(மற்றது காலத்து)
மற்றது காலத்து மணிதூங் கியபசும்பொற்
பொற்றை புரையும் பொறிமஞ்ஞை மீதுவைகும்
வெற்றி நெடுவேற்கை விமலன் விறலோனைப்
பற்றி னொடுநோக்கி இனைய பகர்கின்றான். ......
1(கேட்டி இதுவீர)
கேட்டி இதுவீர கெடலுற்ற வெஞ்சூரன்
ஈட்டு திருவென்ன இருஞ்சிறையின் முன்வைப்ப
வாட்டமுறு சயந்தன் வானோர் தமையெல்லாம்
மீட்டு வருதி எனவே விளம்பினனால். ......
2(குன்றம் எறிந்த)
குன்றம் எறிந்த குமரன்இது கூறுதலும்
நன்றி தெனவே தொழுது நனிமகிழ்ந்து
வென்றி விடலை விடைபெற்றுப் போர்க்களத்தின்
நின்றும் அவுணன் நெடுநகரத் தேகினனால். ......
3(மீது படுதிண்டோள்)
மீது படுதிண்டோள் விடலை அறந்திறம்புங்
கோது படுதீயோர் குழீஇயநக ருட்புக்குத்
தாது படுதண்டார்ச் சயந்தன் அமரருடன்
தீது படுவெய்ய சிறைக்களத்துச் சென்றனனே. ......
4(செல்லும் விறலோன்)
செல்லும் விறலோன் திறத்தை நனிநோக்கி
அல்லல் அகலும் அரிசுதனும் வானோர்கள்
எல்லவரும் அற்புதநீர் எய்திப் பதம்பூட்டும்
வல்லி பரிய மலர்க்கை குவித்தனரே. ......
5(செங்கை குவித்தே)
செங்கை குவித்தே திறலோய் சிறைப்பட்ட
நங்கள் துயர்அகற்ற நண்ணினையோ நீயென்றே
அங்கவர்கள் எல்லோரும் ஆர்த்தெழுந்து கூறுதலும்
எங்கள் பெருமான் இளவல் இதுபுகன்றான். ......
6(வம்மின்கள் வம்மி)
வம்மின்கள் வம்மின்கள் வானத்தீர் எல்லீரும்
நும்மை அயர்வித்த நொறில்பரித்தேர் வெஞ்சூரை
அம்ம அவுணர் அனிகத் துடன்எங்கோன்
இம்மெனவே வேலால் இதுபோழ் தெறிந்தனனே. ......
7(என்றாங் கிசைப்ப)
என்றாங் கிசைப்ப இமையோர் அதுகேளாப்
பொன்றாது முத்தி புகுந்தோர் எனமகிழ்ந்து
வன்றாள் மிசைப்பிணித்த வல்லிகளின் மூட்டறுத்துச்
சென்றார் அவுணன் திருநகரம் நீங்கினரே. ......
8வேறு(நுணங்கு நூலுடை)
நுணங்கு நூலுடை இளையவன் முன்செல நொய்தென்ன
அணங்கி னோருடன் சயந்தனுந் தேவரும் அவண்நீங்கிக்
குணங்கர் ஈண்டிய களத்திடை நணுகியே குமரன்தாள்
வணங்கி மும்முறை புகழ்ந்தனர் திகழ்ந்தனர் மகிழ்வுற்றார். ......
9(குன்றெ றிந்தவன்)
குன்றெ றிந்தவன் அமரர்பாற் பேரருள் கொடுநோக்கி
நன்றி யில்லவன் சிறையிடைப் பலபகல் நணுகுற்றீர்
துன்று பேரிடர் மூழ்கினீர் ஈங்கினித் துயரின்றி
என்றும் வாழ்குதிர் துறக்கமேல் வெறுக்கையில் இருந்தென்றான். ......
10(கந்தன் இம்மொழி)
கந்தன் இம்மொழி வழங்கலுங் கடவுளர் களிப்பெய்தி
உய்ந்த னம்மெனப் பின்னரும் வணங்கினர் உதுகாணா
முந்து தொல்லிடர் நீங்கியே புந்தியில் முதமெய்தி*
1 இந்தி ரன்திருப் பெற்றிடு ஞான்றினும் இனிதுற்றான். ......
11(கண்ட னன்தொழு)
கண்ட னன்தொழு மைந்தனைப் புல்லினன் களிப்புள்ளங்
கொண்ட னன்புறம் நீவினன் பல்லுகங் கொடியோன்செய்
ஒண்ட ளைப்புகுந் தெய்த்தனை போலும்என் றுரைசெய்யா
அண்டர் யாரையும் முறைமுறை தழீஇயினன் அமரேசன். ......
12(செற்ற மேதகு மவு)
செற்ற மேதகு மவுணர் தங்காவலன் செருவத்தில்
அற்றை காறுமா விளிந்திடு பூதர்தம் அனிகங்கள்
முற்று மாயிடை வரும்வகை முருகவேள் முன்னுற்றான்
மற்ற வெல்லையில் துஞ்சிய கணமெலாம் வந்துற்ற. ......
13(முஞ்சு தானைக)
முஞ்சு தானைக ளார்ப்பொடு குழீஇக்குழீஇ முருகேசன்
செஞ்ச ரண்முனம் பணிந்துதம் மினத்தொடுஞ் செறிகின்ற
எஞ்ச லில்லதோ ரெல்லைநீர்ப் புணரியில் எண்ணில்லா
மஞ்சு கான்றிடு நீத்தம்வந் தீண்டிய மரபென்ன. ......
14(கருணை யங்கட)
கருணை யங்கட லாகியோன் கனைகடற் கிறையாகும்
வருணன் மாமுக நோக்கியே வெய்யசூர் வைகுற்ற
முரணு றுந்திறல் மகேந்திர நகரினை முடிவெல்லைத்
தரணி யாமென உண்குதி ஒல்லையில் தடிந்தென்றான். ......
15(என்ற மாத்திரைச்)
என்ற மாத்திரைச் சலபதி விழுமிதென் றிசைவுற்றுத்
துன்று பல்லுயிர் தம்மொடு மகேந்திரத் தொல்லூரை
அன்று வன்மைசேர் புணரியுள் அழுத்தினன் அவனிக்கீழ்
நின்று மாயவன் அடுவுல குண்டிடு நெறியேபோல். ......
16(ஆன காலையில் அறுமுகன்)
ஆன காலையில் அறுமுகன் முகுந்தனும் மலரோனும்
வானு ளோர்களும் இறைவனும் வழுத்தினர் மருங்காக
ஏனை வீரர்கள் யாவரும் புடைவர இகற்பூதத்
தானை ஆர்த்துடன் சென்றிடச் செருநிலந் தணப்புற்றான். ......
17(கலங்கல் கொண்டிடு)
கலங்கல் கொண்டிடு மகேந்திர வரைப்பினைக் கடந்தேபின்
இலங்கை மாநகர் ஒருவியே அளக்கரை இகந்தேகி
நலங்கொள் சீருடைச்செந்தியில் தொல்லைமா நகரெய்தி
அலங்கல் அஞ்சுடர் மஞ்ஞைநின் றிழிந்தனன் அயில்வேலோன். ......
18(கேக யத்தின்நின்)
கேக யத்தின்நின் றிழிந்துதொல் சினகரங் கிடைத்திட்டுப்
பாக சாதன னாதியாம் அமரர்கள் பணிந்தேத்த
வாகை சேர்அரித் தவிசின்மேல் வதனமூ விரண்டுள்ள
ஏக நாயகன் உலகருள் கருணையோ டினிதுற்றான். ......
19வேறு(ஈண்டிது நிகழ்ந்த)
ஈண்டிது நிகழ்ந்த எல்லை இப்பகல் அவுண ராகி
மாண்டவர் நமர்கள் அன்றே மற்றவர் படிவ முற்றுந்
தீண்டினங் கதிர்க்கை யாலுந் தீர்விதற் கிதுவென் பான்போல்
பூண்டகு தடந்தேர் வெய்யோன் புனற்பெருங் கடலுட் புக்கான். ......
20(வேலையின் நடுவு)
வேலையின் நடுவு புக்கு மேவரும் வடவைச் செந்தீக்
காலம திறுதி யாகக் கடிதெழீஇக் ககன நக்கிப்
பாலுற விரிந்தி யாண்டும் படர்ந்துகொண் டென்ன வந்தி
மாலையம் பொழுதில் செக்கர் வான்முழு தீண்டிற் றன்றே. ......
21வேறு(அன்னதொரு போழ்து)
அன்னதொரு போழ்துதனில் ஆறிரு தடந்தோள்
முன்னவனை நான்முகவ னேமுதல தேவர்
சென்னிகொடு தாழ்ந்துசிறி யேங்கள்இவ ணுன்றன்
பொன்னடி அருச்சனை புரிந்திடுதும் என்றார். ......
22(என்றுரைசெய் காலை)
என்றுரைசெய் காலைஎமை யாளுடைய வண்ணல்
நன்றென இசைந்திட நறைக்கொள்புனல் சாந்தத்
துன்றுமலர் தீபம்அவி தூப முதலெல்லாம்
அன்றொரு கணத்தின்முன் அழைத்தனர் கள்அங்ஙன். ......
23(எந்தையுமை தேர்ந்தி)
எந்தையுமை தேர்ந்திட இயம்பிய குமார
தந்திர நெறிப்படி தவாதறு முகற்கு
முந்திய குடங்கர்முதல் மூவகை யிடத்தும்*
2 புந்திமகிழ் பூசனை புரிந்தனர் பரிந்தே. ......
24(எஞ்சலில் அருச்ச)
எஞ்சலில் அருச்சனை இயற்றி இணைஇல்லோன்
செஞ்சரணி னைத்தமது சென்னிகொடு தாழா
அஞ்சலிசெய் தேத்திடலும் ஆங்க வரைநோக்கி
நெஞ்சுறு மகிழ்ச்சியொடு நீட ருள்புரிந்தான். ......
25(நீண்டவருள் செய்தி)
நீண்டவருள் செய்திடு நெடுந்தகை நுமக்கு
வேண்டுகுறை யுண்டெனின் விளம்புதிர்கள் என்னக்
காண்டகைய சூர்முதல் களைந்தெமை அளித்தாய்
ஈண்டுனருள் பெற்றன மியாதுகுறை மாதோ. ......
26(ஒன்றினி அளிப்பது)
ஒன்றினி அளிப்பதுள துன்னடியம் யாக்கை
நின்றிடு பகற்றுணையும் நின்னிரு கழற்கண்
மன்றதலை யன்புற வரந்தருதி எந்தாய்
என்றிடலும் நன்றென இரங்கியருள் செய்தான். ......
27வேறு(மலரய னாதியாம்)
மலரய னாதியாம் வரம்பி லோரெலாம்
பலர்புகழ் குமரனைப் பரவி வைகினார்
உலகினில் யாரையும் ஒறுத்த தானவர்
குலமென மாய்ந்தது கொடிய கங்குலே. ......
28(கங்குலுந் தாரகா)
கங்குலுந் தாரகா கணமும் மாய்ந்திடப்
பொங்கொளி வீசியே பொருவில் ஆதவன்
இங்குள வுலகெலாம் ஈறு செய்திடுஞ்
சங்கர னாமெனத் தமியன் தோன்றினான். ......
29(குணதிசை அமர்புரி)
குணதிசை அமர்புரி கொடியர் உய்த்திடுங்
கணையென விரிகதிர் காட்டி அங்கவை
அணைதலுங் குருதிநீர் அடைந்த தன்மைபோல்
இணையறு செக்கர்பெற் றிரவி தோன்றினான். ......
30(அப்பொழு தவ்விடை)
அப்பொழு தவ்விடை அமரர் கம்மியன்
கைப்படு செய்கையாற் கந்த வேள்ஒரு
செப்பரு நிகேதனஞ் செய்வித் தீசனை
வைப்புறு தாணுவில் வருவித் தானரோ. ......
31(ஆமயம் முதலிய)
ஆமயம் முதலிய ஐந்து கந்திகள்
மாமலர் மஞ்சனம் அமிர்தம் வான்துகில்
தூமணி விளக்கொடு தூபங் கண்ணடி
சாமரை ஆதிகள் அமரர் தந்திட. ......
32(முழுதொருங் குணர்)
முழுதொருங் குணர்ந்திடு முருகன் யாவருந்
தொழுதகும் இறைவனூல் தொடர்பு நாடியே
விழுமிய கண்ணுதல் விமலன் தாள்மலர்
வழிபடல் புரிந்தனன் மனங்கொள் காதலால். ......
33ஆகத் திருவிருத்தம் - 7857