Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

previous padalam   2 - வரவுகேள்விப் படலம்   next padalamvaravu kELvip padalam

Ms Revathi Sankaran (3.38mb)
(ஏகநா யகனாம்)

ஏகநா யகனாம் ஐயன் இவ்விடை இருந்த எல்லை
     நாகர்மேல் அளிவைத் துள்ள நாரதன் அவற்றை நாடி
          மாகநீள் புரிசை சூழ்ந்த மகேந்திர புரத்திற் சென்று
               போகமார் உலகின் மேலாம் புரவலன் கோயில் புக்கான். ......    1

(புக்கனன் அவுணர்)

புக்கனன் அவுணர் உய்ப்பப் பொருவிலா இகல்வெஞ் சூரன்
     மிக்குயர் திருவி னோடும் வீற்றிருந் திடுதல் காணூஉ
          இக்கென இனைய தீயோன் இறப்பவென் றுன்னி வாயால்
               தக்கதோர் ஆசி கூறிச் சார்ந்தனன் தவத்தின் மேலோன். ......    2

(அங்கைகள் மலர)

அங்கைகள் மலர நின்றே ஆசிசெய் தானை நோக்கி
     எங்குளை இங்கு வந்த தென்னைநீ யாரை யென்ன
          மங்கையோர் பங்கன் மேவும் வடபெருங் கயிலை வாழ்வேன்
               நுங்குலந் தலைமை யாக வைகலும் நோற்றல் செய்வேன். ......    3

(கைதவம் புகலேன்)

கைதவம் புகலேன் வெய்ய காமமே முதல நீத்துச்
     செய்தவம் பலவும் உள்ளேன் தேவருக் கிடுக்கண் செய்வேன்
          மைதவிர் புகரி னோடும் மருவுநண் புடையேன் நின்பால்
               எய்திஒன் றுரைக்க வந்தேன் நாரதன் எனும்பே ருள்ளேன். ......    4

(சிந்துவான் மதி)

சிந்துவான் மதிதோய் வேணிச் செல்வன்நின் அடுவ தாகக்
     கந்தனாம் முருகன் தன்னைக் காமர்கண் ணழலால் நல்க
          வந்தமா மதலை தன்பால் ஐயஉன் பணிய தாற்றும்
               இந்திரா தியர்கள் ஏகி இறைஞ்சியே ஏத்தி யுற்றார். ......    5

(உற்றுளார் தமக்கு)

உற்றுளார் தமக்கு நின்னால் உறுதுயர் குமரன் கேட்பச்
     சொற்றலும் அஞ்சல் என்று தொல்சிவன் அருள்மேற் கொண்டு
          கொற்றவெம் பூத வீரர் குழாத்தொடும் புவியின் ஏகி
               மற்றுன திளவல் தன்னை வரையொடும் வேலாற் செற்றான். ......    6

(ஆண்டது புரிந்த)

ஆண்டது புரிந்த பின்னர் அறுமுகன் செந்தி மேவித்
     தூண்டினன் நினக்கோ ரொற்றைத் துண்ணென அவனும் வந்து
          மீண்டபின் புகுதி நாடி வேலையைக் கடந்து தன்பால்
               ஈண்டிய படையொ டன்னால் இந்நகர் வடபால் வந்தான். ......    7

(ஆங்கனம் பாடி)

ஆங்கனம் பாடி வீடொன் றாற்றுவித் தனிகம் யாவும்
     பாங்குற இருந்தான் செவ்வேள் பார்த்தனன் இனைய வெல்லாம்
          ஈங்கிது நிகழ்ந்த வண்ணம் என்றலும் அவுணர் கோமான்
               தீங்கன லென்னச் சீறி நகைத்திவை செப்ப லுற்றான். ......    8

வேறு

(மேனிமிர் கொண்டல்)

மேனிமிர் கொண்டல் உயர்த்தவன் அம்புய மிசைவேதர்
     நீனிற மாயவன் ஊரது போல நினைந்தானோ
          ஆனதொல் அண்டமொ ராயிர கோடியும் அரசாள்வேன்
               மாநகர் மேலொரு பாலக னாம்பொர வருவானே. ......    9

(அரியின் இனஞ்செறி)

அரியின் இனஞ்செறி சூழலின் அன்னவை அடலுன்னிக்
     கரியது கன்றுழை கலைபிற வற்றொடு கடிதேகில்
          பொருது வயங்கொள வல்லது கொல்அது போலன்றோ
               முருகனும் வெம்படை யுடன்இவண் வந்திடு முறைதானே. ......    10

(வேலை கடந்தென)

வேலை கடந்தென தாணை இகழ்ந்து வியன்பூதச்
     சால நெடும்படை தன்னுடன் இந்நகர் சார்வானாங்
          காலம் இதங்கவன் வீரம் அழிப்பல் கருத்தில்லாப்
               பாலகன் என்றும் விடேன்வசை என்பதும் பாரேனால். ......    11

(முன்னொரு சூழ்ச்சி)

முன்னொரு சூழ்ச்சியின் அசமுகி ஒண்கரம் முரிவித்தே
     ஒன்னல ராய்அமர் உம்பர்கள் யாவரும் உய்ந்தாரோ
          என்னிளை யானொடும் வெற்பினை அட்டன மெனவுன்னித்
               தன்னுயிர் போவ தறிந்திலன் இந்நகர் தனின்வந்தான். ......    12

(ஆழிய தெண்டிரை)

ஆழிய தெண்டிரை ஆழி கடைந்தவன் அலகில்லா
     வேள்வி புரிந்திடு வாசவன் அம்புய மிசைமேயோன்
          வாழிய நம்பெயர் கூறினும் அஞ்சினர் மறைகுற்றார்
               பூழி புனைந்தவர் பாலக னோஅமர் புரிவானே. ......    13

(அந்தர மேல்வரு)

அந்தர மேல்வரு செங்கதி ரைச்சிறை அமர்வித்த
     மைந்தனை நாற்படை தன்னொடு மேவி வயப்போரால்
          முந்திய பூதரை ஏனைய வீரரை முடிவித்தே
               கந்தனை யொல்லையின் வெற்றிகொள் வேன்இது காண்கிற்பாய். ......    14

(என்றசு ரேசன்)

என்றசு ரேசன் இசைத்தலும் நாரதன் இவைகேளா
     நன்றிது நன்றிது தாழ்க்கலை இன்னினி நகர்சூழச்
          சென்றவ னைப்பொர நின்படை ஏவுதி செல்கின்றேன்
               வென்றி நுமக்குற நோற்றிடு வானென விண்போனான். ......    15

வேறு

(நாரதன் இனைய)

நாரதன் இனைய கூறி நகையொடு போத லோடுஞ்
     சூரருள் ஆற்றல் மிக்கோன் துண்ணென அயலின் நின்ற
          கோரன்உற் கோரன் என்னும் ஒற்றரைக் குறித்து நோக்கி
               வாரிதி இறைவற் பற்றி வல்லையிற் கொணர்தி ரென்றான். ......    16

(என்றலும் அனைய ரோடி)

என்றலும் அனைய ரோடி எறிகடற் கரசைக் கூவி
     வன்றிற லோடு பற்றி வல்லைமுன் கொணர்ந்தே உய்ப்பக்
          கன்றிய மனத்த னாகிக் கைதொழு தவலங் கூர்ந்து
               நின்றனன் அவனை நோக்கி நெருப்பெழ விழித்துச் சொல்வான். ......    17

(பவ்வநீர் அரச)

பவ்வநீர் அரச கேண்மோ பங்கயத் தவனும் மாலுஞ்
     செவ்விதின் உணரா வண்ணம் ஒளித்தவன் சிறுவன் தன்னை
          வெவ்வலி கடந்த பூத வெள்ளத்தை நமது மாறா
               இவ்விடை விடுத்த தென்னை என்னலும் இசைக்க லுற்றான். ......    18

(மண்படு புவனம்)

மண்படு புவனம் போற்றும் மன்னகேள் புயங்க மீது
     கண்படு முகுந்தன் வேதாக் கடவுளர் தலைவ னோடும்
          எண்படு துணைவ ரானோர் யாவரும் புடையிற் சூழ
               விண்படு நெறியிற் சென்றான் வீரவேற் றடக்கை அண்ணல். ......    19

(மடல்கெழு நீபத்)

மடல்கெழு நீபத் தண்டார் வள்ளல்வான் நெறியிற் போத
     மிடல்கெழு பூதர் என்பால் மேவினர் சென்றார் அன்னார்
          அடிகளின் பரட்டின் காறும் அமைந்திலன் அவரை யானே
               தடைசெய வல்லேன் போலுந் தக்கதே இதுமற் றன்றோ. ......    20

(ஊழியும் உலையா)

ஊழியும் உலையாப் பூதர் ஒல்லெனச் செல்லத் தாளிற்
     பூழியால் அளறு பட்டாங் கிடையறப் புலம்ப லுற்றேன்
          ஆழியன் என்னும் பேரும் அற்றனன் வசையே பெற்றேன்
               ஏழையேன் செய்வ தென்கொல் எதிருண்டோ வலியர்க் கம்மா. ......    21

(தெள்ளிதில் தமிழ்)

தெள்ளிதில் தமிழ்தேர் காட்சித் திருமுனி கரத்தில் வாரி
     உள்ளுறக் கொண்ட தேபோல் ஒல்லையின் மிசைவர் போலாங்
          கொள்ளையிற் செறிபூ தர்க்குள் ஒருவரோர் குடங்கை தன்னின்
               அள்ளுதற் காற்ற கில்லேன் ஆதலின் உய்ந்தேன் அன்றே. ......    22

(உடல்சின வசனி)

உடல்சின வசனி தன்னை ஒண்பணி விலக்க வற்றோ
     கடுமுரண் அரிமான் ஏற்றைக் களிறெதிர் விலக்கிற் றுண்டோ
          மிடல்கெழு விதியைப் புந்தி விலக்குமோ அஃதே அன்றோ
               அடல்மிகு பூதர் தம்மை அளியனேன் தடுப்ப தென்றான். ......    23

(இற்றெலாம் அளக்கர்)

இற்றெலாம் அளக்கர் கோமான் இசைத்துமெய் துளக்க மெய்தி
     நிற்றலும் நெடுவேல் அண்ணல் நீள்நகர் நணிய தன்மை
          ஒற்றரிற் சிலவர் காணா ஓடினர் ஒல்லை சென்று
               கொற்றவற் பணிந்து நின்றே இவையிவை கூற லுற்றார். ......    24

(அராவணை அண்ணல்)

அராவணை அண்ணல் வேதா அரிமுதல் அமரர் சூழ
     விராவுறும் இலக்கத் தொன்பான் வெலற்கரும் வீரர் போற்ற
          இராயிரம் பூத வெள்ளம் ஈண்டிட எறிநீர்ச் சென்னிப்
               பராபரன் மைந்தன் நந்தம் பதிவட திசையிற் போந்தான். ......    25

(வடதிசை அதனி)

வடதிசை அதனிற் போந்து வானவர் புனைவற் கொண்டே
     படிபுகழ் தகைமைத் தான பாசறை புரிவித் தாங்கே
          புடைதனின் அனிக மான பூதவெவ் வீரர் மேவ
               நடுவணோர் நகரந் தன்னின் நண்ணிவீற் றிருந்தான் அன்றே. ......    26

(கண்டனம் இதனை)

கண்டனம் இதனை இன்னே கடவது புரிதி யென்னாத்
     திண்டிறல் வெய்ய தூதர் செப்பலும் அதனைக் கேளா
          அண்டமும் புவனம் யாவும் அலமர வழலிற் சீறிப்
               புண்டிகழ்ந் தனைய கண்ணான் இவையிவை புகல லுற்றான். ......    27

ஆகத் திருவிருத்தம் - 4953previous padalam   2 - வரவுகேள்விப் படலம்   next padalamvaravu kELvip padalam

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]