
களமெழு மிசையொலி கடிநல் யாழொலி
துளையொலி வயிரொலி தூரி யத்தொலி
அளமரு மொழியொலி அடங்கி அப்பெரு
வளநகர் புலம்பொலி மயங்கிற் றென்பவே. ......
7(அன்னது போழ்தி)
அன்னது போழ்தினில் அறத்தைக் காய்தரு
துன்னெறி மந்திரி சூர பன்மனாம்
மன்னவன் முன்னுற வந்து கைதொழு
தின்னன கேண்மென இசைத்தல் மேயினான். ......
8(மெய்ப்புவி அண்ட)
மெய்ப்புவி அண்டங்கள் பரித்த மேன்மையை
ஒப்பருந் திருவினை உலப்பி லாயுளை
செப்பருந் திறலினை சிறந்த சீர்த்தியை
இப்பரி சழுங்குதல் இயற்கை யாகுமோ. ......
9(தெண்டிரை நேமிவான்)
தெண்டிரை நேமிவான் செறிந்து கொள்ளினும்
அண்டம தழியினும் அனைத்து மாயினும்
விண்டிடல் இன்றிவாழ் வீர நீமனங்
கொண்டிடு திண்மையுங் குன்றற் பாலதோ. ......
10(ஏவரும் வியத்தகும்)
ஏவரும் வியத்தகும் இறைவ நீயிவண்
ஓவென அரற்றியே உயங்குற் றாயெனின்
மூவரும் நகைப்பர்கள் முன்னம் ஏவல்செய்
தேவரும் நகைப்பர்கள் புகழுந் தேயுமால். ......
11(பூதர்தம் படையல)
பூதர்தம் படையல புராரி நல்கிய
காதல னேயல கழற விட்டதோர்
தூதுவன் செய்தபுன் தொழிலுக் காற்றலை
பேதுற லாகுமோ பெருமைக் கீறிலாய். ......
12(தந்தையர் துஞ்சி)
தந்தையர் துஞ்சினுந் தம்முன் பின்னவர்
மைந்தர்கள் துஞ்சினும் மற்றுஞ் சார்ந்தவர்
தந்தொகை துஞ்சினுஞ் சயத்தின் மேலையோர்
சிந்தைகொள் வன்மையிற் சிறிதுந் தேயுமோ. ......
13(மேதகு பெருந்தி)
மேதகு பெருந்திறல் வீரர் தம்மையும்
மாதரும் வெல்வரால் மாயும் ஊழ்வரின்
ஆதலின் நின்மகற் காயுள் குன்றலின்
தூதனும் அட்டன னாகித் தோன்றினான். ......
14(வெவ்விய ஒன்னலர்)
வெவ்விய ஒன்னலர் வினையும் வன்மையுங்
கைவரு நெல்லியங் கனியின் நாடியே
செய்வகை தேற்றினஞ் செய்க லாதிவண்
நைவதும் ஆண்மையின் நலத்திற் காகுமோ. ......
15(வரங்களும் மதுகை)
வரங்களும் மதுகையும் வரம்பின் றெய்தியே
உரங்கிளர் சூரனென் றொருபேர் பெற்றநீ
தரங்கம தடைவதுந் தலைமைக் கேற்பதோ
இரங்கலை இரங்கலை யென்று தேற்றினான். ......
16(மேற்றிகழ் அறத்தி)
மேற்றிகழ் அறத்தினை வெகுளும் நாமத்தான்
தேற்றலும் அவுணர்கோன் தெளிவு பெற்றெழீஇ
ஆற்றருந் துயரினை அடக்கித் தன்பணிக்
கூற்றியல் உழையரை நோக்கிக் கூறுவான். ......
17(சேயுயிர் வௌவி)
சேயுயிர் வௌவியே சிறந்த இந்நகர்
மாய்வது புணர்த்திடு வலிய தூதுவன்
போயது தெரிந்திரோ புகலக் கேட்டிரோ
நீயிர்கள் வாய்மையை நிகழ்த்து மென்னவே. ......
18(துப்புடன் இவ்வழி)
துப்புடன் இவ்வழி தூதிற் சென்றுளான்
இப்புரம் அகன்றனன் இலங்கை நோக்குறா
அப்புற மேகினான் அதனைக் கண்டனம்
மெய்ப்பரி சிஃதென விளம்பி னாரரோ. ......
19வேறு(அம்மொழி வினவ லோடு)
அம்மொழி வினவ லோடும் அவுணர்கோன் தன்பால் நின்ற
கம்மியர் தம்மை நோக்கிக் கடிதுபோய் அகிலம் நல்கிச்
செம்மலர் மிசையே வைகுந் திசைமுகத் தொருவன் றன்னை
இம்மெனக் கொணர்திர் என்ன அனையவர் இசைக்க லுற்றார். ......
20(ஈங்கிது கேட்டி)
ஈங்கிது கேட்டி மன்ன இனையமூ தண்டம் நல்குந்
தேங்கமழ் பதுமத் தண்ணல் தேவர்கோ னாதி யான
பாங்கின ரோடு மேவிப் படையொடும் புவியில் வந்த
காங்கெயன் றன்கண் உற்றான் என்பராற் கண்டோர் என்றார். ......
21(தொழுவர்கள் இனை)
தொழுவர்கள் இனைய மாற்றஞ் சொற்றலுஞ் சூரன் கேளா
விழுமிது விழுமி தென்னா வெய்துயிர்ப் பெய்திச் சீறி
அழலெழ நகைத்து மற்றை அண்டத்தின் இருந்து நல்குஞ்
செழுமலர் அயனைப் பற்றிச் செல்லுமின் வல்லை என்றான். ......
22(கொற்றவன் இனைய)
கொற்றவன் இனைய மாற்றங் கூறலும் உழையர் கேளா
இற்றிது செய்தும் என்னா இசைவுகொண் டொல்லை ஏகி
மற்றையண் டத்திற் சென்று வானவர் முதுவன் றன்னைப்
பற்றினர் கொணர்ந்தார் தங்கோன் பணித்திடு பரிசு கூறி. ......
23(பரிசனர் பலரும்)
பரிசனர் பலரும் ஈண்டிப் பார்புகழ் சூர னென்னும்
அரசன்முற் கொணர்ந்து வேறோர் அண்டத்தின் அயனை உய்ப்ப
வரிசையால் அவனை நோக்கி மாணழி வுற்ற மற்றித்
திருநகர் அதனைத் தொன்மை போலவே செய்தி யென்றான். ......
24(சூரன்மற் றிதனை)
சூரன்மற் றிதனைச் செப்பச் சொற்பணி தலைக்கொண் டைய
ஓரிறை யொடுங்கு முன்னர் உனதுதொன் னகர மாற்ற
ஏருற முன்ன மேபோல் இயற்றுவன் யானே யென்னாப்
பேருல குதவுகின்ற பெற்றியை நினைந்து செய்வான். ......
25(பொன்மதில் மாட)
பொன்மதில் மாட வீதி பொலன்மணிச் சிகரம் வேரம்
மன்மதன் விழையுஞ் சோலை மண்டபம் வாவி பொய்கை
சென்மலி அரங்க மன்றந் தெற்றியே முதல வெல்லாந்
தொன்மைபோல் ஆகத் தன்கைத் தொழில்முறை படைத்தான்மன்னோ. ......
26(இவ்வகை நகர)
இவ்வகை நகர முற்றும் எழில்பெறப் படைத்த பின்றை
மைவரை மேனி மன்னன் மாபெருங் கோயில் தன்னைச்
செவ்விதின் முதுமை போலச் சிறப்பினால் திருத்தல் செய்தான்
ஐவகை இருபான் கொண்ட அல்லியங் கமலத் தண்ணல். ......
27(கொன்பெரு நகரும்)
கொன்பெரு நகரும் அந்தண் கோயிலும் படைத்த லோடும்
மன்பெருந் தகைய சூரன் மற்றவன் செய்கை நோக்கி
அன்புசெய் துவகை யாகி அவுணர்கள் யாரும் போற்ற
முன்புபோல் அரிமா னேற்று முழுமணித் தவிசின் உற்றான். ......
28(உற்றன னாகி)
உற்றன னாகிப் பின்னர் ஓதிமத் திறையை நோக்கி
மற்றுநின் னண்டஞ் சென்று வைகுதி நல்கி என்னாச்
சொற்றனர் ஏவ அன்னோன் துண்ணென விடைபெற் றேகிப்
பெற்றதன் னண்டஞ் சென்று பிறங்குதன் னுலகம் புக்கான். ......
29ஆகத் திருவிருத்தம் - 4710