(இன்னன பலபல)
இன்னன பலபல எய்தச் சூரனாம்
மன்னவன் இருத்தலும் மற்றவ் வெல்லையில்
தொன்னகர் அணித்துறத் துன்மு கத்தினாள்
தன்னொடும் அசமுகி தான்வந் தெய்தினாள். ......
1(மோட்டுறு மகேந்திர)
மோட்டுறு மகேந்திர முதிய மாநகர்
கூட்டுறு திருவெலாங் குலைய முன்னவள்
மாட்டுறு துணையொடு வந்துற் றாலெனக்
கீட்டிசை வாய்தலைக் கிட்டி னாளரோ. ......
2(கெழுதரும் அசமுக)
கெழுதரும் அசமுகக் கெடல ணங்குதன்
பழிதரு கையினைப் பார்த்து நேர்ந்துளார்
அழிதரு துன்புகொண் டழலில் சீறினார்
இழிதரும் இச்செயல் யார்செய் தாரெனா. ......
3(மானமில் அசமுகி)
மானமில் அசமுகி மகேந்தி ரப்புரந்
தானுறு துயர்க்கொரு தாரி காட்டல்போல்
ஊனுறு குருதிகை யுகுப்பச் சென்றுழி
யானது கண்டனர் அவுணர் யாவரும். ......
4(வட்டுறு பலகையின்)
வட்டுறு பலகையின் வல்ல நாய்நிரைத்
திட்டனர் கவற்றினை இசைத்த சூளொடுங்
கிட்டினர் இடந்தொறுங் கெழுமி யாடினர்
விட்டனர் அத்தொழில் விரைந்துற் றார்சிலர். ......
5(தெரிதரு கரியபொன்)
தெரிதரு கரியபொன் திரித்திட் டாலெனப்
புரிதரு மருப்புடைப் புயலின் செச்சையை
முரிவரு பேரமர் மூட்டிக் கண்டுளார்
பரிவொடு பிரிந்தயல் படர்கின் றார்சிலர். ......
6(கார்ப்பெயல் அன்ன)
கார்ப்பெயல் அன்னதோர் கடாங்கொள் மால்கரி
கூர்ப்புறு மருப்புமெய் குளிப்பச் சோரிநீர்
ஆர்ப்பொடு தத்தமில் ஆடல் செய்வது
பார்ப்பது விட்டனர் படர்கின் றார்சிலர். ......
7(துய்யதோர் கிஞ்சு)
துய்யதோர் கிஞ்சுகச் சூட்டு வாரணம்
மொய்யொடு தன்னுயிர் முடியும் எல்லையுஞ்
செய்யுறு வெஞ்சினச் செருவை நோக்கினார்
ஒய்யென நீங்கியே யுறுகின் றார்சிலர். ......
8(ஊனமில் பலபணி)
ஊனமில் பலபணி யுடன்று சீறியே
பானுவை நுகரவிண் படரு மாறென
வானிகள் ஓச்சினர் வானிற் கைவிடா
மேனிகள் வியர்ப்புற வெகுண்டுற் றார்சிலர். ......
9(வாம்பரி தேர்கரி)
வாம்பரி தேர்கரி மானம் பாண்டில்கள்
ஏம்பலோ டூர்ந்திட இயற்றுங் கற்பொரீஇ
யாம்பொருள் அல்லதொன் றடைவ தென்னெனச்
சோம்புதல் இன்றியே தொடர்கின் றார்சிலர். ......
10(குறிகெழு வெளி)
குறிகெழு வெளிலொடு குற்றி நாட்டியும்
அறிகுறி தீட்டியும் அவையி லக்கமா
எறிகுறு படையினை எய்யுங் கோலினை
நெறிதொறும் விட்டவண் நேர்கின் றார்சிலர். ......
11(நாந்தகம் ஆதியா)
நாந்தகம் ஆதியா நவிலுந் தொல்படை
ஆய்ந்திடும் விஞ்சைகள் அடிகள் முன்னமாய்
ஏய்ந்திடுங் கழகமுற் றியற்று மாறொரீஇப்
போந்தனர் ஒருசிலர் பொருமல் மிக்குளார். ......
12(வாட்படு கனலி)
வாட்படு கனலிகால் வானின் கண்ணவாங்
காட்புறு நரம்பியாழ் காமர் வீணைகள்
வேட்புறும் ஈர்ங்குழல் மிடறு காலிசை
கேட்பது விட்டவண் கிட்டி னார்சிலர். ......
13(நாடக நூல்முறை நுனி)
நாடக நூல்முறை நுனித்து நன்றுணர்
கோடியர் கழாயினர் கூத்தர் ஏனையோர்
ஆடுறு கோட்டிகள் அகலுற் றங்ஙனங்
கூடினர் ஒருசிலர் குலையும் மெய்யினார். ......
14(புலப்படு மங்கல)
புலப்படு மங்கலப் பொருள்முற் றுங்கொடு
நலப்படு வேள்விகள் நடத்திக் கேளொடு
பலப்பல வதுவைசெய் பான்மை நீத்தொராய்க்
குலைப்புறு கையொடுங் குறுகுற் றார்சிலர். ......
15(மாலொரு மடந்தை)
மாலொரு மடந்தைபால் வைத்து முன்னுறு
சேல்விழி யொருத்திபாற் செல்ல வூடியே
மேலுறு சினத்திகல் விளைக்க நன்றிது
காலமென் றுன்னியே கழன்றுற் றார்சிலர். ......
16(தோடுறு வரிவிழி)
தோடுறு வரிவிழித் தோகை மாருடன்
மாடம திடைதொறும் வதிந்த பங்கயக்
காடுறு பூந்தடங் காமர் தண்டலை
ஆடலை வெறுத்தெழீஇ யடைகின் றார்சிலர். ......
17(சுள்ளினைக் கறித்த)
சுள்ளினைக் கறித்தனர் துற்று வாகையங்
கள்ளினைக் கொட்பொடு களிக்கும் நெஞ்சினார்
உள்ளுறுத் தியபுலன் ஊசல் போன்றுளார்
தள்ளுறத் தள்ளுறத் தளர்ந்துற் றார்சிலர். ......
18(அனையபல் வகை)
அனையபல் வகையினர் அவளைக் கண்டுளார்
பனிவரு கண்ணினர் பதைக்கும் நெஞ்சினர்
கனலொடு தீப்புகை காலு யிர்ப்பினர்
முனிவுறு கின்றனர் மொழிகின் றார்இவை. ......
19வேறு(அந்தகன் ஒருத்த)
அந்தகன் ஒருத்தற் பேரோன் ஆடல்வல் லியத்தோ னாதி
வந்திடும் அவுணர் தம்மை மதிக்கிலா வலியோர் தம்மை
முந்துறு புரத்தை அட்டு முழுவதும் முடிப்பான் நின்ற
செந்தழல் உருவத் தண்ணல் செய்கையோ இனைய தென்பார். ......
20(மேதியஞ் சென்னி)
மேதியஞ் சென்னி வீரன் வெவ்வலி நிசும்பன் சும்பன்
கோதறு குருதிக் கண்ணன் குருதியங் குரத்தன் முந்தே
பூதலம் புரந்த சீர்த்திப் பொருவில்தா ரகனே பண்டன்
ஆதியர் ஆயுள் கொண்ட ஐயைதன் செயலோ என்பார். ......
21(சிரபத்தி அளவை)
சிரபத்தி அளவை யில்லாத் திறலரி ஒருநாற் றந்தக்
கரபத்தின் அண்ணல் வானோர் யாரையுங் கலக்கஞ் செய்ய
வரபத்தி புரியா அன்னோர் வணங்கினர் அடைய அந்நாட்
சரபத்தின் வடிவங் கொண்டான் தன்செய லாங்கொல் என்பார். ......
22(வண்டுளர் கமல)
வண்டுளர் கமலச் செங்கண் மாயனுந் தூய நீலங்
கண்டம தடைத்த தேவுங் கலந்தனர் தழுவிச் சேரப்
பண்டவர் புணர்ப்புத் தன்னில் உருத்திரர் பரிசா லுற்ற
செண்டுறு கரத்து வள்ளல் செய்கையே போலும் என்பார். ......
23(பிளிற்றுறு குரலின்)
பிளிற்றுறு குரலின் நால்வாய்ப் பெருந்துணை எயிற்றுப் புன்கண்
வெளிற்றுறு தடக்கை கொண்ட வேழமா முகத்தெம் மேலோன்
ஒளிற்றுறு கலன்மார் பெய்தி உயிர்குடித் துமிழ்ந்த தந்தக்
களிற்றுடை முகத்துப் பிள்ளை செய்கையோ காணும் என்பார். ......
24(ஈசனை மதிக்கி)
ஈசனை மதிக்கி லாதே யாமுதற் கடவு ளென்று
பேசிடு தலைவர்க் கேற்ற பெற்றியால் தண்டம் ஆற்றும்
ஆசறு சங்கு கன்னன் அகட்டழற் குண்டம் போல்வான்
தேசுறு பானு கம்பன் முதலினோர் செயலோ என்பார். ......
25(நஞ்சுபில் கெயிற்று)
நஞ்சுபில் கெயிற்றுப் புத்தேள் நாகணைப் பள்ளி மீது
தஞ்ச மொடிருந்த அண்ணல் தன்செய லாமோ என்பார்
அஞ்சுவன் இனைய செய்கைக் கனையது நினைவன் றென்பார்
நெஞ்சினும் இதனைச் செய்ய நினைக்குமோ மலரோன் என்பார். ......
26(புரந்தர னென்னும்)
புரந்தர னென்னும் விண்ணோன் புணர்த்திடு செயலோ என்பார்
கரந்தனன் திரிவான் செய்ய வல்லனோ கருத்தன் றென்பார்
இருந்திடு கடவு ளோர்கள் இழைத்திடு விதியோ என்பார்
நிரந்துநம் பணியின் நிற்போர் நினைப்பரோ இதனை என்பார். ......
27(கழைத்துணி நற)
கழைத்துணி நறவ மாந்திக் களிப்புறா உணர்ச்சி முற்றும்
பிழைத்தவ ராகும் அன்றேல் பித்தர்செய் தனராம் என்பார்
இழைத்தநா ளெல்லை சென்றோர் இயற்றியார் யாரோ என்பார்
விழுப்பெரு முனிவர் சொல்லால் வீழ்ந்ததோ இவர்கை என்பார். ......
28(அங்கியின் கிளர்ச்சி)
அங்கியின் கிளர்ச்சி யேபோல் அவிர்சுடர்க் கூர்வாள் தன்னைத்
தங்களி லேந்தி இன்னோர் சான்றசூள் உறவு சாற்றித்
துங்கமொ டமரின் ஏற்று முறைமுறை துணித்தார் கொல்லோ
இங்கிவர் இருவர் கையும் இற்றன காண்மின் என்பார். ......
29(ஆரிவள் கரத்தி)
ஆரிவள் கரத்தி லொன்றை அடவல்லார் எவர்கண் ணேயோ
பேருறு காதல் கொண்டு பெண்மதி மயக்கந் தன்னாற்
சீரிய வுறுப்பி லொன்று சின்னமாத் தருவ னென்று
கூருடை வாளால் ஈர்ந்து கொடுத்தனள் போலும் என்பார். ......
30(கேடுறும் இனையள்)
கேடுறும் இனையள் தன்னைக் கேட்பதென் இனிநாம் என்பார்
நாடிநாம் வினாவி னோமேல் நம்மெலாம் முனியும் என்பார்
மாடுறப் போவ தென்னை மாநில வரைப்பின் காறும்
ஓடியே அறிதும் என்பார் இனையன உரைத்த லோடும். ......
31(சொல்லியற் சூரன்)
சொல்லியற் சூரன் தங்கை துன்முகி யோடு கைபோய்
வல்லையிற் போதல் கேளா மம்மருற் றவுண மாதர்
சில்லியற் கூந்தல் தாழத் தெருத்தொறுஞ் செறிந்து கஞ்சம்
ஒல்லைமுத் துதிர்ப்ப தென்ன ஒண்கணீர் உகுத்துச் சூழ்ந்தார். ......
32(அந்நகர் மகளிர்)
அந்நகர் மகளிர் யாரும் ஆடவர் யாருஞ் சூழ்ந்து
துன்னினர் இனைய வாற்றால் துயருழந் திரங்கிச் சோரப்
பின்னவர் தொகுதி நீங்கிப் பிறங்குகோ நகரம் போந்து
மன்னவர் மன்னன் வைகும் மன்றினுக் கணிய ளானாள். ......
33ஆகத் திருவிருத்தம் - 3485