(அறைபடு கழலினா)
அறைபடு கழலினான் அவுண மாதர்கை
எறிதலுங் குருதிநீர் எழுந்த தன்மையால்
திறல்கெழு வெய்யசூர் திருவைச் சுட்டிடுங்
குறைபடு ஞெகிழியின் கோலம் போலுமே. ......
1(திரைந்தெழு குடி)
திரைந்தெழு குடிஞைபோல் குருதி சென்றிடக்
கரந்துமி படுதலுங் கவன்று வீழ்ந்தனள்
வருந்தினள் அரற்றினள் மறிமு கத்தினாள்
விரிந்திடு கனலுடை வேலை போன்றுளாள். ......
2(மருண்டனள் பதை)
மருண்டனள் பதைத்தனள் மறித்த கையினள்
வெருண்டனள் நிலனுற வியன்கை எற்றினள்
உருண்டனள் வெரிநுடன் உரமுந் தேய்வுறப்
புரண்டனள் செக்கரிற் புயலிற் றோன்றுவாள். ......
3(புரந்தரன் தேவி)
புரந்தரன் தேவியைப் பொம்மெ னப்பிடித்
துரந்தரு வாயிலிட் டுண்பன் ஈண்டெனா
விரைந்தெழும் சென்றிடும் மீளும் வீழ்ந்திடும்
இருந்திடும் சாய்ந்திடும் இரங்குஞ் சோருமே. ......
4(கடித்திடும் இதழி)
கடித்திடும் இதழினைக் கறைகண் மீச்செலக்
குடித்திடும் உமிழ்ந்திடும் குவல யத்திரீஇத்
துடித்திடும் பெயர்ந்திடும் துளக்குஞ் சென்னியை
இடித்தெனக் கறித்திடும் எயிற்றின் மாலையே. ......
5(திகைத்திடும் நன்று)
திகைத்திடும் நன்றுநஞ் செய்கை ஈதெனா
நகைத்திடும் அங்குலி நாசி யில்தொடும்
புகைத்தென உயிர்த்திடும் புவியைத் தாள்களால்
உகைத்திடும் புகையழல் உமிழும் வாயினால். ......
6(உம்மென உரப்பி)
உம்மென உரப்பிடும் உருமுக் கான்றென
விம்மெனச் சினத்திடும் எரிவி ழித்திடுந்
தெம்முனைப் படையடுஞ் சேனை வீரனை
விம்மிதப் படுமுடல் வியர்க்கும் வெள்குமே. ......
7(அற்றிடு கரத்தி)
அற்றிடு கரத்தினை அறாத கையினால்
தெற்றென எடுத்திடும் தெரிந்து நோக்கிடும்
ஒற்றிடும் விழிகளில் உகுக்குஞ் சோரிநீர்
இற்றெவர் பட்டனர் என்னின் என்னுமே. ......
8(வீவதே இனியெனும்)
வீவதே இனியெனும் வினையி னேன்றனக்
காவதோ இஃதெனும் ஐய கோவெனும்
ஏவரும் புகழ்தரும் எங்கள் அண்ணர்பாற்
போவதெவ் வாறெனப் புலம்பு கொள்ளுமே. ......
9(காசினி தனில்)
காசினி தனில்வருங் கணவர் கைதொடக்
கூசுவ ரேயெனுங் குறிய பங்கெனப்
பேசுவ ரேயெனும் பிறரும் வானுளோர்
ஏசுவ ரேயெனும் என்செய் கேனெனும். ......
10(தேவர்கள் அனை)
தேவர்கள் அனைவருஞ் சிந்தித் தென்கரம்
போவது புணர்த்தனர் பொன்று வேன்இனி
ஆவதன் முன்னரே அவரை யட்டுல
கேவையும் முடிப்பனென் றெண்ணிச் சீறுமே. ......
11(பாருயிர் முழுவதும்)
பாருயிர் முழுவதும் படுத்தி டோவெனும்
ஆரழல் வடவையை அவித்தி டோவெனும்
பேருறு மருத்தினைப் பிடித்தி டோவெனும்
மேருவை அலைத்தனன் வீட்டு கோவெனும். ......
12(பீளுறும் எழிலிகள்)
பீளுறும் எழிலிகள் பிறவும் பற்றியே
மீளரி தெனும்வகை மிசைந்தி டோவெனும்
நாளினை முழுவதும் நாளு டன்வருங்
கோளினை முழுவதுங் கொறித்தி டோவெனும். ......
13(சீர்த்தகை இழந்தி)
சீர்த்தகை இழந்தியான் தெருமந் துற்றது
பார்த்திக ழுங்கொல்இப் பரிதி வானவன்
ஆர்த்திடுந் தேரொடும் அவனைப் பற்றியே
ஈர்த்தனன் வருவதற் கெழுந்தி டோவெனும். ......
14(கண்டதோர் பரிதி)
கண்டதோர் பரிதியைக் கறித்துச் சூழ்ச்சிசெய்
அண்டர்கள் யாரையும் அடிசி லாகவே
உண்டெழு கடலையும் உறிஞ்சிக் கைபுறத்
தெண்டிரை தனிற்கழீஇத் திரும்பு கோவெனும். ......
15(செந்நலம் நீடிய)
செந்நலம் நீடிய தென்னங் காயிடைத்
துன்னிய தீம்பயன் சுவைத்திட் டாலெனப்
பின்னுறு மதியினைப் பிடித்துக் கவ்விமெய்
இன்னமிர் தினைநுகர்ந் தெறிகெ னோவெனும். ......
16(இந்திரன் களிற்றி)
இந்திரன் களிற்றினை ஏனைத் தந்தியைச்
செந்துவர்க் காயெனச் சேர வாய்க்கொளா
ஐந்தரு இலைகளா அவற்றுள் வெண்மலர்
வெந்துக ளாக்கொடு மிசைகெ னோவெனும். ......
17(தாக்குகோ பணி)
தாக்குகோ பணிகளைத் தலைகி ழக்குற
நீக்குகோ பிலம்படு நிலயத் தோரையுந்
தூக்குகோ புவனியைச் சுழற்றி மேலகீழ்
ஆக்குகோ மாலென அருந்து கோவெனும். ......
18வேறு(ஆரும் அச்சுற)
ஆரும் அச்சுற இனையன அசமுகி வெய்யாள்
சூரன் தங்கைமா லுளத்தினள் இறப்பது துணிவாள்
பேரிடும் பையள் தொலைவுறா மானமே பிடித்தாள்
வீர வன்மையள் ஆதலின் உரைத்தனள் வெகுண்டாள். ......
19(வெகுளு மெல்லை)
வெகுளு மெல்லையில் கண்டனள் துன்முகி வெய்ய
தகுவர் தங்குலத் துதித்தனள் ஆயினுந் தகவின்
புகுதி சால்புணர் புந்தியள் ஆதலிற் பொருக்கென்று
இகுளை முந்துற வந்தனள் இனையன இசைத்தாள். ......
20(வைய மென்செயும்)
வைய மென்செயும் வானக மென்செயும் மற்றைச்
செய்ய வானவர் என்செய்வர் வரைகளென் செய்யும்
ஐய மால்கடல் பிறவுமென் செய்திடும் அவனால்
கையி ழந்திடின் உலகெலாம் முடிப்பது கடனோ. ......
21(பாரும் வான)
பாரும் வானமுந் திசைகளும் பல்லுயிர்த் தொகையுஞ்
சேர வேமுடித் திடுவதை நினைந்தனை செய்யின்
ஆரும் நின்றனை என்செய்வர் அவையெலா முடைய
சூர னேயுனை முனிந்திடும் அவன்வளந் தொலையும். ......
22(ஆத லான்மன)
ஆத லான்மனத் தொன்றுநீ எண்ணலை அவுணர்
நாத னாகிய வெய்யசூர் முன்னுற நாம்போய்
ஈதெ லாஞ்சொலின் இமையவர் கிளையெலா முடிக்கும்
போத லேதுணி வென்றனள் பின்னரும் புகல்வாள். ......
23வேறு(ஞானமில் சிறு)
ஞானமில் சிறுவிதி நடாத்தும் வேள்வியில்
வானவர் தங்களின் மடந்தை மார்களில்
தானவர் தங்களில் தத்தம் மெய்களில்
ஊனமில் லோரையாம் உரைக்க வல்லமோ. ......
24(நினைவருங் கண்)
நினைவருங் கண்ணுதல் நிமலற் கேயலால்
அனையனை அடைதரும் அறிஞர்க் கேயலால்
எனைவகை யோர்க்கும்எவ் வுயிர்க்கும் ஏற்பதோர்
வினைபடும் இழிதுயர் விட்டு நீங்குமோ. ......
25(ஆகையின் மங்கை)
ஆகையின் மங்கைநீ அரற்றல் வெள்கியே
சோகமுங் கொள்ளலை துயரும் இன்பமும்
மோகமும் உயிர்க்கெலாம் முறையிற் கூடுமால்
ஏகுதும் எழுகென இயம்பித் தேற்றினாள். ......
26வேறு(மொழிந்து துன்முகி)
மொழிந்து துன்முகி தெளித்தலும் நன்றென முன்னா
எழுந்து துண்ணென அசமுகி என்பவள் இலதாய்க்
கழிந்த துன்பொடு நின்றதோர் சசியினைக் காணூஉ
அழிந்த மானவெந் தீச்சுட இனையன அறைவாள். ......
27(துப்பு றுத்திய )
துப்பு றுத்திய அண்டங்கள் யாவினுஞ் சூரன்
வைப்பு றுத்திய திகிரியும் ஆணையும் வழங்கும்
இப்பு றத்தினில் ஒளிப்பினும் இதுவன்றி அண்டத்
தப்பு றத்தினில் ஒளிப்பினும் பிழைப்புமக் கரிதே. ......
28(மறைத லுற்றிடும்)
மறைத லுற்றிடும் இந்திரன் தன்னைஇவ் வனத்தின்
உறைத லுற்றிடும் உன்றனை ஒழிந்தவா னவரை
இறைத னிற்பற்றி ஈர்த்துப்போய் என்னகர் தன்னில்
சிறைப டுத்துவன் திண்ணமெங் கோமகன் செயலால். ......
29(உங்கள் தம்மையான்)
உங்கள் தம்மையான் சிறைபடுத் தேன்எனின் உலகம்
எங்கு மாள்கின்ற சூரபன் மாவெனும் இறைவன்
தங்கை யன்றியா னெனதுரந் தனிலெழுந் தனவுங்
கொங்கை யன்றியான் பேடியே குறிக்கொளென் றகன்றாள். ......
30ஆகத் திருவிருத்தம் - 3416