(அன்னம் பொருவு)
அன்னம் பொருவு நடையாள் அவன்வரலும்
முன்னங் கெதிரா முறையாற் பலமுறையும்
பொன்னங் கழலிணையைப் பூண்டு வணங்கியெழீஇ
என்னிங்கொ ரெண்ணமுடன் ஏகிற் றிறையென்றாள். ......
1(அம்மொழியைக் கேளா)
அம்மொழியைக் கேளா அரசன் உரைசெய்வான்
வெம்மைபுரி சூரன் வியன்பணியா லேவருந்தி
எம்மை யடைந்தார் இனையசில தேவர்
தம்முன் இடர்பலவுஞ் சாற்றி இரங்கினரே. ......
2(அன்னார் மனங்கொ)
அன்னார் மனங்கொண்ட ஆகுலமும் நந்துயரும்
பொன்னார் சடைமுடியெம் புண்ணியற்குத் தாம்புகலின்
இந்நாள் அவுணர்க் கிறுவாய் தனைப்புரிந்து
தொன்னாள் உரிமை யளிப்பன்எனுந் துணிவால். ......
3(ஆகின்ற துன்ப)
ஆகின்ற துன்பத் தழலாற் பதைபதைத்து
வேகின்ற சிந்தை வியன்அமரர் தம்முடன்யான்
பாகொன்று தீஞ்சொல் உமைபாகன் பனிவரைக்குப்
போகின்றேன் ஈது புகலுதற்கு வந்தனனே. ......
4(என்னும் பொழுதில்)
என்னும் பொழுதில் இடருற் றிகல்வாளி
தன்னங்கம் மூழ்கத் தளர்ந்துவீழ் மஞ்ஞையென
அன்னம் பொருவு நடையாள் அயிராணி
மன்னன் திருமுன் மயங்குற்று வீழ்ந்தனளே. ......
5(வீழ்ந்தாள் தரிக்கரி)
வீழ்ந்தாள் தரிக்கரிதாம் வெய்ய துயர்க்கடலில்
ஆழ்ந்தாள் தனதறிவும் அற்றாள் பிரியாது
வாழ்ந்தாளென் செய்வாள் மகவான் அதுகண்டு
தாழ்ந்தா குலத்தோ டெடுத்தான் தடக்கையால். ......
6(ஆர்வமொடு கையால்)
ஆர்வமொடு கையால் அணைத்தே அவளைத்தன்
ஊருமிசை யேற்றி உணர்ச்சிவரும் பான்மையெலாஞ்
சேரவொருங் காற்றச் சிறிதே தெளிவுற்றாள்
காரின் மலிகின்ற மின்போலுங் காட்சியினாள். ......
7(சிந்தை மயக்க)
சிந்தை மயக்கஞ் சிறிதகன்று தேற்றம்வர
முந்தை இடர்வந்து முற்றுந் தனைச்சூழ்ந்த
வந்த மடமான் அதுபோழ்தில் தன்னுள்ளம்
நொந்து நடுங்கி இனைய நுவல்கின்றாள். ......
8(பொன்னாடு விட்டு)
பொன்னாடு விட்டுப் புவியின் வனத்திருந்து
முன்னார் அருள்கொண் டுவப்புற்று மேவினனால்
என்னா ருயிரே எனைநீ பிரிவாயேல்
பின்னார் துணையான் பிழைக்கும் நெறியுண்டோ. ......
9(வாகத்து நேமிக்கும்)
வாகத்து நேமிக்கும் வான்பாடு புள்ளினுக்கும்
மேகத் திறமும் வியன்மதியு மாவதுபோல்
நாகத் துறைவோர்க்கு நாயகமே நீயலதென்
சோகத்தை நீக்கித் துணையாவார் வேறுண்டோ. ......
10(அன்றி யுனைப்பிரி)
அன்றி யுனைப்பிரிந்தும் ஆவிதனைத் தாங்கவல்லேன்
என்றிடினும் யானொருத்தி யாருந் துணையில்லை
ஒன்றுநெறி நீதி உணராத தீயவுணர்
சென்றிடுவர் நாளும் அவர்கண்டால் தீங்கன்றோ. ......
11(நீடு புகழ்சேர் நிருத)
நீடு புகழ்சேர் நிருதர்கோன் சூழ்ச்சியினால்
தேடரிய பொன்னுலகச் செல்வத்தை விட்டிந்தக்
காடுதனில் வந்து கரந்து தவம்புரிந்து
பாடுபடு மாறும் பழிக்கஞ்சி யேயன்றோ. ......
12(தீய அவுணர் திரி)
தீய அவுணர் திரிவர் அவர்சிறியர்
மாயை பலபலவும் வல்லார் பவமல்லால்
ஆய தருமம் அறியார் பழிக்கஞ்சார்
நீயும் அஃதுணராய் அன்றே நெடுந்தகையே. ......
13(உன்னன் புடைய)
உன்னன் புடைய வொருமகனும் இங்கில்லை
துன்னுஞ் சுரருமில்லை தொல்களிற்றின் வேந்துமில்லை
பின்னிங் கொருமா தருமில்லை பெண்ணொருத்தி
தன்னந் தனியிருக்க அஞ்சேனோ தக்கோனே. ......
14(பல்லா றொழுகி)
பல்லா றொழுகிப் பவஞ்செய் அவுணரெனும்
ஒல்லார் எனைக்காணின் ஓடிவந்து பற்றினர்போய்
அல்லா தனபுரிவ ரானால் அனையபழி
எல்லாமுன் பாலன்றி யார்கண்ணே சென்றிடுமே. ......
15(மன்னே இதுவோர்)
மன்னே இதுவோர் துணிவுரைப்பன் மன்னுயிர்கொண்
டின்னே தமியேன் இரேன்உலகில் யாவரையும்
முன்னே படைத்தளிக்கும் முக்கணர்தம் வெற்பினுக்குன்
பின்னே வருவேன் பெயர்வா யெனவுரையா. ......
16(பின்றாழ் குழலி)
பின்றாழ் குழலி பெருந்துயரத் தோடெழுந்து
நின்றாள் இறையுன்னி நேயத் தொடுநோக்கி
நன்றால் உனது திறனென்று நாகரிறை
சென்றார்வ மோடவளைப் புல்லியிது செப்புகின்றான். ......
17(வாராய் சசியே)
வாராய் சசியே வருந்தேல் அமரருடன்
காரார் களத்தோன் கயிலைக் கியான்போனால்
ஆராய்ந்து நின்னை அளிப்பவர்அற் றாலன்றோ
பேரார்வ மோடெனது பின்நீ வருவதுவே. ......
18(செய்ய சடைமேற்)
செய்ய சடைமேற் சிறந்தமதிக் கோடுபுனை
துய்யவனும் வேலைத் துயின்றோனுஞ் சேர்ந்தளித்த
ஐயன் எமக்கோர் அரணாகி யேயிருக்க
நையல் முறையாமோ நங்காய் நவிலுதியால். ......
19(ஏவென்ற கண்மட)
ஏவென்ற கண்மடவாய் ஈசனருள் அன்னோனை
வாவென் றளியால் வழுத்திமனத் துன்னின்இங்கே
மேவுங் கயிலையில்யான் மீண்டு வருந்துணையுங்
காவென் றுனைஅவன்பாற் கையடையா நல்குவனால். ......
20(ஆற்றல் பெரிது)
ஆற்றல் பெரிதுடைய ஐயனே நின்றன்னைப்
போற்றியருள் செய்யும் பொருந்துதியால் ஈண்டென்று
தேற்றுதலும் அன்னான் சிறப்பெவன்கொல் செப்புகெனக்
கோற்றொடிகேள் என்னா அமரேசன் கூறுகின்றான். ......
21ஆகத் திருவிருத்தம் - 3212