Kaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

Kandha Puranam
by
Sri Kachiyappa
Sivachariyar

ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய
கந்த புராணம்

Lord MuruganSri Kaumara Chellam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

previous padalam   32 - மகா சாத்தாப் படலம்   next padalammahA sAththap padalam

Ms Revathi Sankaran (5.95mb)




(முன்னம் பரமன்)

முன்னம் பரமன் அருளின்றி முகுந்த னாதி
     மன்னுஞ் சுரர்தானவர் வேலை மதித்த வேலைக்
          கன்னங் கரிய விடம்வந்துழிக் காரி னங்கள்
               துன்னும் பொழுதிற் குயில்போல் துணுக்குற் றிரிந்தார். ......    1

(அண்ணற் கயிலை)

அண்ணற் கயிலைக் கிரிதன்னில் அடைந்து செந்தீ
     வண்ணத் தமலன் அடிபோற்ற வருந்தல் என்றே
          உண்ணற் கரிய பெருநஞ்சினை உண்டு காத்துக்
               கண்ணற்கும் ஏனை யவர்க்கும்மிவை கட்டு ரைப்பான். ......    2

(இன்னுங் கடைமின்)

இன்னுங் கடைமின் அமுதம் மெழுமென்று கூற
     அந்நின் றவர்பாற் கடலின்கண் அடைந்து முன்போற்
          பின்னுங் கடைந்தார் இபமாமுகப் பிள்ளை தன்னை
               முன்னம் வழிபட் டிலர்வந்து முடிவ தோரார். ......    3

(என்னா யகற்கு)

என்னா யகற்கு வழிபா டியற்றாத நீராற்
     கொன்னார் கடலின் நடுமத்தங் குலைந்து வீழ்ந்து
          பன்னாகர் வைகும் இடஞ்செல்லஅப் பான்மை நோக்கி
               அன்னானை அர்ச்சித் தனர்அச்சுத னாதி யானோர். ......    4

(ஆரா தனைசெய்)

ஆரா தனைசெய்துழி மந்தர மாதி மைந்தன்
     பேரா அருளால் பிலம்நின்று பெயர்ந்து முன்போல்
          வாரா நிலைபெற் றிடலோடு மகிழ்ந்து போற்றிக்
               காரார் திருமால் முதலோர் கடலைக் கடைந்தார். ......    5

(கடைகின்றுழிச் செம்)

கடைகின்றுழிச் செம்மதி யாமெனக் காமர் செம்பொன்
     அடைகின்ற கும்பத் தெழுந்திட்ட தமுத மங்கண்
          மிடைகின்ற தொல்லைச் சுரர்தானவர் யாரும் வெஃகி
               உடைகின்ற வேலையென ஆர்த்தனர் ஒல்லை சூழ்ந்தார். ......    6

(எம்மால் இதுவந்து)

எம்மால் இதுவந் துளதால் எமக்கேயி தென்றே
     தம்மா சையினாற் சுரர்தானவர் தம்மின் மாறாய்த்
          தெம்மா னமுடன் பொரவுன்னலுந் தீர்வு நோக்கி
               அம்மால் விரைவின் ஒருமோகினி ஆயி னானே. ......    7

(மூலம் பிறந்த)

மூலம் பிறந்த விடம்போல் அழன்மூண் டிடாமல்
     நீலம் பிறந்து பிறர்அச்சுற நேர்ந்தி டாமல்
          ஞாலம் பிறந்தோர் சுரர்தானவர் நச்ச ஆங்கோர்
               ஆலம் பிறந்த தெனமோகினி யாகி நின்றான். ......    8

(சேணார் உலகிற்)

சேணார் உலகிற் புவிதன்னில் திசையி லெங்குங்
     காணாத வப்பெண் ணுருக்கண்டனர் காதல் கைமிக்
          கூணார் அமுதந் தனைவிட்டு முன்னொன்று கண்டோர்
               மாணா கியபல் பொருள்கண்டென வந்து சூழ்ந்தார். ......    9

(மெய்த்தா மரையே)

மெய்த்தா மரையே முதலாய விசிக நான்கும்
     உய்த்தான் மதவேள் அதுகாலை உலப்பில் காமப்
          பித்தாய் உணர்வு பிழையாகிப் பெரிது மாலாய்
               அத்தா ருகமா முனிவோரினும் ஆர்வ மிக்கார். ......    10

(எண்ணா அவுணர்)

எண்ணா அவுணர் தொகையல்லதை எந்தை மாயம்
     உண்ணாடு வானோர் களும்பெண்மயல் உற்று நின்றார்
          மண்ணாசை தன்னிற் பொருளாசையின் மாய வாழ்க்கைப்
               பெண்ணாசை நீங்கல் எளிதோ பெரியோர் தமக்கும். ......    11

(பூண்டுற்ற கொங்கை)

பூண்டுற்ற கொங்கைப் பொலன்மோகினி யான புத்தேள்
     ஆண்டுற் றவர்தங் களைநோக்கி அமரை நீங்கும்
          ஈண்டுற் றனன்யான் அமுதும் முளதேது நீவிர்
               வேண்டுற்ற தும்பால் உறக்கொண்மின் விரைவின் என்றான். ......    12

(மாலா னவன்அங்)

மாலா னவன்அங் கதுகூற மனந்தி ரிந்து
     நோலா மையினால் இறக்கின்றவர் நோக்கி யெங்கள்
          பாலா வதுநீ யெனமுன்வரும் பான்மை நாடி
               மேலாம் அமுதே எமக்கென்றனர் விண்ணு ளோர்கள். ......    13

(வானா டவர்நல்)

வானா டவர்நல் லமுதங்கொடு மாயை நீங்கிப்
     போனார் ஒருசார் அவரோடு பொருத தீயோர்
          தேனார் மொழிமோ கினியாகிய செங்கண் மாலை
               ஆனா விருப்பிற் கொடுபோயினர் ஆங்கொர் சாரில். ......    14

(கொண்டே கியதா)

கொண்டே கியதா னவர்தங்கள் குழுவை நோக்கித்
     தண்டேன் மலர்ப்பா யலின்என்னைத் தழுவ வல்லான்
          உண்டே இதனில் ஒருவீரன் உவனை இன்னங்
               கண்டேன் இலையென்றனன் பெண்ணுருக் கொண்ட கள்வன். ......    15

(ஈறாம் அவுணர்)

ஈறாம் அவுணர் பலரும்மிது கேட்டெ னக்கு
     மாறாய் ஒருவர் இலையாரினும் வன்மை பெற்றேன்
          வீறா கியவீ ரனும்யானென வீற்று வீற்றுக்
               கூறா எனையே புணரென்று குழீஇயி னாரே. ......    16

(கொம்மைத் துணை)

கொம்மைத் துணைமென் முலையண்ணலைக் கூட யாரும்
     வெம்மைப் படலால் இகல்கொண்டனர் வேறு வேறு
          தம்மிற் பொருது முடிந்தார் கிளைதம்மி லுற்ற
               செம்மைக் கனலால் முடிவுற்றிடுஞ் செய்கை யேபோல். ......    17

(அன்னார் தொகையில்)

அன்னார் தொகையில் இருவோர்அரி மாயை யுன்னி
     என்னாம் இவரோ டிறக்கின்றனம் என்று நீங்கித்
          தொன்னாள் உருவந் தனைமாற்றிச் சுரர்கள் போலாய்ப்
               பொன்னா டவர்தங் குழுவோடு புகுந்து நின்றார். ......    18

(மாண்டார் அவுணர்)

மாண்டார் அவுணர் அதுநோக்கி வரம்பின் மாயம்
     பூண்டாரும் வெஃக மடமாதெனப் போந்த கள்வன்
          மீண்டான் அமரர் பலரும் விருப்புற்று மேவ
               ஈண்டாழி தன்னில் அமுதந்தனை ஈத லுற்றான். ......    19

(ஈயும் பொழுதின்)

ஈயும் பொழுதின் இமையோர்கள் இனத்தி னூடு
     போயங் கிருந்த இருகள்வரும் பொற்பு மிக்க
          மாயன் பகிரும் அமிர்தந்தனை மந்தி ரத்தால்
               ஆயும் படிகொண் டிலர்வல்லையின் ஆர்த லுற்றார். ......    20

(தண்டா மரைக்கு)

தண்டா மரைக்குப் பகைநண்பெனச் சாரும் நீரார்
     கண்டார் புடையுற் றவரிங்கிவர் கள்வ ரேயாம்
          உண்டார் அமுதங் கடிதென் றுளத்துன்னி யங்கண்
               விண்டான் அவற்குக் குறிப்பால் விழிகாட்டி னாரால். ......    21

(காட்டுற் றிடலும்)

காட்டுற் றிடலும் அரிநோக்கியிக் கள்வ ரேயோ
     வீட்டுற்ற வானோ ருடன்உண்குவ ரென்று தன்கை
          நீட்டுற் றிடுசட் டுவங்கொண்டு நிருதர் சென்னி
               வீட்டிச் சுரருக் கமுதூட்டி விருந்து செய்தான். ......    22

(அண்டத் தவர்முன்)

அண்டத் தவர்முன் னருந்துற்ற அமுத மன்னார்
     கண்டத் திடையே வருமுன்னது கண்டு மாயன்
          துண்டித்த சென்னி யழிவற்ற துணிந்த யாக்கை
               முண்டத் துடனே துணிபட்டு முடிந்த வன்றே. ......    23

(மாளாத சென்னி)

மாளாத சென்னி யுடைத்தானவர் மாண்பு நோக்கி
     நீளார் அமுதுண்டவர் விண்ணிடை நிற்ப ரென்னாத்
          தாளால் உலகம் அளந்தோன் அவர்தங் களுக்குக்
               கோளா நிலையை இறையோன் அருள்கொண்டு நல்க. ......    24

(புன்னாகம் நாக)

புன்னாகம் நாக மணிவான் அடிபோற்றி நோற்றுச்
     செந்நாக மோடு கருநாகத்தின் செய்கை பெற்றுப்
          பின்னாக முன்னந் தமைக்காட்டிய பெற்றி யோரை
               அந்நாக மீது மறைப்பார் அமுதுண்ட கள்வர். ......    25

வேறு

(கெழிய ராகுவு)

கெழிய ராகுவுங் கேதுவு மேயென
     மொழிய நின்ற முதற்பெயர் தாங்கியே
          விழுமி தாகிய வெய்யவ னாதியாம்
               எழுவர் தம்மொ டிருவரும் ஈண்டினார். ......    26

(ஈது நிற்கமுன்)

ஈது நிற்கமுன் இன்னமு தந்தனை
     ஆத ரத்தொ டயின்றவிண் ணோர்தொழ
          ஓத வேலை யொருபுடை யாகவே
               மாது ருக்கொண்ட மாதவன் வைகவே. ......    27

(நால்வ கைப்பட)

நால்வ கைப்பட நண்ணிய சத்தியுள்
     மாலும் ஆதலின் மற்றது காட்டுவான்
          ஆல கண்டத்தன் அச்சுதன் அச்சுறுங்
               கோல மெய்திக் குறுகினன் அவ்விடை. ......    28

(தண்டு ழாய்முடி)

தண்டு ழாய்முடி யான்தனி நாயகற்
     கண்டு வெஃகக் கறைமிடற் றெம்பிரான்
          உண்டெ மக்கு முனைப்புணர் காதல்நீ
               கொண்ட வேடம் இனிதென்று கூறினான். ......    29

(ஆணின் நீங்கிய)

ஆணின் நீங்கிய அச்சுதன் ஆற்றவும்
     நாணி இவ்வுரு நல்கிய தன்மையாள்
          காணி யாயுனைக் காதலித் துற்றனள்
               பேணி நிற்பதெ னென்னைப் பெருமநீ. ......    30

(ஆதி காலத் தயன்)

ஆதி காலத் தயன்செயல் முற்றிட
     மாதை மேவிட வந்துனை வேண்டினங்
          காத லோவன்று காரண னாகையின்
               மீது சேர்தரும் வீரியன் அல்லையோ. ......    31

(நெற்றி யங்கண் நிமல உ)

நெற்றி யங்கண் நிமல உனக்கிகல்
     பற்ற தில்லையெப் பான்மையர் கண்ணினும்
          அற்ற தாக என்னாகந் தழுவுவான்
               உற்ற காதலும் உண்மைய தன்றரோ. ......    32

(என்ன காரணம்)

என்ன காரணம் எண்ணிக்கொல் ஏகினை
     அன்ன பான்மை யறிகிலன் எம்பிரான்
          இன்ன தாடலை நீயல்ல தேவரே
               பின்னை நாடி யறிவுறும் பெற்றியோர். ......    33

(அன்பில் ஆடவர்)

அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந்
     தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால்
          முன்பு கேட்டது மன்று முதல்வநீ
               வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ. ......    34

(என்று மாயன் இசை)

என்று மாயன் இசைத்தலும் எம்பிரான்
     அன்று நீயும் நமக்கொரு சத்திகாண்
          அன்று தாருகத் தந்தணர் பாங்குறச்
               சென்ற போழ்தினுஞ் சேயிழை யாயினாய். ......    35

(முன்னை வேதன்)

முன்னை வேதன் முடிந்தனன் போதலும்
     உன்னொ டேவந் துவப்பொடு கூடினோம்
          பின்னர் இந்தப் பிரமனை யுந்தியால்
               அன்னை யாகி அளித்தனை அல்லையோ. ......    36

(ஆகை யாலுன் அணி)

ஆகை யாலுன் அணிநலந் துய்த்திட
     ஓகை யால்இவண் உற்றனன் செல்கென
          மாகை யாரப் பிடிப்ப வருதலும்
               போகை யுன்னிப் பொருக்கென ஓடினான். ......    37

(நாணி ஓடிய நாரண)

நாணி ஓடிய நாரண னைப்பிறை
     வேணி யண்ணல் விரைவுட னேகியே
          பாணி யாலவன் பாணியைப் பற்றினான்
               சேணி னின்று திசைமுகன் போற்றவே. ......    38

(பற்றி யேகிப்)

பற்றி யேகிப் படிமிசை நாவலாற்
     பெற்ற தீவிற் பெருங்கடற் சார்பினின்
          மற்று நேரில் வடதிசை வைப்பினில்
               உற்ற சாலத்தின் ஒண்ணிழல் நண்ணினான். ......    39

(நண்ணி யேதனி)

நண்ணி யேதனி நாயகன் அவ்விடைப்
     பெண்ணின் நீர்மையைப் பெற்றிடு நாரணன்
          உண்ணெ கிழ்ந்து மயக்குற் றுருகியே
               எண்ணில் இன்புறக் கூடினன் என்பவே. ......    40

(மூன்று கண்ணன்)

மூன்று கண்ணன் முகுந்தன் இருவரும்
     ஏன்று கூடிய வெல்லையில் அன்னவர்
          கான்று மிழ்ந்த புனல்கண்டகி யென
               ஆன்ற தோர்நதி யாகிஅ கன்றதே. ......    41

(அந்த நீரின் அகம்)

அந்த நீரின் அகம்புறம் ஆழிகள்
     தந்து வச்சிர தந்தி யெனப்படும்
          முந்து கீட முறைமுறை யாகவே
               வந்து தோன்றின மாழையின் வண்ணமாய். ......    42

(ஆய மண்ணில்)

ஆய மண்ணில் அகங்கெழு பஞ்சர
     மேயெ னத்தந் திருந்து சிலபகல்
          மாயும் அவ்வுயிர் மாய்ந்தபிற் கூடுகள்
               தூய நேமிக் குறிகொடு தோன்றுமால். ......    43

(நீர்த்த ரங்க நிரல்)

நீர்த்த ரங்க நிரல்பட வீசியே
     ஆர்த்தி ரங்கி அணைவுறு கண்டகித்
          தீர்த்தி கைப்புனல் சென்றக் குடம்பைகள்
               ஈர்த்து வந்திடும் இம்பர்கொண் டெய்தவே. ......    44

(அன்ன கீடம் அமர்)

அன்ன கீடம் அமர்ந்த குடம்பையை
     இந்நி லத்தர்கொண் டேகி அகத்துறை
          பொன்னை வாங்கிப் பொறியினை நோக்கியே
               இன்ன மூர்த்தம் இஃதென நாடுவார். ......    45

(நாடி யேயவை)

நாடி யேயவை நாரண னாகவே
     கூடும் அன்பிற் குவலயத் தேசிலர்
          தேடி அர்ச்சனை செய்வர் அதன்பெயர்
               கேடில் சாளக் கிராமம தென்பரால். ......    46

(மாலும் எந்தையும்)

மாலும் எந்தையும் மாண்பொடு கூடியே
     சால மேவு தனிநக ரேயிதன்
          மூல காரணம் ஆகையின் முந்தையோர்
               மேலை நாமம் அதற்கு விதித்தனர். ......    47

(இந்த வண்ணம் இரு)

இந்த வண்ணம் இருக்க முராரியும்
     அந்தி வண்ணத் தமலனு மாகியே
          முந்து கூடி முயங்கிய வெல்லையில்
               வந்த னன்னெமை வாழ்விக்கும் ஐயனே. ......    48

(மைக்க ருங்கடல் மேனி)

மைக்க ருங்கடல் மேனியும் வானுலாஞ்
     செக்கர் வேணியுஞ் செண்டுறு கையுமாய்
          உக்கி ரத்துடன் ஓர்மகன் சேர்தலும்
               முக்கண் எந்தை முயக்கினை நீங்கினான். ......    49

(அத்த குந்திரு)

அத்த குந்திரு மைந்தற் கரிகர
     புத்தி ரன்எனும் நாமம் புனைந்துபின்
          ஒத்த பான்மை உருத்திரர் தம்மொடும்
               வைத்து மிக்க வரம்பல நல்கியே. ......    50

(புவனம் ஈந்து)

புவனம் ஈந்து புவனத் திறையென
     அவனை நல்கி அமரரும் மாதவர்
          எவரும் ஏத்திடும் ஏற்றமும் நல்கினான்
               சிவன தின்னருள் செப்புதற் பாலதோ. ......    51

(முச்ச கத்தை முழு)

முச்ச கத்தை முழுதருள் மேனிகொண்
     டச்சு தன்றொழ அச்சுதன் போற்றிட
          மெச்சி யேயவ ருக்கு விடைகொடுத்
               தெச்ச மில்சிவன் ஏகினன் என்பவே. ......    52

(நாய கன்செல)

நாய கன்செல நான்முகத் தோனைமுன்
     தாயெ னத்தருந் தாமரைக் கண்ணினான்
          சேய வைகுண்டஞ் சேர்ந்தனன் ஐயனும்
               போயி னான்றன் புவனத் தரசினில். ......    53

(அங்கண் மேவி)

அங்கண் மேவி அரிகர புத்திரன்
     சங்கை யில்பெருஞ் சாரதர் தம்மொடும்
          எங்கு மாகி இருந்தெவ் வுலகையுங்
               கங்கு லும்பகல் எல்லையுங் காப்பனால். ......    54

(மண்ண கத்தரும்)

மண்ண கத்தரும் வானவ ரும்மலர்
     அண்ண லுந்தினம் அர்ச்சிக்கும் நீர்மையான்
          கண்ண னும்புக ழப்படு காட்சியான்
               எண்ணின் அங்கவ னுக்கெதிர் இல்லையே. ......    55

(அன்ன நீர்மையன்)

அன்ன நீர்மையன் காணென தன்பினால்
     உன்னை வந்தினிக் காத்தருள் உத்தமன்
          என்ன லோடும் இசைந்துநின் றாளரோ
               பொன்னி னாடு தணந்த புலோமசை. ......    56

வேறு

(இந்திரன் மங்கை)

இந்திரன் மங்கை இசைந்தது காணா
     நந்தமர் கையனும் நம்பனும் நல்கு
          மைந்தனை உன்னி வழுத்துத லோடும்
               அந்தமி லாவெம தையன் அறிந்தான். ......    57

(காருறழ் வெய்ய)

காருறழ் வெய்ய களிற்றிடை யாகிப்
     பாரிடர் எண்ணிலர் பாங்குற நண்ணப்
          பூரணை புட்கலை பூம்புற மேவ
               வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான். ......    58

(முன்னுற மேவலும்)

முன்னுற மேவலும் மூவுல கோர்க்கு
     மன்னவ னாகிய வாசவன் ஐயன்
          பொன்னடி தாழ்ந்து புகழ்ந்தனன் நிற்ப
               என்னிவண் வேண்டும் இயம்புதி யென்றான். ......    59

(கேட்டலும் இன்ன)

கேட்டலும் இன்ன கிளத்தினன் மாயை
     மாட்டுறு சூரன் வருத்துத லாற்பொன்
          நாட்டினை விட்டனன் நானிவ ளோடுங்
               காட்டுறு வேயென வேகர வுற்றே. ......    60

(நோற்றிவண் மேவி)

நோற்றிவண் மேவினன் நோதகும் வானோர்
     ஆற்றரி தாவவு ணன்செயும் இன்னல்
          சாற்றினர் வந்து தளர்ந்தனம் எம்மைப்
               போற்றுதி யென்று புலம்பின ரன்றே. ......    61

(தள்ளரும் வானவர்)

தள்ளரும் வானவர் தம்மொடு முக்கண்
     வள்ளல் தனக்கெம் வருத்த முரைக்க
          வெள்ளி மலைக்கு விரைந்துசெல் கின்றேன்
               எள்ளரி தாகிய இல்லினை வைத்தே. ......    62

(தஞ்சமி லாது தனி)

தஞ்சமி லாது தனித்திவ் வனத்தே
     பஞ்சுறழ் செய்ய பதத்தியை வைத்தால்
          வஞ்சகர் கண்டிடின் வௌவுவர் என்றே
               அஞ்சினள் உன்றன் அடைக்கலம் ஐயா. ......    63

(ஆத்தன் அமர்ந்த)

ஆத்தன் அமர்ந்த அகன்கிரி நண்ணி
     வாய்த்திடும் இவ்விடை வந்திடு காறும்
          பூத்திடு காமர் புலோமசை தன்னைக்
               காத்தருள் என்றிது கட்டுரை செய்ய. ......    64

(மேதகு செண்டு)

மேதகு செண்டுள வீரன் இசைப்பான்
     ஏதமு றாதநின் ஏந்திழை தன்னைத்
          தீதடை யாது சிறப்பொடு காப்பன்
               நீதனி யென்று நினைந்திடல் கண்டாய். ......    65

(இல்லுறு நங்கையை)

இல்லுறு நங்கையை இங்ஙனம் வைத்தே
     அல்லுறழ் கண்டன் அருங்கயி லைக்குச்
          செல்லுதி யென்றருள் செய்து திரும்பித்
               தொல்லையெம் மையனொர் சூழலின் உற்றான். ......    66

(வாளமர் நீந்தி வயந்)

வாளமர் நீந்தி வயந்தனின் மிக்க
     காளனெ னப்படு கட்டுரை யோனை
          ஆளுடை அண்ணல் அருட்கொடு நோக்கிக்
               கேளிவை யென்று கிளத்திடு கின்றான். ......    67

(மூவரின் முந்திய மூர்த்தி வரை)

மூவரின் முந்திய மூர்த்தி வரைக்குப்
     போவது முன்னினன் பொன்னகர் மன்னன்
          தேவியி ருந்தனள் தீங்கு வராமே
               காவல் கொள்நீ யெனக் கற்பனை செய்தான். ......    68

ஆகத் திருவிருத்தம் - 3280



previous padalam   32 - மகா சாத்தாப் படலம்   next padalammahA sAththap padalam

previous kandam   2 - அசுரகாண்டம்   next kandam2 - asura kANdam

காண்டம் - படலம் பட்டியலுக்கு அகர வரிசையில் முதற்குறிப்புக்கு செய்யுள் முதற்குறிப்பு pdf வடிவம்

kANdam - padalam List Tamil alphabetical index verse index pdf version

Kandha Puranam - The Story of Lord Murugan

Sri Kachchiappa Sivachariyar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 
Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] .[css]