Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

previous padalam   7 - இரணியன்யுத்தப் படலம்   next padalamiraNiyanyudhdhap padalam

Ms Revathi Sankaran (8.03mb)
(1 - 70)



Ms Revathi Sankaran (6.85mb)
(71 - 138)




(மூன்றாநாள் இரவு இரணியன் யுத்தம் நிகழ்ந்ததாகும்)

(ஒற்றரை நோக்கி)

ஒற்றரை நோக்கியே உணர்வின் மன்னவன்
     சொற்றது கேட்டலும் துளங்கி ஏங்கினான்
          மற்றவன் அளித்திடு மதலை மாரிநாட்
               புற்றுறை அரவெனப் புழுங்கு நெஞ்சினான். ......    1

(ஆயிர மறையுணர்)

ஆயிர மறையுணர்ந் தான்ற கேள்வியான்
     தூயநல் லறத்தொடு முறையும் தூக்கினோன்
          மாயமும் வஞ்சமும் மரபில் கற்றனன்
               தீயதோர் அவுணருள் திறலும் பெற்றுளான். ......    2

(தரணியின் கீழுறை)

தரணியின் கீழுறை அரக்கர் தங்கள்மேல்
     விரணம தாகிமுன் வென்று மீண்டனன்
          முரணுறு சென்னியோர் மூன்று கொண்டுளான்
               இரணியன் என்பதோர் இயற்கைப் பேரினான். ......    3

(இருந்தனன் ஒருபுடை)

இருந்தனன் ஒருபுடை எழுந்து தாதைதன்
     திருந்தடி இணையினைச் சென்னி சேர்த்திடாப்
          பொருந்துவ தொன்றுள புகல்வன் கேளெனாப்
               பரிந்துநின் றினையன பகர்தல் மேயினான். ......    4

(தேவரை நாம்சிறை)

தேவரை நாம்சிறை செய்த தன்மையால்
     ஆவது பாவமே ஆக்கம் வேறிலை
          யாவையும் உணர்ந்திடும் இறைவ திண்ணமே
               போவது நம்முயிர் திருவும் பொன்றுமால். ......    5

(சூருடைக் கானகம்)

சூருடைக் கானகம் தோற்றும் புன்மைபோய்ப்
     பாரிடைப் புவனமோர் பலவும் போற்றியே
          சீருடைத் தாகிஇத் திருவின் வைகுதல்
               ஆரிடைப் பெற்றனை அதனைத் தேர்திநீ. ......    6

(மாலைமுன் வென்ற)

மாலைமுன் வென்றதும் மலர யன்றனை
     ஏலுறு முனிவரை ஏவல் கொண்டதும்
          மேலுயர் அமரரை விழுமஞ் செய்ததும்
               ஆலமர் கடவுள்தன் ஆற்ற லால்அன்றோ. ......    7

(அரிபொர வருவனே)

அரிபொர வருவனேல் அமரர் கோனொடும்
     பிரமன்வந் தேற்குமேற் பிறர்கள் நேர்வரேல்
          பொருவதும் வெல்வதும் புறத்தைக் கண்டுபின்
               வருவதும் எளிதரோ கடனும் மற்றதே. ......    8

(நோற்றிடு தவத்தி)

நோற்றிடு தவத்தினை நோக்கி எண்ணிலாப்
     பேற்றினை உதவிய பிரானொர் தீமையான்
          மாற்றிட உன்னுமேல் வணங்கி மாறொரீஇப்
               போற்றுதல் அன்றியே பொரவுஞ் செய்யுமோ. ......    9

(ஒன்றொரு பயன்ற)

ஒன்றொரு பயன்றனை உதவி னோர்மனங்
     கன்றிட ஒருவினை கருதிச் செய்வரேல்
          புன்றொழில் அவர்க்குமுன் புரிந்த நன்றியே
               கொன்றிடும் அல்லது கூற்றும் வேண்டுமோ. ......    10

(கந்தனை அருள்புரி)

கந்தனை அருள்புரி கடவுள் ஆணையைச்
     சிந்தையின் மாறுகொள் சிறியர் யாவரும்
          அந்தம தடைந்தனர் அன்றி வன்மையால்
               உய்ந்தனர் இவரென உரைக்க வல்லமோ. ......    11

(கட்டுசெஞ் சடைமுடி)

கட்டுசெஞ் சடைமுடிக் கடவுள் காமனைப்
     பட்டிட விழித்ததும் பண்டு மூவெயில்
          சுட்டதும் அந்தகன் சுழலச் சூலமேல்
               இட்டதுங் கேட்டிலை போலும் எந்தைநீ. ......    12

(காலனை உதைத்த)

காலனை உதைத்ததுங் கங்கை யென்பவள்
     மேல்வரும் அகந்தையை வீட்டிக் கொண்டதும்
          மாலயன் அமரர்கள் இரிய வந்ததோர்
               ஆலம துண்டதும் அறிகி லாய்கொலோ. ......    13

(அண்டரை யோர்)

அண்டரை யோர்அரி யலைப்ப அன்னது
     கண்டநஞ் சுடையவன் கருதி வீரனால்
          தண்டம திழைத்ததுந் தக்கன் வேள்வியை
               விண்டிடு வித்ததும் வினவி லாய்கொலோ. ......    14

(கடிமலர் மேலவன்)

கடிமலர் மேலவன் இகழக் கண்ணுதல்
     வடுகனை ஏவிவள் ளுகிரின் அன்னவன்
          முடிகளை வித்தது முகுந்தன் தன்னிடை
               அடைதரு வித்ததும் அறிகி லாய்கொலோ. ......    15

(முந்தொரு மகபதி)

முந்தொரு மகபதி மொய்ம்பை அட்டதும்
     ஐந்தியல் அரக்கரை அழித்த செய்கையும்
          தந்தியை உழுவையை உரித்த தன்மையும்
               எந்தைநிற் குணத்தினர் இல்லை போலுமால். ......    16

(ஏமுற உலகடும்)

ஏமுற உலகடும் ஏனக் கொம்பினை
     ஆமையின் ஓட்டினை அணிந்த தன்மையும்
          பூமலர் மிசையவன் முதல புங்கவர்
               மாமுடி அணிந்ததும் மதிக்கி லாய்கொலோ. ......    17

(கதித்திடு முனிவரர்)

கதித்திடு முனிவரர் கடிய வேள்வியில்
     உதித்திடு முயலகன் ஒல்லென் றார்த்தெழப்
          பதத்தினில் உதைத்தவன் பதைப தைத்திட
               மிதித்ததும் பிறவுநீ வினவிற் றில்லையோ. ......    18

(ஒன்னலர் தன்மை)

ஒன்னலர் தன்மைபூண் டுற்று ளோர்தமைத்
     தன்னிகர் இல்லவன் தண்டம் செய்தன
          இன்னமோர் கோடியுண் டிருந்தி யான்இவண்
               பன்னினும் உலப்புறா செல்லும் பல்லுகம். ......    19

வேறு

(ஆதலால் ஈசன் தன்னை)

ஆதலால் ஈசன் தன்னை அடைந்தவர் உய்வர் அல்லாப்
     பேதையர் யாவ ரேனும் பிழைக்கலர் இனைய வாய்மை
          வேதநூல் பிறவும் கூறும் விழுப்பொரு ளாகும் நீயும்
               ஏதமா நெறியின் நீங்கி இப்பொருள் உணர்தி எந்தாய். ......    20

(இன்னமொன் றுரை)

இன்னமொன் றுரைப்பன் நீமுன் இருந்தவம் இயற்ற இந்த
     மன்னிலை புரிந்த மேலோன் மாற்றவும் வல்ல னாமால்
          அன்னவன் குமரன் தன்னோ டமர்செய்வ தியல்போ ஐய
               தன்னினும் உயர்ந்தா ரோடு பொருதிடில் சயமுண் டாமோ. ......    21

(பூதல வரைப்பும்)

பூதல வரைப்பும் வானும் திசைகளும் புணரி வைப்பும்
     மேதகு வரையும் தொன்னாள் வேறுபா டுற்ற நோக்கி
          ஈதென மாயம் கொல்லென் றெண்ணினம் அனைய வெல்லாம்
               ஆதிதன் குமரன் செய்த ஆடலென் றுரைத்தா ரன்றே. ......    22

(அண்ணலங் குமரன் ஆடல்)

அண்ணலங் குமரன் ஆடல் அறிகிலர் மருளுங் காலைக்
     கண்ணிடை அன்னான் மற்றோர் வடிவினைக் காட்டி நிற்ப
          விண்ணவர் பலரும் சூழ்ந்து வெகுண்டனர் வெம்போர் ஆற்றத்
               துண்ணென அவரை அட்டாங் கெழுப்பினன் தூயோ னென்பர். ......    23

(எண்டொகை பெற்ற)

எண்டொகை பெற்ற அண்டம் யாவையும் புவன வைப்பும்
     மண்டுபல் வளனும் ஏனை மன்னுயிர்த் தொகுதி முற்றும்
          அண்டரும் மூவர்தாமும் அனைத்துமா கியதன் மேனி
               கண்டிட இமையோர்க் கெல்லாம் காட்டினன் கந்தன் என்பர். ......    24

(மறைமுத லவனை)

மறைமுத லவனை முன்னோர் வைகலின் வல்லி பூட்டிச்
     சிறையிடை வைத்துத் தானே திண்புவி அளித்து முக்கண்
          இறையவன் வேண்ட விட்டான் என்பரால் இனைய வாற்றால்
               அறுமுகன் செய்கை கேட்கின் அற்புத மாகு மன்னோ. ......    25

(அங்கண்மா ஞாலம்)

அங்கண்மா ஞாலம் தன்னை மேலினி அகழு மோட்டுச்
     செங்கண்மால் ஏன யாக்கை எயிற்றையோர் சிறுகை பற்றி
          மங்குல்வா னுலகிற் சுற்றி மருப்பொன்று வழுத்த வாங்கித்
               தங்கணா யகற்குச் சாத்தச் சண்முகன் அளிக்கு மென்பர். ......    26

(நேரலர் புரமூன்)

நேரலர் புரமூன் றட்ட நிருமலக் கடவுள் மைந்தன்
     ஆரினும் வலியோன் என்கை அறைந்திட வேண்டுங் கொல்லோ
          பாரினை அளந்தோன் உய்த்த பரிதியை அணியாக் கொண்ட
               தாரகன் தன்னை வெற்பைத் தடிந்தது சான்றே அன்றோ. ......    27

(அறுமுகத் தொரு)

அறுமுகத் தொருவ னாகும் அமலனை அரன்பால் வந்த
     சிறுவனென் றிகழல் மன்னா செய்கையால் பெரியன் கண்டாய்
          இறுதிசேர் கற்பம் ஒன்றின் ஈறிலா தவன்பால் தோன்றும்
               முறுவலின் அழலு மன்னோ உலகெலாம் முடிப்ப தம்மா. ......    28

(வாசவன் குறையும்)

வாசவன் குறையும் அந்தண் மலரயன் குறையும் மற்றைக்
     கேசவன் குறையும் நீக்கிக் கேடிலா வெறுக்கை நல்க
          வாசிலோர் குழவி போலாய் அறுமுகங் கொண்டான் எண்டோள்
               ஈசனே என்ப தல்லாற் பிறிதொன்றை இசைக்க லாமோ. ......    29

(கங்கைதன் புதல்வன்)

கங்கைதன் புதல்வன் என்றுங் கார்த்திகை மைந்தன் என்றுஞ்
     செங்கண்மால் மருகன் என்றுஞ் சேனையின் செல்வன் என்றும்
          பங்கயன் முதலோர் தேறாப் பரஞ்சுடர் முதல்வன் தன்னை
               இங்கிவை பலவுஞ் சொல்வ தேழைமைப் பால தன்றோ. ......    30

(பன்னிரு தடந்தோள் வள்ளல்)

பன்னிரு தடந்தோள் வள்ளல் பரிதியம் பகைவன் சூழ்வால்
     தன்னுறு படைஞர் மாய்ந்த தன்மையை வினவித் தாழா
          தன்னவர் மீளு மாற்றால் அளக்கர்மேல் விடுத்த வேலை
               இந்நகர் தன்னில் தூண்டின் யாரிவண் இருத்தற் பாலார். ......    31

(தாரகற் செற்ற)

தாரகற் செற்ற தென்றால் தடவரை பொடித்த தென்றால்
     வார்புனற் கடலுள் உய்த்த வலியரை மீட்ட தென்றால்
          கூருடைத் தனிவேல் போற்றிக் குமரன்றாள் பணிவ தல்லால்
               போரினைப் புரிதும் என்கை புலமையோர் கடன தாமோ. ......    32

(அரனிடைப் பிறந்த)

அரனிடைப் பிறந்த அண்ணல் ஆணையால் வந்த தூதன்
     திருநகர் அழித்தான் முன்னஞ் சேனையுந் தானு மேகி
          ஒருபகற் பானு கோபன் உலைவுறப் பொருது வென்று
               கருதரும் அவுணர் தானைக் கடலையுங் கடந்து போனான். ......    33

(இப்பகல் வந்து )

இப்பகல் வந்து வீரன் இருஞ்சமர் இயற்ற எம்முன்
     தப்பினன் மறைந்து மாயைப் படைதொடா உணர்ச்சி தள்ளி
          அப்புனல் அளக்கர் உய்ப்ப அறுமுகன் வேலான் மீண்டுன்
               மெய்ப்பதி யடுவான் என்றால் அவனையார் வெல்லற் பாலார். ......    34

(இறுதியும் எய்தான்)

இறுதியும் எய்தான் என்னின் ஏற்றதொல் லுணர்ச்சி மாய்ந்து
     மறியினும் எழுவன் என்னின் மாயையுந் தொலையும் என்னின்
          செறியும்விண் முதல்வர் தந்த படைக்குநேர் செலுத்து மென்னின்
               அறிஞர்கள் அவன்மேற் பின்னும் அமர்செயக் கருது வாரோ. ......    35

(தூதென முன்னர்)

தூதென முன்னர் வந்தோன் ஒருவனால் தொலையும் இந்த
     மூதெயில் நகர முற்றும் அவுணரும் முடிவர் என்னின்
          ஆதியும் முடிவும் இல்லா அறுமுகன் அடுபோர் உன்னிப்
               போதுமேல் இமைப்பின் எல்லாப் புவனமும் பொன்றி டாவோ. ......    36

(கரங்கள்பன் னிரண்டு)

கரங்கள்பன் னிரண்டு கொண்ட கடவுள்வந் தெதிர்க்கின் நந்தம்
     வரங்களும் படைகள் யாவும் மாயையுந் திறலுஞ் சீரும்
          உரங்களுந் திருவு மெல்லாம் ஊழிநா யகன்முன் னுற்ற
               புரங்களும் அவுண ரும்போற் பூழிபட் டழிந்தி டாவோ. ......    37

(ஒற்றனை விடுத்து)

ஒற்றனை விடுத்து நாடி உம்பரை விடாமை நோக்கி
     மற்றிவட் போந்து நம்மேல் வைகலும் வந்தி டாது
          சுற்றுதன் தானை யோடுந் தூதனைத் தூண்டி அங்கண்
               இற்றையின் அளவு நம்பாற் கருணைசெய் திருந்தான் ஐயன். ......    38

(கருணைகொண்)

கருணைகொண் டிருந்த வள்ளல் கருத்திடைத் தொலைவில் சீற்றம்
     வருவதன் முன்னம் இன்னே வானவர் சிறையை மாற்றி
          உரியநந் தமரும் யாமும் ஒல்லையின் ஏகி ஐயன்
               திருவடி பணிந்து தீயேஞ் செய்தன பொறுத்தி யென்று. ......    39

(பணிந்துழி அமல)

பணிந்துழி அமல மூர்த்தி பலவுநாம் புரிந்த தீமை
     தணிந்தருள் செய்து தானுந் தணப்பிலா வரங்கள் நல்கி
          அணிந்ததன் தானை யோடும் அகலுமால் உய்தும் யாமும்
               துணிந்திது புகன்றேன் ஈதே துணிவென மதலை சொற்றான். ......    40

வேறு

(பரிந்துதனக் குறுதி)

பரிந்துதனக் குறுதியிவை தெருட்டுதலும் அதுகேளாப் பகுவாய் கால
     விரிந்தபுகைப் படலிகைபோய்த் திசையனைத்தும் விழுங்கியிட வெகுளி மூளக்
          கரிந்ததன துடல்வியர்ப்ப உயிர்ப்புவர இதழ்துடிப்பக் கண்கள் சேப்ப
               எரிந்துமனம் பதைபதைப்ப உருமெனக்கை எறிந்துநகைத் தினைய சொல்வான். ......    41

(தூவுடைய நெடுஞ்சு)

தூவுடைய நெடுஞ்சுடர்வேல் ஒருசிறுவன் ஆற்றலையும் தூதாய் வந்த
     மேவலன்தன் வலியினையும் யான்செய்யப் படுவனவும் விளம்பா நின்றாய்
          ஏவருனக் கிதுபுகன்றார் புகன்றாரை உணர்வேனேல் இன்னே அன்னோர்
               ஆவிதனைக் களைந்திடுவேன் ஆங்கவர்தொல் குலங்களெலாம் அடுவன் யானே. ......    42

(ஞாலமெலா முன்)

ஞாலமெலா முன்படைத்த நான்முகன்ஐந் தியலங்கம் நவின்று போவான்
     ஆலமிசைத் துயில்கூர்வான் என்னிளவல் தனக்குடைந்தான் அமரர் கோமான்
          வேலைதனின் மீன்முழுதும் என்பணியில் தந்தனனால் வெள்ளி வெற்பின்
               நீலமிடற் றவன்மகனோ தொலைவறுமென் பேராற்றல் நீக்கு கின்றான். ......    43

(அரியயனும் புரந்தர)

அரியயனும் புரந்தரனும் விண்ணவர்க ளெல்லோரும் அகிலந் தன்னின்
     விரவுகணத் தவரெவரும் யார்க்குமுத லாகுமுக்கண் விமலன் தானும்
          பொருசமரின் ஏற்றிடினும் எனக்கழிவ தன்றிவென்று போவ துண்டோ
               ஒருசிறிதும் புந்தியிலா மைந்தாயான் பெற்றவரம் உணர்கி லாயோ. ......    44

வேறு

(ஆற்றல் விட்டனை)

ஆற்றல் விட்டனை குலமுறை பிழைத்தனை அரசின்
     ஏற்றம் நீங்கினை ஒன்னலர்க் கஞ்சினை இசைத்தாய்
          மாற்றம் ஒன்றினி உரைத்தியேல் உன்றனை வல்லே
               கூற்று வன்புரத் தேற்றுவன் யானெனக் கொதித்தான். ......    45

(கொதித்த வேலை)

கொதித்த வேலையின் மைந்தனும் நம்முரை கொடியோன்
     மதித்தி லன்இவன் மாய்வது சரதமே வான்மேல்
          உதித்த செங்கதிர்ப் பரிதியங் கடவுள்சூழ் உலகில்
               விதித்தி றந்தனை யாவரே வன்மையால் வென்றோர். ......    46

(இறுதி யாகிய)

இறுதி யாகிய பருவம்வந் தணுகிய திவனுக்
     குறுதி யாம்பல கூறினென் பயனென உன்னா
          அறிவன் நீசில அறிந்தனன் போலநிற் கறைந்தேன்
               சிறுவன் ஆதலிற் பொறுத்தியென் றாற்றினன் சீற்றம். ......    47

(வெஞ்சி னந்தனை)

வெஞ்சி னந்தனை ஆற்றியித் தாதைதான் விரைவில்
     துஞ்சு முன்னர்யான் இறப்பது நன்றெனத் துணியா
          எஞ்ச லில்லவன் தாளிணை வணங்கிநீ யிசைத்த
               வஞ்சி னந்தனை முடிப்பன்யான் என்றனன் மைந்தன். ......    48

(அனைய வேலையில்)

அனைய வேலையில் ஐயநீ மாற்றலர்க் கஞ்சி
     வினையம் யாவுமுன் னுரைத்தனை அவர்கள்பால் வீரம்
          புனைய உன்னிய தென்கொலோ என்றலும் பொன்னோன்
               உனது மைந்தன்யான் அஞ்சுவ னோவென உரைத்தான். ......    49

(தாதை அன்னதோர்)

தாதை அன்னதோர் வேலையின் மைந்தனைத் தழீஇக்கொண்
     டீது நன்றுநன் றுன்பெருந் தானையோ டெழுந்து
          போதி யென்றலும் விடைகொடு புரந்தனில் போந்து
               மாதி ரம்புகழ் கின்றதன் னுறையுளில் வந்தான். ......    50

(நிறங்கொள் மேருவை)

நிறங்கொள் மேருவை நிலாக்கதிர் உண்டநீர் மையைப்போல்
     மறங்கொள் சூர்மகன் ஆடக மெய்யில்வச் சிரத்தின்
          திறங்கொள் சாலிகை கட்டினன் தூணிபின் செறித்தான்
               பிறங்கு கோதையும் புட்டிலும் கைவிரல் பெய்தான். ......    51

(அடங்க லர்க்கு)

அடங்க லர்க்குவெங் கூற்றெனும் ஆடல்வில் லொன்றை
     இடங்கை பற்றினன் வலங்கையில் பலபடை எடுத்தான்
          தடங்கொள் மோலியில் தும்பையஞ் சிகழிகை தரித்தான்
               மடங்கல் ஆயிரம் பூண்டதேர் புக்கனன் வந்தான். ......    52

(ஆற்றல் மிக்குறு)

ஆற்றல் மிக்குறு துணைவர்ஆ யிரவரும் அனிகம்
     போற்று மன்னர்ஆ யிரவரும் போரணி புனைந்து
          காற்றெ னப்படர் கவனமான் தேரிடைக் கலந்து
               நாற்றி றற்படை தன்னொடு புடைதனில் நடப்ப. ......    53

(நூறொ டேயெழு)

நூறொ டேயெழு நூறுவெள் ளந்நொறி லுடைத்தேர்
     சீறும் யானையும் அத்தொகை அவுணர்தஞ் சேனை
          ஆறு நூற்றிரு வெள்ளத்த பரிகளும் அனைத்தே
               சூறை மாருத மாமென அவன்புடை சூழ்ந்த. ......    54

(துடிக றங்கின கற)

துடிக றங்கின கறங்கின பேரிதுந் துபிப்பேர்
     இடிக றங்கின வலம்புரி கறங்கின எடுக்கும்
          கொடிக றங்கின தானைகள் கறங்கின குனித்துக்
               கடிக றங்கின கறங்கின கழுகொடு காகம். ......    55

(வசலை மென்கொடி)

வசலை மென்கொடி வாடிய தன்னநுண் மருங்கில்
     கிசலை யம்புரை சீறடிக் கிஞ்சுகச் செவ்வாய்ப்
          பசலை சேர்முலை மங்கையர் விழிக்கணை பாய
               வசலை மங்கைதன் மெய்த்தனு வளைந்திட அகன்றான். ......    56

(அறந்த லைப்படும்)

அறந்த லைப்படும் இரணியன் அனிகநால் வகையும்
     புறந்த லைப்படத் துயரமும் தலைப்படப் போந்து
          மறந்த லைப்படு பூதர்கள் ஆர்ப்பொலி வழங்கும்
               பறந்த லைக்களம் புக்கனன் அமரர்மெய் பனிப்ப. ......    57

(விண்ணு ளோர்களும்)

விண்ணு ளோர்களும் பிறருமவ் வியனகர் நோக்கித்
     துண்ணெ னத்துளங் குறுவதுங் கண்டனன் தொன்னாள்
          மண்ணி னுள்ளபா ரிடமெலாம் வல்லைவந் தழித்து
               நண்ணு கின்றதுங் கண்டனன் நன்றென நக்கான். ......    58

(தனது மாநகர்)

தனது மாநகர் அழிந்தது கண்டனன் தணியா
     முனிவு கொண்டனன் வெய்துயிர்த் தனன்உடல் முற்றும்
          நனிவி யர்ப்புள தாயினன் மருங்குற நணுகும்
               அனிக வேந்தரைத் துணைவரை நோக்கியீ தறைவான். ......    59

(ஆயி ரம்வெள்ளம்)

ஆயி ரம்வெள்ளம் ஓரொரு திசையினில் ஆக்கி
     நீயிர் யாவரும் நால்வகைத் தாகியே நீங்கி
          மாயி ருந்திறற் சாரதன் வீரரை வளைந்து
               போயெ திர்ந்துவெஞ் சமர்புரி வீரெனப் புகன்றான். ......    60

(அக்க ணந்தனில் துணை)

அக்க ணந்தனில் துணைவரும் அனிகமன் னவருந்
     தக்க தேயென இரணியன் மொழிதலைத் தாங்கித்
          திக்கி லாயிரம் வெள்ளமாச் சேனையைக் கொண்டு
               தொக்க பாரிட வெள்ளமேற் போயினார் சூழ. ......    61

(தானை மன்னரும்)

தானை மன்னரும் துணைவரும் திசைதொறும் தழுவிப்
     போன காலையில் ஆடகன் குடபுலம் புகுதுஞ்
          சேனை முன்கொடு சென்றனன் இன்னதோர் செய்கை
               மான வேற்படைக் காவலன் கண்டனன் மன்னோ. ......    62

(வீர மொய்ம்பினன்)

வீர மொய்ம்பினன் அதுகண்டு வெஞ்சமர்க் குறுவான்
     சூரன் மைந்தருள் ஒருவனோ சுற்றமா யினனோ
          ஆரி வன்கொலென் றையுறு காலையின் அயலே
               நார தன்எனும் முனிவரன் வந்திவை நவில்வான். ......    63

(இரணி யன்எனும்)

இரணி யன்எனும் மைந்தனைச் சூரன்இங் கேவ
     அருணன் என்னவந் தடைந்தனன் அம்படை யலைப்ப
          வருணன் இந்திரன் மந்திரி மறலிமா திரத்தின்
               முரணு றும்படை நான்கையும் முன்னுறச் செலுத்தி. ......    64

(மாயை வல்லவன்)

மாயை வல்லவன் படைபல பரித்தவன் வஞ்ச
     மாய சூழ்ச்சிகள் பற்பல தெரிந்தவன் அவனை
          நீய லாதுவெல் கின்றவர் இல்லையால் நினக்கிங்
               கேய தன்மையின் அமர்தனைப் புரிதியா லென்றான். ......    65

(என்று கூறியே)

என்று கூறியே நாரதன் விண்மிசை ஏக
     நன்று நன்றென அன்னதை வினவியே நகைத்துத்
          துன்று பாரிடத் தலைவரைச் சுற்றமா யுளரை
               வென்றி மொய்ம்புடை ஆண்டகை நோக்கியே விளம்பும். ......    66

(ஏற்ற தானையை)

ஏற்ற தானையை நமையெலாம் சூழ்ந்திட ஏவி
     மாற்ற லன்மகன் குறுகுவான் நீவிரும் வல்லே
          நாற்றி சைக்கணும் சாரதப் படையொடு நடந்து
               வீற்று வீற்றுநின் றமர்புரி வீரென விளம்பி. ......    67

(வீரர் எண்மரை)

வீரர் எண்மரை இலக்கரை வியன்கணத் தவரைப்
     பாரி டங்களை நால்வகைப் படும்வகை பகுத்தே
          ஈரி ரண்டுமா திரத்தினும் சென்றிட ஏவிச்
               சூரன் மாமகன் வருதிசைப் படர்ந்தனன் தோன்றல். ......    68

(காலை யாங்கதின்)

காலை யாங்கதின் அவுணமாப் பெரும்படை கடிதின்
     நாலு மாதிரந் தன்னினும் நரலைசூழ்ந் தென்ன
          ஓல மோடுவந் தணுகலும் உருத்துவெம் பூத
               சாலம் யாவையும் ஏற்றன சமரினைப் புரிய. ......    69

(மற்ற வேலையில்)

மற்ற வேலையில் அவுணர்கள் மழுப்படை நாஞ்சில்
     கற்றை யஞ்சுடர்ப் பரிதிவார் சிலையுமிழ் கணைகள்
          கொற்ற மிக்குறு தோமரந் தண்டெழுக் குலிசம்
               ஒற்றை முத்தலை வேல்முதற் படையெலாம் உய்த்தார். ......    70

(தோடு சிந்திய)

தோடு சிந்திய தேனறா மராமரத் தொகையின்
     காடு சிந்தினர் கதைகளுஞ் சிந்தினர் கணிச்சி
          நீடு சிந்துரப் பருவரை சிந்தினர் நேமி
               மாடு சிந்தினர் சிந்தினர் பூதரில் வலியோர். ......    71

(தலையி ழந்தனர்)

தலையி ழந்தனர் கரங்களும் இழந்தனர் தாளின்
     நிலையி ழந்தனர் சாரதர் அவுணரும் நெடுங்கை
          மலையி ழந்தனர் தேர்பரி இழந்தனர் மறவெங்
               கொலையி ழந்தனர் மடிந்தனர் குருதியுட் குளித்தார். ......    72

(வசையில் பூதரும்)

வசையில் பூதரும் அவுணரும் இவ்வகை மயங்கித்
     திசைதொ றும்பொரு கின்றுழித் தனித்தனி சேர்ந்து
          விசைய மொய்ம்பினான் விடுத்திடு வீரரும் விறல்சேர்
               அசுர வேந்தரும் வெஞ்சமர் விளைத்தனர் அன்றே. ......    73

(அனைய எல்லையின்)

அனைய எல்லையின் வீரவா குப்பெயர் அறிஞன்
     கனகன் முன்வரும் சேனைமாப் பெருங்கடல் கண்டு
          முனிவு கொண்டுதன் பாணியின் மூரிவெஞ் சிலையைக்
               குனிவு செய்தனன் அறத்தனிக் கடவுளும் குனிப்ப. ......    74

(மலைவ ளைத்திடு)

மலைவ ளைத்திடு தன்மைபோல் வானுற நிமிர்ந்த
     சிலைவ ளைத்தனன் நாணொலி யெடுத்தனன் தெழித்தான்
          அலைவ ளைத்திடு கடலெலாம் நடுங்கிய அனந்தன்
               தலைவ ளைத்தனன் எண்டிசை நாகமும் சலித்த. ......    75

(காலை யங்கதின்)

காலை யங்கதின் வீரமொய்ம் புடையதோர் காளை
     கோலொ ராயிரப் பத்தினைக் குனிசிலைக் கொளுவி
          மேல தாகிய கானிடைப் பொழிதரும் மேக
               சால மாமெனப் பொழிந்தனன் அவுணர்தா னையின்மேல். ......    76

(பிடிகு றைந்தன)

பிடிகு றைந்தன களிற்றினம் குறைந்தன பிடிக்கும்
     கொடிகு றைந்தன கொய்யுளைப் புரவிதேர் குறைந்த
          அடிகு றைந்தன தலைகளும் குறைந்தன அம்பொன்
               தொடிகு றைந்தன குறைந்தன அவுணர்தம் தோள்கள். ......    77

(எறித லுற்றிடு)

எறித லுற்றிடு சூறையால் பல்கவ டிற்று
     முறித லுற்றுவீழ் பொதும்பர்போல் மொய்ம்பன்வா ளியினால்
          செறித லுற்றதம் வடிவெலாம் சிதைந்துவே றாகி
               மறித லுற்றன நால்வகைப் படைகளும் மயங்கி. ......    78

வேறு

(ஆரியன் விட்ட)

ஆரியன் விட்ட அயிற்கணை பாய
     மூரி மதக்கரி முற்றுயர் யாக்கை
          சோரி உகுப்பன தொல்பக லின்கண்
               மாருதம் உய்த்திடு வன்னியை யொப்ப. ......    79

(விறல்கெழு மொய்ம்)

விறல்கெழு மொய்ம்பன் விடுத்திடு கின்ற
     பிறைமுக வாளி பெருங்கரி யின்கை
          அறைபுரி கின்றஅ ராத்தொகை தன்னைக்
               குறைமதி சென்று குறைப்பன போலாம். ......    80

(வித்தக வீரன்)

வித்தக வீரன் விடுங்கணை வேழ
     மத்தக முற்றிட மற்றவை போழ்ந்தே
          முத்தம் உகுப்ப முகந்திடு கும்பம்
               உய்த்திடும் நல்லமு தச்சுதை யொக்கும். ......    81

(கரம்பட ருங்கவி)

கரம்பட ருங்கவி கைத்தொகை தேரின்
     உரம்படு கால்கள் உலம்புரை தோளான்
          சரம்பட விற்ற தலைத்தலை உற்ற
               வரம்பின் மதிக்குறை மல்கிய வென்ன. ......    82

(மேக்குயர் மொய்ம்)

மேக்குயர் மொய்ம்பன் விடுங்கணை யால்பாய்
     மாக்கள் துணிந்து மறிந்து கிடந்த
          தேக்கிய தெண்கட லிற்றிரை முற்றும்
               தாக்கிய சூறை தனக்கழிந் தென்ன. ......    83

(பெருந்தகை விட்ட)

பெருந்தகை விட்ட பிறைத்தலை வாளி
     திருந்தலர் தோலுறு செங்கை துணிப்ப
          வருந்திட மாமதி வௌவும்அ ராவைத்
               துரந்திடு கின்றதன் சுற்றம தென்ன. ......    84

வேறு

(தக்க வன்மையால்)

தக்க வன்மையால் சிறந்துளோர் தமதுமாற் றலர்மேல்
     மிக்க வெஞ்சினத் தேகல்போல் அனிகவெள் ளத்தில்
          தொக்கு வந்துவந் திழிந்தசெஞ் சோரியின் வெள்ளம்
               மைக்க ருங்கடல் வெள்ளத்தி னூடுபோய் மடுத்த. ......    85

(குரைத்தி டும்பெரு)

குரைத்தி டும்பெரு ஞாளியும் குறுநரிக் குழாமும்
     நிருத்த மேயின கவந்தமும் நிணனுண்டு செருக்கி
          உருத்த குந்திறல் காளியும் கூளியும் ஒருசார்க்
               கிருத்தி மங்களும் தலைத்தலை மயங்கின கெழுமி. ......    86

(சிலையின் வல்லவன்)

சிலையின் வல்லவன் இவ்வகை கணைமழை சிதறி
     நிலைய வெல்லையின் மலைந்திடும் தானவர் நீத்தம்
          உலைப டுங்கனல் முன்னுறும் இழுதென உடைந்து
               குலைகு லைந்துதம் உயிருடன் யாக்கையுங் குறைந்த. ......    87

(ஆளி யாயிரம்)

ஆளி யாயிரம் பூண்டதேர் மிசைவரும் அவுணர்
     மீளி யாயது கண்டனன் எடுத்ததோர் வில்லின்
          வாளி யாயிரம் ஒருதொடை தூண்டியே மறவெங்
               கூளி யாயிர கோடியோ ரிமைப்பினில் கொன்றான். ......    88

(கொன்ற காலையில்)

கொன்ற காலையில் பூதவெம் படைகளும் குலைந்து
     சென்ற மாதிரம் தெரிந்தில தழல்விடம் தெறக்கண்
          டன்று போகிய தேவரே தேவரே ஆயினர் அதனை
               நின்ற தானையம் தலைவரில் கண்டனன் நீலன். ......    89

(கண்ட நீலனும்)

கண்ட நீலனும் இறுதிநாள் அழலெனக் கனன்று
     திண்டி றற்கெழு மன்னவன் மதலைமுன் சென்றே
          அண்ட முந்தலை பனித்திட உருமென ஆர்த்தான்
               உண்டு போரினி என்றனர் அமரரா யுள்ளோர். ......    90

(காலை யன்னதில்)

காலை யன்னதில் அவுணர்தம் இறைமகன் கனன்று
     வேல தொன்றினை ஆகமூழ் குற்றிட விடுப்ப
          நீலன் வன்மைபோய் நின்றிலன் சென்றனன் நெடிய
               சால மொன்றுகொண் டவன்தடந் தேரினைத் தடிந்தான். ......    91

(வையம் அங்கழி)

வையம் அங்கழி வெய்தலும் அவுணர்கோன் மற்றோர்
     செய்ய தேரிடை வல்லையில் தாவிநாண் செறித்துக்
          கையில் வாங்கிய சராசனத் திடையுறக் கடைநாட்
               பொய்யின் மாமுகி லாமெனச் சுடுசரம் பொழிந்தான். ......    92

(பொழிந்த வார்க)

பொழிந்த வார்கணை முழுவதும் அவனுரம் புகலும்
     அழிந்தி லன்சிறி தஞ்சிலன் குலகிரி அன்றி
          ஒழிந்த குன்றெலாம் பறித்தனன் வீசியே உடலத்
               திழிந்த சோரிநீர் சொரிதர நின்றனன் இமையான். ......    93

(நிருப னாகிய)

நிருப னாகிய ஆடகன் தன்னெதிர் நீலன்
     மரபின் நூக்கிய வரையெலாஞ் சரங்களால் மாற்ற
          விரைவி னோடுபோய் அவன்தடந் தேரினை வெகுளா
               ஒருகை யாலெடுத் தெறிந்தனன் அமரரும் உலைய. ......    94

(ஆற்ற லந்தடந்)

ஆற்ற லந்தடந் தேரினை வீசிட அதுவுங்
     காற்று லாய்நிமிர் விண்ணுறப் போயது காளை
          மாற்றொர் வையமேற் பாய்ந்திட உன்னினன் வரலும்
               ஏற்றெ ழுந்தெதிர் புக்கனன் நீலனாம் இகலோன். ......    95

(நிற்றி நிற்றிநீ)

நிற்றி நிற்றிநீ என்றுகொண் டேகியே நீலன்
     எற்றி னான்அவன் உரத்திடை அவுணனும் இவனைப்
          பற்றி வீசினன் பூதனும் மீண்டுதன் பதத்தாற்
               செற்ற மோடுதைத் துருட்டிவான் உருமெனத் தெழித்தான். ......    96

(நெறிந்த பங்கிசேர்)

நெறிந்த பங்கிசேர் நீலனங் குதைத்திட நிருதர்
     முறிந்து நீங்கிய களத்திடை வழுக்கிவீழ் முகில்போல்
          மறிந்து வீழ்தரும் அவுணன்மேற் பாய்ந்தனன் மகவான்
               எறிந்த வச்சிரப் பெரும்படை இதுகொலென் றிசைப்ப. ......    97

(வீழ்ந்த காளையை)

வீழ்ந்த காளையைத் தன்பெருந் தாள்களால் மிதிப்பக்
     கீழ்ந்து போயது மாநிலம் அவன்முடி கிழிந்த
          போழ்ந்த தாகமும் வாய்வழி குருதிநீர் பொழிய
               வாழ்ந்து வெந்துயர் உழந்தனன் செய்வதொன் றறியான். ......    98

(திறல ழிந்தனன்)

திறல ழிந்தனன் சீற்றமும் அழிந்தனன் செங்கோல்
     மறலி கொள்வதற் கணியனே ஆதலும் மனத்தில்
          இறுதி எய்திய தீங்கினிச் செய்வதென் எமக்கோர்
               உறுதி யாதென உன்னினன் பின்னரொன் றுணர்ந்தான். ......    99

(மாயம் ஒன்றினை)

மாயம் ஒன்றினைப் புரிகுதும் யாமென வல்லே
     ஆய மந்திரம் புகன்றனன் பூசனை அனைத்தும்
          தூய சிந்தையால் நிரப்பினன் வேண்டிய துணியா
               ஆய தெய்வதம் உன்னினன் அன்னதோர் எல்லை. ......    100

வேறு

(தன்போலொரு வடி)

தன்போலொரு வடிவன்னதொர் சமரின்தலை அணுகா
     மின்போலொளிர் தருபல்படை விரவும்படி பரியா
          என்போலெவர் பொருகின்றவ ரெனவீரம துரையா
               வன்போரது புரியும்படி வலிகொண்டுமுன் வரலும். ......    101

(கண்டானது வரு)

கண்டானது வருகின்றது கடிதேயெதிர் நடவா
     எண்டானவர் அமரின்தலை யிட்டேகிய தொருபொற்
          றண்டானது கொண்டேஅதன் தலைமோதினன் இமையோர்
               விண்டான்இவற் கழிந்தானென நீலன்தனை வியந்தார். ......    102

(வியக்கும்பொழு)

வியக்கும்பொழு தினில்அன்னவன் விடுமாயமும் விசையால்
     உயக்குற்றவ ரெனவிண்மிசை உயர்கின்றது காணாத்
          துயக்குற்றிடு நீலன்னது தொடர்ந்தான்கரந் திடலும்
               மயக்குற்றனன் நெடிதுன்னினன் மண்மீதுறக் கண்டான். ......    103

(காணாவல மரு)

காணாவல மருவானிது கரவாமென உணரான்
     நாணால்மிகு சீற்றத்தொடு நணுகுற்றனன் அதுவுந்
          தூணார்தடந் தோள்கொண்டமர் தொடங்குற்றது தொடங்கிச்
               சேணாகிய தணித்தாயது திசையெங்கணுந் திரியும். ......    104

(பாரிற்புகும் விண்ணி)

பாரிற்புகும் விண்ணிற்புகும் பரிதிச்சுட ரெனவே
     தேரிற்புகும் மாவிற்புகும் சிலையிற்புகும் திரைமுந்
          நீரிற்புகும் வடவாமுக நெருப்பிற்புகும் நீலக்
               காரிற்புகும் நிரயத்திடை கடிதிற்புகும் எழுமே. ......    105

(முன்னேவரும் இட)

முன்னேவரும் இடத்தேவரும் முதுவெம்பிடர் தழுவிப்
     பின்னேவரும் வலத்தேவரும் பெரும்போரினைப் புரியும்
          பொன்னேகரு தியமங்கையர் புலனாமெனத் திரியும்
               என்னேஅதன் இயல்யாவையும் யாரேபுகல் வாரே. ......    106

(மாலுந்திறம் இது)

மாலுந்திறம் இதுபெற்றியின் வருகின்றதொர் மாயக்
     கோலந்தனி தொடராவலி குறைந்தான்திரிந் துலைந்தான்
          காலுந்தளர் கின்றானவன் கல்வித்திறம் புகழா
               மேலென்செய லெனஉன்னி வெகுண்டான்அடல் வீரன். ......    107

(வென்றார்புகழ் தரு)

வென்றார்புகழ் தருவீரனும் வினையந்தனை உன்னி
     நின்றான்அது காலந்தனில் நிருதன்றன துருவம்
          ஒன்றாயது பலவாயுல கெல்லாமொருங் குறலால்
               நன்றாமிது மாயம்மென நாணத்தொடு நவின்றான். ......    108

(திண்டோளுடை)

திண்டோளுடை நீலன்னிது தெளிகின்றுழி அவனால்
     புண்டோய்தரு குருதிப்புனல் புடைபோதரப் புவிமேல்
          விண்டோனென மறிகின்றவன் மிடல்பெற்றெழுந் திதனைக்
               கண்டோர்தடந் தேரேறினன் மாயத்தொடு கலந்தான். ......    109

(கலந்தானொரு)

கலந்தானொரு சிலைவாங்கினன் கனல்வாளிகள் தெரியா
     உலந்தானுறழ் தருமெய்யிடை உய்த்தானுவன் பொங்கர்
          மலர்ந்தாலென உரம்புண்பட வடிவாளிகள் படநின்
               றலந்தான்மன மெலிந்தான்பொரு தலுத்தான்மிகச் சலித்தான். ......    110

வேறு

(ஈண்டு சீர்த்தி இர)

ஈண்டு சீர்த்தி இரணியன் மாயமும்
     ஆண்டு நீலன் அயர்வது நோக்குறாப்
          பூண்ட வாகைப் புயத்தவன் சீறியே
               தூண்டு தேரொடு துண்ணென நண்ணினான். ......    111

(தாங்கு கின்றதன்)

தாங்கு கின்றதன் தாழ்சிலை தோள்கொடே
     வாங்கி நாணியின் வல்லிசை கோடலும்
          வீங்கு மொய்ம்பின் விறல்கெழு தானவர்
               ஏங்கி யாரும் இரிந்தனர் போயினார். ......    112

(சோதி நெற்றிச் சுடர்)

சோதி நெற்றிச் சுடர்த்தனி வேலினான்
     பாத மெய்த்துணை பன்முறை போற்றிடா
          ஆத ரத்தின் அருச்சனை ஆற்றியே
               சேத னப்படை செங்கையின் வாங்கினான். ......    113

(தூய போதகத் தொல்)

தூய போதகத் தொல்படை அன்னவன்
     மாயை மேல்விட மற்றதன் பட்டிமை
          ஆயி ரங்கதிர் ஆதவன் நேர்புறப்
               போய கங்குல் நிசியெனப் போந்ததே. ......    114

(போந்த காலைப் புல)

போந்த காலைப் புலம்புறு தானவர்
     ஏந்த லேத மியாக எரியெனக்
          காந்தி நின்றவன் காமர்வில் வாங்கியே
               ஆய்ந்து தீங்கணை ஆயிரம் தூண்டினான். ......    115

(தூண்டு கின்ற)

தூண்டு கின்ற சுடுகணை வீரமார்த்
     தாண்டன் முன்னவன் தன்வரை மார்புறா
          மீண்டு நுண்டுகள் ஆதலும் மேலது
               காண்ட லுஞ்சுரர் கையெடுத் தார்த்தனர். ......    116

(பொறுத்த வாகை)

பொறுத்த வாகைப் புயன்வலி வெவ்விடம்
     நிறத்த நூறு நெடுங்கணை தூண்டியே
          எறித்த சீர்த்தி இரணியன் கேதனம்
               அறுத்து வில்லொ டரணமுஞ் சிந்தினான். ......    117

(பொருவில் சாலிகை)

பொருவில் சாலிகை போதலுஞ் சூர்தரும்
     திருவில் கோமகன் செங்கரம் தன்னில்வே
          றொருவில் கொள்ளவொ ராயிரம் வெங்கணை
               விரைவில் தூண்டின னால்விறல் மொய்ம்பினான். ......    118

(விடுத்த வாளிகள்)

விடுத்த வாளிகள் வெவ்விறல் ஆடகன்
     எடுத்த வாளி இருஞ்சிலை பின்னுறத்
          தொடுத்த தூணிமுன் தூண்டிய பாகுதேர்
               படுத்து மார்பகம் பஃறுளை செய்தவே. ......    119

(செய்ய வேறொரு)

செய்ய வேறொரு தேர்மிசைச் சூரருள்
     வெய்யன் வாவலும் வீரருள் வீரனாம்
          ஐயன் வாளிகொண் டன்னது மட்டிட
               மையல் எய்தி இழந்தனன் வன்மையே. ......    120

(வேறு பின்னரும்)

வேறு பின்னரும் மேதகு சூர்மகன்
     ஏறு தேர்க ளியாவையும் செல்லுமுன்
          நூறு நூறு கணைகளின் நூறியே
               ஈறு செய்தலும் ஏங்கியி தெண்ணினான். ......    121

(இந்த வேலை)

இந்த வேலை இடர்ப்படு மென்றனக்
     கந்த மெய்திய தன்னவ னால்உயிர்
          சிந்தும் என்னொடு தீர்வது வோஇனித்
               தந்தை யாரும் இறத்தல் சரதமே. ......    122

(இற்ற காலை)

இற்ற காலை இருங்கடன் செய்திட
     மற்றி யாவரும் இல்லைஇம் மாநகர்ச்
          சுற்ற மானவ ருந்தொலைந் தார்இனி
               உற்று ளோரும் இறப்பரி துண்மையே. ......    123

(உறுதி யாவ)

உறுதி யாவ துரைக்கவும் ஆங்கது
     வறிது மோர்கிலா மன்னவன் மாயுமுன்
          இறுவ தேகடன் இற்றில னேயெனின்
               அறுவ தோஎன் அகத்திட ராயினும். ......    124

(ஒய்யெ னச்சுர)

ஒய்யெ னச்சுர ரோடவென் கண்டஎன்
     ஐயன் மற்றினித் துஞ்சின் அருங்கடன்
          செய்வ தற்கொரு சேயுமின் றாலெனின்
               வைய கத்தில் வசையதுண் டாகுமே. ......    125

(மைந்த னைப்பெறு)

மைந்த னைப்பெறு கின்றது மாசிலாப்
     புந்தி அன்பொடு போற்றி வளர்ப்பதும்
          தந்தை மாண்டுழித் தம்முறைக் கேற்றிட
               அந்த மில்கடன் ஆற்றுதற் கேயன்றோ. ......    126

(அசைவி லாத )

அசைவி லாத அமரிடைத் துஞ்சிடின்
     இசைய தாகும்இ றந்தில னேயெனில்
          தசையு லாமுடல் தாங்கிஉய்ந் தானெனா
               வசைய தாகுமென் வன்மையும் துஞ்சுமே. ......    127

(என்னை எய்தும்)

என்னை எய்தும் இசையது வேயெனின்
     மன்னை எய்தும் வசையுரை ஆங்கதன்
          றென்னை எய்தினும் எய்துக தந்தைபால்
               அன்ன தாதல் அழகிதன் றாலென. ......    128

(ஆவ துன்னிஎன்)

ஆவ துன்னிஎன் னாருயிர் போற்றியே
     போவ தேகடன் என்று பொருக்கெனத்
          தாவி வான்முகில் தன்னிடைப் போயொரு
               தேவு மந்திரம் சிந்தையில் உன்னினான். ......    129

(உன்ன லோடும் உருவ)

உன்ன லோடும் உருவரு வாதலும்
     தன்னை யாரும் தெரிவரும் தன்மையால்
          பொன்னு லாய புணரியுட் போயினான்
               மின்னு தண்சுடர் மீனுரு வாகியே. ......    130

(ஆண்டு போன)

ஆண்டு போன அவுணன்அம் மாநகர்
     மீண்டு செல்கிலன் மேல்விளை கின்றன
          காண்டும் நந்தம் கடன்முடிக் குந்துணை
               ஈண்டு வைகுதும் என்றவண் மேவினான். ......    131

(ஆய காலையில் ஆடகன்)

ஆய காலையில் ஆடகன் செய்திடு
     மாயை யாமெனக் கங்குலு மாய்ந்திடத்
          தூய போதகத் தொல்படை தோன்றல்போல்
               சேயி ருங்கதிர்ச் செல்வன்வந் தெய்தினான். ......    132

(ஆங்கு வெய்யவன்)

ஆங்கு வெய்யவன் அப்படை போலெழ
     நீங்கு மாயையின் நீள்நில வற்றிட
          ஏங்கி யோடும் இரணிய னாமென
               ஓங்கு திங்கள் உததியில் போயினான். ......    133

(நீங்கு சூர்மகன்)

நீங்கு சூர்மகன் நீர்மையை நோக்கியே
     வீங்கு தோளுடை வீரன்நம் மாற்றலன்
          ஓங்கும் ஆழியுள் ஓடினன் தோற்றெனா
               ஏங்கு சங்கம் எடுத்திசைத் தானரோ. ......    134

(சங்கம் வாயிடைக்)

சங்கம் வாயிடைக் கொண்டுதன் சீர்த்தியை
     எங்கு ளோரும் தெளிய இசைத்துழிப்
          பொங்கு பூதர் புகழ்ந்தனர் வாழியென்
               றங்கண் வானவர் ஆசிசெய் தார்க்கவே. ......    135

(நின்ற வீரர்கள்)

நின்ற வீரர்கள் நேரலர் சேனையைப்
     பொன்று வித்தனர் போரிடைத் தூதுவர்
          சென்று காலொடு சிந்தையும் பிற்பட
               மன்றன் மாநகர் மந்திரம் எய்தினார். ......    136

(மந்தி ரத்துறை)

மந்தி ரத்துறை மன்னை வணங்கிநீ
     தந்த அக்கும ரன்சமர்க் காற்றலன்
          உய்ந்தி டக்கொல் உவரையொர் சூழ்ச்சியால்
               சிந்தி டக்கொல் அகன்றனன் சிந்துவில். ......    137

(என்று தூதர்)

என்று தூதர் இசைத்தலும் மன்னவன்
     குன்றி வெள்கிக் கொடுஞ்சினம் கொண்டிடா
          ஒன்று மாற்றம் உரைத்திலன் அவ்வழிச்
               சென்ற னன்கனல் மாமுகச் செம்மலே. ......    138

ஆகத் திருவிருத்தம் - 6193



previous padalam   7 - இரணியன்யுத்தப் படலம்   next padalamiraNiyanyudhdhap padalam

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]