(என்று பற்பல உரை)
என்று பற்பல உரைத்தனள் ஆவலித் திரங்கிப்
பின்றொ டர்ந்திடு துன்முகி தன்னொடும் பெயரா
மன்றின் மேவரு சூரபன் மாவெனும் வலியோன்
பொன்ற டங்கழல் முன்னரே வீழ்ந்துபோய்ப் புரண்டாள். ......
1(புரண்டு மற்றவள்)
புரண்டு மற்றவள் சகடையிற் பெயர்ந்திடும் போழ்தின்
மருண்டு பேரவை யகத்தினோர் அஞ்சினர் மறுக
அரண்ட ருங்கழற் சூரபன் மாவெனும் அவுணன்
இரண்டு நோக்கினுந் தீயெழ விழித்திவை இசைப்பான். ......
2(என்னை யோவி)
என்னை யோவிவட் புலம்புதி அசமுகத் திளையோய்
உன்னை யோர்கிலா தென்னையும் நினைகிலா துன்கை
தன்னை யும்மிவள் கரத்தையும் வாளினால் தடிந்து
முன்னை யோரென இருந்துளார் யாரென மொழிந்தான். ......
3(புரந்த ரன்புணர்)
புரந்த ரன்புணர் புலோமசை புவியிலோர் புறத்தில்
இருந்து நோற்றலும் உன்றனக் கென்றுசென் றெடுத்தோம்
விரைந்து வந்தொரு விண்ணவன் எங்களை வெகுண்டு
கரந்து ணித்துமற் றவளைமீட் டேகினன் கண்டாய். ......
4(என்னு முன்னரே சொரி)
என்னு முன்னரே சொரிந்தன விழிகனல் எரிவாய்
துன்னு தீம்புகைப் படலிகை உமிழ்ந்தது துண்டம்
வன்னி காலுறு காலென உயிர்த்தது மதிபோல்
மின்னல் வாளெயி றிதழினை மறைத்தது விரைவில். ......
5(வெடிக்க லுற்றதெ)
வெடிக்க லுற்றதெவ் வண்டமென் றையுற விரைவில்
இடிக்க லுற்றது தீயவாய் நகைவந்த திதழுந்
துடிக்க லுற்றது புருவமேல் நிமிர்ந்தது துள்ளிக்
கடிக்க லுற்றன எயிற்றணி கறகற கலிப்ப. ......
6(புயற்பு றந்தொறு)
புயற்பு றந்தொறு நித்தில முதிர்ந்தவா போல
வியர்ப்பு மிக்கன முறைமுறை அன்னது விளிய
மயிர்ப்பு றந்தொறும் புலிங்கம்வந் தடைந்தன வல்லே
செயிர்ப்பெ னுங்கனல் கிளர்ந்தது சிந்தையின் நின்றும். ......
7(நீடு வெஞ்சினம்)
நீடு வெஞ்சினம் இத்திறம் அவனிடை நிகழ
ஓடு கின்றனர் திசையுளார் உலைந்தனர் முனிவர்
ஆடு கின்றதோர் தெய்வதக் கணிகையர் அவன்சீர்
பாடு கின்றவர் யாவரும் பதைபதைத் திரிந்தார். ......
8(தாங்க லுற்றிடு)
தாங்க லுற்றிடு திசைக்கரி ஓடிய தரிக்கும்
ஓங்கல் மேருவுங் குலைந்தன பணியெலாம் உலைந்த
ஏங்கு கின்றனர் வானவர் நடுங்கினர் இரவி
தீங்கு நாடியே போயினன் மீண்டனன் திரிந்தான். ......
9(பார்ந டுங்கின)
பார்ந டுங்கின விண்ணெலாம் நடுங்கின பரவை
நீர்ந டுங்கின அயன்பதம் நடுங்கின நெடியோன்
ஊர்ந டுங்கின அவுணரும் நடுங்கினர் உலகத்து
ஆர்ந டுங்கிலர் அவன்சினஞ் சிறியதோ அன்றே. ......
10(அண்ண லம்புகழ்)
அண்ண லம்புகழ்ச் சூரபன் மாவென அறையுங்
கண்ணில் புன்மனத் தவுணர்கோன் இத்திறங் கனன்று
துண்ணெ னச்சினத் தமரர்கள் யாரையுந் தொலைப்பான்
எண்ணி யுற்றிடும் இளையரைப் பார்த்திவை இசைப்பான். ......
11(மீனெ டுத்துநம்)
மீனெ டுத்துநம் மேவலில் திரிந்தவிண் ணவர்கோன்
கானி டத்திருந் தொருவனைக் கொண்டிவர் கரங்கள்
ஊனெ டுத்திடத் தறித்தனன் என்றிடின் ஒழிந்த
மானு டத்தரும் அடுவரே இங்கினி மாதோ. ......
12(பரம னேயலன்)
பரம னேயலன் பங்கயத் தவிசினோன் அல்லன்
திருவு லாவரு மார்புடைத் தேவனும் அல்லன்
இரியும் வாசவன் தானலன் அவன்பணி இயற்றும்
ஒருவ னாமிவர் கைதடிந் தாவிகொண் டுறைவான். ......
13(விண்ம யங்குறு)
விண்ம யங்குறு செருவிடைத் தானையால் வீக்கி
எண்மை கொண்டுறும் அமரரைக் கொணர்தலும் எனது
கண்முன் நின்றிடும் அவுணர்தங் கழிபசி யொழிய
உண்மின் நீரெனக் கொடுத்திலேன் அறநினைந் துற்றேன். ......
14(மறைவைத் தேய)
மறைவைத் தேயமர் கின்றதோர் வாசவன் தனையும்
நறைவைத் தேயமர் பூங்குழற் சசியையும் நான்முன்
சிறைவைத் தேனிலன் சிறியரென் றுன்னினன் தீயின்
குறைவைத் தோர்கள்போல் ஆயினேன் இத்திறங் குறியேன். ......
15(கைப்ப டுத்திய)
கைப்ப டுத்திய உயிர்ப்பலி கடிதின்உண் ணாது
தப்ப விட்டதோர் மால்கரி யொத்தனன் தமியேன்
இப்பு விக்கணே இவர்கரங் குறைத்திட்ட தெனது
மெய்ப்ப டுத்திய ஊனமே அலதுவே றுண்டோ. ......
16(பூத ரந்தனை)
பூத ரந்தனைச் சிறைதடிந் திடுபுரந் தரனை
மாத ரார்புகழ் சசிதனை நாடுவான் வழிக்கொள்
தூதர் இன்னமுங் கண்டிலர் கொல்அவர் துணிவால்
ஏத மின்றிஇப் புடவியிற் குறும்புசெய் திருத்தல். ......
17(நீரி ருந்தனிர்)
நீரி ருந்தனிர் புதல்வரும் இருந்தனர் நிகரில்
தேரி ருந்தது நேமியும் இருந்தது சிறிதென்
பேரி ருந்தது யானுமிங் கிருந்தனன் பின்னை
யாரி ருந்துமென் இருந்துமா கின்றதென் அந்தோ. ......
18(வான ளாவுவெண்)
வான ளாவுவெண் பஞ்சியின் மால்வரை வறிதே
தீநி லாயதோர் அளவையின் முடிந்திடுஞ் செயல்போல்
தூநி லாவெயிற் றினையர்கைச் சோரியின் துளியால்
போன தேபல அண்டமுங் கொண்டநம் புகழே. ......
19(இழிவும் இங்கிவர்)
இழிவும் இங்கிவர்க் குறுவதே இமையவர் தங்கள்
வழியின் நின்றதோர் அரந்தையும் இவ்விடை வருமே
பழியும் என்னிடத் தெய்துமே என்றும்இப் பழிதான்
ஒழிவ தில்லையே பொறுப்பதே அதனையென் னுயிரே. ......
20(மல்ல லந்தடந்)
மல்ல லந்தடந் தேர்கடக் கைம்மலை வயமா
எல்லை யில்லவும் அவுணரும் எங்கணும் இருப்பச்
சில்லை மென்குழல் அசமுகி படுவதித் திறமோ
நல்ல நல்லஎன் னரசியல் முறையென நக்கான். ......
21(நக்க காலையிற்)
நக்க காலையிற் காலுறும் வார்கழல் நரல
மக்கள் தங்களிற் பானுகோ பப்பெயர் வலியோன்
செக்கர் அங்கியிற் கிளர்ந்துதன் தந்தைமுன் செவ்வே
புக்கு வந்தனை செய்துநின் றினையன புகல்வான். ......
22(ஐய கேண்மதி)
ஐய கேண்மதி நமதுகுற் றேவலால் அழுங்கித்
தொய்ய லுள்ளமோ டிந்திரன் கரந்தனன் சுரரும்
நொய்யர் இத்தொழில் நினைப்பதுஞ் செய்யலர் நுங்கை
கையி ழந்ததென் மாயமோ உணர்கிலேன் கவல்வேன். ......
23(வந்தி பெற்றிடு)
வந்தி பெற்றிடு கான்முளை எட்டிவான் தவழும்
இந்து வைக்கரங் கொண்டனன் என்பதோர் இயல்பே
அந்த ரத்தரில் ஒருவனே இனையவர் அங்கை
சிந்தி யுற்றனன் என்றுநீ உரைத்திடுந் திறனே. ......
24(வலியர் ஆகியே)
வலியர் ஆகியே புரிந்தனர் எனினுமற் றவர்கள்
மெலியர் ஆற்றநீ வெகுளுறுந் தகைமைமே வினரோ
ஒலித ருங்கடல் மீன்சுமந் துன்பணி யுழந்தார்
அலியர் அல்லதை ஆண்டகை யார்கொலோ அனையோர். ......
25(நறைம லர்க்க)
நறைம லர்க்கம லத்தனை வெகுளினும் நாரத்
துறையுள் வைகிய முகுந்தனை வெகுளினும் உம்பர்
எறிபு னற்சடை இறைவனை வெகுளினும் இயல்பே
சிறியர் தம்மையும் முனிதியோ பெருமையிற் சிறந்தோய். ......
26(முத்தி றப்படு)
முத்தி றப்படுந் தேவரே அல்லதுன் முனிவிற்
கெத்தி றத்தினர் இயைந்துளோர் இளையர்க்கும் இனைத்தே
சித்த முற்றிடும் வெகுளியைத் தீருதி இன்னோர்
கைத்த லந்தனை இழந்துழிப் பெயருவன் கடிதின். ......
27(விசைய வாளினால்)
விசைய வாளினால் இங்கிவர் கரந்தனை வீட்டும்
அசைவில் ஆடவன் றன்னைநின் னுளத்தின்மால் அளித்த
சசியை இந்திரக் கள்வனைத் தம்முயிர் தமக்குப்
பசையி லாததோர் அமரரைப் பற்றினன் படர்வேன். ......
28(அங்கண் உற்றிலர்)
அங்கண் உற்றிலர் மறைகுவ ரேயெனில் அகிலம்
எங்கும் நாடுவன் அனையர்வாழ் துறக்கநா டேகிச்
செங்க னற்கொள அளிக்குவன் அமரர்தந் திறத்தை
மங்கை மாரொடும் பற்றியோர் கன்னலின் வருவேன். ......
29(ஈதி யால்விடை)
ஈதி யால்விடை தமியனுக் கென்றுநின் றிரப்பத்
தாதை யாகிய அவுணர்கோன் முனிவினைத் தணிந்து
போதி மைந்தநின் படையொடும் ஆங்கெனப் புகல
ஆத வன்பகை அழகிதென் றுவகையை அடைந்தான். ......
30(ஓகை சேர்தரு)
ஓகை சேர்தரு விண்ணவர் மணிமுடி உரிஞ்சிச்
சேகை சேர்தரு தாதைதாள் உச்சியிற் சேர்த்தி
வாகை சேர்சிறு தந்தையர் தம்மையும் வணங்கிப்
போகை சேர்விடை கொண்டுதன் னிருக்கையிற் போனான். ......
31(மைந்தன் ஏகலு)
மைந்தன் ஏகலுஞ் சூரபன் மாவெனும் வலியோன்
உந்து தீவிழி உழையரிற் சிலவரை நோக்கி
அந்த நான்முகன் இங்ஙனம் வருகுவன் அவனை
நந்தம் முன்னுறக் கொடுவரு வீரென நவின்றான். ......
32(எங்கண் உற்றுளான்)
எங்கண் உற்றுளான் அயனெனக் கூவினர் ஏகிப்
பங்க யத்தனைக் கண்டுநிற் கொணர்கெனப் பணித்தான்
நங்கள் கொற்றவன் என்றலும் ஒல்லென நடவா
அங்கம் ஐந்துடன் அவுணர்கள் மன்னன்முன் அணைந்தான். ......
33(அணைந்த பூமகன்)
அணைந்த பூமகன் வைகலே பக்கநாள் அவற்றாற்
புணர்ந்த யோகொடு கரணமே லுள்ளன புகல
நுணங்கு சிந்தையால் அகிலமும் படைத்துளாய் நொய்தில்
தணந்த கையிவர்க் குதவுதி என்றனன் தலைவன். ......
34(என்று தானிவை)
என்று தானிவை மொழிதலுந் திசைமுகன் இசைந்து
வன்றி றற்கரங் கூடுக மற்றிவர்க் கெனலும்
ஒன்றொர் மாத்திரைப் பொழுதின்முன் அவைவளர்ந் துறலும்
நன்று நன்றுநின் வல்லபம் என்றுசூர் நவின்றான். ......
35(அன்ன தற்பின்னர் அசமு)
அன்ன தற்பின்னர் அசமுகத் தணங்கினை அரசன்
தொன்ன கர்க்குளே இருந்திடச் செய்துதுன் முகத்தி
தன்னை மைந்தனோ டுய்த்தனன் புலோமசைத் தையல்
முன்னி ருந்துழி காட்டியே வருகென மொழிந்து. ......
36(உழைத்திர் இந்த)
உழைத்திர் இந்தபல் சிலதரை நோக்கியே உலகில்
தழைத்த செங்கதிர்க் கடவுளைத் தாரகா கணத்தை
எழுச்சி கொண்டுறு கோளினை யாரையும் இன்னே
அழைத்தி ராலெனச் சொற்றனன் அவுணர்கட் கரசன். ......
37(சேடர் பற்பலர்)
சேடர் பற்பலர் விடைகொடு சேட்புலஞ் சென்று
நேடி அன்னவர் தமையெலாங் கொணர்ந்துமுன் நிறுவ
மூடு கொண்டலிற் கரந்தமின் பின்னெழு முறைபோல்
கேடு கொண்டதொல் சினவெரி சூரனுட் கிளர்ந்த. ......
38(வியர்க்கும் நெஞ்சி)
வியர்க்கும் நெஞ்சினன் கதிர் முதலோர்தமை விளியா
அயர்க்கை இன்றியே வானிடைத் திரியுநீர் அறியா
இயற்கை ஒன்றிலை எங்கைதன் செங்கையை எறிந்தோன்
செயற்கை காணுதிர் வறிதுநீர் இருந்ததென் சேணில். ......
39(இளையள் தன்கரங்)
இளையள் தன்கரங் குறைத்திடும் இமையவன் உயிரைக்
களைதல் செய்திலீர் அல்லதேல் அனையனைக் கட்டித்
தளைசெய் திவ்விடைக் கொணர்ந்திலீர் அல்லதத் தலையில்
விளைவை வந்தெமக் குரைத்திலீர் நன்றுநும் மிகுதி. ......
40(மறத்தி றத்தினால்)
மறத்தி றத்தினால் எங்கைதன் கையையோர் வலியோன்
குறைத்த தற்குநீர் அகத்தரே அல்லது குறிக்கில்
புறத்தர் அன்றுநம் மாணையால் இத்தொழில் புரிவீர்
முறைத்தி றங்கொலோ நுங்களுக் கிதுவென மொழிந்தான். ......
41(நீதி இல்லவன்)
நீதி இல்லவன் ஈங்கிவை உரைத்தலும் நிருப
ஏதும் எங்களை வெகுளலை இங்கிவள் கரத்தைக்
காது வான்றனைக் கண்டிலம் இன்றுசெல் கதியின்
மீது சென்றவெம் விழியென உரைத்தனர் விண்ணோர். ......
42(துண்ட மாகியே)
துண்ட மாகியே இவள்கரந் துணிபட்ட செய்கை
கண்டி லார்களாங் கதியிடைச் சென்றவாங் கண்கள்
அண்டர் தஞ்செயல் அழகிதென் றனையரை யெல்லாந்
தண்டல் இல்லதோர் சிறைபுரி வித்தனன் தலைவன். ......
43வேறு(தினகரன் முதலி)
தினகரன் முதலினோர் சிறையிற் புக்கபின்
வினைஞரிற் சிலர்தமை விளித்து நீவிர்போய்த்
துனைவரு மருத்துவர் தொகையைத் தம்மென
முனிவொடு தூண்டினன் முடிவி லாற்றலான். ......
44(ஒற்றரில் ஒருசிலர்)
ஒற்றரில் ஒருசிலர் ஒல்லை ஏகியே
குற்றமின் மருத்துவர் குழாத்தைக் கூவியே
பற்றிமுன் உய்த்தலும் பதைக்கும் நெஞ்சினான்
தெற்றென ஆங்கவர்க் கிதனைச் செப்புவான். ......
45(வானிடை மண்ணி)
வானிடை மண்ணிடை மாதி ரத்திடை
மேனிகழ் கடலிடை வியன்பி லத்திடை
ஊனிடை யுயிரிடை ஒழிந்து நின்றிடும்
ஏனைய பொருளிடை எங்கும் நிற்றிரால். ......
46(ஏணுறு கின்ற)
ஏணுறு கின்றஎன் இளையள் கையையோர்
சேணினன் வாள்கொடு சேதித் திட்டதைக்
காணுதிர் உமக்கெவர் கரக்கற் பாலினோர்
நீணகர் குறுகியிந் நிலைமை சொற்றிலீர். ......
47(தரியலர் சூழ்ச்சி)
தரியலர் சூழ்ச்சியால் தகுவர்க் கிப்பழி
வருவது நன்றென மகிழ்ந்து வைகினீர்
பெருமிதம் நன்றெனப் பேச மாறுசொல்
உரையற நின்றனர் உலவைப் பண்ணவர். ......
48(வன்றிறல் இன்றி)
வன்றிறல் இன்றியே மனத்தில் அச்சமாய்
நின்றிடு கால்களை நீடு கால்களிற்
துன்றிய கனைகழற் சூர னென்பவன்
ஒன்றொரு சிறைதனில் உய்த்திட் டானரோ. ......
49(ஈற்றினை இழை)
ஈற்றினை இழைத்திட இருக்குங் கால்களைச்
சீற்றமொ டவுணர்கோன் சிறையில் வீட்டினான்
சாற்றிடின் உலகமேல் தவத்தி னால்வரும்
பேற்றினும் உளதுகொல் பெருமைத் தானதே. ......
50(திரிதரு மருத்த)
திரிதரு மருத்தரைச் சிறையில் வைத்தபின்
குரைகழல் வினைஞரைக் கூவி இற்றையாண்
டிருதுநன் மதிமுதல் எல்லை யாளரைத்
தருதிரென் றுரைத்தலுந் தாழ்ந்து போயினார். ......
51(ஏவல ராயினோர்)
ஏவல ராயினோர் ஏகி யெல்லையின்
காவல ராகிய கடவு ளோர்தமைக்
கூவினர் பற்றியே கொடுவந் துய்த்தலுந்
தேவர்கள் மாற்றலன் சீறிக் கூறுவான். ......
52(புல்லிய மகபதி)
புல்லிய மகபதி புணர்த்த அச்செயல்
ஒல்லுவ தென்றதற் குள்ள மாகிநீர்
எல்லிரு மனமகிழ்ந் திருத்திர் என்னொடுஞ்
சொல்லிய வந்திலீ ரியாண்டுந் துன்னினீர். ......
53(நிரந்தரம் நம்பணி)
நிரந்தரம் நம்பணி நெறியின் நின்றுநீர்
இருந்ததிற் பயனெவன் இருக்கலா மையால்
வருந்தவ றென்சுரர் மருங்குற் றீரெனா
அருந்தளை இட்டனன் அவர்கள் தம்மையும். ......
54(தூவலி கெழுவி)
தூவலி கெழுவிய சூரன் பின்சில
ஏவலர் தங்களை விளித்திட் டிப்புவி
காவலர் தமையெலாங் கடிது வம்மெனக்
கூவுதிர் தம்மெனக் கூறித் தூண்டினான். ......
55(தூண்டலும் அளவை)
தூண்டலும் அளவைதீர் தூத ரோடியே
ஈண்டிய காவலர் இனத்தை மாநிலந்
தேண்டினர் பற்றியே சென்று வென்றிகொள்
ஆண்டகை இறைவன தவையின் உய்ப்பவே. ......
56(ஆக்கையில் வியர்)
ஆக்கையில் வியர்ப்புற அச்சம் நாணுயிர்
தாக்குற நனியுளந் தளரக் கைதொழுங்
காக்குநர் தொகுதியைக் காவல் மன்னவன்
நோக்கினன் வெகுண்டிது நுவறல் மேயினான். ......
57(எளித்துற லின்றி)
எளித்துற லின்றிநம் ஏவல் நீங்கியே
களித்திடு சசியொடுங் கடவுள் வாசவன்
ஒளித்தனன் இம்பரின் உம்பர் இல்லைநீர்
அளித்தது சாலவும் அழகி தாமரோ. ......
58(குறித்திடு புரை)
குறித்திடு புரைமனக் கொண்ட லூர்பவன்
நெறித்திகழ் ஆணையின் நின்ற தூதுவன்
மறித்திரு முகனுடை மங்கை தன்கரம்
அறுத்தவண் இருந்தனன் அதுவுந் தேர்ந்திலீர். ......
59(மறங்கிளர் தேறல்)
மறங்கிளர் தேறல்வாய் மடுத்து வைகலுங்
கறங்குறு நிலையராய்க் கலங்கி னீர்கொலோ
உறங்கினி ரேகொலோ ஓம்பலீர் கொலோ
பிறங்குதொல் வளமையால் பித்துற் றீர்கொலோ. ......
60(ஓயுமென் பகை)
ஓயுமென் பகைஞரோ டுறவுற் றீர்கொலோ
வாயவர் தங்களுக் கஞ்சி னீர்கொலோ
சேயிழை யாரிடைச் செருக்குற் றீர்கொலோ
நீயிர்கள் இருந்ததென் நிலைமை யென்னவே. ......
61(எண்டரும் எந்தை)
எண்டரும் எந்தைநீ இசைத்த தன்மையிற்
கொண்டிலம் ஒன்றுமக் குவல யந்தனைப்
பண்டுதொட் டளிக்குதும் பகைஞர் யாரையுங்
கண்டிலங் கரந்துறை கதையுங் கேட்டிலம். ......
62(தாயெனும் ஏழக)
தாயெனும் ஏழகத் தலையள் துன்முக
ஆயிழை யொடும்வரல் அதுவும் அன்னர்கை
போயதுந் தெரிந்திலம் புந்தி கொள்ளுதி
மாயமி தாகுமால் மன்ன என்னவே. ......
63(மிடைதரு வெறு)
மிடைதரு வெறுக்கையை மிசைந்து மால்கொளீஇப்
புடவியை யிடைதொறும் போற்றல் செய்திலீர்
இடையுற என்வயின் இனைய தோர்பழி
அடைவது மாயையாம் அழகிதே என்றான். ......
64வேறு(ஒலிகெழும் உவரி)
ஒலிகெழும் உவரிப் புத்தேள் உள்ளுறை வடவைச் செந்தீத்
தொலைவுழி எழுவ தேபோல் சூரனுட் சினமீக் கொள்ள
மலிகதிர் இருள்புக் கென்ன வாளுரீஇ மருங்கே தானைத்
தலைவர் நின்றாரை ஏவித் தனித்தனி தண்டஞ் செய்வான். ......
65(சிற்சிலர் தமது)
சிற்சிலர் தமது நாவைச் செங்கையைச் சேதித் திட்டான்
சிற்சிலர் துண்டந் தன்னைச் செவிகளைக் களைதல் செய்தான்
சிற்சிலர் மருமந் தன்னைச் சிறுபுறத் தொடுகொய் வித்தான்
சிற்சிலர் தாளைத் தோளைச் சென்னியைச் சேதிப் பித்தான். ......
66(எறிதரு கழற்)
எறிதரு கழற்காற் சூரன் இத்திறம் பல்தண் டங்கள்
முறையினிற் செய்து சீய முழுமணித் தவிசில் தீர்ந்து
விறல்கெழும் இளையர் செல்ல விடைகொடுத் தயனை நோக்கி
மறைமுனி போதி யென்ன மற்றவன் இனைய சொற்றான். ......
67(மன்னவர் மன்ன கேண்மோ வா)
மன்னவர் மன்ன கேண்மோ வான்கதிர் உடுக்கள் ஏனோர்
இந்நில மடந்தை வேலைக் கிறையவர் யாரு மென்றும்
உன்னுடைப் பணியில் நிற்பர் உலகிவர் இன்றி யாகா
அன்னவர் பிழையுட் கொள்ளேல் அருஞ்சிறை விடுத்தி என்றான். ......
68(குறையிரந் தினை)
குறையிரந் தினைய கூறிக் கோகன தத்தோன் வேண்ட
நறையிருந் துலவு தாரோன் நன்றென இசைவு கொள்ளா
உறையிருந் திலங்கும் வாட்கை ஒற்றரை நோக்கி நந்தஞ்
சிறையிருந் தோரைத் தம்மின் என்றலுஞ் சென்றங் குய்த்தார். ......
69(வன்றளை உற்றோர்)
வன்றளை உற்றோர் தம்மை மன்னவர் மன்னன் பாரா
என்றுநம் பணியில் நிற்றிர் இந்திர னொடுசேர் கல்லிர்
சென்றிடு நுங்கள் தொன்மை செய்திட வென்ன அன்னோர்
நன்றிது புரிதும் என்னா நயமொழி புகன்று போனார். ......
70(போதலுங் கமல)
போதலுங் கமலத் தோற்கும் புதல்வர்க்கும் அமைச்சர் யார்க்கும்
மேதகு முனிவர் யார்க்கும் வியன்படைத் தலைமை யோர்க்கும்
போதலை உதவிச் சூரன் உறையுளிற் புகுந்தான் முன்செல்
ஆதவன் பகைஞன் செய்த செயலினை அறைத லுற்றேன். ......
71ஆகத் திருவிருத்தம் - 3571