Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

previous padalam   3 - முதனாட் பானுகோபன் யுத்தப் படலம்   next padalammudhanAt BAnugOban yuththa padalam

Ms Revathi Sankaran (6.97mb)
(1 - 80)



Ms Revathi Sankaran (7.43mb)
(81 - 160)



Ms Revathi Sankaran (8.08mb)
(161 - 240)



Ms Revathi Sankaran (8.65mb)
(241 - 320)



Ms Revathi Sankaran (6.88mb)
(321 - 393)




(கோதை வேலுடை)

கோதை வேலுடைக் குமரன தாற்றலுங் கொற்றப்
     பூதர் ஆற்றலும் ஏனையர் ஆற்றலும் போர்செய்
          தூதன் ஆற்றலுந் தொலைக்குவன் துண்ணென நீவிர்
               ஆத வன்தனிப் பகைஞனைக் கொணர்திரென் றறைந்தான். ......    1

(ஆன காலையில் நன்றெ)

ஆன காலையில் நன்றெனத் தூதுவர் அகன்று
     பானு கோபன திருக்கைபுக் கனையவற் பணிந்து
          மேனி லைப்படு தந்தைதன் பணிவிடை விளம்ப
               மான வாலரித் தவிசுவிட் டெழுந்தனன் மன்னோ. ......    2

(தொல்லை மந்திர)

தொல்லை மந்திரத் தலைவருஞ் சுற்றமா யினரும்
     எல்லை தீர்தரு தானையந் தலைவர்கள் யாரும்
          ஒல்லெ னப்புடை சூழ்ந்தனர் உருமுகான் றென்னப்
               பல்லி யங்களும் ஆர்த்தன போர்த்தன பதாதி. ......    3

(அக்க ணத்தினில்)

அக்க ணத்தினில் இரவியம் பகைஞனோ ரணித்தேர்
     புக்கொ ராயிர கோடிவீ திகளொரீஇப் புடையில்
          தொக்க வீரரிற் கண்டுளார் வயின்வயின் தொழப்போய்
               மிக்க தாதைதன் திருநகர் அடைந்தனன் விரைவின். ......    4

(தேரின் நின்றிழி)

தேரின் நின்றிழிந் தண்ணலங் கோயிலுட் சென்று
     சூர பன்மனை அணுகிய அவனடி தொழுது
          வீர வீரநீ யெனையிவண் விளித்ததென் னென்ன
               வாரி ருங்கழல் மன்னவன் இன்னன வகுப்பான். ......    5

(முந்து தாரக)

முந்து தாரக வெம்பியை வரையொடு முடித்த
     கந்த வேள்செந்தி நீங்கியே அளக்கரைக் கடந்து
          நந்தி தங்கணத் தலைவரும் பூதரும் நணுக
               இந்த மாநகர் வடதிசை வாயில்வந் திறுத்தான். ......    6

(சிந்து போன்று)

சிந்து போன்றுல களந்திடு கள்வனுஞ் செயிர்தீர்
     கந்த மாமலர்க் கடவுளும் என்பணி கடந்த
          இந்தி ராதியர் யாவரும் பிறருமாய் ஈண்டி
               வந்து ளார்களாம் அறுமுக மதலைதன் மருங்கு. ......    7

(அளிய ராகிய)

அளிய ராகிய அமரரும் அரன்தரு மகவும்
     ஒளிறு வாட்படை நந்திதன் கணத்தினுள் ளோரும்
          களியின் மூழ்கிய பூதருங் கடிதுவந் தடைதற்
               கெளிது பட்டதோ நன்றுநன் றினையமா நகரம். ......    8

(பின்னை தன்னுடன்)

பின்னை தன்னுடன் அடுக்கலை மைந்தனைப் பிறரை
     முன்னம் அட்டிடும் மாற்றலர் தங்களை முருக்கச்
          சென்னெ றிக்கொடு போதலென் கடன்அவர் சிறியர்
               மன்னர் மன்னன்யான் ஆதலின் இருந்தனன் வறிது. ......    9

(அந்தண் மாமுகில்)

அந்தண் மாமுகில் உயர்த்தவன் வேண்டலும் அமலன்
     தந்த கந்தனைச் சாரதத் தலைவர்க ளோடு
          நந்த மைப்பொர விடுத்தனன் ஆதலின் நானும்
               மைந்த நிற்கொடு வென்றிபெற் றிருந்திடல் வழக்கே. ......    10

(ஆத லால்இனிப் படை)

ஆத லால்இனிப் படையொடும் அமர்க்களத் தடைந்து
     நாதன் மைந்தனை நந்திதன் கணத்துளார் தம்மைப்
          பூதர் தங்களைப் பொருதழித் தடல்வயம் புனைந்து
               காதல் மைந்தநீ மீடியால் நம்முனங் கடிதின். ......    11

வேறு

(என்றிவை சூர்)

என்றிவை சூர்முதல் இசப்பக் கேட்டலும்
     பொன்றிகழ் தடம்புயம் பொருப்பிற் சேட்செல
          ஒன்றிய குமிழ்வடி வுடலம் போர்த்திட
               நின்றிடு திருமகன் இவைநி கழ்த்துவான். ......    12

(இருளுறு மிடற்றி)

இருளுறு மிடற்றினன் ஏவும் மைந்தனை
     மருளுறு பூதரை மற்று ளார்தமை
          வெருளுறு சமரிடை வென்று மீள்வதோர்
               பொருளென நினைந்துகொல் புகன்றி இற்றெலாம். ......    13

(பன்னுவ தென்னி)

பன்னுவ தென்னினிப் பரமன் கான்முளை
     இந்நகர் நணுகுமுன் எதிர்ந்து போர்செய்வான்
          நென்னலே வினவினன் நீய தோர்ந்திலை
               பின்னிது புகலுதல் பிழைய தாகுமால். ......    14

(படைப்பெருந் தொறு)

படைப்பெருந் தொறுவொடும் படர்ந்து கந்தனை
     அடுத்தனன் பேரமர் ஆற்றி வென்றிகொண்
          டிடுக்கணில் பூதரை ஏனை யோருடன்
               முடித்திவண் வருகுவன் முதல்வ காண்டிநீ. ......    15

(கந்தனை விறல்)

கந்தனை விறல்கொடே அவன்றன் கட்படு
     செந்திரு மார்பனைத் திசைமு கத்தனை
          இந்திரக் கள்வனை இமைப்பில் பற்றிமுன்
               தந்திடு கின்றனன் தகுவ செய்தியால். ......    16

(என்றிவை கூறியே இறை)

என்றிவை கூறியே இறைஞ்ச மைந்தநீ
     சென்றனை வருதியால் திறலி னோடெனா
          நன்றென விடைகொடு நடந்து நன்கமை
               பொன்றிகழ் தனதுதேர் புகுந்து போயினான். ......    17

(தொல்லையிற் பரிசனம்)

தொல்லையிற் பரிசனம் புடையிற் சூழ்தரப்
     பல்பதி னாயிரந் துணைவர் பாற்பட
          ஒல்லென இயம்பல ஒலிப்ப ஏகுறா
               எல்லையம் பகைதன திருக்கை எய்தினான். ......    18

(பண்டியந் தேரினு)

பண்டியந் தேரினுந் தணந்து பாங்கரின்
     மண்டுறு தூதரை வல்லை கண்ணுறீஇ
          எண்டரு நம்படை யாவும் இவ்விடை
               கொண்டணை வீரெனக் கூறிப் போயினான். ......    19

(ஏயிரும் பரிசனர்)

ஏயிரும் பரிசனர் யாரை யும்நிறீஇ
     மாயிருங் கலைமகள் வதிந்து வைகிய
          ஆயுத சாலையின் அவுணர் கோன்மகன்
               போயினன் தொழுதனன் பூசை ஆற்றினான். ......    20

(கயிரவ நிறத்த)

கயிரவ நிறத்தபூங் கச்சு வீக்கினான்
     வயிரவொள் வாளினை மருங்கு சேர்த்தினான்
          வெயில்விடு பொன்துகில் மீது சுற்றினான்
               துயிலறும் அமரரைத் துளக்கங் கண்டுளான். ......    21

(செல்லிடை உருமென)

செல்லிடை உருமெனத் தெழிக்கும் நோன்கழல்
     கல்லென அரற்றிடக் கழலிற் பூட்டினான்
          வல்லிதிற் சாலிகை மருமஞ் சேர்த்தினான்
               சொல்லினும் நிவந்தெழு தூண்செய் தோளினான். ......    22

(கோதையை அங்கை)

கோதையை அங்கையிற் கொளுவிச் சுற்றினான்
     போதுறழ் அங்குலி புட்டில் தாங்கினான்
          சோதிகொள் சரம்படு தூணி வைச்சுவல்
               மீதுற வீக்கினான் விறலின் மேலையோன். ......    23

(வெம்பெரு நுதல்)

வெம்பெரு நுதல்மிசை விசயப் பாலதாஞ்
     செம்பொனின் பட்டிகை திகழச் சேர்த்தினான்
          பம்புறும் அணிகலம் பலவுந் தாங்கினான்
               தும்பையஞ் சிகழிகை மவுலி சூட்டினான். ......    24

(விடித்ததோர் பெரு)

வடித்ததோர் பெருஞ்சிலை வயமுண் டாகஎன்
     றெடுத்தனன் விடுத்திடின் யாவர் தம்மையும்
          படுத்திடு மோகமாம் படையொன் றேந்தினான்
               அடுத்திடு செறுநர்தம் மாற்றல் உன்னலான். ......    25

(ஆனதோர் போரணி)

ஆனதோர் போரணி அணிந்து வாய்தலிற்
     பானுவின் மாற்றலன் படர முன்னரே
          போனதோர் தூதுவர் எழுதிர் போர்க்கெனத்
               தானையோ டெழுந்தனர் தகுவர் யாவரும். ......    26

வேறு

(விசையன் நேமியன்)

விசையன் நேமியன் மிகுந்திறல் மாயன்
     முசலி கண்டகன் முரங்கரன் மூர்க்கன்
          தசமுகன் கனலி சண்டன் விசண்டன்
               அசமுகன் மகிடன் அக்கிர வாகு. ......    27

(விசையசே னன்விட)

விசையசே னன்விட சேனன் விமோகன்
     வசைகொள் சோமகன் மதுச்சசி சித்துச்
          சுசிமுகன் அசனி சூனிய கேது
               அசுரசே னன்இவர் ஆதியர் ஆனோர். ......    28

(தடுக்கொ ணாவகை)

தடுக்கொ ணாவகை தடிந்திடு தெய்வப்
     படைக்கலங் களவை பற்பல பற்றா
          உடைத்தவன் மையுடன் ஒய்யென வந்தார்
               கிடைத்த தோவமர் எனக்கிளர் கின்றார். ......    29

(ஆனகா லைபதி)

ஆனகா லைபதி னாயிர வெள்ளந்
     தானவப் படைஞர் சார்புதொ றேகி
          மீனவே லைகளும் வெள்குற ஆர்த்து
               மானவத் தலைவர் மாடுற வந்தார். ......    30

(கோல வார்சிலை)

கோல வார்சிலை கொடுங்கதை நீடுஞ்
     சூல நேமிஅயில் தோமரம் ஈட்டி
          ஆலம் வாள்கணையம் ஆரெழு நாஞ்சில்
               கால பாசமிவை கைக்கொடு சென்றார். ......    31

(கந்து கத்தொகை)

கந்து கத்தொகை கடங்கலுழ் கைம்மா
     எந்தி ரத்திரதம் ஈங்கிவை மூன்றும்
          ஐந்தொ கைப்படுமி ராயிர வெள்ளந்
               தந்தி ரத்தலைவர் தம்புடை சூழ்ந்த. ......    32

(ஐந்து நான்குடைய)

ஐந்து நான்குடைய ஆயிர வெள்ளத்
     திந்த நாற்படையும் ஈண்டுபு செல்ல
          மைந்தின் ஏற்றமிகு மானவர் தத்தஞ்
               சிந்தை போற்கடிது சென்றனர் அம்மா. ......    33

(சென்ற காவலர்கள்)

சென்ற காவலர்கள் சேனையி னோடும்
     என்ற வன்பகைஞன் எய்துழி நண்ணி
          ஒன்ற அங்கைதொழு தொல்லென ஆர்த்துத்
               துன்றி வந்துபுடை சூழ்ந்தனர் அன்றே. ......    34

(இரவிதன் பகைஞன்)

இரவிதன் பகைஞன் ஈங்கிவை காணா
     ஒருதனே வலனை ஒல்லையின் நோக்கித்
          திருமைபெற் றதொரு தேரினை வல்லே
               தருகஎன் னஇனி தென்று தணந்தான். ......    35

(செப்பும் அத்தொழில்)

செப்பும் அத்தொழில் சிரங்கொடு சென்றே
     மெய்ப்படைக் கருவி மேவுழி நண்ணி
          முப்ப தாயிர முரட்பரி பூண்ட
               ஒப்பிலா இரதம் ஒன்றினை உய்த்தான். ......    36

(உய்த்த தேரின்)

உய்த்த தேரின்உத யக்கிரி வாவு
     மொய்த்த வெங்கதிரின் மொய்ம்பொடு பாய்ந்தான்
          மெத்து பேரனிக வெள்ள மியாவும்
               அத்துணைப் பொழுதின் ஆர்த்தன அன்றே. ......    37

(உரத்த கந்திகள்)

உரத்த கந்திகள் ஒராயிர கோடி
     பெருத்து நீண்டசைவு பெற்றிடு பாளை
          விரித்து நீட்டியென வெவ்வசு ரேசர்
               கரத்தின் எண்ணில்கவ ரித்தொகை வீச. ......    38

(மற்ற வன்தனது)

மற்ற வன்தனது மாசிருள் மேனி
     உற்றி டற்கருமை யால்அவன் ஒண்சீர்
          சுற்றி மீதுலவு தோற்றம தென்னக்
               கற்றை வெண்குடைகள் காவலர் ஏந்த. ......    39

(அடைப்பை கோடி)

அடைப்பை கோடிகம் அடுஞ்சுடர் ஒள்வாள்
     கடிக்கொள் பீலிகவின் உற்ற களாசித்
          தொடக்கம் ஏந்திமுறை சுற்றி அனந்தம்
               படைப்பெ ருந்தலைவர் பாங்கொடு போற்ற. ......    40

(எழில்செ றின்த)

எழில்செ றின்தஇர தத்திடை வைகும்
     அழலின் வெங்கதிரை ஆற்றமு னின்தோன்
          உழைய ரிற்பலரை ஒய்யென நோக்கி
               விழுமி தோர்மொழி விளம்புதல் உற்றான். ......    41

(காமர் வெம்படை)

காமர் வெம்படை கணிப்பில கொண்ட
     சேம மாகியமர் தேரொடு கோடி
          ஏம மோடுகொணர் வீரென லோடுந்
               தாம வேலுழையர் தாழ்ந்தனர் சென்றார். ......    42

(அண்ட ரும்படை)

அண்ட ரும்படை அளப்பில உய்த்துத்
     திண்டி றற்கெழுமு தேரொரு கோடி
          கொண்டு வந்துழையர் கொற்றவன் மைந்தற்
               கெண்டி சைப்புறமும் ஈண்டுறு வித்தார். ......    43

(ஆண்ட கைக்குமரன்)

ஆண்ட கைக்குமரன் அன்னது காலை
     மாண்ட சீர்வலவன் மாமுகம் நோக்கிப்
          பாண்டின் மாத்தொகுதி பண்ணின இத்தேர்
               தூண்டு கந்தன்அமர் சூழலின் என்றான். ......    44

(என்ன லும்விழுமி)

என்ன லும்விழுமி தேயென முட்கோல்
     மன்னு மத்திகையின் வன்றொழில் காட்டித்
          துன்னு வாம்புரவி யின்தொகை தூண்டிப்
               பொன்னந் தேர்கடவி னான்புகழ் வெய்யோன். ......    45

(வெய்ய வன்தனை)

வெய்ய வன்தனை வியன்சிறை இட்ட
     கையன் ஏகஅது கண்டு புறஞ்சூழ்
          மையல் மால்அவுண மாப்படை யாவும்
               ஒய்யெ னப்பெரிது லம்பின அன்றே. ......    46

(எழுந்த தானவர்)

எழுந்த தானவர் இகற்படை வெள்ளம்
     எழுந்த தேர்நிரை எழுந்தன கைம்மா
          எழுந்த வாசிகள் எழுந்தன ஓதை
               எழுந்த கேதனம் எழுந்தன பூழி. ......    47

(அறைந்த பேரிகை)

அறைந்த பேரிகை அறைந்தன சங்கம்
     அறைந்த காகளம் அறைந்தன திண்கோ
          டறைந்த சல்லிகை அறைந்த தடாரி
               அறைந்த தண்ணுமை அறைந்தன தக்கை. ......    48

(ஆர்த்த தேர்த்தொ)

ஆர்த்த தேர்த்தொகுதி ஆர்த்தன வாசி
     ஆர்த்த தந்திநிரை ஆர்த்தனர் வெய்யோர்
          ஆர்த்த வால்துவசம் ஆர்த்தன கண்டை
               ஆர்த்த தார்நிரைகள் ஆர்த்தது மூதூர். ......    49

(அதிர்ந்த மாநிலம்)

அதிர்ந்த மாநிலம் அலைந்தன நாகம்
     உதிர்ந்த தாரகை உலைந்தனர் தேவர்
          விதிர்ந்த மேகநிரை விண்டது மேருப்
               பிதிர்ந்து போயின பிறங்கல்கள் ஏழும். ......    50

(ஊழி யான்மதலை)

ஊழி யான்மதலை ஓங்கு படைப்பேர்
     ஆழி யோடுற அருக்கன் வெருண்டே
          பூழி வான்முகடு போர்த்தெழல் காணா
               வாழி என்றதின் மறைந்து படர்ந்தான். ......    51

(வாழி மாநகர்)

வாழி மாநகர் வளைந்திடு தொல்பேர்
     ஆழி யாங்கடை அவப்படை யாகிச்
          சூழும் வேலையிடை தோன்றி யுலாவும்
               பூழி தூர்த்துளது பூதர்க ளேபோல். ......    52

(விட்ட சோதிநிமிர்)

விட்ட சோதிநிமிர் விண்மிசை தாக்கப்
     பட்டு லாவரு பதாகையின் ஈட்டம்
          வட்ட வானமெனும் வான்பட கத்தைக்
               கொட்டு மண்மகள் குலாவுகை போலும். ......    53

(தாழும் வீரர்படை)

தாழும் வீரர்படை தம்மின் உரிஞ்சப்
     பாழி வெங்கனல் பரந்த பதாகைச்
          சூழல் வானநதி தோய்ந்தசை காலை
               வீழு மாலிகளின் வீழ்ந்திடு கின்ற. ......    54

(வான மோடியன)

வான மோடியன மால்கரி தள்ளுந்
     தான மோடின சரங்களின் ஓடி
          மீன மோடுதிரை வேலையி னோடும்
               கான மோடின களிற்றின மென்ன. ......    55

(செப்பு தற்கரிய)

செப்பு தற்கரிய சேணகர் தன்னில்
     துப்பு மிக்கெழுவு தொல்படை வெள்ளம்
          இப்பு றத்துநெறி இன்றிஅவ் வானத்
               தப்பு றத்தினும் அளப்பில சென்ற. ......    56

(மறந்த ருங்கதிரை)

மறந்த ருங்கதிரை வன்சிறை செய்தோன்
     செறிந்த தானையுடன் இவ்வகை செல்ல
          இறந்த சீர்நகரின் இத்திற மெல்லாம்
               அறிந்து நாரதன் அகன்றிடு கின்றான். ......    57

(வான மேல்நெறி)

வான மேல்நெறி வழிக்கொடு பூதர்
     மேன பாசறை வியன்பதி யுட்போய்
          ஞான வாலறிவின் நாரதன் விண்ணோர்
               சேனை காவலன் அமர்ந்துழி சென்றான். ......    58

(சிந்து ரப்பகை)

சிந்து ரப்பகை சிரத்தவி சுற்ற
     கந்த வேள் இரு கழற்றுணை காணாப்
          புந்தி நாரொடு புகழ்ந்து வணங்கி
               எந்தை கேட்கவென இன்ன துரைப்பான். ......    59

(பூத சேனையொடு)

பூத சேனையொடு பொள்ளென ஏகி
     ஆதி நீயிவண் அமர்ந்தன யாவும்
          தூதர் கூறஉயர் சூரபன் மாவென்
               றோது தீயவன் உணர்ந்து வெகுண்டான். ......    60

(நிகண்ட முற்பகல்)

நிகண்ட முற்பகல் நெடுங்கதி ரோன்பால்
     உகண்ட தன்மகனை ஒல்லை விளித்தே
          அகண்ட சேனையொடும் அன்பிலன் நின்மேல்
               வெகுண்டு போர்செய விடுத்தனன் அம்மா. ......    61

(விடுத்த காலையவன்)

விடுத்த காலையவன் வெஞ்சமர் ஆற்றற்
     கடுத்த கோலமொ டளப்பில வான
          கடற்பெ ரும்படை கலந்துடன் ஏகத்
               தடுப்ப ரும்வெகுளி தன்னொடும் வந்தான். ......    62

(இவனு டன்சமரின்)

இவனு டன்சமரின் ஏற்பவர் நீயுஞ்
     சிவனும் அன்றியெவர் தேவரின் உள்ளார்
          அவனை வெல்வதரி தாகும்முன் ஓர்நாட்
               புவனி யுண்டவர் புரந்தர வென்றான். ......    63

(கரையி லாவமர்)

கரையி லாவமர் கடந்திசை கொண்டான்
     வரைவி லாதபல மாயைகள் வல்லான்
          உரக வேந்தினும் உரம்பெரி துள்ளான்
               பிரமன் ஈன்திடு பெரும்படை பெற்றான். ......    64

(அறைக டற்கிறை)

அறைக டற்கிறைவன் அங்கைகொள் பாசம்
     மறலி தன்பரசு வவ்வினன் மாயோன்
          விறலின் நேமிகொள வேண்டலன் முன்னஞ்
               சிறிய தந்தையணி குற்ற சிறப்பால். ......    65

(ஆகை யால்அவனை)

ஆகை யால்அவனை ஆள்கொடு வல்லே
     வாகை கொண்டிடலும் மற்றரி தம்மா
          பாகு பட்டபடை பாங்குற நீயே
               ஏகல் வேண்டுமட வென்று பகர்ந்தான். ......    66

(நார தன்இவை)

நார தன்இவை நவின்றிடு காலை
     மூரல் எய்திமுரு கன்புடை நின்ற
          வீர வாகுவை விளித்தருள் செய்து
               சீரி தாஇனைய செப்புதல் உற்றான். ......    67

(ஈண்டு பூதரொ டியாம்)

ஈண்டு பூதரொ டியாம்வரு தன்மை
     யாண்டு சூரனுணர்ந் தந்நகர் தன்னின்
          மாண்ட தானையுடன் மைந்தனை நம்மேல்
               தூண்டி னான்அமர் தொடங்கிய மன்னோ. ......    68

(எள்ளு தற்கரிய)

எள்ளு தற்கரிய எண்மர் இலக்கர்
     உள்ள பேர்களும் ஒராயிர பூத
          வெள்ள மும்புடையின் மேவர நீபோய்ப்
               பொள்ளெ னப்புரிசை யின்புடை சூழ்தி. ......    69

(சென்று முன்கடை)

சென்று முன்கடை சிதைத்தனை அங்ஙன்
     கன்றி நேரவுணர் காவலன் மைந்தன்
          துன்று சேனைகள் தொலைத்தமர் ஆற்றி
               வென்றி கொண்டவனை மீளுதி யென்றான். ......    70

(ஈரும் வேல்முருகன்)

ஈரும் வேல்முருகன் இவ்வகை கூறி
     வீர வாகுவை விடுத்திளை யோரைச்
          சார தத்தலைவர் தம்முடன் ஏவி
               நார தற்கிது நவின்றருள் செய்வான். ......    71

(கேட்டி யான்முனி)

கேட்டி யான்முனிவ கேழ்கிளர் சிம்புட்
     கூட்ட மீதுசில கோளரி மேவின்
          வாட்ட வல்லனகொல் மாய்குவ தல்லால்
               காட்டு வாமுடிவு காண்டிய தென்றான். ......    72

(குமரன் நல்குவிடை)

குமரன் நல்குவிடை கொண்டு படர்ந்தே
     விமல வாலுணர்வின் மேதகு வீரன்
          சிமைய மேருநிகர் திண்சிலை ஒன்றை
               அமரர் கோன்புகழ அங்கை பிடித்தான். ......    73

(வீக்கி னன்கவசம்)

வீக்கி னன்கவசம் வெந்நிடை தன்னில்
     தூக்கி னன்பகழி பெய்திடு தூணி
          நீக்க மில்விரலின் நீடுகை தன்னில்
               தாக்கு கோதையொடு புட்டில் தரித்தான். ......    74

(சேம வெம்படை)

சேம வெம்படை செறிந்திடு வைய
     மாம ருங்கினில் வரம்பில செல்லத்
          தோமில் வீரமிகு தோளினன் அங்கோர்
               ஏம மாமிரதம் ஏறினன் மாதோ. ......    75

(எட்டு வீரரும்)

எட்டு வீரரும் இலக்கரும் ஏனை
     மட்டில் பூதகண மன்னரு மாக
          ஒட்டி ஆடமர் உருக்கொடு கொண்மூ
               முட்டு தேர்த்தொகையின் மொய்ம்பொடு புக்கார். ......    76

(தேரின் மேற்படு)

தேரின் மேற்படு சிறப்புடை வீரர்
     வீர வாகுவை விரைந்தயல் சூழ்ந்தார்
          நேரில் ஆயிர நெடுங்கதிர் ஒன்றைச்
               சூரர் தந்தொகுதி சுற்றிய வாபோல். ......    77

(விரசி யேயமர்)

விரசி யேயமர் விளைத்திட வெஞ்சூர்
     அரசன் மாநகரின் ஆயிர வெள்ளம்
          பரிச னங்கள்படர் மின்கடி தென்னா
               முரச றைந்தனர்கள் ஆயிடை மொய்ம்போர். ......    78

(அறைந்த காலை)

அறைந்த காலைதனில் ஆயிர வெள்ளம்
     நிறைந்த பூதர்நெடு வேல்முரு கன்பாற்
          செறிந்து போற்றியிட ஏனையர் சென்றார்
               உறைந்த ஆர்கலி உடைந்தது போல. ......    79

(அருத்தி யிற்படரும்)

அருத்தி யிற்படரும் ஆயிர வெள்ளக்
     கிருத்தி மத்தவர் கிளர்ந்திடு தீப்போல்
          உருத்து வேலையின் ஒலித்துயர் ஊழி
               மருத்தின் வன்மைகொடு வந்திடு கின்றார். ......    80

(பைய ராவிறை)

பைய ராவிறை பரித்திடு கின்ற
     வையம் யாவையுமொர் வாகுவின் வைக்குங்
          கையர் காலனை அடுந்தறு கண்ணார்
               வெய்ய ரானவர்கள் யாரினும் வெய்யோர். ......    81

(அரத்த வேணியர்)

அரத்த வேணியர் அடும்படை ஏந்துங்
     கரத்தர் வெங்கழல் கலித்திடு தாளர்
          வரத்தின் மேதகையர் மாயை கடந்தோர்
               உரத்தின் அண்டமும் உடைத்திட வல்லோர். ......    82

(இனைய தன்மையினில் ஈண்)

இனைய தன்மையினில் ஈண்டிய பூதர்
     அனைவ ருஞ்செல அவர்க்கிறை யானோர்
          தனதுதொல் லிளைஞர் தம்மொடு சென்றான்
               வனைக ருங்கழல் வயம்புனை வாகு. ......    83

(செல்ல லுந்திமிலை)

செல்ல லுந்திமிலை செல்லுறழ் பேரி
     கல்லெ னுங்கரடி காகள மாம்பல்
          சல்ல ரிப்பறை தடாரி உடுக்கை
               பல்லி யம்பிற முழங்கின பாங்கர். ......    84

(மாறில்சே னையிடை)

மாறில்சே னையிடை வந்தெழு பூழி
     நீறுபூ சிமுடி நீடிய கங்கை
          ஆறு தோய்ந்தகல் விசும்பிடை ஆடி
               ஏறுகொண் டகொடி ஈசனை யொப்ப. ......    85

(பாய சாரதர் படை)

பாய சாரதர் படைக்குள் எழுந்தே
     ஆய பூழிஅவு ணப்படை தன்னில்
          சேய பூழியொடு சேர்வன தாமுன்
               போயெ திர்ந்தமர் புரிந்திடு மாபோல். ......    86

(பான்மை இன்னன)

பான்மை இன்னன படைப்புற எண்ணில்
     சேனை வெள்ளமொடு திண்டிறல் வாகு
          தூந லம்தவறு சூருறை மூதூர்
               வானு லாம்புரிசை மாடுற வந்தான். ......    87

வேறு

(ஆனதொர் காலையின் அத)

ஆனதொர் காலையின் அதனை நோக்குறீஇத்
     தானவர் ஒருசிலர் தரிப்பின் றோடியே
          சேனையங் கடலினைத் தீர்ந்து வல்லைபோய்ப்
               பானுவின் பகைஞனைப் பணிந்து கூறுவார். ......    88

(மாயிருந் தானைகள்)

மாயிருந் தானைகள் மருங்கு சூழ்ந்திட
     நீயமர் செயவரு நிலைமை நாடியே
          வேயென முந்திவண் மேயி னான்றனை
               ஏயினன் குமரவேள் நிகழ்ச்சி ஈதென்றார். ......    89

(மற்றிவை அவுணர்)

மற்றிவை அவுணர்கோன் மதலை கேட்டலுங்
     கற்றையங் கதிர்மணிக் கடகக் கையினை
          எற்றினன் முறுவல்செய் தெயிறு தீயுகச்
               செற்றமொ டுயிர்த்திவை செப்பல் மேயினான். ......    90

(இருந்திடு பாலனை)

இருந்திடு பாலனை என்னொ டேபொர
     விரைந்தெதிர் தூதனை வியன்ப தாதியாய்ப்
          பொருந்திய பூதரைப் போர்க்க ளத்தியான்
               துரந்திடு கின்றனன் தொலைந்து போகவே. ......    91

(அந்தர வரைப்பினில்)

அந்தர வரைப்பினில் ஆசை யெட்டினில்
     வந்திடும் அளக்கரின் மற்றை நேமியில்
          கந்தனும் ஒற்றனுங் கணங்கள் யாவருஞ்
               சிந்தினர் வெருவியே திரியக் காண்பனால். ......    92

(புன்மைய ராகிய)

புன்மைய ராகிய பூதர் சேனையும்
     வன்மையில் தூதனும் மழலைப் பிள்ளையுந்
          தொன்மிடல் ஒருவியே தொலைந்து போகினும்
               என்மன வெகுளியும் ஏகற் பாலதோ. ......    93

(விடுகிலன் அவர்தமை)

விடுகிலன் அவர்தமை மேலை ஏழ்பெருங்
     கடல்திசை முழுவதுங் கடந்து செல்லினும்
          புடையது சுற்றியே போக்கு றாதிவண்
               கொடுவரு கின்றனன் குறுகிப் பற்றியே. ......    94

(மேவலில் அவர்தமை)

மேவலில் அவர்தமை மேலை நம்பெருங்
     காவலன் முன்புறக் காட்டி இவ்விடைத்
          தேவர்கள் தம்மொடுஞ் சிறையில் வீட்டுவன்
               ஏவரும் எனதுசீர் இறைஞ்சி ஏத்தவே. ......    95

(என்றிவை பற்பல இசை - 1)

என்றிவை பற்பல இசைத்துச் சூர்மகன்
     கன்றிய மனத்தொடு கடிது சேறலுந்
          துன்றிய அவுணர்தந் தொறுமுன் போயின
               பொன்றிகழ் வடமதிற் புதவு நீங்கியே. ......    96

(ஆனதொர் காலையின் அடை)

ஆனதொர் காலையின் அடையும் பூதவெஞ்
     சேனையின் ஆற்றலுந் திறலுங் கண்ணுறீஇத்
          தானவர் கூறுவார் சமர்கண் டோடிய
               வானவர் அன்றிவர் வலியர் போலுமால். ......    97

(என்னினும் இங்கிவர்)

என்னினும் இங்கிவர் எம்மொ டேபொரும்
     வன்மையும் உடையரோ வரம்பில் குன்றெலாம்
          பொன்மலை அதனொடு பொருவ தேயினும்
               மின்மினி கதிரினும் விளங்க வல்லதோ. ......    98

(என்றிவை போல்வன)

என்றிவை போல்வன இணையில் தானவர்
     ஒன்றல பலபல உரைத்து வெஞ்சினங்
          கன்றிய அழல்விழிக் கணத்தின் சேனைநேர்
               சென்றனர் தெழித்தனர் சிலைத்த பல்லியம். ......    99

(வயிர்த்திடு பூதர்கள்)

வயிர்த்திடு பூதர்கள் மறலி என்றுல
     கயிர்த்திடும் அவுணரை நோக்கி அம்புவி
          உயிர்த்தொகை அலைத்தவர் உவர்கொ லோவெனாச்
               செயிர்த்தனர் இடித்தனர் தீயின் வெம்மையார். ......    100

(கரையறு தானவர்)

கரையறு தானவர் தாமுங் காய்கனல்
     புரைதரு சூர்விழிப் பூத வீரரும்
          ஒருவரின் ஒருவர்போர் உடன்று சேறலான்
               இருவகை அனிகமும் இகலின் ஏற்றவே. ......    101

(தந்தியின் கரங்களின்)

தந்தியின் கரங்களின் தண்டம் ஈந்திடா
     வந்தெதிர் தெம்முனை மாய்ந்து வீடுறச்
          சிந்துதி யெனுங்குறி செப்பிப் பூதர்மேல்
               உந்தினர் மீமிசை உலப்பில் தானவர். ......    102

(பகைத்திடு பூதர்கள்)

பகைத்திடு பூதர்கள் பலரும் நாடியே
     திகைத்திவை யாவெனச் சிந்தித் தையுறத்
          தகைத்தடந் தாளவை தரையின் பாற்படா
               துகைத்தனர் பரியெனும் ஓத வேலையே. ......    103

(காரிடைச் சென்றெ)

காரிடைச் சென்றெனக் களிற்றி னுந்திரை
     நீரிடைச் சென்றென நீடு மாவினும்
          போரிடைச் சென்றனர் புறத்துப் போற்றியே
               தேரிடைச் சென்றனர் வரையிற் சென்றென. ......    104

(அடுகரி நிரையினை)

அடுகரி நிரையினை ஆடல் மாக்களைத்
     தடநெடுந் தேர்களைத் தணப்பி லாவகை
          கடலினை வளைந்திடு கரைய தாமெனப்
               புடைதனில் சுற்றியே புவியின் ஏகினார். ......    105

(அத்திறம் எதிர்ந்திடும்)

அத்திறம் எதிர்ந்திடும் அவுணர் பூதர்மேல்
     முத்தலை வேற்படை முசுண்டி தோமரஞ்
          சத்தியொ டெழுமழுத் தண்ட மேமுதல்
               எத்திறப் படைகளும் எடுத்து வீசினார். ......    106

(கரங்கொடு பெரும்)

கரங்கொடு பெரும்படைக் கலங்கள் யாவையும்
     பரங்கொடு வீசிய பதகர் உட்கிட
          மரங்கொடும் எழுக்கொடும் வரைகொ டுந்தம
               துரங்கொடும் வீசினர் உலைவில் பூதரே. ......    107

வேறு

(செறிந்து நேர்ந்து)

செறிந்து நேர்ந்து செருச்செயும் எல்லையின்
     இறந்த தானவர் எண்ணிலர் ஆவிபோய்த்
          தறிந்த தாளுந் தலையுங் கழலுமாய்
               மறிந்த சாரத ரும்வரம் பில்லையால். ......    108

(மாண்ட சாரதர்)

மாண்ட சாரதர் யாக்கையும் மண்மிசை
     வீண்ட தானவர் மெய்களுஞ் செங்களம்
          யாண்டு மாகி இருங்கரை போலுற
               நீண்ட நேமியின் நின்றது சோரிநீர். ......    109

(விரவு பூதர் வெகு)

விரவு பூதர் வெகுண்டுசென் றொன்னலர்
     இரத மோடிர தங்களை எற்றினார்
          கரிக ளாற்கரி யின்தொகை காதினார்
               பரிக ளோடு பரிகளை மோதினார். ......    110

(ஆளை யாள்கொ)

ஆளை யாள்கொண் டடர்த்தனர் ஆங்கவர்
     தோளை யேதம தோள்கொடு தாக்கினார்
          தாளி னால்அவர் தந்தலை சிந்தினார்
               கோள ரித்தொகை மான்அடுங் கொள்கையார். ......    111

(ஏற்ற சாரதர்)

ஏற்ற சாரதர் எற்றிடத் தானவர்
     ஊற்றம் இன்றி உடைதலும் அவ்வழிக்
          காற்றொ டங்கி கலந்தன்ன காட்சியான்
               ஆற்ற லாளன் அனலிகண் டானரோ. ......    112

(கையின் மேயின)

கையின் மேயின கார்முகம் ஒன்றுதன்
     மொய்யின் வாங்கி முரண்கெழு நாணொலி
          செய்ய லோடுமத் தேவர் வெருக்கொளா
               ஐய கோவென் றலக்கணுற் றாரரோ. ......    113

(நாரி யார்ப்பு)

நாரி யார்ப்பு நணுகலும் நாற்படை
     மூரி யார்ப்பு முகிலுடை ஆர்ப்பெனும்
          பேரி யார்ப்பும் பிறங்கு பெருங்கடல்
               வாரி யார்ப்புந்தம் வாய்மடிந் திட்டவே. ......    114

(கொற்ற வில்லி)

கொற்ற வில்லிற் கொடுங்கனல் வெங்கணை
     முற்று மாரியின் முத்திறந் தூண்டலுஞ்
          செற்று பூதர்தம் மொய்ம்பினுட் சென்றன
               புற்றி னூடு புகுந்திடு பாந்தள்போல். ......    115

(அங்கி மாப்படை)

அங்கி மாப்படை ஏவலும் அவ்வழிச்
     சிங்கன் என்னுந் திறல்கெழு சாரதன்
          எங்கண் உய்தி இறந்தனை ஈண்டெனாப்
               பொங்கு சீற்றம் புகுந்தனன் புந்திமேல். ......    116

(நேர்கொண் டார்த்து)

நேர்கொண் டார்த்து நெடுந்தகை தீயவன்
     தேர்கொண் டார்க்குந் திறற்பரிச் சேக்கையின்
          பார்கொண் டார்ப்பப் பரூஉத்தடக் கைதனில்
               தார்கொண் டார்த்திடுந் தண்டினிற் சாடினான். ......    117

(சாடும் எல்லை)

சாடும் எல்லையிற் சாரதி உந்திய
     ஆடல் வாம்பரி ஆவி யுலந்திட
          ஓட லின்றி இரதமங் குற்றதால்
               நீடு கின்ற நிலைப்படு தேரென. ......    118

(மாக்க ளுற்ற)

மாக்க ளுற்ற மடிவினை நோக்கியே
     தீக்க னற்பெய ரோன்சின மேற்கொளாத்
          தாக்க ணங்குறு தாழ்சிலை வாங்கியே
               ஏக்கள் பூட்டி இதுவொன்று கூறுவான். ......    119

(தடுக்கொ ணா)

தடுக்கொ ணாஇச் சரஞ்சொரிந் துன்னுயிர்
     படுத்து வானவர் பார்த்திடத் தென்றிசை
          விடுக்கி லேனெனின் வெஞ்சம ரத்திடை
               எடுக்கி லேன்சிலை யானெனக் கூறினான். ......    120

(சூளிவ் வாறு புகன்று)

சூளிவ் வாறு புகன்று தொலைவிலா
     வாளி யான்மிசை அங்கியின் பேரினான்
          கோளி யார்பய னாமெனக் கூற்றுறழ்
               வாளி தூண்டி மறைத்தனன் மேனியே. ......    121

(மறைய வேயுடல்)

மறைய வேயுடல் வாளிகள் தூண்டவும்
     இறையும் உன்னலன் இன்னலுற் றாழ்கிலன்
          பொறையி னோடு பொருக்கெனப் போகியத்
               தறையின் நின்ற சயந்தனத் தேறினான். ......    122

(நீர்மு கந்த நெடுமுகி)

நீர்மு கந்த நெடுமுகி லாமெனத்
     தேர்மு கந்தனில் தீயவன் ஏந்திய
          கார்மு கந்தனைக் கைக்கொடு வாங்கியே
               பார்மு கத்துப் பதைப்புற வீசலும். ......    123

(வலக்கை யாலொரு)

வலக்கை யாலொரு வான்கதை பற்றியே
     சிலைக்கை ஈர்த்திடுஞ் சிங்கனைத் தீயினான்
          தலைக்கண் மோதலுந் தானவர் ஆர்த்தனர்
               கலக்க முற்றனர் கண்டஅத் தேவரே. ......    124

(அடித்த தண்டொ)

அடித்த தண்டொ டனலிதன் கைத்தலம்
     பிடித்து மற்றொர் பெருங்கையி னாலவன்
          தடித்த மார்பத் தடவரை சாய்ந்துக
               இடிப்பின் மும்மை இசைத்திட எற்றினான். ......    125

(எற்ற வெய்யவன்)

எற்ற வெய்யவன் எல்லையில் துன்புறச்
     செற்ற மிக்கெழுஞ் சிங்கனுஞ் செங்கையில்
          பற்று தண்டத் தொடுமப் பதகனைச்
               சுற்றி வானந் துணுக்குற ஆர்த்தனன். ......    126

(மாறி லாத அவுண)

மாறி லாத அவுணனை வன்கையால்
     சூறை போலவச் சிங்கன் சுலவலும்
          ஈறில் பித்தினி லேமரு வோன்மிகத்
               தேற லார்ந்தெனத் தேற்றமின் றாயினான். ......    127

(ஆர ழற்பெயர் அண்ணல் அறி)

ஆர ழற்பெயர் அண்ணல் அறிவொரீஇச்
     சோரும் எல்லையில் துண்ணென ஏறிய
          தேரை விட்டுத் திறலரிப் பேரினான்
               பாரின் எற்றப் பதைப்பொடு துஞ்சினான். ......    128

வேறு

(அண்டருந் திறலின்)

அண்டருந் திறலின் மிக்க அனலிஅங் கிறந்த வண்ணங்
     கண்டனன் கவலா வுள்ளம் அழலெனக் கறங்கு கண்ணான்
          சண்டன்என் றுரைக்கும் பேரோன் தடுப்பரும் படைகள் தன்கை
               கொண்டிவன் உயிரை இன்னே குடிப்பனா லென்று சென்றான். ......    129

(என்றதோர் மாற்ற)

என்றதோர் மாற்றங் கேளா எரிவிழித் திடியின் நக்குப்
     பொன்றிய அனலி யங்கைப் போர்கெழு தண்டம் வாங்கிச்
          சென்றனன் விரைவில் அன்னான் தேர்மிசைப் பாய்ந்து நீலக்
               குன்றெனும் வயிரத் தோள்மேற் புடைத்தனன் கூற்றம் உட்க. ......    130

(புடைத்தலும் உயிர்)

புடைத்தலும் உயிர்த்து நெஞ்சம் பொம்மெனப் பொரும லெய்தித்
     தடப்பெருந் தேரில் வீழுஞ் சண்டனும் தனது செங்கை
          எடுத்ததோர் தண்டந் தன்னால் எதிர்புகுஞ் சிங்கன் மார்பத்
               தடித்தனன் அவனுந் தானும் ஆரஞர் உழந்து வீழ்ந்தான். ......    131

(அப்பொழு ததனை)

அப்பொழு ததனை நோக்கி அவுணரின் மாயன் என்போன்
     குப்புறு தடந்தே ரோடுங் குறுகலும் பூதர் தம்மின்
          ஒப்பிலா நீலன் நேர்போய் ஓச்சினன் கதையொன் றண்ணல்
               முப்புரம் அதனில் தூண்டு மூரிவான் பகழி யென்ன. ......    132

(போந்ததோர் தண்ட)

போந்ததோர் தண்ட மாயன் பொருவகல் மார்பில் தாக்க
     மாய்ந்தனன் போல நின்று வருந்திமற் றவன்றன் பாணி
          ஏந்துமுத் தலைவேல் ஒன்றை எறிந்தனன் எழிலா கத்தில்
               சாய்ந்தது குருதி நீலன் தானுமங் கயரா நின்றான். ......    133

(சிறிதுபோழ் ததனில்)

சிறிதுபோழ் ததனில் தேறித் திரண்மணிக் கடகஞ் சேர்த்த
     எறுழ்வலித் தடக்கை தன்னால் எதிர்ந்தவன் உரத்தின் எற்ற
          அறைகழல் மாயன் தானும் அணங்குற நீலன் என்போன்
               கறைகெழு நாக மென்னக் கனன்றிது கருதிச் செய்வான். ......    134

(மந்தரந் தழீஇய)

மந்தரந் தழீஇய தொல்லை வாசுகி யென்ன மாயன்
     சுந்தரத் தடம்பொற் றோளைத் துணைக்கையால் தொடர்ந்து வீக்கிக்
          கந்தரந் தன்னில் தீய கறைசெறி எயிற்றில் கவ்வி
               முந்துறு குருதிச் செந்நீர் குடித்தனன் மொய்ம்பி னோடும். ......    135

(சோரிய துண்டு நீலன்)

சோரிய துண்டு நீலன் தொல்சினந் துறந்து நின்றான்
     ஆருயிர் உண்டு போனான் அந்தகன் அனைய காலை
          மூரிவில் தடக்கை மாயன் முடிந்தனன் சண்டன் சிங்கன்
               பேரஞர் உழந்தோர் தேறிப் பின்னும்போர் புரிய லுற்றார். ......    136

(கிட்டினர் தடந்தேர்)

கிட்டினர் தடந்தேர் மீது கிடந்ததண் டேந்திக் கீழ்போய்
     ஒட்டினர் ஒருவர் தம்மின் ஒருவர்மேல் உடன்று பொங்கி
          முட்டினர் இரண்டு பாலின் முறைமுறை பெயர்ந்தார் மொய்ம்பால்
               வட்டணை திரிந்து தண்டில் தாக்கினார் மாற்று கின்றார். ......    137

(இங்கிது போல)

இங்கிது போலப் பல்வே றியற்கையிற் கதையின் வெம்போர்
     சிங்கனுஞ் சண்டன் தானுஞ் செய்தனர் திரிந்த வேலைப்
          பொங்கிய பூதர் வேந்தன் பொருவரும் அவுணன் பொன்னார்
               அங்கையில் தண்டஞ் சிந்த அடித்தனன் அணிப்பொற் றண்டால். ......    138

(வயிர்த்திடு தண்டம்)

வயிர்த்திடு தண்டம் அங்கண் வலிகெழு சிங்கன் மோத
     அயிர்த்தொகை ஆத லோடும் ஆற்றல்சேர் அவுணர் யாரும்
          உயிர்த்தனர் என்கொ லாமென் றுன்னினர் உருமே றென்னச்
               செயிர்த்தனன் சண்டன் என்னுஞ் செருவலான் உரைக்க லுற்றான். ......    139

(தண்டமொன் றிற்ற)

தண்டமொன் றிற்ற தென்று தருக்கலை தடம்பொற் றோளாக்
     கொண்டதும் அஃதே அன்றோ கூற்றுவன் நகரும் மேலை
          அண்டமும் உலையத் தொன்னாள் அடர்த்தனன் உனக்கிங் கஞ்சேன்
               மண்டமர் புரிதி என்னா வலிகெழு கரங்கொண் டேற்றான். ......    140

(ஏற்றனன் இகலும்)

ஏற்றனன் இகலும் வேலை எரிசினங் கடவிச் சிங்கன்
     ஆற்றலை யாங்கொல் நீயென் றாற்றலை அணிபொற் றண்டம்
          போற்றுகென் றுய்ப்ப அங்கட் புகாநெறி புடைத்துக் கையால்
               கூற்றனும் உட்க ஆர்த்தான் குருமணித் திரள்தோள் கொட்டி. ......    141

(அந்நெடுந் தகையோன்)

அந்நெடுந் தகையோன் ஆர்ப்ப அதுபொறா தழன்று சிங்கன்
     பொன்னெடுந் தண்டால் அன்னான் புயமிறப் புடைத்த லோடுங்
          கன்னெடுந் தோளும் ஓர்சார் கதுமென முரியத் தண்டும்
               பன்னெடுந் துணியாய்ச் சிந்திப் படிமிசைக் கிடந்த தன்றே. ......    142

(புயந்தளர்ந் திடலு)

புயந்தளர்ந் திடலுஞ் சண்டன் போவது கரமென் றுன்னா
     அயர்ந்திலன் ஒசிபொற் றோளை அங்கையின் இறுத்து வாங்கி
          வயங்கெழு தண்டிற் பற்றி வட்டணை புரிந்தான் வானோர்
               வியந்தனர் இவனே கொல்லாம் வீரருள் வீரன் என்றே. ......    143

(கரங்கெழு புயப்பொற்)

கரங்கெழு புயப்பொற் றண்டால் கார்கெழு சண்டன் காமர்
     உரங்கெழு உரத்தின் மோத உருகெழு மடங்கற் பேரோன்
          இரங்கிலன் உவன்போல் யானும் எற்றலன் கரங்கொண் டென்னாச்
               சரண்கொடே அவன்றன் ஆகத் தடவரை அதனைச் சாய்த்தான். ......    144

(கண்டகன் சாய்த)

கண்டகன் சாய்த லோடுங் கரமெடுத் தார்த்து வானோர்
     புண்டருங் குருதிச் செங்கட் பூதநா யகநீ அன்றேல்
          சண்டனை உதைப்பார் யாரே தாழ்த்திடல் அவன்றன் ஆவி
               கொண்டருள் இறையின் என்று குறையிரந் தறைய லுற்றார். ......    145

வேறு

(வானவர் உரைகேளா)

வானவர் உரைகேளா மறலியொ டிகல்வெங்கண்
     தானவன் இவனேஎன் தனிஉயிர் அடுகிற்பான்
          ஈனம துறுதேவர் இவனொடு நுமையின்றே
               ஊனுடல் உயிரோடும் உண்குவன் அதுகாணீர். ......    146

(என்னலும் இகல்)

என்னலும் இகல்சிங்கன் எரிகலுழ் விழியான்என்
     முன்னிது புகல்கின்றாய் முடிகுவை இனியென்னாக்
          கொன்னவில் தருகையால் கொடிறுடை தரமோத
               ஒன்னலன் அதுபோழ்தின் ஒலிமுகி லெனவீழ்ந்தான். ......    147

(போழுறு பகுவாயில்)

போழுறு பகுவாயில் பொலிதரும் எயிறோடும்
     வீழுறு நகையாலும் விரிகுரு தியினாலுந்
          தாழுறு மதிதன்னைத் தாரகை நிரைசூழ
               ஊழுற அமர்செவ்வான் ஒத்ததவ் வுழியன்றே. ......    148

(சண்டனும் இறலோடும்)

சண்டனும் இறலோடும் சமன்விட வருதூதர்
     அண்டலர் வெருவாமுன் அலமரல் உறுகின்றார்
          கண்டனன் அதுசிங்கன் கையன துயிர்தன்னைக்
               கொண்டணை குதிரென்னக் குறுகினர் அதுகொண்டார். ......    149

(ஆனதொர் செயல்பாரா)

ஆனதொர் செயல்பாரா அசமுகன் எனவோதும்
     மானவன் இறைநில்நில் வந்துன துயிர்உண்பல்
          ஏனைய ரெனவேநீ எண்ணலை எனையென்னாக்
               கானிமிர் தருதேர்மேற் கடுவிசை யொடுசென்றான். ......    150

(சிங்கன தெதிர்செல்லு)

சிங்கன தெதிர்செல்லுஞ் செல்லுறழ் பகுவாயான்
     அங்கணு கிடும்வேலை அதிபல மதுவென்போன்
          எங்கினி அகல்வாய்நீ இற்றனை இவண்என்னாப்
               பொங்கிய சினமோடும் பொள்ளென விடைபுக்கான். ......    151

(செந்தழல் புரை)

செந்தழல் புரைவெங்கட் டிறல்அச முகன்என்போன்
     முந்துற மதுவென்னும் மொய்ம்பினன் எதிர்கோடல்
          அந்தக னொடுகாலன் அமர்புரி தரவேமுன்
               வந்தெதிர் எதிர்தன்மை மானுவ தெனலாமால். ......    152

(அணுகினர் இருவோரும்)

அணுகினர் இருவோரும் அசமுகன் அதுகாலைக்
     குணநனி சிலைகொள்ளக் குலவிய சிலைகொள்ளாக்
          கணிகையர் மிளிர்வேற்கட் கடைநில வியதென்ன
               நுணுகிய நுதிவெங்க ணோன்கணை சிதறுற்றான். ......    153

(முன்னது வரலோடும்)

முன்னது வரலோடும் முகனுறு செயலோரான்
     துன்னுபு செறிபோழ்துந் துணைவிழி இமையாதான்
          தன்னிலை இறையேனுந் தவிர்கிலன் ஒருதானே
               அந்நிலை தனில்நின்றான் அடுதிறல் முயல்கின்றான். ......    154

(பாலுற நிமிர்கின்ற)

பாலுற நிமிர்கின்ற பழுமர மதுபற்றா
     மேலுறு சரம்வீசான் விடுகணை படமெய்யில்
          சாலிகை யெனநின்றான் தகுவன திரதத்தில்
               காலென விசைசென்றே கருமுகி லெனஆர்த்தான். ......    155

(ஆர்த்தனன் அதுகேளா)

ஆர்த்தனன் அதுகேளா அசமுகன் அயர்வெய்தித்
     தேர்த்தனில் நிலமீதிற் சிலையொடு கணைசிந்தி
          வேர்த்தனன் வறிதுற்றான் விம்மினன் மெலிதன்மை
               பார்த்தனன் மதுவென்போன் இவையிவை பகர்கின்றான். ......    156

(வீரனும் அலை)

வீரனும் அலைஎஞ்சா வெஞ்சமர் வலன்எய்தச்
     சூரனும் அலைநின்றே சூர்நிலை அதுகாணுந்
          தீரனும் அலைஎன்னே செருமுய லுதிநீநின்
               ஆருயிர் கொடுபோகென் றவனியின் மிசைபோனான். ......    157

(பாரிடன் நிலன்மேவ)

பாரிடன் நிலன்மேவப் பகர்அச முகன்என்னும்
     பேருடை யவன்வெள்கிப் பெருமிதம் இலனாகிப்
          போரிடை வெருவுற்றேன் எனவொரு புரையுற்றேன்
               ஆரிடை யிதுதீர்வ னெனஅல மருகின்றான். ......    158

(ஆயிடை அவுணன்)

ஆயிடை அவுணன்தான் அமர்புரி கிலனாகிப்
     போயினன் அவன்அந்தோ பொன்றுதல் இனிதென்னாக்
          காயமொ டுளமானக் கனல்சுட மனம்வேவத்
               தீயென வெகுளுற்றான் செருமுயல் திறல்பெற்றான். ......    159

(ஒல்லையின் அவன்)

ஒல்லையின் அவன்ஏகி யுழிதனி தொடராநிற்
     கொல்லுவன் இனியாண்டுக் குறுகினும் அகலாதே
          நில்லுநில் லெனவாரா நீனிற முகிலென்னச்
               செல்லுறழ் பகுவாயால் திசைசெவி டுறஆர்த்தான். ......    160

(அற்றமில் மதுவென்)

அற்றமில் மதுவென்போன் அசமுகன் உரைகேளாக்
     கற்றதும் உளகொல்லோ கழறினை சிலவீரம்
          பெற்றிலை யெனைநாடிப் பெயருதல் பிழையேனும்
               உற்றனை இசையெற்கோர் உறுபழி தருகின்றாய். ......    161

(என்றிது புகல்கின்றோன்)

என்றிது புகல்கின்றோன் எதிருற இகலிப்போய்ப்
     பொன்றிகழ் சிலைகோலிப் பொறியுமிழ் பிறைவாளி
          ஒன்றல பலவுய்ப்ப உருகெழு சினமெய்தி
               நின்றனன் அவையாவும் நெடியகை கொடுவீசி. ......    162

வேறு

(வைத்தலைப் பகழி)

வைத்தலைப் பகழிமேல் விடுப்ப மாமது
     எய்த்திலன் இறையுமென் றெண்ணி எண்ணலன்
          முத்தலைக் கழுவயின் முசலம் ஆதியாங்
               கைத்தலப் படையெலாஞ் சிதறுங் காலையே. ......    163

(சாரதன் மெய்யுற)

சாரதன் மெய்யுறத் தளர்ந்து தானவன்
     தேரினை விரைந்துதன் செங்கை யாலெடா
          வாரிதி மேற்செல விடுப்ப வஞ்சகன்
               பாரிடை ஒல்லையிற் பாய்ந்து மேயினான். ......    164

(குப்புறு கின்றவன்)

குப்புறு கின்றவன் கூளி வேந்தன்முன்
     வெப்பமொ டணுகுறா வீங்கு தோளினால்
          துப்புறு மற்றொழில் தொடங்க வானகத்
               தப்புறம் அவன்செல அடிகொண் டோச்சினான். ......    165

(வெய்தென இறந்து)

வெய்தென இறந்துவான் மீண்டு பூதன்முன்
     எய்தினன் அவனுரத் திடியின் எற்றியே
          வைதனன் போயினன் மறைந்து மற்றொரு
               கைதவம் நினைந்தனன் ககனம் புக்குளான். ......    166

(வரந்தனிற் பெற்ற)

வரந்தனிற் பெற்றதோர் மாயன் நேமியைக்
     கரந்தனில் எடுத்தனன் கருத்தில் அர்ச்சனை
          புரிந்தனன் தொழுதனன் போற்றிப் பூதன்மேல்
               விரைந்துற விடுத்தனன் விளியுந் தன்மையான். ......    167

(மாசுறும் அசமுகன்)

மாசுறும் அசமுகன் மதுவின் ஆகமேற்
     பாசனம் வியப்பமால் பரிதி உய்த்தலும்
          காசினி அவன்வெறுங் கரத்தன் ஆதலின்
               வீசிய அப்படை வெகுண்டு மீண்டதே. ......    168

(கனையிருள் உருவி)

கனையிருள் உருவினைக் கனலி சேர்ந்தென
     முனைகெழும் அசமுகன் முடியை அட்டதால்
          தனதுகை நேமிதன் னால்உ றாததோர்
               வினையிலை என்பது மெய்மை போலுமால். ......    169

(உலந்தனன் அசமுகன்)

உலந்தனன் அசமுகன் உருமு வீழ்ந்தென
     நிலந்தனில் வீழ்தலும் நின்ற தானவர்
          புலந்தனர் ஆழிமால் புடையிற் போயது
               தொலைந்ததின் றமரெனா அமரர் துள்ளவே. ......    170

(சாற்றிய அவுணர்)

சாற்றிய அவுணர்தந் தலைவர் ஏனையர்
     நாற்றிறப் படையொடு நடந்து தம்முளஞ்
          சீற்றம தாகியே செருவி ளைத்தலும்
               ஏற்றெதிர் சாரதர் இரிந்து போயினார். ......    171

(வெற்றிகொள் தான)

வெற்றிகொள் தானவர் வெகுண்டு போர்செயப்
     பற்றல ராகிய பாரி டத்தவர்
          இற்றனர் வன்மையை இரிந்து போயினார்
               மற்றது கண்டனன் வலிய தண்டகன். ......    172

வேறு

(ஏற்ற மாகும் இலக்க)

ஏற்ற மாகும் இலக்கவில் வீரருட்
     சாற்று பேரிசைத் தண்டகப் பேரினான்
          கூற்றை நேர்வ தொருசிலை கோட்டியே
               மாற்ற லார்மிசை வாளிகள் தூவினான். ......    173

(மின்னு நாரி வியன்)

மின்னு நாரி வியன்சிலை யேசிலை
     துன்னு நாணொலி சூருரு மேற்றொலி
          பொன்னின் வாளி மழைபொழிந் திட்டதான்
               மன்னு தண்டக மாப்பெருங் கொண்டலே. ......    174

(தட்டின் மொய்ம்)

தட்டின் மொய்ம்புடைத் தண்டக மேலையோன்
     விட்ட வாளிகள் வெய்யவர் தானையுட்
          பட்ட காலைப் பரந்தெழு சோரிநீர்
               மட்டி லாத குடிஞையின் வந்ததே. ......    175

(இரதம் இற்றன)

இரதம் இற்றன எண்ணில வண்ணமார்
     பரிகள் பட்டன பற்பல மாமதக்
          கரிகள் பட்ட கணிப்பில எண்ணிலா
               அரிகள் நேர்அவு ணப்படை பட்டதே. ......    176

(இந்த வாறிவர் பட்டி)

இந்த வாறிவர் பட்டிட ஏனையோர்
     நொந்து தம்முயிர் காப்ப நுதலியே
          சிந்தி யேயெண் டிசையினும் பாரினும்
               அந்த ரத்தினு மாய்இரிந் தோடினார். ......    177

வேறு

(தண்டா அவுண)

தண்டா அவுணப் படையிவ்வகை சாய்ந்த வாறும்
     எண்டா னைமள்ளர் பலர்அங்கண் இறந்த வாறும்
          விண்டாழ் கதிரைச் சிறைபூட்டிய வீர வீரன்
               கண்டான் வெகுண்டான் நகைத்தொன்று கழறு கின்றான். ......    178

(மட்டார் தெரியல்)

மட்டார் தெரியல் மகவான்முதல் வானு ளோர்கள்
     எட்டாத சேணில் தொலைவெய்தி இரிந்து போக
          வட்டாடல் செய்த நமரங்களின் றாவி மாண்டு
               பட்டார்கொல் ஈசன் மகன்ஏவு படைகள் தம்மால். ......    179

(எல்லார் கதிரை)

எல்லார் கதிரைச் சிறைபூட்டிய யானும் நிற்க
     ஒல்லார்கள் ஆற்றல் உளராயடும் ஊற்றம் நன்றால்
          கொல்லாது சீற்றம் இலதாய்இகல் கொண்டு றாதேல்
               வெல்லாது கொல்லோ அரிதன்னையும் வேழம் எல்லாம். ......    180

(வாரார் கழற்கால்)

வாரார் கழற்கால் அமராரட மாய்ந்த வெள்ளம்
     ஈரா யிரத்தின் மிகுமல்லதை எஞ்சு றாதால்
          பேராமல் என்பாங் கரின்நிற்பன பேசில் வெள்ளம்
               ஓரா யிரமே இரிகின்ற தொழிந்த தெல்லாம். ......    181

(ஒன்றே வரிவில்)

ஒன்றே வரிவில் ஒருவேன்பிடித் தொன்ன லார்மேற்
     சென்றே அடல்செய் திலன்முன்னமென் சேனை யெல்லாங்
          கொன்றே னியானே பொரவிட்டனன் கூழை தன்னின்
               நின்றேன் இஃதோர் பொருளென்று நினைந்தி லேனால். ......    182

(தீருஞ் செயலை)

தீருஞ் செயலை நினைந்தாவதென் சென்றி யானே
     ஓரொன்று கன்னல் முடிகின்றமுன் ஒன்ன லார்தம்
          பேரின் றெனவே அடுவேனது பெற்றி லேனேல்
               சூரன் குமரன் அலன்யானெனச் சூள்மொ ழிந்தான். ......    183

(பானுப் பகைவன்)

பானுப் பகைவன் இவைகூறிப் பரிதி மான்தேர்
     மானக் கடுங்கோல் வலவன் மரபிற் கடாவச்
          சேனைக் கடலி னுடன்சென்றுதன் செங்கை தன்னில்
               கூனற் சிலையைப் புருவத் தினொடுங் குனித்தான். ......    184

(மேதக்க தன்கை)

மேதக்க தன்கைச் சிலைவாங்கி விளங்கும் வெள்ளி
     சோதிக் கிறையாயுறும் எல்லையிற் சூல்கொள் மேகம்
          மூதக்க பாரிற் சொரிந்தென்ன முனிந்து நேரும்
               பூதப் படைமேற் சரமாரி பொழிதல் உற்றான். ......    185

(பொழிகின்ற காலை)

பொழிகின்ற காலைத் திறன்மேதகு பூதர் நோக்கிக்
     குழிகின்ற கண்ணின் அழல்காலக் குலாச லங்கள்
          ஒழிகின்ற வெற்பு முழுதும்பறித் தொல்லை வீசி
               அழிகின்ற காலத் துருமேறென ஆர்த்து நின்றார். ......    186

(என்றின் பகைஞன்)

என்றின் பகைஞன் தனைப்பூதர்கள் யாரும் வீசுங்
     குன்றம் பலவும் புடைசுற்றக் குறித்து நோக்கி
          ஒன்றங் கதனுக் கொருகோடி ஒண்கோல தாகத்
               துன்றும் படியே முறைதூண்டித் துகள்செய் திட்டான். ......    187

(வண்டூது பூந்தார)

வண்டூது பூந்தாரவன் வாளியின் மாய்ந்த குன்றம்
     நுண்டூளி யாகியது வானிடை நொய்தின் ஏகி
          விண்டூர்க டோறுஞ் செறிகின்றவர் மேனி தோயக்
               கண்டூதி ஆற்றாதவர் விண்ணிடைக் கங்கை புக்கார். ......    188

(தேவுத் தடந்தேர்)

தேவுத் தடந்தேர் ஒருவன்செரு வெல்லை முற்றும்
     மேவிக் கறங்கில் திரிவான்றனி வில்லை வாங்கிக்
          கோவைத் தொடையொன் றினில்ஆயிர கோடி வாளி
               தூவிக் கணத்தின் தொகைமுற்றுந் தொலைவு செய்தான். ......    189

(நன்கா லநீவி மிளிர்)

நன்கா லநீவி மிளிர்கின்ற நறுநெய் தோய்ந்த
     மின்கா லதனின் விரைகின்ற செந்தீயின் வெய்ய
          முன்காலு கின்ற சுடருள்ளன மூன்று கண்ண
               வன்காலன் அஞ்ச அடவல்லன வஞ்சன் வாளி. ......    190

(தோளைத் துணிக்கு)

தோளைத் துணிக்குங் கரத்தோடு துணிக்கு மார்பைத்
     தாளைத் துணிக்கும் எரிகுஞ்சித் தலைது ணிக்கும்
          வாளைத் துணிக்கும் அணிமெய்வயப் பூதர் வாழ்க்கை
               நாளைத் துணிக்கும் அசுரன்விடு நாம வெங்கோல். ......    191

(சூரற் கினிய மகன்)

சூரற் கினிய மகன்வாளி துணித்து வீச
     வீரத்தின் மிக்க கணத்தின்றலை வீழு முன்னர்ச்
          சீருற்ற சோரிப் புனல்சிந்துவ தீயர்சென்ற
               பாரைப் புனிதஞ் செயுந்தன்மை படைத்த தன்றே. ......    192

(பொன்சென் றிலங்கு)

பொன்சென் றிலங்குங் கணைதள்ளலும் பூதர் சென்னி
     மின்சென்ற வானத் தெழச்சோரியு மீதெ ழுந்த
          என்சென் றனையாங் குமரன்படை ஏக லென்னாப்
               பின்சென்று பற்றித் தருவான்றொடர் பெற்றி போலும். ......    193

(எய்யுந் தொழிலு)

எய்யுந் தொழிலுக் கவன்மேலவர் யாவர் எங்கள்
     ஐயன் படையாகிய பூதர்தம் மாற்றல் மொய்ம்புங்
          கையும் வரையுஞ் சிரமுங் கழற்காலும் மார்பும்
               ஒய்யென் றறுக்கும் அவுணன்விடும் ஒன்றொர் வாளி. ......    194

(வானோர் தொகை)

வானோர் தொகையைச் சிறையிட்டவன் மற்றிவ் வாறு
     தானோர் சிலையின் வலியாலடத் தாவில் பூதர்
          ஆனோர் அளப்பில்லவர் மாய்ந்திட ஆற்ற லில்லா
               ஏனோர்கள் யாரும் உடைவார் இவை எண்ண லுற்றார். ......    195

(மின்னும் புகர்வேலவன்)

மின்னும் புகர்வேலவன் அங்குளன் வீர வாகு
     பின்னின்றனன் ஈதுண ரான்பிற ராரு மற்றே
          முன்னின்ற நம்மை இவன்அட்டிடு மொய்ம்பி லேம்யாம்
               என்னிங்கு நிற்ப தெனப்பூதர் இரிந்து போனார். ......    196

(இரிகின்ற பூதர்)

இரிகின்ற பூதர் எவரும் படைக்கீற்றின் நின்ற
     வரிகின்ற தண்டார் அடல்மொய்ம்புடை வள்ளல் பாங்கர்ப்
          பரிகின்ற நெஞ்சத் தொடுசெல்லவப் பான்மை யாவுந்
               தெரிகின்றனன் உக்கிரன் என்பதொர் சேனை வேந்தன். ......    197

(கண்டுக் கிரனாகிய)

கண்டுக் கிரனாகிய பூதன் கனன்று செங்கண்
     விண்டிற் பெரிது நிவப்புற்று விளங்கு பொன்னந்
          தண்டப்படை ஒன்றினை அங்கையில் தாங்கி யேகி
               அண்டத் தவர்கள் புகழத்தனி ஆர்த்து நேர்ந்தான். ......    198

(செற்றத்துடன் உக்கிர)

செற்றத்துடன் உக்கிரன் நேர்புகு செய்கை தன்னைக்
     கற்றைக்கதி ரைத்தளை இட்டவன் கண்டு தன்கைக்
          கொற்றச்சிலை யைக்குனித் தாயிர கோடி வாளி
               முற்றத்துரந் தேயவன் யாக்கையை மூடி ஆர்த்தான். ......    199

(மைக்கின்ற மேனி)

மைக்கின்ற மேனி நெடும்பூதனை வஞ்சன் வாளி
     தைக்கின்றில வானுதி மாய்ந்து தளர்ந்து வீழ்ந்த
          மெய்க்கின்ற இன்பும் அறனும் விளையாது வாளா
               பொய்க்கின்ற வன்கைப் பொருள்வல்லையிற் போவ தேபோல். ......    200

(விடுகின்ற வாளி)

விடுகின்ற வாளி பயனின்றயல் வீழ்த லோடும்
     படுகின்ற தன்மை யதுகண்டனன் பானு கோபன்
          அடுகின்ற தெவ்வாறிவன் றன்னையென் றங்கண் வானந்
               தொடுகின்ற தாங்கோ ரெழுவத்தைச் சுழற்றி விட்டான். ......    201

(தீயன்முச லந்தனை)

தீயன்முச லந்தனை உக்கிரன் செங்கை தாங்கும்
     ஆய்திண்கதை யாற்சிதைத் தேயவன் தேரை அண்மிப்
          பாயும்பரி யைப்புடைத் தொல்லையிற் பாரின் வீட்ட
               வேயென்று பல்காலிகழ்ந் தார்த்தனர் யாரும் வானோர். ......    202

(புரவித் தொகுதி)

புரவித் தொகுதி விளிவாகப் பொருவின் மைந்தன்
     எரியிற் கனன்று புடைஓ ரிரதத்தின் வாவி
          வரிவிற் குனித்துக் கிரன்ஏந்தும் வலிய தண்டம்
               முரிவுற்றிட வேயொரு நூறு மொட்டம்பு தொட்டான். ......    203

(நூறொண்கணை யால்)

நூறொண்கணை யால்அவன் தண்டம்நுண் டூள தாகச்
     சீறுந்திறல் உக்கிரன் கைக்கொடு தீயன் மைந்தன்
          ஏறுந்தடந் தேர்தனை வானின் எடுத்து வீச
               வீறும் பரிதி பதத்தின்துணை மேய தன்றே. ......    204

(துன்னான் மதலை)

துன்னான் மதலை வருகின்றது சூரன் நோக்கி
     முன்னாளின் நின்று நமைப்பற்ற முயன்று ளான்கொல்
          அன்னான் புணர்ப்பை உணரேன்அணித் தாகும் இன்னம்
               என்னா வதோவென் றுளத்துன்னி இரிந்து போனான். ......    205

(தேரோடு சென்ற)

தேரோடு சென்ற அசுரன்மகன் சேணின் மீண்டு
     பாரோடு சேர்வான் வருகின்ற பரிசு நோக்கில்
          காரோடு வானந் தவறுற்றுழிக் காமர் தாருத்
               தூரோடு சாய்ந்து மறிகின்றதொர் தோற்றம் ஒக்கும். ......    206

வேறு

(வீழு கின்றதேர்)

வீழு கின்றதேர் ஒருவியே வெங்கதிர்ப் பகைஞன்
     தாழு மெய்யுடை உக்கிரன் தன்னைவந் தணுகி
          மாழை யொண்கையால் எற்றியே எடுத்துவா னுலகோர்
               ஏழை யுங்கடந் தப்புறஞ் சென்றிட எறிந்தான். ......    207

(எறியும் வெய்யவன்)

எறியும் வெய்யவன் வேறொரு தேரின்மே லேறி
     வெறிகொள் பங்கயத் தண்ணலார் விதித்துமுன் னளித்த
          செறியு மூவிலை இருதலை வேலினைச் சேண்போய்
               மறியும் உக்கிரன் எதிர்புக விடுத்தனன் மன்னோ. ......    208

(விடுத்த தெய்வவேல்)

விடுத்த தெய்வவேல் உக்கிரன் மருமத்தை விடர்போற்
     படுத்தி யேபுகுந் தப்புறம் போந்திடப் பாரின்
          அடுத்து மற்றவன் சிறிதயர் வுற்றனன் அதுகண்
               டெடுத்த குன்றொடுந் தண்டியென் றுரைப்பவன் எதிர்ந்தான். ......    209

(தண்டி யாகிய)

தண்டி யாகிய பாரிடன் தனதுகைத் தலத்தின்
     மிண்டு கின்றதோர் அடுக்கலை அவன்மிசை வீசக்
          கொண்ட வார்சிலை வாங்கி ஆயிரங்கணை கோத்துக்
               கண்ட துண்டம தாக்கினன் அதனையோர் கணத்தில். ......    210

(வெற்பு நுண்டுகள்)

வெற்பு நுண்டுகள் ஆதலும் விண்ணுற நிமிர்ந்து
     கற்ப கம்புரை மராமரம் ஒன்றினைக் களைந்து
          வற்பு றுங்கரந் தனினெடுத் தவுணர்கோன் மணித்தேர்
               முற்பு குந்திடும் பரிகளைப் புடைத்தனன் மொய்ம்பால். ......    211

(மொய்ம்பி னிற்புடை)

மொய்ம்பி னிற்புடைத் திடுதலுங் கவனமா முழுதும்
     அம்பு வித்தலை மறிந்தன அதற்குமுன் அவுணன்
          பைம்பொன் முத்தலைப் பலபதி னாயிரம் பகழி
               செம்பு னற்கொளத் தண்டிதன் நெற்றியுட் செறித்தான். ......    212

(செறித்த காலையின்)

செறித்த காலையின் மெலிந்தனன் தண்டியச் செய்கை
     குறித்து நோக்கியே பினாகியாம் பூதனோர் குன்றம்
          பறித்து வீசுவான் முயறலும் ஆயிரம் பகழி
               நிறத்தின் மூழ்குமா றெய்தனன் அனையனும் நின்றான். ......    213

(குன்று கொண்ட)

குன்று கொண்டகைப் பினாகியுந் தொல்வலி குறைந்து
     நின்ற காலையி லேனைய பூதரும் நேர்ந்து
          சென்று வீற்றுவீற் றமரினைச் சிலபொழு தியற்றி
               ஒன்று தீங்கதிர்ப் பகைஞனுக் காற்றலர் உடைந்தார். ......    214

(எண்ட ருங்கண)

எண்ட ருங்கணத் தலைவர்கள் தொலைதலும் இதனைக்
     கண்டு வெஞ்சினந் திருகியே எதிர்ந்தனர் கபாலி
          அண்ட லோசனன் நிரஞ்சனன் உருத்திரன் அகண்டன்
               தண்ட கன்முதல் இலக்கமா கியபடைத் தலைவர். ......    215

(மிடல்ப டைத்திடும்)

மிடல்ப டைத்திடும் இலக்கமாம் வீரரும் விரவித்
     தடம ணிப்பெருந் தேரொடும் அவுணன்முன் சார்ந்து
          சுடரு டைக்கட கங்கிளர் செங்கையில் துன்னுங்
               கொடும ரத்தினைக் குனித்தனர் நாணொலி கொண்டார். ......    216

(கவடு பட்டிடும்)

கவடு பட்டிடும் ஈரிரு மருப்புடைக் ககுபக்
     குவடு பட்டதை உரைப்பதெ னொருகரிக் கொம்பாற்
          சுவடு பட்டிடு மேருவுஞ் சலித்தது துளங்கிச்
               செவிடு பட்டன வானமும் வையமுந் திசையும். ......    217

(பானு கோபன்மற் றது)

பானு கோபன்மற் றதுகண்டு சிறுநகை படைத்து
     மான வெஞ்சிலை யொன்றினைத் தோள்கொடு வணக்கி
          மேன லந்திகழ் அண்டங்கள் யாவையும் வெருவத்
               தேனின் வீழ்ச்சியை மலைந்திடுங் குணத்தொலி செய்தான். ......    218

(உலத்தின் மேற்படு)

உலத்தின் மேற்படு மொய்ம்புடை இலக்கரும் ஒருங்கே
     வலத்தில் வெஞ்சிலை இடத்தினில் வடிக்கணை தொடுத்து
          நிலத்தில் வந்துகார் நெடும்புனல் சிதறிய நெறிபோற்
               புலத்தி யன்முறைப் பேரன்மேல் தலைத்தலை பொழிந்தார். ......    219

(தொடலை அம்புய)

தொடலை அம்புயத் திலக்கமாம் பொருநருந் தொடுத்து
     விடுச ரத்தொகை அவுணன்மேல் வீற்றுவீற் றேகல்
          நெடிய தெண்டிரைப் பேரியா றெண்ணில நிரந்து
               புடவி கொண்டதோர் அளக்கர்மேற் போவன போலும். ......    220

(இலக்கர் விட்டிடு)

இலக்கர் விட்டிடு சரமெலாம் அவுணர்கள் எவருங்
     கலக்க முற்றிட வருதலுஞ் சூர்மகன் கண்டே
          கொலைக்கொ டுஞ்சிலை வளைத்ததில் ஆயிர கோடி
               விலக்க ருங்கணை தொடுத்தவை அறுத்தனன் விரைவில். ......    221

(அறுத்து மற்றுமோ)

அறுத்து மற்றுமோ ராயிர கோடிஅம் பதனைச்
     செறுத்து விட்டிட அறுமுகன் பரிசனர் தெரிந்து
          விறற்க டுங்கணை யாங்கதற் கெழுமையால் விடுத்து
               மறித்து மீண்டிடு வித்தனர் அவுணர்கோன் வாளி. ......    222

(அறந்தி றம்பிய சூர்)

அறந்தி றம்பிய சூர்மகன் வாளிகள் அனைத்தும்
     முறிந்து மற்றவன் தன்மிசை உற்றன முழங்கிச்
          செறிந்த மாமுகில் உயிர்த்திடுஞ் சீகரஞ் செல்லா
               தெறிந்து கால்பொர வந்துழி மீண்டுபோம் இயல்போல். ......    223

(செங்க திர்ப்பகை சீறியே)

செங்க திர்ப்பகை சீறியே செயிரிலா வயிரத்
     துங்க வெங்கணை அபரித மிசைமிசை துரந்து
          வெங்கண் வீரர்கள் செலுத்திய சரமெலாம் விலக்கி
               அங்கை யிற்கொண்ட கார்முகம் இலக்கமும் அறுத்தான். ......    224

(பிடித்த கார்முகம்)

பிடித்த கார்முகம் அற்றுழி மானவர் பெயர்த்துந்
     தடத்த தேரிடை இருந்திடுஞ் சேமமாந் தனுக்கள்
          எடுத்து வாங்கியே சரந்துரந் திரவியம் பகைஞன்
               தொடுத்து மேல்விடுங் கணைகளை இடையிடை துணித்தார். ......    225

(சூரன் மாமகன் தொடு)

சூரன் மாமகன் தொடுசரந் துணித்தபின் தூண்டுந்
     தேரி லாயிரம் பரியினூ றாயிரந் தெழித்துக்
          காரு லாவரு பதாகையில் ஆயிரங் கடவி
               ஊரும் வன்மைசேர் வலவன்மேல் ஆயிரம் உய்த்தார். ......    226

(வசையில் வீரர்கள்)

வசையில் வீரர்கள் இவ்வகை விடுத்தலும் மனத்திற்
     பசையில் சூர்மகன் இரதமும் பரிகளும் பாகும்
          அசனி கொண்டதோர் துவசமும் அற்றன அதற்பின்
               விசையில் வேறொரு தேரிடைப் பாய்ந்தனன் வெகுண்டு. ......    227

(வைய மேற்செலும்)

வைய மேற்செலும் அவுணர்கோன் தன்சிலை வணக்கிச்
     செய்ய கூர்ங்கணை நூறுநூ றாயிரஞ் செலுத்தி
          ஐயன் விட்டவர் தேரொடு சிலைகளை அறுத்து
               மெய்யி டந்தொறும் அழுத்தினன் எண்ணிலா விசிகம். ......    228

(பரிதி மாற்றலன் பகழி)

பரிதி மாற்றலன் பகழிகள் மெய்யெலாம் பட்டுக்
     குருதி சோர்தலும் இலக்கருந் தொல்வலி குறைந்து
          பெரிது நோயுழந் தாற்றல ராகியே பின்னர்ப்
               பொருதி றந்தனை நினைந்திலர் உடைந்துபின் போனார். ......    229

(வற்பு றுத்திய)

வற்பு றுத்திய இலக்கம்வில் லாளரும் மலைய
     விற்பி டித்தவன் ஒருவனே யாரையும் வென்றான்
          முற்ப கற்புரி தவப்பயன் இஃதென மொழிமோ
               கற்பி னாற்றலென் றுரைத்துமோ கழறுவ தெவையே. ......    230

(ஆன காலையில் வீரகோ)

ஆன காலையில் வீரகோ ளரியென அறையும்
     மான வீரன்மற் றதுகண்டு தனதுவில் வளைத்துப்
          பானு கோபன்முன் னெய்தியே பிறைமுகப் பகழி
               சோனை மாரியும் விம்மித முற்றிடச் சொரிந்தான். ......    231

(சொரிந்த காலை)

சொரிந்த காலையில் அதுகண்டு சூரன்மா மதலை
     சிரந்து ளக்கியே ஈங்கிவன் ஆற்றலுந் திறலும்
          பெருந்த னிச்சிலை விஞ்சையும் நன்றெனப் பேசி
               வரிந்த கார்முகங் குனித்தனன் பனித்தனர் வானோர். ......    232

(குனித்த சாபத்தின்)

குனித்த சாபத்தின் நூறுநூ றாயிர கோடி
     நுனித்த வச்சிர நொறிலுடைப் பகழிகள் நூக்கித்
          தனித்து நேர்ந்தவன் விடுத்திடு சரமெலாந் தடிந்து
               துனித்தி டக்கணை ஆயிரம் அழுத்தினன் தோள்மேல். ......    233

(தோளில் ஆயிரம்)

தோளில் ஆயிரம் வெங்கணை அழுத்தலுந் தோலாக்
     கோள ரித்திறற் பேரினன் கோமகன் துரந்த
          வாளி யாவையும் விலக்கியே ஆங்கவன் மருமஞ்
               சாள ரம்படச் செறித்தனன் ஆயிரஞ் சரங்கள். ......    234

(சரங்கள் ஆயிரம்)

சரங்கள் ஆயிரம் அகலமேல் அழுத்தலுந் தகுவன்
     இரங்கி நோயுழந் தாற்றவும் முனிவுசெய் திவனைக்
          கரங்கொள் வில்லினால் வெல்லரி தாமெனக் கருதி
               உரங்கொள் விண்டுவின் படைக்கலந் தனையெடுத் துய்த்தான். ......    235

(நார ணன்படை)

நார ணன்படை ஆங்கவன் உருக்கொடு நடந்து
     வீர கோளரி விடுத்திடு சரமெலாம் விழுங்கிப்
          பாரும் அண்டமும் நடுக்குற இடிக்குரற் பகுவாய்க்
               காரி ரிந்திட ஆர்ப்பொடு கடிதுசென் றதுவே. ......    236

(விண்டு வின்படை)

விண்டு வின்படை அணுகலும் விறலரி யதனைக்
     கண்டு மால்படை எடுக்குமுன் அப்படை கடிதாய்
          வண்டு லாந்தொடை மார்பிடம் புகுந்துமன் னுயிரை
               உண்ட தில்லையால் அவசமாக் கியதவ னுணர்வை. ......    237

(அண்ணல் ஏந்திடும்)

அண்ணல் ஏந்திடும் வேற்படை ஆணையால் அனையான்
     உண்ணி லாவுயிர் கொளவஞ்சி எருவைநீ ருண்டு
          கண்ண னார்படை சிறிதுதன் வன்மையுங் காட்டித்
               துண்ணெ னப்பின்னர் மீண்டது சூர்மகன் தன்பால். ......    238

(மீண்ட காலையில்)

மீண்ட காலையில் வீரகோ ளரிஅவண் வீழ்ந்து
     மாண்டு ளான்என மயங்கினன் அங்கது வயமார்த்
          தாண்டன் என்பவன் கண்டுதன் தனிச்சிலை குனித்து
               மூண்ட செற்றமொ டணுகினன் கதிர்ப்பகை முன்னர். ......    239

(ஓங்கல் வாகுடை)

ஓங்கல் வாகுடை வீரன்நேர்ந் திடுமுன்ஒண் கையில்
     தாங்கும் வில்லினை அவுணனோ ராயிரஞ் சரத்தால்
          ஆங்க னந்துணித் தாயிரங் கணைநுதல் அழுத்த
               ஏங்கி னார்சுரர் அனையன்வே றொருசிலை எடுத்தான். ......    240

(எடுத்த கார்முகம்)

எடுத்த கார்முகம் வாங்குமுன் இரவியம் பகைஞன்
     தொடுத்து நூறுகோல் அதனையும் ஓரிரு துணியாப்
          படுத்தொ ராயிரம் பகழியால் தேரொடும் பரியை
               முடித்து வாளியோ ரேழுநூ றுய்த்தனன் மொய்ம்பில். ......    241

(தேர ழிந்திடச் சிலை)

தேர ழிந்திடச் சிலையதும் அழிந்திடத் திறல்சேர்
     பேர ழிந்திடத் தனிமையாய் நின்றவன் பிரியா
          ஊர ழிந்திட வறியனாம் பரிதிபோல் உற்றான்
               கார ழிந்திட ஆர்த்தனன் கிளர்ந்தெழுங் கதத்தான். ......    242

(பராக மாப்புவி அகழ்)

பராக மாப்புவி அகழ்ந்திடு பணைமருப் பிரட்டை
     வராக மாயிரத் தாற்றல்பெற் றுடையசூர் மகன்மேல்
          விராக நெஞ்சுடை விறற்கதிர் பாய்ந்தனன் விண்மேல்
               இராகு வின்மிசைத் தினகரன் வாவினா னென்ன. ......    243

(பாய்ந்து திண்டிறல் வெய்ய)

பாய்ந்து திண்டிறல் வெய்யவன் வெய்யவன் பகைஞன்
     ஏந்து வார்சிலை பறித்திரு துணிபடுத் தெறிய
          வேந்தன் மாமகன் வெகுண்டுதன் மருங்கிடை விசித்த
               நாந்த கம்முரீஇக் குற்றினன் மருமத்தின் நடுவண். ......    244

(வீர வெய்யவன் உர)

வீர வெய்யவன் உரமிசைச் செலுத்திய வெங்கட்
     கூரும் வாட்படை வாங்குமுன் ஆங்கவன் குருதி
          சூரி யன்பகை அகலம்வந் துற்றது தூயோன்
               தாரை வாளொன்று மாறுபோய்க் குற்றிய தகவின். ......    245

(குற்றி வாங்குமுன்)

குற்றி வாங்குமுன் வீரமார்த் தாண்டனுங் கொதித்துக்
     கற்றை வெஞ்சுடர்ச் சுரிகையை மருங்குறை கழித்து
          மற்ற வன்மணி மார்பத்து வயிரவான் கவசம்
               இற்றி டும்படி குற்றினன் யாவரும் இரங்க. ......    246

(கிளைத்தி டுந்திறல்)

கிளைத்தி டுந்திறல் வெய்யவன் குற்றலுங் கேடு
     விளைத்த சூர்மகன் தன்னுடைச் சுரிகையால் மீட்டும்
          குளத்தில் மூழ்குறக் குற்றினன் அன்னதோர் குற்றிற்
               களைத்து வீழ்ந்தனன் கால்பொர மறிந்தகற் பகம்போல். ......    247

(தாழ்ந்த சோரியும்)

தாழ்ந்த சோரியும் அலக்கணும் பெருகுறத் தடந்தேர்
     வீழ்ந்த வன்றனை விளிந்தனன் இவனென விடுத்துத்
          தாழ்ந்த தோர்பெருந் தனுவினை எடுத்துழி தன்னிற்
               சூழ்ந்த தானையோ டேற்றனன் சூரியன் பகைஞன். ......    248

(ஏற்று நேர்வரு)

ஏற்று நேர்வரு சூரன்மா மதலையை எதிர்ந்து
     போற்ற லார்புகழ் வீரராக் கதன்எனும் பொருநன்
          காற்றின் வந்தனன் துணைவர்கள் தொலைந்ததுங் கண்டான்
               சீற்றம் உள்ளுற நிமிர்ந்தெழக் குனித்தனன் சிலையை. ......    249

(சிலைகு னித்தொரு)

சிலைகு னித்தொரு பத்துநூ றயிற்கணை தெரிந்தே
     ஒலியு டைக்கழற் சூரன்மா மதலைமே லுய்ப்ப
          விலகி யத்தொகைப் பகழியால் நம்பிதன் வியன்தேர்
               வலவ னைத்தலை துணித்தனன் வாளிநூ றதனால். ......    250

(நூறு வாளியாற் சூதன்)

நூறு வாளியாற் சூதன்மாண் டிடுதலும் நொடிப்பில்
     வேறொர் பாகனை வீரராக் கதன்நிறீஇ வெகுளா
          ஆறு மாமுகன் அடிநினைந் தாயிரங் கணையால்
               கூறு செய்தனன் அவுணர்கோன் குருமணி மகுடம். ......    251

(உவமை நீங்கிய)

உவமை நீங்கிய ஐவகைத் தாயவேற் றுருவின்
     மவுலி இற்றிடத் திருவின்றி மன்றநாண் எய்தி
          அவதி இல்லதோர் பெருஞ்சினம் மூண்டெழ அவுணன்
               குவடி லாமணிக் குன்றுபோல் நின்றனன் குறுகி. ......    252

(மணியி ழந்திடும்)

மணியி ழந்திடும் அரவுபோல் கதிரிலா வான்போல்
     பணையி ழந்திடுங் கற்பகப் பழுமரந் தனைப்போல்
          துணைம ருப்பினை இழந்திடுந் தந்திபோல் தொல்லை
               அணியி ழந்திடு மகளிர்போல் அழகிலன் ஆனான். ......    253

(இற்றொ ழிந்திடு)

இற்றொ ழிந்திடு மகுடநீத் தேவலர் அளித்த
     கற்றை ஒண்சுடர் மவுலியொன் றினைமுடி கவித்து
          வெற்றி வீரராக் கதன்விடு சரமெலாம் விலக்கி
               மற்ற வன்சிலை துணித்தனன் வாளியா யிரத்தால். ......    254

(ஆடல் வெஞ்சிலை)

ஆடல் வெஞ்சிலை அறுத்தலும் வயமுடை அரக்கன்
     நாடி ஓர்தனு எடுக்குமுன் நாகிளங் கதிரை
          வீட ருந்தளை இட்டவன் விசிகமா யிரத்தால்
               பாடு செய்தனன் அனையவன் தனதுதேர்ப் பரியை. ......    255

(மாய்ந்து மாத்தொகை)

மாய்ந்து மாத்தொகை படுதலும் வீரனோர் மணித்தேர்
     பாய்ந்த காலையில் இரவிமாற் றலனவன் பாணி
          ஏந்து வில்லினை ஆயிரம் பகழியால் இறுப்ப
               வேந்தன் மாமகன் தன்மிசை அயிலொன்று விடுத்தான். ......    256

(விடுத்த வேலினை)

விடுத்த வேலினை நூறுகோல் தொடுத்தவன் வீட்டத்
     திடத்தின் மேற்படு வீரராக் கதனது தெரிந்து
          தடத்த தேரினும் இழிந்தறை கூவியே தனிபோய்
               எடுத்தெ றின்தனன் பானுகோ பன்தனி இரதம். ......    257

(எறியும் எல்லையில்)

எறியும் எல்லையில் தகுவர்தங் குரிசில்விண் ணெழுந்து
     வெறிகொள் பங்கயத் தண்ணல்முன் கொடுத்ததோர் வேலைச்
          செறுநன் ஆவியை உண்கென விடுத்தலுஞ் சென்று
               விறல ரக்கன்மேற் பட்டதங் கனையனும் வீழ்ந்தான். ......    258

(தரையில் வீழ்ந்திடும்)

தரையில் வீழ்ந்திடும் வீரராக் கதன்நனி தளர்ந்தான்
     முருகன் ஆணையாற் போந்தில தவனுயிர் முன்னம்
          இரவி யம்பகை திகிரியின் மறிந்துளான் எழுந்து
               பொருதல் வன்மையின் றாகியே இடைந்துபின் போனான். ......    259

(போன காலையில்)

போன காலையில் வேறொரு தேரிடைப் புகுந்து
     பானு மாற்றலன் வணக்கியோர் கார்முகம் பற்றி
          ஊனும் ஆவியுங் கவர்ந்திடு சரமழை ஓச்சி
               ஏனை வீரர்கள் தம்மையும் வெல்லுமா றெதிர்ந்தான். ......    260

(வீர வந்தகன் வீரமா)

வீர வந்தகன் வீரமா மகேச்சுரன் வீர
     தீரன் வீரமா மகேந்திரன் திறற்புரந் தரனாம்
          நேரி லார்இவர் ஐவருஞ் சிலைகொடு நேர்ந்து
               சூரி யன்பகை வன்மிசைக் கணைமழை சொரிந்தார். ......    261

(சொரிந்து வேறுவே)

சொரிந்து வேறுவே றளவையி லாதபோர்த் தொழிலைப்
     புரிந்து பின்னுறச் சூர்மகன் சரங்கள்மெய் புதைய
          வருந்தி நின்றனர் இருவர்கள் மறிந்தனர் ஒருவர்
               இரிந்து தேர்சிலை அழிந்துநொந் தேகினர் இருவர். ......    262

வேறு

(சாற்றும் இத்திறம்)

சாற்றும் இத்திறம் வீரர்கள் யாரையுந் தனிமைந்தன்
     வீற்று வீற்றமர் ஆடியே வென்றிகொண் டிடும்வேலை
          ஆற்ற லின்றிமுன் பின்றிய அவுணர்தா னைகள்முற்றும்
               நாற்றி சைக்கணும் வந்துவந் தவனைநண் ணியவன்றே. ......    263

(பின்று சேனைகள்)

பின்று சேனைகள் யாவையுந் தன்னயற் பெயர்த்தும்வந்
     தொன்ற வேயிர வியம்பகை வருதலும் உதுகண்டான்
          நன்று நன்றிவன் ஆற்றலின் திறமென நகைசெய்தான்
               என்று நந்திதன் கணத்தரில் தலைமைபெற் றிருக்கின்றான். ......    264

(வாகை மொய்ம்புடை)

வாகை மொய்ம்புடை மேலையோன் மாலயன் தனக்கெட்டா
     ஏக நாயகன் திருமகன் தாளிணை இனிதுன்னி
          ஓகை யால்நனி வழுத்தியே போர்த்தொழில் உளங்கொண்டு
               சேகு நெஞ்சுடைப் பானுகோ பன்முனஞ் செலலுற்றான். ......    265

(அரியும் நான்முக)

அரியும் நான்முகத் தொருவனுங் குனித்திட அறத்தேவுஞ்
     சுருதி மாமறைத் தொகுதியுங் குனித்திடச் சுரர்கோவும்
          இரவி அண்ணலும் மதியமுங் குனித்திட இகலாடல்
               திருவும் மோடியுங் குனித்திடக் குனித்தனன் சிலைதன்னை. ......    266

(விசையெ டுத்திடும்)

விசையெ டுத்திடும் ஊதையும் வடவையும் வெருக்கொண்டு
     வசையெ டுத்திட அளக்கருந் தம்மொலி வறிதாகத்
          திசையெ டுத்திடும் அண்டமும் புவனமுஞ் சிதைந்தேமா
               றிசையெ டுத்திட எடுத்தனன் சிலையின்நாண் இசைதன்னை. ......    267

(நாணொ லிக்கொடு வெஞ்)

நாணொ லிக்கொடு வெஞ்சமர் புரியமேல் நடப்பானைக்
     காண லுற்றனன் தினகரற் சினவிய கதக்கண்ணான்
          ஏணு டைப்பெருங் கார்முகம் ஒன்றுவே றெடுத்திட்டான்
               சேணி லத்தவர் பனித்திடக் குனித்தொலி செய்திட்டான். ......    268

(முன்பு திண்டிறல்)

முன்பு திண்டிறல் வாகுவின் வாகுவின் முழக்கத்தை
     அன்பின் நாடிய அமரர்கள் அளவைதீர் மகிழ்வெய்திப்
          பின்பு சூர்மகன் சிலையொலி கேட்டலும் பேதுற்றே
               இன்ப துன்பங்கள் ஒருவழிக் கண்டனம் இவணென்றார். ......    269

(புகழ்ச்சி மேலவன்)

புகழ்ச்சி மேலவன் குணத்தொலி செவிக்கொடு பொலிந்தோர்கள்
     இகழ்ச்சி மிக்கவன் குணத்திசை கேட்டலும் இரங்குற்றார்
          திகழ்ச்சி ஆரமு துண்டவர் நஞ்சமுண் செயல்போன்றார்
               மகிழ்ச்சி ஈற்றினில் துன்புவந் தடைவதோர் வழக்கன்றோ. ......    270

(மாயன் நான்முகன்)

மாயன் நான்முகன் மகபதி முதலிய வானோர்கள்
     காயம் யாவினும் நிரந்தனர் அமர்த்தொழில் காண்பாராய்
          ஆய போழ்தினிற் சூரபன் மாவருள் அசுரேசன்
               தூய வன்தனை நோக்கியே இனையன சொல்கின்றான். ......    271

(கோதை வேலினால்)

கோதை வேலினால் தாரகன் தனையடு குகன் அல்லை
     ஆதி ஏனமாய்ப் புவியினைக் கிளைத்திடும் அரியல்லை
          வேத நான்முகத் தவன்அல்லை விண்ணுளோர் வேந்தல்லை
               தூத னாகிய நீகொல்என் னெதிர்பொருந் தொழில்வல்லாய். ......    272

(இழைத்த மாயையால்)

இழைத்த மாயையால் முற்பகற் போந்தனை எங்கோன்முன்
     பழித்தி றஞ்சில கூறினை இளவலைப் படுத்திட்டாய்
          அழித்தி மாநகர் யானஃ துணர்ந்திலன் அதனாலே
               பிழைத்தி அன்றெனின் உய்ந்திவண் வந்திடப் பெறுவாயோ. ......    273

(பொருது வென்றி)

பொருது வென்றிகொண் டுனதுயிர் நடுவனூர் புகுவிப்பன்
     சரதம் இங்கிது பிறந்திடும் அளவையில் தழல்காலும்
          பரிதி யைச்சிறை பிணித்தவன் ஒற்றனைப் படுத்தானென்
               றொருத னிப்பழி கொள்வதல் லாற்புகழ் உறுவேனோ. ......    274

(முனைமு டித்தநின்)

முனைமு டித்தநின் துணைவரை வென்றனன் முரட்பூதந்
     தனைய டர்த்தனன் சிந்தினன் அனிகமுந் தனினேர்ந்த
          உனைமு டிக்குவன் உனைவிடுத் தோனையும் உலைவித்தென்
               சினமு டிக்குவன் மகபதி தன்னையுஞ் சிறைசெய்வேன். ......    275

(என்ற காலையில் வீரவா)

என்ற காலையில் வீரவா கியம்புவான் எவரேனுஞ்
     சென்று போர்புரி வார்தமை வெல்வதே திறலாகும்
          பின்று வார்தமை அடுவதே வசையலால் பிறிதுண்டோ
               வென்றி எய்துவார் உரைப்பரோ போர்புரி விரைந்தென்றான். ......    276

வேறு

(என்னு மாத்திரத் திர)

என்னு மாத்திரத் திரவியம் பகைஞன்ஈ ரைந்து
     பொன்னெ டுங்கணை எடுத்துவார் சிலையிடைப் பூட்டி
          மின்னு வாமென விடுத்தலும் வீரனும் விரைவில்
               அன்ன ஈரைந்து வாளிதொட் டவற்றினை அறுத்தான். ......    277

(ஆறு நாலுவெம்)

ஆறு நாலுவெம் பகழியும் அறுத்தபின் அறிஞன்
     நூறு வாளிகள் விடுத்தலும் வந்தது நோக்கி
          வீறும் அத்தொகைச் சரங்கள்விட் டவையிடை வீட்டி
               ஈறி லான்மகன் மீதிலா யிரங்கணை எய்தான். ......    278

(ஆயி ரங்கணை தூண்டி)

ஆயி ரங்கணை தூண்டிமற் றவற்றினை அறுத்துத்
     தூய வன்பதி னாயிரஞ் சுடுசரந் துரப்பத்
          தீயன் அத்தொகை வாளியால் அங்கவை சிந்தி
               ஏயெ னக்கொடும் பகழிநூ றாயிரம் எய்தான். ......    279

(உய்த்த வாளி)

உய்த்த வாளிநூ றாயிரந் தன்னையும் உரவோன்
     அத்தொ கைப்படு பல்லவந் தூண்டியே அறுத்துப்
          பத்து நூற்றின்மேல் ஆயிரம் பெற்றிடும் பகழி
               மெய்த்த ழற்கதிர் இரவியம் பகைஞன்மேல் விடுத்தான். ......    280

(விடுத்த வாளியை)

விடுத்த வாளியைப் பத்துநூ றாயிரம் விசிகந்
     தொடுத்து மாற்றியே சூரபன் மாவருள் தோன்றல்
          எடுத்து நூறுநூ றாயிரம் புங்கவம் ஏவ
               நொடிப்பில் வீட்டினன் அனையன சிலீமுகம் நூக்கி. ......    281

(வஞ்ச னேவினை)

வஞ்ச னேவினை மாற்றியே எம்பிரான் மதலை
     செஞ்ச வாளிநூ றாயிர கோடிகள் செலுத்தக்
          கஞ்ச மாமகள் உயிர்த்திடு திருமகன் கணிப்பில்
               புஞ்ச வார்கணை இறுதிநாள் முகிலெனப் பொழிந்தான். ......    282

(பார்ம றைந்தன)

பார்ம றைந்தன திசையெலாம் மறைந்தன படர்முந்
     நீர்ம றைந்தன குலகிரி மறைந்தன நிலவுங்
          கார்ம றைந்தன ககனமும் மறைந்தன கதிரோன்
               தேர்ம றைந்தன இருவர்தங் கணைமழை செறிய. ......    283

(பாரி வட்டமும்)

பாரி வட்டமும் மாதிர வட்டமும் பரவை
     வாரி வட்டமும் நேமியின் வட்டமும் மலிவான்
          மூரி வட்டமும் அண்டத்தின் வட்டமும் முடுகிச்
               சாரி வட்டமாய்த் திரிவன அனையவர் தடந்தேர். ......    284

(மாறில் வாளிகள்)

மாறில் வாளிகள் முறைமுறை சொரிதலான் மறைவர்
     ஈறு செய்தவை அகற்றுழித் தோன்றுவர் இமைப்பில்
          வேறு வேறதாய் இத்திறம் நிகழ்த்திடும் வீரர்
               சூறை போலமர் ஆடினர் உலகெலாஞ் சுற்றி. ......    285

(இரவி வானவன்)

இரவி வானவன் தனதுதிண் தேரினும் ஈர்க்கும்
     புரவி மீதினும் உடுபதி மானத்தும் புறஞ்சூழ்
          கரிகள் மீதினும் விண்ணுலா அமரர்தங் கண்ணும்
               பொருவி லாளியர் விடுகணை சிதறியே போமால். ......    286

(செங்கண் வீரர்கள்)

செங்கண் வீரர்கள் இருவரும் பொருவதித் திசையென்
     றங்கு நாடரி தவர்விடும் பகழிகள் அனந்தம்
          மங்குல் வானெலாம் நிரந்தன மிசையினும் வருமால்
               இங்கு நிற்கரி தெமக்கென ஓடினர் இமையோர். ......    287

(புடவி கீழ்வன)

புடவி கீழ்வன அண்டங்கள் துளைப்பன புறத்திற்
     கடலொ ரேழையும் பருகுவ புவனங்கள் கடப்ப
          அடலின் மேதக்க யாவருந் தடுத்திடற் கரிய
               வடவை நாவையுந் துணிப்பன அவர்விடும் வாளி. ......    288

(இகல்க டந்திடு)

இகல்க டந்திடு திண்டிறல் வாகுவும் இரவிப்
     பகையும் ஆற்றிய பெருஞ்சமர் வலியையார் பகர்வார்
          மிகுதி கொண்டபல் கணைமழை உலப்புறா விடுப்பத்
               திகிரி யம்படை போன்றன அனையர்கைச் சிலைகள். ......    289

(வெய்ய வன்றனை)

வெய்ய வன்றனைத் தளையிடும் வெய்யவன் விறலார்
     துய்ய மொய்ம்பினான் விடுசர மாரியைத் தொலைத்துக்
          கையி ருந்திடு கார்முகம் ஒன்றையுங் கடிதின்
               ஐயி ரண்டுநூ றயிற்கணை யால்அறுத் தார்த்தான். ......    290

(ஆர்த்த காலையில்)

ஆர்த்த காலையில் வீரவா குப்பெயர் அறிஞன்
     பேர்த்தும் ஓர்தனு வாங்கியே பெருஞ்சினம் பிடித்துச்
          சூர்த்த வெங்கணை ஆயிரம் விரைவினில் தூண்டி
               மூர்த்த மொன்றினில் அவுணன்ஏந் தியசிலை முரித்தான். ......    291

(முரித்த காலையின்)

முரித்த காலையின் அவுணர்கோன் ஆற்றவும் முனிந்து
     கரத்தின் மற்றொரு சிலைகுனித் தாயிரங் கணைகள்
          உரத்தின் நம்பியும் அணங்குற விடுத்தலும் ஓரேழ்
               சரத்தி னாலவன் தனிப்பெரு மவுலியைச் சாய்த்தான். ......    292

(வாய்த்த பன்மணி)

வாய்த்த பன்மணி குயிற்றிய கனகமா மவுலி
     சாய்த்த காலையின் வேறொரு கதிர்முடி தன்னை
          ஏத்தல் சான்றிடு சூர்மகன் புனையுமா றெடுத்தான்
               பூத்த செங்கதி ரவனைமுன் பிடித்தவா போல. ......    293

(எடுத்த பொன்முடி)

எடுத்த பொன்முடி சென்னியிற் கவித்தனன் இதன்முன்
     வடித்த வெங்கணை ஆயிரந் தூண்டிமற் றவன்மேல்
          அடுத்த சாலிகை சிந்தினன் சிந்திய அளவில்
               நடித்து நல்லறம் பாடின பரிதியும் நகைத்தான். ......    294

(நிருதர் போற்றிடு)

நிருதர் போற்றிடு சூர்மகன் ஆயிர நெடுங்கோல்
     சுருதி நாயகன் இளவல்தன் நுதலிடைத் துரப்பக்
          குருதிநீ ருண்டு குழுவொடுந் தோன்றுவ குணபால்
               பரிதி வானவன் இளங்கதிர் விரிந்தெழும் பரிசின். ......    295

(நெற்றி மீதுகோல்)

நெற்றி மீதுகோல் ஆயிரம் படுதலும் நிறையில்
     சற்று நீங்கிலன் தன்வலி சுருங்கிலன் தக்கோன்
          பற்றிஅங் கையால் பறித்தவை வீசினன் பகைஞன்
               கொற்ற வெய்யகோல் விளிவின்றி நின்றிடுங் கொல்லோ. ......    296

(சகத்தை நல்கிய)

சகத்தை நல்கிய அறுமுகற் கிளவல்அத் தகுவன்
     முகத்தின் ஆயிரம் அகலத்தின் ஆயிரம் மொய்ம்பின்
          அகத்தின் ஆயிரங் கரங்களின் ஆயிர மாக
               மிகைத்த வெங்கணை தெரிந்தொரு தொடையினில் விடுத்தான். ......    297

(விட்ட வாளிகள் சூர்)

விட்ட வாளிகள் சூர்மகன் அவயவம் விரவிப்
     பட்டு மூழ்கலும் அவசமாய்த் தளர்ந்தனன் பாணி
          நெட்டி ருஞ்சிலை ஊற்றமாய் வறியனாய் நின்றான்
               தொட்ட தெண்கயத் தூறிமேல் எழுந்தது சோரி. ......    298

(வந்து வந்தெழு)

வந்து வந்தெழு குருதிநீர் முழுதுடன் மறைப்பப்
     புந்தி தன்னிடைச் சீற்றமும் மூண்டெழப் பொலிவான்
          செந்த ழற்பிழம் பாலுயர் குன்றெனத் திகழ்ந்தான்
               அந்தி மேற்றிசை எழிலியின் வண்ணமு மானான். ......    299

(ஆன போழ்தினில்)

ஆன போழ்தினில் அவுணமாத் தலைவர்கள் யாரும்
     பானு மாற்றலன் பொருவலி இன்மையைப் பாராச்
          சேனை நாற்பெரும் பரவையி னோடுமுன் சென்று
               மான வேற்படை வீரவா குவின்புடை வளைத்தார். ......    300

(இலைபி றங்கிய)

இலைபி றங்கிய சூலம்விட் டேறுதண் டெழுவம்
     உலைபி றங்கிய கணிச்சிநே மிப்படை ஓங்கும்
          சிலைபி றங்கிய பகழிகள் வீரன்மேற் செலுத்தி
               மலைபி றங்கிய இரவிசூழ் திமிரென மறைத்தார். ......    301

வேறு

(தொடைக்கலன்)

தொடைக்கலன் நிலவு மார்பில் தொல்அசு ரேசர் கொண்ட
     படைக்கல மான வெல்லாம் விடுத்தலுந் தனது பாணி
          இடைக்கலந் திருந்த வார்விற் குனித்தனன் இடுக்கட் பட்டோர்
               அடைக்கலம் புகுதும் வெள்ளி அருவரை அளித்த அண்ணல். ......    302

(ஆயிர கோடி கோடி)

ஆயிர கோடி கோடி அடுசரந் தொடையொன் றாக
     மாயிரும் புயத்து வள்ளல் வல்லையின் வலிது தூண்டித்
          தீயவர் உடன்று விட்ட படையெலாஞ் சிந்த லுற்றான்
               பாயிருட் படலங் கீறுஞ் செங்கதிர்ப் பரிதி யேபோல். ......    303

(அவுணர்கள் யாரு)

அவுணர்கள் யாருமுய்த்த அடுபடை மாரி சிந்திக்
     குவவுறு விசயத் தோளான் கொடுஞ்சரம் அனந்த கோடி
          தவறில வாக உய்த்துத் தகுவர்தந் தானை முற்றும்
               உவரியுண் வடவை போல ஒல்லையின் முடிக்க லுற்றான். ......    304

(தோலினை அறுக்கும்)

தோலினை அறுக்கும் வாளைத் துணித்திடுஞ் சோதி வில்லின்
     காலினை அறுக்கும் வெய்ய கணிச்சியை அறுக்கும் வீசுங்
          கோலினை அறுக்கும் நேமிக் கொடும்படை அறுக்குங் காமர்
               வேலினை அறுக்கும் அம்மா விடலைதன் வீர வாளி. ......    305

வேறு

(உரந்துணிக்குங் கவச)

உரந்துணிக்குங் கவசமிடும் உரந்துணிக்கும் புயந்துணிக்கும் ஒன்ன லார்தங்
     கரந்துணிக்கும் அடல்புரிமோ கரந்துணிக்குங் கழல் துணிக்குங் கணிச்சி கைத்தோ
          மரந்துணிக்குங் குனித்தகொடு மரந்துணிக்கும் வாய்துணிக்கும் மவுலி தாங்குஞ்
               சிரந்துணிக்கும் எறிந்திடும்வச் சிரந்துணிக்கும் உரவோன்றன் செங்கை வாளி. ......    306

(கதமறுக்கும் வதமறு)

கதமறுக்கும் வதமறுக்குந் தூங்குபுழைக் கையறுக்குங் கபோலத் தூறும்
     மதமறுக்கும் நுதலறுக்கும் வாயறுக்குஞ் செவியறுக்கும் வயிரக் கோட்டின்
          விதமறுக்கும் வாலறுக்கும் மெய்யறுக்குந் தலையறுக்கும் வேழஞ் செல்லும்
               பதமறுக்கும் முரணறுக்கும் அரண் அறுக்கும் வீரன்விடு பகழி மாரி. ......    307

(ஆரறுக்குஞ் சகடறு)

ஆரறுக்குஞ் சகடறுக்கும் அச்சறுக்கும் நெடுந்துவசம் அறுக்குந்தேரின்
     பாரறுக்குங் கூம்பறுக்கும் பாகறுக்கும் அங்கணுறும் பதகர் ஆவி
          வேரறுக்கும் அடியறுக்கும் விரிதருகொய் யுளையறுக்கும் விளங்குஞ் செம்பொன்
               தாரறுக்கும் புரவிகளின் தலையறுக்கும் நிலையறுக்குஞ் சரங்கள் மன்னோ. ......    308

(கானோடும் வரை)

கானோடும் வரையோடுங் கரையோடுந் திரையோடுங் கழியினோடும்
     மீனோடுங் கடலோடும் விசையோடுந் திசையோடும் மேகமோடும்
          வானோடும் நிலனோடும் இருகதிரின் மருங்கோடும் வாளத்தோடும்
               தேனோடும் பூந்தாரான் சிலையோடும் நெடும்பகழி சிந்துஞ் சென்னி. ......    309

வேறு

(பாயிரும் புனல்போல்)

பாயிரும் புனல்போல் ஓடிப் படியெனப் பரந்து நீடித்
     தேயுவின் திறல்மேல் கொண்டு சேணென முடிவின் றாகி
          வாயுவின் விரைந்து சென்று வள்ளல்கை வாளி ஒவ்வொன்
               றாயிர கோடி சென்னி அறுக்கினும் வெறுக்கி லாவே. ......    310

(வரந்தனில் தலைமை)

வரந்தனில் தலைமை சான்ற ஒருசில மான வீரர்
     சிரந்தனைத் துணித்துக் கொண்டு சீர்கெழு சூரன் வைகும்
          புரந்தனிற் கொடுபோய் அன்னார் பொற்றொடி மடந்தை மார்தங்
               கரந்தனின் உகுத்துச் செல்லுங் கந்தனுக் கிளவல் வாளி. ......    311

(புரண்டன வயவர்)

புரண்டன வயவர் யாக்கை பொழிந்தன குருதித் தாரை
     உருண்டன மான்தேர் ஆழி உலவின பலவுங் கூளி
          திரண்டன குணங்கர் ஈட்டஞ் செறிந்தன சேனம் பிள்ளை
               இருண்டன திசைகள் முற்றும் இரிந்தன ஒழிந்த தானை. ......    312

(பட்டன புரவிப் பந்தி)

பட்டன புரவிப் பந்தி படிந்தன முடிந்த வேழங்
     கெட்டனர் அவுணர் யாருங் கிடந்தன ஒடிந்த திண்டேர்
          அட்டனன் ஒருவன் நின்றான் அகலிரு விசும்பை வல்லே
               தொட்டன பிணத்தின் பொம்மல் சோரியா றொழுகிற் றன்றே. ......    313

(பாய்ந்திடு குருதி நீத்தம்)

பாய்ந்திடு குருதி நீத்தம் படர்ந்தது புகுந்து பௌவஞ்
     சேர்ந்தது சுறவு மாந்திச் செருக்கிய திறலோன் அம்பால்
          வீந்திடும் அவுணர் ஆவி விடுத்தனர் சென்று தந்தாள்
               ஓய்ந்தனர் நடுவன் தூதர் ஒழிந்தன கழிந்த பூசல். ......    314

(சிந்திய அவுணர்)

சிந்திய அவுணர் தானைச் செய்தியும் பரிதிக் கூற்றன்
     நொந்தனன் தமியன் நின்ற தன்மையும் நோக்கி நோக்கி
          நந்தம தண்ணல் தன்பால் நண்ணுதும் என்னா மீண்டு
               வந்தன முந்து சாய்ந்த வயப்பெரும் பூத வெள்ளம். ......    315

(இரிந்திடு பூத வீர)

இரிந்திடு பூத வீர ரியாவரும் மீண்டார் நின்று
     வருந்திய தலைவர் தொல்லை வன்மிடல் பெற்றார் அங்கண்
          அருந்துயர் உழந்து வீழ்ந்தார் ஆவியோ டெழுந்தார் இன்னோர்
               பொருந்தனி வீர வாகுப் புடையுற வளைந்து புக்கார். ......    316

(அங்கது போழ்து)

அங்கது போழ்து தன்னின் அயர்வுயிர்த் துணர்வு தோன்றச்
     செங்கதி ரோனைச் சீறுஞ் சேவகன் சுற்று நோக்கிச்
          சங்கையின் நிமிர்ந்த கொள்கைத் தன்பெருஞ் சேனை காணான்
               கங்கமுங் கழுகும் ஆர்க்குங் களேபரச் சூழல் கண்டான். ......    317

(நேருறு தனிவில்)

நேருறு தனிவில் லாளி நின்றது நோக்கி நம்பால்
     சாருறும் அனிக மெல்லாந் தடிந்தனன் இவனென் றுன்னி
          ஆரிடை யடங்கிற் றம்மா ஆண்மைக்கும் அவதி யுண்டோ
               வீரன்மற் றிவனே அல்லால் வேறிலை போலு மென்றான். ......    318

(இனையன வியந்து)

இனையன வியந்து பின்னும் என்னெதிர் பொருத வீரர்
     அனைவரும் விளிந்தோர் அன்றி அடல்வலி படைத்தோர் இல்லை
          குனிசிலை ஒருவன் நின்றான் கொற்றமுற் றிடுவன் அம்மா
               தினகரன் பகைஞன் ஆற்றல் சீரிது சீரி தென்றான். ......    319

(கன்னலொன் றளவை தன்)

கன்னலொன் றளவை தன்னில் கந்தவேள் ஒற்றன் யாக்கை
     சின்னபின் னங்க ளாகச் செய்குவன் செய்தி டேனேல்
          பின்னுயிர் வாழ்க்கை வேண்டேன் யான்பிறந் தேனுமல்லேன்
               என்னொரு சிலையும் யானும் எரியிடைப் புகுவ னென்றான். ......    320

(வஞ்சினம் இனைய)

வஞ்சினம் இனைய கூறி மாதிரக் கிழவன் மைந்தன்
     நெஞ்சினில் வெகுளித் தீயும் மானமும் நீடி ஓங்க
          எஞ்சலில் ஈசன் முன்னம் ஏகிய கொடுநஞ் சென்னச்
               செஞ்சிலை வீரன் முன்னந் தேரொடுஞ் சென்று சேர்ந்தான். ......    321

(கைத்தலத் திருந்த)

கைத்தலத் திருந்த தொல்லைக் கார்முகம் வளைய வாங்கி
     முத்தலைப் பகழி அங்கோ ராயிரம் விடுப்ப மொய்ம்பன்
          அத்திறத் தியன்ற வாளி ஆயிரஞ் சிலையிற் பூட்டி
               உய்த்தனன் அறுத்துப் பின்னு மொராயிரஞ் சரங்கள் விட்டான். ......    322

(அற்றது தெரிந்து)

அற்றது தெரிந்து தீயோன் ஆயிரம் விசிகந் தூண்டி
     மற்றவை விலக்கிப் பின்னும் வாளியோர் அயுதந் தொட்டுக்
          கொற்றவன் தேரும் பாகுங் குரகதக் குழுவு மாயச்
               செற்றனன் அதனை நோக்கிச் சேணுளார் அலக்கண் உற்றார். ......    323

(வில்லொடும் வீர)

வில்லொடும் வீர வாகு வேறொரு தேர்மேற் பாய்ந்து
     வல்லிதின் நூற்று நூறு வாளிகள் துரந்து வெய்யோன்
          சில்லியந் தேரும் மாவும் வலவனுஞ் சிலையும் வீழப்
               பல்லிருந் துண்டஞ் செய்தான் விண்ணவர் பண்ணை ஆர்ப்ப. ......    324

(பூங்கழல் மிழறற்)

பூங்கழல் மிழற்ற வேறோர் பொன்னவாந் தேரின் மீப்போய்
     ஆங்கொரு சாபம் பற்றி அவுணன்றன் செவியின் காறும்
          வாங்கினன் ஏழு நூறு வச்சிரப் பகழி பூட்டி
               ஓங்கலம் புயத்து வீரன் உரத்திடைப் புகவுய்த் தார்த்தான். ......    325

(ஆகத்திற் பகழி)

ஆகத்திற் பகழி பாய அறுமுகன் தூதன் முன்னஞ்
     சோகத்தை உணர்கி லாதோன் துயரத்தின் சுவையுங் கண்டு
          மாகத்தில் இரவி தன்னை வன்சிறை பிணித்தோன் சென்னி
               காகத்துக் கிடுவன் என்னா வெகுண்டனன் காலன் போல்வான். ......    326

(கறுத்திடு வீரன்)

கறுத்திடு வீரன் ஈரேழ் கங்கபத் திரங்கள் ஏவி
     அறுத்தனன் சிலையைப் பின்னும் ஆயிரம் பகழி தூண்டி
          நொறிற்பரி இரதந் தன்னை நூறினன் நூறு கோலான்
               மறுத்தெதிர் பொருத தீயோன் மருமத்தை வாயில் செய்தான். ......    327

(வருந்திலன் அதற்கு)

வருந்திலன் அதற்கு மைந்தன் வயினுறும் இரத மொன்றின்
     விரைந்துடன் புகலும் வீரன் விசிகமா யிரத்தைத் தூண்டி
          உரந்திறந் திட்ட வாற்றால் ஓச்சியே புறத்தில் தூங்கும்
               அரந்திகழ் பகழித் தூணி துணிபட அறுத்தான் அன்றே. ......    328

(தூவுறு பகழி தூர்)

தூவுறு பகழி தூர்க்குந் தூணியிற் றிடலும் நேமிக்
     காவலன் தனயன் அம்மா கார்முகம் விஞ்சை தன்னால்
          மேவலன் வென்றி கோடல் அரிதெனா வினைய முன்னித்
               தேவர்தே வுதவு மோகப் படையினைச் செங்கை கொண்டான். ......    329

(சிந்தனை கவரும்)

சிந்தனை கவரும் மோகத் தீப்படை அவுணன் செங்கை
     வந்திட அனைய போழ்தின் மனத்தினால் வழிபா டாற்றி
          வெந்திறல் அனிகத் தோடு மேவலன் தன்னை எய்திப்
               புந்தியை அழித்து வீட்டி வருகெனப் புகன்று விட்டான். ......    330

(விட்டிடு மோக)

விட்டிடு மோக மென்னும் வியன்படை வெகுளி வீங்கித்
     தட்டுடை நெடுந்தேர் வெய்யோன் தன்பெருஞ் சுடர்கள் மாற்றி
          நெட்டிருட் படலை வீசி நிரந்தபல் லுயிரும் அஞ்சி
               உட்டெளி வகன்று மாழ்க ஒல்லெனப் பெயர்ந்த தன்றே. ......    331

(பெயர்ந்திடு மோக)

பெயர்ந்திடு மோக நாமப் பெரும்படை ஊக்க நோக்கித்
     துயர்ந்தனர் வெருவி ஆற்றத் துளங்கினர் துணுக்கென் றுள்ளம்
          அயர்ந்தனர் பூதர் யாரும் மவ்வவர் தலைவ ரானோர்
               சயந்தனை இழந்து நின்று சாம்பினர் தேம்பு கின்றார். ......    332

வேறு

(மோகப் படைசேற)

மோகப் படைசே றலுமுந் தெதிர்மா
     றேகப் படையொன் றையுமே வுகிலார்
          சேகப் படையத் தொடைசிந் தினரால்
               மாகப் படைமொய்ம் புடைவள் ளல்பினோர். ......    333

(அந்தத் திறல்வெம்)

அந்தத் திறல்வெம் படையாற் றலுடன்
     வந்துற் றுழிமே லவன்மற் றிதுதான்
          எந்தப் படையால் அழிவெய் துமெனாச்
               சிந்தித் தனன்வே றொருசெய் கையிலான். ......    334

(ஒன்றா முதலோன்)

ஒன்றா முதலோன் இவையுன் னுதலும்
     அன்றா லம்வருந் திறனா மெனவே
          சென்றார் உணர்வுஞ் சிதைவித் ததுபோர்
               வென்றார் புகழ்மோ கவியன் படையே. ......    335

(இலக்கத் துடன்)

இலக்கத் துடன்எண் மரும்ஏ னையரும்
     அலக்கத் துடன்வீழ்ந் தனர்மாற் றலரூர்
          கலக்குற் றிடுகா ளைகருத் தழியா
               நிலக்கட் படுகந் தெனநின் றனனால். ......    336

(நிற்கும் பொழுத)

நிற்கும் பொழுதத் தினின்நீ டகல்வா
     னற்கும் பரிதிப் பகையங் கதுகண்
          டெற்கின் றெதிரா யினர்யா வருளார்
               நற்குன் னினன்என் றுநகைத் தனனே. ......    337

(புகழுற் றிடுமே லவர்)

புகழுற் றிடுமே லவர்புந் தியின்மா
     றிகழுற் றிடுபெற் றிதெரிந் தவுணன்
          மகிழுற் றுநகைத் துவயம் புனையா
               நிகழுற் றிடுசீ ரொடுநின் றனனே. ......    338

(மல்வன் மைகொள்)

மல்வன் மைகொள்மொய்ம் பனுமற் றவருந்
     தொல்வன் மையிலா துடல்சோர்ந் தனரால்
          வில்வன் மையினால் இவர்வீ டுறவே
               கொல்வன் கடிதென் றுகுறித் தனனே. ......    339

(வரிகின் றவில்வா)

வரிகின் றவில்வாங் கினன்வா லுணர்வு
     திரிகின் றவன்மேற் சிலைவீ ரர்கள்மேல்
          விரிகின் றகணப் படைமேல் விசிகஞ்
               சொரிகின் றனன்யாக் கைதுளைத் தனனே. ......    340

(ஆங்கா கியவே)

ஆங்கா கியவே லையில்ஆ றுமுகன்
     பாங்காம் விறலோ னொடுபா ரிடர்கள்
          நீங்கா மருள்மால் கொடுநே ரலனால்
               தீங்கா யினதன் மைதெரிந் தனனே. ......    341

(தெரிந்தான் முகமா)

தெரிந்தான் முகமா றொடுசேர்ந் துயிர்தோ
     றிருந்தார் அருள்செய் திடுமெம் பெருமான்
          விரைந்தாங் கொர்அமோ கவியன் படையைப்
               புரிந்தான் அதனோ டுபுகன் றிடுவான். ......    342

(நன்றே தெளிவு)

நன்றே தெளிவுற் றெமர்நண் ணும்வகை
     நின்றே திலன்விட் டநெடும் படைபாற்
          சென்றே அதன்வன் மைசிதைத் திவண்நீ
               வென்றே வருகென் றுவிடுத் தனனே. ......    343

(ஏண்கொண் டசிவன்)

ஏண்கொண் டசிவன் மகனே வுபடை
     சேண்கொண் டுபடர்ந் திருள்சிந் தையராய்த்
          தூண்கொண் டிடுதோ ளவர்துன் னியதோர்
               மாண்கொண் டசெருக் களம்வந் ததுவே. ......    344

(மிடல்கொண் டவ)

மிடல்கொண் டவமோ கவியன் படைசென்
     றிடுகின் றுழிவெய் யவனே வுபடை
          அடல்கொண் டிடும்வீ ராகத் தில்இருள்
               உடையும் படிவல் லையினோ டியதால். ......    345

(அசைகொண் டவு)

அசைகொண் டவுடுத் திரளா னவெலாம்
     மிசைகொண் டவினன் வரவே கியபோல்
          திசைகொண் டிடுநம் மவர்சே னையொரீஇ
               விசைகொண் டவுணன் படைமீண் டதுவே. ......    346

(மோகத் தனிவெம்)

மோகத் தனிவெம் படைமொய்ம் பிலதாய்
     ஏகத் திறல்வா குவும்ஏ னையரும்
          ஆகத் தினின்மை யல்அகன் றமலன்
               வாகைப் படைகண் டுமகிழ்ந் தனரே. ......    347

(அழலுற் றதுபோல)

அழலுற் றதுபோ லஅகல் மணியின்
     நிழலுற் றிடுதேர் மிசைநின் றவனும்
          எழலுற் றிடுவீ ரர்கள்யா வர்களுந்
               தொழலுற் றனர்நின் றுதுதித் தனரே. ......    348

(செயிர்கொண் டக)

செயிர்கொண் டகருத் தொடுசெற் றலர்தம்
     உயிர்கொண் டிடுவோன் படையூற் றமெலாம்
          அயிர்கொண் டிடஅட் டதன்ஆற் றல்தெரீஇ
               மயிர்கொண் டபொடிப் பொடுவாழ்த் தினரால். ......    349

(தீயோன் படைசெய்)

தீயோன் படைசெய் தசெயற் கையில்யாம்
     மாயோ மருளென் கையகத் தடையா
          வாயோ டுரைவீ ரமறுத் தனராய்
               ஏயோ வெனவெள் கினர்யா வருமே. ......    350

(அண்டா தவனால்)

அண்டா தவனால் எம்மகத் திலிருள்
     உண்டா கியதன் மையுணர்ந் தறிவன்
          விண்டா னுறஇப் படைவிட் டனனென்
               றெண்டா வுமுளத் திடையெண் ணினரால். ......    351

(முந்நான் கெனுமொய்)

முந்நான் கெனுமொய்ம் புளமூர்த் திதனை
     உன்னா அருள்நீர் மையுளத் தடையா
          அன்னார் தொழுதேத் தினர்அத் துணையின்
               மின்னா மெனஅப் படைமீண் டதுவே. ......    352

(மீண்டுற் றவமோ)

மீண்டுற் றவமோ கவியன் படைபோய்த்
     தூண்டுற் றகுகன் புடைதுன் னியதால்
          ஆண்டுற் றிடும்வீ ரர்கள்அண் டலன்மேல்
               மூண்டுற் றிடுபூ சல்முயன் றனரே. ......    353

(ஆங்குற் றிடுகாலை)

ஆங்குற் றிடுகா லையடுந் திறலின்
     பாங்குற் றிடுமொய்ம் புபடைத் துடையோன்
          நீங்கற் கருமா னமும்நீள் சினமும்
               ஓங்குற் றெழவின் னதையுன் னினனே. ......    354

(அந்நே ரலன்ஈண்)

அந்நே ரலன்ஈண் டொரடற் படையான்
     முன்னே மயல்செய் தமுரண் தொலைய
          இன்னே அடுவேன் எனஎண் ணமுறாக்
               கொன்னே அரன்மாப் படைகொண் டனனே. ......    355

(அங்கத் துணைகண்)

அங்கத் துணைகண் டனன்அவ் வசுரன்
     எங்கட் கிறைவன் படைஏ கியதும்
          வெங்கட் படுதன் படைமீண் டதுவுஞ்
               செங்கட் டிறல்அண் ணல்செயற் கையுமே. ......    356

வேறு

(இம்மெனச் சூர்மகன்)

இம்மெனச் சூர்மகன் இவற்றை நோக்குறா
     விம்மிதம் எய்தினன் வீர மொய்ம்புடைச்
          செம்மலை எதிர்ந்திலன் செருக்கு நீத்தனன்
               கைம்மிகு துயரினன் கருதல் மேயினான். ......    357

(இவ்விடை ஒன்னலர்)

இவ்விடை ஒன்னலர் எண்ணம் யாவையும்
     வவ்வினன் மாநில வரைப்பின் வீட்டினன்
          உய்வகை பெற்றுடன் உணர்ந்து தோன்றினார்
               செய்வதென் ஐயகோ கடவுள் செய்கையே. ......    358

(எடுத்தனன் மாற்ற)

எடுத்தனன் மாற்றலன் இறைவன் மாப்படை
     தொடுத்திடு வான்எனில் துன்னி என்னுயிர்
          படுத்திடும் யானது பரித்து வந்திலன்
               விடுத்துடன் அப்படை விலக்கும் வண்ணமே. ......    359

(வென்றிடல் அரிதினி)

வென்றிடல் அரிதினி வீர வாகுவைச்
     சென்றனன் முதுநகர்த் தெய்வ தப்படை
          மன்றவுந் தந்திவன் வன்மை மாற்றுவன்
               நின்றிடல் பழுதென நெஞ்சில் உன்னினான். ......    360

(அயன்மகன் மதலை)

அயன்மகன் மதலைசேய் அருவ மாகியே
     வியன்மிகு தனதுதேர் விடுத்து விண்ணெழீ இப்
          பயனறு முகிலெனப் படர்ந்து வல்லையின்
               நயனுறு கடிமதில் நகருட் போயினான். ......    361

(கொற்றவன் மறைந்த)

கொற்றவன் மறைந்தகல் கொள்கை காண்டலுஞ்
     சுற்றுறு தானவர் தொலைந்து போயினார்
          அற்றது தெரிந்திடும் அமரர் யாவரும்
               வெற்றிஇன் றெமதென விளம்பி ஆர்த்தனர். ......    362

(மாயையின் அருவமாய்)

மாயையின் அருவமாய் வஞ்சன் மாநகர்
     போயினன் காலையே புகுவன் போர்க்கினி
          ஆயவன் தனைவிரைந் தடுதி என்றுபூத்
               தூயினர் வீரன்மேற் சுரர்கள் யாவரும். ......    363

(தினகரன் மாற்றலன்)

தினகரன் மாற்றலன் செம்பொற் றேரொரீஇ
     இனைவுடன் அருவமாய் இரிந்து போதலை
          வினையமொ டோர்வுறா வீரன் நின்றனன்
               முனிவொடு பிழைபடு மூரி யானைபோல். ......    364

(விண்டிடு சூர்மகன்)

விண்டிடு சூர்மகன் வெருவி வெந்நிடல்
     கண்டனர் துணைவருங் கணத்தின் வீரருந்
          திண்டிறல் இழந்தனன் தீயன் பற்றிநாங்
               கொண்டணை வாமெனக் கூறல் மேயினார். ......    365

(என்பது விளம்பியே)

என்பது விளம்பியே யாரும் ஆர்ப்பொடு
     துன்புறும் அவுணனைத் தொடர்ந்து பற்றுவான்
          முன்பொடு முயறலுந் தெரிந்த மொய்ம்பினான்
               தன்புடை யோர்க்கிது சாற்றல் மேயினான். ......    366

(பேடியர் சிறுதொழில்)

பேடியர் சிறுதொழில் பேணி உள்வெரீஇ
     ஓடினன் போகிய ஒன்ன லான்றனை
          நாடிநாம் அடுவது நலத்தின் பாலதோ
               சாடுவன் இனிவரிற் சரதம் யானென்றான். ......    367

(என்றிவை வள்ளலும்)

என்றிவை வள்ளலும் இயம்ப யாவரும்
     நன்றென இசைத்தலும் அவற்றை நாடியே
          குன்றுறழ் புயத்துணை கொட்டிக் குப்புறீஇ
               வென்றிகொள் பாரிட வெள்ளம் ஆர்த்தவே. ......    368

(முற்றிய தமர்இனி)

முற்றிய தமர்இனி முயல்வ தில்லையால்
     செற்றலன் ஓடினன் திரும்பும் வீரனும்
          நிற்றிலன் இனியென நினைந்து நீங்குவான்
               உற்றன னாமென இரவி யோடினான். ......    369

(செந்திரு மதுமலர்)

செந்திரு மதுமலர் செறியப் பூத்துழி
     முந்துறு நித்திலம் முழுது மொய்த்தென
          அந்தர முழுவதும் அடைந்த செக்கரில்
               சுந்தர உடுநிரை பலவுந் தோன்றிய. ......    370

(குண்டுநீர்க் கன)

குண்டுநீர்க் கனலொடு குலாவி மாலுளத்
     தெண்டகு தமியரை இகலி மாமதி
          பண்டுள முனிவரர் பரமன் மேல்விடு
               வெண்டலை யாமென விண்ணில் தோன்றினான். ......    371

(இத்துணை வேலை)

இத்துணை வேலையில் இலக்கத் தெண்மராம்
     மெய்த்துணை யார்களும் வெய்ய பூதரும்
          அத்துணைப் படைகளும் அயலிற் சென்றிட
               மொய்த்துணை விறலுடை மொய்ம்பன் மீண்டனன். ......    372

(அந்தமில் கயிலை)

அந்தமில் கயிலையை அருளிற் போற்றிடு
     நந்திதன் கணத்தரின் நாத னாகியோன்
          விந்தைகொள் செருநிலம் ஒருவி மீண்டுபோய்க்
               கந்தவேள் பாசறைக் கண்ணுள் நண்ணினான். ......    373

(நண்ணிய திறலினா)

நண்ணிய திறலினான் நான்மு கன்முதற்
     புண்ணிய மேலவர் போற்ற ஆண்டுறு
          கண்ணுதல் அருள்புரி கந்தன் முன்புபோய்த்
               துண்ணென வணங்கினன் துணைவர் தம்மொடும். ......    374

(வணங்கினன் எழுந்து)

வணங்கினன் எழுந்துபின் வள்ளல் தேர்ந்திட
     இணங்கலன் தன்மகன் எதிர்ந்து போர்செயா
          அணங்குடன் இரிந்ததும் அனைத்துஞ் செப்பலுங்
               கணங்களின் முதல்வன்மேற் கருணை ஆற்றினான். ......    375

(நல்லருள் புரிந்தபின்)

நல்லருள் புரிந்தபின் நம்பி இப்பகல்
     தொல்லமர் உழத்தலில் துன்பங் கூர்ந்துளாய்
          எல்லிது பொழுதுநின் இருக்கை தன்னிடைச்
               செல்லுதி துணைவரோ டென்று செப்பினான். ......    376

(செப்பலும் விடைகொடு)

செப்பலும் விடைகொடு செம்மல் பின்னவர்
     மெய்ப்படு பாரிடம் விரவச் சென்றொராய்
          ஒப்பருந் தனதுபேர் உறையுள் வைகினான்
               துப்புறு தானைகள் தொன்மை போலுற. ......    377

(சேயவன் விடுத்திடு)

சேயவன் விடுத்திடு சேனை பாசறை
     போயதும் இருந்ததும் புகலுற் றாம்இனி
          மாயிரு வளங்கெழு மகேந்தி ரப்பதி
               ஆயிடை நிகழ்ந்தவா றறியக் கூறுவாம். ......    378

(ஆடுறு சமரிடை)

ஆடுறு சமரிடை அழிந்து முன்னரே
     ஓடிய அவுணர்கோன் உள்ளந் தன்னிடைப்
          பாடுறு துயரமும் பழியும் மானமும்
               நீடினன் பெருமித நிலைமை நீங்கினான். ......    379

(கோனுறு மந்திர)

கோனுறு மந்திரங் குறுகல் செய்திலன்
     தானுறு திருநகர் தன்னில் ஏகியே
          ஊனம துடையர்போல் உயங்கி வைகினான்
               பானுவின் பகைஞனென் றுரைக்கும் பண்பினான். ......    380

(மந்திரக் கிளையொடு)

மந்திரக் கிளையொடு மருவ வேண்டலன்
     தந்திரத் தமரொடுஞ் சார்தல் வேண்டலன்
          சிந்துரத் தொல்பகைச் சென்னி போற்றிய
               இந்திரப் பெருந்தவி சிருக்கை வேண்டலன். ......    381

(ஆடுறு மங்கையர்)

ஆடுறு மங்கையர் ஆடல் வெஃகலன்
     பாடுறு மங்கையர் இசையில் பற்றலன்
          கூடுறு மங்கையர் குழாமும் நோக்கலன்
               ஊடுறு மங்கையர் புணர்ப்பும் உன்னலான். ......    382

(நிசாவது சென்றபின்)

நிசாவது சென்றபின் நெடுஞ்செவ் வேலுடை
     விசாகனை அவன்படை வீரர் தங்களை
          அசாவுறு செருவில்வென் றாடல் கொள்வதற்
               குசாவினன் உளத்துடன் ஊக்கம் வேறிலான். ......    383

வேறு

(ஆதவன் தன்பகை)

ஆதவன் தன்பகை அவ்வழி அமர்தலும்
     மேதகுந் தொல்சமர் விளைவெலாம் நோக்கியே
          மூதகுந் திருநகர் முழுமணிக் கோயிலில்
               தூதர்கை தொழுதுபோய்ச் சூரனுக் குரைசெய்வார். ......    384

(கேட்டியால் உன்மகன்)

கேட்டியால் உன்மகன் கேடிலா வாகைசேர்
     தோட்டுணை யானொடுந் தொல்சமர் ஆற்றியே
          ஈட்டுபல் பூதரை ஈறுசெய் திவ்விடை
               மீட்டும்வந் தெய்தினான் வினையமுண் டாங்கொலோ. ......    385

(அன்னபண் புணர்)

அன்னபண் புணர்கிலேம் அதனைமேல் அறிதியான்
     மின்னுதண் சுடருடை வேலவன் தூதனும்
          பன்னரும் படையொடும் பாசறைக் கேகினான்
               இன்னதால் விளைவெனா இவையெலாம் பகர்தலும். ......    386

(மாற்றலார் தமையட)

மாற்றலார் தமையட வலியில னாகியே
     ஊற்றமா மைந்தன்வந் துற்றசொற் கேட்குமுன்
          சீற்றமாய் எரிவிழி சிதறவே வெய்துயிர்த்
               தாற்றவும் முறுவலித் தரசன்ஒன் றுரைசெய்வான். ......    387

(மைந்தரும் துணை)

மைந்தரும் துணைவரும் மருவுபல் சுற்றமும்
     தந்திரத் தலைவருஞ் சமரினுக் கேகலர்
          நந்தலில் படையொடு நாளைநான் சென்றுபின்
               கந்தனைத் திறல்கொடே கடிதில்மீண் டிடுவனால். ......    388

(போதிர்இப் பொழு)

போதிர்இப் பொழுதெனப் புகறலும் பணிகுறாத்
     தூதுவர் போயினார் சூரனாம் அவுணர்கோன்
          ஏதிலார் தம்மைவென் றிசைபுனைந் திடுதல்மேற்
               காதலாய் வைகினான் யாவதுங் கருதலான். ......    389

(அடுபெரும் போரி)

அடுபெரும் போரினை ஆற்றியே ஆற்றலால்
     முடிவிலா விறல்கொள முன்னுவீ ரர்க்கெலாம்
          நெடியளாய்த் திறலிலா நெஞ்சினா ருக்கெலாம்
               கடியளாய் வைகினாள் கங்குலாம் நங்கையே. ......    390

(பிரிகுவார் தங்களை)

பிரிகுவார் தங்களைப் பிரிகலா தேனையோர்
     அருகுதான் நிற்கலா தச்சம்நாண் இன்றியே
          விரகநோய் தெறுதலால் மிக்கதோர் தூர்த்தராய்த்
               திரிகுவா ராமெனச் செல்லும்இவ் வெல்லியே. ......    391

(பாடுசால் தென்றி)

பாடுசால் தென்றிசைப் பார்புரந் திடும்இரா
     ஈடுசால் வெம்பகல் எல்லொடும் வருவது
          நேடியே மதியெனும் நீள்குடை முன்செல
               ஓடல்போற் போயதால் உடுவெனும் படையொடும். ......    392

(மையிருட் கலை)

மையிருட் கலையினை மகிழ்நனாம் மதிநிலாக்
     கையினால் நீக்கியே கலவிசெய் தகலுழி
          வெய்யவன் வருமெனா வெள்கியத் துகிலுடீஇ
               ஒய்யெனப் போயினாள் கங்குலென் றுற்றுளாள். ......    393

ஆகத் திருவிருத்தம் - 5346



previous padalam   3 - முதனாட் பானுகோபன் யுத்தப் படலம்   next padalammudhanAt BAnugOban yuththa padalam

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]