(இரவிவந் துற்றுழி)
இரவிவந் துற்றுழி எழுந்து சூர்மகன்
மரபுளி நாட்கடன் வழாமல் ஆற்றியே
செருவினில் உடைந்திடு சிறுமை சிந்தியாப்
பொருவரு மாயையைப் போற்றல் மேயினான். ......
1(போற்றினன் முன்னுறு)
போற்றினன் முன்னுறு பொழுதின் மாயவள்
கோற்றொழில் கன்றிய குமரன் முன்னரே
தோற்றினள் நிற்றலுந் தொழுத கையினன்
பேற்றினை முன்னியே இனைய பேசுவான். ......
2(தாதைதன் அவ்வை)
தாதைதன் அவ்வைகேள் சண்மு கத்தவன்
தூதுவ னோடுபோர்த் தொழிலை ஆற்றினேன்
ஏதமில் மானமும் இழந்து சாலவும்
நோதக உழந்தனன் நோன்மை நீங்கினேன். ......
3(துன்னல ரோடுபோர்)
துன்னல ரோடுபோர் தொடங்கி ஈற்றினில்
பின்னிடு வார்பெறும் பிழையும் பெற்றனன்
என்னினி வரும்பழி இதற்கு மேலென்றான்
அன்னது மாயைகேட் டறைதல் மேயினாள். ......
4(மறைநெறி விலக்கி)
மறைநெறி விலக்கினை வானு ளோர்தமைச்
சிறையிடை வைத்தனை தேவர் கோமகன்
முறையினை அழித்தனை முனிவர் செய்தவங்
குறையுறு வித்தனை கொடுமை பேணினாய். ......
5(ஓவருந் தன்மை)
ஓவருந் தன்மையால் உயிர்கள் போற்றிடும்
மூவரும் பகையெனின் முனிவர் தம்மொடு
தேவரும் பகையெனின் சேணில் உற்றுளோர்
ஏவரும் பகையெனின் எங்ஙன் வாழ்தியால். ......
6(பிழைத்திடு கொடு)
பிழைத்திடு கொடுநெறி பெரிதுஞ் செய்தலாற்
பழித்திறம் பூண்டனை பகைவர் இந்நகர்
அழித்தமர் இயற்றிட அவர்க்குத் தோற்றனை
இழைத்திடும் விதியினை யாவர் நீங்கினார். ......
7(நூற்றிவண் பற்பல)
நூற்றிவண் பற்பல நுவலின் ஆவதென்
மாற்றருந் திறலுடை மன்னன் மைந்தநீ
சாற்றுதி வேண்டுவ தருவன் என்றலும்
ஆற்றவும் மகிழ்சிறந் தனையன் கூறுவான். ......
8(நின்றமர் இயற்றியே)
நின்றமர் இயற்றியே நென்னல் என்றனை
வென்றனன் ஏகிய வீர வாகுவை
இன்றனி கத்தொடும் ஈறு செய்திட
ஒன்றொரு படையினை உதவு வாயென்றான். ......
9(அடல்வலி பிழை)
அடல்வலி பிழைத்திடும் அவுணன் சொற்றன
கெடலரும் மாயவள் கேட்டுத் தன்னொரு
படையினை விதித்தவன் பாணி நல்கியே
கடிதினில் ஒருமொழி கழறல் மேயினாள். ......
10(மற்றிது விடுத்தி)
மற்றிது விடுத்தியால் மறையில் கந்தவேள்
ஒற்றனைப் பிறர்தமை உணர்வை வீட்டியே
சுற்றிடும் வாயுவின் தொழிலுஞ் செய்யுமால்
இற்றையிற் சயமுன தேகு வாயென்றாள். ......
11(உரைத்திவை மாய)
உரைத்திவை மாயவள் உம்பர் போந்துழி
வரத்தினிற் கொண்டிடு மாய மாப்படை
பரித்தவன் நெருநலிற் பழியை நீங்கியே
பெருத்திடும் பெருமிதப் பெற்றி கூடினான். ......
12(கூர்ப்புறு பல்லவ)
கூர்ப்புறு பல்லவங் கொண்ட தூணியைச்
சீர்ப்புறத் திறுக்கிமெய் செறித்துச் சாலிகை
கார்ப்பெருங் கொடுமரங் கரங்கொண் டின்னதோர்
போர்ப்பெருங் கருவிகள் புனைந்து தோன்றினான். ......
13(காற்படை அழற்படை)
காற்படை அழற்படை காலன் தொல்படை
பாற்படு மதிப்படை பரிதி யோன்படை
மாற்படை அரன்படை மலர யன்படை
மேற்படு சூர்மகன் எடுத்தல் மேயினான். ......
14(மேனவப் படைமதில்)
மேனவப் படைமதில் விரவு சாலையுள்
வானவப் படைகொடு வாய்தல் போந்தனன்
ஆனவப் படைதரும் ஆடல் வில்லினான்
தானவப் படைஞர்கள் தொழுது தாழ்ந்திட. ......
15(சயந்தனைப் பொரு)
சயந்தனைப் பொருதிடுந் தார்பெய் தோளினான்
சயந்தனைப் பொருதநாட் சமரிற் கொண்டதோர்
சயந்தனத் தேறினன் தகுவர் யாவருஞ்
சயந்தனைப் பெறுகென ஆசி சாற்றவே. ......
16(ஒப்பறு செறுநர்மேல்)
ஒப்பறு செறுநர்மேல் உருத்துப் போர்செயத்
துப்புறு சூர்மகன் தொடர்கின் றானெனச்
செப்புறும் ஒற்றர்கள் தெரிந்து போமென
எப்புறத் தானையும் எழுந்து போந்தவே. ......
17(பரிபதி னாயிர)
பரிபதி னாயிர வெள்ளம் பாய்மத
கரிபதி னாயிர வெள்ளங் காமர்தேர்
ஒருபதி னாயிர வெள்ளம் ஒப்பிலா
இருபதி னாயிர வெள்ளம் ஏனையோர். ......
18(நாற்படை இவ்வகை)
நாற்படை இவ்வகை நடந்து கோமகன்
பாற்பட விரவின பரவு பூழிகள்
மாற்படு புணரிநீர் வறப்பச் சூழ்ந்ததால்
மேற்படு முகிலினம் மிசைய வந்தென. ......
19(திண்டிறல் அனிக)
திண்டிறல் அனிகமீச் சென்ற பூழிகள்
மண்டல முழுவதும் வரைகள் யாவையும்
அண்டமும் விழுங்கியே அவைகள் அற்றிட
உண்டலின் அடைத்தன உவரி முற்றுமே. ......
20(முரசொடு துடிகுட)
முரசொடு துடிகுட முழவஞ் சல்லரி
கரடிகை தண்ணுமை உடுக்கை காகளம்
இரலைக ளாதியாம் இயங்கள் ஆர்த்தன
திருநகர் அழியுமென் றரற்றுஞ் செய்கைபோல். ......
21(உழையுடைக் கற்பி)
உழையுடைக் கற்பினர் உரையிற் சென்றிடா
தழையுடைப் பிடிக்குநீர் தணிக்கும் வேட்கையால்
புழையுடைத் தனிக்கரம் போக்கிப் பொங்குசூல்
மழையுடைத் திடுவன மதங்கொள் யானையே. ......
22(கார்மிசைப் பாய்வன)
கார்மிசைப் பாய்வன கதிர வன்தனித்
தேர்மிசைப் பாய்வன சிலையிற் பாய்வன
பார்மிசைப் பாய்வன பாரி டத்தவர்
போர்மிசைப் பாய்வன புரவி வெள்ளமே. ......
23(அருளில ராகிய)
அருளில ராகிய அவுணர் மாண்டுழித்
தெருளுறும் அவ்வவர் தெரிவை மாதர்கள்
மருளொடு துன்புறும் வண்ணங் காட்டல்போல்
உருளுவ இரங்குவ உலப்பில் தேர்களே. ......
24(கரிந்திடு மேனி)
கரிந்திடு மேனியுங் கணிப்பில் தானவர்
தெரிந்திடு மாலைசூழ் செய்ய பங்கியும்
விரிந்திடு நஞ்சுபல் லுருவ மேவுறீஇ
எரிந்திடும் அங்கிகான் றென்னத் தோன்றுமே. ......
25வேறு(பொங்கு வெங்கதிர்)
பொங்கு வெங்கதிர் போன்றொளிர் பூணினர்
திங்கள் வாளெயிற் றார்முடி செய்யவர்
துங்க அற்புதர் பொன்புகர் தூங்குவேல்
அங்கை யாளர் அசனியின் ஆர்த்துளார். ......
26(நீள மர்க்கு நெரு)
நீள மர்க்கு நெருநலில் போந்துபின்
மீளு தற்குடைந் தார்தமை வீட்டுதும்
வாளி னுக்கிரை யாவென்று வாய்மையால்
சூளி சைத்துத் தொடர்ந்தனர் வீரரே. ......
27(ஓடு தேரின்உ வாக்)
ஓடு தேரின்உ வாக்களின் மானவர்
நீடு கையின்நி வந்துறு கேதனம்
ஆடி விண்ணை அளாவுவ தாருவைக்
கூட வேகொல் கொடியெனுந் தன்மையால். ......
28(கோலின் ஓங்கு)
கோலின் ஓங்கு கொடியுங் கவிகையுந்
தோலும் ஈண்டலிற் சூழிரு ளாயின
மாலை சூழ்குஞ்சி மானவர் வன்கையில்
வேலும் வாளும் பிறவும்வில் வீசுமே. ......
29(இன்ன தன்மை இயன்றி)
இன்ன தன்மை இயன்றிடத் தானைகள்
துன்னு பாங்கரிற் சூழ்ந்து படர்ந்திட
மன்னன் மாமகன் மாநகர் நீங்கியே
பொன்ன வாம்புரி சைப்புறம் போயினான். ......
30(போய காலை)
போய காலைப் புறந்தனில் வந்திடும்
வேயி னோர்களின் வெம்பரி மாமுகம்
ஆயி ரங்கொள் அவுணனை நோக்கியே
தீய சூர்மகன் இன்னன செப்புவான். ......
31(ஈசன் விட்ட குமரன்)
ஈசன் விட்ட குமரன் இருந்திடும்
பாச றைக்களந் தன்னிற் படர்ந்துநீ
மாசி லாவிறல் வாகுவைக் கண்ணுறீஇப்
பேச லாற்றுதி இன்னன பெற்றியே. ......
32(மன்னன் ஆணை)
மன்னன் ஆணையின் மண்டமர் ஆற்றியே
தன்னை இன்று தடிந்திசை பெற்றிட
உன்னி வந்தனன் ஒல்லையின் ஏகுதி
முன்னை வைகலிற் போரென்றும் உன்னலாய். ......
33(என்ற மாற்றம் எனது)
என்ற மாற்றம் எனதுரை யாகவே
வென்றி யோடு புகன்றனை மீள்கென
நின்ற தூதனை நீசன் விடுத்தலும்
நன்றி தென்று நடந்துமுன் போயினான். ......
34(ஏம கூட மென)
ஏம கூட மெனப்பெய ராகிய
காமர் பாசறைக் கண்ணகல் வைப்புறீஇ
நாம வேற்படை நம்பிக் கிளவலாம்
தாம மார்பனைக் கண்டிவை சாற்றுவான். ......
35(எல்லை தன்னை)
எல்லை தன்னை இருஞ்சிறை வீட்டிய
மல்லல் அங்கழல் மன்னவன் மாமகன்
ஒல்லை இப்பகல் உன்னுயிர் மாற்றுவான்
செல்லு கின்றனன் செப்பிய சூளினான். ......
36(ஏவி னான்எனை)
ஏவி னான்எனை இத்திறங் கூறியே
கூவி நின்னைக் கொடுவரு வாயென
மேவ லாள விரைந்தமர்க் கேகுதி
நாவ லோயென வேநவின் றானரோ. ......
37(தூதன் இவ்வகை)
தூதன் இவ்வகை சொற்றெதிர் நிற்றலும்
மூத குந்திறல் மொய்ம்பன் நகைத்தியான்
ஆத வன்பகை ஆருயிர் உண்டிடப்
போது கின்றனன் போய்ப்புகல் வாயென்றான். ......
38(ஒற்றன் இத்திறம்)
ஒற்றன் இத்திறம் ஓர்ந்துடன் மீடலுஞ்
செற்ற மிக்க திறல்கெழு மொய்ம்பினான்
சுற்ற மோடு தலைவர்கள் சூழ்ந்திடக்
கொற்ற வேற்கைக் குமரன்முன் நண்ணினான். ......
39(எங்கு மாகி இரு)
எங்கு மாகி இருந்திடு நாயகன்
பங்க யப்பொற் பதத்தினைத் தாழ்ந்தெழீஇச்
செங்கை கூப்பிமுன் நிற்றலுஞ் செவ்வியோன்
அங்க ணுற்ற தறிந்திவை கூறுவான். ......
40(நென்னல் ஓடும்)
நென்னல் ஓடும் நிருதன் தனிமகன்
உன்னை முன்னி உரனொடு போந்துளான்
துன்னு தானைத் துணைவர்கள் தம்மொடு
முன்னை வைகலின் ஏகுதி மொய்ம்பினோய். ......
41(போயெ திர்ந்து)
போயெ திர்ந்து பொருதி படைகளாய்
ஏய வற்றிற் கெதிரெதிர் தூண்டுதி
மாயை வஞ்சன் புரிந்திடின் வந்துநந்
தூய வேற்படை துண்ணென நீக்குமால். ......
42(போதி என்று புகன்)
போதி என்று புகன்றிட அப்பணி
மீது கொண்டு விடைகொண்டு புங்கவன்
பாதம் வந்தனை செய்து படர்ந்தனன்
தூது போய்அமர் ஆற்றிய தொன்மையோன். ......
43(துணையு ளார்களு)
துணையு ளார்களுஞ் சுற்றமுள் ளார்களுங்
கணவர் தங்களிற் காவலர் யாவரும்
அணிகொள் தேர்புக ஆடலந் தோளினான்
இணையி லாத்தன் இரதத்தி லேறினான். ......
44(ஏறும் எல்லையில்)
ஏறும் எல்லையில் இச்செயல் நோக்கியே
ஊறில் பூதரொ ராயிர வெள்ளமும்
மாறி லாதவ ரையும் மரங்களும்
பாறு லாவு படையுங்கொண் டெய்தினார். ......
45(சார தங்கெழு தானை)
சார தங்கெழு தானைகள் ஈண்டியே
காரி னங்களிற் கல்லென ஆர்ப்புற
வீர மொய்ம்பின் விடலையைச் சூழ்ந்தனர்
ஆரும் விண்ணவர் ஆசி புகன்றிட. ......
46(மேன காலை விசய)
மேன காலை விசயங்கொள் மொய்ம்பினான்
தானை யானவுந் தம்பியர் யாவரும்
ஏனை யோர்களும் ஈண்டச்சென் றெய்தினான்
பானு கோபன் படரும் பறந்தலை. ......
47வேறு(தேர்த்திடும் பாரிட)
தேர்த்திடும் பாரிடஞ் செறியும் வெள்ளமும்
கார்த்திடு தானவக் கடலும் நேர்புறீஇ
ஆர்த்தனர் இகலினர் ஆற்றல் கூறியே
போர்த்தொழில் முறையினைப் புரிதல் மேயினார். ......
48(கோடுகள் முழங்கி)
கோடுகள் முழங்கின குறுங்கண் ஆகுளி
பீடுற இரட்டின பேரி ஆர்த்தன
மூடின வலகைகள் மொய்த்த புள்ளினம்
ஆடினன் நடுவனும் அமரர் நோக்கவே. ......
49(இலையயில் தோமரம்)
இலையயில் தோமரம் எழுத்தண் டொண்மழு
வலமொடு வச்சிரம் ஆழி மாப்படை
தொலைவறு முத்தலைச் சூல மாதிய
சிலைபொதி கணையுடன் அவுணர் சிந்தினார். ......
50(முத்தலைக் கழுவொடு)
முத்தலைக் கழுவொடு முசலம் வெங்கதை
கைத்தலத் திருந்திடு கணிச்சி நேமிகள்
மைத்தலைப் பருப்பதம் மரங்க ளாதிய
அத்தலைப் பூதரும் ஆர்த்து வீசினார். ......
51(பணிச்சுடர் வாளி)
பணிச்சுடர் வாளினால் பாணி சென்னிதோள்
துணித்தனர் குற்றினர் சுரிகை ஆதியால்
குணிப்பறும் எழுக்கதை கொண்டு தாக்கினார்
கணப்படை யொடுபொரும் அவுணர் காளையர். ......
52(பிடித்தனர் அவுணரை)
பிடித்தனர் அவுணரைப் பிறங்கு கைகளால்
அடித்தனர் கிழித்தனர் அணிய கந்தரம்
ஒடித்தனர் மிதித்தனர் உருட்டு கின்றனர்
புடைத்தனர் எழுக்களால் பூத வீரரே. ......
53(வாசியும் வயவரும்)
வாசியும் வயவரும் மாயச் சாரதர்
ஆசறு கரங்களால் அள்ளி அள்ளியே
காய்சின இபங்களில் கணிப்பில் தேர்களில்
வீசிநின் றெற்றினர் அவையும் வீழவே. ......
54(ஓதவெங் கடல்களும்)
ஓதவெங் கடல்களும் ஊழி வன்னியும்
மேதகு வலிகொடு வெகுளி வீங்கியே
ஆதியின் மாறுகொண் டமர்செய் தாலெனப்
பூதரும் அவுணரும் பொருதிட் டாரரோ. ......
55(குழகியல் அவுணரும்)
குழகியல் அவுணரும் கொடிய பூதரும்
கழகெனும் உரைபெறு களத்தில் போர்செய
ஒழுகிய சோரியா றூனை வேட்டுலாய்
முழுகிய கரண்டம்விண் மொய்த்த புள்ளெலாம். ......
56(துணிந்தன கைத்தலம்)
துணிந்தன கைத்தலம் துணிந்த தோட்டுணை
துணிந்தன சென்னிகள் துணிந்த வாலுரம்
துணிந்தன கழலடி துணிந்த மெய்யெலாம்
துணிந்தன வலிசில பூதர் துஞ்சினார். ......
57(முடித்தொகை அற்ற)
முடித்தொகை அற்றனர் மொய்ம்பும் அற்றனர்
அடித்துணை அற்றனர் அங்கை அற்றனர்
வடித்திடு கற்பொடு வலியும் அற்றனர்
துடித்தனர் அவுணரும் அநேகர் துஞ்சினார். ......
58(வசையுறும் அவுண)
வசையுறும் அவுணரின் மன்னர் யாவரும்
இசைபெறு பூதரின் இறைவ ருங்கெழீஇத்
திசையொடு திசையெதிர் செய்கை போலவே
அசைவில ராகிநின் றமர தாற்றினார். ......
59(மால்கிளர் தீயவர்)
மால்கிளர் தீயவர் மலைகொள் சென்னியைக்
கால்கொடு தள்ளினர் களேவ ரந்தனைப்
பால்கிளர் பிலத்தினுட் படுத்துச் சென்றனர்
தோல்களை உரித்தனர் சூல பாணிபோல். ......
60(அரித்திறல் அடக்கி)
அரித்திறல் அடக்கினர் அவுண வீரர்தம்
வரத்தினை ஒழித்தனர் மாய நூறியே
புரத்தினை அழித்தனர் போரின் மாதொடு
நிருத்தம தியற்றினர் நிமலன் போலவே. ......
61(கங்குலின் மேனியர்)
கங்குலின் மேனியர் ஆழிக் கையினர்
துங்கமொ டவுணரைத் தொலைத்துத் துண்ணெனச்
சங்கம திசைத்தனர் தண்டந் தாங்குவார்
செங்கண்மால் பொருவினர் சிலவெம் பூதரே. ......
62(அயர்ப்புறு மால்கரி)
அயர்ப்புறு மால்கரி அரற்ற வேசுலாய்க்
குயிற்றிய மணிநெடுங் கோடு வாங்குவார்
உயற்படு கற்பம்அங் கொன்றில் ஏனத்தின்
எயிற்றினைப் பறித்திடுங் குமரன் என்னவே. ......
63(கொலைபயில் கரி)
கொலைபயில் கரிமுகங் கொண்டு பூதர்தம்
மலையிடை மறைந்தனர் மறித்துந் தோன்றியே
அலமரு சமர்புரிந் தவுண வீரரில்
சிலர்சிலர் தாரகன் செயற்கை மேயினார். ......
64(மாலொடு பொருத)
மாலொடு பொருதனர் மலர யன்றனைச்
சாலவும் வருத்தினர் சலதி வேலையின்
பாலர்கள் அவுணரிற் பலர்ச லந்தரன்
போலுடல் கிழிந்தனர் பூதர் நேமியால். ......
65(போன்றவர் பிறரிலா)
போன்றவர் பிறரிலாப் பூத நாயகர்
மூன்றிலைப் படைகளின் மூழ்கித் தீமைபோய்
வான்றிகழ் கதியும்வா லுணர்வும் எய்தியே
தோன்றினர் அந்தகா சுரனைப் போற்சிலர். ......
66வேறு(இலக்க வீரரும் எண்)
இலக்க வீரரும் எண்மரும் அத்துணை
விலக்கில் வில்லுமிழ் வெங்கணை மாரிதூய்
ஒலிக்கொள் சூறையின் ஒல்லையிற் சுற்றியே
கலக்கி னார்கள் அவுணக் கடலினை. ......
67வேறு(மிடைந்தகண வீரர்)
மிடைந்தகண வீரர்களும் மேலவரு மாக
அடைந்தமர் இயற்றிஅவு ணப்படைகள் மாயத்
தடிந்தனர் ஒழிந்தன தடம்புனல் குடங்கர்
உடைந்தவழி சிந்தியென ஓடியன அன்றே. ......
68(ஓடியது கண்டனன்)
ஓடியது கண்டனன் உயிர்த்துநகை செய்தான்
காடுகிளர் வன்னியென வேகனலு கின்றான்
ஆடல்செய முன்னியொ ரடற்சிலை எடுத்தான்
தோடுசெறி வாகைபுனை சூரனருள் மைந்தன். ......
69(வாகுபெறு தேர்வல)
வாகுபெறு தேர்வலவ னைக்கடிது நோக்கி
ஏகவிடு கென்றிரவி தன்பகை இயம்பப்
பாகனினி தென்றுபரி பூண்டஇர தத்தை
வேகமொடு பூதர்படை மீதுசெல விட்டான். ......
70(பாரிடர்கள் சேனை)
பாரிடர்கள் சேனையிடை பானுவைமு னிந்தோன்
சேருதலும் ஆங்கது தெரிந்துதிறல் வாகு
சாருறு பெருந்துணைவர் தம்மொடு விரைந்தே
நேரெதிர் புகுந்தொரு நெடுஞ்சிலை எடுத்தான். ......
71(எடுத்திடும்வில் வீர)
எடுத்திடும்வில் வீரனை எதிர்ந்தவுணன் மைந்தன்
வடித்திடு தடக்கைதனில் வார்சிலை வளைத்துத்
தடித்தன குணத்தொலி தனைப்புரிய அண்டம்
வெடித்தன முடித்தலை துளக்கினர்கள் விண்ணோர். ......
72(எண்ணில்பல கோடி)
எண்ணில்பல கோடிஉரும் ஏறுருவம் ஒன்றாய்
வண்ணமிகு மின்னிடை மறைந்தொலிசெய் தென்ன
விண்ணுற நிவந்தவியன் மொய்ம்புடைய வீரன்
நண்ணலர் துணுக்கமுற நாணிசை எடுத்தான். ......
73(நாணொலி செவித்து)
நாணொலி செவித்துணையின் நஞ்சமென எய்தத்
தூணிகலும் வாகுடைய சூர்மதலை சீறி
வாணிலவு கான்றபிறை வாளியுல வாமற்
சேணுநில னுந்திசைக ளுஞ்செறிய விட்டான். ......
74(மாமுருக வேள்இள)
மாமுருக வேள்இளவன் மற்றது தெரிந்தே
காமர்பிறை போன்றுகதி ரென்னவெயில் கான்று
தீமுகம தாம்அளவில் செய்யசர மாரி
தூமுகிலும் நாணமுற வேநெடிது தூர்த்தான். ......
75(ஐயன்விடு வெஞ்சர)
ஐயன்விடு வெஞ்சரமும் ஆதவனும் அஞ்சும்
வெய்யன்விடு வெஞ்சரமும் மேவியெதிர் கவ்வி
மொய்யுடைஅ ராவினமு னிந்திகலி வெம்போர்
செய்வதென மாறுகொடு சிந்துவன தம்மில். ......
76வேறு(கரிந்திடு மாமுகில்)
கரிந்திடு மாமுகில் கடந்தன வானவர்
புரிந்திடு சேண்நெறி புகுந்தன மாலயன்
இருந்திடும் ஊரையும் இகந்தன போயின
திரிந்தன சாரிகை சிறந்தவர் தேர்களே. ......
77(தெண்டிரை நேமிகள்)
தெண்டிரை நேமிகள் சென்றன சூழ்வன
எண்டிசை மாநகர் எங்கணும் ஏகுவ
மண்டல மால்வரை மண்டியு லாவுவ
அண்டமு லாவுவ அங்கவர் தேர்களே. ......
78(மங்குலின் மேலதோ)
மங்குலின் மேலதோ மண்டல மார்வதோ
செங்கணன் ஊரதோ தெண்டிரை சேர்வதோ
இங்குளர் ஏறுதேர் எங்குள வோவெனாச்
சங்கையின் நாடினார் தங்களில் வானுளோர். ......
79(மன்னிய மாமுகில்)
மன்னிய மாமுகில் வண்ணம தாயினர்
அன்னதொல் வீரர்கள் அண்மிய தேரவை
மின்னுவின் மேவுவ வெம்மையில் வீசிய
துன்னிய வாளிகள் தொன்மழை போல்வவே. ......
80(ஆங்கவர் தேர்களில்)
ஆங்கவர் தேர்களில் ஆண்டுறு பாகர்கள்
தூங்கலில் வாசிகள் தூண்டிய மேலவர்
தீங்கதிர் வாளிகள் சேண்புடை சூழ்வுற
ஏங்கினர் ஓடினர் ஈண்டிய வானுளோர். ......
81வேறு(பூசல் இவ்வகை)
பூசல் இவ்வகை புரிந்திடு கின்றுழிப் புரைதீர்
வாச வன்மகன் தனைச்சிறை செய்திடும் வலியோன்
ஆசு கங்களில் ஆசுக மாயிரந் தூண்டி
ஈசன் மாமகன் சேனைநா யகன்நிறத் தெய்தான். ......
82(ஆக மீதிலோ)
ஆக மீதிலோ ராயிரம் பகழிபுக் கழுந்த
ஏக வீரனாம் இளவலும் முனிவுகொண் டேவி
வாகை வெங்கணை பத்துநூ றவுணர்கோன் மதலை
பாகு மாக்களும் இரதமும் ஒருங்குறப் படுத்தான். ......
83(படுக்க வெய்யவன்)
படுக்க வெய்யவன் வேறொரு வையமேற் பாய்ந்து
தடக்கை வில்லினை வளைக்குமுன் ஆயிரஞ் சரத்தைத்
தொடுக்க மற்றவன் உரந்தனைப் போழ்தலுந் துளங்கி
இடுக்கண் எய்தினன் ஆர்த்தனர் பூதர்கள் எவரும். ......
84(பூத ரார்த்திடு)
பூத ரார்த்திடு துழனியைக் கேட்டலும் பொருமிக்
காதில் வெவ்விடம் உய்த்திடு திறனெனக் கனன்றே
ஏத மில்லதோர் பண்ணவப் படைகளால் இமைப்பில்
தூதன் ஆற்றலைத் தொலைக்குவன் யானெனத் துணிந்தான். ......
85(இணையில் சூர்மகன்)
இணையில் சூர்மகன் வாருணப் படைக்கலம் எடுத்துப்
பணிவு கொண்டகார் முகந்தனில் பூட்டிநீ படர்ந்து
கணிதம் இல்லதோர் நீத்தமாய்ச் சாரதர் கணத்தைத்
துணைவர் தங்களைத் தூதனை முடிக்கெனத் தொடுத்தான். ......
86(தொடைப்பெ ரும்)
தொடைப்பெ ரும்படை கடைமுறை உலகெலாந் தொலைக்கும்
அடற்பெ ருங்கடல் ஏழினும்*
1 பரந்துபோய் ஆன்று
தடப்பெ ரும்புனல் நீத்தமாய் விசும்பினைத் தடவி
இடிப்பெ ருங்குரல் காட்டியே ஏகிய திமைப்பில். ......
87(கண்ட வானவர்)
கண்ட வானவர் துளங்கினர் பூதருங் கலக்கங்
கொண்டு நின்றனர் உணர்ந்திலர் துணைவருங் குலைந்தார்
அண்டர் நாயகற் கிளையவன் நோக்கியே அகிலம்
உண்டு லாவரும் அங்கிமாப் பெரும்படை உய்த்தான். ......
88(புகையெ ழுந்தன)
புகையெ ழுந்தன வெம்மையும் எழுந்தன புலிங்கத்
தொகையெ ழுந்தன ஞெகிழிகள் எழுந்தன சுடரின்
வகையெ ழுந்தன பேரொலி எழுந்தன வன்னிச்
சிகையெ ழுந்தன செறிந்தன வானமுந் திசையும். ......
89(முடிக்க லுற்றதீப்)
முடிக்க லுற்றதீப் பெரும்படை செறியமூ தண்டம்
வெடிக்க லுற்றன வற்றின கங்கைமீன் தொகுதி
துடிக்க லுற்றன சுருங்கின அளக்கர்தொல் கிரிகள்
பொடிக்க லுற்றன தளர்ந்துமெய் பிளந்தனள் புவியும். ......
90(தீர்த்தன் ஏவலோன்)
தீர்த்தன் ஏவலோன் விடுபடை இன்னணஞ் சென்று
மூர்த்த மொன்றினில் வாருணப் படையினை முருக்கி
நீர்த்தி ரைப்பெரு நீத்தமும் உண்டுமேல் நிமிர்ந்து
போர்த்த தாமெனச் சுற்றிய தவுணர்கோன் புறத்தில். ......
91(சுற்று கின்றஅப் படை)
சுற்று கின்றஅப் படையினைக் கண்டுசூர் புதல்வன்
செற்ற மேற்கொண்டு மாருதப் பெரும்படை செலுத்த
மற்ற தூழிவெங் காலுருக் கொண்டுமன் னுயிர்கள்
முற்றும் அண்டமுந் துளங்குறச் சென்றது முழங்கி. ......
92(மாரு தப்படை)
மாரு தப்படை சென்றுதீப் படையினை மாற்றிச்
சார தப்படை மேலட வருதலுந் தடந்தோள்
வீரன் மற்றது கண்டுவெம் பணிப்படை விடுத்தான்
சூரி யத்தனிக் கடவுளுந் தன்னுளந் துளங்க. ......
93(ஆயி ரம்பதி னாயிரம்)
ஆயி ரம்பதி னாயிரம் இலக்கமோ டநந்தந்
தீய பஃறலைப் பன்னகத் தொகுதியாய்ச் செறிந்து
காயம் எங்கணும் நிமிர்ந்துசெந் தீவிடங் கான்று
பாயி ருஞ்சுடர்க் கதிரையும் மறைத்தது படத்தால். ......
94(வெங்கண் நாகங்கள்)
வெங்கண் நாகங்கள் உமிழ்கின்ற அங்கியும் விடமும்
மங்குல் வானமுந் திசைகளும் மாநில வரைப்பும்
எங்கும் ஈண்டிய இரவினிற் புவியுளோர் யாண்டும்
பொங்கு தீச்சுடர் அளப்பில மாட்டுதல் போல. ......
95(உலவை மாப்படை)
உலவை மாப்படை உண்டிடும் அங்கியை ஒருங்கே
வலவை நீர்மையால் தம்முழை வரும்படி வாங்கி
அலகில் வெம்பணி விடுத்தென அன்னவை உமிழ்தீக்
குலவு கின்றன புகையெனக் கொடுவிடங் குழும. ......
96(இனைய கொள்கை)
இனைய கொள்கையாற் பன்னகப் பெரும்படை ஏகி
முனமெ திர்ந்திடு மாருதப் படையினை முனிந்து
துனைய வுண்டுதன் மீமிசைச் சேறலுந் தொன்னாட்
கனலி யைத்தளை பூட்டிய கண்டகன் கண்டான். ......
97(இன்ன தேயித)
இன்ன தேயிதற் கெதிரென அவுணர்கோன் எண்ணிப்
பொன்னி ருஞ்சிறைக் கலுழன்மாப் படையினைப் போக்க
அன்ன தேகலும் வெருவியே ஆற்றலின் றாகிப்
பன்ன கப்படை இரிந்தது கதிர்கண்ட பனிபோல். ......
98(ஆல வெம்பணி)
ஆல வெம்பணிப் படைமுரிந் திடுதலும் ஆர்த்துக்
கால வேகத்தின் உவணமாப் பெரும்படை கலுழன்
கோலம் எண்ணில புரிந்துநேர் வந்திடக் குரிசில்
மேலை நந்தியந் தேவன்மாப் படையினை விடுத்தான். ......
99(சீற்ற மாய்அண்ணல்)
சீற்ற மாய்அண்ணல் நந்திதன் பெரும்படை செலுத்த
நூற்று நூறுநூ றாயிர கோடிநோன் கழற்கால்
ஏற்றின் மேனிகொண் டுலகெலாம் ஒருங்குற ஈண்டி
ஆற்ற வெய்துயிர்த் தார்த்தது மூதண்டம் அதிர. ......
100(களனெ னப்படு)
களனெ னப்படு நூபுரங் கழலிடை கலிப்ப
அளவில் கிங்கிணித் தாமங்கள் கந்தரத் தார்ப்ப
ஒளிறு பேரிமில் அண்டகோ ளகையினை உரிஞ்ச
வளரு நீண்மருப் புலகெலாம் அலைப்பவந் ததுவே. ......
101(திரையெ றிந்திடும்)
திரையெ றிந்திடும் அளக்கர்உண் டுலவுசேண் முகிலின்
நிரையெ றிந்தது பரிதிதேர் எறிந்தது நெடிதாந்
தரையெ றிந்தது திசைக்கரி எறிந்தது தடம்பொன்
வரையெ றிந்தது குலகிரி எறிந்தது மருப்பால். ......
102(நந்தி மாப்படை)
நந்தி மாப்படை இன்னணம் ஏகியே நணுகி
வந்த காருடப் படையினை விழுங்கிமாற் றலனைச்
சிந்து கின்றனன் என்றுசென் றிடுதலுந் தெரியா
அந்த கன்படை தொடுத்தனன் அவுணர்கட் கரசன். ......
103(தொடுத்த அந்தக)
தொடுத்த அந்தகப் படையையும் விடைப்படை துரந்து
படுத்து வீட்டிய தன்னதன் மிடலினைப் பாராக்
கடித்து மெல்லிதழ் அதுக்கியே அயன்படைக் கலத்தை
எடுத்து வீசினன் இந்திரன் பதிகனற் கீந்தோன். ......
104(வீசுநான்முகப் படை)
வீசுநான்முகப் படைக்கலம் வெகுண்டுவிண் ணெறிபோய்
ஈசன் ஊர்திதன் படையினைக் காண்டலும் இடைந்து
நீசன் ஏவலின் வந்தனன் நின்வர வுணரேன்
காய்சி னங்கொளேல் எனத்தொழு துடைந்தது கடிதின். ......
105(நூன்மு கத்தினில்)
நூன்மு கத்தினில் விதித்திடு நூற்றிதழ் இருக்கை
நான்மு கப்படை பழுதுபட் டோடலும் நகைத்து
வான்மு கத்தவர் ஆர்த்தனர் அதுகண்டு மைந்தன்
சூன்மு கக்கொண்டல் மேனியன் பெரும்படை தொடுத்தான். ......
106(ஊழி நாளினும் முடி)
ஊழி நாளினும் முடிகிலா தவன்மகன் உந்தும்
ஆழி யான்படை ஆண்டுமால் உருவமாய் அமைந்து
கேழில் ஐம்படை தாங்கிமா யத்தொடுங் கெழுமி
வாழி நந்திதன் படையெதிர் மலைந்தது மன்னோ. ......
107(நார ணன்படை நந்தி)
நார ணன்படை நந்திதன் படைக்கெதிர் நணுகிப்
போரி யற்றியே நிற்புழி அதுகண்டு புனிதன்
சூர ரித்திறல் சிந்திடச் சிம்புளாய்த் தோன்றும்
வீர பத்திரப் படையினைத் தொழுதனன் விடுத்தான். ......
108(ஏய தாகிய வீரப)
ஏய தாகிய வீரபத் திரப்படை எழுந்து
போய காலையின் நந்திதன் படையெதிர் பொருத
மாய வன்படை தொலைந்தது மதியொடு திகழ்மீன்
ஆயி ரங்கதி ரோன்வரக் கரந்தவா றதுபோல். ......
109(செங்கண் நாயகன்)
செங்கண் நாயகன் படைதொலைந் திடுதலுந் தெரிவான்
அங்கண் ஆய்வுறா இமைப்பினில் அகிலமும் அழிக்கும்
எங்கள் நாயகன் படையினைத் தூண்டுதற் கெடுத்தான்
வெங்கண் ஆயிரங் கதிரினைச் செயிர்த்திடும் வெய்யோன். ......
110(எஞ்சல் இல்லதோர்)
எஞ்சல் இல்லதோர் எம்பிரான் தொல்படை எடுத்து
மஞ்ச னங்கந்தந் தூபிகை மணிவிளக் கமுதம்
நெஞ்சி னிற்கடி துய்த்தனன் பூசனை நிரப்பி
விஞ்சும் அன்பினால் வழுத்தியே தொழுதனன் விடுத்தான். ......
111(தாதை யாயவன்)
தாதை யாயவன் படைக்கலம் விடுத்திடுந் தன்மை
காதன் மாமகன் கண்டனன் தானுமக் கணத்தில்
ஆதி நாயகன் படைதனை எடுத்தனன் அளியால்
போத நீடுதன் புந்தியால் அருச்சனை புரிந்தான். ......
112(வழிப டுந்தொழில்)
வழிப டுந்தொழில் முற்றிய பின்னுற மதலை
அழித கன்மகன் விடுத்திடு படைக்குமா றாகி
விழுமி தாயிவண் மீளுதி யாலென வேண்டித்
தொழுதி யாவர்க்கும் மேலவன் படையினைத் தொடுத்தான். ......
113(தூயன் விட்டிடு)
தூயன் விட்டிடு சிவன்படை எழுதலுந் தொல்லைத்
தீயன் விட்டிடு பரன்படை யெதிர்ந்துநேர் சென்ற
தாய அப்படை இரண்டுமா றாகிய வழிக்கு
நாய கத்தனி உருத்திர வடிவமாய் நண்ணி. ......
114(ஊழிக் காலினை)
ஊழிக் காலினை ஒருபுடை உமிழ்ந்தன உலவாச்
சூழிப் பாய்புகை ஒருபுடை உமிழ்ந்தன தொலைக்கும்
பாழிப் பேரழல் ஒருபுடை உமிழ்ந்தன பலவாம்
ஆழித் தீவிடம் ஒருபுடை உமிழ்ந்தன அவையே. ......
115(கூளி மேலவர்)
கூளி மேலவர் தொகையினை அளித்தன கொடிதாங்
காளி மேலவர் தொகையினை அளித்தன கடுங்கண்
ஞாளி மேலவர் தொகையினை அளித்தன நவைதீர்
ஆளி மேலவர் தொகையினை அளித்தன அயலில். ......
116(பேயி னங்களை)
பேயி னங்களை ஒருபுடை உமிழ்ந்தன பிறங்கி
மூய தொல்லிருள் ஒருபுடை உமிழ்ந்தன முழங்கு
மாயை தன்கணம் ஒருபுடை உமிழ்ந்தன மறலித்
தீயர் தங்குழு ஒருபுடை உமிழ்ந்தன செறிய. ......
117(எண்ட ருங்கடல்)
எண்ட ருங்கடல் அளப்பில கான்றன எரிகால்
கொண்ட லின்தொகை அளப்பில கான்றன கொலைசெய்
சண்ட வெம்பணி அளப்பில கான்றன தபன
மண்ட லங்களோர் அளப்பில கான்றன மருங்கில். ......
118(அனந்த கோடியர்)
அனந்த கோடியர் புட்கலை இறைவரை அளித்த
அனந்த கோடியர் கரிமுகத் தவர்தமை அளித்த
அனந்த கோடியர் அரிமுகத் தவர்தமை அளித்த
அனந்த கோடியர் சிம்புள்மே னியர்தமை அளித்த. ......
119(ஏறு வெம்பரி வய)
ஏறு வெம்பரி வயப்புலி வல்லியம் யாளி
சீறு மால்கரி தேரொடு மானமேற் சேர்ந்து
மாறில் பல்படை சிந்தியே முனிந்துமேல் வருவான்
வேறு வேறெங்கும் உருத்திர கணங்களை விதித்த. ......
120(ஆர ணன்படை)
ஆர ணன்படை அளப்பில தந்தன ஐவர்
சார ணன்படை அளப்பில தந்தன தந்த
வார ணன்படை அளப்பில தந்தன வளத்தின்
கார ணன்படை அளப்பில தந்தன கடிதின். ......
121(வாயு வின்படை)
வாயு வின்படை எண்ணில புரிந்தன மறலி
ஆய வன்படை எண்ணில புரிந்தன அளக்கர்
நாய கன்படை எண்ணில புரிந்தன நகைசேர்
தீய வன்படை எண்ணில புரிந்தன செறிய. ......
122(கற்பொ ழிந்தன)
கற்பொ ழிந்தன ஞெகிழிகள் பொழிந்தன கணக்கில்
செற்பொ ழிந்தன கணிச்சிகள் பொழிந்தன திகிரி
எற்பொ ழிந்தன சூலம்வேல் பொழிந்தன ஈண்டும்
விற்பொ ழிந்தன சரமழை பொழிந்தன விரைவில். ......
123வேறு(இம்முறை உருவ)
இம்முறை உருவ நல்கி எம்பிரான் படையி ரண்டும்
மைம்மலி கடலும் வானும் மாதிர வரைப்பும் பாரும்
கொம்மென விழுங்கி அண்ட கோளகை பிளந்து மேல்போய்த்
தம்மின்மா றாகி நின்று சமர்த்தொழில் புரிந்த அன்றே. ......
124(வற்றிய அளக்கர்)
வற்றிய அளக்கர் ஏழும் வறந்தன வான்றோய் கங்கை
முற்றிய புறத்தில் ஆழி முடிந்ததவ் வண்டத் தப்பால்
சுற்றிய பெருநீர் நீத்தம் தொலைந்தன ஆண்டை வைப்பில்
பற்றிய உயிர்கள் யாவும் பதைபதைத் திறந்த அம்மா. ......
125(எரிந்தன நிலனும்)
எரிந்தன நிலனும் வானும் இடிந்தன முடிந்து மேருப்
பொரிந்தன அடுவின் சூழல் பொடிந்தன இரவி தேர்கள்
நெரிந்தன அண்டம் யாவும் நிமிர்ந்தன புகையின் ஈட்டம்
கரிந்தன கிரிகள் ஏழும் கவிழ்ந்தன திசையில் யானை. ......
126(அலைந்தன சூறை)
அலைந்தன சூறை வெங்கால் அவிந்தன வடவைச் செந்தீக்
குலைந்தன பிலங்கள் ஏழும் குலுங்கின அண்டப் பித்தி
உலைந்தன உயிர்கள் யாவும் உடைந்தனர் தெரிந்த வானோர்
தொலைந்தன கமட நாகம் சுருண்டன புரண்ட மேகம். ......
127(பூமகள் புவியின்)
பூமகள் புவியின் மங்கை பொருமியே துளங்கி ஏங்கித்
தாமரைக் கண்ணன் தன்னைத் தழுவினர் இருவ ரோடு
நாமகள் வெருவி யோடி நான்முகற் புல்லிக் கொண்டாள்
காமனை இறுகப் புல்லி இரதியும் கலக்க முற்றாள். ......
128(மற்றுள முனிவர் தேவர் மட)
மற்றுள முனிவர் தேவர் மடந்தையர் தம்மைப் புல்லி
நிற்றலும் ஆற்றார் உய்யும் நெறியுமொன் றில்லா ராயும்
உற்றிடும் அச்சந் தன்னால் ஓடினர் வனத்தீச் சூழப்
பெற்றிடும் பறழ்வாய் கவ்விப் பெயர்ந்திடும் பிணாக்க ளேபோல். ......
129(திரண்டிடு பூத வீரர்)
திரண்டிடு பூத வீரர் தியங்கினர் இலக்க ரானோர்
மருண்டனர் துணைவர் தாமும் மயங்கினர் வீரற் சூழ்ந்தார்
புரண்டனர் அவுணர் யாரும் பொடிந்தன படர்ந்த தேர்கள்
உருண்டன களிறு மாவும் ஒருவனே அவுணன் நின்றான். ......
130(ஆழிசூழ் மகேந்தி ர)
ஆழிசூழ் மகேந்தி ரத்தில் அமர்தரும் அவுணர் முற்றுஞ்
சூழுமித் தீமை நோக்கித் துண்ணென வெருவி மாழ்கி
ஏழிரு திறத்த வான உலகங்க ளியாவும் மாயும்
ஊழிநாள் இதுகொ லோவென் றுலைந்தனர் குலைந்த மெய்யார். ......
131(பேரொலி பிறந்த)
பேரொலி பிறந்த தண்டம் பிளந்தன வளைந்த சூறை
ஆரழல் பரவிற் றம்மா ஆதவன் விளிந்தான் நந்தம்
ஊருறை சனங்கள் யாவும் உலைந்தன புகுந்த தென்னோ
தேருதிர் என்று சூரன் ஒற்றரைத் தெரிய விட்டான். ......
132(விட்டிடு கின்ற ஒற்றர்)
விட்டிடு கின்ற ஒற்றர் செல்லுமுன் விரைந்து போரில்
பட்டது தெரிந்து தூதர் ஒருசிலர் பனிக்கு நெஞ்சர்
நெட்டிரு விசும்பின் நீந்து நெறியினர் இறைவன் தன்னைக்
கிட்டினர் வணங்கி நின்றாங் கினையன கிளத்த லுற்றார். ......
133(ஐயகேள் உனது)
ஐயகேள் உனது மைந்தன் அலரிதன் பகைஞன் நென்னல்
எய்திய தூத னோடும் இருஞ்சமர் விளைத்துப் பின்னர்த்
தெய்வதப் படைகள் உய்த்துச் செகமெலாம் அழிக்கு மேலோன்
வெய்யதோர் படையைத் தூண்ட அவனுமப் படையை விட்டான். ......
134(அப்படை இரண்டு)
அப்படை இரண்டு மாகி அகிலமும் ஒருங்கே உண்ணும்
ஒப்பில்பல் லுருவம் எய்தி உருகெழு செலவிற் றாகித்
துப்புடன் அண்ட முற்றும் தொலைத்தமர் புரிந்த மாதோ
இப்பரி சுணர்ந்த தென்றார் இறையவன் வினவிச் சொல்வான். ......
135(இரவியை முனி)
இரவியை முனிந்தோன் முக்கண் இறையவன் படையை யாரும்
வெருவர விடுத்து மின்னும் வென்றிலன் ஒற்றன் தன்னை
நெருநலில் சிறிய னாக நினைந்தனம் அவனை அந்தோ
உருவுகண் டெள்ளா தாற்றல் உணர்வதே யுணர்ச்சி என்றான். ......
136(வெருவரும் இனைய)
வெருவரும் இனைய பான்மை விளைந்திட எம்பி ரான்தன்
பொருவரும் படைகள் தம்மிற் பொருதன ஆடல் உன்னி
ஒருவரும் நிகர்கா ணாத ஊழியின் முதல்வன் தானே
இருபெரு வடிவ மாகி இருஞ்சமர் புரிந்த தேபோல். ......
137(இவ்வகை சிறிது)
இவ்வகை சிறிது வேலை எந்தைதன் படைக்க லங்கள்
அவ்விரு வோருங் காண ஆடலால் அமர தாற்றி
வெவ்வுரு வாகத் தம்பால் மேவர விதித்த எல்லாஞ்
செவ்விதின் மீட்டும் வல்லே திரும்பிய திறலோர் தம்பால். ......
138(திரும்பிய படைகள்)
திரும்பிய படைகள் தங்கள் செய்கையால் திரிந்த அண்டம்
பெரும்புவி அகல்வான் நேமி பிலம்வரை பிறவுந் தொல்லை
வரம்புறு மாறு நல்கி மாற்றலர் பக்கம் அல்லா
அரும்பெறல் உயிர்கள் முற்றும் அருள்செய்து போன அன்றே. ......
139(திண்டிறல் மொய்ம்)
திண்டிறல் மொய்ம்பன் விட்ட சிவன்படை மீட லோடும்
அண்டலன் விடுத்த தொல்லைப் படையுமாங் கவனை நண்ணக்
கண்டனர் அமரர் ஆர்த்தார் கைதவன் இதினும் வெற்றி
கொண்டிலன் முடிவன் இன்னே குறைந்ததெம் மிடரும் என்றார். ......
140(பாங்கரின் இபங்கள்)
பாங்கரின் இபங்கள் காணான் பாய்பரித் தொகுதி காணான்
தாங்கெழில் தேர்கள் காணான் தானவப் படையுங் காணான்
ஆங்கவை முடியத் தானே ஆயின தன்மை கண்டான்
ஏங்கினன் அவுணன் மைந்தன் இரங்கிமற் றினைய சொல்வான். ......
141(மூண்டொரு கண)
மூண்டொரு கணத்தின் எல்லாம் முடிப்பவன் படையும் நேர்போய்
மீண்டுள தென்னின் அம்மா விடுத்திட மேலொன் றுண்டோ
மாண்டன அனிக முற்றும் வறியனாய்த் தமியன் நின்றேன்
ஈண்டினிச் செய்வ தென்னென் றெண்ணியோர் சூழ்ச்சி கொண்டான். ......
142(மாயத்தான் எய்தும்)
மாயத்தான் எய்தும் நிற்கின் மலைவதுஞ் செயலன் றென்னா
மாயத்தான் அருவங் கொண்டு வல்விரைந் தெழுந்து சென்று
காயத்தான் ஆகி நிற்பக் கைதவன் வெருவித் தோன்றாக்
காயத்தான் உடைந்தான் என்றே ஆர்த்தன கணங்க ளெல்லாம். ......
143(விடலைவிண்)
விடலைவிண் ணெழுந்த காலை மேவலர் தொகையை எல்லாம்
முடிவுசெய் கென்று வஞ்ச முரட்படை அவுணன் தூண்டின்
அடுமது நமையும் என்னா அதற்குமுன் அளக்கர் ஆற்றைக்
கடிதினிற் கடந்தான் போலக் கதிரவன் கரந்து போனான். ......
144(மைப்புயல் மேனி)
மைப்புயல் மேனித் தீயோன் மறைந்தது வள்ளல் காணா
இப்பகல் தானுங் கள்வன் இறந்திலன் இரிந்து வல்லே
தப்பினன் இனியான் செய்யத் தகுவதென் னுரைத்தி ரென்ன
ஒப்பருந் துணைவர் கேளா ஒருங்குடன் தொழுது சொல்வார். ......
145(வந்தெதிர் அவுணர்)
வந்தெதிர் அவுணர் தானை மாண்டன தமியன் நின்றான்
சிந்தினன் கரந்து போனான் இனிவருந் திறலோர் இல்லை
அந்தியும் அணுகிற் றம்மா அனிகமு மியாமும் மீண்டு
கந்தனை இறைஞ்சிக் காலை வருவதே கடமைத் தென்றார். ......
146வேறு(இனிய தன்றுணை)
இனிய தன்றுணைவர் இன்னன கூற
வினவி னோன்முருக வேள்அடி காணும்
நினைவு கொண்டிடலும் விண்ணிடை நின்ற
தினகரன் பகைஞன் இன்ன தெரிந்தான். ......
147(முன்னை வைகலின் முரி)
முன்னை வைகலின் முரிந்தனன் என்றே
பன்னு மோர்வசை பரந்ததும் அன்றிப்
பின்னும் இப்பகல் பிழைத்தனன் என்றால்
என்னை யாவர்களும் எள்ளுவர் மாதோ. ......
148(தொக்க போரில்வெரு)
தொக்க போரில்வெரு வித்தொலை வோரை
தக்கதோர் துணைவர் தந்தையர் தாயர்
மக்கள் பெண்டிரும் மறப்பர்கள் என்னின்
மிக்குளார் இகழ்தல் வேண்டுவ தன்றே. ......
149(இன்று நென்னலின்)
இன்று நென்னலின் இரிந்துளன் என்றால்
வென்றி மன்எனை வெகுண்டு துறக்குந்
துன்று பல்கதி ரினைச்சுளி தொல்சீர்
பொன்றும் எந்தைபுக ழுந்தொலை வாமால். ......
150(யாதொர் துன்னலர்)
யாதொர் துன்னலர் எதிர்ந்திடின் இன்று
காதலே வலிக டந்திடு சூழ்ச்சி
நீதி அன்றதுவும் நேர்ந்தில தென்னில்
சாதலே தகுதி சாயந்திடல் நன்றோ. ......
151(வருந்தி நின்றெதிர்)
வருந்தி நின்றெதிர் மலைந்தனன் இன்றும்
இரிந்து ளான்இவன் எனும்பழி கோடல்
பொருந்தல் அன்றுபுணர் வென்னினும் ஆற்றி
விரைந்து மாற்றலரை வென்றிடல் வேண்டும். ......
152(முன்னம் நின்றொரு)
முன்னம் நின்றொரு முரட்படை தன்னை
இன்னல் எய்தும்வகை ஏவுதும் என்னின்
அன்ன தற்கெதிர் அடும்படை தூண்டிச்
சின்ன மாகவது சிந்துவன் வீரன். ......
153(இறந்த னன்பொரு)
இறந்த னன்பொரு திரிந்தன னென்னாப்
பறந்த லைச்செறுநர் பன்னுற இன்னே
மறைந்து நின்றொரு வயப்படை தூண்டிச்
சிறந்த வென்றிகொடு சென்றிடல் வேண்டும். ......
154(தெய்வ தப்படை)
தெய்வ தப்படை செலுத்துவன் என்னின்
அவ்வ னைத்தும்அம ராற்றலர் தம்பாற்
செவ்வி துற்றுயிர் செகுத்திட லின்றே
வெவ்வு ருக்கள்கொடு மீளுவ தல்லால். ......
155(பண்ண வப்படை)
பண்ண வப்படை படைத்திடு கோலம்
எண்ண லன்தெரியின் ஏற்றன தூண்டித்
துண்ணெ னத்தொலைவு சூழ்ந்திடும் யானும்
விண்ண கத்துறல் வெளிப்படு மாதோ. ......
156(வெளிப்படிற் செறு)
வெளிப்படிற் செறுநர் விண்ணினும் வந்தே
வளைத்திகற் புரிவர் மாறமர் செய்தே
இளைத்தனன் பொரவும் இன்னினி ஒல்லா*
2 தொளித்து முற்பகலின் ஓடரி தாமால். ......
157(ஏயெனச் செறுநர்)
ஏயெனச் செறுநர் ஈண்டுழி நண்ணி
ஆய தொல்லுணர் வனைத்தையும் வீட்டி
வீயும் ஈற்றினை விளைத்திடு கின்ற
மாய மாப்படை விடுத்திடல் மாட்சி. ......
158(என்று சிந்தைதனில்)
என்று சிந்தைதனில் இன்னன உன்னி
அன்று மாயவள் அளித்திடு கின்ற
வன்றிறற் படையை வல்லை எடுத்தே
புன்றொழிற் குரிசில் பூசனை செய்தான். ......
159(நெறிகொள் முப்புல)
நெறிகொள் முப்புலனில் நெஞ்சினில் யாரும்
அறிவரும் பரிசின் அண்டலர் தம்பாற்
குறுகிமெய் யுணர்வு கொண்டுயிர் மாற்றி
எறிபுனற் கடலுள் என்று விடுத்தான். ......
160(விடுதலுங் கொடிய)
விடுதலுங் கொடிய வெம்படை தான்வந்
தடையும் வண்ணமறி தற்கரி தாகிக்
கடிது பாரிடை கலந்து கணத்தின்
படையை எய்தியது பாவம தென்ன. ......
161(இருங்க ணத்தரை)
இருங்க ணத்தரை யிலக்கரை ஒள்வாள்
மருங்கு சேர்த்திய வயத்துணை வோரை
நெருங்கு தார்ப்புய நெடுந்திற லோனை
ஒருங்கு சூழ்ந்துணர் வொழித்தது மன்னோ. ......
162(ஆன்ற பொன்நகரில்)
ஆன்ற பொன்நகரில் அண்டர்கள் அஞ்ச
ஊன்றும் வில்லிடை உறங்கிய மால்போல்
தோன்று மாயைபடை தொல்லறி வுண்ண
மான்றி யாவரும் மறிந்து கிடந்தார். ......
163(மறிந்து ளார்தமது)
மறிந்து ளார்தமது மன்னுயிர் வவ்விச்
சிறந்த தன்வலி செயற்கரி தாக
அறிந்து மாயைபடை ஆகுல மூழ்கி
எறிந்து நேமியிட எண்ணிய தன்றே. ......
164(ஓல மிட்டுலக)
ஓல மிட்டுலக முட்கிட ஊழிக்
காலின் வெவ்வுருவு கைக்கொடு மாயக்
கோல வெம்படை கொடுந்தொழில் கொண்ட
ஆல காலமென ஆன்றுள தன்றே. ......
165வேறு(வெள்ளமா யிரம)
வெள்ளமா யிரம தென்னும் வியனுரை படைத்த பூத
மள்ளரைத் தலைவர் தம்மை வயங்கெழு துணையி னோரை
நள்ளலர்க் கடந்த துப்பின் நம்பியை உம்பர் ஆற்றால்
பொள்ளென எடுத்து மாயப் படைக்கலம் போயிற் றம்மா. ......
166(போயது சூரன்)
போயது சூரன் மைந்தன் புந்தியிற் கதிமேற் கொண்டு
மாயிரு நேமி ஆறும் வல்லையில் தப்பி அப்பால்
தூயதெண் புனலாய் ஆன்ற தொல்கடல் அழுவம் நண்ணி
ஆயவர் தொகையை இட்டே அகன்றிடா தோம்பிற் றன்றே. ......
167(நின்றிடு சூரன்)
நின்றிடு சூரன் மைந்தன் நிலைமைமற் றிதனை நோக்கிப்
பொன்றினன் வீர வாகு பூதரும் பிறரும் வீந்தார்
குன்றம தன்றால் மீளக் குரைபுனல் வேலை ஆழ்ந்தார்
நன்றுநஞ் சூழ்ச்சி என்னா நகைஎயி றிலங்க நக்கான். ......
168(அண்டருங் களிப்பின்)
அண்டருங் களிப்பின் மேலோன் அவ்விடை அகன்று வல்லே
விண்டொடர் நெறியிற் சென்று வியன்மகேந் திரத்தின் எய்தி
எண்டிசை உலகம் போற்ற இறைபுரி தாதை தன்னைக்
கண்டனன் இறைஞ்சி நின்றாங் கினையன கழற லுற்றான். ......
169(இன்றியான் சென்று)
இன்றியான் சென்று பல்வே றிருஞ்சமர் இயற்றிப் பின்னர்
வன்றொழில் புரிந்தவீர வாகுவை அவன்பா லோரை
அன்றியும் பூத வெள்ள மாயிரந் தன்னை யெல்லாம்
வென்றுயிர் குடித்தி யாக்கை வியன்புனற் கடலுள் உய்த்தேன். ......
170(சிறிதுநீ கவலை)
சிறிதுநீ கவலை கொள்ளேல் சேனையும் யானும் ஏகி
மறிகட லெறியுங் கால்போல் வளைந்துபா சறையைச் சிந்தி
அறுமுகன் தனையும் வென்றே அரியய னோடும் விண்ணோர்
இறைவனைப் பற்றி நாளை ஈண்டுதந் திடுவன் என்றான். ......
171வேறு(என்னும் வேலையில்)
என்னும் வேலையில் எழுந்தன உவகையாப் புடைய
பொன்னின் அங்கத மூட்டற நிமிர்ந்தன புயங்கள்
மின்னு மாமணிக் கடகங்கள் நெரிந்து வீழ்கின்ற
துன்னு மாமயிர் பொடித்தன முறுவல் தோன்றியதே. ......
172(எழுந்து நின்றிடும்)
எழுந்து நின்றிடும் இரவிதன் பகைஞனை இமைப்பில்
அழுந்த மார்புறத் தழீஇக்கொடு மடங்லே றாற்றுஞ்
செழுந்த னிப்பெருந் தவிசிடை ஏற்றி அச்சேயைக்
குழந்தை நாளெனத் தன்னயல் இருத்தினன் கொண்டான். ......
173(தந்தை யாயினோர்)
தந்தை யாயினோர் இனிதுவீற் றிருப்பதும் தமது
மைந்தர் தங்குடி பரித்தபின் அன்றிமற் றுண்டோ
எந்தை வந்துநந் தொன்முறை போற்றலால் யானுஞ்
சிந்தை தன்னிலோர் எண்ணமும் இன்றியே சிறந்தேன். ......
174(அன்று நோற்றதும்)
அன்று நோற்றதும் பற்பகல் உண்டரோ அதற்காக்
கொன்றை வேணியன் கொடுத்தனன் என்பது கொள்ளாச்
சென்ற வார்த்தைகள் நிற்கஇவ் வரசும்இத் திருவும்
இன்று நீதரப் பெற்றனன் ஐயயான் என்றான். ......
175(என்று பற்பல நயமொழி)
என்று பற்பல நயமொழி கூறிமுன் னிட்ட
வென்றி சேர்அணி மாற்றியே புதுவதா விளித்துத்
துன்று பொன்முடி ஆதியா வார்கழற் றுணையும்
நன்று தான்புனைந் தொருமொழி பின்னரும் நவில்வான். ......
176(முன்னம் நீசொற்ற)
முன்னம் நீசொற்ற தன்மையே மூவிரு முகத்தோன்
தன்னை வென்றுவெஞ் சாரதப் படையினைத் தடிந்து
பின்னர் நின்றிடும் அமரரைச் சிறையிடைப் பிணித்தே
என்னு டைப்பகை முடிக்குதி காலையே என்றான். ......
177(என்ன அன்னது)
என்ன அன்னது செய்குவன் அத்தஎன் றிசைப்ப
மன்னர் மன்னவன் சமரிடை நொந்தனை மைந்த
பொன்னு லாயநின் திருமனைக் கேகெனப் புகலப்
பன்னெ டுங்கதிர் மாற்றலன் விடைகொண்டு படர்ந்தான். ......
178(சூழி யானைதேர்)
சூழி யானைதேர் வருபரி அவுணர்கள் சுற்ற
நாழி யொன்றின்முன் சென்றுதன் கோநகர் நண்ணி
வாழ்வின் வைகினன் இதுநிற்க வன்புனற் கடலுள்
ஆழும் வீரர்கள் தேறியே எழுந்தவா றறைவாம். ......
179(வடபெ ருங்கிரி)
வடபெ ருங்கிரி சூழ்பவன் தொல்பகை மாயப்
படைவி டுத்ததும் பூதரும் துணைவர்கள் பலரும்
தொடையல் வாகுடை வீரனும் மயக்குறத் தூநீர்க்
கடலுள் இட்டதும் ஆங்ஙனஞ் சுரரெலாம் கண்டார். ......
180(அண்டர் அங்கது)
அண்டர் அங்கது நோக்கியே வெய்துயிர்த் தரந்தை
கொண்டு ளம்பதைத் தாவலித் தரற்றிமெய் குலைந்து
கண்டு ளித்திடக் கலுழ்ந்துநா வுலர்ந்துகைம் மறித்து
விண்டி டும்படி முகம்புடைத் தலமந்து வியர்த்தார். ......
181(இன்னல் இத்திற)
இன்னல் இத்திற மாகியே அமரர்கள் இரிந்து
சென்னி யாறுடைப் பண்ணவற் குரைத்திடச் சென்றார்
அன்ன தாகிய பரிசெலாம் நாடியே அவர்க்கு
முன்னம் ஓடினன் முறைதெரி நாரத முனிவன். ......
182(அம்பெ னும்படி)
அம்பெ னும்படி கால்விசை கொண்டுபோய் அறிவன்
இம்ப ராகிய பாசறைக் கண்ணுறும் எந்தை
செம்ப தங்களை வணங்கிநின் றஞ்சலி செய்தே
உம்பர் கோமகன் தன்மனம் துளங்குற உரைப்பான். ......
183(சூரன் மாமகன் கரந்து)
சூரன் மாமகன் கரந்துமா யப்படை துரந்து
வீர வாகுவும் துணைவரும் வெங்கணத் தவரும்
ஆரும் மால்கொள வீட்டியே அன்னதால் அவரை
வாரி நீர்க்கடல் உய்த்தனன் சூழ்ச்சியின் வலியால். ......
184(என்று நாரத)
என்று நாரத முனிவரன் புகறலும் இமையோர்
சென்று சென்றுவேள் பதங்களை இறைஞ்சியே திருமுன்
நின்று வீரர்கள் அழிந்திடு செயல்முறை நிகழ்த்த
வென்றி வேலினை நோக்கியே எம்பிரான் விளம்பும். ......
185(கங்கை அன்னதோர்)
கங்கை அன்னதோர் வாலிதா கியபுனற் கடற்போய்
அங்கண் வைகிய மாயமாப் படையினை அழித்து
வெங்கண் வீரர்மால் அகற்றியே அனையவர் விரைவில்
இங்கு வந்திடத் தந்துநீ செல்கென இசைத்தான். ......
186(செய்ய வேலினு)
செய்ய வேலினுக் கின்னதோர் பரிசினைச் செப்பி
ஐயன் அவ்விடை விடுத்தலும் நன்றென அகன்று
வெய்ய தீங்கதிர் ஆயிர கோடியின் விரிந்து
வைய மேலிருள் முழுதுண்டு வல்விரைந் ததுவே. ......
187(அரவு மிழ்ந்தது)
அரவு மிழ்ந்தது கொடுவிடம் உமிழ்ந்ததால் அடுகூற்
றுருவு மிழ்ந்தது செல்லினம் உமிழ்ந்ததெவ் வுலகும்
வெருவு பல்படைக் கலங்களும் உமிழ்ந்தது மிகவும்
கருநெ டும்புகை உமிழ்ந்ததங் குமிழ்ந்தது கனலே. ......
188(மின்னல் பட்டன)
மின்னல் பட்டன முகிலிருள் பட்டன விசும்பில்
துன்னல் பட்டன காரிருள் பட்டன துன்னார்
இன்னல் பட்டிடு மெய்யிருள் பட்டன வெரிமுன்
பன்னல் பட்டன நேமிசூழ் தனியிருட் படலம். ......
189(எரிந டுங்கிய)
எரிந டுங்கிய தனிலமும் நடுங்கிய தெண்பாற்
கரிந டுங்கிய அளக்கரு நடுங்கிய கனக
கிரிந டுங்கிய தரவினம் நடுங்கிய கிளர்தேர்
அரிந டுங்கிய திந்துவும் நடுங்கிய தம்மா. ......
190(அங்கி தன்படை)
அங்கி தன்படை கூற்றுவன் தன்படை அனிலன்
துங்க வெம்படை அளக்கர்கோன் தன்படை சோமன்
செங்கை வெம்படை மகபதி பெரும்படை திருமால்
பங்க யன்படை யாவையும் தொழுதுடன் படர. ......
191(அடிகள் விட்டிடும்)
அடிகள் விட்டிடும் வேற்படை எனப்படும் அலரி
கடிது சேறலும் வானவர் வதனமாங் கமலம்
நெடிது மாமகிழ் வெய்தியே மலர்ந்தன நெறிதீர்
கொடிய தானவர் முகமெனுங் கருவிளங் குவிய. ......
192(இரிந்த தானவர்)
இரிந்த தானவர் நாளையாம் இறத்துமென் றிருக்கை
பொருந்தி மாதரை முயங்கினர் கங்குலும் புலர
விரைந்து ஞாயிறு வந்ததென் றேங்கமின் னாரைப்
பிரிந்த வானவர் யாவருஞ் சிறந்தனர் பெரிதும். ......
193(இத்தி றத்தினால்)
இத்தி றத்தினால் அயிற்படை முப்புரத் திறைவன்
உய்த்த தீநகை போலவே வல்விரைந் தோடி
முத்தி றத்திரு நேமியும் பிற்பட முந்திச்
சுத்த நீர்க்கடல் புகுந்தது விண்ணுளோர் துதிப்ப. ......
194(செய்ய வேற்படை)
செய்ய வேற்படை ஆயிடை புகுதலுந் தெரிந்து
வெய்ய மாயவள் படைக்கலம் ஆற்றவும் வெருவி
மையல் வீரரை நீங்கியே தொலைந்துபோய் மறிந்து
மொய்யி ழந்தது தன்செயல் இழந்தது முடிந்தே. ......
195(ஆய காலையில் எந்தை)
ஆய காலையில் எந்தைதன் படைக்கெதிர் அடைந்து
தூய தெண்கடல் இறையவன் வெருவியே தொழுது
நேய நீர்மையான் மும்முறை வணங்கிமுன் நின்று
காய முற்றவும் வியர்ப்பெழ ஒருமொழி கழறும். ......
196வேறு(அந்த மில்வரம்)
அந்த மில்வரம் அடைந்திடு சூரன்
மைந்தன் மாயவள் வயப்படை தூண்டி
நந்தம் வீரர்கண நாதரை யெல்லாம்
புந்தி மேன்மயல் புணர்த்தினன் அம்மா. ......
197(முன்னு ணர்ச்சி)
முன்னு ணர்ச்சிமுடி வோர்தமை மற்றென்
றன்னி டத்திலிடு தன்மை புரிந்தான்
அன்ன தத்துணையில் அப்பணி ஆற்றி
என்னி டத்தினில் இருந்துள தன்றே. ......
198(இருந்த மாயை)
இருந்த மாயைபடை எம்பெரு மான்நீ
மருந்து போல்இவண் வழிப்படல் காணூஉ
அரந்தை எய்திஅடல் வீரரை நீங்கி
முரிந்து வீழ்ந்திவண் முடிந்தது மன்னோ. ......
199(தொடையல் வாகை)
தொடையல் வாகைபுனை சூரருள் மைந்தன்
விடவ ரும்படையின் வெவ்வலி சிந்தி
அடவும் வன்மையில் அனங்கவ ராலே
இடர்ப டுஞ்சிறியன் என்செய்வன் அம்மா. ......
200(வெந்தி றற்பகை)
வெந்தி றற்பகைஞர் மேல்அமர் செய்ய
வந்த வீரரும் மறிந்துணர் வற்றார்
எந்த வேலையெழு வார்இவர் என்றே
புந்தி நோய்கொடு புலம்பினன் யானும். ......
201(முறுவ லாற்புரம்)
முறுவ லாற்புரம் முடித்தவன் நல்கும்
அறுமு கேசன்அசு ரத்தொகை யெல்லாம்
இறையின் மாற்றுமமர் எண்ணிய தாடல்
திறம தென்றுநனி சிந்தனை செய்தேன். ......
202(வள்ள லாயிடை)
வள்ள லாயிடை வதிந்து கணத்தின்
வெள்ள மோடுவிடு வீரர்கள் தம்மை
நள்ள லான்மகன் நலிந்திடல் அன்னாற்
குள்ள மாங்கொலென உன்னி அயர்ந்தேன். ......
203(ஆதி மைந்தன்)
ஆதி மைந்தன்அசு ரத்தொகை தன்னைக்
காதின் உய்குவ னெனக்கரு துற்ற
பேதை யேன்புரி பிழைப்பிவண் உண்டோ
ஏதும் இல்லைமுனி யேல்எனை யென்றான். ......
204(வாழு நேமியிறை)
வாழு நேமியிறை மற்றிது கூறித்
தாழும் எல்லைதள ரேல்இனி யென்னா
ஊழி யின்முதல்வன் உய்த்திடும் ஒள்வேல்
ஆழு நீரரை அடைந்தது நண்ணி. ......
205வேறு(அடைதரு கின்ற)
அடைதரு கின்ற முன்னர் அவருணர் வுண்ட மாயப்
படையது நீங்கிற் றாகப் பதைபதைத் துயிர்த்து மெல்ல
மடிதுயில் அகன்று தொல்லை வாலறி வொருங்கு கூடக்
கடிதினில் எழுந்தார் அங்கண் உதித்திடு கதிர்க ளென்ன. ......
206(புழையுறும் எயிற்று)
புழையுறும் எயிற்றுப் பாந்தள் பொள்ளெனச் செயிர்த்துக் கான்ற
அழல்படு விடமீச் செல்ல அலமந்து வியர்த்து மாழ்கிக்
கழிதுயி லடைந்தோர் வல்லோன் காட்சியால் அதுமீண் டேக
எழுவது போல அன்னோர் யாவரும் எழுத லுற்றார். ......
207(சாரதக் கணத்து)
சாரதக் கணத்து ளோருந் தலைவரும் இலக்கத் தோரும்
யாரினும் வலிய ரான எண்மரும் எவர்க்கும் மேலாம்
வீரனும் எழுந்து வேலை மீமிசைப் பெயர்ந்து செவ்வேள்
சீரடி மனங்கொண் டேத்தித் தொழுதனர் சிறந்த அன்பால். ......
208(வீடின அவுணன்)
வீடின அவுணன் மாயை விளிந்தன பவத்தின் ஈட்டம்
பாடின சுருதி முற்றும் படிமகள் உவகை பூத்தாள்
ஆடிய தறத்தின் தெய்வம் ஆர்த்தன புவனம் யாவும்
நாடிய முனிவர் தேவர் நறைமலர் மாரி தூர்த்தார். ......
209(அன்னதோர் அமைதி தன்னி)
அன்னதோர் அமைதி தன்னில் ஆறுமா முகத்து வள்ளல்
மின்னிவர் குடுமிச் செவ்வேல் விண்ணிடை வருதல் காணூஉப்
பன்னரும் உவகை பொங்கப் பன்முறை பணிந்து போற்றிச்
சென்னியில் தொழுத கையார் எதிர்கொடு சென்று சூழ்ந்தார். ......
210(சூழ்ந்திடு கின்ற)
சூழ்ந்திடு கின்ற காலைச் சூர்மகன் மாயை தன்னால்
தாழ்ந்துணர் வழிந்த வாறும் தடம்புனற் புணரி உய்ப்ப
வீழ்ந்ததும் ஐயன் வேலால் மீண்டதும் பிறவு மெல்லாம்
ஆழ்ந்ததொல் லறிவால் தேறி அறிஞர்க்கும் அறிஞன் சொல்வான். ......
211(அந்தமில் ஒளியின்)
அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த பண்பால்
எந்தைகண் நின்றும் வந்த இயற்கையாற் சத்தி யாம்பேர்
தந்திடும் பனுவல் பெற்ற தன்மையால் தனிவேற் பெம்மான்
கந்தனே என்ன நின்னைக் கண்டுளக் கவலை நீத்தேம். ......
212(நண்ணலன் பிணி)
நண்ணலன் பிணித்த மாயம் நலிந்திட யாங்கள் எல்லாம்
துண்ணென அறிவின் றாகித் தொல்புனற் கடலுட் பட்டேம்
எண்ணரும் படைகட் கெல்லாம் இறைவநீ போந்த வாற்றால்
உண்ணிகழ் உணர்ச்சி தோன்ற உய்ந்தனம் உயிரும் பெற்றேம். ......
213(குன்றிடை எம்மை)
குன்றிடை எம்மை வீட்டிக் கொடியவன் புணர்ப்புச் செய்த
அன்றும்வந் துணர்வு நல்கி அளித்தனை அதுவும் அல்லால்*
3 இன்றும்வந் தெம்மை ஆண்டாய் ஆதலின் யாங்கள் உய்ந்தேம்
உன்றனக் குதவுங் கைம்மா றுண்டுகொல் உலகத் தென்றான். ......
214(தூயவன் இனைய)
தூயவன் இனைய மாற்றஞ் சொற்றலும் அயில்வேல் கேளா
நீயிர்கள் விளிந்த தன்மை நேடியே நிமலன் என்னை
ஏயினன் அதனால் வந்தேன் யான்வருந் தன்மை நாடி
மாயம திறந்த தங்கண் வருதிரென் றுரைத்த தன்றே. ......
215(நன்றெனத் தொழுது)
நன்றெனத் தொழுது வீரன் நகையொளி முகத்த னாகிப்
பின்றொடர் துணையி னோரும் பெருங்கணத் தவருஞ் சூழச்
சென்றனன் அனைய காலைச் சிறந்தவேற் படைமுன் னேகி
வென்றிகொள் குமரன் செங்கை மீமிசை அமர்ந்த தன்றே. ......
216ஆகத் திருவிருத்தம் - 5982