(இன்ன பான்மையால்)
இன்ன பான்மையால் யாளி மாமுகன்
தன்னை அட்டபின் தன்கை வாளினைப்
பொன்னு லாவுறை புகுத்திச் சென்றனன்
மின்னு செஞ்சுடர் மேனி வீரனே. ......
1(இந்தி ரத்திரு)
இந்தி ரத்திரு இலங்கை நீங்கியே
அந்தி ரைக்கடல் அழுவம் வாவியே
கந்த மாதனங் கவின்ற வேலைசேர்
செந்தி மாநகர் சென்று புக்கனன். ......
2(புக்க காலையில் பொரு)
புக்க காலையில் பொருவில் ஆற்றலான்
மிக்க சேவகன் மேவல் காணுறாத்
தொக்க பாரிடஞ் சோமற் காணுறு
மைக்கருங் கடல் மான ஆர்த்தவே. ......
3(பாரி டத்தொகை)
பாரி டத்தொகை பரிக்கும் மன்னவர்
சேர வந்துதஞ் செங்கை கூப்பியே
வீர வாகுவை மெய்யு றத்தழீஇ
ஆர்வம் எய்தினார் அன்பு கூறினார். ......
4(தழுவு வோர்தமை)
தழுவு வோர்தமைத் தானும் புல்லியே
இழிஞர் தம்பதிக் கேகும் வெம்பவம்
ஒழிவ தாயினன் உமைக்கண் டேயெனா
முழுவ லன்பினான் முகமன் கூறினான். ......
5(விலக்கில் வன்மை)
விலக்கில் வன்மைகொள் வீர வாகுவை
இலக்கத் தெண்மரும் எதிர்ந்து மற்றவன்
மலர்க்க ருங்கழல் வணங்கிக் கைதொழ
அலக்கண் நீங்குமா றனையர்ப் புல்லினான். ......
6(அமைவில் பாரிட)
அமைவில் பாரிடத் தனிக வேந்தருந்
தமர்க ளாயினோர் தாமுஞ் சூழ்வர
விமல னாகியே வீற்றி ருந்திடுங்
குமர நாயகன் கோயில் மேயினான். ......
7(விண்டு வானுளோர்)
விண்டு வானுளோர் விரிஞ்சன் மாதவர்
கொண்டல் ஊர்பவன் குழுமிப் பாங்குற
அண்டர் நாயகன் அமருந் தன்மையைக்
கண்டு முந்துகண் களிப்பின் மேயினான். ......
8(உள்ளம் என்புடன்)
உள்ளம் என்புடன் உருகத் தூயநீர்
வெள்ளங் கண்ணுற விதிர்ப்பு மேவரப்
பொள்ளெ னப்புரம் பொடிப்பச் சூரடும்
வள்ளல் சேவடி வணங்கி னானரோ. ......
9(அணங்கு சால்வுறும்)
அணங்கு சால்வுறும் அந்தண் சேவடி
வணங்கி மும்முறை மகிழ்ச்சி அன்பிவை
இணங்க அஞ்சலித் தேத்தி நிற்றலுங்
குணங்கள் மேற்படுங் குமரன் கூறுவான். ......
10(சுரரை வாட்டுறு)
சுரரை வாட்டுறுஞ் சூரன் முன்புபோய்
விரைவின் நம்மொழி விளம்ப மற்றவன்
உரைசெய் திட்டதும் ஒல்லை மீண்டதும்
மரபின் இவ்விடை வகுத்தியால் என்றான். ......
11(வீரன் கூறுவான்)
வீரன் கூறுவான் விமல நின்மொழி
சூரன் முன்புபோய்ச் சொல்ல விண்ணுளோர்
ஆரி ருஞ்சிறை அதனை வீடலே
காரி யம்மெனக் கருத்திற் கொண்டிலன். ......
12(கெடல ருஞ்சுரர்)
கெடல ருஞ்சுரர் கிளையை வெஞ்சிறை
விடுகி லேனெனா வெகுண்டு கூறினான்
அடிகள் அன்னதால் ஆண்டு நீங்கியே
கடிது வந்தனன் கருமமீ தென்றான். ......
13(என்ற காலையின் யாண்டு)
என்ற காலையின் யாண்டு மாகியே
நின்று முற்றொருங் குணர்ந்த நீர்மையான்
உன்றன் செய்கையுள் ஒன்றுஞ் சொற்றிலை
நன்று மற்றது நவிறியால் என்றான். ......
14(தொடக்க முற்றுவாழ்)
தொடக்க முற்றுவாழ் சூரன் மாநகர்
அடுத்த காலையின் அகன்ற வேலையில்
தடுத்து ளோரைநின் சரண வன்மையால்
படுத்து வந்தனன் பான்மையீ தென்றான். ......
15(அருந்தி றற்புயன்)
அருந்தி றற்புயன் அனைய செப்பலும்
இருந்த கந்தவேள் இகலி னோர்களால்
வருந்தி னாய்கொலோ மன்ற என்றுதன்
திருந்து பேரருள் செய்தல் மேயினான். ......
16(அங்கவ் வெல்லையின்)
அங்கவ் வெல்லையின் ஆயி ரம்பெயர்ச்
செங்கண் மாயவன் திசைமு கத்தவன்
மங்குல் மேலவன் வதன நோக்கியே
எங்கள் நாயகன் இனைய கூறுவான். ......
17(தேவ ரைச்செயு)
தேவ ரைச்செயுஞ் சிறைவி டுத்துநீ
மேவு நன்கெனா வெய்ய சூரனுக்
கேவு தூதைவிட் டியம்பு வித்தனம்
பாவி யன்னது பயனென் றுன்னலான். ......
18(வீத லேயவன் விதி)
வீத லேயவன் விதிய தாதலின்
தீதில் விண்ணவர் சிறைவி டோமென
ஓதி னான்அவன் உயர்வு நீக்குவான்
போது நாளையா மெனப்பு கன்றனன். ......
19(ஆறு மாமுகத் தையன்)
ஆறு மாமுகத் தையன் இவ்வகை
கூறக் கேட்டுளோர் கொடிய சூர்மிசைச்
சேறு மென்றசொல் தெளிவின் நந்துயர்
மாறிற் றென்றனர் மகிழ்ச்சி எய்தினார். ......
20(ஆன வத்துணை)
ஆன வத்துணை ஆடன் மொய்ம்பினான்
தான அப்பதிச் சயந்தன் உற்றதும்
ஏனைச் செய்கையும் எடுத்துக் கூறியே
வான வர்க்கிறை மனத்தைத் தேற்றினான். ......
21(சீரு லாமகேந் திர)
சீரு லாமகேந் திரபு ரத்தினும்
வீர வாகுமீண் டதுவி ளம்பினாம்*
1 ஆர ஞர்க்கடல் அலைப்ப ஆண்டுறுஞ்
சூர னுற்றதும் பிறவுஞ் சொல்லுவாம். ......
22ஆகத் திருவிருத்தம் - 4681