(மறிமுக முடைய)
மறிமுக முடைய தீயாள் மன்றினுக் கணிய ளாகிக்
கிறிசெயும் அன்னை தன்னைக் கேளிரை மருகா னோரைத்
திறலுடை முன்னை யோரைச் சிந்தையில் உன்னி யாண்டைப்
பொறிமகள் இரியல் போகக் கதறியே புலம்ப லுற்றாள். ......
1வேறு(வெறியாரும் இதழி)
வெறியாரும் இதழிமுடிப் பண்ணவர்கோன் அருள்புரிந்த மேனாள் வந்தாய்
பிறியாது நுமைப்போற்றித் திரிவனென்றாய் அம்மொழியும் பிழைத்தாய் போலும்
அறியாயோ கரம்போன தஞ்சலென்றாய் இலைதகுமோ அன்னே யன்னே
சிறியேனான் பெண்பிறந்து பட்டபரி பவமென்று தீரும் ஐயோ. ......
2(தாதையா னவர்)
தாதையா னவர்அளித்த மைந்தர்கணே விருப்புறுவர் தாயர்பெற்ற
மாதரார் பால்உவகை செய்திடுவர் ஈதுலக வழக்கம் என்பார்
ஆதலால் என்துயரம் அகற்றவந்தாய் இலையந்தோ ஆரு மின்றி
ஏதிலார் போல்தமியேன் கரமிழந்தும் இவ்வுயிர்கொண் டிருப்ப தேயோ. ......
3(வருவீரெங் கணு)
வருவீரெங் கணுமென்றே அஞ்சாது புலோமசையை வலிதே வௌவிப்
பெருவீர முடன்வந்தேன் எனதுகர தலந்துணித்துப் பின்னே சென்று
பொருவீர மாகாளன் அவளையுமீட் டேகினன்அப் பொதும்பர்க் கானில்
ஒருவீருஞ் செல்லீரோ நமரங்காள் நீருமவர்க் கொளித்திட் டீரோ. ......
4(புரங்குறைத்தும்)
புரங்குறைத்தும் வலிகுறைத்தும் பொங்கியதொன் னிலைகுறைத்தும் புரையு றாத
வரங்குறைத்தும் புகழ்குறைத்தும் மறையொழுக்கந் தனைக்குறைத்தும் மலிசீர் தொல்லை
உரங்குறைத்தும் வானவரை ஏவல்கொண்டோம் என்றிருப்பீர் ஒருவன் போந்தென்
கரங்குறைத்த தறியீர்நுந் நாசிகுறைத் தனன்போலுங் காண்மின் காண்மின். ......
5(மேயினான் பொன்னு)
மேயினான் பொன்னுலகின் மீன்சுமந்து பழிக்கஞ்சி வெருவிக் காணான்
போயினான் போயினான் வலியிலனென் றுரைத்திடுவீர் போலும் அன்னான்
ஏயினான் ஒருவனையே அவன்போந்தென் கரந்துணித்தான் இல்லக் கூரைத்
தீயினார் கரந்ததிறன் ஆயிற்றே இந்திரன்றன் செயலு மாதோ. ......
6(எள்ளுற்ற நுண்டு)
எள்ளுற்ற நுண்டுகளில் துணையாகுஞ் சிறுமைத்தே எனினும் யார்க்கும்
உள்ளுற்ற பகையுண்டேல் கேடுளதென் றுரைப்பர்அஃ துண்மை யாமால்
தள்ளுற்றுந் தள்ளுற்றும் ஏவல்புரிந் துழல்குலிசத் தடக்கை அண்ணல்
கள்ளுற்று மறைந்திருந்தே எனதுகரந் துணிப்பித்தான் காண்மின் காண்மின். ......
7(சங்கிருந்த புணரி)
சங்கிருந்த புணரிதனில் நடுவிருந்த வடவையெனுந் தழலின் புத்தேள்
உங்கிருந்த குவலயமோ டவைமுழுதுங் காலம்பார்த் தொழிப்ப தேபோல்
அங்கிருந்தென் கரந்துணித்த ஒருவோனும் உங்களைமேல் அடுவன் போலும்
இங்கிருந்தென் செய்கின்றீர் வானவரைச் சிறியரென இகழ்ந்திட் டீரே. ......
8(முச்சிரமுண் டிரணி)
முச்சிரமுண் டிரணியனுக் கிருசிரமுண் டந்தவன்னி முகற்கு மற்றை
வச்சிரவா குவுக்கொருபான் சிரமுண்டே அவைவாளா வளர்த்திட் டாரோ
இச்சிரங்கள் என்செய்யும் ஒருசிரத்தோன் என்கரத்தை இறுத்துப் போனான்
அச்சுரருக் கஞ்சுவரே பாதலத்தில் அரக்கரிவர்க் களியர் அம்மா. ......
9(பிறைசெய்த சீரு)
பிறைசெய்த சீருருவக் குழவியுருக் கொண்டுறுநாட் பெயர்ந்து வானின்
முறைசெய்த செங்கதிரோன் ஆதபமெய் தீண்டுதலும் முனிந்து பற்றிச்
சிறைசெய்த மருகாவோ மருகாவோ ஒருவனெனைச் செங்கை தீண்டிக்
குறைசெய்து போவதுவோ வினவுகிலாய் ஈதென்ன கொடுமை தானே. ......
10(நீண்டாழி சூழு)
நீண்டாழி சூழுலகை ஓரடியால் அளவைசெய்தோன் நேமி தன்னைப்
பூண்டாய்பொன் னாரமென இந்நாளும் ஓர்பழியே பூணா நின்றாய்
ஈண்டாருங் குறும்பகைஞர் என்கரம்போந் திறமியற்ற இனிது வையம்
ஆண்டாய்நந் தாரகனே குறைமதிநீ ரோநின்பேர் ஆற்றல் அம்மா. ......
11(வையொன்று வச்சி)
வையொன்று வச்சிரக்கைப் புரந்தரனைத் தந்தியொடும் வான்மீச்செல்ல
ஒய்யென்று கரத்தொன்றால் எறிந்தனைவீழ்ந் தனன்கிடப்ப உதைத்தாய் என்பர்
மெய்யென்று வியந்திருந்தேன் பட்டிமையோ அவன்தூதன் வெகுண்டு வந்தென்
கையொன்று தடிந்தானே சிங்கமுக வீரவிது காண்கி லாயோ. ......
12(சூரனாம் பெயர்)
சூரனாம் பெயர்படைத்த அவுணர்கள்தம் பெருவாழ்வே தொல்லை யண்டஞ்
சேரவே புரந்தனைநின் பரிதிசெங்கோல் குடையெங்குஞ் செல்லா நிற்கும்
ஆரும்வா னவர்அவற்றிற் கச்சுறுவர் பொன்னகரோன் ஆணை போற்றும்
வீரமா காளனிடைக் கண்டிலனால் வலியர்முனம் மேவு றாவோ. ......
13(ஒன்னார்தஞ் சூழ்ச்சி)
ஒன்னார்தஞ் சூழ்ச்சியினால் ஒருமுனிவன் என்சிறுவர் உயிர்கொண் டுற்றான்
இந்நாளில் அஃதன்றி ஒருவனைக்கொண் டெனதுகையும் இழப்பித் தாரே
பின்னாள்இவ் வருத்தமுற நன்றரசு புரிந்தனையால் பிழைஈ தன்றோ
மன்னாவோ மன்னாவோ யான்பட்ட இழிவரவை மதிக்கி லாயோ. ......
14(காவல்புரிந் துல)
காவல்புரிந் துலகாளும் அண்ணாவோ அண்ணாவோ கரமற் றேன்காண்
ஏவரெனக் குறவாவர் ஊனமுற்றோர் இருப்பதுவும் இழுக்கே அன்றோ
ஆவிதனை விடுவேன்நான் அதற்குமுனம் என்மானம் அடுவதையோ
பாவியொரு பெண்பிறந்த பயனிதுவோ விதிக்கென்பாற் பகைமற் றுண்டோ. ......
15ஆகத் திருவிருத்தம் - 3500