(விரிஞ்சன்மால் தேவ)
விரிஞ்சன்மால் தேவ ராலும் வெலற்கரும் விறலோ னாகிப்
பெருஞ்சுரர் பதமும் வேத வொழுக்கமும் பிறவு மாற்றி
அருஞ்சிறை அவர்க்குச் செய்த அவுணர்கோன் ஆவி கொள்வான்
பரஞ்சுடர் உருவாய் வந்த குமரனைப் பணிதல் செய்வாம். ......
1(இந்திர னாதி யான)
இந்திர னாதி யான அமரரும் எனை யோரும்
புந்தியில் உவகை பூத்துப் புடைதனில் ஒழுகிப் போற்றச்
செந்திமா நகரந் தன்னில் சீயமெல் லணைமேல் வைகுங்
கந்தவேள் அருளின் நீரால் இனையன கருத லுற்றான். ......
2(நான்முக னாதி)
நான்முக னாதி யான நாகரும் முனிவ ரும்போல்
மேன்முறை அவுண ராகும் வியன்தொகை யவரும் எங்கோன்
கான்முளை நெறிய ரேனுங் கடியரை முடிவு செய்தல்
நூன்முறை இயற்கை யாகும் நுவலரும் அறனும் அஃதே. ......
3(இற்றிது துணிபா)
இற்றிது துணிபா மேனும் எண்ணெழிற் சூரன் றன்னை
அற்றமில் சிறப்பின் வைகும் அவன்றமர் தம்மை எல்லாஞ்
செற்றிடல் முறைய தன்றால் தேவர்தஞ் சிறைவிட் டுய்ய
மற்றவன் தனக்கோர் ஒற்றை வல்லையில் விடுத்து மன்னோ. ......
4(தூண்டுநம் மொற்ற)
தூண்டுநம் மொற்றன் மாற்றஞ் சூரனாம் அவுணன் கேளா
ஈண்டிடு சிறையின் நீக்கி அமரரை விடுப்பன் என்னின்
மாண்டிட லின்றி இன்னும் வாழிய மறுத்து ளானேல்
ஆண்டுசென் றடுதும் ஈதே அறமென அகத்துட் கொண்டான். ......
5(வடித்தசெங் கதிர்)
வடித்தசெங் கதிர்வேல் அண்ணல் மாலயன் மகவா னாதி
அடுத்தபண் ணவரை நோக்கி அவுணர்தங் கிளையை யெல்லாம்
முடித்திடப் பெயர்தும் நாளை முன்னமோர் தூதன் றன்னை
விடுத்தனம் உணர்தல் வேண்டும் வெய்யசூர் கருத்தை என்றான். ......
6(கடலுடைக் கடுவை)
கடலுடைக் கடுவை உண்டோன் காதலன் இனைய செப்ப
மடலுடைப் பதுமப் போதில் வைகினோன் மாயன் கேளா
அடலுடைப் பெரும்போர் எந்தை ஆற்றுமுன் சூரன் முன்னோர்
மிடலுடைத் தூதன் றன்னை விடுத்தலே அறத்தா றென்றார். ......
7(என்றலுங் குமர)
என்றலுங் குமர மூர்த்தி இப்பெருந் திறலோர் தம்முள்
வென்றிகொள் சூரன் றன்பால் வீரமா மகேந்தி ரத்துச்
சென்றிட விடுத்தும் யாரைச் செப்புதி ரென்ன லோடு
நன்றென அதனை நாடி நான்முகன் நவிற லுற்றான். ......
8(மெல்லென உலவை)
மெல்லென உலவைக் கோனும் வீரமா மகேந்தி ரத்திற்
செல்லரி தெனக்கு மற்றே செய்பணி நெறியால் அன்றி
ஒல்லையில் அங்கண் ஏகி ஒன்னலர்க் கடந்து மீள
வல்லவன் இனைய வீர வாகுவே ஆகு மென்றான். ......
9(சதுர்முகன் இனைய)
சதுர்முகன் இனைய வாற்றால் சண்முகன் உளத்துக் கேற்பக்
கதுமென உரைத்த லோடுங் கருணைசெய் தழகி தென்னா
மதுமலர்த் தொடையல் வீர வாகுவின் வதனம் நோக்கி
முதிர்தரும் உவகை தன்னால் இத்திறம் மொழிய லுற்றான். ......
10(மயேந்திர மூதூ)
மயேந்திர மூதூ ரேகி வல்லைநீ அமலன் நல்குஞ்
சயேந்திர ஞாலத் தேரோன் தனையடுத் தொருநாற் றந்தக்
கயேந்திரன் மதலை வானோர் காப்பைவிட் டறத்தா றுன்னி
நயேந்திர வளத்தி னோடும் உறைகென நவிறி யன்றே. ......
11(அம்மொழி மறுத்து)
அம்மொழி மறுத்து ளானேல் அவுணநின் கிளையை யெல்லாம்
இம்மென முடித்து நின்னை எஃகவேற் கிரையா நல்கத்
தெம்முனை கொண்டு நாளைச் செல்லுதும் யாமே யீது
மெய்ம்மைய தென்று கூறி மீள்கென வீரன் சொல்வான். ......
12(வெந்திறல் அவுணர்)
வெந்திறல் அவுணர் ஈண்டும் வீரமா மகேந்தி ரத்திற்
சுந்தரத் திருவின் வைகுஞ் சூரபன் மாவின் முன்போய்
எந்தைநீ அருளிற் றெல்லாம் இசைத்தவ னுள்ளம் நாடி
வந்திடு கின்றேன் என்னா வணங்கியே தொழுது போனான். ......
13(கூர்ந்திடு குலிச)
கூர்ந்திடு குலிசத் தண்ணல் குமரவேள் ஒற்றன் தன்பின்
பேர்ந்தனன் சென்று வீர பெருந்திறற் சூரன் மூதூர்
சார்ந்தனை சிறையில் வானோர் சயந்தனோ டிருந்தா ரங்கட்
சேர்ந்தனை தேற்றிப் பின்னுன் செயலினை முடித்தி யென்றான். ......
14(அவ்வழி யமரர்)
அவ்வழி யமரர் கோமான் அனையன அறைத லோடுஞ்
செவ்விது நிற்றி யற்றே செய்வனென் றவனை நீங்கி
எவ்வமில் துணைவ ராகும் எண்மரும் இலக்கத் தோரும்
மெய்வருந் தொடர்பிற் செல்லக் கண்ணுறீஇ விடலை சொல்வான். ......
15(நீயிர்கள் யாருங்)
நீயிர்கள் யாருங் கேண்மின் நெடுந்திரைப் பரவை வாவித்
தீயதோர் மகேந்தி ரத்திற் சென்றுசூர் முன்போய் நந்தம்
நாயகன் பணித்த மாற்றம் நவிலுவன் மறுத்து ளானேல்
ஆயவன் மூதூர் முற்றும் அட்டபின் மீள்வன் அம்மா. ......
16(என்றலும் வியந்து)
என்றலும் வியந்து பின்னோர் யாவரும் இறைஞ்ச லோடும்
பொன்றிகழ் ஆகத் தூடு பொருந்துறப் புல்லிக் கொண்டு
வன்றிறற் பூதர் தம்முள் மன்னவ ரோடும் அங்கண்
நின்றிட வருளி வல்லே நெடுங்கடல் வேலை போந்தான். ......
17(அலங்கலந் திரை)
அலங்கலந் திரைகொள் நேமி அகன்கரை மருங்கின் மேரு
விலங்கலின் உயர்ந்த கந்த மாதன வெற்புத் தன்னில்
பொலங்குவ டுச்சி மீது பொள்ளென இவர்த லுற்றான்
கலன்கலன் கலனென் றம்பொற் கழலமர் கழல்கள் ஆர்ப்ப. ......
18(புஞ்சமார் தமால)
புஞ்சமார் தமாலச் சூழல் பொதுளிய பொதும்பர் சுற்றி
மஞ்சுநின் றறாத கந்த மாதனப் பிறங்கல் உம்பர்
விஞ்சுநுண் பொடிதோய் மேனி மேலவன் இவரும் பான்மை
அஞ்சன வரைமேல் வெள்ளி யடுக்கல்சென் றனைய தன்றே. ......
19(கடுங்கலி மான்தேர்)
கடுங்கலி மான்தேர் வெய்யோன் கையுற நிவந்த செம்பொன்
நெடுங்கிரி மிசைபோய் வீரன் நிற்றலும் பொறையாற் றாது
நடுங்கிய துருமுற் றென்ன நனிபகிர் வுற்ற தங்கள்
ஒடுங்கிய மாவும் புள்ளும் ஒல்லென இரிந்த வன்றே. ......
20(உண்ணிறை புள்ளும்)
உண்ணிறை புள்ளும் மாவும் ஓலிட ஒலிமேல் கொண்டு
துண்ணென அருவி தூங்கத் தோன்றிய குடுமிக் குன்றம்
அண்ணலைத் தரிக்கல் ஆற்றேன் அளியனேன் அந்தோ வென்னாக்
கண்ணிடை வாரி சிந்தக் கலுழுதல் போலு மாதோ. ......
21(அடல்கெழு திண்)
அடல்கெழு திண்டோள் வீரன் அடிகளின் பொறையாற் றாது
விடர்கெழு குடுமி வெற்பு வெருவலும் ஆண்டை வைகும்
படவர வுமிழ்ந்த செய்ய பருமணி சிதறும் பான்மை
உடல்கெழு குருதி துள்ளி உருக்குமா றொப்ப தன்றே. ......
22(அறைகழல் அண்ண)
அறைகழல் அண்ணல் நிற்ப அவ்வரை அசைய அங்கண்
உறைதரு மாக்கள் அஞ்சி ஒருவில வெருவி விண்மேல்
பறவைகள் போய துன்பம் பட்டுழிப் பெரியர் தாமுஞ்
சிறியரும் நட்டோர்க் காற்றுஞ் செயல்முறை காட்டு கின்ற. ......
23(மழையுடைக் கடமா)
மழையுடைக் கடமால் யானை வல்லியம் மடங்கல் எண்கு
புழையுடைத் தடக்கை யாளி பொருப்பசை வுற்ற காலை
முழையிடைத் தவறி வீழ்வ முதியகா லெறியப் பட்ட
தழையுடைப் பொதும்பர் பைங்காய் தலைத்தலை உதிர்க்கு மாபோல். ......
24(நன்றிகொள் பரிதிப்)
நன்றிகொள் பரிதிப் புத்தேள் நகுசிர மாக என்றூழ்
துன்றிருஞ் சடில மாகச் சுரநதி தோயத் திங்கள்
ஒன்றொரு பாங்கர் செல்ல ஓங்கிரும் பிறங்கல் உச்சி
நின்றதோர் விசயத் தோளான் நெற்றியங் கண்ணன் போன்றான். ......
25(வலமிகு மொய்ம்)
வலமிகு மொய்ம்பின் மேலோன் மலர்க்கழல் உறைப்ப ஆற்றா
தலமரு குவட்டின் நிற்றல் அன்றுதீ முனிவர் உய்த்த
கொலைகெழு முயல கன்மெய் குலைந்திடப் புறத்துப் பொற்றாள்
நிலவணி சடையோன் ஊன்றி நின்றிடு நிலைமை நேரும். ......
26(மாசிருள் செறியு)
மாசிருள் செறியுந் தெண்ணீர் மறிதிரை அளக்கர் வேலைப்
பாசடைப் பொதும்பர் வெற்பிற் பண்ணவன் தூதன் நிற்றல்
காசியில் அரற்றத் தள்ளிக் களிறுடல் பதைப்பக் கம்மேல்
ஈசன்அன் றடிகள் ஊன்றி இருத்திய இயற்கை போலும். ......
27(தாரகன் படைஞர்)
தாரகன் படைஞர் பல்லோர் சமரிடை இரிந்து போனார்
பாரிடை யுறாமே அந்தப் பருவரை முழைக்கண் உற்றார்
வீரமொய்ம் புடையோன் அங்கண் மேவலும் அவற்கண் டேங்கி
ஆருயி ருலந்தார் தீயோர்க் காவதோர் அரணம் உண்டோ. ......
28(அனையதோர் சிமை)
அனையதோர் சிமையக் குன்றம் அசைதலும் அங்கண் உற்ற
வனைகழல் விஞ்சை வேந்தர் மங்கையர் ஊடல் மாற்றி
இனிதுமுன் கலந்தார் அஞ்சி இன்புறா திடைக்கண் நீத்து
வினைவிளை வுன்னி நொந்து விண்மிசை உயிர்த்துச் சென்றார். ......
29(வரைமிசை நின்ற)
வரைமிசை நின்ற அண்ணல் வனைகழல் அவுணர் கோமான்
பொருவரு நகர்மேற் செல்லப் புந்திமேற் கொள்ளா எந்தை
திருவுரு வதனை உன்னிச் செங்கையால் தொழுது மாலும்
பிரமனும் வியந்து நோக்கப் பேருருக் கொண்டு நின்றான். ......
30(பொன்பொலி அலங்)
பொன்பொலி அலங்கல் தோளான் பொருப்பின்மேற் பொருவி லாத
கொன்பெரு வடிவங் கொண்டு குலாய்நிமிர் கொள்கை செவ்வேள்
முன்பொரு ஞான்று மேரு முடியில்வந் தமரர்க் கெல்லாந்
தன்பெரு வடிவங் காட்டி நின்றதோர் தன்மை யாமால். ......
31(ஆண்டகை நெடு)
ஆண்டகை நெடுந்தோள் வீரன் அண்டமேல் மவுலி தாக்க
நீண்டிடும் எல்லை அன்னான் நின்றிடு குன்ற ஞாலங்
கீண்டது பிலத்திற் சேறல் கேடில்சீர் முனிகை யூன்ற
மீண்டுபா தலத்திற் புக்க விந்தமே போலு மாதோ. ......
32(விண்ணவர் உய்த்த)
விண்ணவர் உய்த்த தேர்மேல் மேவலர் புரம்நீ றாக்கும்
பண்ணவன் ஒருதாள் ஊன்றப் பாதலம் புகுந்த வாபோல்
கண்ணகல் வரையும் வீரன் கழல்பட அழுந்திற் றம்மா
அண்ணலந் தாதை வன்மை அருள்புரி மகற்கு றாதோ. ......
33(கன்றிய வரிவிற்)
கன்றிய வரிவிற் செங்கைக் காளைபொற் றாளும் அந்தண்
குன்றொடு பிலத்துட் செல்லக் குறிப்பொடு விழிக்கு றாமே
சென்றிட முடியுஞ் சேண்போய்த் திசைமுகத் தயனும் மாலும்
அன்றடி முடிகா ணாத அசலமும் போல நின்றான். ......
34(ஆளரி அன்னோன்)
ஆளரி அன்னோன் தாளும் அடுக்கலும் அழுந்தும் பாரின்
நீளிரு முடிசேர் வானின் நிரந்தமாப் பறவை போதல்
சூளுடை இமையோர் புள்ளும் மாவுமாய்த் தோமில் வீரன்
தாளொடு முடியும் நாடிச் சார்தருந் தகைமைத் தாமால். ......
35(அந்தமில் வலியோன்)
அந்தமில் வலியோன் நிற்ப ஆயிடைத் துஞ்சும் பாந்தள்
தந்தொகை வீழு றாது தழீஇமருங் காகக் கீழ்போய்
முந்துயர் கமடஞ் சேர்ந்து முழங்குதெண் டிரைக்கண் வைகும்
மந்தர மென்னக் கந்த மாதனந் தோன்றிற் றம்மா. ......
36(பதுமநேர் கண்ணன்)
பதுமநேர் கண்ணன் வேதாப் பலவகை முனிவர் தேவர்
கதிபடர் உவணர் சித்தர் கந்தரு வத்தர் ஒண்கோள்
மதியுடுக் கதிர்கள் ஏனோர் வான்பதம் முற்றும் ஓங்கும்
அதிர்கழல் வீரன் பல்வே றாரமாய் ஒளிர நின்றான். ......
37(எண்டிசை முழுதும்)
எண்டிசை முழுதும் நேமி எழுதிறத் தனவும் மற்றைத்
தெண்டிரைக் கடலும் பாருஞ் சேண்கிளர் ஆழி வெற்பும்
அண்டமும் உலகம் யாவும் அகன்விழி பரப்பி நோக்கிக்
கண்டனன் அமலன் வைப்புங் கைதொழு தையன் நின்றான். ......
38(ஆணமில் சிந்தை)
ஆணமில் சிந்தை வீரன் அச்சுதன் முதலோர் வைகுஞ்
சேணகர் நோக்கிச் சூழுந் திசைநகர் நோக்கிப் பாரின்
மாணகர் நோக்கி வீர மகேந்திரம் நோக்கிச் சூரன்
நீணகர் இதற்கி யாவும் நிகரிலை போலு மென்றான். ......
39(விண்ணுலாம் புரிசை)
விண்ணுலாம் புரிசை வெஞ்சூர் வியனகர் அதனை நோக்கி
உண்ணிலா வெகுளி கொண்டான் ஒருகரம் அங்கண் ஓச்சி
நண்ணலார் யாருந் துஞ்ச நாமறப் பிசைகோ வென்னா
எண்ணினான் சிறையில் உற்றோர்க் கிரங்கிஅவ் வெண்ணம் மீட்டான். ......
40(விஞ்சையர் இயக்கர்)
விஞ்சையர் இயக்கர் சித்தர் வியன்சிறை உவணர் திங்கள்
செஞ்சுடர்ப் பரிதி நாள்கோள் தெய்வத கணத்தர் யாரும்
வஞ்சினத் தடுதோள் வீரன் மாலுரு நோக்க லாற்றா
தஞ்சினர் வெருவச் செங்கை அமைத்தனன் அழுங்க லென்றே. ......
41(கோளியல் கருடர்)
கோளியல் கருடர் தாம்வீழ் மாதரை விழைந்து கூடி
வாளுறு நகத்தின் ஊறு மதிக்கிலர் மயங்கித் துஞ்சி
வேளெனும் நெடியோன் ஊன்றும் வெற்பொடும் பிலத்திற் சென்று
கேளுடன் எழுந்து நாகர் கிளைதனக் கணங்கு செய்தார். ......
42(ஆதியங் குமரன் தூதன்)
ஆதியங் குமரன் தூதன் ஆற்றலால் ஊன்றி நிற்பப்
பூதலங் கீண்டு வெற்புப் பொள்ளென ஆழ்ந்து கீழ்போய்ப்
பாதலங் குறுக அங்கட் பயிலராத் தொகையை நாகர்
காதலங் கேண்மை நாடிக் கலந்தனர் விருந்து செய்தார். ......
43(தேன்றிகழ் தெரியல்)
தேன்றிகழ் தெரியல் வாகைச் சேவகன் கழல்கள் வெற்பின்
ஊன்றலும் அனைய பாங்கர் ஒருசிலர் அரக்கர் நோற்றார்
ஆன்றுயர் பதத்தை வெஃகி ஆங்கவர் பிலத்துள் வீழ்ந்து
மான்றனர் இரங்க லுற்றார் வன்கணார்க் குய்வு முண்டோ. ......
44(புண்டர நீற்று)
புண்டர நீற்று வள்ளல் புரையுருத் தேவர் நோக்கி
மண்டலம் புகழும் வீர மகேந்திரஞ் சேறற் கன்றால்
கொண்டவிவ் வுருவம் நோக்கிற் குரைகழல் அவுணர் தம்மை
அண்டமும் இடித்துச் சாடும் நினைவுகொல் ஐயற் கென்றார். ......
45(வீரமா மகேந்தி)
வீரமா மகேந்தி ரத்தில் அவுணரும் வீற்று வீற்றுச்
சாருறும் அவுணர் தாமுஞ் சயங்கெழு புயத்து வள்ளல்
பேருரு நோக்கி இங்ஙன் பிறந்தசொற் சழக்கே இன்னுந்
தேருவ துண்டு நந்தந் திறல்வரைப் புணர்ப்பி தென்றார். ......
46(ஒலிகழல் வீர வாகு)
ஒலிகழல் வீர வாகு ஓங்கலை யூன்றி இந்த
நிலைமையின் நிற்ற லோடும் நெடியமால் சுதனும் விண்ணோர்
தலைவனும் பிறரும் அன்னோன் தம்பியர் அளப்பி லோருங்
கலிகெழு பூதர் யாருங் கண்டுவிம் மிதத்தின் ஆர்த்தார். ......
47(தேவர்கள் முனிவர்)
தேவர்கள் முனிவர் ஏனைத் திறத்தவர் யாருந் தத்தம்
ஓவரும் பதத்தின் நின்றே ஒல்வதோர் உறுப்பின் மேவக்
காவரு கடிமென் பூத்தூய்க் கைதொழு தைய வெஞ்சூர்
மேவரு நகர்சென் றெங்கள் வியன்துயர் அகற்று கென்றார். ......
48(ஆவதோர் காலை எந்தை)
ஆவதோர் காலை எந்தை ஆறிரு தடந்தோள் வாழ்க
மூவிரு வதனம் வாழ்க முழுதருள்*
1 விழிகள் வாழ்க
தூவுடை நெடுவேல் வாழ்க தொல்படை பிறவும் வாழ்க
தேவர்கள் தேவன் சேயோன் திருவடி வாழ்க என்றான். ......
49(ஆண்டகை தொழு)
ஆண்டகை தொழுத பாணி அணிமுடிக் கொண்டிவ் வாற்றால்
ஈண்டுசீர்க் குமர வேளை ஏத்தலும் அன்பின் கண்ணீர்
வீண்டுதெண் கடலுள் ஏகி வெள்ளமிக் குவரை மாற்றப்
பூண்டகண் டிகையை மானத் தோன்றின பொடிப்பின் பொம்மல். ......
50(மீதுகொள் பொடி)
மீதுகொள் பொடிப்பு மூட மெய்ப்புலன் சிந்தை யொன்ற
ஓதுவ தவற என்பும் உருகிய செருக நாட்டங்
கோதில்பே ரருளின் மூழ்கிக் குதூகலித் திடுத லோடு
மூதுல கனைத்தும் ஆவி முழுவதும் மகிழ்ந்த வன்றே. ......
51(அவ்வகை நிகழ)
அவ்வகை நிகழச் செவ்வேள் ஆரருள் அதனைப் பெற்று
மொய்வரை மீது நின்றோன் முழுதுல களந்து சேண்போம்
இவ்வுரு வோடு செல்லின் இறந்திடும் உலகம் ஈது
செவ்விதன் றென்னா வேண்டுந் திருவடி வமைந்தான் அன்றே. ......
52(கிரிமிசை நின்ற)
கிரிமிசை நின்ற அண்ணல் கிளர்ந்துவான் எழுந்து சென்னிக்
குருமணி மகுடம் அண்ட கோளகை புடைப்ப வீரன்
உருகெழு சீற்றச் சிம்புள் உருவுகொண் டேகிற் றென்ன
வரைபுரை மாட வீர மகேந்திரம் முன்னிப் போந்தான். ......
53ஆகத் திருவிருத்தம் - 3765