Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   39 - சூரன் அரசிருக்கைப் படலம்   next padalamsUran arasirukkaip padalam

Ms Revathi Sankaran (4.22mb)




(இன்ன பான்மையின்)

இன்ன பான்மையின் மகபதி இருந்தனன் இப்பால்
     முன்ன மேகிய அசமுகி வெய்யதுன் முகத்தாள்
          தன்னொ டேகியே மகேந்திரத் தனிநகர் அடைந்தாள்
               அன்ன காலையிற் சூரன்வீற் றிருந்தவா றறைவாம். ......    1

வேறு

(மீயுயர் கின்ற)

மீயுயர் கின்ற விண்ணினின் றிழிந்த விழுமிய மேதினி வரைப்பின்
     ஆயிர கோடி கொண்டவண் டத்தில் ஆடகப் பித்திகை அவற்றுள்
          தீயன விலக்கி நல்லன எடுத்துத் திசைமுகத் தவர்கள்செய் தென்ன
               ஓய்வற விளங்கு தபனியப் பொதுவொன் றொராயிரம் யோசனை யுறுமே. ......    2

(இத்தரை யுளதா)

இத்தரை யுளதாந் தொல்லைஅண் டத்தில் இடையிடை எய்தியே இலங்கும்
     அத்தமால் வரைகள் கைபுனைந் தியற்றி அம்புயா சனர்பலர் கூடி
          வைத்தெனச் சூரன் அரசியல் நடாத்தும் மன்றினில் ஆயிரகோடி
               பத்தியின் நிறுவும் ஆடகத் தூணம் பரந்ததப் பெருமையார் பகர்வார். ......    3

(தொல்லையண் டத்)

தொல்லையண் டத்தின் கண்டொறுங் கெழீஇய சுவணமா தரையெலாந் தொகைசெய்
     தல்லன விலக்கி நல்லன தெரிந்தே அமைத்தபோல் அணிபெறு நிலத்தில்
          ஒல்லுறு புடையில் உம்பரில் அங்கண் உலப்பிலாக் குலகிரிக் குழுவிற்
               பல்லிருந் துணிசெய் தணிபடுத் தென்னப் பன்னிற ஓவியம் பயிலும். ......    4

(பொன்னுலா அண்ட)

பொன்னுலா அண்டத் தும்பர்க டோறும் பொருந்திய செக்கர்வான் புராரி
     தன்னதா ணையினால் ஒருங்குசூழ்ந் தென்னத் தண்மலர் விதானமீத் தயங்கப்
          பன்னிரு கோடி யாகியெங் கணுஞ்சூழ் பகலவர் சிலவரே யன்றி
               அன்னவர் பலரும் பணியிலுற் றென்ன அணிமணிக் கண்ணடி ஒளிரும். ......    5

(மண்ணுலா அண்ட)

மண்ணுலா அண்டத் திரவிகள் என்றூழ் வரம்பிலா மதிகளின் உளவாந்
     தெண்ணிலாக் கற்றை ஐம்பெரு நிறத்த செல்லினம் யாவையுஞ் செறிந்தே
          அண்ணலார் மேலைக் கம்பலஞ் சூழ்போய் அமர்ந்தென ஆயிடைக் கவரி
               எண்ணிலா தனவும் பஃறுகிற் குழுவும் இடைவிராய் மிடைவன எங்கும். ......    6

(பரக்குறும் அண்ட)

பரக்குறும் அண்டந் தொறுந்தொறும் உளவாம் பகலினைப் பரிமுகத் தெரியின்
     உருக்கியொன் றாக்கித் தவிசென இயற்றி ஒளிறுதா ரகையவட் குயிற்றித்
          தருக்குறு கின்ற மதிகளை மடங்கல் தகவுசெய் திருத்திய தென்னத்
               திருக்கிளர் அவையத் தவுணர்கோன் இருப்பச் சிறந்ததோர் அரியணை திகழும். ......    7

(ஆனதோர் மன்ற)

ஆனதோர் மன்றத் தரியணை மிசையே ஆயிர கோடியண் டத்தின்
     மேனிமிர் வடவை அங்கியும் விடமு மிசைந்தழி யாநெறி மேவித்
          தானவர் பரவக் கூற்றெலா மொன்றாய்த் தணப்பில்பேர் அணிகலந் தயங்க
               வானிமிர்ந் துற்றா லென்னவெஞ் சூர மன்னவர் மன்னன்வீற் றிருந்தான். ......    8

(மேலைநாள் அமல)

மேலைநாள் அமலன் உதவுபல் லண்டம் மேவர நடாத்துதொல் லாணைக்
     கோலொடு வெளிய சீர்த்திகள் முழுதுங் குறுகியே ஈருருக் கொண்டு
          பாலுற வந்து நின்றதே யென்னப் பாங்கரில் அவுணர்கள் தாங்கும்
               வாலிய துணைசேர் தவளவெண் கவிகை மாமதிக் கடவுளை மலைய. ......    9

(காருறழ் படிவ)

காருறழ் படிவத் துவரிகள் அனைத்துங் கண்ணகன் பாற்கடல் முழுதும்
     ஈருரு வெய்தி யெழுந்துமே லோங்கி இருந்தென வைகலுஞ் செலுமத்
          தாரக விறலோன் பஃறலைச் சீயத் தலைமையான் சார்ந்தயல் இருப்ப
               ஆரழல் உருவப் பண்ணவ ரேபோல் அமைச்சருங் குமரரும் அமர. ......    10

(எவ்வெலா அண்ட)

எவ்வெலா அண்டத் துறைதரு மருத்தும் இரும்புனற் கிறைவரு மாகிச்
     செவ்விதின் ஒருங்கித் தத்தமில் உலவாச் சீகரம் படுபனி சிதறி
          அவ்வயின் வேண்டும் அளவையிற் பலவாய் அவனடி பணிந்தெழுந் திறம்போல்
               மைவரை யனைய அவுணர்கள் இரட்டும் வாலிய கவரிகள் வயங்க. ......    11

(உரைத்திடும் அண்ட)

உரைத்திடும் அண்டந் தொறுந்தொறும் உள்ள உம்பரில் இயக்கர் கோன் உலகில்
     தரைப்பெரு வரைப்பில் பிறவிலுள் ளதனில் தவறிலா அற்புதத் தனவாத்
          தெரித்தனர் எடுத்துப் பொதிந்தென நறிய திரையன்மெல் லிலைதுவர்ப் பழுக்காய்
               விரைத்திடு சுண்ணங் கொள்கலம் பரியா வினைமுறை யோர்பலர் விரவ. ......    12

(நின்றதோ ரேனை)

நின்றதோ ரேனை அருக்கருட் சிலரை நீரமுய்த் துள்ளகோ டிகமேற்
     பொன்றரை யுழியின் மணிசொரிந் தென்னப் புகட்டுறு தம்பலக் களாசி
          மன்றதொல் லறிவர் திருத்தினர் பொருவ மற்றவை அவுணர்க ளேந்தித்
               துன்றிருந் துவர்க்கா யடைபிற பரிக்குந் தொழுவர்தங் குழுவொடு துவன்ற. ......    13

(ஆழியங் கிரியிற்)

ஆழியங் கிரியிற் கதிர்மணி வெயிலும் அன்னது சூழ்ந்தபேர் இருளும்
     வாழிய அமுதும் உவரியும் அல்லா வாரிதி யும்பல மணியும்
          ஊழியி னிறுதி அமையமே லெல்லாம் ஒன்றிய தென்னமுன் னிருபால்
               கேழுறு பின்னர் அவுணர்மாத் தலைவர் கிளையொடு துவன்றினர் கெழும. ......    14

(மின்னவிர் விசும்)

மின்னவிர் விசும்பின் அகட்டினை அளவி வெண்மதிக் கடவுண்மெய் யணுகிப்
     பின்னுறும் அமுத நீர்க்கடல் திளைத்துப் பெரும்புறப் புணரியிற் படியா
          இந்நில மருங்கில் வானகத் துள்ள எழின்மலர்க் காவுதோ றுலாவித்
               தன்னொலி யின்றி மென்மெல அசைந்து தண்ணென வசந்தன்முற் சார. ......    15

(விண்படு நிறைநீர்)

விண்படு நிறைநீர்ப் புதுமதிக் கடவுள் வியன்பனித் துவலையைத் துற்றுக்
     கண்படு துறக்கத் தண்டலைப் பொதும்பிற் காமரம் போதிடைக் கவிழ்த்தி
          எண்படு பன்னாள் கழித்தபின் கவர்ந்தே எழிலிகள் கரந்துநின் றீண்டைத்
               தண்பனி உறைப்பிற் கண்ணுறாத் துவலை தணப்பறச் சிதறிடத் தம்மில். ......    16

(தேனமர் ஐம்பால்)

தேனமர் ஐம்பால் உருப்பசி அரம்பை திலோத்தமை மேனகை முதலாம்
     வானவர் மகளிர் இயக்கர்தம் மகளிர் வலிகெழும் அரக்கர்தம் மகளிர்
          தானவர் மகளிர் விஞ்சையர் மகளிர் சாரணர் சித்தர்தம் மகளிர்
               ஏனையர் மகளி ரியாவரும் வெவ்வே றியற்படு களிநடம் இயற்ற. ......    17

(ஐந்திறத் துருவங்)

ஐந்திறத் துருவங் காலையில் உரைப்பான் அமையமின் றாகியே வேதா
     வந்தொரு புடையில் ஒதுங்கினன் இருப்ப மற்றவன் உதவுறுங் குமரர்
          நந்துறு பெருநீர்க் குடங்கரிற் கன்னல் நாடினர் நாழிகைப் பறையை
               முந்துற விரட்டிப் பதந்தொறுஞ் சென்று முறைமுறை உரைத்தனர் திரிய. ......    18

(தேர்த்திடும் உழுவை)

தேர்த்திடும் உழுவைச் சூழலிற் சிலமான் சென்றென அவுணர்தஞ் செறிவில்
     வேர்த்துடல் பதைப்ப வரும்பல முனிவர் வேறுவே றாசிகள் இசையா
          ஆர்த்திடும் ஒலியாற் கேட்டில வாமென் றஞ்சினர் அவருறு புலத்தைப்
               பார்த்திடுந் தோறும் வாழ்கெனப் பரவிப் பாணியை விரித்தனர் நிற்ப. ......    19

(திருக்கிளர் பொன்)

திருக்கிளர் பொன்னாட் டிந்திரன் அல்லாத் தேவர்கள் யாவரும் அவுணர்
     நெருக்கினர் உந்த ஏகிநேர் புகுவோர் நெடுங்கடை காறுமுன் றள்ள
          வெருக்கொடு சென்று மீண்டுமற் றாகி வியன்கடை காவலர் புடைப்பத்
               தருக்குறும் அவையங் காணிய பெறாது தம்முளங் குலைந்தனர் திரிய. ......    20

(வெற்றவெங் கத)

வெற்றவெங் கதத்தர் அவுணர்கஞ் சுகிசேர் மெய்யினர் வெறுக்கையஞ் சூரல்
     பற்றிடு கரத்தர் செல்லெனுந் தெழிப்பர் பனிப்பிறை எயிற்றர் பல்லிமையோர்
          பொற்றட மகுடஞ் சிதறிடப் புடைப்போர் புயலுறு சூறையிற் றுரந்துஞ்
               சுற்றுற நிறுத்தும் இருத்தியும் புகுந்தோர் தொல்பெயர் செப்பிமுன் துதிப்ப. ......    21

(பொன்றிகழ் கமல)

பொன்றிகழ் கமலத் திதழெலாம் விரிந்த போதினிற் பொகுட்டிடை தோறும்
     மின்றிகழ் நுசுப்பில் திருமகள் பலராய் வீற்றுவீற் றிருத்தலே போலக்
          குன்றுறழ் கொங்கை மங்கையர் பல்லோர் கொண்டுதன் னுறையுளிற் சென்று
               துன்றிய பலவாந் தீபிகைத் தட்டஞ் சொன்முறை யாசியிற் சுற்ற. ......    22

(தென்னுறு பாலை)

தென்னுறு பாலை குறிஞ்சியே மருதஞ் செவ்வழி யென்னுநா னிலத்திற்
     பின்னகம் புறமே அருகியல் மற்றைப் பெருகியல் உறழவெண் ணிரண்டாய்
          மன்னிய நாதத் திசைகளிற் பிறவில் வரம்பில வாயபாட் டதனுட்
               கின்னரர் சித்தர் இயக்கர்கந் தருவர் கிளத்துமங் கலத்தன இசைப்ப. ......    23

(மாகநல் வேள்வி)

மாகநல் வேள்வி ஆற்றிய திறனும் மதிமுடிப் பரனருள் அடைந்தே
     ஏகிய திறனுந் தனதனை முதலா யாரையும் நிலையழித் தனவுஞ்
          சேகுறும் அண்டம் யாவையுங் கண்டு திருவுடன் அரசியற் றியதும்
               பூகத நிலையத் தவுணர்கள் பல்லோர் புடைதனில் முறைமுறை புகழ. ......    24

(கார்த்திடும் அவுணர்)

கார்த்திடும் அவுணர் திசையுளா ரேனோர் கைதொழூஉத் தனது நோன் கழற்கால்
     தூர்த்திடு மலருந் தொல்பெருங் கவியுந் தூநெறி முனிவரர் தொகையுஞ்
          சார்த்தினர் வரையா மந்திர நெறியால் தலைத்தலை யாசிகள் சாற்றிச்
               சேர்த்தனர் சிந்துந் துணருமக் கதமுஞ் சீர்த்தகால் வீசினன் திரிய. ......    25

(ஆடியல் முறையை)

ஆடியல் முறையை இயற்றினர் தமக்கும் அடைந்துதற் புகழுநர் தமக்கும்
     பாடியல் முறையில் வல்லுநர் தமக்கும் பரிவுசெய் தலைவர்கள் தமக்கும்
          பீடுறு மகுடங் கடகநூல் முதலாம் பேரணி மணித்துகில் பிறவும்
               மாடுறு நிதியும் ஏனவும் நின்று மலர்க்கைநீட் டினதொறும் வழங்க. ......    26

(தேவரும் ஏனை முனி)

தேவரும் ஏனை முனிவரும் பிறருஞ் செய்துறாத் தங்கள்பா லன்றி
     ஏவர்பா லானும் இறைவனாம் ஒருதான் ஏதம்நோக் குற்றனன் வெகுளின்
          ஆவிய திழப்பார் போல்வெரீஇப் புகழ்ந்தும் அவனுவப் புற்றிடின் உய்ந்தும்
               ஓவற நிற்பர் அசனிவீழ் தோறும் உரைக்குமந் திரத்தினோர் என்ன. ......    27

ஆகத் திருவிருத்தம் - 3452



previous padalam   39 - சூரன் அரசிருக்கைப் படலம்   next padalamsUran arasirukkaip padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]