Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

previous padalam   6 - நகர்புகு படலம்   next padalamnagarpugu padalam

Ms Revathi Sankaran (7.11mb)
(முன்னுறச் செவ்வேல்)

முன்னுறச் செவ்வேல் ஏக மூவிரு முகத்து வள்ளல்
     தன்னடிக் கமல முன்னித் தரங்கநீர் உவரி வைப்பின்
          மின்னெனக் கடிது போந்து விறன்முகு தடந்தோள் அண்ணல்
               தொன்னிலைத் திருவின் மேவுஞ் சூரன்மூ தூரைக் கண்டான். ......    1

(கண்டலும் எயிற்றின்)

கண்டலும் எயிற்றின் மாலை கல்லெனக் கலிப்பக் கண்கள்
     மண்டுதீப் பொறிகள் கால வாய்புகை உமிழ நாசித்
          துண்டம துயிர்ப்ப மார்பந் துண்ணென வியர்ப்புத் தோன்றத்
               திண்டிறல் மொய்ம்பின் மேலோன் செயிர்த்திவை புகல லுற்றான். ......    2

(வெஞ்சமர்க் காற்றல்)

வெஞ்சமர்க் காற்றல் இன்றி வெருவிப்போய் விண்ணின் நின்று
     வஞ்சனை புரிந்து நம்மை மாயத்தால் வென்று மீண்டும்
          உஞ்சனன் இருந்த கள்வன் உயிர்குடித் தன்றி ஐயன்
               செஞ்சரண் அதனைக் காணச் செல்லுவ தில்லை யானே. ......    3

(நன்னகர் அழிப்பன்)

நன்னகர் அழிப்பன் இன்று நண்ணலன் மதலை நேரின்
     அன்னவன் தனையும் யானே அடுவனால் அடுகி லேனேற்
          பின்னுயிர் வாழ்க்கை வேண்டேன் யான்பிறந் தேனும் அல்லேன்
               என்னொரு சிலையும் யானும் எரியிடைப் புகுவ னென்றான். ......    4

(சூளிது முதல்வன்)

சூளிது முதல்வன் கூறத் துணைவரும் பிறருங் கேளா
     வாளரி யனைய வீர அடையலர்க் கழிந்தேம் வாளா
          மீளுதல் பழிய தாகும் வென்றிகொண் டல்லால் எந்தை
               தாளிணை காண்ப துண்டோ சரதமே இதுமற் றென்றார். ......    5

(நும்மனத் துணிவு)

நும்மனத் துணிவு நன்றால் நொறில்படைக் கணத்தோ டேகி
     இம்மெனச் செறுநர் மூதூர் எரியினுக் குதவி நேர்ந்தார்
          தம்மையட் டவுணன் மைந்தன் தன்னையுந் தடிதும் யாரும்
               வம்மெனப் புகன்றான் என்ப வாகையம் புயத்து வள்ளல். ......    6

(ஆரியன் தனது)

ஆரியன் தனது மாற்றம் அனைவரும் வியந்து செல்ல
     ஓரிமை யொடுங்கும் முன்னம் உவரியின் நடுவ ணான
          வீரமா மகேந்தி ரத்தின் மேற்றிசை வாயில் போந்தான்
               பாரிடக் கணங்கள் ஆர்த்த பரவைகள் அழிந்த தேபோல். ......    7

(ஆர்த்தன அவுணர்)

ஆர்த்தன அவுணர் கேளா அற்புதம் நிகழ வான்போய்ப்
     பார்த்தனர் சிலவர் உள்ளம் பதைத்தனர் சிலவர் யாக்கை
          வேர்த்தனர் சிலவர் ஈது மேவலர் துழனி என்னாச்
               சீர்த்தனர் சிலவர் அம்மா செருவெனக் கிளருந் தோளார். ......    8

வேறு

(வேழத் தின்தொகை)

வேழத் தின்தொகை வெம்பரி வெய்யோர்
     ஆழித் தேர்கள் அளக்கரின் ஈண்ட
          ஊழித் தீச்செறி உற்றன வேபோற்
               பாழித் தீபிகை பற்பல மல்க. ......    9

(வானா ருங்குட)

வானா ருங்குட வாய்தலின் வைகி
     யானா தென்றும் அளித்திடு கின்றோன்
          மேனாள் மாயை விதித்திடு மைந்தன்
               ஊனார் செம்புனல் உண்டுமிழ் வேலோன். ......    10

(அரணங் கொண்ட)

அரணங் கொண்டதன் னாணை கடந்த
     முரணுங் கூற்றுவன் முத்தலை வேலும்
          வருணன் பாசமும் வன்மையின் வாங்கி
               விரணங் கொண்டு வியன்சிறை செய்தோன். ......    11

(விண்ணில் தீச்சுடர்)

விண்ணில் தீச்சுடர் போன்மிளிர் மெய்யான்
     வண்ணப் பல்பொறி மாமுகம் உள்ளான்
          அண்ணல் சீயவ ரித்தவி சின்கண்
               நண்ணுற் றான்அடல் நஞ்சினும் வெய்யோன். ......    12

(சேணார் மாமுகில்)

சேணார் மாமுகில் செல்லொடு சிந்த
     மாணார் பூத வயப்படை யார்த்தே
          ஏணார் வீரரொ டெய்திய தன்மை
               காணா நின்று கனன்றெழ லுற்றான். ......    13

(தன்கண் நின்றிடு)

தன்கண் நின்றிடு தானைக ளெல்லாம்
     முன்கண் சென்றிட மொய்ம்புடன் ஏகிப்
          புன்கட் டீயவன் ஏற்றெதிர் புக்கான்
               வன்கட் பூதர்கள் வந்து மலைந்தார். ......    14

(வில்லுண் வாளிகள்)

வில்லுண் வாளிகள் வேல்மழு நேமி
     அல்லுண் மெய்யவு ணப்படை தூர்த்த
          கல்லும் மாமர முங்கதை யாவுஞ்
               செல்லென் றுய்த்தனர் சீர்கெழு பூதர். ......    15

(முட்டா வெஞ்சினம்)

முட்டா வெஞ்சினம் மூண்டிட இன்னோர்
     கிட்டா நின்று கிளர்ந்தமர் ஆற்றப்
          பட்டார் தானவர் பாரிடர் பல்லோர்
               நெட்டா றொத்து நிமிர்ந்தது சோரி. ......    16

(கண்டார் அன்னது)

கண்டார் அன்னது காவலர் சீற்றம்
     கொண்டார் தாமெதிர் கொண்டமர் செய்ய
          அண்டார் நின்றிலர் ஆவியு லந்தே
               விண்டார் ஓர்சிலர் மீண்டுதொ லைந்தார். ......    17

(இடித்தார் தேரினை)

இடித்தார் தேரினை எற்றினர் மாவை
     அடித்தார் தந்திக ளானவை சிந்த
          முடித்தார் ஒன்னலர் மூளையின் நின்றே
               நடித்தார் பூதர்கள் நாரதர் பாட. ......    18

(முன்சூழ் தானை)

முன்சூழ் தானை முடிந்தது கண்டான்
     மன்சூழ் வெம்புலி மாமுக வீரன்
          என்சூழ் விங்கினி யென்று நினைந்தோர்
               கொன்சூ லப்படை கொண்டு நடந்தான். ......    19

(நடக்கின் றானை)

நடக்கின் றானை நலிந்து கணத்தில்
     அடக்கின் றாமென ஆர்த்தெதிர் நண்ணிக்
          கடக்குன் றங்கள் கணிப்பில வைகும்
               தடக்குன் றம்பல சாரதர் உய்த்தார். ......    20

(சாலம் கொண்டிடு)

சாலம் கொண்டிடு சாரதர் உய்த்த
     நீலம் கொண்ட நெடுங்கிரி யாவும்
          சூலம் கொண்டுபஃ றுண்டம தாக்கி
               ஆலம் கொண்ட அளக்கரின் ஆர்த்தான். ......    21

(அந்நேர் கொண்ட)

அந்நேர் கொண்டவன் ஆற்றலை நோக்கி
     என்னே நிற்பதி யாமிவண் என்னா
          முன்னே நின்ற முரண்கெழு சிங்கன்
               மின்னே யென்ன விரைந்தெதிர் சென்றான். ......    22

வேறு

(வயமிகு பூதரின்)

வயமிகு பூதரின் மடங்கற் பேரினோன்
     வெயிலுமிழ் முத்தலை வேலொன் றேந்தியே
          குயவரி முகமுடைக் கொடியன் முன்புபோய்ப்
               புயலினம் இரிந்திடத் தெழித்துப் பொங்கினான். ......    23

(அத்துணை வேலை)

அத்துணை வேலையில் அவுணர் காவலன்
     முத்தலை வேலினான் முந்துசிங் கன்மேற்
          குத்தினன் அனையனும் கொடியன் மார்பிடைக்
               கைத்தலம் இருந்ததன் கழுமுள் ஓச்சினான். ......    24

(செறித்திடு சூல)

செறித்திடு சூலவேல் செருவின் மேலவர்
     புறத்தினில் போயின பொழிந்த செம்புனல்
          நெறித்தரு பகலவன் நின்ற குன்றினும்
               எறித்தரும் இளங்கதிர் என்னச் சென்றதே. ......    25

(ஆங்கவர் முறை)

ஆங்கவர் முறைமுறை அயில்கொள் சூலவேல்
     வாங்கினர் இடந்தொறும் மற்றும் ஓச்சுவர்
          ஈங்கிது போலநின் றிகலிப் போர்செய்தார்
               நீங்கருந் தளைபடு நெறியர் என்னவே. ......    26

(அற்றது காலையில்)

அற்றது காலையில் அனையர் கைத்தலம்
     பற்றிய முத்தலைப் படைக ளானவை
          இற்றன ஒருதலை இரண்டும் வீழ்தலும்
               மற்றொழில் புரிந்தனர் நிகரில் வன்மையார். ......    27

(புலிமுகன் அவ்வழி)

புலிமுகன் அவ்வழிப் புரிந்து மற்றொழில்
     வலியினை இழந்தனன் மையல் எய்தினான்
          தலமிசை வீழ்தலும் தனது தாள்கொடே
               உலமுறழ் தோளினன் உதைத்து ருட்டினான். ......    28

(ஒலிகழல் மேலவன்)

ஒலிகழல் மேலவன் உதைத்த வன்மையால்
     அலமரு தீயவன் ஆவி நீங்கினான்
          மலர்மழை தூவினர் வானு ளோர்அரி
               புலிதனை வெல்வது புதுமைப் பாலதோ. ......    29

(சூர்கொளும் முத்த)

சூர்கொளும் முத்தலைச் சூல வேல்கொடு
     நேர்கொளும் புலிமுகன் இறந்த நீர்மைகண்
          டார்கலி யாமெனப் பூதர் ஆர்த்தனர்
               வார்கழல் வீரனும் மகிழ்ந்து நோக்கினான். ......    30

(கழிந்தன தானை)

கழிந்தன தானைகள் காவல் வீரனும்
     அழிந்தனன் மேற்றிசை அரணம் வீட்டியே
          செழுந்திரு நகரிடைச் சேறும் யாமென
               மொழிந்தனர் பூதர்கள் முரணின் முந்தினார். ......    31

(முந்திய பூதர்கள்)

முந்திய பூதர்கள் முனிந்து மேற்றிசை
     உந்திய புரிசையை ஒல்லை சேர்வுறாத்
          தந்தம தடிகளால் தள்ளிப் பொள்ளெனச்
               சிந்தினர் பறித்தனர் சிகரி தன்னையும். ......    32

(பொலம்படு சிகரி)

பொலம்படு சிகரியைப் பறித்துப் பூதர்கள்
     நலம்படு மகேந்திர நகருள் வீசியே
          உலம்பினர் அவுணர்கள் உலைந்து சிந்தினார்
               கலம்பகிர் வுற்றிடக் கடலுற் றார்கள்போல். ......    33

(முகுந்தனை வென்றி)

முகுந்தனை வென்றிடு முரண்கொள் பூதர்கள்
     புகுந்தனர் மகேந்திர புரத்து ஞெள்ளலில்
          தொகுந்தொகும் அவுணரைத் தொலைத்துச் சென்றனர்
               தகுந்தகும் இவர்க்கென அமரர் சாற்றவே. ......    34

(நீக்கமில் மாளிகை)

நீக்கமில் மாளிகை நிரைகள் யாவையும்
     மேக்குயர் பூதர்கள் விரைந்து தம்பதத்
          தாக்கினில் அழித்தனர் தவத்தின் மேலவர்
               வாக்கினில் அகற்றிய வண்ண மேயென. ......    35

(ஆர்த்திடு கரிபரி)

ஆர்த்திடு கரிபரி அவுண ராயினோர்
     தேர்த்தொகை மாளிகை சிகரம் மாய்ந்திடக்
          கூர்த்திடு நெடுங்கணை கோடி கோடிகள்
               தூர்த்தனர் சென்றனர் துணைவ ராயினோர். ......    36

(அன்னதோர் அமைதியின் ஆட)

அன்னதோர் அமைதியின் ஆடல் மொய்ம்பினான்
     வன்னியின் படையொடு மருத்தின் மாப்படை
          பொன்னெடுஞ் சிலைதனில் பூட்டி நீவிர்போய்
               இந்நகர் அழித்திரென் றிமைப்பில் ஏவினான். ......    37

(ஏவிய அப்படை)

ஏவிய அப்படை இரண்டும் ஒன்றியே
     மூவுல கிறுதியின் முடிக்கும் தம்முரு
          மேவின நகரெலாம் விரவிச் சூழ்ந்தன
               தீவிழி அவுணரும் இரிந்து சிந்தவே. ......    38

(ஒட்டலர் நமையினி)

ஒட்டலர் நமையினி உருத்துச் செய்வதென்
     விட்டனன் இங்குளன் வெருவ லேமெனா
          நெட்டழல் கொளுவியே நிலவி மாநகர்
               சுட்டன உடுநிரை பொரியில் துள்ளவே. ......    39

(எரிந்தன சில்லிடை)

எரிந்தன சில்லிடை இறந்து பூழியாய்
     விரிந்தன சில்லிடை வெடித்த சில்லிடை
          கரிந்தன சில்லிடை கனலி சூழ்தலால்
               பொரிந்தன சில்லிடை புகைந்த சில்லிடை. ......    40

(எப்புவ னங்களும்)

எப்புவ னங்களும் இறைஞ்சு சூர்நகர்
     வெப்புறு கனல்கொள விளிந்து போயதால்
          அப்புறழ் செஞ்சடை அமலன் மூரலால்
               முப்புர மானவை முடிந்ததேயென. ......    41

(இன்னணம் இந்நகர்)

இன்னணம் இந்நகர் எரிமி சைந்துழி
     அன்னவை ஒற்றர்கள் அறிந்து வல்லைபோய்ப்
          பொன்னிவர் கடிநகர் புகுந்து வாய்வெரீஇ
               மன்னவர் மன்னனை வணங்கிக் கூறுவார். ......    42

(காய்கதிர் அண்ண)

காய்கதிர் அண்ணலைக் கனன்ற நின்மகன்
     மாயவெம் படையினால் மலைந்து ளார்தமைத்
          தூயதொர் புனற்கடல் துன்ன உய்த்தனன்
               நீயது தெரிந்தனை நிகழ்ந்த கேட்டிமேல். ......    43

(அங்கிவை நாரதன்)

அங்கிவை நாரதன் அறையக் கந்தவேள்
     செங்கையில் வேற்படை செலுத்த அன்னது
          பொங்குறு தெண்புனற் புணரி சேறலும்
               மங்கிய தோடிய மாயை தன்படை. ......    44

(வஞ்சனி தன்படை)

வஞ்சனி தன்படை மாண்டு போந்துழித்
     துஞ்சுதல் ஒழிந்தனர் தொன்மை போலவே
          நெஞ்சினில் உணர்வெலாம் நிகழ யாவரும்
               உஞ்சனர் எழுந்தனர் உம்பர் ஆர்த்திட. ......    45

(மாற்படு புந்திதீர்)

மாற்படு புந்திதீர் மறவர் தாமுறு
     பாற்பட வருவது பார்த்துக் கைதொழு
          தேற்பொடு பணிதலும் யாரும் வம்மெனா
               வேற்படை முன்னுற விரைந்து மீண்டதே. ......    46

(மேனிகழ் நெறி)

மேனிகழ் நெறிகொடு மீண்ட செய்யவே
     லானது குமரவேள் அங்கை போந்ததால்
          ஊனமில் மாற்றலர் ஒல்லை வந்துநம்
               மாநகர் மேற்றிசை வாயில் நண்ணினார். ......    47

(மேற்றிசை வாய்த)

மேற்றிசை வாய்தலில் வீரர் சேறலும்
     ஏற்றனன் தானையோ டிருந்த காவலன்
          ஆற்றினன் சிறிதமர் அவன தாவியை
               மாற்றினர் அனிகமும் மாண்டு போயதே. ......    48

(குடதிசை எயிலினை)

குடதிசை எயிலினைக் கொடிய பூதர்கள்
     அடிகொடு தள்ளினர் ஆண்டு நின்றிடு
          படியறு சிகரியைப் பறித்து மாநகர்
               நடுவுற வீசினர் நமர்கள் மாயவே. ......    49

(சோர்வறு பூதரு)

சோர்வறு பூதருந் துணைவ ராகிய
     வீரருந் தலைவனாம் வீர வாகுவும்
          சீரிய நகரிடைச் சென்று மேற்றிசை
               ஆரழல் கொளுவிநின் றழித்தல் மேயினார். ......    50

(அண்டலர் வன்மை)

அண்டலர் வன்மையால் அயுத யோசனை
     உண்டது கொழுங்கனல் உண்ட எல்லையும்
          கண்டனம் இதனைநீ கருத்தில் ஐயமாக்
               கொண்டிடல் மன்னவென் றொற்றர் கூறினார். ......    51

வேறு

(ஒற்றர் இவ்வகை)

ஒற்றர் இவ்வகை உரைத்தலும் அவுணர்கோன் உளத்தில்
     செற்றம் மிக்கன நெறித்தன உரோமங்கள் சிலிர்த்த
          நெற்றி சென்றன புருவங்கள் மணிமுடி நிமிர்ந்த
               கற்றை வெங்கனல் கான்றன சுழன்றன கண்கள். ......    52

(கறங்கு சிந்தனை)

கறங்கு சிந்தனைச் சூரன்இத் தன்மையில் கனன்று
     மறங்கொள் சாரணர் தங்களை நோக்கிநீர் வான்போய்ப்
          பிறங்கும் ஊழியில் உலகெலாம் அழித்திடப் பெயர்வான்
               உறங்கு மாமுகில் யாவையும் தருதிரென் றுரைத்தான். ......    53

(அயலின் நிற்புறு)

அயலின் நிற்புறு தூதுவர் வினவியே ஐய
     இயலும் இப்பணி யெனத்தொழு தும்பரின் ஏகிப்
          புயலி னத்தினைக் கண்டுதம் பாணியால் புடைத்துத்
               துயிலெ ழுப்பியே விளித்தனன் இறையெனச் சொற்றார். ......    54

(எழுவ கைப்படு)

எழுவ கைப்படு முகில்களும் வினவியே ஏகி
     விழுமி தாகிய மகேந்திரத் திறைவன்முன் மேவித்
          தொழுது நிற்றலும் இத்திரு நகரினைத் தொலைக்கும்
               அழலி னைத்தணி வித்திடு வீரென அறைந்தான். ......    55

(அறையும் எல்லை)

அறையும் எல்லையில் நன்றென எழிலிகள் அகன்று
     செறித ரும்புகை உருக்கொடு விண்மிசைச் சென்றோர்
          இறையில் எங்கணும் பரந்தன மாவலி யிடைபோய்க்
               குறிய மாயவன் நெடியபே ருருவுகொண் டதுபோல். ......    56

(கருமு கிற்கணம்)

கருமு கிற்கணம் முறைமுறை மின்னின ககனத்
     துருமி டிக்குலம் ஒராயிர கோடியை உகுத்த
          பருமு டிக்குல கிரியொடு மேருவும் பகிர்ந்த
               திருமு டித்தலை துளக்கியே வெருவினன் சேடன். ......    57

(விண்டு லாமதி)

விண்டு லாமதிற் கடிநகர் தன்னைவெங் கனலி
     உண்டு லாவுறு தன்மையும் அவுணர்தம் முலைவும்
          கண்டி யாமிது தொலைந்திடின் ஈண்டொரு கணத்தில்
               அண்டர் நாயகன் தானைமன் னவன்எமை அடுமால். ......    58

(நீட்ட மிக்கஇத்)

நீட்ட மிக்கஇத் திருநகர் புகுந்துநீ றாக்கி
     வாட்டும் வெந்திறல் எரியினை அகற்றிலம் வறிது
          மீட்டும் ஏகுதும் என்றிடின் அவுணர்கோன் வெகுண்டு
               பூட்டும் வன்றளை செய்வதென் என்றன புயல்கள். ......    59

(தொல்லை மாமுகில்)

தொல்லை மாமுகில் இவ்வகை உன்னியே சூரன்
     எல்லை யில்பகல் இட்டிடும் உவளகத் தெய்தி
          அல்லல் உற்றிடு கின்றதின் ஆடலம் புயத்தோன்
               கொல்ல நம்முயிர் வீடினும் இனிதெனக் குறித்த. ......    60

(புந்திமேல் இவை)

புந்திமேல் இவை துணிபென நாடியே புயல்கள்
     சிந்து துள்ளியொன் றிபத்துணை அளவையிற் செறிய
          முந்தி யோரிறை பொழிந்தன பொழிதலும் முடிந்த
               அந்த மாநகர் மேற்றிசை பொடித்திடும் அழலே. ......    61

(ஆய தன்மையை)

ஆய தன்மையை நோக்கினான் ஆறிரு தடந்தோள்
     நாய கன்படைக் கிறையவன் அழலெழ நகைத்துத்
          தீயின் ஆற்றலை அழித்தன மேகமோ செறுநர்
               மாய மேகொலோ என்றுதேர் வுற்றனன் மனத்தில். ......    62

(தேரு கின்றுழி)

தேரு கின்றுழி நாரதன் விண்ணிடைச் சென்று
     வீர கேள்இவை ஊழிநாள் முகிலினம் வெய்ய
          சூரன் ஆணையால் வந்தன வடவையம் தொல்லோன்
               மூரி வெம்படை தொடுத்தியால் விரைந்தென மொழிந்தான். ......    63

(விண்ணில் வந்தி)

விண்ணில் வந்திவை நாரதன் உரைத்தனன் மீட்டும்
     துண்ணெ னச்செல வினவியே வாகையம் துணைத்தோள்
          அண்ணல் ஊழிநாள் அனற்படை தூண்டினன் அதுபோய்க்
               கண்ண கல்முகில் இனத்தினைச் சூழ்ந்தது கணத்தில். ......    64

(சூழல் போகிய)

சூழல் போகிய எழிலிகள் யாவையும் சுற்றி
     ஊழி மாப்படை அவற்றிடைப் புனலெலாம் உண்டு
          வாழி மொய்ம்பனை அடைந்தது மற்றது காலை
               ஆழி மால்கடல் தொகையென வீழ்ந்தன அவையே. ......    65

(மறிந்த எல்லையில்)

மறிந்த எல்லையில் ஆறுமா முகமுடை வள்ளல்
     சிறந்த ஆறெழுத் துண்மையை விதிமுறை செப்ப
          இறந்த தொல்மிடல் வருதலும் உய்ந்துடன் எழுந்து
               புறந்த ருங்கடல் அதனிடை ஓடின புயல்கள். ......    66

(விழுந்து கொண்டல்)

விழுந்து கொண்டல்கள் இரிதலும் பாரிட வெள்ளம்
     எழுந்து துள்ளியே ஆர்த்தன மலர்மழை இமையோர்
          பொழிந்து வானிடை ஆடினர் இவைகண்டு பொறாமல்
               உழுந்து கண்ணடி செல்லுமுன் போயினர் ஒற்றர். ......    67

வேறு

(கொற்றவை ஆடுறு)

கொற்றவை ஆடுறு கோநகர் நண்ணி
     அற்றமில் மன்னன் அடித்துணை மீது
          தற்றுறு பூமுடி தாழ இறைஞ்சி
               மற்றிது கேண்மிய என்று வகுப்பார். ......    68

(ஊழி புகுந்துழி)

ஊழி புகுந்துழி உற்றிடு கொண்மூ
     ஏழும் விரைந்துநின் ஏவலின் விண்போய்
          வீழ்புனல் சிந்துபு மேற்றிசை தன்னில்
               சூழுறும் அங்கி யினைத்தொலை வித்த. ......    69

(மாற்றலர் தூதுவன்)

மாற்றலர் தூதுவன் மற்றது காணூஉ
     வீற்றுறு தீப்படை ஏழ்முகில் மீது
          மாற்றலின் விட்டிட அன்னவை வீழ்ந்து
               மேற்றிசை வாய்தலில் வேலை புகுந்த. ......    70

(வன்னி செறிந்தன)

வன்னி செறிந்தன மாய்ந்தன என்றே
     உன்னலை பூதர் ஒழிந்திடும் வீரர்
          அன்னதன் எண்மையின் ஆடுறு கின்றார்
               இந்நகர் என்றலும் ஏந்தல் முனிந்தான். ......    71

வேறு

(மயிர்ப்புறம் பொடி)

மயிர்ப்புறம் பொடித்திட வரைகொள் மார்பகம்
     வியர்ப்புற எரிதழல் விழிகள் சிந்திட
          உயிர்ப்பிடை புகைவர உருமுக் கான்றெனச்
               செயிர்த்திடு மன்னவன் இதனைச் செப்பினான். ......    72

(போரினை இழைத்து)

போரினை இழைத்துவெம் பூதர் தங்களை
     வீரர்கள் தொகையினை வீட்டிப் பின்னுறச்
          சாருறு சிவன்மகன் தன்னை வென்றிவட்
               சேருதுங் கொணர்திர்நந் தேரை என்றனன். ......    73

ஆகத் திருவிருத்தம் - 6055previous padalam   6 - நகர்புகு படலம்   next padalamnagarpugu padalam

previous kandam   4 - யுத்த காண்டம்   next kandam4 - yudhdha kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]