Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   36 - மகாகாளர்வரு படலம்   next padalammahAkALarvaru padalam

Ms Revathi Sankaran (3.55mb)




(பையரா அமளி)

பையரா அமளி யானும் பரம்பொருள் முதலும் நல்கும்
     ஐயனே யோலம் விண்ணோர்க் காதியே யோலம் செண்டார்
          கையனே யோலம் எங்கள் கடவுளே யோலம் மெய்யர்
               மெய்யனே யோலம் தொல்சீர் வீரனே யோலம் ஓலம். ......    1

(ஆரணச் சுருதி)

ஆரணச் சுருதி யோர்சார் அடலுருத் திரனென் றேத்துங்
     காரணக் கடவுள் ஓலம் கடல்நிறத் தெந்தாய் ஓலம்
          பூரணைக் கிறைவா வோலம் புட்கலை கணவா வோலம்
               வாரணத் திறைமேற் கொண்டு வரும்பிரான் ஓலம் என்றாள். ......    2

(ஒய்யெனச் சசியி)

ஒய்யெனச் சசியிவ் வாற்றால் ஓலிட அதுகேட் டெங்கள்
     ஐயனைக் குறித்துக் கூவி அரற்றுவாள் போலு மென்னா
          மையினைத் தடுத்துச் சிந்து மருத்தென வந்தா னென்ப
               வெய்யரிற் பெரிதும் வெய்யோன் வீரமா காளன் என்போன். ......    3

(சாத்தன தருளின்)

சாத்தன தருளின் நிற்குந் தானையந் தலைவன் வானோர்
     வேத்தவை யான வெல்லாம் வியத்தகு வீரன் உந்தி
          பூத்தவன் முதலோர் யாரும் புகழவெவ் விடத்தை யுண்டு
               காத்தவன் நாமம் பெற்றோன் காலற்குங் காலன் போல்வான். ......    4

(இருபிறை ஞெலி)

இருபிறை ஞெலிந்திட் டன்ன இலங்கெழில் எயிற்றன் ஞாலம்
     வருமுகில் தடிந்தா லென்ன வாள்கொடு விதிர்க்குங் கையன்
          உருமிடிக் குரல்போல் ஆர்க்கும் ஓதையன் உரப்புஞ் சொல்லன்
               கரவிழைத் தெங்ஙன் போதி நில்லெனக் கழறி வந்தான். ......    5

(கொம்மென வந்த)

கொம்மென வந்த வீரன் கூவிய சசியை நோக்கி
     அம்மனை அழுங்கல் வாழி அசமுகி யெனும் வெய்யாட்
          கிம்மியின் துணையும் அஞ்சேல் ஈண்டுனைத் தீண்டு கின்ற
               கைம்முறை தடிந்து வல்லே விடுவிப்பன் காண்டி யென்றான். ......    6

(வீரன துரையை)

வீரன துரையைக் கேளா மெல்லியல் அணங்கின் நல்லாள்
     பேரிடர் சிறிது நீத்துப் பெயலுறு துவலை தூங்கு
          மாரியின் செலவு கண்ட வளவயற் பைங்கூழ் போல
               ஆருயிர் பெற்றாள் மற்றை அசமுகி அவனைக் கண்டாள். ......    7

(ஓவரும் புவனம்)

ஓவரும் புவனம் யாவும் ஒருங்குமுத் தொழிலும் ஆற்றும்
     மூவருந் துறக்கம் வைகும் முதல்வனுந் திசைகாப் பாளர்
          யாவரும் என்முன் நில்லார் ஈண்டெனை இகழ்ந்து சீறித்
               தேவர்தங் குழுவி னுள்ளான் ஒருவனோ செல்வ னென்றாள். ......    8

(வெறித்திடு கண்)

வெறித்திடு கண்ணில் நோக்கி வெவ்விதழ் அதுக்கி வல்லே
     கறித்தனள் எயிற்றின் மாலை கறகற கலிப்ப ஆர்த்தது
          முறித்திவன் தன்னை யுண்டு முரண்வலி தொலைப்ப னென்னாக்
               குறித்தச முகத்தி நிற்பக் குறுகினன் திறல்சேர் வீரன். ......    9

(தட்டறு நோன்மை)

தட்டறு நோன்மை பூண்ட சசிதனைத் தமிய ளென்றே
     பட்டிமை நெறியாற் பற்றிப் படருதி இவளை யின்னே
          விட்டனை போதி செய்த வியன்பிழை பொறுப்பன் நின்னை
               அட்டிடு கின்ற தில்லை அஞ்சலை அரிவை யென்றான். ......    10

(கேட்டலும் உருத்தி)

கேட்டலும் உருத்திவ் வார்த்தை கிளத்தினை நின்னை யாரே
     ஈட்டுடன் இவளைப் போற்றென் றிப்பணி தலைதந் துள்ளார்
          வேட்டனன் அவரைக் கேட்ப விளம்புதி யென்றாள் முந்தூழ்
               மாட்டுறு கனலி யென்னத் தன்குலம் முடிப்பான் வந்தாள். ......    11

(தாரணி முதல)

தாரணி முதல மூன்றுந் தலையளி புரிந்து காப்பான்
     காரணி செறிந்துற் றன்ன கரியவன் கடவுள் வெள்ளை
          வாரண முடைய ஐயன் மற்றிது பணித்தான் என்பேர்
               வீரரில் வீரனான வீரமா காளன் என்றான். ......    12

(என்றலும் அனைய வாய்)

என்றலும் அனைய வாய்மை இந்திரன் தனக்கும் ஈசன்
     பொன்றிரண் மார்பன் நல்கும் புதல்வற்கும் பொதுமைத் தாகி
          நின்றது வாகத் தேவர் நிருதரால் வருந்தும் ஊழாற்
               சென்றவன் மகவான் ஏவ லாளெனச் சிந்தை செய்தாள். ......    13

(புந்தியில் இதனை)

புந்தியில் இதனை யுன்னிப் பொள்ளெனச் சினமீக் கொள்ள
     இந்திரன் தொழுவன் கொல்லாம் எனையிடை தடுக்கு நீரான்
          சிந்துவன் இவனை யென்னாச் செங்கையிற் சூலந் தன்னை
               உந்தினள் அதுபோய் வீரன் உரனெதிர் குறுகிற் றன்றே. ......    14

(குறுகிமுன் வருத)

குறுகிமுன் வருத லோடுங் குரூஉச்சுடர் அங்கி மூன்றும்
     முறையினோ ரிடையுற் றன்ன முத்தலைப் படையைக் காணூஉ
          அறைகழல் வீரன் தொன்னாள் அங்கியை அட்ட தேபோல்
               எறிகதிர் வாளால் மைந்தன் இருதுணி படுத்தி னானே. ......    15

(படுத்தலும் மணி)

படுத்தலும் மணிகள் நீலப் பையரா உமிழ்ந்த தென்னக்
     கடித்திடும் எயிற்றுப் பேழ்வாய்க் கருங்கணம் அழல்கான் றென்ன
          விடித்திடு கொண்மூ வின்பால் எழுந்தமின் னென்ன அன்னாள்
               விடுத்திடு சூல வைவேல் வெவ்வழல் பொழிந்த தன்றே. ......    16

(காலத்தின் உலகம்)

காலத்தின் உலகம் உண்ணக் கடலுறு வடவை தானே
     ஆலத்தை மீது பூசி அசமுகி கரத்திற் கொள்ளச்
          சூலத்தின் அமைந்த தம்மா சோதனை கொடுப்ப னென்னாச்
               சீலத்தின் மிக்கோன் கூர்வாள் செந்தழல் பொழிவித் தன்றே. ......    17

(சூளினார்த் தெறி)

சூளினார்த் தெறியும் வீரன் சுடர்கொள்முத் தலைவேல் தன்னை
     வாளினால் தடித லோடும் மறிமுகத் தணங்கு சீறிக்
          கேளினால் தனது பாங்கிற் கிடைத்ததுன் முகிகைச் சூலங்
               கோளினாற் கடிது வாங்கிக் கூற்றனும் உட்க ஆர்த்தாள். ......    18

(வசிகெழு சூலம்)

வசிகெழு சூலம்பற்றி மருத்துவன் துணைவி யான
     சசிதனை இகுளை யாகுந் தையல்தன் கரத்திற் சேர்த்தி
          நிசியின்மால் பாந்த ளோடு நெடுங்கதிர் நேர்புக் கென்ன
               விசையொடு கொடியள் சென்றாள் வீரமா காளன் தன்மேல். ......    19

(ஒற்றைமுத் தலை)

ஒற்றைமுத் தலைவேல் தன்னை ஒப்பிலான் மரும மீது
     குற்றிய முன்னி நீட்டிக் குறுகினள் அமர்செய் போழ்திற்
          கற்றையஞ் சுடர்க்கூர் வாளாற் காவலன் எறித லோடும்
               இற்றது சூலங் கண்ட அசமுகி இடைந்து போனாள். ......    20

(இடைந்தனள் ஏகி)

இடைந்தனள் ஏகி ஆண்டோர் இருங்கிரி பறித்திட் டின்னே
     முடிந்தனை போலு மென்னா மொய்ம்புடன் அவன்மேல் ஓச்சத்
          தடிந்தனன் தடித லோடுந் தாரைவாட் படையும் வல்லே
               ஒடிந்தது கொடியள் காணா ஒல்லொலிக் கடல்போல் ஆர்த்தாள். ......    21

(வீரமா காள கேண்)

வீரமா காள கேண்மோ வேதனே ஆதி விண்ணோர்
     ஆரும்வந் தாசி கூற அகிலமும் ஆளு கின்ற
          சூரனாம் எமது முன்னோன் தோளிடை உய்ப்பக் கொண்டு
               பேருவன் இவளை யோராய் விலக்கினை பேதை நீராய். ......    22

(தடுத்திடல் முறை)

தடுத்திடல் முறைய தன்றால் தாரகன் தானை வீரர்
     அடுத்திடிற் படுப்பர் கண்டாய் அன்றியும் யானே நின்னை
          எடுத்தனன் மிசைவன் துய்க்கின் இரும்பசி யுலவா தென்னா
               விடுத்தனன் உய்ந்து போதி விளிவுறேல் எளியை யென்றாள். ......    23

(பாதகி இனைய)

பாதகி இனைய மாற்றம் பகர்தலும் வீரன் கேளா
     வேதியின் நினது சூலப் படையிற எறிந்தேன் நின்னை
          மாதென அடாது நின்றேன் மற்றிதை உணர்ந்து வல்லே
               போதியால் இவளை விட்டுப் போக்கலை கரத்தை யென்றான். ......    24

(என்றலுங் கொடி)

என்றலுங் கொடியள் கேளா ஈங்கிவன் வாளு மின்றி
     நின்றனன் இவனொ டேபோர் நேருதல் நெறிய தன்றால்
          அன்றியும் இவனை வெல்லல் அரிதினிச் சசியைக் கொண்டு
               சென்றிடல் துணிபா மென்னாத் திரும்பினள் சேடி தன்பால். ......    25

(துன்முகி யாகி )

துன்முகி யாகி நின்ற துணைவிதன் சிறைப்பட் டுள்ள
     பொன்மிகும் யாணர் மேனிப் புலோமசை தனைத்தான் பற்றிக்
          கொன்மலி அம்பொன் மேருக் குவட்டினைக் கொடுபோங் காலின்
               வன்மையி னோடு கொண்டு மறிமுகத் தணங்கு போனாள். ......    26

(போகலும் அதனை)

போகலும் அதனை ஐயன் பொருநரில் தலைவன் பாரா
     ஏகுதி போலும் நில்லென் றெய்தியே உடைவாள் வாங்கிச்
          சேகுறு மனத்தாள் கூந்தல் செங்கையாற் பற்றி யீர்த்துத்
               தோகையைத் தொட்ட கையைத் துணித்தனன் விண்ணோர் துள்ள. ......    27

(இருட்டுறு பிலத்து)

இருட்டுறு பிலத்துற் றோரை எடுத்துவெள் ளிடையிட் டென்ன
     மருட்டுறு மதிய ளாகி வருந்திய சசியென் பாளை
          அருட்டிறத் தோடு வீடு செய்துபின் அவுண மாதை
               உருட்டினன் றனது தாளால் உருமென உதைத்துத் தள்ளி. ......    28

(அயமுகி வீழ்த)

அயமுகி வீழ்த லோடும் அழுங்கியே அயலின் நின்ற
     வயமிகு துன்மு கத்து மங்கைதன் கரத்தி லொன்றைச்
          செயிரறு சசியை நீயுந் தீண்டினை போலு மென்னாத்
               துயல்வரு தொடையல் வீரன் துணித்தனன் சோரி பொங்க. ......    29

வேறு

(மதர்த்திடு துன்முகி)

மதர்த்திடு துன்முகி வன்கை வாளினாற்
     சிதைத்திடு மொய்ம்புடைச் சேனை காவலன்
          உதைத்தனன் அனையளும் ஓவென் றேயுளம்
               பதைத்தனள் புலம்பியே படியில் வீழவே. ......    30

ஆகத் திருவிருத்தம் - 3386



previous padalam   36 - மகாகாளர்வரு படலம்   next padalammahAkALarvaru padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]